Amudham 29

Amudham 29

முதல் நாளின் நினைவுகளோடு கண்விழித்த கோதைக்கு அந்த அருவியைப் பகலில் காண ஆசை வர, ஆதியை உலுக்கி எழுப்பினாள்.

கம்பளிக்குள் நத்தையாய் சுருண்டிருந்தவன் கோதையின் உலுக்கலில், அரைக் கண் திறந்து “என்ன செல்லம்மா?”

“அத்தான் அத்தான் ப்ளீஸ் வாங்களேன் இப்போ போய் அந்த அருவியை பார்த்துட்டு வரலாம்.”

“பூமா! ஆதி பாவம் டா. மணி பாரு அஞ்சு தான் ஆகுது. இப்போ போனா குளிரும்.”

“ஓ. அப்போ நேத்து நைட் பத்து மணிக்கு குளிரலையோ?”

‘ஈ’ என்று அவன் பல்லைக்காட்ட,

“வருவிங்களா மாட்டீங்களா?” என்று சிறுப்பிள்ளயாய் அடம் பிடித்த பூமாவை ஆதி அருகில் இழுத்து அணைத்துக் கொண்டான்.

“சரி போகலாம்.”

காலை பனி மூடி இருந்த அந்த வேளையில் விடிந்தும் விடியாத அரை இருட்டில் மெதுவாய் அருவிப்பாதையில் இருவரும் நடந்தனர்.

நேற்று வழியை சரியாக கவனிக்காத கோதை, இப்போது அங்கங்கே குறிகள் இட்டு அந்த பாதையை குறித்துக்கொண்டே நடந்தாள்.

“என்ன பூமா பண்ற?”

“இல்ல நானே வரணும்ன்னா வழி தெரிய வேண்டாமா? அதான் அடையாளம் வைக்கறேன்.”

“நில்லு!” ஆதி குரலில் சற்று கடுமை ஏறியது.

“வா வீட்டுக்கு போகலாம்.”

“அத்தான்…”
“இங்க பாரு பூமா, அந்த இடம் அழகு தான். ஆனா ஆபத்தானதும் கூட. நான் இல்லாம நீ இங்க வரலாம் என்று கனவில் கூட நினைக்காதே. இங்கே பைசன்னு சொல்லுற மலை மாடுகள் வரும். ரொம்பவே ஆக்ரோஷமானது. அதே போல எப்போ வேணாலும் மேல இருக்கற அடர்ந்த காட்டிலிருந்து சிறுத்தையோ, கருஞ்சிறுத்தையோ வரும். நானே ஒரு தரம் கரடியை அந்த அருவிகரையில் மீன் பிடிக்க பார்த்திருக்கேன். நேத்து அதுபோல எதுவும் நடக்கலன்னா எப்பயும் நடக்காதுன்னு இல்லை. புரிஞ்சுக்குவன்னு நினைக்கிறேன்.”

“சரி அத்தான். எனக்கிதெல்லாம் தெரியாது தானே! இனிமே கண்டிப்பா அருவி பாக்கணும்ன்னா உங்கள் கூட்டிட்டு போக சொல்றேன் தனியா போக மாட்டேன்.”, என்று சிறுப்பெண் போல சொன்ன பூமா மேல் ஆதியால் கடுமை காட்ட முடியுமா என்ன.

“வாலு!”, என்று வைதபடி அழைத்து போனான் அருவிக்கு. முந்தைய இரவை விட ரம்யமாய் பனி பொழியும் நேரத்தில் மேகம் மோதும் அழகுடன் மிளிர்ந்த அந்த வெள்ளி அருவியை பார்க்கப் பார்க்க தெவிட்டவில்லை ஆதிக்கும் கோதைக்கும்.

வீடு திரும்பியதும் சமையல், ரிசார்ட் விஷயமாக சில பேச்சுக்கள், எப்போதும் போல சில சீண்டல்கள், அவளின் செல்லக் குறும்புகள் என்று அன்றைய நாள் அழகுடன் சென்றது. வீட்டில் தனியாக இருக்க முடியாத கோதை ஆதியிடம் கேட்டு அவனுடன் இன்று பாக்டரிக்குக் கிளம்ப ஆயத்தமானாள்.

காரில் பாடலை ஒலிக்கவிட்டு ஊட்டியின் எழிலை ரசித்த கோதை கண்களில் அந்த வாகனம் சிக்கியது. அது அவள் சிந்தையை குழப்பியது. தெளிவான அவள் வதனம் சிந்தனை கோடுகளை வரைந்து கொண்டதும் ஆதி அவள் தோள் தொட்டு,

“என்னாச்சு பூமா?”

சரியாக தனக்கே தெரியாத விஷயத்தை சொல்லி ஆதியை குழப்ப வேண்டாம் என்று முடிவெடுத்தவள். “நம்ம ரிசார்ட்ல அதே போல ஒரு அருவியை அமைச்சா என்னன்னு யோசிக்கறேன் அத்தான்.”

“நல்ல யோசனை தான். ஆனால் செயற்கைக்கும் இயற்கைக்கும் வித்தியாசம் இருக்கும் தானே டா?”

“என்ன சொல்றிங்க?”

“இல்ல இப்போ நீ இயற்கையா நினைச்சத என்கிட்ட மறைச்சு செயற்கையா ஒரு காரணம் சொன்னியே! அது எனக்கு தெரிஞ்சது பாத்தியா? அது போல வர்ற கெஸ்ட் ஈஸியா அது செயற்கை அருவின்னு கண்டு பிடிச்சிடுவங்க…”

“அத்தான் ஐ அம் சாரி.”

“சாரி சொல்லாத பூமா… ஏதோ காரணம் இல்லாம நீ மாத்தி வேற ஒன்னை சொல்லிருக்க மாட்ட… ஆனா… கவனம்… ஏதாவது முடிவு எடுப்பதற்கு முன் எனக்கொரு தகவல் சொல்லிடு. அதேபோல வேறு பிரச்சனைகளைக் கண்டாலும் மறைக்காமல் சொல்லு.”

“சரி அத்தான். எனக்கு ஒரு சந்தேகம் தான். சரியா இருந்தா நானே உங்க கிட்ட வந்து சொல்வேன்.”

“சரி” என்று காரை டீ எஸ்டேட்டுக்கு விட்டான் ஆதி.


அந்த நால்வரையும் பார்க்கப் பார்க்க அவனுக்கு கோவம் தான் வந்தது. “எவ்வளவு தரம் தான் முயற்சி பண்ணிட்டே இருப்பீங்க? எப்போ தான் டா வேலைய முடிப்பிங்க?”

“தலைவரே! எங்களுக்கு மட்டும் ஆசையா? முதலாளி அவங்க பக்கம் பேசும்போது ஒன்னும் பண்ண முடியல.”

“சரி யூனியன் மூலமா பிரச்சனை பண்ண சொன்னேன்ல…”

“அதெல்லாம் எங்களுக்கு தர வேண்டிய வேலையை இவங்க உள்ளே பூந்து புடிங்கிடங்கன்னு கூட சொல்லி பார்த்தோம். வேலைக்கே ஆகலை.”

“அடிச்சி தூக்கி போடுங்க டா. எண்ணி பதினைந்து குடும்பம் தான் டா. “

“அதுக்கு என்ன தலைவரே பண்றது? கொஞ்சமா இருந்தாலும் தலைவலியா இருக்கானுங்க.”

“பேசாம ராத்திரியோட ராத்திரியா தீய வச்சி கொளுத்தி விடு அவங்க குடிசையை…”

“தலைவரே நிதானமா இருங்க… அவனுங்க குடிசை நடுக்காட்டுல இருக்கு. நடுக்காடுன்னா… காட்டுக்கு நடுவுலன்னு அர்த்தம் இல்லை. அவங்க இடத்துக்கு பேர் தான். ஆனா நிறைய மரம் வளர்த்து வச்சிருக்காணுங்க. கொஞ்சம் பத்திச்சுனாலும் மலைல பெரிய காட்டுத்தீக்கு வாய்ப்பாய்டும். அதனால யோசிப்போம்.”

“என்னத்த டா. இப்போவே ஒரு வருஷம் ஆச்சு. அவனுங்கள காட்டுக்குள்ள போக விடாம பண்ண தான், மரக்கடத்தல் கேஸ் போட வச்சேன். அவனுங்க கோர்ட்க்கு நடந்து நடந்தே மலையை மறந்திடுவானுங்கன்னு நெனச்சேன். ஆனா அந்த எஸ்டேட்காரன் உள்ளே பூந்து அவங்களுக்கு சப்போர்ட்க்கு வக்கீல் பிடிக்கறான். வேலை கொடுக்கறான். தேவைப்பட்டா பாதுகாப்பு குடுக்கறானாம். முதல்ல அவனை ஆப் பண்ணுங்க.”

“சரி தலைவரே. அவருக்கு இப்போ தான் கல்யாணம் ஆகிருக்கு. பொண்ணு ரொம்ப எளிமை. தொழிலாளர்களுக்கு கஷ்டம்னா ரொம்ப உதவி செய்வாங்களாம். கேள்விபட்டேன். அவங்க மூலமா ஏதாச்சும் நமக்கு சாதகமா பண்ண முடியுதான்னு பார்க்கறேன்.”

“சரி இன்னும் ரெண்டு நாள்ள நான் சொன்னத முடிக்கணும். போங்க.”

அவர்கள் அகன்றதும், இந்த ஒரு வருட துயர வாழ்வை எண்ணி… யார் தன்னை இவ்வளவு துயரத்தில் தள்ளினார்களோ, அவர்களை தன் கையால் கசக்கி எறிய எண்ணினான் அவன்.


ஊட்டி வந்து இரண்டு நாள் ஆன நிலையில் ஒன்றும் தோன்றாமல் அந்த ஹோட்டல் அறையில் சாப்பிட்டுச் சாப்பிட்டுத் தூங்கி வந்தவை மறந்து அந்த வெப்பநிலையை அனுபவித்துக் கொண்டிருந்தான் முகிலன். அவளை பழி வாங்கும் வெறியில் வந்துவிட்டான். ஆனால் அடுத்து என்ன என்ற குழப்பத்தில் இருந்தான் அவன்.

எப்படியும் அவளை பழிதீர்க்க ஒரு வழி கண்டே ஆகவேண்டும் என்ற வெறியில் அன்று முதல் அவளை கண்காணிப்பது, நல்ல சந்தர்ப்பத்தில் அவளை எப்படியாவது ஏதாவது செய்து விடுவது என்று குருட்டுத்தனமாக திட்டமிட்டு கொண்டிருந்தான்.

**

ஏற்கெனவே தொழிலாளர்கள் கோதைக்கு அறிமுகமானவர்கள் என்பதால் அவள் அவர்களை பார்த்து சிரித்தபடி ஆதியுடன் அலுவல் அறைக்கு சென்றாள். இன்றும் அந்த சிறுவன் அவளை பார்த்துவிட்டு ஓட முற்பட, அவனை எட்டிப் பிடித்தாள்.

“உன் பேர் என்ன டா? ஏன் என்னை பார்த்து ஓடுற?”

“அது அது பயம்..”

“நான் என்ன சிங்கமா? எதுக்கு பயம்?”

“முன்னே இங்க ஒரு அக்கா இருந்தா… அவ என்னை பார்த்தாலே திட்டுவா. எனக்கு பயம். அதான் நீயும் திட்டிட்டா!”

“நான் திட்ட மாட்டேன். பயப்படாதே. எனக்கு உன்னைப்போல சின்ன வாண்டுகளை ரொம்ப பிடிக்கும்.” என்று கன்னம் கிள்ளி முத்தம் வைக்க அவன் கன்னக்குழி விழச் சிரித்தான்.

“உன் பேர் கேட்டேனே..”

“சோமு.. உன்னோட பேரு…”

“பூங்கோதை..”

“பூக்கா!”

சிரித்தபடி அவனிடமிருந்து விடை பெற்றவள் மனதில் சோமு சொன்ன அக்கா யார் என்ற கேள்வி எழுந்தது.

அவள் அலுவல் அறைக்குள் நுழைய,
“வாங்க முதலாளி அம்மா.” என்று நவிலன் பவ்யமாக கூற,

கோதை சிரிப்புடன் “ஒழுங்கா வேலை செய்யிறியா பையா? இல்லனா வேலைய விட்டு தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க…”, என்று கெத்து குரலில் சொன்னாள்.

நவிலன் “அடிச்சேன்னா பாரு. ஒரு வார்த்தைக்கு முதலாளி அம்மான்னு சொன்னா அப்பப்பா என்ன ஒரு பில்டப்பு? தாங்கல டா சாமி.”

“உக்காருங்க அண்ணா. உங்களை யார் என்னை கலாய்க்க சொன்னது?”

“தெரியாம பண்ணிட்டேன் தாயே. என்னை தூக்கி எல்லாம் அடிச்சிடாதே. நான் தாங்க மாட்டேன்.”

“ச்ச சே. அப்படி செய்ய மாட்டேன். ஆனா வச்சு செய்வேன்.”என்று நாக்கைத் துருத்தினாள்.

“ஆதி எப்பிடி டா இவளை சமாளிக்கற? உனக்கு ஆஸ்கர் தான் கொடுக்கணும்.”

“வாங்க வந்து வாங்கி தாங்க. என் அத்தானுக்கு ஆஸ்கர் வருதுன்னா நான் வேணாம்னா சொல்லுவேன். கிளம்புங்க.”

“ஐயையோ… ஆதி காப்பாத்து டா.”

இங்கே இவ்வளவு களேபரங்கள் நடக்க ஆதி அவர்கள் இரண்டு பேர் அந்த பிரதேசத்திலேயே இல்லை என்னும்படி ஒரு கோப்பில்ஆழமாக மூழ்கி இருந்தான்..

இருவரும் ‘புஸ் புஸ்’ என்று மூச்சு வாங்க அவனை முறைத்துவிட்டு ஆளுக்கொரு பக்கமாய் அவனை அடிக்க,

“அடேய் விடுங்க டா. நாளைக்கு ஒரு மீட்டிங்க்கு நான் கோயம்புத்தூர் போகணும். எல்லாம் சரியா இருக்கான்னு பாக்கணும் டா. உங்களோட விளையாட நேரம் இல்லை. ரெண்டு நாள் கழிச்சு உங்க பஞ்சாயத்தை வச்சுக்கோங்க. இன்னிக்கு ஆளை விடுங்க.”

“போய் தொலை!” என்று இருவரும் நவிலனின் அறைக்கு செல்ல, வழியில்

“இங்க யாரு அண்ணா ஒரு பொண்ணு வேலை பார்த்ததாமே?”

“அதுக்குள்ள ஆள் வெச்சு இவ்வளவு தூரம் வந்துட்டியா?”

“அண்ணா. சும்மா ஓட்டாதிங்க. சொல்லுங்க.”

“ஆமா அவ ஜென்சி. இங்க கொஞ்ச நாள் செகரெட்ரியா இருந்தா.”

“யாருக்கு?”

“எனக்கு” எனும் போதே நவிலனின் முகம் மாறியதை உணர்ந்தாள் கோதை.

“ஒருவேளை அவ அத்தானுக்கு செகரெட்ரியா இருந்தாலும் எனக்கொண்ணும் இல்லை. என் அத்தானை பத்தி எனக்கு தெரியும்”, என்றதும் நவிலன் முகம் மலர்ந்தான்.

“அவ ஆதியை தன் வச படுத்த ரொம்ப முயற்சி பண்ணினா மா.”

“அவரு அவளை ஒரு ஜந்துவா கூட பாத்திருக்க மாட்டாரே!” தன் கணவனை அறிந்தவளாய் நக்கலாய்க் கேட்டாள்.

“ஆமா டா.” என்று சொல்லிவிட்டு அவளுக்கு குடிக்க டீ வரவழைத்துக் கொடுத்தான்.

இருவரும் பேசிக்கொண்டே நேரத்தை கடத்த, நவிலன் காதை கோதையிடம் விட்டு கண்களை பணி செய்ய அமர்த்தியவனாய் வேலையோடு கதையளந்தான்.

ஒருவாறு அன்றைய பொழுது மகிழ்ச்சியாய் கழிய, வீடு நோக்கிய அவள் பயணத்தில் அவள் கண்களைத் திறந்து வைத்து வழி நெடுகிலும் கவனம் பதித்து வந்தாள்.

வீடு வந்ததும் ஆதியிடம் “நம்ம ரெண்டு பேருக்கும் பிரைவேட் செக்யூரிட்டிக்கு ஏற்பாடு பண்ணுங்க. அவங்க நம்மளை சுத்தி இருக்கிறது வேற யாருக்கும் தெரியாதபடி பாத்துக்க சொல்லுங்க.”, என்றாள்.

“என்னாச்சு பூமா?”, என்றான் பதற்றக் குரலில்.

“ஒன்னும் இல்ல ஒரு சேப்டிக்கு தான்.”

“சரி பூமா நான் அரேஞ் பண்றேன்.”

இனி வரும் நாட்களில் தன்னை மட்டும் அல்ல தன்னை சுற்றி இருப்பவர்களையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற முடிவுடன் கோதை இரவுணவை தயாரித்து இருவரும் உண்டு விட்டு நாளைய விடியலை எதிர்நோக்கி ஒருவரை ஒருவர் அணைத்தபடி உறங்கிப்போயினர்.


2 thoughts on “Amudham 29

  1. பூமா கண்ணுக்கு ஏதோ தெரிஞ்சிருக்குன்னா…
    அப்ப அது உண்மையாத்தான் இருக்கணும். யார் அது, முகிலனா ? இல்லை வேற யாராவதா ?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!