Amudham 43

Amudham 43

பூங்கோதையின் சொல்லுக்கிணங்க உடனே ரிசார்ட் திறப்பு விழா வேலைகள் நடந்தது.

அவளால் அலைய முடியாத காரணத்தால் அவள் வீட்டிலிருந்தே அனைத்தையும் மேற்பார்வை பார்த்தாள்.

அன்று காலை ஆதியும் நவியும் கோத்தகிரி போய் முகிலனைப் பார்த்து போதை கடத்தல் கும்பலுடன் அவன் எப்படி சேர்ந்தான் எனக் கேட்க, அவனோ நீளமாக கதையளந்தான்.

“வேண்டாததை பேசாதே டா. கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு.”

“சுஜி கடத்தலுக்கு அப்பறம் நான் டிரக்ஃஸ் கிடைக்காமல் ரொம்ப கஷ்டப்பட்டேன். அப்பறம் இங்க ஊட்டிக்கு வர வரைக்கும் எனக்கு சரியா டிரக்ஃஸ் கிடைக்கல. இங்க வந்ததும் ஒரு ஆள்கிட்ட வாங்கினேன். அன்னைக்கு அவன் நான் கோதையை கவனிக்கறதை பார்த்துட்டு அவளை தெரியுமான்னு கேட்டான். நான் தெரியும் என்று சொன்னதும் என்னை சக்திகிட்ட கூட்டிட்டு போனான். அவன் தான் கோதையை பழிவாங்க துடிச்சிட்டு இருந்தான். எனக்கும் அதே தான் மனசுல இருந்ததால நாங்க ரெண்டுபேருமே சேர்ந்து அங்க மலை கிராமத்துல வச்சு அவளை கொல்லத் திட்டம் போட்டோம். அவ்ளோதான்.”

“என்னது அவ்வளவு தானா?”, என்று அவனை நவிலன் வெளுத்துக்கட்டி விட்டான்.

முகிலன் வாயை அடைத்துவிட்டான் ஆதி. அவனால் அலறவும் முடியாமல் அடியைத் தாங்கவும் முடியாமல் வேதனைப்பட, ஒரு கட்டத்தில்,

“விட்டுடத்தொலைடா இவனை.”

“என்ன? இவனை விடறதா? உனக்கு பார்க்க கஷ்டமா இருந்தா போடா. எனக்கு இவனை கொன்னா கூட வெறி தீருமான்னு தெரியல” என்றான் நவிலன்.

“நவி விட்றா. வா போகலாம்.”

அவனைப் பார்த்துக்கொள்ள ஆட்களை விட்டுவிட்டு அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றனர்.

திறப்பு விழாவுக்கு அனைவரும் கிளம்பிக்கொண்டிருக்க, கோதை ப்ரவீனையும் புவனேஷ்யும் அனைவர் முன்னால் அழைத்தாள்.

பிரவீன் சிரித்தபடி வர, புவி குழப்பமாக வந்தான்.

“சொல்லு நெட்டைகொக்கு. என்ன விஷயம்? எல்லாரும் கிளம்புற நேரத்துல நிக்க வச்சுட்டு இருக்க?” என்று கேட்க,

“பிரவீன் அதை கொடுடா.”

பிரவீன் புவியின் கையில் ஒரு சாவியையும் ஒரு பெரிய பெட்டியையும் கொடுத்தான்.

சாவியை புரியாமல் திருப்பித் திருப்பிப் பார்த்த புவி, பெட்டியை திறக்க, அதில் சோனி கம்பனியின் உயர்தர லேட்டஸ்ட் காமெராவுடன் ட்ரைபோட் என்று ஒரு தொழில்முறை புகைப்பட கலைஞருக்கு தேவையான தொழில்நுட்பச் சாதனங்கள் இருக்க, கோதையை இன்னும் அதே குழப்பமான பார்வையே பார்க்க,

“புவனேஷ். நம்ம படிப்பு, அறிவை வளர்த்துக்க மட்டும் தான். அது நாம ஒரு வேலையில் அமர உதவும் ஒரு கடவுச்சீட்டு. படிக்கறது என்ன வேணாலும் எப்படி வேணாலும் படிக்கலாம். ஆனா நம்ம வேலை நம்ம மனசுக்கு பிடிச்சதா, மனசுக்கு நிறைவானதா இருக்கணும். உனக்கு போட்டோ எடுக்கறதுல இருந்த ஆர்வத்தைப் பார்த்தேன். அந்த மலை கிராமத்தையும் அங்க இருந்த மக்களையும் நீ அழகா படம் பிடிச்சிருந்த. அதான் உனக்கு அதையே தொழிலா மாத்தி கொடுத்தா என்னன்னு தோணுச்சு.”

“அதுக்கு?”, என்றான் பிரமிப்பாய்.

“ரிசார்ட்லேயே ஒரு தனி ரூம் ‘போட்டோக்ராபி ஏரியா’ன்னு வச்சிட்டோம். அங்க வர்ற கெஸ்ட் ரிஜிஸ்டர் பண்ணினா, அவங்களை அவுட்டோர் போட்டோஷூட் நீ செய்து கொடுக்கலாம். என்ன தான் செல்பி எடுத்தாலும், இதுபோல வெளியில் வரும் வேளையில் வித விதமான தீம்களில் போட்டோ எடுக்க நிறைய பேருக்கு பிடிக்கும். அதனால நீ கல்லூரி முடிந்த பின் இந்த வேலையை செய்தாலும் போதும்.”

புவி கோதையை அணைத்துக் கொண்டு அழுதான்.

“எனக்கு என் அம்மா என்னோடு இல்லன்னு நான் நிறைய பீல் பண்ணிருக்கேன் அக்கா. ஆனா இப்போ சொல்றேன் நீ தான் என் அம்மா. ஒரு அம்மா பார்த்து செய்யறதை விட நீ எனக்கு செய்துட்ட அக்கா.”

அவனை வலக்கரத்தால் அணைத்தவள், அவன் நெற்றியில் முட்டி ” டேய் பொடிப்பையா… அழாத டா.”

“நீ ஏன் இப்படி இருக்க?”

“எப்படி?”

“இவ்ளோ… நல்லவளா!”

“டேய்… உனக்கு நல்லது செஞ்சா மட்டும் தான் நான் நல்லவளா டா? அப்படிப்பட்ட பேர் எனக்கு வேண்டாம் போடா பொடிப்பையா.”

“சும்மா சொன்னேன் டி நெட்டைகொக்கு. லவ் யூ டி அக்கா…”

அனைவரும் அவர்களை தொந்தரவு செய்யாமல் கிளம்பியிருந்தனர்.

“டேய் கிளம்பு. இன்னிக்கு ஃபன்க்ஷன் நீ தான் கவர் பண்ணனும். இதெல்லாம் எடுத்துட்டு ஓடு.”

“நீ எப்படி வருவ?”

“என் அத்தான் வருவாரு டா. அவரோட வரேன்.”

“சரி” என்று அவன் கிளம்பிவிட,

ஆதியின் வரவுக்காகக் காத்திருந்தாள் கோதை.

கொஞ்சம் பதட்டமாக வந்த ஆதி, அவளை ரிசார்ட்டில் விட்டுவிட்டு எங்கோ விரைந்தான்.

அவன் செல்வதை யோசனையாகப் பார்த்த கோதை, பாதுகாப்பு ஆட்களை அழைத்து ஆதிக்கு இன்னும் அதிக பாதுகாப்பு வழங்கிடக் கோரினாள்.

அவள் கையில் ஸ்லிங் அணிந்து இருந்ததால் அவளை இடத்தை விட்டே யாரும் நகர விடவில்லை. நடந்து கையில் இடித்துக் கொண்டால் அவளுக்கு சரியாக இன்னும் நாள் ஆகும். அதனால் அவளை பிடித்து வைக்காத குறையாக பார்த்துக்க கொண்டனர்.

அவளும் அமைதியாக, தான் சொன்னதெல்லாம் செய்யப்பட்டுள்ளதா என்று கண்களைச் சுழற்றியபடி இருந்தாள். அவள் கண்களில் நவிலனும் தட்டுப்படாமல் போக அவனுக்கு போன் செய்தாள்.

சுவிட்ச் ஆஃப். அடுத்து ஆதிக்கு அழைக்க, அதுவும் அதையே சொன்னது.

ஆதி மேல் கோதைக்கு அதீத நம்பிக்கை. அவ்வளவு எளிதில் பிரச்சனைக்குள் சிக்க மாட்டான் என்று. நவிலனுக்கு ஏதாவது என்று மனம் ஏடாகூடமாக நினைக்க சின்ன கலக்கம் பிறந்தது.

ஆனால் சில நிமிடங்களில் அவளை தொடர்புகொண்ட நவிலன்.

“கோதை மா. கொஞ்சம் தனியா வந்து பேசுடா”, என்றதும்

“சொல்லுங்க நவிண்ணா. என்னாச்சு? ஏன் அத்தான் டென்ஷனா இருந்தாங்க?”

அவளின் கூர்ந்து கவனிக்கும் திறனை வியந்த நவிலன்,

“இந்திரன் அப்பா கிடைச்சிட்டாரு டா.”

“அப்படியா? எங்க இருந்தாரு? இப்போ எப்படி இருக்காரு?”

நவிலன் அமைதியாக இருக்க, கோதைக்கு பயம் பிடித்தது.

“நவிண்ணா. ப்ளீஸ் சொல்லுங்க. பெரிய மாமா நல்லா இருக்காரு தானே?”

“ம்ம். இருக்காரு. ஆனா நல்லான்னு சொல்ல முடியாது.”

“என்னாச்சு?”

“அவரை அடிச்சதுனால மயங்கினவரை ஹாஸ்பிடலில் சேர்க்காம ஒரு ரூம்ல வச்சிட்டு இருந்திருக்காங்க.”

“அதனால”

“அதனால. அது அப்பாக்கு மூளை பாதிக்கப்பட்டு இப்போ கோமால இருக்காரு.”

“எங்க?”

“சென்னை.”

“நீங்க எங்க இருக்கீங்க?”

“நாங்க போய்ட்டே இருக்கோம் டா. பார்த்துட்டு சொல்றேன் அவரோட நிலைமையை.”

“சரி. அத்தான் கிட்ட பேசவா?”

“இல்ல. அவன் கொஞ்சம் அப்செட்டா இருக்கான் மா.”

அவளுக்கு இன்னும் தனக்கு தெரியாதது ஏதோ இருக்கிறது என்று தோன்ற.

“சரி அண்ணா. அவர்கிட்ட பூமா உங்களோட தான் இருக்கா அப்படின்னு சொல்லுங்க.”

அவனுக்கு வியப்பாக இருந்தது. அவன் அறிந்தவரை பெண்கள் ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள நினைத்தால் அதை முழுமையாக தெரியும் வரை விட மாட்டார்கள். ஆனால் கோதை அவனாக சொல்லும்வரை எதையும் கட்டாயப்படுத்தி கேட்பதே இல்லை.

நவிலன் இணைப்பை துண்டித்ததும் தான், அந்த வாட்ச் ஏரியாவில் நிற்கிறோம் என்று கோதைக்கு புரிந்தது. மெதுவாக காட்டு பக்கம் பார்க்க அங்கே ஒரு நீலகிரி வரையாடு நின்றது. அதைப் பார்த்துவிட்டு திரும்ப அங்கே அவளையே பார்த்தபடி பிரவீன் வந்து நின்றான்.

“என்ன டா குரங்கு? என்னையே பாக்கற?”

“இல்ல, நீ ஏன் மச்சி இப்படி ஆகிட்ட?”

“எப்படி டா? தெளிவா சொல்லு டா.”

“இல்ல.ம் நீ அடிக்கடி வேலை விஷயமா ராகுலையும் மதியையும் சேர்த்து சேர்த்து அனுப்புற மாதிரி இருக்கே?”

“அதான் நீயே வேலை விஷயமான்னு சொல்லிட்டியே டா குரங்கு.”

“ஏண்டி நீ நாசூக்கா பண்ணினா. உன் மாமா பொண்ணுக்கு மாமா வேலை பாக்கறது எனக்கு புரியாதா?”என்றான்.

“ஏன் பிரவீன் இப்படி பேசுற? அவங்க லவ் பண்றாங்க ஆனா சொல்லிக்க மாட்டேங்கறாங்க. அதுக்கு தான் அவங்களுக்கு கொஞ்சம் நேரம் தனியா இருக்க சந்தர்ப்பம் அமைச்சு குடுத்தேன். அதுக்கு நீ என்னை இப்படி சொல்லுவியா?”

“இல்ல டீ. இன்னோரு ட்ராக் வேற ஓடுது. அதான் நான் மட்டும் சிங்கிளா இருக்கேனே அப்படினு ஒரே பீலிங்…”

“இன்னோரு ட்ராக் யாரு டா?”

‘ஐயோ வாய விட்டுட்டோமே?’ என்று நொந்தவன் “அது அது.. நம்ம இன்பா இல்ல..”

“இருக்கான் டா. அவனுக்கென்ன?”

“அவன் தான் வசுவை லவ் பண்றான்.”

“டேய் என்ன டா சொல்ற? இது வசுக்கு தெரியுமா?”

“ச்ச படிக்கிற பிள்ளை கிட்ட சொல்லுவங்களா?”

“சரி உனக்கென்ன வேணும்? எனக்கு இருந்த மாமா பொண்ணை ஒருத்தன் கரெக்ட் பண்ணிட்டான். இன்னொருத்தன் என் நாத்தனாரையே கரெக்ட் பண்ண பாக்கறான். இப்போ நீ யாருக்காக என்கிட்ட வந்து நிக்கிற?”

“எனக்கு மட்டும் ஏன்டி சதி பண்ணுற?”

“அதுக்காக என் மாமியார் கிட்ட இப்போ போய் என் பிரென்ட்டுக்கு நீங்க இன்னோரு பொண்ணு பெத்திருக்கலாமே அப்படினு கேக்க சொல்றியா?”

“இல்லடி இந்த சுஜி இருக்கா தானே! அவளை… அவளை…” என்று அவன் வெட்கப்பட,

“அடேய் அவனுங்களா… இவனுங்களா …”

“என்ன டீ எனனென்னமோ சொல்லி திட்ற?”

“பின்ன இல்லையா? அவ சின்ன பிள்ளை டா!”

“அப்போ வசு மட்டும் அவளை விட பெரியவளா? ரெண்டும் ஒரே வயசு தானே?”

“சரிடா அதுக்காக? எங்க வீட்டு பிள்ளைகளை பூரா உங்களுக்கே கட்டி குடுக்கவா?”

“யாருக்கு டி செய்ய போற? உன் நண்பனுக்கு…”

“அடப்பக்கி… நீ என்ன எல்லாரும் லவ் பண்றாங்கன்னு சுஜியை லவ் பண்ணிட்டியா?”

பிரவீன் அமைதியானான்..

“அன்னைக்கு அவளை கடத்தலில் இருந்து காப்பத்தினப்போ அவ என் கைல துவண்டு இருந்தா பாரு. அப்பவே நான் அவளை விரும்ப ஆரம்பிச்சுட்டேன். ஆனா ரொம்ப மனகஷ்டத்தில இருக்கா. சின்ன பொண்ணு அப்படினு தான் அவ கிட்ட பேசவே இல்லை.”

“சரி இப்போ ஏன் இதெல்லாம் என்கிட்ட வந்து சொல்ற?”

“அவளை இப்போ நான் அடிக்கடி ரசனையோடு பார்க்கறேன். உன்கிட்ட சொல்லாம செய்யறது தப்புன்னு தோணுச்சு.”

“விடு டா. அவளும் படிகட்டும். நீயும் இங்க பிசினஸ் பாரு. சரியான நேரம் பார்த்து வீட்ல பேசுறேன்.”

“சரி பூ.”, ஏனோ அவளுடன் மனம் விட்டு பேசியதும் நெடுநாள் மனபாரம் இறங்கியதாக உணர்ந்தான் பிரவீன்.

பேசிவிட்டு மீண்டும் காட்டுப்பாகம் திரும்ப அங்கே புலி ஒன்று மானை துரத்தும் காட்சி கண்ணில் பட, உள்ளுக்குள் உதறல் எடுத்தது. ஆனால் மான் சாதுர்யமாக ஒரு குகைக்குள்ளே சென்றுவிட, அது குகையைத் தாண்டி சென்றதாக நினைத்த புலி இன்னும் வேகம் கொண்டு காட்டிற்குள் பாய்ந்து ஓடியது.

ஏனோ கோதையின் நெஞ்சில் இந்த காட்சி அழுந்த பதிந்தது. அவள் மெதுவாக நடந்து வர, இன்பா அவளை அழைத்து சலித்து, பிடித்து உலுக்கினான்.

“ஏய்ய்ய்.. பூ..”

“ம்ம் சொல்லு..”

“என்ன பேயறைஞ்ச மாதிரி இருக்க?”

“இன்பா. இந்த காட்டுல, புலி இல்லன்னு தானே ஃபார்ஸ்ட் டிப்பார்ட்மெண்ட்ல சொன்னாங்க?”

“ஆமா. அதுகென்ன?”

“இல்ல நான் இப்போ ஒரு புலியை பார்த்தேன்.”

“சரி பூ. நான் கம்ப்லைன்ட் பண்றேன். இதென்ன டா இல்லாததை இருக்குன்னு சொல்ற உலகத்துல. இருக்கறத இல்லன்னு எவனாச்சும் சொல்லுவானா?” என்று எப்போதும் போல இன்பா பேசிக்கொண்டே போக.

கோதை கற்சிலை போல நின்றாள்.

“அப்போ… அவனே தான்…”

போனை எடுத்தவள்,”அத்தான்”, என்று கத்த, அந்தப்பக்கம் நிசப்தமாய் இருந்தது.


4 thoughts on “Amudham 43

  1. இல்லாததை இருக்குன்னு சொல்ற உலகத்துல, இருக்கிறதை இல்லன்னு எவனாச்சும் சொல்லுவானா ?
    இதுக்கு என்ன அர்த்தம்ன்னு
    விளங்கலையே..?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!