
அந்த நண்பகல் வேளையில் அச்சிறு கிராமம் மிகுந்த அமைதியோடு காட்சியளித்தது.
பெண்கள் ஆங்காங்கே வீட்டு வாயில்களிலும், புழக்கடையில் உள்ள திட்டுகளிலும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். வாய் பேசிக்கொண்டிருந்ததாலும் கைகள் அரிசி புடைப்பது, பூ கட்டுவது என்று அமர்ந்தே செய்யும் பணிகளை செவ்வனே செய்து கொண்டிருந்தது.
ஆண்கள் பெண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று சொல்லும் விதமாக ஊரின் கூடம், வீட்டுத் திண்ணை என்று அவர்களும் கூடி அமர்ந்திருந்தாலும் கைகளில் செய்தித்தாள், வார இதழ் என்று ஏதோ ஒன்று இடம்பிடித்திருந்தது.
ஊரின்அமைதியை கலைக்கும் விதமாக சைக்கிளில் வேகமாக வந்தபடி கத்திக்கொண்டிருந்தார் போஸ்ட்மேன்.
“பானு கிட்ட இருந்து கடுதாசி வந்திருக்கு. பானு கிட்ட இருந்து கடுதாசி வந்திருக்கு.” என்று கத்தியபடியே அவர் பானுவின் வீட்டு வாயிலில் சென்று சைக்கிளை நிறுத்தினார்.
ஊரே பானுவின் கடிதம் வந்ததில் மகிழ்ந்து பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு பானு வீட்டை நோக்கி வந்துகொண்டிருக்க, பானுவின் வீடோ சத்தமே இல்லாமல் வாயில் கதவு பாதியாக சாற்றப்பட்டு இருந்தது.
“பானும்மா.. வெளில வாங்க. பானு கிட்ட இருந்து கடுதாசி வந்திருக்கு.” என்று குரல் கொடுக்க,
உள்ளிருந்து மெலிந்த தேகம் கொண்ட பெண்மணி வந்து கை நீட்டினார்.
“என்ன பானும்மா உங்களுக்காக ஞாயிறு லீவைக் கூட பார்க்காம ஓடி வந்திருக்கேன். வரும்போதே பானு லெட்டர் போட்ருக்குன்னு சத்தம் போடுறேன். நீங்க குடிக்க தண்ணி கூட எடுத்துட்டு வராம கடுதாசிக்கு கையை நீட்டுறீங்களே நியாயமா?” என்று கேட்டபடி சட்டையை பின்னோக்கி இழுத்து விட்டு வாயால் ஊதிக்கொண்டே அமர்ந்தார் போஸ்ட்மேன்.
உள்ளிருந்து இருமல் சத்தம் கேட்டதும் சட்டென்று எழுந்துகொண்டவர், “ஐயா உள்ள இருக்காரா? லைப்ரரி போகலையா? உடம்புக்கு முடியலையோ?” என்று பதறிக்கொண்டு கேட்டார்.
“ஞாயிறுன்னு நீங்களே சொன்னிங்களே. அப்போ ஐயா வீட்டில தானே இருப்பார்” என்று உள்ளிருந்து தண்ணீர் கொண்டு தந்தார் பானுவின் தாய் நீலவேணி.
“அது கடுதாசியை பார்த்ததும் கையும் ஓடல, காலும் ஓடல. எடுத்துட்டு நான் தான் ஓடி வந்தேன். இதெல்லாம் யோசிக்கல.” என்று சிரித்துக்கொண்டே தண்ணீரைக் குடித்தார்.
அதற்குள் ஆண்களும் பெண்களும் பானு வீட்டு வாயிலில் கூடினார்.
“என்ன நீலாக்கா பானு என்ன எழுதி இருக்கு?” என்று ஆளாளுக்கு கேள்வி எழுப்ப, உள்ளே ஒருமுறை தயக்கமாகப் பார்த்த நீலவேணி, கடிதத்தை பிரித்துப்படித்தார்.
படிக்க படிக்க கண்களின் ஓரத்தில் ஈரம் கசிந்து கன்னத்தை அடைந்தது.
“வர்ற இருபத்தி எட்டாம் தேதி வருதாம்.” என்று சொல்லி முடிக்க உள்ளே இருமல் சத்தம் அதிகமானது.
வேகமாக நீலவேணி உள்ளே சென்று விட, “இன்னுமா நம்ம வாத்தியாருக்கு பானு மேல கோவம் போகல?” என்று ஊரார் ஒருவர் கேட்க,
“ஊருக்கே பாடம் சொன்ன மனுஷன், அவர் பேச்சை ஊரே கேட்டுச்சு. ஆனா பானு மட்டும்..” என்று இழுத்தார் ஒருவர்.
மற்றொருவரான பானுவின் அன்பு மிகுந்த மாமாவுக்கு கோபம் வந்திருக்க வேண்டும், “என்ன பேசறீங்க? பானு என்ன தப்பு பண்ணுச்சு? காதலிச்சு ஊரை விட்டா ஓடிச்சு? பட்டாளத்துக்கு போச்சு. ஊரே பெருமைப்படுற விஷயம் இந்தாளுக்கு மட்டும் குத்துது.” என்று எரிச்சலில் கூறி அங்கிருந்து நகர்ந்தார்.
இதை உள்ளே இருந்து கேட்டுக்கொண்டிருந்தார் சண்முகம் வாத்தியார். அந்த கிராம பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்.
அகிம்சாவாதி. காந்தியடிகளின் பரம சீடன். அப்படித்தான் ஊரார் அவரை அறிவர். அதிலும் ஒரு ஆசிரியர் எந்த வித கோவமான பேச்சுக்களும் இல்லாமல், குழந்தைகளை அடிக்காமல் ஒரு பள்ளியை நடத்த முடியும், அதிலும் ஒவ்வொரு மாணவரையும் நல்ல நிலையில் உயர்த்த முடியும் என்று நிரூபித்தவர் சண்முகம் வாத்தியார்.
எல்லாம் ஊரார் பிள்ளையோடு முடிவுக்கு வந்து, பெற்ற பிள்ளையை ஒதுக்கி வைத்த கதை மிகவும் கொடுமை.
புழக்கடையில் வானத்தை வெறித்துக்கொண்டு அமர்ந்திருந்தார் நீலவேணி. அவர் கண்களின் முன்னே அங்கும் இங்கும் ஓடி தன்னிடம் போக்குக் காட்டிய பானுவின் நினைவில் மெல்ல அமிழ்ந்து போனார்.
புது தில்லியின் தேசிய விமானப்படை மற்றும் ராணுவப்படையின் ஒருங்கிணைந்த அலுவலகம்.
கையை பிசைந்து கொண்டு இருவர் நின்றிருக்க, அவர்களுக்கு இடதுபுற இருக்கையில் கவலையான முகத்துடன் நின்றிருந்தார் ஒருவர்.
மேஜர் அவர் இருக்கையில் யோசனையாக அமர்ந்திருந்தார்.
அறைக்குள் அனுமதி கேட்டு உள்ளே வந்த சூர்யாவை மேலும் கீழும் ஆராய்ந்தார் நின்றிருந்த அந்த ஒருவர்.
அவரின் பார்வையை உணர்ந்திருந்தாலும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் மேஜர் முன் சென்று அட்டென்ஷனில் நின்று சல்யூட் அடித்து “ஜெய்ஹிந்த் சார்” என்றதும்,
“சிவிலியன் ட்ரெஸ்..? வாட் ஹெப்பெண்ட் டு யூனிபார்ம்?” என்றார் மேஜர் நாயர்.
“ஐ அம் ஆன் லீவ் சார். பிரெண்ட்ஸ் கூட ட்ரெக்கிங் போயிருந்தேன். நீங்க வர சொன்னதா இன்பர்மேஷன் வரவும், ஐ அம் ஹியர் சார்.” என்று விளக்கிவிட்டு அவளை அழைத்து காரணம் தெரியும் வரை அப்படியே நின்றாள்.
அதற்குள் புயல்போல நுழைந்தார் உள்துறை அமைச்சரின் செயலாளர். அவரைக் கண்டதும் சூர்யாவின் நெற்றியில் கேள்வியின் முடிச்சுக்கள்.
“எல்லாம் ரெடியா? நான் பி.எம். சாரோட ஆபிஸ்லேயே வார் ரூம் செட் பண்ணிட்டேன். உங்க டீம் வந்தா ஆரம்பிக்க வேண்டியது தான்” என்று நாயரின் எதிர் இருக்கையில் அமர்ந்தார்.
“எஸ் சார் ஆல் செட். ப்ளீஸ் மீட் அவர் கேப்டன்” என்று சூர்யாவை அறிமுகம் செய்தார்.
அவரும் சூர்யாவை வெற்றுப்பார்வை பார்த்துவிட்டு, “வேற பெரிய எபீஸியன்ட் டீம்?” என்று கேள்வியை நிறுத்த,
“மிலிட்டரி டிசைட் பண்றது தான் சார் டீம். வீ நோ ஹு வில் வின் தி பேட்டில்.” என்று அடுத்த வார்த்தைக்கு இடம் கொடுக்காமல் எழுந்து, “சூர்யா சேன்ஞ் யுவர்செல்ப் அண்ட் மீட் மீ இன் பி.எம்’ஸ் ஆபிஸ்” என்று வெளியேற
“எஸ் சார்” என்ற வேகமான பதிலுடன் நிற்காமல் இருவருமே வெளியே சென்றனர்.
பிரதமரின் அலுவலகம் வளாகத்தில் முக்கிய அறைக்குள் மேஜர் நாயரும், சூர்யாவும் நுழைந்தனர்.
மேஜரை வரவேற்ற பிரதமர் சூர்யாவை உற்று நோக்கினார். அவரின் பார்வையாகான காரணம் உணர்ந்த சூர்யா.
“ஜெய்ஹிந்த் சார். கேப்டன் சூர்யபானு, ரிபோர்டிங் ஆன் டியூட்டி சார்” என்று சல்யூட் அடிக்க,
பதிலுக்குத் தலையசைத்தார்.
“மேஜர், ரிஸ்கான விஷயத்துக்கு நீங்க பெரிய டீமா எடுக்கலாமே” என்று ஆலோசனை வழங்கினார்.
“சார், எனக்கும் இப்போ இருக்கிற நிலை எவ்ளோ ரிஸ்க்ன்னு தெரியும் சார். நம்ம உள்துறை அமைச்சர் பொண்ணையும் அவங்களோட பிரெண்ட்ஸ் ரெண்டு பேர் சேர்த்து மூணு பேர் டெரரிஸ்ட் கஸ்டடில இருக்காங்க. இப்போ வரை நியூஸ் மீடியால வராம ஹேண்டில் பண்ணியாச்சு. ஆனா இதுல உள்ள ரிஸ்க் அது மட்டும் இல்ல சார். அவங்க அமிர்ஸ்டர்ல கடத்தின பொண்ணுங்களை பார்டர் பக்கத்துல இருக்கிற அவங்களோட பங்கர்ல ஒளிச்சு வச்சிருக்காங்க.
இடமோ வீடோ இருந்தா பெரிய டீம் அனுப்பலாம். அதை விட அவங்க இருக்கிறது மலை மேல, கீழ நம்ம நடமாட்டம் தெரிஞ்சாலே தாக்க ஆரம்பிப்பாங்க. நமக்கு இருக்கிற ஒரே ஆப்ஷன் டிரெக்ட் ஹிட் ஃபிரம் ஸ்கை சார்” என்று கூறிவிட்டு, இது தான் விஷயம் என்று சூர்யாவையும் ஒரு பார்வை பார்த்தார்.
பிரதமர் ஆமோதிப்பாக தலையசைக்க, அடுத்த இருபது நிமிடத்தில் எப்படி அவர்களை மீட்பது என்பதற்கு பானுவிடம் தெளிவான திட்டம் இருந்தது.
அதில் பிரதமருக்கு திருப்தி ஏற்பட, “டேக் கேர். இட்ஸ் அவர் ரெஸ்பான்சிபிலிட்டி டு சேவ் ஆல் த்ரீ கேர்ள்ஸ். நோ ப்ரியாரிட்டி பிட்வீன் தெம். டெரரிஸ்ட் அவங்க டிமேண்ட்ஸ் வைக்கறதுக்கு முன்னாடி நாம ஆக்ஷன்ல இறங்கணும். இல்லனா இது பெரிய இஸ்யூ ஆகும். வெளில தெரிஞ்சிட்டா பணிஞ்சு போக வேண்டி வரலாம். ஹோப் யூ அண்டர்ஸடாண்ட் இட்ஸ் அவர் நேஷன்’ஸ் ஹானர் அண்ட் இன்டெகிரிட்டி இஸ்யூ.” என்று கூற சூர்யாபானுவின் உதட்டில் முதன்முறையாக புன்னகை மலர்ந்தது.
“வி வில் சேவ் ஆல் த்ரீ ஆப் தி கேர்ள்ஸ் சார். நாட்டோட பாதுகாப்புக்காகவும் நன்மைக்காகவும் உயிரையும் கொடுப்பேன்னு நான் உறுதிமொழி எடுத்துட்டு தான் சார் வேலையில சேர்ந்தேன். இந்த ஆப்ரேஷனை முடிச்சு அவங்களை உங்க கிட்ட ஒப்படைப்பேன் சார். ஆப்ரேஷன் சுபாஷ் வில் சக்ஸீட் சார். ஜெய்ஹிந் சார்” என்று கூறி ராணுவ விமான தளம் நோக்கிப் புறப்பட்டாள் சூர்யா.
நாயரைப் பார்த்த பிரதமரிடம் அவர், “ஷி இஸ் அ வெல் ட்ரெய்ண்ட் பைலட் அண்ட் கமாண்டோ ஆபீசர் சார். முதல் மிஷன்ல இருந்து அவ எடுத்த ஒவ்வொறு முடிவும் துல்லியமா இருந்தது.” என்று கூறியவர், அதைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தார்.
“முதல் மிஷன் கொடுக்க நாங்க யோசிச்சோம் சார். அவளுக்கு கோபம் வந்துடுச்சு. ‘நாங்க என்ன சுதந்திர தினத்துக்கும், குடியரசு தினத்துக்கும் சாகசம் செஞ்சு காட்ட தான் இருக்கோமா? நம்பி அனுப்பங்க சார். உங்க ட்ரைனிங் மேல நம்பிக்கை இல்லையா. மிஞ்சிப்போனா என் உயிர் போகும் அதானே? பரவால்ல சார் அதை நான் ஊர்ல எங்க அப்பா கையில கொடுத்துட்டு தான் வந்தேன். இங்க போனாலும் அதுனால ஒரு பாதிப்பும் இல்ல’ ன்னு சொன்னா. தைரியமான பொண்ணு சார். ஷி வில் லீட் தி ஆப்ரேஷன் அண்ட் வில் வின் சார்.” என்று நம்பிக்கையோடு கூறினார். அனைவரும் அவள் மேல் நம்பிக்கை வைத்து அந்த பெண்களுக்காக காத்திருந்தனர்.
பானுவின் வருகையை அறிந்த ஊரார் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர். ஆனால் சண்முகம் வாத்தியார் வீடு மட்டும் அமைதியாக இருந்தது.
அவர் மகள் அவரின் கொள்கைக்கு எதிராக அகிம்சையை நம்பாமல் நான் நேதாஜியை விரும்புகிறேன். அவர் வழி செல்வேன் என்று நெஞ்சை நிமிர்த்தி சொன்ன மகளை அடிக்கவும் அவர் கொள்கை இடம் கொடுக்காததால் அமைதியாக அவளை ஒதுக்கி வைத்தார்.
நீலவேணி எவ்வவோ அவளோடு விவாதித்தும் சூர்யாவின் எண்ணம் மாறவில்லை.
“நீ பொம்பள பிள்ளை டி. நாளைக்கு கட்டிக்கொடுக்க வேண்டாமா? இப்படி பண்ற?” என்று அழுத்த அன்னையிடம்,
“ஏம்மா அன்னைக்கு சுதந்திரம் கிடைக்க நேதாஜி தேசியப்படையை ஊருவாக்கினப்போ அப்பவே அதுல பெண்கள் இருந்தாங்க. அந்த காலத்துலயே பெண்கள் போருக்கு போனாங்க. ஏன் கேப்டன் லக்ஷ்மி இல்ல? அவங்க நேதாஜி கூட தேசியப்படையில் தோளோடு தோளா நின்னு சண்டை போடலயா? எனக்கு பறக்கணும் மா. உயரமா பறக்கணும். துளியும் பயமில்லாம பறந்து பறந்து சண்டை போடணும் நம்ம நாட்டோட எதிரிகள் கிட்ட. அப்பாவுக்கு அகிம்சை பிடிச்சது, அவர் அவரோட வழியில போனார். எனக்கு நேதாஜி சொன்ன மாதிரி நம்ம நாட்டைக் காப்பாத்த ஆயுதம் எடுத்தா தப்பில்லைன்னு தோணுது. நான் என் வழில போறேன் மா. எப்பவும் ராணுவத்தில ஒன்னு சொல்லுவாங்க, போருக்கு போயிட்டு தேசியக்கொடியை ஏந்தி வெற்றியோட வா. இல்லன்னா தேசியக்கொடியை போர்த்திக்கிட்டு வெற்றியை கொண்டு வான்னு. நானும் அதான் சொல்றேன். நாளைக்கு நான் டெல்லி கிளம்பறேன். எனக்கு முதல்ல பதான்கோட்ல போஸ்டிங் கிடைச்சிருக்கு. நல்லா கேட்டுக்கோ, ஒவ்வொரு போருக்கு பின்னாலும் நான் ஊரைப் பார்க்க சந்தோஷமா வருவேன், இல்ல இந்த ஊரே என்னை பெருமையா பார்க்கிற மாதிரி கொண்டு வருவாங்க. எப்படி வந்தாலும் எனக்கு சந்தோஷம் தான். நான் கிளம்பறேன் மா.” என்று கிளம்பியவள் இன்றுவரை ஊருக்கு திரும்பவில்லை. வேலை அவளுக்குப் பிடித்துவிட்டதா, இல்லை வேலை அவளை பிடித்துக்கொண்டாதா என்று கேட்டால் விடையில்லை. ஐந்து ஆண்டுகளுப்பின் பானு ஊருக்குத் திரும்ப இருக்கிறாள்.
ஊரார் போல அந்த வீட்டிலும் அவளுக்காக ஆவலாக காத்திருந்தது ஒரு இதயம்.
பாலம் விமான ஓடுதளத்தில் சூர்யாவின் எம்.ஐ ரக போர் விமானம் ஓடி வேகமெடுத்து வானில் பறந்தது.
அவளின் பெரிய சவாலே அந்த பெண்களுக்கு ஆபத்து இல்லாமல் அந்த பங்கர்களை மேலிருந்து தகர்க்க வேண்டும். அது முழுவதுமே பானுவின் கையில் தான் இருக்கிறது. அவள் கிளியர் சிக்னல் கொடுத்த பின் தான் கீழிருந்து கயிறு மூலம் கமாண்டோ வீரர்கள் ஏறி வந்து பெண்களை மீட்க வேண்டும்.
சூர்யாவின் கணிப்புகள் என்றும் தவறிப்போனதே இல்லை. அவளின் எண்ணம் சரி என்றால் பங்கரில் தீவிரவாதிகள் மட்டுமே இருப்பர். அதற்குப் பின் உள்ள பாதுகாப்பான இடத்தில் பெண்களை பதுக்கி இருப்பார். யோசித்தபடி அவள் அந்த மலை முகடை கவனித்தாள். இவள் வருவது தெரிந்தால் அவர்கள் இவளை நோக்கி மிசைல்களை அனுப்ப வாய்ப்புள்ளது. அவளின் விமானத்திலும் ஆன்ட்டி மிசைல் சிஸ்டம் இருப்பதால் அவர்களின் தாக்குதல் பற்றி பயமில்லை. ஆனாலும் பெண்கள் மூவரின் பாதுகாப்பும் கேள்விக்குறி ஆகிவிடும். என்ன செய்வது என்று மீண்டும் யோசிக்க ஆரம்பித்தாள். கண்களில் பொறுத்தப்பட்டிருந்த கண்ணாடியின் டெலிஸ்கோபிக் லென்ஸ் அங்குள்ளவற்றை காட்ட எதிர்பார்த்ததை விட ஆயுதங்கள் அதிகம் இருந்தது.
யோசிக்காமல் வானத்தை நோக்கி நிமிர்ந்து உயரே நேரே பறந்தாள்.
அவளின் விமானத்தில் உள்ள ட்ராக்கிங் சிஸ்டம் மூலம் கண்காணித்துக் கொண்டிருந்த மேஜர் நாயர் நெற்றியை சுருக்கினார்.
உள்துறை அமைச்சரும், மற்றவர்களும் பதற்றமாக, பிரதமர் அமைதியாக அமர்ந்திருந்தார். அவரால் மற்றவர்கள் போல உடனே எந்த வித உணர்வுகளையும் வெளியிட முடியாது. பதவி அப்படிப்பட்டது. நாயரை நோக்கி, “அவங்க என்ன செய்யறாங்க?” என்று கேட்க, அவர் சூர்யாவின் ரேடியோவில் இணைந்தார்.
“சூர்யா என்ன செஞ்சிட்டு இருக்க?” என்று கேட்க,
அவளோ, “சார் நிறைய ஆயுதங்கள் இருக்கு. ஆட்களும் அதிகம். பொண்ணுங்க பங்கர்ல இருக்கறது போல தெரியல. நான் பாயிண்ட் ஹிட் பண்ண ட்ரை பண்றேன். நான் வர்றது அவங்களுக்கு தெரியாத வரை பொண்ணுங்க சேஃப். இல்லனா அவங்களையும் பங்கருக்கு கொண்டு வந்திருவாங்க. என்னால அப்பறம் அட்டாக் பண்ண முடியாது.” என்று சொன்னவள், “ஐ ஹாவ் ரீச்ட் தி ஹேட் சார். இட்ஸ் டைம்.” என்று சொன்னவள் தலை கீழாக வானத்தில் இருந்து கீழ் நோக்கி பறந்தாள். நேராக அந்த பங்கரை நோக்கி இருந்தது அவளின் குறி, படபடவென்று பங்கரை நோக்கி குண்டுகளைப் போட்டாள். அடுத்தடுத்த குண்டுகள் அந்த இடத்தை வரிசையாக தாக்க ஆரம்பித்தது.
எங்கிருந்து குண்டு வருகிறது என்று தீவிரவாதிகள் கணிப்பதற்குள் அந்த இடமே சர்வநாசம் ஆகி பிணக்காடாக காட்சியளித்தது.
கீழ் நோக்கி சமிஜை செய்தாள். வீரர்கள் நால்வர் வந்து பெண்களை தேடும் வரையில் அவள் அங்கேயே அவர்களின் பாதுக்கப்பிற்காக பறந்து கொண்டிருந்தாள். பெண்கள் மூவரும் பங்கருக்கு பின்னால் இருந்த காட்டில் உள்ள சிறு குடிசையில் அமர்த்தப்பட்டிருந்தனர். அவர்களுக்கு துணையாக இருந்த தீவிரவாதிகள் மூவரை கமெண்டோ வீரர்கள் நெற்றிப்பொட்டிலும் மார்பிலும் சுட்டு அவர்களை மீட்டுக்கொண்டு கீழே இறங்கினர்.
வெற்றி கொண்ட களிப்பில் மகிழ்ச்சியாக பாலம் விமான தளம் நோக்கி திரும்பினாள் சூர்யபானு.
வீரர்களோடு வந்த பெண்களை வரவேற்று அவர்களை பிரதமர் அலுவலகத்தில் பத்திரமாக சேர்த்தாள்.
“ஐ டோல்ட் யூ சார். ஆப்ரேஷன் சுபாஷ் இஸ் அ சக்ஸஸ். அஸ் ஆல்வேஸ்” என்று கூறி வெளியேறினாள்.
கிராமமே அவளின் வருகைக்காக காத்திருந்தது. காரில் ஊருக்குள் நுழைந்தாள் சூர்யபானு. அவள் வீட்டு வாயிலில் கார் நிற்க, அவள் தந்தையின் இருமல் சத்தம் வெளிவரை கேட்டது. வார நாட்களில் ஊருக்குள் இருக்கும் நூலகத்துக்கு சென்றுவிடும் தன் தந்தை இன்று வீட்டில் இருப்பதை நினைத்து அவளுக்கு ஆச்சரியம் தான்.
உள்ளே நுழைந்தவளை ஓடி வந்து ஆரத்தழுவிக்கொண்டாள் அன்னை நீலவேணி.
“நான் சொன்னேன்ல மா, ஊரைப் பார்க்க வருவேன்னு” என்று சிரித்தவளிடம் தந்தையை கண் காட்டினாள் அன்னை.
அவர் அவளிடம் பேசவில்லை, அவள் வந்திருப்பதை அறிந்தும் ஒன்றுமே பேசவில்லை. சூர்யாவும் அமைதியாக இருந்தாள். நான்கு நாட்கள் ஊரில் அனைவரோடும் அளவளாவினாள்.
கிளம்பும் நாள் தந்தை அருகில் வந்தவள், “நீங்க சொல்ற அகிம்சை மட்டும் நமக்கு சுதந்திரம் வாங்கித்தரலப்பா. சுபாஷ் சந்திரபோஸ் படையை பார்த்து உண்மையில் ப்ரிடிஷுக்கு பயம் வந்துடுச்சு. மறுபடி ஒரு போரை சமாளிக்க அவங்களுக்கு அந்த நேரம் சாத்தியமில்லைன்னு அவங்களுக்கும் தெரியும். அதனாலயும் தான் நமக்கு சுதந்திரம் கிடைச்சது. அகிம்சை எப்படி மிகப்பெரிய ஆயுதமோ, அதே போல தான் அப்பா நாட்டை காப்பாற்ற அவங்க வழியில போய் அவங்களுக்கு பதிலடி கொடுக்கற தைரியமும் வீரமும் அருமையான ஆயுதம். காந்தியும் தேசப்பிதா தான் சுபாஷ் சந்திர போஸும் அப்படித்தான். எப்படி சண்டை போடுறோம் அப்படிங்கறத விட யாருக்காக போடுறோம்னு இருக்குல்ல பா. நம்ம நாட்டுக்காக. நம்ம இந்தியாவுக்காக. வெளில தெரிஞ்சு நடக்குற சண்டை ரொம்ப குறைவு பா. தினமும் பார்டர்ல ஏதோ ஒரு இடத்துல சண்டை நடந்துகிட்டு தான் இருக்கு. அதை நாங்க தடுத்துகிட்டு தான் இருக்கோம். இதெல்லாம் நம்ம வரைபடத்தை காப்பாத்தவா? இல்லப்பா வரைப்படத்துக்குள்ள இருக்கிற நம்ம நாட்டு மக்கள் நிம்மதியா தன்னோட குடும்பத்தோட சந்தோஷமா இருக்க தான். ஆனா அதை என் குடும்பமே புரிஞ்சுக்கலன்னா எப்படி பா?” என்று அவர் கைகளை பிடித்துக்கொண்டாள்.
“நீங்க இந்த கையால எனக்கு சொல்லிக்கொடுத்த எதுவும் மறக்கலப்பா. அகிம்சை என் மனசுல இருக்கு. அது நாட்டுக்குள்ள இருக்கும்போது அமைதியா நல்ல வழியில போராடும். ஆனா எல்லை அப்படி இல்ல பா. பயங்கரவாதம் இருக்கிற இடத்துல அகிம்சையை விட எதிர்த்து நின்னு நம்ம நாட்டை காப்பாத்துறது தான் எனக்கு முக்கியம்ன்னு தோணுச்சு. கொள்கையை விட நாடு முக்கியம் இல்லையா பா?” என்று கேட்டதும் அவர் அமைதியாக தலையில் ஆசிர்வாதமாக கை வைத்தார். அமைதியாக கண்களை மூடிக்கொண்டனர்.
கொள்கை என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். எல்லாவற்றையும் விட நாடும், நாட்டுப்பற்றும் மிகவும் முக்கியம் என்பதை சண்முகம் வாத்தியாரும் உணர்ந்தவர் தான். அதனால் மகளின் கொள்கையை விட்டுவிட்டு அமைதியாக அவளுக்குத் தந்தையாக தன் ஆசிகளை வழங்கி அனுப்பி வைத்தார்.
நாடு பலதரப்பட்ட மக்களை உள்ளடக்கியது. அகிம்சாவாதிக்கும், உள்ளே கொலை கொள்ளை செய்யும் பாதகர்களுக்கும் சேர்த்தே ராணுவம் எல்லையில் காவல் காத்துக்கொண்டிருக்கிறது. ராணுவம், விமானப்படை, சிறப்பு ஆயுதப்படை, கடற்படை, தேசிய பாதுகாப்புப் படை என்று பல படைகள் எதிரிகளின் பல படையெடுப்புகளில் நமக்கு பாதகம் ஏற்படாமல் காத்துக்கொண்டிருக்கிறது.
ஆப்ரேஷன் சுபாஷ் போல வருடம் முழுவதும் பல ஆப்ரேஷன்கள் சத்தம் இல்லாமல் எல்லையில் நடந்தேறிக்கொண்டு தான் இருக்கிறது. பல, எந்த சேதமும் இல்லாமல் வெற்றியைத் தழுவும். பல, நம் ஜவான்களின் இன்னுயிர் துறந்து வெற்றியை நிலைநிறுத்தும்.
எப்படி இருந்தாலும் நமக்காக சுதந்திரத்துக்கு பாடுபட்ட தேசபக்தர்களைப் போல இன்றைய ராணுவ மற்றும் தேசப்படை வீரர்கள் யாவரும் கதாநாயர்களே. அதில் பெண்களும் இருப்பது நமக்கு பெருமையே. ஒன்றிணைவோம். வாழ்த்துவோம். நம் பிள்ளைங்களையும் நாட்டிற்கு உழைக்க ஊக்குவிப்போம்.
ஜெய்ஹிந்த்!!
இந்த சிறுகதை சில வருடங்களுக்கு முன் எழுதியது. சுதந்திர தினமான இன்று இதைப் உங்களுடன் பகிர நினைத்தேன். நன்றி!
அன்புடன்
ஜெயலட்சுமி கார்த்திக்
