Amudham 50

Amudham 50

அழகிய ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த அருணா தன் அருகிலே நின்ற கணவனின் கண்ணில் மகிழ்ச்சியையும் மீறி அவளின் வலியை உணர்ந்த புரிதலைக் கண்டு உள்ளம் நெகிழ்ந்தாள். அருணாவின் தாயும் வந்துவிட, அங்கே மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லாமல் போனது.

குழந்தையைப் பார்க்க, கோதை ஆதியுடன் வந்திருந்தாள். தன் மேடிட ஆரம்பித்திருந்த வயிற்றின் மேல் குட்டி அகிலனை வைத்து கொஞ்சி,” பாப்பா சத்தம் கேக்குதா?” என்று கேட்க,

குழந்தை பொக்கை வாய் தெரிய சிரித்தது.

“அகி செல்லம்! குட்டி பையனுக்கு என்ன பேர் வைக்க போறீங்க?”

“வேந்தன்”.

“அழகா இருக்கு அகி செல்லம்.”

“எல்லாரும் இங்க சந்தோசமா இருக்கோம், உங்க அப்பா தான் எங்க போனாருன்னே தெரியல!”

ஆதி, கோதை, அகிலன் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். சில நாட்களுக்கு முன்பு தான் இந்திரன் கோமாவில் இருந்து குணமாகி இருந்தார். வயதின் காரணமாக அதிர்ச்சியான தகவல் சொல்லக் கூடாது என்று தான் இத்தனை நாளும் அவரிடம் வீட்டைப் பற்றியோ, வீட்டில் அவரை பற்றியோ சொல்லாமல் இருந்தனர். இப்போது குழந்தை பிறந்த நற்செய்தியோடு முகிலனைக் காணவில்லை என்று சொன்னால், கண்டிப்பாக முகிலன் விஷயம் நீர்த்துப் போகும். அதற்காகவே குழந்தை பிறக்கும் வரை அவரை இதே மருத்துவமனையில் தங்க வைத்திருந்தனர். அகிலன் கண் காட்ட, ஆதி கைத்தாங்கலாய் இந்திரனை அழைத்துவர, மொத்த குடும்பமும் அதிர்ந்தது.

நடந்தவைகளை விளக்கி விட்டு திரும்பிய கோதையின் கண்களில் பட்டது அவசரமாக உள்ளே வந்த நவிலன்.

“நவிண்ணா! என்ன … என்ன பதட்டம்?”

“ரிசார்ட்ல ஏதோ பிரச்சனை.”

“இப்படி மொட்டையா பிரச்னைன்னு சொன்னா எப்படி டா?”

“இல்ல ஆதி எனக்கு தெரியாது. கிருத்தி போன் பேசிட்டு இருக்கும் போது ஐயோன்னு கத்தினா. பயந்துட்டேன்.”

“அவ்வளவு அக்கறைன்னா போகாம இங்க தகவல் சொல்ல வந்திங்களா?” என்று நக்கல் அடித்தாள் கோதை.

“நீ வேற நேரம் காலம் தெரியாம நக்கல் பண்ணிக்கிட்டு, சொல்லாம போய்ட்டா இவன் தேடுவான். நான் இப்போ ரிசார்ட் போறேன்னு சொல்ல தான் வந்தேன்.”

“இருங்க.” என்று ரிசார்ட்க்கு போன் செய்ய, அதை எடுத்த சுபாவிடம்,

“அங்க என்ன டி கலவரம்?”

“ஒன்னுமே இல்லையே!”

“சும்மா விளையாடாம சொல்லு சுபா.”

“இல்ல டி. இந்த கிறுக்கி இருக்கால்ல. அவ இப்போ அடிக்கடி யாரோடையோ போன்ல பேசிட்டே இருக்கா. யாருன்னு கேட்டேன். சொல்லல. அதான் அவ போன் பேசும்போது ஒரு ரப்பர் பல்லிய போட்டேன். அந்த பக்கி கத்திக்கிட்டே ஓடி போயிடுச்சு.”

“சரி. எதுக்கு அப்படி பண்ணின லூசு?”

“அவ போன்ல பேசுற ஆள் யாருன்னு தெரியத்தான்.”

“தெரிஞ்சுகிட்டியா?”

“இல்லயே. அந்த பக்கி போன்ல அந்த நம்பரை ‘சொல்’ அப்படினு சேவ் பண்ணி வச்சிருக்கா. ஒரு வேளை ஷியாமா இருக்குமோ?”

“ஏன் உனக்கு அவன் மேல டவுட்டு?” என்று போனை ஸ்பீக்கரில் போட,

“அட ஒரு மாசமா டாக்டர் சார் நம்ம ரிசார்ட் பக்கம் நடையா நடக்குறாரு டி”

“ஓ… அப்படியா? உனக்கெப்படி தெரியும்?”

“நான் தான் பாக்கறேனே! ரிசெப்ஷன் பக்கத்துல தான இருக்காரு.”

“ஆனாலும் நீ இவ்வளவு தத்தியா இருக்க வேண்டாம் சுபா.”

“என்னடி சொல்ற?”

“ஆன்ன்… நான் உன்னை லவ் பண்றேன்னு சொல்றேன் டி லூசு.” என்று ஷ்யாம் கோதையின் கைபேசி வழியாகக் கூற,

“என்னடி மிமிக்ரி பண்ற?” என்று சுபா சிரிக்க,

“உன் பாடு கஷ்டம் டா ஷியாம். ஏன்டி அவன் இங்க மொத்த குடும்பத்தையும் வச்சிக்கிட்டு உன்னை காதலிக்கறதா ப்ரபோஸ் பண்றான் டி. இப்படி ப்ரபோஸ் பண்ண ஒரே ஆள் நீ தான்டா.”

“ஆமா இவ இருக்கற ஸ்பீட்க்கு நான் இவகிட்ட சொல்லி புரியவச்சு, வீட்ல பேசி… ப்பா… அதெல்லாம் ரொம்ப பெரிய ப்ராஸஸ்… அதான் நேரா… எல்லார்ட்டையும் சொல்லியாச்சு…”

“நீ நல்லா வருவ!” என்று கோதை கேலி செய்ய, அங்கே சுபா வெட்கம் கொண்டு போனை வைத்திருந்தாள்.

“சரி நீ உன் காதலை சொல்லிட்ட, நீங்க எப்படி அண்ணா? சொல்லியாச்சா… என்ன?”

“அதெல்லாம் சொல்லிட்டேன் கோதை மா. அவ வீட்ல எனக்காக யாரு பேசுவா? அதான் தயங்கிட்டே இருக்கேன்.”

அவனை ஒரு முறை முறைத்துப் பார்த்துவிட்டு. ஆதியின் பக்கம் திரும்பியவள்,

“அத்தான் நாளைக்கு இன்பா, பிரவீன், ராகுல், சுபா, கிரு எல்லார் வீட்டுல இருந்தும் வந்திருக்கணும். நான் பேசணும்.”

“சரி பூமா.” என்றதும் கோதை வீட்டுக்கு புறப்பட்டாள்.

“நல்ல பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டுறான் பாரு. அவ கோவிச்சுக்கிட்டு போறா. ஐயோ! எப்பயும் பேசுற மாதிரி வாய் விட்டுட்டேன். கோதை கோதை மா. இங்க பாரேன். அண்ணா… பாரு…” என்று நவிலன் அவளைத் தொடர்ந்து ஓட, மற்றவர்கள் அனைவரும் சிரித்தனர்.

குழந்தையைப் பார்க்க வந்த நண்பர்களின் பெற்றோரிடம் பேசி சம்மதம் வாங்கி ஐந்து திருமணத்தையும் உறுதி செய்தாள் கோதை. ஆனால் இன்னும் இரண்டாண்டு காலம் காத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு அவரவர் ஜோடிகளுடன் கட்டுப்பாடோடு பேசிப் பழக அனைவரும் ஒப்புக்கொண்டனர்.

கோதையை மொத்தமாக அனைவரும் அணைக்க, அவள் மூச்சுத் திணறிப்போனாள்.

“ஏய்! அவ பிள்ளதாச்சி. ஒண்ணுக்கு ரெண்டு பிள்ளை சுமக்கறா. தள்ளுங்க.”, என்று வந்தார் மீனாட்சி.

கோதை சிரித்த முகமாய் அவர் தந்த ஜூசை வாங்கி பருக, ஆதியை தவிர அனைவரும் அவளை ஆவென்று பார்த்திருந்தனர்.

“என்ன அதிசயம்! மீனாட்சி கூட பேசிட்ட.” என்று தமயந்தி கேட்க,

“நேத்து வயிறு என்னவோ போல இருந்தது அத்தை. குழந்தைக்கு என்னமோன்னு நான் பதறிட்டேன். ஒரு அம்மாவா துடிச்சு போய்ட்டேன். அப்போதான் அம்மாவோட அன்றைய உணர்வு புரிஞ்சது. எனக்கு என்னை சந்தேகப்பட்டுடாங்கன்னு ஒரே கோணத்துல பார்த்துட்டேன். அம்மாவா ஐயோ நம்ம பிள்ளை கஷ்டப்படுதோ நம்ம கிட்ட சொல்ல முடியாம தவிக்கிதோ, முகிலனே தப்பு பண்ணிட்டு என்னை தப்பா சொல்லிருப்பானோ. இல்ல எனக்கு அவனால வேற பிரச்சனை வந்திடுமோன்னு கண்டிப்பா என்னென்னவோ யோசிச்சிருப்பாங்க. நான் கண்ல கூட பார்க்காத என் சிசுவுக்கு என்னாச்சோன்னு பதறும்போது, என்னை பெத்து அத்தனை வருஷம் வளர்த்த அம்மா பதட்டதுல தப்பா யோசிச்சு பேசிருப்பாங்கன்னு தோணுச்சு. நேத்து நைட்டே அம்மா கிட்ட பேசிட்டேன்.”

சொன்ன அவளை அன்பு பொங்கப் பார்த்தது குடும்பம். அவள் அன்னை செய்த தவறை ஒரு அன்னையாக நின்று புரிந்துகொண்ட அவளை அணைத்துக்கொண்டார் அன்னம்.

லட்சுமி கோதையின் கை பிடித்து “நீ ரொம்ப நல்ல பொண்ணு கோதை. சேட்டை, அன்பு , பாசம் எல்லாமே கலந்த கலவை. ஒரு அம்மாவின் கஷ்டம் இன்னொரு அம்மாவுக்கு புரியும். நான் இதை முன்னாடியே உனக்கு விளக்கி சொல்லிருப்பேன். ஆனா அது உன்மேல திணிச்சது போல இருந்திருக்கும். நீயா இன்னிக்கு உணர்ந்த பாரு. உன்னை நினைச்சா பெருமையா இருக்கு கோதை”, என்று உச்சி நுகர்ந்தார்.

ராஜேஸ்வரன் தன் மருமகளை அருகில் அழைத்து “உன்னை பார்க்கற ஒவ்வொரு தருணத்துலயும் நீ பண்ற ஒவ்வொரு விஷயமும் உன்னை எனக்கு புதுசா அழகா, காட்டுது மா. உன்னை போல ஒரு பெண் கிடைச்சா வாழக்கை அழகா அர்த்தமுள்ளதா இருக்கும்.”

“நான் கூட ஆதி நீ என்ன சொன்னாலும் எப்படி சரின்னு சொல்றான். வேலைல கம்பீரமா நிக்கிற அவன் உன் முன்னாடி மட்டும் சின்ன பிள்ளை போல நிக்கறது எனக்கு வியப்பா இருக்கும். ஆனா உன்னோட சிந்தனை. உன் அன்பு. உன் அக்கறைக்கு பக்கத்துல ஒருத்தரும் வர முடியாது கோதை.” என்று நெகிழ்ந்துரைத்தான் நவிலன்.

கதிரும், சுந்தரும் இப்போது திருநெல்வேலியில் வேலை செய்வதால் அவ்வப்போது இங்கே வந்து தங்கிப் போவார்கள்.. இன்றும் அவர்கள் இருக்க,

‘அன்னையை மன்னித்த மகள் தன்னை மன்னிப்பாளா?’ என்று அவர் ஏங்கிப் பார்க்க,

அவள் தன் தந்தையின் தோள் மேல் சாய்ந்தாள்.

“மனைவியை எல்லா நேரத்திலும் எதிர்க்க கூடாது அதே போல ஆதரிக்கவும் கூடாது. சரியா?”என்று கேட்ட மகளிடம் கண் கலங்க ‘சரி’ என்று தலை அசைத்தார்.

“எல்லாம் சந்தோசமா இருக்கீங்களா? ஆளாளுக்கு ஒரு ஆளை செட் பண்ணி விட்டியே நெட்டைகொக்கு என்னை மறந்துட்டியே?”, என்று பொய் அழுகை அழுதான் புவனேஸ்வரன்.

“புவனேஷ். என்னைப் போய் கேக்குற? நான் உன்னை விட பெரியவ, என் பிரெண்ட்ஸ் உனக்கு பொருந்தாது ,வதுவையோ, நர்மதாவயோ கேளு. அவங்க நல்ல பிரெண்ட்ஸ் இருந்தா இண்ட்ரோ குடுக்க சொல்லு. இப்படியெல்லாம் சொல்லுவேன்னு நினைச்சியாடா பொடி டப்பா? ஒழுங்கு மரியாதையா காமெராவோட இருந்து பெரியா ஆளா வா. வீட்ல பார்த்து உனக்கு நல்ல பொண்ணா கட்டி வைக்கறோம்.”

“அசுக்கு. இதெல்லாம் போங்கு. நீங்க எல்லாரும் காதலிச்சு கல்யாணம் பண்ணிப்பீங்க. நான் மட்டும் வீட்ல பாக்கற வத்தலை கல்யாணம் பண்ணனுமா? நோ… நெவர்…”

“டேய்!” குரல் வந்த திசையில் திரும்ப அங்கே பிரம்போடு நின்றிருந்தார் காமாட்சி.

“ஐயோ! அம்மா… இவங்கள மறந்து போய்… வாய விட்டுட்டேனே! அக்கா காப்பாத்து!”, என்று கோதை பின்னால் ஒளிய,

“டேய் மாசமா இருக்கற பிள்ளையை விட்டு தள்ளி நில்லு.”

“மாட்டேன் நீங்க அடிப்பிங்க. அப்பா அப்பா இங்க பாருங்க, உங்க வைஃப் என்னை கொடுமைப்படுத்துறாங்க.”

“டேய் நானே இப்போ தான் நாலு வாங்கிட்டு வந்தேன். மறுபடி என்னை மாட்டி விடாதே.”

பிரிந்திருந்தவர்கள் சேர்ந்ததும் தங்களுக்குள் நல்ல புரிந்துணர்வைக் கொண்டு வந்தனர். அதனால் இந்த காட்சி அடிக்கடி அந்த வீட்டில் நடைபெறும் ஒன்றாக மாறி இருக்க, மற்றவர் சிரிக்க,

“உங்களை சொல்லணும். பிள்ளை வளர்த்த லட்சணம் பாரு.”, என்று காமாட்சி மகேஸ்வரனை துரத்த அங்கே அன்பு மட்டுமே ஆட்சி செய்தது.


மூன்று ஆண்டுகளுக்கு பின்,

அடுத்த அடுத்த நாள் இருந்த முகூர்த்தத்தில் ஐந்து ஜோடிகளுக்கும் திருமணம் நிச்சயிக்க பட்டது.

முதல் நாள் திருமணம் ராகுல் -மதி, ஷ்யாம்-சுபா, பிரவீன்-சுஜி திருமணம் தான்.

அங்கும் இங்கும் ஓடும் தன் மகன்களை கண்களாலேயே கவனித்தபடி உணவு தயாரிப்பில் மேற்பார்வை பார்த்து நின்றாள் கோதை.

அங்கு வந்த ஆதி அவளுக்கு குடிக்க ஜூசை குடுக்க “அப்பா எனக்கு” என்று வந்து நின்றார்கள் அவர்களின் சீமந்த புதல்வர்கள் தியானேஸ்வரன் மற்றும் சர்வேஸ்வரன்.

“தினு, சர்வா, உங்களுக்கு நவிப்பா ஐஸ் க்ரீம் வாங்கி வச்சிருக்காரு” என்று கல்யாண கனவில் சுற்றிய நவிலனை போட்டுவிட்டாள் கோதை.

“அய்… நவிப்பா… ஐஸ்…”, என்று அவன் பின்னால் பிள்ளைகள் ஓட, ஆதி சிரித்தபடி,

“வேலை இருக்கத்தான் செய்யும் பூமா. உனக்கான ஓய்வை நீ தான் எடுத்துக்கணும். உன் கனவுபடி ரிசார்ட்ல காபி ஷாப், ரெஸ்ட்டாரெண்ட் ரெண்டையும் நீயே தானே பாக்கற, அப்பறம் கல்யாண சமையலுக்கும் வராட்டி என்ன பூமா?”

“சரிங்க அத்தான்.”என்று அடுத்த வேலையை பார்க்க அவள் செல்ல, சிரித்தபடி அவனும் கல்யாண வேலையில் இணைந்தான்.

பெண்கள் அனைவரும் ஒன்று கூடி மணப்பெண்களை கிண்டல் செய்து சிரிக்க, நிறைமாத கர்ப்பிணியாக அருணா எல்லா வேலையிலும் தலையை விட்டபடி இருந்தாள், அவள் பின்னாலே சென்று,

“அம்மா! ப்ளீஸ் மா! பாப்பா பாவம். நீ உக்காரு.” என்று அவளை அதட்டி அதட்டி உட்கார வைத்துக்கொண்டிருந்தான் அவளின் அன்பு மகன் வேந்தன்.

“டேய் நீ கோதை கூட சேராத டா… அவளை போலவே அதட்டுற… போ.” என்று அவள் முகத்தை திருப்ப,

“அம்மா பாப்பாக்கு நல்லது இல்ல மா. கோதைம்மா சொன்னா…”

“அதான்! அவ தான்… இது என் நாத்தனார், என் கொழுந்தன் கல்யாணம் டா… நாளும் தள்ளி வைக்க முடியல. நான் கொஞ்சாமச்சும் செய்யணும் தானே வேந்தா?”

தன் மூன்று வயது குழந்தையை பெரியவன் போல நடத்தி அவனுக்கு காரணங்களை விளக்கினாள் அரு. அப்போது தான் பிள்ளைகள் நம் வார்த்தைகளைப் புரிந்து சூழ்நிலை அறிந்து அவர்கள் முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும் என்று ஆசிரியை அவளுக்கு தெரியாதா?

வேந்தனை போகும் படி செய்கை செய்த அகிலன், அருவை பின்னால் இருந்து அணைத்தான்.

“அகி” என்று அரு அவனை பார்த்துச் சிரிக்க,

“வா அரு தாலி கட்டுற நேரம் ஆகுது போகலாம்.” என்று அவளை அழைத்து சென்றான்.

போகும் வழியில் அவன் போன் அடிக்க

“நீ போ அரு நான் வரேன்” என்று அவளை அனுப்பியவன் போனை காதுக்கு கொடுக்க,

“சார் உங்க தம்பி…”

“சொல்லுங்க…”

“இறந்துட்டாரு சார்…”

“எப்போ?”சலனமே இல்லாமல் கேட்டான் அகிலன்.

“இப்போதான் சார். ஒரு வாரமாவே ரொம்ப வயலண்ட்டா இருந்தாரு சார். நேத்து நைட் சாப்பாடு தர்ற வழியையும் அடைச்சிட்டாரு. திறக்க முடியல. நாங்க கதவையே திறக்க பார்த்தோம். அப்பறம் இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி தான் திறந்து பார்த்தோம் சார். அவர் தூக்கு போட்டு இறந்துட்டாரு.”

“சரி. அனாதை பிணம் அப்படினு சொல்லி கிரிமேஷனுக்கு அனுப்பிடுங்க. எங்க வீட்ல கல்யாணம். இனி இது விஷயமா எனக்கு கூப்பிட வேண்டாம்.” குரல் இறுகச் சொன்னான்.

தனியாக சென்ற அவன் ‘இந்த தண்டனை அவனுக்கு போதுமா? தனிமையில் மூன்றரை ஆண்டு கூட அவன் தாக்குப் பிடிக்காமல் தூக்குப்போட்டு செத்து போயிருக்கான். ஏதோ சொந்த குடும்பத்தையே கஷ்டப்படுத்தி, பல படிக்கிற பசங்க போதைக்கு அடிமையாக காரணமானவன் இன்னிக்கு இந்த பூமிக்கு பாரமா இல்லை. அப்பாடா.’ என்ற திருப்தியோடு தங்கை கல்யாணத்தில் அண்ணனாகச் சீர் செய்து மனமகிழ்ந்து இருந்தான்.

அடுத்தநாள் இன்பா – வது, நவிலன் – கிருத்தி திருமணமும் இனிதே முடிய, ஐந்து ஜோடிகளையும் அன்றே சிம்லாவுக்கு அனுப்பிவிட்டு, பெரியவர்களை திருமண அலுப்பு தீர சென்னையில் ஓய்வெடுக்க அனுப்பிவிட்டான் ஆதி.

அகிலன் அருணா மட்டும் வசந்த இல்லத்தில் இருக்க, கோதை ஆதி இருவரும் சாந்தி நிலையத்தில் இருந்தனர்.

பிள்ளைகளும், புவி, நர்மதா அனைவரும் தாத்தா பாட்டியோடு சென்று விட, மடி நிறைந்த அருணாவை தன் மார்பிலிட்டபடி குழந்தையின் பெயர் பற்றிய ஆராய்ச்சியில் இருந்த அவளை காதல் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான் அகிலன்.


அங்கே அதே பௌர்ணமி இரவு, அதே நீர் அருவி…

தன் பூமாவை பின்னின்று அணைத்தபடி இருந்தான் ஆதி.

இத்தனை வருடமாக இங்கே வராதவள் இன்று இங்கே வரவேண்டும் என்று அடம் பிடிக்க, அவளை அழைத்து வந்தான் ஆதி.

“எனக்கென்னவோ இன்னிக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு அத்தான். ரொம்ப நாளா மனசுல இருந்த பாரம் இறங்கியது போல, ஒரு உணர்வு… இந்த அருவியை பார்க்க அப்படி ஒரு ஆவல்.”

அந்த ஏகாந்த சூழ்நிலையில் ஆதி பூமாவின் கன்னம் தொட்டு, “இங்க வந்தா உனக்கு வேண்டாத நினைவு வரும் அப்படினு தான் நான் கூட்டிட்டு வரல பூமா.”

“புரியுது அத்தான். ஆனா இப்போ எனக்கு அந்த உணர்வு இல்ல. இந்த குகை மட்டும் எனக்கு அன்னைக்கு தெரியாம போயிருந்தால், யோசிச்சு பார்க்கவே பயம்மா இருக்கு. ஒன்னு அந்த நீலா என்னை எதுவும் பண்ணிருப்பாங்க. இல்ல அந்த புலி அடிச்சிருக்கும். அப்படி எனக்கு எந்த அசம்பாவிதமும் நடக்காம தடுத்த இந்த இடம் எனக்கு கோவில் போல புனிதமான இடம் அத்தான்.”

“அகிலன் அண்ணா முகிலனைக் காணோன்னு சொன்னதை நீ நம்புறியா? அவனை ஏதாவது பண்ணிட்டாரோன்னு எனக்கு தோணுது.”

“என் அகி செல்லம் ஒரு நாளும் தப்பு செய்ய மாட்டாரு. அவனுக்கு கண்டிப்பா மரணத்தை விட கொடுமையான தண்டனையயைத் தான் கொடுத்திருப்பாரு.”

“உண்மை தான் பூமா. நீ வித்தியாசமானவள் பூமா.. உன்னால தான். உன்னால் மட்டும் தான் என் வாழ்க்கை இவ்வளவு வண்ணமயமா இருக்கு. உன்னை சுத்தி இருக்கற அத்தனை பேரையும் நீ எவ்வளவு அன்போடு பார்க்கற. அப்படிப்பட்டவ, எனக்கே எனக்கு சொந்தம்… எனக்கு மட்டுமே சொந்தம்.”

“நீங்க ஒரு நாள் சொன்னிங்களே ‘நீ எனக்கு எப்படிப்பட்டவள் என்று கண்டிப்பாய் நம் வாழ்வின் பொன்னான நாளில் நான் உனக்கு சொல்லுவேன்.’ன்னு இப்போ சொல்லுவீங்களா அத்தான். எனக்காக பிளீஸ்.”

“என் ஆசைகளை நிறைவேற்றி, குடும்பங்களை ஒண்ணாகி. நீ செஞ்சிருக்கற எதுவும் சாதாரணம் இல்ல பூமா. நீ எனக்கு கிடைச்ச வரம். இல்லை. நீ எனக்கு கிடைச்ச அமுதம்!

உன் அன்பு அமுதத்தால் நிறைந்தேன் பூமா..
உன் காதல் அமுதத்தால் நிறைந்தேன் பூமா..
உன் இதழ் அமுதத்தால் நிறைந்தேன் பூமா..
மொத்தமா சொல்லணும்னா.. நான் உன்
அமுதங்களால் நிறைந்தேன்…”

அவனை அணைத்து தன் இதழ் அமுதத்தை அவனுக்கு வழங்கினாள் அவனின் அமுதப்பெண் பூமா.

ஆதியின் காதலும் பூமாவின் புரிதலும் என்றும் அவர்கள் வாழ்வை அமுதத்தால் நிறைக்கும்.


8 thoughts on “Amudham 50

  1. சூப்பர், இந்த காலத்துல இம்புட்டு பெரிய குடும்பத்தை கட்டி ஆள்றது ரொம்ப பெரிய விஷயம் தான்.
    அதுல் கோதை & ஆதியோட பங்கு ரொம்பவே அதிகம் தான்.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  2. வாவ், அருமையான கூட்டுக் குடும்ப கதை, அதிலும் காதல், பாசம், கோபம், பயம், வெறுப்பு, காழ்ப்பு, என்று பலவித கலவையான உணர்வுகளை காட்டி, கடைசியில் சுபமான முடிவை தந்து அமுதமாக நிறைத்து விட்டாய். வாழ்த்துகள் மா💐💐💐💐💐💐

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!