அவளும் அவனும்

சிறுகதை

“டேய் எனக்கு பயமா இருக்கு டா. பிரச்சனை ஒண்ணும் வந்துடாதே?” என்று பயந்து கேட்ட இந்துவை முடிந்தவரை முறைத்துவிட்டு,

“பிரச்சனைன்னு ஒண்ணு வந்தா அது உன்னை வீட்டில இருந்து கூட்டிட்டு போற… ஐ மீன் கடத்திட்டு போயிட்டேன்னு எனக்கு தான் வரணும். நானே கூல் அஸ் குக்கும்பர் மாதிரி இருக்கும்போது நீ ஏன் டி எலி மாதிரி உருட்டிக்கிட்டே வர்ற?” என்று இந்துவின் தோளில் கை போட்டு தன்னுடன் இழுத்துக் கொண்டபடி கூறினான் குகனேஷ்.

“குகா… விளையாடாத டா. எனக்கு பயம்மா இருக்கு டா.” தோளில் தொங்கிக் கொண்டிருந்த பையை இறுகப் பற்றியபடி பேசிய இந்துவின் கண்கள் அந்த மாலை நேர சூரிய ஒளியில் பயத்தால் பளபளத்தது.

“நீ என்ன தப்பா டி செய்யப் போற? ஏன் இப்படி பயந்து சாகற?” என்று அவள் தலையில் குட்டி முன்னோக்கி அவளை இழுத்துக் கொண்டு நடந்தான் குகனேஷ்.

“அப்பாவுக்கு தெரியாம ஊரை விட்டு கிளம்பி பஸ் ஏறப் போறேன். இது தப்பில்லையா? அப்ப பயப்படுறது சரிதானே?” குழந்தை போல வினவியவளை முறைக்க முடியாமல் சிரித்து விட்டு,

“இப்படி அன்பும் பாசமுமா இருக்குற உன்னை வீட்டை விட்டு ஓடுற அளவுக்கு பண்ணினார் பாரு உன் அப்பா. அவர் தான் டி தப்பு. நீ இல்ல.” என்று அவளுடன் நடையிட்டான்.

“அப்பா சொல்றது போல ஊர் கெட்டு தானே இருக்கு குகா. பத்திரமா வீட்ல இருன்னு தானே சொன்னாரு. அதுல தப்பில்லை தானே?” என்று அவனிடம் கேள்வி கேட்டவளிடம்,

“உனக்கு என்னைப் பார்த்தா பைத்தியம் போல இருக்கா டி? நான் பாட்டுக்கு ஆபீஸ் வேலையைப் பார்த்துட்டு இருந்தேன். ரெண்டு நாளா போன் மேல போன் போட்டு வந்து கூட்டிட்டு போன்னு அழுதுட்டு, இப்ப உங்கப்பன் சொன்னது தப்பில்லை தானேன்னு என்னையே கேட்டுட்டு இருக்க! அப்படியே உன் வீட்டை பார்த்து நடந்து போ டி.” என்று அவள் கையை உதறிவிட்டு விறுவிறுவென்று வேகமாக நடந்தான்.

“டேய் குகா… நில்லு டா.” என்று பையை தோளில் சரி செய்தபடி அவன் பின்னால் ஓடினாள் இந்து.

அவன் அவளை சட்டை செய்யாமல் முன்னே செல்ல, அவனைப் பற்றி நிறுத்தி மூச்சு வாங்கியபடி,

“ஏன் டா உனக்கு இவ்வளவு கோபம் வருது? நானே மனசு ரெண்டு விதமா யோசிக்குதே, நீ நல்லதா எனக்கு சமாதானம் சொல்லுவன்னு கேட்டா… இப்படி கோவமா போனா என்ன டா அர்த்தம்?” என்று அவன் தோளில் தலை சாய்க்க,

“உன் புத்தி உன் அப்பா விஷயத்துல மட்டும் வேலை செய்யலையேன்னு கோவமா போறேன்னு அர்த்தம்.” என்று அவன் மீண்டும் நடந்தான்.

“குகா… குகா…” என்று அவன் பின்னே ஓடியபடி,

“ஆயிரம் இருந்தாலும் அப்பா இல்லையா டா. அதான் கொஞ்சம் தடுமாறி…” என்று அவள் தயங்க,

“என்ன டி நிறுத்திட்ட? பேசு. மாஸ்டர்ஸ் முடிச்சு ரெண்டு வருஷமா வீட்ல சும்மா தானே இருந்த? இப்பவும் அப்பா பேச்சை கேட்டு அப்படியே இருக்க வேண்டியது தானே! நானா உன்னை கூப்பிட்டேன்?” என்று அவளிடம் சற்று காட்டமாகவே வினவினான் குகனேஷ்.

“சுபாஷ் அவங்க கம்பெனில வேக்கன்சி இருக்குன்னு ஸ்டேட்டஸ் போட்டதும் எனக்கு…” என்று நிறுத்தினாள்.

“உனக்கும் வேலைக்கு போக ஆசை வந்துடுச்சு. அதானே! சரி உங்கப்பா கிட்ட கேட்டு போக வேண்டியது தானே? இல்ல போஸ்ட் போட்டானே அந்த மடையன், அவனைக் கூப்பிட்டு உன்னை சென்னை கூட்டிட்டு போக சொல்ல வேண்டியது தானே? 

பெங்களூருல இருந்த என்னை வா வான்னு வர வச்சுட்டு… இப்ப பெரிய இவ மாதிரி அப்பா நல்லது தானே சொன்னாரு, நாத்து தானே நட்டார்ன்னு பேசிட்டு இருக்க. நாலு சாத்து சாத்திடுவேன். 

என்னோட வேலை செய்யற எத்தனை பொண்ணுங்களுக்கு உன் அளவுக்கு ஸ்கில் இருக்குன்னு நினைக்கிற? பத்துல நாலு பேருக்கு தான். ஆனா பெரிய பெரிய பொசிஷன்ல இருக்காங்க. படிப்பு உன் அறிவுக்கு ஏணின்னா, வேலை உன் வாழ்க்கைக்கு ஏணி டி. 

நீ போன் பண்ணி வேலைக்கு போகணும், அப்பா விட மாட்டாரு, என்னை கொண்டு சென்னைல விடுறியான்னு கேட்டப்ப எனக்கு எப்படி இருந்தது தெரியுமா?

பரவால்ல நம்ம இந்துவும் இந்த உலகத்தை அவங்க அப்பா தோளுக்கு பின்னாடி நின்னு பார்க்கறத நிறுத்திட்டு முன்னாடி வந்து பேஸ் பண்ண போறான்னு அவ்வளோ சந்தோஷப்பட்டேன் டி. அத்தனையும் வேஸ்ட். நீ எப்பவும் போல பயந்தாங்கொள்ளியா, உன் அப்பா பின்னாடியே போய் நில்லு.” என்று மீண்டும் அவன் நகர்ந்து செல்ல,

“குகா!” என்று குழந்தை போல அவனுடன் ஒட்டிக்கொண்டாள்.

“இப்படி எப்பவும் யாரையாவது சார்ந்தே இருக்காத டி. உன் அப்பா உன் மேல வச்ச பாசம் தப்பில்ல. உன்னை பத்திரமா கல்யாணம் பண்ணிக் கொடுக்க நினைக்கிறதும் தப்பில்ல. ஆனா இந்த உலகம் எப்படி இருக்கும்னு உனக்கு காட்டாமலே பத்திரம்ன்ற பேர்ல உன்னை அடைச்சு வச்சு அதே போல உள்ள இன்னொரு வீட்டுக்கு உன்னை கல்யாணம் பண்ணி அனுப்ப நினைக்கிறது தப்பு டி.”  என்று அவளை அணைத்துக் கொண்டான்.

“நீ ஏன் சுபாஷை கூப்பிடலன்னு எனக்கு தெரியும். அவனை உனக்கு தெரியும் அவ்ளோ தான். ஆனா நான் உனக்கு நண்பன். என்கிட்ட நீ உணர்ற பாதுகாப்பு அவன் கிட்ட இருக்குமான்னு உனக்கு சந்தேகம். அதான் என்னைக் கூப்பிட்ட. அப்ப நீ சரியா தான் யோசிக்கிற. இதே போல ஒவ்வொரு சூழ்நிலையையும் நீயே யோசிச்சு போராடி வா டி.” என்று அவள் முன் முடி கலைந்திருந்ததை திருத்தியபடி கூறினான்.

“ஆனா எல்லாமே வீட்ல நல்லபடியா இருக்கும்போது நீ ஏன் போராடி ஜெயிக்கணும்னு அப்பா கேட்டார் டா. அவர் கேட்கும்போது அது சரி தானேன்னு தோண தானே டா செய்யுது. அதான் குழப்பத்துல…” என்று இழுத்தாள்.

“சரி நாளைக்கே உன் கல்யாண வாழ்க்கையில பிரச்சனை வந்தா அப்பா பின்னாடி போய் நிற்ப, அவர் இருக்குற வரை உன்னையும் உனக்கு பிறந்த பிள்ளைகளையும் கவனிச்சுக்குவார். அப்பறம்? உன் வாழ்க்கை என்ன ஆகும்? இது தான் நடக்கும்னு நான் சொல்லல இந்து. ஆனா நடந்தா சமாளிக்க தைரியமும், உலகத்தைப் பற்றிய புரிதலும், மனிதர்களை கண்டறியற அறிவும் உனக்கு இருக்க வேண்டாமா?” என்று கேட்க,

“நீ சொல்றதும் சரிதான் டா.” என்று நடக்க இருந்தவளைத் தடுத்து,

“யார் சொன்னாலும் மண்டையை ஆட்டக் கூடாது. உனக்கு என்ன சரின்னு படுது? அதை சொல்லு. நாம செய்வோம். இப்ப சென்னை போய் வேலைக்கு இன்டர்வியு அட்டண்ட் பண்ணுறியா? இல்ல வீட்டுக்கு போய் அப்பா சொல்றபடி இருக்கியா?” என்று அழுத்தமாக வினவினான்.

“ரெண்டு ஆப்ஷன் தானா டா? மூணாவதா உன்னோட வந்து பெங்களூருல, வேலை தேடிக்க கூடாதா?” என்று கண் சிமிட்டினாள் இந்து.

“தாராளமா வா. ஆனா ஒழுங்கா வீட்டு வாடகை, வீட்டு வேலை எல்லாம் ஷேர் பண்ணிக்கணும். செல்லம் கொஞ்சி தப்பிக்க நினைச்சா அடி வெளுத்துடுவேன்.” என்றிட சில்லறை சிதறலாக சிரிப்பொன்றை உதிர்த்த அவளை அழைத்துக் கொண்டு சென்றான் அவளது நண்பன்.

புது வாழ்க்கை முறை, புது வாழ்க்கைப் பயணத்தில் அவளும் அவனும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!