அஞ்சுவண்ணப் பூவே! 2

கல்லூரி வளாகம் முழுவதும் பட்டாம்பூச்சிகள் வட்டமிட்டது போல அழகிய இளம்பெண்கள் சுற்றித் திரிய, அவர்களை வைத்த கண் வாங்காமல் பார்த்து பிறந்த பயனை அடைந்து கொண்டிருந்தனர் நம் இளைஞர் பட்டாளம்.

அதிலும் பி.காம் பிரிவில் இருக்கும் பெண்கள் எப்போது வருவார்கள் என்று காத்திருக்கும் கூட்டம் சற்று அதிகமே!

அதற்கான முக்கிய காரணம் அவ்வகுப்பில் பயிலும் அந்த தேன்சிட்டு தான். அவளது பாந்தமான அழகைக் காணவே அவ்வகுப்பு மாணவிகள் வரும்போது வழியில் நிற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

“அதோ வரா டா.” என்று ஒருவன் குரல் கொடுக்க, 

“இன்னிக்கு கடைசி பெஞ்ச் பார்ட்டிகள் கூட வர்றா டா.” என்று வேகமாக ஒருவன் தகவல் கொடுத்தான்.

“நேத்து முதல் பெஞ்ச் பிள்ளைகள் கூட வரவும் சாயங்காலம் அதுங்களுக்கு கேண்டின்ல டீ வடை எல்லாம் வாங்கிக் கொடுத்து அவ கிட்ட அறிமுகப்படுத்த சொன்னேன் டா. இன்னிக்கு வேற பிள்ளைகள் கூட வர்றாளே. எப்படித்தான் டா இவளை கரெக்ட் பண்றது?” சலிப்பாக வந்தது கல்லூரி ரோமியோ ஒருவனின் குரல்.

“டேய் நேத்து அவ யாரோ ஒரு ஆள் கூட வண்டில போகறத நான் பார்த்தேன் டா.” என்று கவலையாகக் கூறினான்.

இப்படி ஒருவர் மாற்றி ஒருவர் புலம்புவது வேறு யாரைப் பற்றியும் அல்ல, அதோ நடந்து வரும் அபிதாவைப் பற்றித்தான்.

பி.காம் இறுதியாண்டு பயிலும் அவளுக்கு இந்த கல்லூரியில் காதல் கடிதம் தராத ஒருவன் கூட இல்லை என்று சொல்லி விடலாம். 

“ஏன் டி பசங்க அத்தனை பேரும் உன் பின்னாடி சுத்தும்போது நீ ஏன் டா இவங்க எல்லாரையும் விட்டுட்டு யார் பின்னாடியோ சுத்திக்கிட்டு இருக்க?” எரிச்சல் கலந்து ஒலித்தது அபிதாவின் தோழியான மகேஸ்வரியின் குரல்.

“யார் பின்னாடியோ இல்ல மகேஷ், என் மனசுக்கு பிடிச்சவர் பின்னாடி தானே போறேன். அது தப்பா?” என்று பயமும் தயக்கமும் கலந்து கேட்டாள் அபிதா.

“இங்க இருக்குற பசங்களை விட அவரு என்ன உனக்கு உசத்தி?” இம்முறை கேள்வி வந்தது விஷ்ணுபிரியாவிடமிருந்து.

“ம்ம் அதெல்லாம் என் கண்ணு வழிய பார்த்தா தான் உங்களுக்கு தெரியும். இவங்க எல்லாரையும் விட அவர் கோடி மடங்கு ஸ்பெஷல்.” என்று கூறியவள் முகத்தில் நாணம் படர்ந்திருக்க, அதற்கு சொந்தக்காரனான அஜய் கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த சமயம் அது.

கண்களுக்குள் கருமணி உருள, பழைய நினைவுகளுக்குள் மூழ்கி இருந்த அபிதா மெல்ல கண்விழித்து நிகழ்காலத்திற்கு வந்தாள்.

அன்று காதல் சொல்லத் தயங்கிய அபிதா எங்கே? இன்று கணவனை பிரிந்து விட முடிவு செய்திருப்பதை நம்பத்தான் அவளுக்கே சற்று சிரமமாக இருந்தது.

என்ன செய்வது? காலம் அவளை அந்த இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்து விட்டது. அவள் காதலித்த அஜய் கிருஷ்ணா ஒரு பொறியியல் பட்டதாரி. வேலைக்குச் சென்று வீடு வாங்கி, இருக்கும் வருமானத்திற்குள் நிம்மதியாக வாழ அவள் யோசித்து வைத்த அனைத்தும் ஒருநாள் இரவில் மண்ணோடு மண்ணாகும் என்று அவள் கனவிலும் எண்ணவில்லையே!

ஆனால் அவள் செய்த ஒரே தவறு தாய் சொல்லையும் மீறி சூழ்நிலை அறிந்தும் அஜயை திருமணம் செய்து கொண்டது தானோ? தெரியவில்லை.

இத்தனை ஆண்டுகளில் வராத ஒருவித பயம் இப்பொழுது அவளை சூழ்ந்து கொண்டு மிரட்டியது.

கல்லூரிச் சிட்டுக்குருவியாக சுற்றிய அபிதா மறைந்து போய் அஜய் கிருஷ்ணாவின் மனைவி என்ற பட்டத்துக்கு தனக்கு நேரப்போவது என்ன என்ற கிலி பரவிக் கிடந்தது அவளிடத்தில்.

அன்னை அருகே வந்து அமர்ந்ததைக் கூட கவனிக்காமல் இருந்த அபிதாவை சற்று அதட்டலாகவே அழைத்தார் சாந்தா.

“அபி. போதும் நீயும் உன் உருப்படாத யோசனையும்.” என்று சத்தமாகக் கூறியதும் கண்ணில் முனுக்கென்று வெளிவந்த கண்ணீரை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள்.

“நீ படிச்ச பொண்ணு. உனக்கு நான் புத்தி சொல்லணுமா? வள்ளுவர் சொன்னதை படிச்சவ தானே நீ?

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு.

அவரை கல்யாணம் பண்ணிக்கும் போதே நான் உன்னை யோசிக்க சொன்னேன். காதல் மயக்கத்துல கல்யாணம் பண்ணிட்ட, இப்ப அதைப் பத்தி ஏன் மறுபரிசீலனை பண்ணிட்டு இருக்க? நீயே தானே இந்த ஊரே பயப்படுற அஜய் கிருஷ்ணாவோட மனைவியா மாற முடிவு பண்ணின? அப்பவும் அவர் அதே ஆள் தான், இன்னிக்கும் அவர் அதே ஆள் தான். இப்ப சொல்லு மாறிப்போனது நீயா அவரா?” என்று மகளின் முகத்தை நோக்கி வினவினார் சாந்தா.

“அவர் மாறலையா? உனக்கு தெரியுமா? அப்ப இருந்த அவருக்கு நிதானம் இருந்தது. இப்ப அது சுத்தமா இல்ல.” என்று கோபமாக பேசத் துவங்கி கண்ணீரில் முடித்தாள் அபிதா.

“இங்க பாரு அபி, அம்மா உன்னை அவரை அனுசரிச்சு போன்னு சொல்ல மாட்டேன். ஆனா இது நீ தேர்ந்தெடுத்த வாழ்க்கை. அதுல இருந்து இப்ப நீயே ஓட நினைக்கிறது உன் மேல உனக்கே நம்பிக்கை இல்லன்னு காட்டுது இல்லையா?” என்று அவள் தலையைக் கோதி, கண்ணீரைத் துடைத்தார்.

“அதுக்காக? எவன் வந்து என்ன பண்ணினாலும் பயப்படாம அவர் கூட இருக்க சொல்றியா?” என்று லேசாக மூக்கை உறிஞ்சிக் கொண்டு கேட்ட மகளைக் கண்டு சிரிப்பு தான் வந்தது சாந்தாவுக்கு.

“ஏன் மா சிரிக்கிற?” என்று கோபம் கொண்டவளிடம்,

“ஒரு வாரம் உன் புருஷனை பார்க்காம இருந்ததுக்கே நீ ஆள் பாதியா இளைச்சுப் போயிட்ட. வயித்துல பிள்ளையையும் வச்சுக்கிட்டு நீ மட்டும் உன் புருஷனை பார்க்காம இருந்தா நாளைக்கு நான் தான் உன் பிள்ளையை வளர்க்கணும். நீ எழுந்துக்க கூட சத்து இல்லாம தான் போயிருப்ப. இப்ப ஏதோ பயம் அது இதுன்னு சொன்னியே! அதெல்லாம் கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடி ஒருத்தன் உன் கழுத்துல கத்தி வச்சு அந்த கல்யாணம் நடக்கக் கூடாதுன்னு சொன்னப்ப எங்க போச்சு? உன் புருஷன் இருக்கற தைரியம் தானே அன்னைக்கு நீ அவனை கோபமா வெளில போகச் சொல்ல காரணம். இப்ப மட்டும் என்ன மாறிடுச்சு?” என்று அவர் வினவ,

உண்மை தானோ! அன்றும் இன்றும் அஜய் ஒன்று போலத் தானே இருக்கிறார். நான் தானே மாறிப்போனேன்! என்று எண்ணிக் கொண்டிருந்தவள் கைபேசியில் அவளின் எண்ணத்தின் நாயகன் அழைப்பு விடுத்திருந்தான்.

கைபேசியை பார்த்த மகளிடம், “மனசுல கண்டதையும் போட்டு குழப்பாம அவரோட பேசு, சண்டை போடத் தோணுச்சுன்னா சண்டை போடு. ஆனா அவரை விட்டு பிரியணும்னு நினைக்காத.” என்று அழுத்தமாகக் கூறிவிட்டு அவ்விடம் விட்டு அகன்றார்.

அழைப்பை ஏற்று அவள் காதில் வைத்ததும் கணவன் ஆசையாக ஏதேனும் பேசுவான், அல்லது அவள் இத்தனை நாள் பேசாமல் இருந்ததற்கு கடிந்து கொள்வான் என்று எண்ணி அவள் காத்திருக்க, அவளைப் போலவே அந்த முனையில் இருந்த அஜய் கிருஷ்ணாவும் அமைதியாக இருந்தான்.

அவன் சுவாசிக்கும் சத்தம் மட்டும் தெளிவாகக் கேட்டுக் கொண்டிருக்க, அபிதாவும் கைபேசியை காதில் பொருத்திக் கொண்டு அமைதி காத்தாள்.

ஒரு நெடிய பெருமூச்சுக்குப் பின், “நாளைக்கு நான் சென்னை வந்துடுவேன். நீ என்ன பண்ணலாம்னு இருக்க?”

கேள்வியில் ஒளிந்திருந்த ஏக்கம் அவளுக்கு புரியாமல் இல்லை. அவனை வந்து அழைத்துச் செல் என்று சொல்ல ஒரு நொடி போதும். ஆனால் இன்னும் அவள் அந்த முடிவுக்கு வர வில்லையே! அதனால் அவள் பதில் பேசாமல் அமைதியாகவே இருக்க,

“நீ சொன்னா வந்து கூட்டிட்டு போறேன். இல்லன்னா நீ வர்ற வரைக்கும் நம்ம வீட்ல உனக்காக காத்திருப்பேன்.” என்று மென்மையாகக் கூறிவிட்டு அவன் அழைப்பைத் துண்டித்துவிட என்ன முடிவு செய்வது என்று தெரியாமல் குழம்பித் தவித்தாள் அபிதா.

அழைப்பை வைத்துவிட்டு கையிலிருந்த விமான டிக்கெட்டை நோக்கினான் அஜய். பிசினஸ் கிளாசில் போடப்பட்டிருந்த அந்த பயணச்சீட்டில், ‘அஜய் கிருஷ்ணா அகத்தியன்’ என்று எழுதி இருக்க அதிலிருந்த ‘அகத்தியன்’ என்ற பெயரை மயிலிறகு வருடுவது போல வருடினான் அஜய்.

அவன் எண்ணியிராத வாழ்க்கையை அவனுக்கு பரிசாக அளித்துச் சென்றவர் அவரல்லவா! 

கல்லூரி முதுகலை இறுதியாண்டில் வளாக நேர்காணலில் கல்லூரியிலேயே முதல் மாணவனாக அமெரிக்க நிறுவனம் ஒன்றில் தேர்ந்தெடுக்கப்பட்டவன் அஜய். 

அன்றைய தேதியில் மாத ஊதியமே இரண்டு லட்சங்கள். ஆனால் அந்த மகிழ்வான செய்தியை முழுமையாக ஒருநாள் முழுவதும் கூட அனுபவிக்க முடியாமல் விதி அவன் வாழ்வில் விளையாடி அவனை வீதியில் இழுத்து விட்ட கொடுஞ்செயலை அவனால் எண்ணாமல் இருக்க இயலவில்லை.

நெஞ்சை திருகும் அந்த வலிக்கு இத்தனை நாட்கள் மருந்தாக இருந்தவள் அவனது அபிதா. அவள் அவனுக்கு மனைவி மட்டுமல்ல! தேவதை. ஆனால் அந்த தேவதை இன்று மருந்தல்ல, அவன் தரப்பை செவி மடுத்துக் கூட கேட்க முயலாத வருத்தம் அவனை அரித்தது.

மூன்று ஆண்டுகள் அவர்கள் காத்திருந்த இனிய தருணம் அவன் வாழ்வில் வந்துவிட்டதை அறிந்து, அவனது மனைவியை கண்ணுக்குள் வைத்துத் தாங்க எண்ணியவன் எண்ணத்தில் இடியை இறக்கினாள் அவனவள்.

அவனுடன் பேசாமல், அவனுடன் இல்லாமல் கொல்லாமல் கொன்றாள். இதோ இப்பொழுதும் அமைதி எனும் ஆயுதம் ஏந்தி அவனை வலிக்க வலிக்கத் தாக்கி விட்டாள். நூறு பேர் அவன் முன்னே கூரான ஆயுதங்களோடு வந்தாலும் எள்ளளவும் கவலையில்லாமல் அத்தனை பேரை ஓட ஓட விரட்டும் திண்மையும் துணிவும் இருந்தும், தான் காதல் கொண்ட காரிகையின் மௌனத்தைப் பொறுக்க முடியாமல் தவிக்கும் அவலத்தை அவன் யாரிடம் சொல்வான்.

அவன் சிந்தனைகளின் ஊடே, அவன் ஏற வேண்டிய விமானம் வந்து அதில் அவன் பயணமாகி பாதி தொலைவை கடந்து விட்டான்.

கைபேசி விடாமல் அடித்துக் கொண்டிருப்பதை அப்பொழுது தான் கவனித்தான்.

அதில் ஒளிர்ந்த ரஞ்சித்தின் எண்ணைக் கண்டு சிந்தனையோடு ஏற்று காதில் பொறுத்த,

“அண்ணா டீலிங் ஓகே. கார்ல்சன் சைன் பண்ணின டாகுமெண்ட் என் கைக்கு வந்துடுச்சு. நான் அடுத்த பிளாட்ல வந்துடுவேன்.” என்று அவசரமாகக் கூறினான்.

“நேத்தே இந்த கையெழுத்தை அவன் போட்டிருக்கலாம். இந்நேரம் அவன் பையன் கை உடையாமல் இருந்திருப்பான். எவனுக்கு வாய்ல சொன்னா புரியுது. கையை காலை உடைச்சா தான் அறிவு வருது.” என்று கூறிய அஜயின் குரலில் அபிதாவிடம் பேசும்போது இருந்த மென்மை தொலைந்திருந்தது.

4 thoughts on “அஞ்சுவண்ணப் பூவே! 2

  1. இந்த அபிதாவுக்கும் அஜய்க்கும் இடையில என்ன ஓடுதுன்னே தெரியலையே…? ஒண்ணு அதை அவங்களே சொல்லணும், இல்லையா ரைட்டர் சொல்லணும் சரி தானே.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!