
அமுதம் 47
ஆதியின் மனதில் இருக்கும் கொதிப்பு அவன் காரை கையாண்ட விதத்திலேயே தெரிந்தது. வளைவுகளில் கூட ஆசாத்ய வேகம். அவனுடன் வந்த ராகுல் அவ்வப்போது அவன் தோளினை அழுத்தி அவனை நிலையாக இருக்கக் கூறினான்.
ஆதியால் இன்னும் நம்ப முடியவில்லை.
‘அந்த சக்தி எப்படி சென்னையில் இருந்து தப்பினான்? நீலா அத்தை எங்கிருந்து திடீரென்று முளைத்தார்? அவருக்கு தன் மேலும் தன் மனைவி மேலும் ஏன் இந்த வெறி?’
கார் வசந்த இல்ல வாசலில் நின்றதும், ஆதியிம் மனம் இறுகியது. ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்துக்கொண்டான். ராகுலுடன் இறங்கி வர, நவிலனும் ஷ்யாமும் வந்து இணைந்து கொண்டனர்.
“வா கண்ணப்பா? என்ன இந்த நேரத்துல வந்திருக்க? கோதை தூங்கிட்டாளா?”
“இவ்வளவு அக்கறை இருக்கற நீ அவளை அங்க தனியா விட்டு வந்திருக்க கூடாது. சரி வந்துட்ட, வது போனால்ல விடவேண்டியது தானே, ஏன் ஏன் இப்படி பண்ணினீங்க?”
“என்ன சொல்ற?”
“என் பூமா… என் பூமா…வை காணோம்.”
“என்னப்பா சொல்ற?”, என்று மொத்த குடும்பமும் வர,
தன்னை திடப்படுத்திக் கொண்டு, அவன் பேச ஆரம்பிக்கும் போது சுந்தர், கதிர், மீனாட்சி, காமாட்சி நால்வரும் வந்தனர். அவர்களை அவன் எந்த உணர்வும் இல்லாமல் பார்க்க, சுந்தர்,
“ஷியாம் சொன்னான் மாப்ள, அதான் இங்க வந்தோம்,”, என்ற அவரின் குரலில் தான் எத்தனை இயலாமை!
“கோதையை சக்தி கடத்திட்டு போய்ட்டான்.”
கிருத்தியும்,சு பாவும் மடங்கி அமர்ந்தனர். தன் தோழி மனதைரியம் கொண்டவள் என்பதால் அவள் மீண்டு வருவாள் என்று மனம் சொன்னாலும், அவளைப் பேணாமல் போனோமே என்ற குற்றவுணர்வு விரவியது.
“சக்தி எப்படி அண்ணா தப்பிச்சான்? அவன் தலைவன் பவர் வச்சி நம்ம கிட்ட விளையாடறானோ?” என்ற இன்பாவை பார்த்த ராகுல்,
“அவன்தான் டா அந்த கூட்டத்துக்கு தலைவன். அது தெரிஞ்சா உயிருக்கு ஆபத்துன்னு வேஷம் போட்டு சுத்திருக்கான். அவன் நம்ம கைலயே இருந்தும் அவனை கோட்டை விட்டுட்டோமே!”
ஆளாளுக்கு அவர்களின் குமுறல்களோடு இருக்க “அப்போ எங்க அம்மா எங்க?” என்ற நர்மதாவின் கேள்வியில் ஆதி சட்டென்று நிமிர்ந்தான்.
“டேய் நவி, அந்த பொம்பள எங்க டா?”
“ஆமா உங்க அம்மாவை பத்தி இப்போ எதுக்கு? அவ தான் கோவப்பட்டு உங்க தாத்தா வீட்டுக்கு போயிருக்கான்னு சொன்னேன்ல…” என்ற அன்னத்தின் வார்த்தைகளுக்கு,
“இல்ல அத்தை, அம்மா வந்துட்டாங்க.”
“ஆமா மா. நேத்து அத்தை வந்தாங்களே! அங்க சாந்தி நிலையத்தில் தானே இருந்தாங்க!”
“ஐயோ அம்மாவையும் அவனுங்க தூக்கிட்டு போயிருப்பாங்களோ? அம்மா பாவம்!”
“போதுமா? போதுமா பெரியம்மா… அன்னைக்கே படிச்சு படிச்சு நானும் அகி அண்ணனும் சொன்னோம். அவங்களை பத்தின உண்மை எல்லாருக்கும் சொல்லிடலாம் அப்படின்னு. கேட்டிங்களா? இன்னிக்கு கோதையை அவங்க கூட இவங்க ரெண்டு பேரும் விட்டுட்டு வந்துட்டாங்க. யாரால? உங்களால பெரியம்மா.”
“அன்னைக்கே என் பூமா சொன்னா தானே? யார்கிட்டையும் பெரிய விஷயங்களை, ஒருவரின் தவறை மறைக்காதீங்க, அது பெரிய ஆபத்தைக் குடுக்கும் அப்படின்னு.”
“இப்போ கோதை ஒரு ஆள் இல்லை. அவ வயித்துல குழந்தை இருக்கு. ஏற்கெனவே அடிபட்டு, ஆபரேஷன் ஆன உடம்பு, இன்னும் பிராக்சர் கூட சரியாகால. இப்போ அவன் அவளை தூக்கிட்டு போய் என்ன செய்யறனோ?”,என்று ஷியாம் உடைந்து அழ,
அவன் சொன்ன செய்தியும், நீலாவைப் பற்றிய தகவலும் வெவ்வேறு உணர்வை அங்கிருந்த பலரின் மனதில் விதைத்தது.
“அவங்க என்ன பண்ணினாங்க? எதை எங்க எல்லார் கிட்ட இருந்தும் மறைச்சீங்க?”
“கோதை மாசமா இருக்காளா? இது ஏன் யாருக்கும் சொல்லல?”
ஷியாம் அழுதபடி சொல்ல “அத்தை” என்ற வதுவின் குரலில் கோபத்தின் கொந்தளிப்பு.
நர்மதா வதுவைப் பிடித்து, “எப்படி டி இப்படி ஒரு பொம்பளை இருக்கும்? அத்தையைக் கட்டி போட்டு அடிச்சு, இன்னிக்கு கோதை அக்காவை அவனுங்க கிட்ட பிடிச்சு குடுத்து, சீ… நான் ஏன் அவ வயித்துல பொறந்தேன்? ஏற்கனவே நான் இந்த குடும்பத்துல ஒருத்தியா இல்லையான்னு குழம்பி தவிக்கிறேன், இதுல ஏன் இப்படி எல்லாம் நடக்கணும்?” என்று முகத்தை மூடி அழுதாள்.
“என்ன பேசுற நர்மு? நான் தான் அன்னைக்கு ஏதோ கோவத்துல தப்பா பேசிட்டேன்னு சொன்னேன் தானே! நீ என் மகேஷ் மாமா பொண்ணு தான் புரியுதா…”, என்று மனைவி தொலைந்த துக்கத்தை மறைத்துக் கொண்டு அந்த சிறு மலரின் வலியை போக்க நினைத்த ஆதியை அக்குடும்பத்தாரின் கண்கள் பெருமிதத்துடன் வருடிச் சென்றது.
“ஐயோ இதெல்லாம் விடுங்க. என் பொண்ணு எங்க? “,என்று வந்த மீனாட்சியை ஒரு பார்வையில் ஒதுக்கிய ஆதி,
“இப்போ என்ன செய்யலாம் ஆதி?”, என்ற மகேஸ்வரன் குரலில் நிலை பெற்றான்.
கதிர் கையில் போனுடன் வந்தவர் “ஆதி முகிலன் இப்போ அந்த சக்தி கூட தான் இருக்கான். அவங்க கோவையில் இருக்காங்க.”
“அப்போ கோதை அங்கதானே இருப்பா?”, என்ற கிருத்திக்கு,
“இல்லை”, என்ற பதிலைத் தந்தார் சுந்தர்.
“அப்போ கோதை எங்க?”
“அவ அவங்க கஸ்டடில இல்ல.”
“ஒருவேளை நீலா அத்தை அவங்களோட அண்ணியை வச்சிருந்தா?”
எப்படி யோசித்தலும், விசாரித்தாலும் எங்கோ வந்து முட்டி நின்றது.
ராஜேஸ்வரன் மெதுவாக ஆதியை அணைத்து, “கோதைக்கு ஒன்னும் ஆகாது டா. அவ எல்லாத்தையும் கடந்து வருவா. அவளை ஏன் அவன் கடத்தணும் அப்படின்னு யோசி. அதுனால என்ன லாபம் அப்படின்னு யோசி. இதே உன்னை தூக்கிட்டு போயிருந்தா இந்நேரம் என் மருமக உன்னை கண்டு பிடிச்சு கூட்டி வந்திருப்பா. நீ ஆதியா யோசிக்காம கோதை மாதிரி யோசி. அவளை அடையற வழி தானே கிடைக்கும்.”
அதுவரை துவண்டு நின்ற ஆதி நிமிர்ந்தான். வேகமாக சென்று முகம் கழுவி வர, அவனுக்கு சூடான காபியை நீட்டினாள் அரு.
“அண்ணி” என்ற ஆதியின் குரல் கலங்கிட
“அகிக்கும் அவளுக்கும் ஏதோ தெரிஞ்சிருக்கு, அவ அகியை ஒரு வேலையா அனுப்பி வச்சிருக்கா. அகி நாளைக்கு நைட் தான் வருவாரு. அதனால இப்போ இந்த இடத்துல நீ தான் பெரியவன் புரியாதா ஆதி? உடைஞ்சு போய் நிக்காம உன் பூமாவை கண்டுபிடி. அவனுங்க கூட அவ இல்லைன்னா அப்போ எங்க இருக்க வாய்ப்பு இருக்கும். யோசி.”
“வது சொல்றது போல, நீலாவோடு ஏன் கோதையை ஒளிச்சி வச்சிருக்க கூடாது?” இன்பா கேட்டிட்டிட, வது அவனை முதல் முறை உற்று கவனித்தாள்.
அனைவரும் ஒன்றாகவே இருந்தாலும் சுபா ,கிருத்தியோடு இணைந்த அளவுக்கு ஆண்களோடு அவளுக்கு பழக்கம் இல்லை. இப்போது இன்பா சொன்னதில் ஒரு உரிமை உணர்வை கண்ட வது, மனதிற்கு புரியாவிட்டாலும் பிடித்திருந்த அந்த உணர்வை ஒரு நொடி நினைத்தவள், இங்கிருக்கும் நிலைமை உணர, தன் மனஉணர்வுகளை ஒதுக்கி வைத்தாள்.
அந்த செகியூரிட்டி ஏஜன்சி ஆட்கள் வந்து ஒரு பென் டிரைவை கொடுத்துவிட்டு, அகிலன் சென்னை போய்கொண்டிருக்கிறார். சென்னை ஈ.சி.ஆர் பங்களாவில் யாரோ அனைவருக்கும் மயக்க மருந்து கொண்ட உணவை கொடுத்து அதன் பின் சக்தியை கூட்டிச் சென்றதாக கூற,
சுந்தர் “அது எப்படி சாப்பாட்டுல மயக்க மருந்து தானா கலந்துக்குமா? உங்க ஆட்களில் யாரோ செய்த வேலையா தான் இருக்கும். யாருன்னு விசாரிச்சு சொல்லுங்க. இல்லன்னா ஏஜென்சி மேலேயே நடவடிக்கை எடுப்பேன்.”
“விடுங்க மாமா. அவனை காப்பாத்த யாரும் வந்திருக்க வாய்ப்பு இல்லை. அதனால அங்கிருந்த யாருக்கோ பணத்தாசை காட்டி தப்பிச்சிருப்பான். இன்னிக்கு சென்னை டு கோவை பிலைட் பாசஞ்சர் லிஸ்ட் எடுங்க” ஆதியின் குரலில் பழைய ஆளுமையை கண்ட குடும்பம் கொஞ்சம் தெளிந்தது. எப்படியும் ஆதி கோதையை காப்பாற்றி விடுவான் என்று.
ஒவ்வொருவரும் அவர்களின் கருத்துக்களை முன் வைக்க, காமாட்சி, “ஒரு வேளை கோதை தப்பிச்சு போயிருந்தா? ஏன் சொல்றேன்னா. அவனுங்க தனியா இருக்காங்க, நீலா எங்கன்னு தெரியல, நம்மை குழப்ப ஏன் அவன் கோதை அவன்கிட்ட இருக்கறது போல பேசியிருக்க கூடாது?”
காமாட்சியின் கூற்று பலருக்கு அப்படியும் இருக்குமோ என்ற ஐயத்தை கொடுக்க,
“இப்போ வந்து பெரிய இவ மாதிரி பேசு. உன்னால தான், உன்னால மட்டும் தான் அந்த நீலா இந்த வீட்டுக்குள்ள வந்தா. அப்போ இப்படி யோசிக்காம இப்போ வந்து பேசுற. எனக்கு என் கோதை அக்கா வேணும். நாளைக்கு அவ இல்லாமல் நான் இருக்க மாட்டேன்.”, என்ற புவனேஸ்வரனின் பேச்சு பலர் கண்களில் கண்ணீரை விதைத்தது.
தாத்தா பாட்டி தூங்கி விட்டதால், காலை அவர்கள் எழுவதற்குள் கோதையைக் கண்டு பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணம் ஆதிக்கு. இதற்கு மேல் எதையும் தாங்கும் திடம் அவர்களிடம் இல்லை என்பதை ஆதி உணர்ந்திருந்தான்.
‘அவ தப்பிச்சிருந்தா…’
ஏதோ தோன்ற செகியூரிட்டி ஆட்கள் குடுத்த பென் டிரைவை போட, அதில் பதுங்கிப் பதுங்கி உள்ளே நுழையும் நீலா, அதன் பின் ஆட்களை அடித்து போட்டு புதரில் தள்ளிவிட்டு வீட்டிற்குள் முன்னேறும் சக்தி, அதன் பின் அரை மணி நேரம் கழித்து வாயிலை கடக்கும் சக்தி… அவ்வளவு தான் வாயிலில் உள்ள சி.சி.டி.வி பதிவு. அப்படி என்றால் நீலாவும் கோதையும் சாந்தி நிலையத்தின் உள்ளே தான் இருக்கின்றனர்.
பரபரப்பான ஆதி, டார்ச் லைட்டைத் தேட, அரு 10 டார்ச்சை கொண்டு வந்து கொடுத்தாள், ஆதி, நவிலன், ஷியாம், ராகுல், இன்பா, பிரவீன், புவி, சுந்தர், கதிர், மகேஸ்வரன் கிளம்பி தேடச் செல்ல, ராஜேஸ்வரன் வீட்டையும் வெளிவேலைகளை கவனிப்பது என்று முடிவு செய்தனர்.
இரண்டு காரில் சாந்தி நிலையம் நோக்கிச் செல்ல, இங்கே பெண்களை சுபா, கிருத்தி, அரு மூவரும் பாடுபட்டு உட்கார வைத்தனர். அழும் அவர்களை சமாதானம் செய்தனர். சில பெண்களுக்கு மட்டும் எந்த ஒரு சூழல் வந்தாலும் எதிர் கொள்ளும் பக்குவத்தை கடவுள் வழங்கி இருப்பார் போல.
சாந்தி நிலையத்தை அடைய, அந்த இரவின் ஆசாத்ய அமைதியை கண்ட அவர்களின் இதயம் சற்று அதிகமாகவே துடிக்க தான் செய்தது.
முதலில், வீடு, குவார்ட்டர்ஸ் என்று பல இடங்களில் தேட, அங்கு யாரும் இருப்பதன் அறிகுறியே இல்லை. தோட்டம் காடெல்லாம் அலைய எதுவும் தட்டுப்படாத வேளையில், திடீரென்று ஆதியின் காலில் எதுவோ தடுக்க, அது ஒரு பெண்ணின் செருப்பாக இருந்தது.
அனைவரும் அங்கே குழுமி, அது கோதையின் செருப்பு இல்லை என்று உறுதியானதும், நீலாவினதாய் இருக்கலாம் என்ற முடிவுக்கு வர, அது இருந்த இடம் காட்டுப் பகுதியின் ஆரம்பம்.
ஆதிக்கு காட்டுக்குள் இந்த நேரத்தில் யாரும் செல்வது நல்லதாக படவில்லை. ஆனால் அவன் பூமாவும் அதற்குள் தான் இருப்பாள் என்றால் அவன் எதற்கும் தயாராகவே இருந்தான். மற்றவர்களை தவிர்த்துவிட்டு தான் மட்டும் செல்ல நினைத்த அவனை அனைவரும் முறைக்க, ஆங்காங்கே கேட்ட விலங்குகளின் குரல்கள் அனைவரையுமே நடுங்க செய்தது.
திடீரென தூர ஆரம்பித்த மழையைத் திட்டிய வண்ணம் அங்கிருந்த பெரிய மரத்தின் அடியில் நிற்க, ஆதி,
“பேசாம ஃபாரஸ்ட் டிப்பார்ட்மெண்ட்ல கூப்பிடலாம். நீங்க எல்லாரும் வீட்டுக்கு போங்க.”
“ஒ… எங்களை அந்தப்பக்கம் அனுப்பிட்டு, நீங்க இந்தப்பக்கம் காட்டுக்குள்ள போக திட்டமா? அதெல்லாம் விட முடியாது.” இன்பா அழுத்தமாகக் கூற,
“புரிஞ்சுக்கோ இன்பா. இது காடு. நான் உங்க எல்லார் உயிரையும் ரிஸ்க்ல தள்ள முடியாது டா.”
“எங்களுக்கு, உங்க அன்பும், சூழ்நிலையும் புரியுது அண்ணா. ஆனா நாங்க பூ இல்லாம இங்க இருந்து கிளம்ப மாட்டோம்.”
மழை வலுத்துக்கொண்டே போக,
“இதென்ன இன்னிக்குன்னு இம்சை பண்ணுது?”
சுந்தர் காவல்துறையிடம் இங்கு வரும்படி கட்டளையிட, மகேஸ்வரன் வனத்துறைக்குச் சொன்னார்.
விடியலை நோக்கி நகர்ந்த அந்த மழை இரவில் ஆண்கள் அனைவரும் இன்னும் கோதையைக் காணாத, காண்பதற்கு தடையாக இருக்கும் அந்த சூழ்நிலையை வெறுத்தனர்.
பெண்கள் அடிக்கொருமுறை போன் செய்து அவர்களை தொந்தரவு செய்யாததால், கொஞ்சம் வெளிச்சம் படர ஆரம்பித்த போது காலைப் பொழுதை எதிர்பார்த்தபடி அந்த மரத்தடியில் ஒண்டினர்.
வனத்துறை முதலில் வர, அவர்களோடு சேர்ந்து காட்டுக்குள் அந்த மழையையும் பொருட்படுத்தாமல் அனைவரும் சென்றனர்.
சிறிது தூரம் செல்ல, செடி கொடிகளை விலக்கி ஓடியதான் தடம் தெரிந்தது.
அதை பின்பற்றி அனைவரும் நடைபோட அது சென்று சேர்ப்பித்த இடம் அந்த பௌர்ணமி இரவில் ஆதியும் கோதையும் வந்த அருவி.
அந்த மழை நேரத்தில் அந்த அருவி ஆர்ப்பரிப்புடன் கொட்டிக்கொண்டு இருந்தது. அதன் ஒலியில் மயங்கிய மனதையும், அதன் அழகில் மயங்கிய கண்களையும் அங்கிருந்து விலக்க முடியாமல் அனைவரும் நின்றனர்.
பிரவீன் அவன் கண்ட கோரக் காட்சியை பார்த்து அலறிய அலறலில் அந்த மலையே கிடு கிடுத்துப் போனது. அவனின் பார்வையை பின்பற்றி பார்த்த அனைவரும் உறைந்தனர். அங்கிருந்த நீலாவின் சடலம் அவர்களை சிதறடித்தது.
கோதை எங்கே? என்ற கேள்வி விஸ்வரூபம் எடுக்க, அந்த இடத்தில் அவள் இல்லை என்பதை மட்டும் அனைவரும் உறுதி செய்தனர்.
ஆதியின் “பூமா” என்ற அழுகை அந்த அருவியின் பேரிரைச்சலில் அடங்கிப்போனது.

Interesting
அப்பாடா..! நீலா போய் சேர்ந்துட்டாளா…
ரொம்ப நல்லது.
😀😀😀
CRVS (or) CRVS 2797
நீலாவ யாரு கொன்னா? யாராயிருந்தாலும் வாழ்க