
அமுதம் 35
வானளாவிய மரங்களுக்கு இடையில் இருந்த அந்த சிறு கிராமம், யாருக்கும் அவ்வளவு எளிதில் புலப்படாது. அவ்வளவு அடர்த்தி.. நம் கால்தடங்கள் பதிவதே அரிதான இடம் என்று நினைத்தால், மரங்களின் கிளைகளால்,அதன் அசாத்திய வளர்ச்சியால் சூரியக் கதிர்களே அம்மண்ணை தொட்டிருக்குமா என்பது சந்தேகம் தான்.
அங்கே ஓர் இடத்தில், கோர முகத்துடன், பன்னிருகைகளில் பற்பல ஆயுதம் தரித்த வனபத்ரகாளியின் சிலை உயர்ந்து நின்றது. காண்பவரை ஒரு நொடி கதிகலங்கச் செய்திடும் அத்தாயின் ரௌத்திர முகம்.
நேற்று நடந்த பலிபூசையில் வெட்டப்பட்ட மிருகங்களின் ரத்தம் சிதறிய பலிபீடம், அதற்கு முன்னே மும்முனையும் கூர்மையாய் பளபளக்கும் பத்ரகாளியின் திரிசூலம்.
இதேயெல்லாம் தன் புறக்கண்களால் பார்த்து அகக்கண்களால் உள்ளே நிறைத்தபடி ஆதியும் கோதையும் நடந்து வர, புவி இவையனைத்தையும் தன் கேமரா கண்களால் சேமித்தபடி வந்தான்.
அந்த மலைவாசிகள் அவர்களை மரியாதையாய் வரவேற்று ஒரு மேடையில் அமர வைத்தனர். புவி அவர்களிருவரிடமும் சொல்லிக்கொண்டு சுற்றி அனைத்தையும் புகைப்படங்களாக்கக் கிளம்பினான்.
அந்த கிராமப் பெண்களை ஏற்கனவே கண்டிருக்கிறாள் கோதை, அப்போதெல்லாம் சாதாரண உடையில் இருந்தவர்கள் இன்று வேறு விதமான ஆடையில் இருக்க, அருகில் இருந்த ஒரு வயதான பாட்டியைப் பார்த்துதன் சந்தேகத்தைக் கேட்டாள் கோதை.
“முன்னெல்லாம் இங்க இப்படித்தான் உடுத்துவோம். இப்போ வளர்ச்சின்னு சொல்லி கண்ட ஆளுகளும் காட்டுக்குள்ள வர பொம்பளப்பிள்ளைங்களுக்கு பாதுகாப்பே இல்ல. அதுக்கு தான். சாதா உடையிலேயே மத்த நாட்கள்ல இருப்பாங்க. இந்த மாதிரி விஷேச நாள்ள மட்டும் எங்க பாரம்பரிய உடையை போட்டுப்பாங்க.”
கோதை அங்கிருந்த பெண்ணிடம் தனக்கும் அது போல ஆடை தர முடியுமா என்று கேட்க, மகிழ்ச்சியாய் அவளை அழைத்து சென்று அவ்வுடையுடன் பல வண்ண காட்டு மலர்களால் அவளை அலங்கரித்து அழைத்து வந்தனர்.
ஒரு நிமிடம் அவளின் அழகில் ஆதி அசந்து போனான். தூரத்தில் எதையோ போட்டோ எடுத்துக்கொண்டு இருந்த புவியை அழைத்து கோதையை போட்டோ எடுக்கச் சொன்னவன், அங்கிருந்த ஆண்களோடு பூசை வேலையில் கலந்து கொண்டான்.
அக்கிராமப் பெண்களோடு பேசும்போது தான் நேற்றைய சம்பவம் கேள்விப்பட்ட கோதைக்கு உள்ளே ஏதோ உறுத்தியது. அக்கிராம பெரியவரைப் பார்க்கவேண்டும் என்று கேட்டு அவர்களோடு சென்றவள் மீண்டும் வரும்போது வண்டி வண்டியாய் குழப்பங்களை சுமந்து வந்தாள்.
புவியைத் தேட அவனோ கண்ணில் சிக்கவில்லை. அவளுக்கு எதுவும் சரியாகப் படாத நிலையில், ஆதியை நாடினாள். அவனைத் தனியாக அழைத்து முதல் நாள் சம்பவத்தை சொல்ல, அதிர்ந்த அவன் வக்கீல் தன்னிடம் சொன்ன தகவலை அப்போதுதான் கோதையிடம் பகிர்ந்தான்.
“அப்போ, இது தற்செயல் இல்ல. திட்டமிட்ட சதி.”
“இவங்கள யாரோ இங்க இருந்து பயமுறுத்தி விரட்ட பார்த்திருக்காங்க, நடக்கலன்னதும் கொல்ல முயற்சி பண்ணிருக்கங்க. அதுவும் சும்மா இல்ல, எல்லாரும் சாப்பிடற சாப்பாட்டுல விஷம் அப்படினா? எனக்கு இது சாதாரண பிரச்சனையா தோணால பூமா…”
“எனக்கும் தான் அத்தான். சரி இந்த புவனேஷ் எங்க போனான்?”
இருவரும் அவனைத் தேடிப் போக, அவன் கேமரா ஒரு மரத்தில் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருந்தது. அதைப் பார்த்து அதிர்ந்த ஆதி, கோதையை தோளில் தட்டி அழைக்க, அவளோ அவனின் கையை பிடித்து உலுக்கி அவனை பார்க்கும் படி செய்கை செய்து கொண்டு இருந்தாள்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க, மற்றவர் காட்டியதை நோக்கித் திரும்பிய இருவருமே அதிர்ந்தார்.
ஆதி கோதை காட்டிய திசையில் பார்த்தவன், அங்கே ஒரு மரத்தின் பின்னால் ஒரு கால் தெரிவதையும், அதில் இருந்த உடை புவியின் உடை போல இருக்க ஆதிக்கு வியர்த்தது.
கோதையோ மரத்தில் தொங்கிய கேமராவை பார்த்ததும்,தான் கீழே பார்த்தது புவனேஷ் தான் என்ற முடிவுக்கு வந்தவள், அப்போ அவனுக்கு ஏதோ நேர்ந்துவிட்டது என்று பயத்துடன் ஆதியை காண, அவனோ சிலை போல நின்று புவி இருந்த திசையையே பார்த்திருந்தான்.
அவனை நடப்புக்கு கொண்டு வந்த கோதை, புவியின் அருகில் இழுத்துச் செல்ல, அங்கே புவி மடங்கி அமர்ந்திருந்தான், அவன் தலையில் எதை கொண்டோ பலமாக தாக்கியதால், தலையில் இருந்து குருதி வழிந்து கொண்டிருந்தது.
அதைக் காண சகியாத கோதை ஆதியைப் பார்க்க, இருவரும் அவனை தூக்கி வந்து பக்கத்தில் இருந்த குடிலில் படுக்க வைத்தனர்.
மூப்பரைப் பார்க்கப் போனபோது அங்கு பார்த்த மருத்துவ கிழவியை அழைத்து வந்த கோதை, யாருக்கும் தெரியாமல் அவனுக்கு வைத்தியம் பார்க்கும் படி சொல்லிவிட்டு ஆதியோடு அக்குடிலை விட்டு வெளியேறினாள்.
“அத்தான்”, என்று அழைத்தபடி பார்வையை சுழல விட்டவள் கண்களில் அந்த தடித்து பெருத்த மரங்கள் விழ, ஒரு மரத்தின் பின்னால் நால்வர் நின்றால் கூட தெரியாத அளவு பருத்திருந்த அவைகள், சற்று நேரத்திற்கு முன்னால் இயற்கையின் வரப்பிரசாதமக தெரிந்த அவை யாவும் இப்போது அட்கொல்லிகளை ஒளித்து வைத்திருக்கும் சாபமாகவே தெரிந்தது.
தன் எண்ணவோட்டத்தை நிறுத்தியவள், “அத்தான் இது நம்மளால மட்டும் முடிய கூடிய விஷயமா எனக்கு படல. புவி எதையோ பார்த்துட்டான் போல, அதான் அவனை அடிச்சி போட்டிருக்காங்க..”
“எனக்கும் புரியுது பூமா, இது நம்ம கையை மீறிய விஷயம். ஆனா என்ன பண்றதுன்னு புரியல. நான் நவிலனை காண்டாக்ட் பண்ண முயற்சிக்கிறேன்”.
கோதை அவனுக்குத் தலையை ஆட்டிவிட்டு சற்று யோசனையில் ஆழ்ந்தாள். முதல் முறை அவளை பயம் ஆட்கொண்டது. தனக்கென்றால் வருவது வரட்டும் என்று நிற்கலாம். ஆனால் இங்கே வயசானவர் முதல் பச்சிளம் குழந்தை வரை இருப்பதால் அவளால், அதற்கு மேல் யோசிக்கவே முடியவில்லை. மூளை செயல் இழந்தது போல் தோன்ற ,மெல்ல குடிலுக்குள் சென்று புவியை வருடினாள்.
சில நிமிடங்களில் அவளுள் ஒரு வேகம் வர, எழப்போனவளை புவியின் உளறல் நிறுத்தியது. “அத்தான் பத்து பேர் பத்து பேர்” இதையே அவன் தெளிவில்லாமல் உளற கோதைக்கு எதுவோ புரிவது போல் இருந்தது .
அவனைத் தட்டிக்கொடுத்து விட்டு, வெளியில் வரும்போது பழைய பூங்கோதையாக தெளிவோடும், நிதானத்தோடும் யோசித்தபடி வந்தவள் தன் போனில் இருந்து சில அழைப்புகளை விடுத்தாள்.
பின்னர், அந்த மருத்துவக் கிழவியிடம் கேட்டு சில விஷயங்களை தெரிந்து கொண்டவள், அக்கிராமப் பெண்களை நோக்கி சென்றாள்.
“அம்மா..”
“சொல்லுங்கம்மா..”
“இன்னிக்கு என்னென்ன சடங்கு நடக்கும்?”
“இன்னிக்கு கடைசி பூசை மா. அதனால எங்க கிராம ஆண்கள் பூராவும் காளியாத்தா மேல பூ தூவி வேண்டி, வானதுல வெள்ளி முளைக்குதான்னு பார்ப்பாங்க.வெள்ளி முளைச்சத்தும் நாங்க குலவை போட்டு, எங்க குலவழக்கபடி ஆண்களை சுற்றி நாங்க கும்மி பாடுவோம்.”
“சரிம்மா.” என்றவள்,
இருள் கவிழ ஆரம்பித்திருந்த வேளையில் கோதை அந்த அடர்ந்த காட்டை ஒருமுறை சுற்றிய கண்கள் காளியின் மீது நிலைபெற வேண்டிய உதவியை பெற்று இந்த சூழ்நிலையை கண்டிப்பாக வென்று வர வேண்டும் என்று அந்த வனகாளியை வேண்டியவள், அங்கிருந்த திடகாத்திரமான பெண்களை புவி இருக்கும் குடில் பக்கம் கூட்டி போனாள்.
ஒவ்வொன்றாய் அவள் சொல்லச் சொல்ல, அந்த பெண்களின் கண்ணில் நெருப்பு வந்தது..
அனைவரும் தயாராகக் காத்திருந்தனர்.
இதைப் பற்றி எதுவும் தெரியாத ஆதி, அவன் தன் பங்கிற்கு கிராம இளைஞர்களை இணைத்துக்கொண்டு ஒரு திட்டத்துடன் காத்திருந்தான்.
பூசை துவங்கியதும் பூசை செய்யும் ஆண்கள் காளி தேவி முன் நின்று அவளின் துதி பாடி மலர் தூவ, அவர்கள் தூவிய செவ்வரளி மலர்கள் ரத்தத்துளிகள் போல காளியின் மீது பட்டுத் தெரித்தன.
அவர்களை சுற்றி குலவை போடும் நடுத்தர வயதுப் பெண்கள் நிற்க, கையில் குத்தீட்டிகளுடன் கோதையும் அவள் சேர்த்த பெண்களும் அவர்களை சூழ்ந்து வளையமிட்டது போல் நின்றனர்.
ஆதி அவன் சேர்த்த இளைஞர் படையுடன் கையில் தடித்த சிலம்பம் போன்ற குச்சிகளோடு காளியையும், மற்ற கிராம மக்களையும் சூழ்ந்து நின்றனர்.
அவர்களின் நம்பிக்கையும் கெட கூடாது, யாருக்கும் பாதிப்பும் வரக்கூடாது என்று ஒரு முடிவுடம் அனைவரும் நிற்க,
கோதையின் செயல் கண்டு ஆதி மெச்சுதல் பார்வை பார்க்க, கோதையோ இது மட்டும் போதாது என்பது போல் அவனை பார்த்து வைத்தாள்.
அவள் மனதில், நான் நினைத்து வரைந்து வைத்தது போல நடந்துவிட்டால், யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லாமல், இந்த பூசை நல்லபடியாக முடியும், சிறு பிசகு நடந்தாலும் உயிருக்கு ஆபத்தில்லாமல் போனாலும், இவர்களின் பாரம்பரிய சடங்குகள் கெட்டுவிடும். அதையும் மீறி அவள் நினைக்காதது நடந்துவிட்டால், கண்டிப்பாய் இங்கே அவளோடு சேர்த்து யார் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை.
பயங்களையும் சந்தேகங்களையும் பின்னுக்குத் தள்ளியவள், தாயின் துதியை அவர்களோடு சேர்ந்து பாட, அவளைத் தொடர்ந்து அனைவரும் பாட ஆரம்பித்தனர்.
துதிபாடி முடித்து, மலர் தூவி, வெள்ளி முளைக்க ஆண்கள் அனைவரும் வானத்தை நோக்கி இருக்க, சரியாக ஆதிக்கு இரண்டாவதாக நின்றிருந்த இளைஞன் மேல் ஒரு கட்டை வந்து விழுந்தது. அவர்கள் கோர்த்து வைத்திருந்த சங்கிலி போன்ற அமைப்பை உடைத்துக்கொண்டு இருவர் உள்ளே நுழைய, கோதை
“நீங்க சேர்ந்து நின்னு வேற யாரும் உங்களை தாண்டி வராத மாதிரி பார்த்துகோங்க. இவங்களை நாங்க பார்த்துக்கறோம்.”, என்று கத்தியவள், குத்தீட்டியை அவர்களை நோக்கித் திருப்பினாள், லாவகமாக நகர்ந்த அவன், பெரிய பட்டா கத்தியை கோதையை நோக்கி செலுத்தினான், அது கோதைக்கு மிக அருகில் வர, அவள் அதை ஈட்டியின் குச்சியால் தடுத்தாள்.
அடுத்தடுத்து அவன் அவளை நோக்கியே வந்தவண்ணம் கத்தியை காற்றில் இடது வலதாக ஆட்டியபடி வர, அவன் முகத்தை மறைத்திருந்தாலும், அவன் கண்களில் தெரிந்த வெறி, அது கோதையை கொன்றே ஆகவேண்டும் என்று வருவது போல் கோதைக்குத் தோன்ற, இது இவர்களின் பிரச்சனை மட்டும் அல்ல என்று உணர்ந்தாள்.
அவளும், அவளோடு நின்ற பெண்களும் அவர்களை ஆண்களை நெருங்க விடாது தடுத்துக்கொண்டிருக்க, வெள்ளி முளைக்கும் வரை வானைத் தவிர உலகமே இடிந்தாலும் பார்க்கக் கூடாது என்பது அவர்களின் ஐதீகம் அதனால் அக்குல ஆண்கள் வானயே பார்த்த வண்ணம், வெள்ளி முளைக்க வேண்டி காத்திருந்தனர். ஒருவன் கோதைக்கு பக்கத்திலிருந்த பெண்ணின் மேல் தாக்கிய நொடி, அவளை காக்க வேண்டும் என்று நினைத்து கோதை அவள் புறம் நகர, வெட்டு கோதையின் தோளில் விழுந்தது, கோதை மடங்கிச் சரிந்தாள்.
ஆதி “பூமா” என்ற அலறலோடு சங்கிலி தொடரை விட்டு அவளை நோக்கி விரைந்தான், அந்த இடைப்பட்ட நொடியில், உள்ளிருந்த இருவரும், சரமாரியாக பெண்களை தாக்க, அவர்களும் முடிந்தவரை தங்களைக் காத்துக்கொண்டனர், சிலருக்கு வெட்டுகள் விழவும் செய்தது. அங்கிருந்த அனைவரும் ஒரு நொடி இனி எதுவும் அவர்கள் கையில் இல்லை என்ற நிலைக்கு வந்தனர்.
அப்போது அங்கே துப்பாக்கி சத்தத்தோடு நூற்றுக்கும் மேலான போலீஸ் அதிகாரிகள் வர, வெட்ட வந்த கும்பல் தப்பிக்கும் முயற்சியில் மும்மரமடைய, பெண்கள் தங்கள் குத்தீட்டிகளால் அவர்களைத் தாக்கினர். அப்படியும் அவர்கள் காட்டுக்குள் ஓட, அந்த அடர்ந்த காட்டுவெளியில் அவர்களை தேடுவது சுலபமாக இல்லை, இருந்தும் இருவர் சுடப்பட்டு சுருண்டு விழுந்தனர்.
அந்த வனபத்ரகாளி அநியாயங்களை பொறுத்திருப்பாள் என்று சதிகார கும்பல் நினைக்கலாம். ஏன் அவள் இல்லை என்றே கூட அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால் அவர்கள் மறந்த ஒன்று, எறும்பே தன் கூட்டத்திற்கு ஒன்றென்றால் கடித்தே ஒருவனை ஓடவிடும். அப்படி இருக்க, இவர்கள் சதி செய்து இவர்களின் விதி மாற்ற நினைத்தால், அவர்கள் மதி கொண்டு சதிதனை வென்று விதிதனை மாற்றுவார் என்று அவர்களின் மதிக்கு எட்டாமல் போனதே அவர்களின் விதி.
கூட்டாக சேர்ந்து மாற்ற முடியாத ஒன்றென்று இவ்வுலகில் இல்லை. நல்லவை நான்கே சேர்ந்தாலும் தீயவை நானுரை அழிக்கும். இங்கும் அதுவே நடந்தது. நல்லவை பல சேர்ந்து தீயவரை அடித்து துரத்தியிருந்தனர்.
போலீஸ் படை முன்னேறி அனைவரையும் துரத்தியபடி அந்த இருவரை பார்க்க, அவர்கள் இறந்திருந்தனர், முன்னெறிச் சென்று தேட, சிலர் படுகாயங்களுடன் பிடிப்பட்டனர்.
கோதை கொஞ்சம் கொஞ்சமாக நினைவுகளை இழந்து கொண்டிருந்தாள், அவள் முன்னால் போலீஸ் உடையில் சுந்தர் வந்து ” கோதை” என்று அணைக்க, நடுங்கும் கரங்களால் அவரை விலக்கியவள், திக்கித் திக்கி,
“ரொம்ப… நன்றி… கமிஷனர்… சார்… கூப்பி…டதும்… உதவிக்கு… வந்தது… க்கு… நான் பூங்கோதை… ஆதி…லிங்…கேஸ்…வ….ர…ன்.”
சொல்லியபடி நினைவிழந்தாள்.

👌👌👌👌👌👌
அச்சோ… அத்தனை கஷ்டப்பட்டு ப்ளானை போட்டும், இம்ப்ளிமெண்ட் ஆகாம சொதப்பிடுச்சோ ?
😀😀😀
CRVS (or) CRVS 2797