
அமுதம் 37
தன் சிப்பி இமைகளை மெல்ல மெல்லத் திறந்து தன் கருவிழியால் அந்த இடம் முழுவதும் அவள் பார்வையை ஓட்ட, ஏதோ மருத்துவமனை என்பது வரை புரிந்தது.
தான் மயங்கும் முன் கண்ட தன் கணவனின் கண்ணீர் முகம் அவள் மனதில் கலக்கம் தர, ஆதியை பார்க்க வேண்டும் என்று எழுந்த ஆவலால் அவள் தன்னிலை உணராது எழுந்துகொள்ள முனைய அவளால் அது முடியாமல் போனது.
அதிர்ந்த மனதை அடக்கி, கண்ணை கீழ் நோக்கி தன் உடலைக் காண தோளின் ஆரம்பம் முதல் கை முடியும் வரை அசைக்க கூடாது என்று அவர்கள் இறுக்கி இருந்த கட்டு அவளுக்கு புலப்பட்டது.
தன் வலது கையை அசைக்க முனைந்தாள். அசைந்தது… அப்போது தான் அவளுக்கு மூச்சே சீராய் வந்தது. அவள் தன் உடல் இயங்கவில்லையோ என்று பயந்துவிட்டாள்.
வலது கையால் அந்த அறையின் அலாரம் பொத்தானை அழுத்த அடித்து பிடித்து வந்த வெள்ளை உடை செவிலி பெண், அவள் உடல்நலத்தை ஆராயும் கருவிகளின் உதவியோடு அது தந்த தகவல்களை சேமித்துக்கொண்டு மருத்துவரை அழைக்க விரைந்தாள்.
மருத்துவரும் வந்து பரிசோத்தித்து விட்டு,
“இப்போ எப்படி உணர்றீங்க பூங்கோதை?”
“அத்தானை பார்க்கணும்…”
மருத்துவர் சிரித்தபடி வெளியேறிட, கதவையே பார்த்திருந்தாள் கோதை.
வெளியில் மருத்துவர் வரவும், “டாக்டர் எப்போ அவளை பார்க்கலாம்?”, கேட்ட அனைவருக்கும் சிரித்தபடியே, “அவங்க விருப்பப்படும்போது!”
ஒருவரை ஒருவர் பார்த்தபடி ” புரியல டாக்டர் ” என்று சொல்ல,
“அவங்க இப்போ அவங்க அத்தானை தான் பார்க்கணுமாம்… சோ, அவங்க விருப்பப்படும்போது பார்க்கலாம்.”
அவர் சொல்ல வந்தது அனைவருக்கும் புரியும் போது ஆதி கோதை அருகினில் இருந்தான்.
கதவைத் திறந்தது முதல், இந்த நிமிடம் அவன் அவள் வலது கரத்தை பிடித்து நிற்கும் வரை இமைகொட்டாது பார்த்தவள்,
அவனை தன் அருகில் வர கண்ணசைத்தாள், அவள் ஏதோ சொல்ல அழைக்கிறாள் என்று நினைத்து, அவன் அவளுக்கு மிக அருகில் சென்று குனிந்து காதுகொடுக்க, அவள் அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள்.
அவன் விழிவிரித்து அவளை பார்க்க, அவளோ மெல்ல இதழ் விரித்துச் சிரித்தாள்.
“பூமா” என்று அவள் பெயரை கூட மிக மென்மையாய் அழைத்தவன்,
“ரொம்ப பயந்துட்டேன் டி!”
“அத்தான்! அப்படி எல்லாம் உங்களை விட்டு போய்டுவேனா? வருத்தப்பட கூடாது. நான் நீங்க கலங்கறதை பார்க்கவே கூடாது. சிரிங்க.”
அவனும் மெலிதாகச் சிரித்தான். அவனின் சிரிப்பு அவன் கண்ணை எட்டவில்லை.
அவளும் அதை உணர்ந்தாள்.
“சரி எல்லாரும் உன்னை பார்க்கணும் என்று காத்திருக்காங்க.”
“இருக்கட்டும். நீங்க இங்க வாங்க” என்று அவன் கைகளைப் பற்றி அவளருகில் நிற்க வைத்து அவன் கைகளில் தன் தலையை சாய்த்துகொண்டாள். அப்போது அவள் தோளில் வலியை உணர்ந்தாள்.
அவள் கண்களில் அவளின் வலியை உணர்ந்தவன் தாமதிக்காமல் மருத்துவரை அழைத்தான்.
“தலை, தோள், கை மூன்றையும் இம்மியும் அசைக்காமல் இருங்க மிசஸ் கோதை.”
அமோதிப்பாக் தலையசைத்தாள் கோதை.
மறுநிமிடம் குடும்பத்தவரும் நண்பர்களும் அவளை சூழ்ந்து கொள்ள, நர்ஸ் பாடு திண்டாட்டமானது.
“சார், நார்மல் வார்டிற்கு வந்ததும் பாருங்க. ப்ளீஸ்.” என்று கெஞ்சிக்கொண்டு இருந்தார்.
அனைவரும் அவளிடம் பேச முடியாமல் தொண்டை அடைக்க, அவளைப் பார்த்தபடி வெளியேறினர்.
அகிலன் அந்த செக்யூரிட்டி நிறுவனம் மூலமாக அவன் இருப்பிடம் கேட்டு அங்கே சென்றான். ஆனால் அவன் அங்கு இல்லை. சந்தேகப்பட்ட அனைத்து இடங்களிலும் அவன் அவர்களோடு இணைந்து தேடிக்களைத்தான். ஆனால் முகிலன் அகப்படவே இல்லை.
சோர்ந்து போன அகிலன், கோதையின் நிலை அறிய ஷியாமுக்கு கால் செய்தான்.
அவன் மருத்துவ மாணவன் என்பதால் அனைத்து உள் விஷயங்களையும் அவனுக்கு மருத்துவர் எடுத்து கூறியிருந்தார். அகிலன் கேட்டதும் “உயிருக்கு ஆபத்து இல்லை அண்ணா.. ஆனால் முதல்ல கொஞ்ச நாட்கள் ரொம்பவே கவனமா பார்த்துக்கணும். அசங்கவே கூடாது.”
அவள் வீட்டிற்கு வருவதற்குள் அந்த கும்பலையோ இல்லை முகிலனையோ ஒரு வழி செய்து விட வேண்டும் என்று நினைத்தான் அகிலன்.
சுந்தர் பிடிபட்ட ஆட்கள் மூலம் அந்த கடத்தல் தலைவனை பற்றி தகவல் சேகரிக்க முயன்றார். ஒருவனுக்கும் ஒன்றும் தெரியவில்லை. எல்லாம் கூலிக்கு கொலை செய்யும் ஈனப்பிறவிகள்.
கோதை பிழைத்ததை கேட்டவன் மனமெல்லாம் கொதிக்க, “ஒரு வேலைகூட உருப்படியா செய்ய தெரியாதா டா நாய்களா…”
“தலைவரே! அவள் இந்த முறையும் உஷாரா இருப்பான்னு நாங்க நெனைக்கல.”
“முதல் நாள் விஷம் வெச்சிட்டு எவனாவது அடுத்தநாள் கொல்லப் போவானா டா? மாடுகளா… அறிவு கெட்ட…” வாயில் வந்த அத்தனை கெட்ட வார்த்தைகள் கொண்டு அவன் திட்ட,
அவனிடம் கூலிக்கு வேலை செய்யும் கூட்டம் தலை குனிந்து நின்றது.
“ஆமா… அந்த பய எங்க டா போனான்?”
“ஏதோ சொந்தக்காரங்க வீட்டுக்கு போறேன்னு சொன்னான். அவனும் எங்க ப்ளானுக்கு ஹெல்ப் பண்ணினான்.”
“அவனை அந்த செக்யூரிட்டி ஆட்கள் தொடராம பாத்துக்கோங்க.. அந்த பைத்தியக்காரன் நமக்கு தேவை. அவனை வைத்து தான் அவளை வழிக்கு கொண்டு வரணும்.”
“ஆனா தலைவரே! அந்த குடும்பமே அவன் மேல கொலை வெறியில இருக்கு.”
“அது தான் எனக்கும் வேணும்.”
“அவனால நமக்கு பயன் இருக்குமா தலைவா?”
“டேய் நான் சொன்னா சரியா இருக்கும் டா. ஆனா எங்க? சென்னைலையும் எனக்கு தெரியாம அவளை கடத்தி என் திட்டத்தை கெடுத்திங்க, இப்போ இங்கேயும் அப்படி தான். சரி தொலையட்டும். இனிமே என் பேச்சை மீறி, எனக்கு தெரியாம எதுவும் செய்ய வேண்டாம்.”
“சரிங்க தலைவரே!”
“நம்ம ஆளுங்க போலீஸ் கிட்ட வாய திறக்க கூடாது, பாத்துக்கோ. திறந்தா போட்ரு.”
அந்த வார்த்தையில் அங்கிருந்த அனைத்து அடியாட்களுமே பயம் கொள்ள,
“இதே தான் உங்க எல்லாருக்கும்.”
எச்சரித்துவிட்டு அவனின் வெளிநாட்டுக் காரில் விரைந்தான்.
“பாத்தியா டா இவர் பேசுற பேச்சை!”
“விடு… நமக்கு காசு தான் முக்கியம். பார்த்தல்ல, எவ்வளவு காசுன்னு” அவன் இவர்களுக்குத் தந்துவிட்டு போன பணத்தைக் காட்டிக் கேட்டான்.
“ம்ம். இதுக்காகத்தானே இந்த நாரப் பொழப்பு”
“விடுங்க டா.”
“இங்க பாரு. நான் இங்கே இருக்கற விஷயம் துளி வெளில போனாலும் உன் உயிர் உன்கிட்ட இருக்காது.”
“தம்பி, வேணாம்ப்பா… நான் மாட்டினா அவ்ளோ தான்…” கெஞ்சி கொண்டிருந்தார் அவர்.
முகிலன் காதுகளை அது எட்டவில்லை… அவன் வேறு உலகத்தில் இருந்தான்…
கோதையை நார்மல் வார்டிற்கு மாற்ற மூன்று நாட்கள் ஆனது. அதுவரை ஆள் மாற்றி ஆள் அவளைக் கண்ணாடி கதவு வழியே பார்த்தபடி நின்றனர்.
ராஜேஸ்வரன் ரிசார்ட்டின் துவக்க விழாவை ஒத்தி வைத்தார். அவருக்கு மருமகள் இப்படி இருப்பதை பார்க்கவே முடியவில்லை. பட்டாம்பூச்சி போல பறந்தவள், இன்று அசங்காது ஓர் இடத்தில் இருப்பது அவரை மிகவும் பாதித்தது.
இவ்வளவு களேபரத்தில் யாரும் அன்னம் வராததை கவனிக்கவே இல்லை.
ஆதியும் மனைவியின் அருகிலேயே இருந்தவன், அவளின் விழி அசைவுக்கு அவளுக்கு உதவிகள் செய்தான்.
அன்று நர்ஸ் ஏதோ அவசர கேஸ் வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றார். எப்போதும் போல ஆதி அவள் வலக்கரத்தை பற்றியபடி அமர்ந்திருந்தான். அவளின் விழிகளில் தெரிந்த மாற்றம் கண்டு அவன் அவள் கையை அழுத்தி விட்டு எழ அவள் வேண்டாம் என்று கண்ணசைத்தாள்.
அமைதியாக எழுந்த ஆதி, அவளுக்கு பெட் பான் வைக்க, விழியில் நீரோடு அவள் இயற்கை உபாதையைக் கழித்தாள். அவன் முகம் சுளிக்காமல், கழிவறை சென்று சுத்தம் செய்து விட்டு, அவளையும் சுத்தம் செய்தான்.
கோதையின் கண்களில் நீர் அருவியாக பொழிய “அத்தான் ஏன் இப்படி பண்றிங்க? எனக்கு கஷ்டமா இருக்கு..”
“ஏன் பூமா இப்படி பேசுற, நீ இப்படி பேசறதே எனக்கு கஷ்டமா இருக்கு தெரியுமா?”
அவள் விழிநீரை நிறுத்த முடியாமல் அவன் தவிக்க தொடங்கினான்.
“அழாத மா.”
பலவாறு சொல்லியும் அவள் சமாதானம் ஆகாமல் போக, அவள் இதழில் இதழ் வைத்து அவன் மனதில் அவளின் நிலையை அவளுக்கு உணர்த்தினான்.
அவன் இதழ்களின் அழுத்தம் அவளுக்கு அவனின் மனதையும், காதலையும் பறைசாற்றியது.
மெது மெதுவாக அவள் கண்ணீர் குறைய, ஆதிக்கு இப்போது தான் நிம்மதியாக இருந்தது.
“நீ எனக்கு எல்லாமும் ஆனவள் டி. அப்படினா நீ எனக்கு குழந்தையும் தானே? என் குழந்தைக்கு செய்ய மாட்டேனா? சீக்கிரம் உடம்பு தேறி வா. உன்னை நான் நிறைய படுத்தப்போறேன்.”
“யாரு? நீங்க? ஈஸ்வரா…’
“சொல்லு… இங்க தானே இருக்கேன்.”
“உங்களை கூப்பிடலை. அந்த கடவுள் கிட்ட சொல்றேன்…”
“என்னன்னு…”
“நீங்க சரியான மக்குன்னு…”
“ஏய்…”
“சும்மா.”என்று அழகாகச் சிரித்தாள் கோதை.
ஆதிக்கு அவள் சிரிப்பு இதே போல என்றும் அவள் முகத்தில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்தான்.
அவனுக்கு பூமாவே முதன்மையாக இருந்தாள். அவளை தேற்றுவதில் தான் அவன் கவனம் இருந்தது.
அவள் தேறி வந்த பின்னால், அவளின் நிலைக்கு காரணமானவர்களின் நிலையை கடவுள் நினைத்தாலும் காக்க முடியாது, தான் அவர்களை ஒரு வழி செய்யாமல் விடுவதில்லை என்று அவனுக்குள் சபதம் செய்து கொண்டான்.
அகிலன் மனம் விடாமல் முகிலனைத் தேடும் பணியில் இருந்தான். அவன் ஒரு புறம், நிறுவன ஆட்கள் ஒரு புறம், காவல்துறை ஒரு புறம் என்று அவர்கள் அவனை தேட, அவனோ யாருக்கும் சிக்காமல், மகிழ்ச்சி குறையாமல் இவர்கள் வராத திசையில் ஆடிக்கொண்டு இருந்தான்.
கோதை இவர்கள் யாரைப் பற்றியும் நினைக்க வில்லை. அவள் கணக்கு வேறாக இருந்தது.
அவள் ஆதியிடம் “கமிஷனர் சாரை பார்க்கணும் “என்றாள்.
உள்ளே வந்த சுந்தரிடன் அவள் கேட்ட இரண்டு கேள்விகளில் அவரின் மடத்தனம் அவருக்கு விளங்கியது. தான் உடனேயே செயல்படுவதாக அவளுக்குச் சொல்லிவிட்டு, “கோதை” என்று ஒரு அடி முன்னால் வைத்தார்.
கோதை அவரை ஒரு பார்வை பார்த்தாள், அது அந்நிய ஆடவனை ஒரு பெண் பார்க்கும் பார்வை, ‘சற்று தள்ளி நில்’, என்று கட்டளையிடும் பார்வை. சுந்தர் குறுகியபடி வெளியேறினார்.

ஒருவேளை, இந்த முகிலன் அன்னம் வீட்லயே ஒழிஞ்சிக்கிட்டானோ.?
😀😀😀
CRVS (or) CRVS 2797
👌👌💕💕💕💕💕💕
thank u