Amudham 23

Amudham 23

தன் நட்புகளுடன் சேர்ந்து வதுவையும், புவியையும் கலாய்த்து கொண்டிருந்தாள் கோதை. ஆதி தயாராகி வெளியில் வந்தவன், அவளின் நட்பு கூட்டத்தை பார்த்து புன்னகையுடன் வர, ராகுல், பிரவீன், இன்பா மூவரும் கண்களில் நீரோடு அவனை அணைத்து தங்கள் தோழியை காத்ததற்கு நன்றி சொல்லிக்கொண்டே அவன் காதில் ஏதோ கதைத்தனர்..

“அம்மா”

“சொல்லு கண்ணப்பா…”

“நானும் கோதையும் அவ பிரென்ட்ஸ் கூட வெட்டிங் ஹாலுக்கு வர்றோம்மா.. நீங்க மத்தவங்களை கூட்டிட்டு முன்னாடி போய்டறீங்களா?”

“அப்படியா.?ஆமா நீங்க தனியா வந்து இறங்கினா அதுவும் நல்லா தான் இருக்கும். சரி பா. பார்த்து வாங்க..”

அவர் அனைவரிடமும் பேசி அழைத்துக்கொண்டு செல்ல, வதுவும் புவியும் கோதையுடம் வருவதாகத் தங்கி விட்டனர்.

மற்றவர்கள் கிளம்பியதும் புவி, “என்ன அத்தான் உங்க பொண்டாட்டியை மட்டும் தனியா கூட்டிட்டு வர புது கார் வாங்கி அவங்களுக்கு மட்டும் பர்ஸ்ட் காட்டி சர்ப்ரைஸ் பண்ண தான எங்களை கழட்டி விட பார்த்திங்க? அதான் நடக்காது. நாங்களும் இருப்போம்ல…”

‘அட லூசு’ என்று அவனை நட்புக்கள் பார்த்துவிட்டு,

“ஆதிண்ணா ஓக்கே வா?” என்று கேட்டு கோதையை சூழ்ந்து நின்றனர். அவர்களோடு பேசிக்கொண்டு மகிழ்ச்சியாக இருந்த கோதையின் முகம் வாயிலை கண்ட பின் துணிகொண்டு துடைத்தாற்போல் மகிழ்ச்சியெல்லாம் மறைய, அமைதியாய் அனைவரிடமிருந்தும் விலகி சோபாவில் அமர்ந்தாள். ஆதி அவளின் மனநிலை புரிய அவளுக்கு ஆதரவாய் அவள் கரம்பிடித்துக் கொண்டான்.

வாயிலில் உள்ளே வருவதா வேண்டாமா என்ற தயக்கத்தோடு அகிலன், ஷ்யாம், வெண்மதி, சுஜி நால்வரும் நின்றுகொண்டிருந்தனர்.

ஆதி அவர்களை உள்ளே வரும்படி செய்கை செய்தான். அகிலன் முன்னே வர மற்றவர்கள் அவனைப் பின் தொடர்ந்தனர்.

நால்வரையும் ஆழ்ந்து ஒருமுறை பார்த்த கோதை ஆதியிடம், “இவங்க எப்படி அத்தான், என்னை நம்பறாங்களா இல்ல அவங்க வீட்டு ஆட்கள் போலத்தானா?”

“அப்படி நினைச்சிருந்தா வருவோமா கோதைக்குட்டி இங்க?”, அகிலனின் வருத்தம் நிறைந்த குரல் மனதைத் தொட,

“அப்பறம் அன்னைக்கு ஏன் அகிச்செல்லம் நீ வரல? நான் போன் பண்ணி சொன்ன பின்னாடியும் நீ ஏன் வரல?”

“நான் அருணாவை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிருந்தேன் டா. நீ முதல்ல போன் பண்ணும்போது வெய்ட் பண்ணிட்டு இருந்தோம், அதுக்குள்ள உள்ள கூப்பிடவும் செக் அப் முடிஞ்சு வீட்டுக்கு வந்திடலாம் அப்படின்னு நான் வர்றதுக்குள்ள என்னென்னவோ நடந்துபோச்சு. சரி அதை விடு டா. நீ தான் உன் ஆசை அத்தான் கூட சேந்துட்டியே! அதுவே எங்களுக்கு சந்தோஷம். அதான் ஆதி கிளம்பி வர சொல்லி பிளைட் டிக்கெட் கொடுத்ததும் உடனே வந்துட்டோம்”,

அவள் கரங்களை விரிக்க நால்வரும் வந்து அவளிடம் தஞ்சமாயினர்.

சிலபல நலம் விசாரிப்புகளுக்கு பின் அனைவரும் மண்டபம் நோக்கிப் புறப்பட்டனர்.

அங்கே அவர்களை வரவேற்க நவிலன் பல ஏற்பாடுகளுடன் காத்திருந்து உள்ளே அழைத்துச்சென்றான்.

அவர்கள் குடும்ப உறவுகள், தொழில்சார் நண்பர்கள், படிப்பு வட்டங்கள் என எப்படி அத்தனை பேரையும் ஒரே நாளில் கோதையும் நவிலனும் அழைத்தனர் என்று ஆதியும் மற்றவர்களும் ஆச்சர்யபட்டுப் போயினர்.

அவர்கள் இருவரும் மேடையில் நிற்க, அவர்களின் அன்பும் காதலும் பேசும் கண்கள் அவர்களை சாதாரண திருமண தம்பதிகளை விட வித்தியாசப்படுத்திக் காட்டியது.  அம்சமான அவர்களின் ஜோடிப்பொருத்தத்தை பேசாத வாய் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அனைவரும் இவ்விருவரை பாராட்டப் பாராட்ட நீலாவின் மனம் கொந்தளித்தது.

‘பத்து பைசா பெறாத இவள் என்னவோ தேவலோகப் பெண் போல இருப்பதும், அவளை மற்றவர்கள் தாக்குவதும், தன்னை ஒரு வார்த்தை எதிர்த்து பேசாது போவோர்க்கு மத்தியில் கொஞ்சமும் தன்னை சட்டை செய்யாது இவள் நடப்பதும், இத்தனை ஆண்டுகள் தன் காலுக்கு கீழ் வைத்திருந்த குடும்பத்தை இவள் ஏதும் செய்து விடுவாளோ?’, என்ற அச்சமும் சேர, ‘இவளை அசிங்கப்படுத்தித் துரத்த வேண்டும்.’ என்று நினைத்தாள்.

அது ஏனோ ஒருவர் நல்லவராக இருந்தால், நேர்மையானவராக இருந்தால், அடிமைத்தனத்திற்குப் பணியாதவராக இருந்தால் இவ்வுலகத்தில் பலரும் அவர்களை வீழ்த்த நேர் வழி இல்லாமல் மாற்று வழியையே தேர்ந்தெடுக்கின்றனர்.

கோதையின் துணிச்சல் பேச்சால் அவளை தனியாக எதிர்கொள்ளக் கூடாது என்று ஜாடை பேச ஆரம்பித்தாள் நீலா.

மேடைக்கு வந்தவள் அவள் நகைகளை சரி செய்வது போல,

“இதென்ன நகை நிறைய போட்டிருக்க? இதுவரையிலும் நகையை பார்த்ததே இல்லையோ? ஆமா எங்க உன் பிறந்த வீட்ல இருந்து யாரும் வரலையா?? கல்யாணம் பண்ணி வைக்கத் தான் வக்கில்ல, இவ்ளோ செலவு பண்ணி ரிசெப்ஷன் வைக்கறோமே வந்து நின்னுட்டு போக கூடவா துப்பில்லை… என்ன ஜென்மங்களோ.. ஒத்த பைசா செலவில்லாம பொண்ணை தள்ளி விட்டும், வந்து நிக்க கூடவா காசில்ல!”,

 என்று அவள் பாட்டுக்கு பேசிக்கொண்டே போக, இதையெல்லாம் கேட்ட கோதை அழுவாள், இல்லை ஆதி கத்துவான் விழாவில் குழப்பம் பண்ணலாம் என்று எதை நினைத்து இவ்வளவு செய்தாளோ அது ஒன்றுமே நடக்கவில்லை.

கோதை சிரித்துக்கொண்டிருந்தாள், ஆதி இன்னும் பெரிதாய் சிரிக்க நீலா தான் எரிச்சலானாள்.

“என்ன டா ரொம்பத்தான் பல்ல பல்ல காட்றிங்க?”, என்று அவள் கடுகடுக்க. வாயில்புறம் கை காட்டினான் ஆதி அங்கே அகிலன் மற்றவர்களோடு பல சீர்வரிசை, நகைகளுடன் நீண்ட வரிசையில் வர, நீலாவுக்கு தான் மூக்குடைந்தது போல் இருந்தது.  அவள் மேடையை விட்டு இறங்க, அகிலன் ராஜேஸ்வரன், அன்னபூர்ணேஸ்வரியிடம் வந்தவன் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு வரிசைத்தட்டுகளை அடுக்கினான்.

“எதுக்குப்பா இதெல்லாம்? “,ராஜேஷ்வரன்.

“இருக்கட்டும் அப்பா. அவள் தான் எங்க வீட்டின் இளவரசி, கல்யாணம் தான் எதிர்பாக்காம நடந்துபோச்சு, நாளைக்கு உங்க வீட்ல யாரும் எங்க கோதையை ஒரு வார்த்தை ஒன்னும் கொண்டுவராதவன்னு நாக்கு மேல பல்லை போட்டு பேச கூடாது அதுக்குத்தான்”, என்றான் நீலாவை பார்த்தபடி.

இதுவரை கோதையிடம் கூட தோன்றாத அச்சம் அகிலனின் கூர் பார்வையால் நீலாவின் உள்ளத்தில் குளிரைப் பரப்பியது.

“அவ பேர்ல நிறைய சொத்துக்கள் இருக்கும்மா. அவளுக்கு பிடிச்ச வாழ்க்கையை நல்ல விதமாக அமைச்சிதர சூழ்நிலை இல்லாம போச்சு. அதை தவிர நாங்க ஒரு குறை வைக்க மாட்டோம்.”

“ஆமா நீ யார் அவளுக்கு?”,நீலா

“அவளோட மாமா பையன்”, பொறுமையாய் பதில் சொன்னான்.

“அப்ப நீயே அவளை கட்டிருக்கலாம் எதுக்கு அவ ஆதியை கட்டினா?”

“நாங்க நாலு பேருமே அவ மாமா பசங்க தான். எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு. ஷ்யாம் படிக்கிறான். அதுவும் இல்லாம கோதையும் ஆதியும் விரும்பி கல்யாணம் பண்ணிருக்கங்க. என்கிட்ட இப்படி கேள்வி கேட்க உங்களுக்கு வேணும்ன்னா அபத்தமா இல்லாம இருக்கலாம். ஆனா பாருங்க பொண்ண கட்டிக்குடுத்த வீட்டு ஆளுன்னு உங்களை சும்மா விடக்கூட எனக்கு அபத்தமா படுது. வாயில நல்லா வருது. ஆதிக்காக சும்மா போறேன். ஆமா எங்களை இவ்வளவு கேள்வி கேக்குறீங்களே நீங்க யாரு? ஆதிக்கு என்ன வேணும்?”

“நான் ஆதியோட மாமா சம்சாரம்.”

“எத்தனையாவது சம்சாரம்ன்னு சேர்த்து சொல்லுங்க.”

“டேய்!”

“அது எப்படி நீங்க என்ன வேணாலும் பேசுவீங்க நாங்க வாயை மூடிட்டு கேக்கணும். நாங்க ஒரு கேள்வி கேட்டா உங்களுக்கு பொறுக்காதோ?”

“அவ எங்க கூடத்தான் டா வாழணும். வாழ விட்ருவேனா?” என்று அவன் காதருகில் வந்து சிரித்தபடி ஆதியின் பெற்றோருக்கு கேட்காமல் நீலா சொல்ல,

அகிலனின் புன்னகை சிரிப்பாக மாறியது. “எங்க கோதையை பத்தி உங்களுக்கு தெரியல. சரி நீங்களே தெரிஞ்சிக்கோங்க. நான் ஏன் சொல்லணும்?”,என்று அவளிடமிருந்து அகன்றான்.

நீலா “அவ அப்படி என்ன பெரிய வித்தைக்காரின்னு நானும் பாக்கறேன் டா. நான் போடாத ஆட்டமா இந்த குடும்பத்துல. நான் இந்த குடும்பத்துக்குள்ள நுழைஞ்சதே பெரிய டிராமா போட்டுத்தான். அப்படி ஒன்னை போட்டு இவளை எங்களுக்கு இங்க இருந்து துரத்த தெரியாதா? போடா.” என்று அவன் போய்விட்ட திமிரில் பேச,

“ட்ரை பண்ணி பாருங்க. ஆல் தி பெஸ்ட்”, என்று அவளைக் கடந்து சென்றான் ஷ்யாம்.

வரவேற்பு முடிந்து அனைவரும் உணவு உண்டபடி பேசி சிரிக்க, நர்மதா மட்டும் சற்று ஒதுங்கியே நின்றவள், ஒரு கட்டத்தில் அவள் முகம் தவிப்பிற்கு மாற, அது ஆதியின் கண்களில் பட்டது. அவனுக்கு அவளையோ அவள் அன்னையையோ பிடிக்காமல் போனாலும், அவள் குழந்தை, அவளைச் சொல்லி ஒன்றுமில்லை, வளர்ப்பவர்கள் சரி இல்லை! என்று ஒதுங்கிக்கொள்வானே தவிர அவளிடம் கடுகடுக்க மாட்டான்.

அவளின் தவித்த முகம் ஏதோ சொல்ல, ஆதி கோதையிடம் சொல்லி கேட்கச் சொல்லலாம் என்று கோதையிடம் திரும்பினான். அவள் அகிலனின் தோளில் சாய்ந்து ஏதோ பேசிக்கொண்டிருக்க, தன் மனையாளின் மகிழ்ச்சியில் தலையிட விரும்பாதவன், அவனே நர்மதாவை அணுகினான்.

“என்னம்மா? ஏன் இங்க ஒரு மாதிரி தவிப்போட நிக்கிற. சொல்லு!”

“அது வந்து சொல்ல கூடாது.” என்று முகத்தைத் தொங்கப் போட்டாள்.

அவள் முக வாட்டத்தையும் தவிப்பையும் பார்த்தவன், அங்கிருந்த வேலையாள் காதில் ஏதோ சொல்லிவிட, அவன் ஐந்து நிமிடத்தில் ஒரு பார்சலுடன் வந்தான்.

அதை நர்மதாவிடம் கொடுத்தவன் “எனக்கும் தங்கச்சி இருக்கு மா. எனக்கு புரியும். இந்தா. இதை வாங்கிட்டு போ. ரிலாக்ஸா வா.”

அவள் அதை வாங்கிக்கொண்டு கழிவறை நோக்கிச் சென்றாள். பத்து நிமிடத்தில் திரும்பிய அவளின் கண்கள் கலங்கி இருந்தது.

“ரொம்ப தேங்க்ஸ். திடீர்ன்னு அப்படி ஆகவும் எனக்கு என்ன பண்றது யார்ட்ட சொல்றதுன்னு தெரியல.”

“இதுல என்ன தயக்கம் அம்மா கிட்ட சொல்ல வேண்டியது தான?”

“அவங்க எங்க என்னை கண்டுக்கறாங்க?”

“சரி வா. உனக்கு பசிக்குமே! சாப்பிடு. “,என்று அவளை அழைத்து வந்தான், அவன் கோதையை சமீபித்திருந்த வேளையில், நர்மதா கால் இடரிவிட அவள் கைகள் பற்றி தாங்கி நிறுத்தியவன், “பார்த்து வா”, என்று கை பிடித்தே அழைத்துப் போனான்.

இதை கண்ட நீலா, “உனக்கு என் பொண்ணை அவ்வளவு பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே ஆதி? எதுக்கு இப்படி அடுத்தவளை கட்டிட்டு என் பொண்ணு கையை பிடிச்சிட்டு சுத்துற?”,என்று தன் மகளை இழிவுபடுத்துகிறோம் என்று கூட தெரியாமல் வாய்க்கு வந்ததை பேசி கோதையை கடுப்பெற்ற நினைத்தாள் நீலா.

அங்கே வந்த கோதை கண்ணீருடன் நின்ற நர்மதாவை பார்த்தாள், யோசிக்கவே இல்லை. ஓங்கி ஒன்றை நீலாவின் கன்னத்தில் கொடுத்தவள்,

“நீ பெத்த பொண்ணு தான அவ? உனக்கு ஆதி அத்தான் மேல கோவம்ன்னா அதுக்கு நீ அவரை மட்டும் பேசிருக்கணும். அவ வயசு என்ன அத்தான் வயசு என்ன?”

“ஏய் என்னையே அறஞ்சுட்டியா? உனக்கு எவ்வளவு திமிர்! அவன் என் பொண்ணு கையை பிடிச்சி கூட்டிட்டு வர்றான். வெக்கமில்லாம வேடிக்கை பார்த்ததோட, நியாயம் கேக்குற என்னையே அடிப்பியா? இனிமே இவளை யாரு டி கல்யாணம் பண்ணுவா? இருட்டுக்குள்ள இருந்து கூட்டிட்டு வந்தானே நீ பாக்கல?”

“அடச்சீ வாயை மூடு. என் அத்தானை பத்தி எனக்கு தெரியாதா? அவளுக்கு ஏதாவது பிரச்சனையா இருக்கும். அவளுக்கு உதவி பண்ணிருப்பார். இப்போ கூட தடுக்கி விழுந்த பிள்ளையை தான் தாங்கி பிடிச்சார். மத்தபடி ஒன்னும் இல்ல.”

“அவன் குடும்ப புத்தி எப்படி போகும் அவன் மாமா மாதிரி அவனுக்கும் ரெண்டு பொண்டாட்டி கேக்குதோ என்னவோ?”,என்று அவள் குடும்பத்தின் மீது அவளே சேற்றை வாரி இறைத்தாள்.

“ஓஹ்… அப்படியா? என் சித்தப்பா உன் மேல ஆசை பட்டு உன்னை கல்யாணம் பண்ணினாரா? உன்னை ஒன்னும் பண்ண வேண்டாம், அப்பறம் பாத்துக்கலாமுன்னு நினைச்சேன். ஆனா நீ அடங்க மாட்டேங்கற. நல்லா கேட்டுக்கோ நீ என்ன பண்ணி அவர் முதல் பொண்டாட்டியை விரட்டினியோ எனக்கு தெரியாது. ஆனா அவர் விரல் நகம் கூட இன்னிக்கு வரைக்கும் உன் மேல பட்டிருக்காது.

எனக்கு நல்லா தெரியும். அவர் அதை வெளில காட்டிக்காம இருக்காருன்னா அது கண்டிப்பா நர்மதாவோட பிறப்பை அசிங்கப்படுத்த கூடாதுன்னு தான் இருக்கும். ஆனா எப்போ நீயே உன் பொண்ணை அசிங்கமா பேசிட்டியோ இனிமே அதெல்லாம் நான் பாக்க மாட்டேன். என் சித்தப்பா மேல தப்பில்லைன்னு இன்னும் கொஞ்ச நாளில் ஆதரத்தோட நிரூபிச்சு உன்னை இந்த குடும்பத்தில் இருந்து வெளியே அனுப்பறேனா இல்லையா பாரு. ” என்று அவள் சவால் விட்டாள்.

முதல் முறை இவளிடம் வைத்துக்கொண்டது தவறோ? தன் வாழ்வை இவள் ஆட்டம் காணச் செய்து விடுவாளோ என்ற கிலியுடன் நீலா நின்றாள்.

ஆதியை ஒரு கையிலும் அழுதுக்கொண்டிருந்த நர்மதாவை ஒரு கையிலும் பிடித்துக்கொண்டு கோதை நகர்ந்து வந்தாள்.

நர்மதாவுக்கு சாப்பிட எடுத்துக்கொடுத்தவள், ஆதியை கை பற்றி தட்டிக்கொடுத்து சமாதானம் செய்தாள்.

அவள் அருகில் வந்த மகேஸ்வரன், “என் குடும்பம் கூட என்னை நம்பல டா மா, என் மனைவி கூட அன்னைக்கு என்னை நம்பல. இத்தனை வருஷம் கழிச்சு என்னை நம்பின பாரு. நீ என் சாமி டா.”, என்று அவளை அணைத்து அழுத்துவிட்டார்.

இவரின் வார்த்தைகளைக் கேட்ட குடும்பத்தார் செய்வதறியாது நின்றனர்.



3 thoughts on “Amudham 23

  1. அடிப்பாவி, பெத்த பொண்ணுன்னு கூட பார்க்காம என்னாம்மா பேசுறா, வாய்ல அடி, வாய்ல அடி.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  2. வாய்லேயே இரண்டு போடு, இந்த பேய் ஏதோ பண்ணி தான் அந்த லூசு காமாட்சி இவர விட்டுட்டு போய்டுத்தோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!