
அமுதம் 39
பல முறை அழைத்தும் ஆதியின் அன்னை அன்னத்தின் எண் சுவிட்ச் ஆஃப் என்று வர, ஆதிக்கு பயம் பிடித்தது. வீட்டு இலக்கத்திற்கு அடிக்க அதுவும் வேலை செய்யவில்லை.
என்ன முயன்றும் அவனால் கோவை வீட்டை தொடர்பு கொள்ள முடியாமல் போகவும், தானே நேரில் சென்று பார்த்தால் என்ன என்று நினைத்தான்..
அகிலனை அழைத்து நிலைமையை விளக்கியவன் “நான் வேலை விஷயமா போயிருக்கேன்னு சொல்லுங்க அண்ணா. நான் பார்த்துட்டு வந்துடறேன்.” என்றான்.
அகிலனுக்கு ஆதியை தனியாக அனுப்ப ஏனோ மனம் வரவில்லை “ஆதி சொன்னா கேளு, தனியா போகவேண்டாம். நானும் வரேன்.”
“இல்ல அண்ணா. நானும் இல்லாம நீங்களும் இல்லாம இருந்து இங்க சின்னதா ஏதாவது நடந்திட்டாலும் என்னால தாங்க முடியாது. இன்னும் ஒருத்தனையும் பிடிக்காம இருக்காங்க. அதனால நீங்க இங்க பாத்துக்கோங்க. நான் மட்டும் போயிட்டு வரேன்.”
“நீ சொல்றது சரி தான். நம்ம ரெண்டு பேர்ல ஒருத்தர் இங்க இருந்தாகணும். சரி. நான் இருக்கேன். நீ ஷ்யாமை கூட்டிட்டு போ.”
ஒரு நிமிடம் யோசித்த ஆதி, “சரி அண்ணா.. ஷியாமை உடனே இங்க வர சொல்லுங்க.”
ஷியாம் வருவதற்குள், தனக்கு தேவை என்று அவன் நினைத்த பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டான்.
‘பூமாவைப் பார்த்து விட்டு போ’ என்று சொன்ன மனதை அடக்கி, இப்போ அவளுக்கு பரவாயில்லை. முதல்ல அம்மாவை பார்க்கணும். ஒருவேளை அவள் வந்து அம்மா எங்கன்னு கேட்டா என்னால பதில் சொல்ல முடியாது. இப்போது சாந்தி நிலையத்தில் யாரும் இல்லை. அனைவருமே வசந்த இல்லத்தில் தங்கி விட்டனர் கோதைக்காக. அதனால் தான் இப்படி கிளம்பிப் போவது யாருக்கும் தெரியாது என்று சமாதானம் செய்து கொண்டான்.
ஆதியின் மனதில் பல கேள்விகள் வேறு அலையடித்துக் கொண்டிருந்தது. திடீரென்று நினைவு வர, சுந்தருக்கு போன் செய்து “மாமா அந்த வக்கீல் சக்தியைப் பார்க்க சொன்னேனே! என்னாச்சு?” என்றான்.
“அப்படி யாருமே அந்த எடத்துல இல்லப்பா.”
“அப்படியா? சரி கோயமுத்தூர் கோர்ட் பார் அஸோசியேஷன்ல விசாரிக்கலாம் தானே மாமா?”
“கேட்டேன். அப்படி யாரும் பதியலனு சொல்றாங்க.”
“அது எப்படி சாத்தியம் மாமா? அந்த ஆளு மலைவாழ் மக்கள் கேஸ் எடுத்தானே? பதியாதவன் எப்படி கேஸ் எடுப்பான்?”
“நாங்களும் கேட்டோம். அந்த கேஸ் எடுத்தது அவன் இல்லையாம். வேற பேர் போட்டிருக்கு வக்காலத்து, கோர்ட் டாக்குமெண்ட் எல்லாத்துலயும்”, என்றார் ஏமாற்ற குரலில்.
“சாத்தியமே இல்ல மாமா. என்கிட்ட கோர்ட் டாக்குமெண்ட் காப்பி இருக்கு. இருங்க நான் உங்களுக்கு வாட்ஸ்ஆப்ல அனுப்பி வைக்கிறேன்.”
“நீங்க சொல்றது பழைய டாக்குமெண்ட். இங்க இருக்கறது புதுசு. ஆனா பழைய தேதில பைலை மாத்திருக்காங்க.”
“அப்போ, கோர்ட்குள்ள டாக்குமெண்ட் மாத்துற அளவுக்கு அவனுக்கு பவர் இருக்கு. அப்படி தானே மாமா?” கேட்கும் போதே ஆதியின் குரலில் பெரிய மாற்றம்.
“ம்ம். ஆமாம். இனிமே தான் நீங்களும் கோதையும் கவனமா இருக்கணும். நாங்க அந்த கஞ்சாவை அழிச்சதும் ஏதோ சாதிச்சிட்ட மாதிரி நெனச்சிட்டோம். எல்லமே வேஸ்ட். அவன் வேற எங்கேயோ இருந்துகிட்டே இங்க எல்லாத்தையும் பண்றான்.”
“ம்ம். நான் பாதுகாப்பை பலப்படுத்தியிருக்கேன். இத்தனை நாளும் நான் பணக்காரன், எனக்கு செல்வாக்கு இருக்குன்னு நான் காமிச்சுகிட்டதே இல்ல. சாதாரண கார், ரயில் பயணம் எந்த பாதுகாப்பும் இல்லாம, என் சொந்த முயற்சியில் உருவான பாக்டரின்னு எனக்குள்ள ஒரு வட்டம் போட்டு என் சம்பாத்தியத்தை மட்டும் வச்சு வாழ்ந்தேன்.
என் அப்பா, என்னோட ரெண்டு தாத்தா யாரோட பணத்தையும் செல்வாக்கையும் நான் பயன்படுத்தியதே இல்ல. ஆனா இனிமே அப்படி இருக்க மாட்டேன். எப்போ அவன் என் பூமா மேல கத்தியை இறக்கிட்டானோ, அப்போவே இந்த ஆதிலிங்கேஸ்வரனை அவன் சீண்டிட்டான். நான் ஆதியா இருந்த வரைக்கும் அவனுக்கு பிரச்னை இல்லை. இனிமே நான் ஈஸ்வர பரம்பரையோட வாரிசா முழுசா ஆதிலிங்கேஸ்வரனா அவனை என்ன பண்ண போறேன்னு பாருங்க.” அவன் குரலில் இருந்தே ஆதியின் கோவத்தை உணர்ந்தவர்.
‘இத்தனை நாள் மகள் தேறத்தான் இவன் காத்திருந்தான் போல! ‘ என்று நினைத்தார்.
ஷியாம் வந்துவிட, எப்போதும் சிரித்த முகமாய் இருக்கும் ஆதி, கோதையின் விபத்துக்கு பின் கொஞ்சம் சோகமாய் இருந்தாலும் இன்று போல இறுக்கமான ஆதியை பார்த்திராத ஷியாம்,
“போலாமா அண்ணா”, என்றான் அமைதியாய்..
பதில் கூட சொல்லாமல் வாசலுக்கு விரைந்தான் ஆதி. அவன் நடையில் என்றும் இல்லாத அளவு அழுத்தமும், ஒரு நிமிர்வும் இருப்பதைக் கண்ட ஷியாம் வியப்புடன் வாசலுக்கு வர, அங்கே நின்ற கார்களைக் கண்டு மீண்டும் வியந்தான்.
அனைத்தும் விலை உயர்ந்த ஜாகுவார் ரக கார், பென்ட்லே கார் என்று வரிசை கட்டி நிற்க, ஷ்யாம் வாயைப் பிளந்து நின்றான்.
ஆதி பாதுகாப்பு ஆட்களை முன்னாலும் பின்னாலும் வரும்படி கட்டளை இட்டுவிட்டு, மருத்துவமனை பாதுகாப்பையும் உறுதி செய்துவிட்டு பென்ட்லேவில் ஏற, ஷியாமும் எறிக்கொண்டான். எங்கே என்று சொல்லாமல் அகிலன் அனுப்பிவைத்ததால், வழியை பார்த்த படி வந்த ஷ்யாம் ஆதியின் பக்கம் பார்வையை ஓட்ட என்றும் இல்லாத இறுக்கம் மட்டுமின்றி ஒரு வித ரௌத்திரம் தெரிந்தது ஆதியின் முகத்தில்.
அவனிடம் கேட்க எழுந்த நாவை அடக்கியவன், அவனை மீண்டும் ஒருமுறை உற்று நோக்கினான். ‘கோதையிடம் குழையும் ஆதியா இவன்? சுஜியோடு விளையாடும் ஆதியின் முகம் இது இல்லயே!’
அவன் வெகுவாகக் குழம்பிப் போனான். அவனுக்கு ஆதியின் வம்சம், அதன் ஆளுமை, பெருமை எதுவும் தெரிந்திருக்கவில்லையே!
கோவையை நெருங்கும் வேளையில் ஆதிக்கு ஒரு அழைப்பு வர, வண்டியை ஓரமாக நிறுத்தியவன், சில நிமிடங்கள் பேசிவிட்டு, இல்லை கட்டளைகள் இட்டுவிட்டு மீண்டும் கிளம்பினான்.
அவன் வீட்டு வாசலை அடையும் போது, போலீசும் செக்யூரிட்டி ஆட்களும் அவன் வீட்டைச் சுற்றி வளைத்திருந்தனர்.
ஆதிக்கு முகிலன் அங்கே இருப்பானோ என்று ஒரு சந்தேகம் இருக்க, அதை தெரிந்துகொள்ள அவன் செய்த முயற்சியும் அதன் பலன் தான் இடையில் வந்த போன் கால்.
அவனின் கட்டளைக்கிணங்க வீட்டை சுற்றிவளைத்ததோடு, அந்த பகுதியின் போக்குவரத்தையும் அவர்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருக்க, ஆதி வேக எட்டுகள் வைத்து உள்ளே நுழைய முயன்றான். அவனை காவல் துறையினர் தடுக்க, காரணம் புரியாமல் அவன் சிலும்பிய சிலும்பலில் அவன் மீது கைவைத்து தடுத்தவர் இரண்டடி தள்ளி விழுந்தார். அதற்குள் அந்த பகுதி இன்ஸ்பெக்டர் வந்து பவ்யமாக,
“சார் முதல்ல டாக்டர் வரட்டும் அப்பறம் நீங்க உள்ள போகலாம் ப்ளீஸ் சார். புரிஞ்சுக்கோங்க.”
அவன் நிற்பதாக இல்லை. ஷ்யாமிற்கு ஒன்றுமே புரியவில்லை.
‘இது யார் வீடு? ஏன் இங்கே வந்தோம்? எதற்கு டாக்டர்? ஆதி அண்ணா ஏன் இவ்வளவு கோவமா இருக்கார்?’ எல்லாவற்றிக்கும் பதில் பூஜ்யம் தான்.
இன்ஸ்பெக்டரை நெருங்கிய ஷ்யாம் தன் கல்லூரி அடையாள அட்டையைக் காட்டி, யாருக்கென்றாலும் முதலுதவி செய்ய முடியும். நான் நான்காம் ஆண்டு மாணவன் என்று சொல்ல சரியென்று அவரை பின்தொடர சொல்லிவிட்டு சென்றார்.
அங்கே ஒரு அறையில் மயக்கத்தில் இருந்தார் அன்னபூர்ணேஸ்வரி.
அவரைக் கண்ட நொடி “பெரியம்மா.. ” என்று கத்தி விட்டான் ஷியாம்.
ஆனால் ஆதி கல் போல நின்றான். ஷியாம் முதலுதவியைத் தொடங்க சிறிது நேரத்தில் கண்ணைத் திறந்த அன்னம் கேட்ட முதல் கேள்வியே,
“நீலா எங்க?”
யாரிடமும் பதில் இல்லை. அவர் தூங்க மருந்தைச் செலுத்திய ஷியாம் அவர் மிகவும் பயந்திருப்பதாக ஆதியிடம் சொன்னான். ஆதி தலையசைத்ததோடு சரி. இறுகிப் போய் இருந்தான்.
ஷ்யாமிற்கு ஆதியின் நடவடிக்கை பயம் கொடுக்க, உடனே அகிலனை அழைத்து அரைகுறையாக தான் அறிந்ததை மட்டும் சொல்ல, ஆதியின் மாற்றங்கள் அகிலனுக்கே அதிர்ச்சி தான். ‘கிளம்புறேன்னு சொன்னப்போ கூட ஆதி அப்படி இல்லயே, என்னவோ நடந்திருக்கு’ என்று ஓரளவு யூகித்த அகி, அமைதியாக ஆதிக்கு துணை நிற்கும்படி சொல்லிவிட்டு வைத்தான்.
இன்ஸ்பெக்டர் ஆதியிடம் “சார், நீங்க சொன்னதும் இங்க ஸ்பாட்க்கு வந்துட்டோம் சார். அப்போ உள்ளே வேற யாரோ இருந்திருக்காங்க. ஆனா நாங்க என்டர் ஆகறதுக்குள்ள பின் வாசல் வழியா ஒரு கார் சார் பெருசு… இம்போர்டட்… அதுல போய்ட்டாங்க…”
அவன் முகிலனை கோட்டை விட்ட கதையை சொல்லிக்கொண்டிருக்க, ஷியாம் மீண்டும் அன்னத்தை பரிசோதித்து விட்டு, அவர் உடலில் பல இடங்களில் காயம் இருப்பதாகவும், அவரை கட்டி வைத்து இம்சித்திருக்க வேண்டும் என்றும் சொன்னான்.
இப்போது ஆதியின் மனதில் ஒரே கேள்வி தான். இங்கே அம்மாவை அப்படி செய்தது அந்த கடத்தல்காரனா? இல்லை முகிலனா?
அம்மாவின் கைகளை பற்றி அவரின் முகத்தையே பார்த்திருந்தான். அவன் ஆவலாய் பார்க்க நினைக்கும் தாயின் முகத்தில் இன்று மிரட்சி, வேதனை மற்றும் வலியின் சாயல். யாரால்? யார் அது? ஆதி உள்ளே கொதித்து கொண்டிருந்தான்.
அவனின் கொதிப்பை அதிகரிக்க மீண்டும் கண்விழித்த அன்னம், “நீலா எங்க எங்கே?” என்று கத்தி கலாட்டா செய்தார். ஏன் செய்தார் என்று தெரியாததால் அவரே சமாதானம் ஆகும் வரை காத்திருந்து,
“அம்மா, அம்ம்மா. என்னை பாருங்க… உங்களை யார் என்ன செஞ்சாங்க? எதுக்கு இப்போ நீலா அத்தையை தேடுறீங்க? சொல்லுங்க”, என்று அழுத்தமாக கேட்டான்.
“அவ தான் ஆதி கட்டிப் போட்டா. அந்த முகிலன் இங்க வந்தான். அவன் இங்க தான் இத்தனை நாளாய் இருந்தான்.” அவரால் சரியாக பேச முடியாது போக, சிறு இடைவெளிவிட்டு தொடர்ந்தார்.
“அவன் சரி இல்லை டா… ஒரு மாதிரி, தள்ளாட்டமா… என்னன்னு சொல்ல தெரியல”
உடனே ஷ்யாம் அவன் மொபைலில் போதைபழக்கம் உள்ளவர்கள் வீடியோவை காட்ட, “இது போல தான் இருந்தான்.”, என்றார் அன்னம்.
ஆக, ‘முகிலன் போதை பழக்கத்திற்கு அடிமையாக இருக்கிறான். அவனை அந்த கடத்தல்காரன் பயன்படுத்தி இருக்கிறான்.’ என்ற முடிவுக்கு வந்த ஆதி, அம்மாவை மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்துவிட்டு, டோல்கேட்டில் அந்த வாகனம் போன திசையை அறியச் சொல்லி நிறுவன ஆட்களிடம் சொல்லிவிட்டு வெளியில் கிளம்பினான்.
உடன்வர இருந்த ஷ்யாமையும் தடுத்துவிட்டு, “அம்மாவை பார்த்துக்கோ. மேல மாடி ரூம்ல தாத்தா இருப்பாரு. ரெண்டு பேரையும் பார்த்து ஊட்டி கூட்டிட்டு போ.”
அவன் குரலில் இருந்த கட்டளையை மீற முடியாத ஷியாம் தாத்தாவைப் பார்க்க மாடியறைக்குச் சென்றான்.
கிழிந்த நாராய் இருந்த தாத்தாவைக் காண அவன் மனம் வலித்தது. எப்படியும் ஜோதிலிங்கத்தை விட வயதில் இளையவர் தான். ஆனால் இவரின் நிலைமையை பார்த்தால் கண்ணீர் வந்தது.
ஆதி சொன்னபடி முதலில் ஒரு ஆம்புலன்ஸ் வைத்து தாத்தாவையும் மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவு அன்னத்திற்கு ஒன்றும் இல்லாதத்ததால் பின்னால் காரில் அன்னத்தையும் அழைத்து கொண்டு ஊட்டிக்கு பயணித்தான் ஷ்யாம்.
அன்னம் மிகவும் சோர்ந்திருந்தார். ஒரு வாரமாக அவரை கட்டி வைத்து உணவும் தராமல், அவ்வப்போது அடித்து துன்புறுத்திய நீலாவையும் முகிலனையும் யாரேனும் பிடித்து கையில் கொடுத்தால் வெட்டி எறியும் கோவம் இருந்தது அன்னபூர்ணேஸ்வரியிடம்.
மெதுவாகக் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தான் ஷியாம்.
“என்னாச்சு பெரியம்மா?”
“போன வாரம் நீலா யார்கிட்டையோ போன்ல பேசிட்டே இருந்தா. நான் கவனிக்கல. அன்னைக்கு வெளில போய்ட்டு உள்ள வரும்போது அவ பேச்சு குரல் கேட்டுச்சு.
‘இனியும் உங்க அத்தை இங்க வரக்கூடாது. அதுக்கு நான் என்ன வேணாலும் செய்வேன். நீ இங்க வந்திடு பார்த்துக்கலாம்.’ ன்னு பெசிட்டு இருந்தா. எனக்கு புரியல, ஆனா அடுத்தநாள் முகிலன் வந்து ‘கோதையை கண்டந்துண்டமா வெட்ட பிளான் போட்ருக்கேன்னு’ சொல்லவும் நான் பயந்துட்டேன். அப்போ பார்த்து என் போன் அடிக்க நான் அவங்க கிட்ட மாட்டிக்கிட்டேன். போலீஸ் வர்றதுக்கு முன்னாடி ஒரு போன் வந்துச்சு முகிலனுக்கு. அவன் கொஞ்சம் பதட்டமா இருந்தான். என்னை கொஞ்சம் பலம்மா அடிச்சிட்டு வெளில போனாங்க. அவ்வளவு தான் ஷியாம் தெரியும்.”
இதையெல்லாம் போனில் ரெகார்ட் செய்திருந்த ஷ்யாம் அதை ஆதிக்கு அனுப்பி வைத்தான். அப்போது ஆதி சென்னைக்கு விரைந்திருந்தான்.

Interesting waiting for nxt epi
நன்றி மா.
Super, waiting for next epi
👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿