Amudham 3

அமுதம் 3

பூங்கோதையை வம்பு செய்துவிட்டு இளைஞர் பட்டாளம் உள்ளே முகிலனை பார்க்கச் சென்றது. வாசலில் ஆதியும், பூங்கோதையும் தனித்து இருந்தனர்.

மெதுவாக கோதையை நோக்கி கரம் நீட்டினான் ஆதி. அவனை அமர்த்தலாகக் கண்டவள் அவன் கரம் பற்றி எழுந்து,

“நீங்க முதலிலேயே சொல்லிருக்கலாமே அத்தான்.” என்றாள்.

“நான் ஆதி மா, முகில் இல்ல. இன்னும் நீங்க என்ன அத்தான்னு கூப்பிடுறிங்க?”

“விடுங்க. நான் உங்களை முதல்ல அப்படி கூப்பிடுட்டேன். அது அப்படியே வந்துடுச்சு.

வாங்க உள்ள போகலாம்.”

அவர்கள் ஹாலில் நுழையும்போது மொத்த குடும்பமும் முகிலனிடம் பேசிக்கொண்டிருந்தனர். கோதையை பற்றி அவர்களுக்குத் தெரியும் அவள் சிறுபிள்ளை போல ஏதாவது செய்வாள் என்று அதனால் அவள் வந்ததும் அவளைப் பார்த்து சிரித்தனர். அவள் ஆதியின் பின் மறைந்துகொண்டாள்.

ஆதி அந்த வீட்டிற்கு புதியவன், தன்னை தவறாக எண்ணிவிடுவார்களோ என்று சங்கடமாக உணர்ந்தான். ஆனால் அவன் புறம் வந்த இந்திரன், சிரித்தபடி

“வாப்பா ஆதி, உன்கூட போன்ல, வீடியோ சாட்ல தான் பேசியிருக்கோம். எப்படி இருக்க? ஏன் தயங்கி நிக்கிற? ஓ கோதை பண்ணின கலாட்டால பயந்துட்டியா? அவ அப்படி தான். சரியான வாலு. நீ தயங்காம உள்ள வா.”

ஆதி கொஞ்சம் முகம் தெளிந்தான். அனைவரும் முகிலனுடனும் ஆதியுடனும் பேசிக்கொண்டிருக்க.. அந்த தெருவின் சின்ன வாண்டுகள் கோதையை தேடி வந்தன.

“அக்கா, காலைல இருந்து அத்தான் வராரு வராரு னு நீ எங்கக்கூட விளையாட வரவே இல்லை. வா இப்போ விளையாடப் போகலாம். “,என்று அழைக்க

மீனாட்சி கடுப்பாகி, “உங்களால தான் டா அவ அடக்கமாக வீட்ல தங்க மாட்டேங்கறா. அவளே வீட்டுக்குள்ள இருந்தாலும் வந்து இப்படி படுத்துறீங்களே.. போங்க டா இனிமே அவ வரமாட்டா..”

“ஐயோ என்ன அக்கா உன் அம்மா இப்படி சொல்றாங்க. அப்போ எங்களோட யார் விளையாடுவா. நீ உங்க அம்மா கிட்ட சொல்லு..”

“டேய் இப்போ போங்கடா. நானே செம்ம பல்பு வாங்கிருக்கேன்.”

“அதெல்லாம் தெரியாது. உன் அத்தான் தான் வந்துட்டார் ல.. இரு அவர்கிட்ட நான் கேக்குறேன். “,என்று நேராக ஆதி கையை பிடித்து அவனை தன் உயரத்திற்கு குனிய சொல்லி, முத்தம் ஒன்று கொடுத்து,” ப்ளீஸ் ‘அக்காவோட அத்தான்’. நாங்கலாம் பாவம் தான. எங்களுக்கு அக்கா இல்லனா ஒன்னுமே ஓடாது. அக்காவ இனிமே எங்களோட விளையாட கூடாதுனு சொல்ல வேண்டாம் ன்னு உங்க அத்தை கிட்ட சொல்லுங்க ‘அக்காவோட அத்தான்'”. என்று அழகாய் அவனிடம் வேண்டியது ஒரு வாண்டு.

வீடெங்கும் மீண்டும் சிரிப்பலை..

அப்போது அகிலன் அவன் முன் வந்து,”டேய் அது என்னடா ‘அக்காவோட அத்தான்’.”.

அவன்,” அது எங்க அக்காக்கு அவர் அத்தான் தான அவரை நான் எப்பிடி கூப்பிவதுன்னு தெரியல. அதான் அகி மாமா.”

“இவர் என் தம்பி முகிலனோட பிரென்ட் டா. இதோ அவன் தான் உங்க ‘அக்காவோட அத்தான்’ முகிலன்” என்று முகிலனை காட்ட..

வாண்டுக்கூட்டம் ஒரு அடி பின்னடைந்தது. முகிலனை மேலும் கீழும் அளவெடுக்கும் பார்வை பார்த்தது.

மாநிறம், செம்பட்டை கேசம் பின்னால் குடுமி, அலட்சியமான கண்கள் சிவப்பெறி இருந்தது, கருத்த உதடுகள், கோணல் மாணலாய் கோடுகள் போட்ட தாடி, திருப்பிப் போட்டது போல சட்டை, கிழிந்த பேண்ட்.. அவனை அதற்குமேல் அளக்க அவர்கள் விரும்பவில்லை.

ஆதியை கண்டனர்.

சிவந்த நிறம்,சிரிக்கும் கண்கள், அலையலையாய் கேசம்,ஈரமான உதடுகள்,பளபளப்பான தாடை நாங்கள் தாடி வளர்ப்பதில்லை என்று சொல்லியது,சந்தன நிற சட்டை, கருப்பும் வெள்ளியும் கலந்த பேண்ட் , பளிச்சென்ற கருப்பு ஷூ. ஓடிச் சென்று அவனை கட்டிக்கொண்டு..

“நீங்க அழகா இருக்கீங்க மாமா.”

“தேங்க்ஸ்”, என்றான் ஆதி சிரிப்புடன்.

மீண்டும் வாண்டு அகிலனை நோக்கி

“அகி மாமா அன்னைக்கு கேட்டேன்ல நானும் அமெரிக்கா போகவான்னு, நீங்க கூட என் தம்பி வந்ததும் உன்னை அனுப்பறேன்னு சொன்னிங்களே”.

“ஆமா அதுகென்ன டா, அனுப்பிட்டா போச்சு.”

“ஐயையோ வேணாம் மாமா. நான் போகல. நானும் அப்பறம் ரா.. , இல்லயில்ல உங்க தம்பி மாதிரி மாறிட்டா. என் அம்மா என்னை திட்டும். வேண்டாம்.” என்றான்.

அவன் சொல்ல வந்ததை புரிந்த அனைவரும் முகிலனை பார்த்துவிட்டு திருதிரு வென்று முழிக்க பூங்கோதை சத்தமாக சிரிக்க தொடங்கினாள்.

“யூ யூ..”, என்று கத்தியபடி முகிலன் எழும் நேரம்  வாண்டுகள் ஓட்டம் பிடித்தன.

வந்ததும் நடந்த களேபரங்கள் அடங்க, இரவு உணவுக்கு தயாராகி  அனைவரும் டைனிங் டேபிளை அடைந்தனர்.

முகிலனின் வெளிநாட்டு வாசம் பற்றி பேசியபடி இந்திரன்,சுந்தர்,கதிர் சாப்பிட்டனர். தமயந்தியும் பாட்டியும் அடுத்து வரும் வாரத்தில் கோவிலுக்கு போவது பற்றி பேசிக்கொண்டிருக்க, சுஜி,ஷ்யாம்,மதி மூவரும் சாப்பிடும் போது பேசும் பழக்கம் இல்லாததால் உணவுடன் உறவாடினர், அகிலனுக்கு பரிமாறியபடி அருணா ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். தாத்தா முன்பே சாப்பிட்டு படுத்துவிட்டார். எஞ்சிய இரு அப்பாவி ஜீவன்கள் ஆதியும், கோதையும் முழித்தபடி சாப்பாட்டை அளந்து கொண்டிருந்தனர். அனைவருக்கும் பரிமாறியபடி இருந்த லட்சுமியும் மீனாட்சியும் இவர்களை கவனித்து இன்னும் அவர்கள் மனம் தெரியாமல் இருப்பதைக் கண்டு சிரித்துக்கொண்டனர்.

ஒருவழியாக அகிலனுக்கு ஆதி இருப்பது நினைவு வர அவனிடம், “நீங்க என்ன பண்ணப்போறீங்க ஆதி? “

“ஐயோ அண்ணா என்ன எனக்கு மரியாதையெல்லாம் குடுத்து பேசறீங்க. சும்மா நீ வா போ னு பேசுங்க சரியா?”

“சரி ஆதி. இப்போ சொல்லு என்ன பிளான் உன்னோடது.”

“அண்ணா எங்க அப்பாக்கு ஊட்டில டீ எஸ்டேட் இருக்கு. எனக்கு  எங்க பிராண்ட் நேம்ல டீத்தூள் தயாரிக்கணும் என்று ஆசை.”

“இனிமே தான் ஆரம்பிக்கணுமா ஆதி.”

“இல்லை அண்ணா 2 வருஷமா அது விஷயமா அமெரிக்கால இருந்தே நிறைய பேப்பர் ஒர்க், கட்டடம், மெசினரி முடிச்சுட்டேன். இனிமே எல்லாத்தையும் செட் பண்ணி ஆரம்பிக்கணும் அவ்ளோ தான்.”

“சூப்பர். நீ அமெரிக்காவுல  என்ன பா பண்ணிட்டு இருந்த? “,சுந்தர்

“அது பிசினஸ் டேவேலொப்மெண்ட் அங்கிள்.”

பேசி பேசி அனைவரும் சாப்பிட்டு படுக்கச் சென்றனர். தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் ஆதி துணிகளை அடுகினான். தூக்கம் வராது இருக்கவே பால்கனியில் நின்று வேடிக்கை பார்த்திருந்தான்.

அப்போது தோட்டத்தில் யாரோ அமர்ந்திருப்பதைக் கண்டவன் அங்கு சென்றான்.

தோட்டத்தில் இருந்த கல்மேடையில் முழங்கால் மடக்கி அமர்ந்திருந்தாள் கோதை.

அருகில் செல்லலாமா வேண்டாமா என்று ஆதி குழம்பினான்.

அப்போது மீனாட்சி கோதை அருகினில் அமர்ந்தார்.

“என்னடா ஏன் இங்க உக்காந்திருக்க?”

“ஒன்னும் இல்லம்மா ஏனோ மனசு ஒரு மாதிரி இருக்கு மா.”

“அது முகிலனை அப்படி சொல்லிட்டோமே தப்பா நெனச்சிருப்பாரே அப்படினு கவலைப்படற. அதான்.”

“அட நீ வேற மீனு, அவன்லாம் ஒரு ஆளுன்னு அவனுக்கு போய் பீல் பண்ணுவேனா?”

“அடிப்பாவி.. ஏன் அவனுக்கு என்ன டி.”

“அம்மா ‘ஒரு பெண்ணைப் பார்த்ததும் மதிக்கும் படி தெரியணும்’ அப்படினு நீ சொல்லுவ தான. அதே போல ‘ஒரு ஆணைப் பார்த்ததும் அவன்கிட்ட ஒரு மரியாதை வரணும்’ அம்மா.”

“ஏன் முகில் மேல அது வரலையா உனக்கு. உடையை வைத்து மதிப்பிடாதே கோதை.”

“இல்லம்மா நான் உடையை வச்சு மட்டும் மதிப்பிடல. இந்த வீட்டு வாசல்ல கார் நின்றபோது முகிலன் கண்களில் சலிப்பை பார்த்தேன். நான் ஆரத்தி எடுக்க போன போது ஒவ்வாத பார்வையை கண்டேன்.அந்நியமா பட்டுச்சு மா.நீயே சொல்லு, தன் வீட்டுக்கு 6 வருஷம் கழிச்சு வரும் ஒரு ஆண் அப்படியா இருப்பான்.அவரு வயசு என்ன? 25 இருக்குமா? ஆனா உடையை பார் 17 வயது பையன் போல. ஏன் நம்ம ஷியாம் இல்லையா அவன் முகிய விட சின்னவன் தான அவனோட பார்வையும், உடையும் எப்படி இருக்கு?”

“நீ சொல்றது ஒரு வகையில சரி தான். அவன் வெளிநாட்டில் வளந்தவன் குட்டிமா.சரி விடு. ஆமா நீ ஏன் மனசு ஒரு மாதிரி இருக்குன்னு சொன்ன?”

“அதுவா மா. முகிலோட பிரென்ட் ஆதி நம்ம வீட்டை பார்த்த பார்வையில் ஒரு திருப்தி இருந்தது. நான் ஆரத்தி சுத்த வரும் போது ஒரு ஆர்வம் இருந்தது. அதுனால தான் நான் அவரை அத்தான்னு நெனச்சுட்டேன். அதை அவரு தப்பா எடுத்துப்பாரா மா.”

“இல்லடா அந்த பையன் ரொம்ப நல்ல பையன். நாங்க நெறய தரம் நெட் ல பேசிருக்கோம். ரொம்ப அன்பானவன் மா.”

“அம்மா நான் ஒன்னு கேட்டா நீ கோச்சுக்க மாட்டியே..”

“சொல்லு குட்டிமா”

“அம்மா நான் அகில், ஷ்யாம் ரெண்டுபேரையும் அத்தான்னு கூப்பிடதில்லை. என்னால முகியை அத்தான்னு கூப்பிட முடியாது. ஆன நான் ஆதிய அத்தான்னு தெரியாம கூப்டுட்டேன். இப்ப கூப்பிட வேண்டாமுன்னு நெனச்சலும் வாயில அப்படியேதான் வருது.இனியும் அப்படியே கூப்பிடவா இல்ல வேண்டாமா?”

மீனாட்சி சிரித்தபடி,”உன் இஷ்டம் டா குட்டிமா”

“யாரும் தப்பா எடுப்பாங்களா அம்மா.ஏன்னா என்னால உங்களுக்கு ஒரு தலைகுனிவு வந்திடக் கூடாது.”

“ஐயோ யாரும் தப்பா நினைக்க மாட்டாங்க. நீ கூப்பிடு. யாரும் கேட்டா அம்மா தான் அப்பிடி கூப்பிட சொன்னாங்க என்று சொல்லு.”

“தேங்க்ஸ் மா.”, என்று அவர் கன்னத்தில் முத்தமிட்டாள்.

“சரி வா வந்து படு. நாளைக்கு உன் வாண்டுக்கூட்டதோட விளையாட போகணும் தான..”

“என் செல்ல அம்மா.”

தாய் மகள் போல் இல்லாமல் தோழிகள் போலவே பழகுவார்கள் இருவரும்.. கோதை தாயிடம் வெளிப்படையாக அனைத்தையும் பேசும் பழக்கம் கொண்டிருந்தாள். இதுவும் மீனாட்சி சொல்லித்தான். பிள்ளைகளை நண்பர்கள் போல் நடத்தினால், பருவத்திற்கு தகுந்த சந்தேகங்களை வெளியில் சென்று தேடாமல் பெற்றோரிடம் கேட்டுக்கொள்ளலாம். பெற்றோரும் பக்குவமாய் எடுத்துரைத்தால்  தன் சந்தேகங்களுக்கான விளக்கங்கள் கிடைக்கப்பெற்ற பிள்ளைகள் தப்பு வழியில் போகாமல், சரியாகவும், கண்ணியமாகவும் நடந்துகொள்வார்கள். இது மீனாட்சி வீட்டிலுள்ள அனைத்து பிள்ளைகளிடமும் சொல்லித்தான் வளர்த்தார். லட்சுமி வீட்டை பார்த்தால் மீனாட்சி பிள்ளைகளின் ஒழுக்கநெறிகளை பார்த்தார். வீடு என்பது வெறும் வீடில்லை நாட்டின் எதிர்கால குடிமகன்களை உருவாக்கும் இடம். அதில் தமயந்தி,மீனாட்சி, லட்சுமி மூவரும் கண்ணும் கருத்துமாய் இருந்தனர்.

அம்மா பெண்ணின் உரையாடலை கேட்ட ஆதி ஒரு இன்பமான மனநிலையில் இருந்தான்.அது கோதை தன்னை அத்தான் என்று கூப்பிட நினைத்ததற்கா, அவள் அம்மாவின் ஒப்புதலுக்கா, இல்லை இது போன்ற ஒரு தாய் மகள் உறவை அருகிருந்து காணக் கிடைத்ததற்கா என்று தெரியவில்லை.

அறைக்கு வந்தவன் மாலை வீட்டில் நுழையும் போது தன்னை தவறாக எண்ணுவர்களோ என்று இருந்த தயக்கங்கள், குழப்பங்கள் மாறி அமைதியாய் உறக்கத்தை தழுவினான்.


4 thoughts on “Amudham 3

  1. ஆஹா.. மீனாட்சியும் கோதையும் அம்மா பொண்ணு போலவே பழகலையே. இன்னைக்கு ஆதியை அத்தான்னு கூப்பிட சொன்னவங்க, நாளைக்கே அவனையே கட்டிக்க விரும்பினாலும் ஒத்துப்பாங்களோ..?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!