“Love conquers all” – Virgil

சென்னையின் பரபரப்பான காலை வேளை. மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளுக்கு தேனீக்களாகக் கிளம்பிச் சென்று கொண்டிருக்கும் பேருந்து நிலையத்தின் மத்தியப் பகுதி. பச்சை நிற பூப்போட்ட சுடிதாரில் கண்களில் தேடலுடன் நின்றிருந்தாள் வெண்ணிலா.
அவளுக்கான பேருந்து வர இன்னும் இரண்டு நிமிடம் இருந்தது. மெல்லிய சாரலாக மழை பெய்யத் துவங்கியதும் அவள் முகத்தில் இத்தனை நேரம் இருந்த அவசரம், தவிப்பெல்லாம் மறந்து போய் புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.
மழை அது இயற்கையின் பரிசு மட்டுமல்ல அது மக்களில் பலருக்கு ஒரு உணர்வும் கூட! அப்படித்தான் வெண்ணிலாவுக்கும்.
அவள் அலுவலகம் செல்லவேண்டிய பேருந்து வந்ததும் ஏறி அமர்ந்து கொண்டாள். அவள் கைப்பையிலிருந்து நேற்று மாலை நூலகத்திலிருந்து எடுத்து வந்த கவிதைப் புத்தகத்தை எடுத்தாள்.
ஜன்னல் பக்கம் வந்த மெல்லிய சாரலும், கையிலிருந்த கவிதைகளும் அவளை வெளி உலகத்திலிருந்து இழுத்துச் சென்று தனி உலகில் சஞ்சரிக்க வைத்தது.
அடுத்தடுத்த நிறுத்தங்களில் கூட்டம் ஏறிக்கொண்டிருக்க அதை கவனிக்கும் நிலையில் வெண்ணிலா இல்லை. இது எப்பொழுதும் அவளுக்கு நடப்பது தான்.
இன்று என்னவோ புத்தகத்திலிருந்து அடிக்கடி அவள் கவனம் சிதறி கண்களை சுழல விட்டது.
பின் மீண்டும் புத்தகத்தினுள் முகழ்ந்தாள்.
ஆனாலும் அது தொடரவே, சற்று நிறுத்தி தன்னைச் சுற்றி கவனிக்க அந்த பிரவுன் டீசர்ட் வாலிபன் தன்னையே உற்று நோக்குவதை கவனித்தாள்.
இது முதல் முறை அல்லவே! இதே ஆள் அடிக்கடி அவளை இப்படி பார்ப்பதை அவள் கவனிக்கத்தான் செய்கிறாள். ஆனால் மற்றவரை சட்டென்று வைது விடுவது போல அந்த நபரிடம் கடுமையாக பேச மனம் வரவில்லை. இன்றும் அவரைக் கடந்து தான் பேருந்திலிருந்து அவள் இறங்க வேண்டிய நிறுத்தத்தில் அவள் இறங்கப் போகிறாள்.
இன்றாவது தன்னை குறுகுறுவென்று பார்க்க வேண்டாம் என்று சொல்லி விட வேண்டும். என்று எண்ணிக்கொண்டு இறங்க வேண்டிய நிறுத்தம் வர எழுந்து அவனைக் கடக்கும் நேரம் அவன் கண்ணோடு அவள் கண்கள் கலந்தன. ஓட்டுனருக்கு என்ன அவஸ்தையோ சட்டென்று பிரேக்கை அவர் அழுத்த தடுமாறப் போனவளிடம் “பார்த்துங்க பார்த்து” என்று அவன் பதற்றமாகச் சொன்னது அவளுக்கு அவன் மேல் சொல்லத் தெரியாத ஒரு உணர்வைக் கொடுத்தது. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவளை பிடிக்கவே, தொடவே முயற்சிக்காமல் அவளிடம் அக்கறை மட்டும் காட்டிய அவனை பிடிக்காமல் போனால் தான் ஆச்சரியம்.
அவள் கையிலிருந்த கவிதைப் புத்தகம் தவறி விழ, அதை எடுத்து அவளிடம் நீட்டியபடி, “இந்த கவிதைகள் நல்லா இருக்குமா?” என்று கேட்க,
“நான் படிச்சிட்டேன். எனக்கு பிடிச்சது. நீங்க படிச்சுப் பாருங்க.” என்று மென்மையாக அவள் பதில் கூற,
“சரிங்க நாளைக்கு காலைல திருப்பித் தர்றேன்.” என்று அலட்டிக் கொள்ளாமல் அவன் பையில் அதனை வைத்துக் கொண்டதும் அவள் உதட்டில் புன்னகை.
அன்று முதல் தினமும் அவள் ஒரு புத்தகம் கொண்டு வந்து அவனுக்குக் கொடுப்பதும், அவன் படித்துவிட்டபின் அதனைப் பற்றி அவளிடம் கூறுவதும் வாடிக்கையானது.
“டேய் செந்தில் நீயும் அந்த பொண்ணுகிட்ட கொஞ்ச நாளா நல்லாதான் பேசிட்டு இருக்க, அப்படியே மனசுல உள்ளதை சொல்லி கல்யாணத்தை முடிக்க பாரு.” என்று அவனருகில் எப்பொழுதும் அமர்ந்து பயணம் செய்யும் மோகன் கூறியதும்,
“இப்ப தான் பேசுறோம். இப்பவே சொன்னா அவ என்னை தப்பா நினைக்க மாட்டாளா டா?” என்று தயக்கம் காட்டினான் செந்தில்.
“யப்பா ராசா, நான் உன்னை விட ரெண்டு வருஷம் சின்னவன், எனக்கே அடுத்த மாசம் கல்யாணம் டா. ரொம்ப 90’ஸ் பையனா இல்லாம சட்டுபுட்டுன்னு பேசி கல்யாணத்தை முடி டா.” என்று அட்வைஸ் மழை பொழிந்து சென்றான்.
இன்று அவன் ஏறும் நிறுத்தத்தில் பேருந்து நின்றதும் அவள் எப்பொழுதும் அமரும் இடத்தில் யாரோ இருக்கக் கண்டு துணுக்கிறான் செந்தில்.
பேருந்தில் ஏறிப் பார்க்க, அன்று அவள் வரவில்லை. அவளிடம் கொடுக்க எடுத்து வந்த புத்தகம் அதன் பின் பத்து நாட்களாக அவன் பையிலேயே தஞ்சம் இருந்தது. ஆனால் வெண்ணிலாவைத்தான் காணவில்லை.
“என்ன டா ஒரு செல் நம்பர் கூடவா இத்தனை நாள்ல ஷேர் பண்ணிக்கல. நீயெல்லாம் என்னத்த வளர்ந்தியோ!” என்று திட்டினான் மோகன்.
ஆனால் செந்தில் மனதில் அவளுக்கு என்ன ஆனதோ என்று பதற்றம் மட்டுமே இருந்தது.
பத்து நாட்களில் செந்தில் வாடிப் போனான். அன்றும் காலை பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்றதும் ஏறிக்கொண்டவன் கண்களில் சட்டென்று பிரகாசம் பிறந்தது.
அவளது ஆஸ்தான இருக்கையில் வெண்ணிலா வீற்றிருக்க அவள் கண்களிலும் அதே பிரகாசம். சட்டென்று அவளருகில் காலியாக இருந்த இருக்கையில் அவன் சென்று அமர்ந்தான்.
“என்னங்க எப்பவும் சீட் காலியா இருந்தாலும் உட்கார மாட்டிங்க?” என்று வெட்கத்தை மறைத்துக் கொண்டு வெண்ணிலா வினவ, அவன் பையிலிருந்த புத்தகத்தை எடுத்து அவளிடம் நீட்டியவன்,
“இந்த புத்தகம் உங்க கைக்கு வர இத்தனை நாள் தவிச்ச தவிப்பு இருக்கே!” என்று இழுத்தான், பின் “அதான் கொடுத்திடலாம்னு வந்தேன்” என்று சமாளிக்க,
“புத்தகம் மட்டும் தானா?” என்று அவளும் இழுக்க, வெளிய மெல்லிய சாரலாய் மழை துவங்கியதும், அதைக் கண்டு சிரித்த செந்தில்,
“அது மட்டுமா? நானும் தான். பத்து நாள்ல பாதி ஆயிசே போனது போல தோணுச்சு.” என்று நெஞ்சில் கைவைத்து மெல்ல நீவினான்.
“அப்ப வீட்டுக்கு வந்து பேசுங்க. ஒரு சொந்தக்கார கல்யாணத்துக்கு போனதுல என்னை கேட்டு மாப்பிளை வீடு நிறைய வர்றதா சொல்லி வீட்ல எங்கிட்ட கல்யாணத்துக்கு சம்மதம் கேட்டாங்க. இன்னிக்கு பதில் சொல்றேன்னு சொல்லிட்டு வந்தேன். ஆமா உங்க பதில் என்ன?” என்று கவிதைப் புத்தகத்தின் ஓரத்தை விரலால் நீவியபடி பதற்றத்தை மறைத்து வினவினாள் வெண்ணிலா.
“முதல்ல வந்து சம்மதம் வாங்கிடுறேன். உங்களுக்கு சம்மதம் தானே?” என்று சிரிப்பை வெளிப்படையாக காட்டி அவன் கேட்க, மென்மையாக தலையசைத்தாள் வெண்ணிலா.
சொல்லாத காதல் சொல்லப்பட்ட விதம் வித்தியாசமாக அமைந்துவிட, காதல் கல்யாணத்தை நோக்கி பயணமானது.

வாவ்…! மெல்லிய சாரல் மழை, கையிலோ கவிதை புத்தகம், பயணிக்கும் நேரத்தில் ஒரு
அழகான காதல்.
😀😀😀
CRVS (or) CRVS 2797