Amudham 19

Amudham 19

அமுதம் 19

தன்னருகில் அமர்ந்து ஊட்டியின் எழிலை ரசிக்கும் எழிலாளை ரசித்தவண்ணம் வந்தான் ஆதி.

அவன் சொன்ன இடத்திற்குக் காரை செலுத்திக்கொண்டிருந்த ஓட்டுநரின் கண்கள் அவ்வப்போது ஆதியைத் தொட்டு மீண்டது.

அவரோ, தான் செல்லும் வழியை கவனித்து தவறினால் திருத்துவான் என்று பார்த்தால் அவனோ தன் மனைவியை காதலாகக் கண்டுகொண்டிருந்தான். ‘சரிதான்’ என்று அவர் சாலையில் கவனமானார்.

கோதை திரும்பிப் பார்த்தபோது ஆதியின் கண்களில் வழிந்த காதலைக் கண்டு, “அத்தான் போதும் டிரைவர் இருக்காரு பாருங்க… ” என்று நாணத்துடன் சொல்லிவிட்டு, “இப்போ எங்க போறோம்?”.

“நம்ம டீ எஸ்டேட்டுக்கு.”

“அப்போ நம்ம வீடு. அதுவும் எஸ்டேட்ன்னு தான சொன்னிங்க?”

“ஆமா பூமா. அது பழம், காய்கறி அப்பறம் பூ எல்லாம் கலந்த எஸ்டேட். அங்க வீடு இருந்தா மிருகம், அட்டை இப்படி எந்த தொந்தரவும் இருக்காதுன்னு கட்டினது. டீ எஸ்டேட் இங்க இருக்கு. இங்கேயும் அவசரம்ன்னா தங்க சின்னதா வீடு இருக்கு டா.”

“சரி அத்தான். பேக்டரி எங்க இருக்கு? நாம போன்ல கூட படிப்பு, குடும்பம், நமக்கு பிடிச்சதுன்னு பேசுனோமே தவற வேற பேசவே இல்லை.”

“பேக்டரி எஸ்டேட் குள்ளேயே சின்ன யூனிட் தான் போட்டிருக்கேன் டா. நம்ம டீ இலையை அப்படியே எக்ஸ்போர்ட் பண்ணிடுவோம். இப்போ பேக்டரில நாமளே டீத்தூள் தயார் பண்றோம்.  மார்க்கெட் பிடிக்கிறது தான் பெரும் பாடா இருக்கு.”

அவன் சொன்னவைகளை கேட்டுக்கொண்டாளே ஒழிய தன் கருத்துக்களை அவள் சொல்லவில்லை. இது அவளின் பழக்கம். எதையும் ஆராய்ந்து பார்த்து விட்டு தான் கருத்தைச் சொல்லுவாள். அவள் சொன்னால் சரியாக இருக்கும் என்ற அபிப்ராயம் மாறும் விதமாக என்றும் நடக்க மாட்டாள்.

ஓரிடத்தில் வாகனம் நிற்க, மலைசரிவுகள் முழுவதும் தேயிலை தோட்டங்களாக இருந்தது.

அவளை கைபிடித்து அழைத்துக் கொண்டு தோட்டங்களுக்கு நடுவில் நடந்தான். சிறு குன்று போல இருந்ததை ஏறியதும் சமதளம் காட்சியளித்தது.

அங்கே மூன்று கட்டிடங்கள் இருக்க, அதில் ஒன்றின் வாயிலைத் தொட்டனர் இருவரும். அங்கே ஒரு சிறுவன் நின்று அவர்களைப் பார்த்தான். பின்னர், இன்னோரு கட்டடத்திற்குள் சென்று மறைந்தான். கோதை சிரித்துக்கொண்டாள்.

ஆதி “இது தான் ஆஃபீஸ் பூமா.” விஸ்தாரமான இடத்தை கவனமாகப் பார்த்தாள்.

அவன் ஒரு அறைக்குள் நுழைய அங்கே ஏதோ ஒரு பைலை பார்த்தபடி ஒருவன் அமர்ந்திருந்தான்.

“டேய் நவி”, என்று ஆதி விளிக்க, நிமிர்ந்தவன் கண்கள் கோதையை யோசனையாய் பார்த்து பின் ஆதியை கேள்வியாய் நோக்கியது.

“கண்ணாலேயே கதை பேசாத டா. நான் சொன்னேன்ல என்னோட பூமா. இவ தான். திட்டிடாத டா. நேத்து அவங்க வீட்ல நடந்த பிரச்னையில் அவளை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வர மாதிரி ஆகிடுச்சு. சொல்லலன்னு கோச்சுக்காத பிளீஸ்!”

அவனோ ஆதியை வெறித்துப் பார்த்துவிட்டு கோதையிடம் “வாங்க சிஸ்டர் “,என்றான்.

“அப்பறம் நவி அண்ணா! எப்படி இருக்கீங்க? பாவம் என் அத்தான் வேணும்னு உங்க கிட்ட சொல்லாம என்னை கல்யாணம் பண்ணுவாரா? நேத்து சூழ்நிலை அப்படி. அதுனால, ஐயோ பாவமேன்னு எனக்காக என் புருஷனை மன்னிச்சு எப்பயும் போல பேசுவிங்களாம். சரியா…? “

அவளின் படபட பேச்சில் ஆதியின் தோழன் அசந்து போனான்.

“எப்படி மா? என்னை உனக்கு தெரியுமா?”, என்று தயங்கிக் கேட்க,

“அட நம்ம அண்ணனை பத்தி தெரிஞ்சு வச்சிப்போமேன்னு அப்பப்போ உங்களை பத்தி கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன். தப்பா என்ன…?” என்று இழுத்தாள்.

முதல்முறை பேசும் எண்ணம் துளி கூட வராத அளவுக்கு அவ்வளவு அன்பாகவும் அக்கரையாகவும் பேசிய கோதையைக் கண்டவுடன் தன் நண்பன் ஏன் எப்போதும் பூமா! பூமா! என்று பூபாளம் பாடினான் என்று அவனுக்குப் புரிந்தது. அவன் பைத்தியமாக அலையும் அளவுக்கு இவளுக்குத் தகுதி இருக்கிறது என்று எண்ணிக் கொண்டான்.

“உக்காரு மா. நீயும் உக்காரு டா மலைமாடே..”

“அச்சச்சோ….அண்ணா… பாவம். ” என்று முகம் சுருக்கினாள்.

“ஏன்??? அவனை ஒன்னும் சொல்லக்கூடாதா? எனக்கு அதுக்கெல்லாம் இனிமே தடா வா?”

“அய்யே அதெல்லாம் இல்ல. நீங்க அவரை என்ன வேணுனாலும் சொல்லிக்கோங்க. நான் பாவம்ன்னு சொன்னது உங்களை. “

“ஏன்?”

“இவரை நீங்க கலாய்க்கறத விட டென் டைம்ஸ் நான் உங்களை கலாய்ப்பேன்.” என்றாள் சிரிப்புடன்.

“ஏன் மா உனகிந்த கொலவெறி?”

“அவரு உங்க பிரெண்ட் நீங்க அவரை கலாய்க்க உரிமை இருக்கு. நான் உங்களை தடுக்கவும் மாட்டேன். அதே போல… நீங்க எனக்கு அண்ணன். எனக்கும் சேம் ரைட்ஸ் இருக்கும்ல… எப்புடி…?”

“டேய் நீ சிஸ்டர பத்தி சொன்னப்பக் கூட நம்பல டா. இப்போ சொல்றேன். ஷி இஸ் சோ ஸ்வீட்.”

“தேங்க்ஸ் அண்ணா. சரி உங்களை இவரு நவி நவின்னு தன் சொல்லுவாரு. உங்க முழு பேர் என்ன?”

“நவிலன்”

“புதுசா இருக்கே. அர்த்தம் என்ன?”

“சொல்திறம் மிக்கவன் என்று அர்த்தம் மா.”

“ஓ! சரி சரி. பேசியே எல்லாரையும் கரெக்ட் பண்ணிடுவிங்கன்னு சொல்லுங்க…”

“உன் அளவுக்கு என்னால வர முடியும்ன்னு தோணால தங்கச்சி மா.”

மூவரும் சிரித்துக்கொண்டனர்.

அதன் பின் பொதுப்படையான பேச்சுக்களுக்கு அடுத்து அலுவல் பேச்சுக்கள் வரவும் இங்கிதமாய் கோதை எழுந்து கொண்டாள்.

நவிலன் மனதிற்குள் அவளை மெச்சினான். ‘நான் அவன் மனைவி என்ன பேசினாலும் நானும் இருப்பேன்’, என்று சட்டமாய் அமராமல் அவள் அகல நினைத்தது அவனுக்கு மிகவும் பிடித்தது.

ஆனால் ஆதி அவள் கை பற்றி அமர வைத்தவன் “உனக்கு தெரியக்கூடாதது என்கிட்ட ஏதும் இல்லை. நீ இங்கேயே இரு.” என்றான்.

அவள் எந்த பிகுவும் பண்ணாமல் அமைதியாய் அமர்ந்து கவனிக்கலானாள். அவளின் இந்த செயலும் நவிலனுக்கு பிடித்திடவே, முகத்தில் முறுவலோடு பேக்டரி பிரச்சனைகள் இன்னும் சில விஷயங்கள் பேசிக்கொண்டனர். அவள் தலையிடாமல் கவனமாகக் கேட்டுக் கொண்டாள். கடைசியாய் அவள் புறம் திரும்பி ” உன் கருத்து என்னமா?” என்று வினவ

சிறிய புன்னகை சிந்திவிட்டு “இவ்வளவு நாள் தொழில் செய்யும் உங்களுக்கு தெரியாததா அண்ணா. இருந்தாலும் நீங்கள் சொல்லும் விஷயங்களை என்னுள் பதிஞ்சுக்கறேன். எனக்கு ஏதாவது தோன்றினால் கண்டிப்பா உங்க கிட்ட சொல்றேன்.” என்று சொல்லி அவனிடம் விடை பெற்றுவிட்டு ஆதியும் கோதையும் கோவையை நோக்கிச் சென்றனர்.

அந்த பெரிய மாலில் இருந்த எல்லா கடைகளுக்கும் சென்று அவன் மனதிற்கு தோன்றிய அனைத்தையும் அவளின் கை கோர்த்தபடி வாங்கியவன் அதற்கு முன் செய்த முதல் வேலை ஒரு சுடிதாரை வாங்கி அவளை உடைமாற்றி வரச் சொன்னதுதான். அந்த புடவையில் அவள் அசௌகர்யமாக உணர்ந்தாலும் அதை அவனிடம் வெளிகாட்டாது சிரித்தபடி காலை முதல் வலம் வந்தவளுக்கு இதைக் கூட புரிந்து செய்யாவிட்டால் எப்படி?

கை நிறைய, பை நிறைய அவன் வாங்கிக்கொண்டு அலைய. அவளோ அமைதியாய் இரண்டு சேலை, மூன்று சுடி, சில டாப் எடுத்து தனியாக வைத்துக்கொண்டிருந்தாள்.

“என்ன பூமா பண்ற?”

“ஒன்னும் இல்ல. அத்தம்மா கிட்ட இங்க வரோம்ன்னு சொல்லச் சொன்னேன்ல. சொன்னிங்களா அத்தான்?”

“சொல்லிட்டேன் பூமா. வரேன்னு சொன்னாங்க.”

இவர்கள் சாப்பிடும் இடத்தில் அமர்ந்து அவர்கள் வருகைக்காய் காத்திருந்தனர்.

சில நிமிடங்களுக்கு பின் கோதையின் கண்கள் ஒருவரின் கரங்களால் மறைக்கப்பட, அவள் சிரித்துக்கொண்டே.,”வது மா.. முன்னாடி வாங்க.”,என்றாள்.

“வாவ்… அண்ணி நீங்க கிரேட். எப்படி நான் தான்னு கண்டுபிடிச்சிங்க?” என்றபடி அவளுக்கு முன்னால் இருந்த இருக்கைக்கு வந்தாள் வது என்று அனைவராலும் அழைக்கப்படும் வைதீஸ்வரி ஆதியின் தங்கை.

“என்னை யாருக்கு இங்க தெரியும் உன் அண்ணாவை தவிர? உனக்கும் அத்தம்மாக்கும் தான். அவங்க கண்டிப்பா என் கண்ணெலாம் மூடி விளையாட மாட்டாங்க. அப்போ பாக்கி நீ மட்டும் தானே! ” என்று நாக்கை துருத்திக் காட்டினாள்.

“போங்க அண்ணி.”என்று பொய் கோபம் கொள்ள,

“சரி சரி அண்ணி உன் கோபத்தையெல்லாம் சும்மா ‘உஸ்’ ன்னு விரட்டி விடவா?”

“அதெப்படி? நான் கோவமா இருக்கேன் அதெல்லாம் சமாதானம் ஆக மாட்டேன்.” என்று கெத்து காட்டினாள் வது.

“அப்படியா?? அப்போ பர்பிள் கலர் டாப்ஸ் வாங்கித் தந்தாலும் கோபம் போகாதா? சரி அத்தான் இந்த டாப்ஸ் வேண்டாம்னு கடையிலேயே திருப்பிக் குடுத்திடலாம்.”

“ஐயோ என் பெவோரிட் பர்பிள் டாப்ஸ்…” என்று அவள் கையிலிருந்த டாப்ஸை ஆசையாய் வாங்கி கொண்டாள் வது.

“இதுக்கு தான் அந்த டாப்ஸ தனியா எடுத்து வச்சியா?”- ஆதி

“ஆமா அத்தான்”, என்றவள் அவளுக்காக எடுத்து வைத்த சுடி, டாப்ஸ்களை அவளிடம் கொடுத்தாள்.

“எங்க என் அத்தம்மா?” என்று பொதுவாய் கேட்க

“அடடே என் மருமகளுக்கு நான் ரொம்ப சீக்கிரம் ஞாபகத்துல வந்துட்டேனே! நாத்தனாரைப் பார்த்ததும் என்னையெல்லாம் உனக்கு கண் தெரிஞ்சுதா?” என்றபடி அவளைப் போலவே அட்டகாசமாய் வந்தார் அன்னபூர்ணேஸ்வரி.

“அத்தம்மா!” என்று அவரைக் கட்டி கொண்டவள்,

“என் மேல கோவமா? வது விளையாடவும் உங்களை நான் கவனிக்கல. அதுக்காக மறந்துடுவேனா?”என்று செல்லம் கொஞ்சிக் கொண்டாள்.

அவருக்காக எடுத்து வைத்த புடவைகளைக் கொடுத்தவள் மாமனாரை விசாரிக்க,

“அவர் எங்க மா? பாதி நாள் காண்ட்ராக்ட் விஷயமா வெளியூர் போய்டுறாரு. முன்னாடி ஊட்டில எஸ்டேட்டை பார்க்க அடிக்கடி வருவாரு. இப்போ ஆதி பாத்துக்கறதால அவர் அதிகம் இங்க வர்றதே இல்ல. வந்தாலும் இரண்டு நாள் தங்கிட்டு ஊட்டிக்கு போய்டுவாரு.”

அவர் கவலையாகச் சொல்லிக்கொண்டிருக்க கோதை, “ஐ!” என்று குதித்தாள்.

“என்னம்மா?”, என்று கேட்டதற்கு,

“அப்போ மாமா அடிக்கடி என்னோட ஊட்டில வந்து இருப்பாரு. ஜாலி.”.

வது முறைக்க, அன்னம் சிரித்தார். ஆதி இவையனைத்தையும் புன்னகையோடு ரசித்துக்கொண்டிருந்தான்.

நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டிருக்க, டிரைவர் போன் செய்து ‘போகலாமா?’, என்றதும் தான் மணியைப் பார்த்தனர்.

கிளம்பும் நேரத்தில் வது, ” அண்ணா! புவி… அவன் உங்களை பாக்கணும், அதனால அவனும் வரேன்னு சொன்னான். அம்மா தான் இப்போ வேண்டாம் உங்க கிட்ட கேட்டுட்டு கூட்டிட்டு வரேன்னு சொல்லிட்டாங்க.”

“இப்போ வேண்டாம் டா..”

பக்கத்திலேயே கோதை இருந்தும் அவள் இதனை பற்றி ஒன்றும் கேட்டுக்கொள்ளவில்லை.

அனைவரும் விடைபெற்றுக் கிளம்ப ஆதி கோதையுடன் காரில் ஊட்டி நோக்கிப் பயணித்தான்.

அவன் தோளில் சாய்ந்திருந்த கோதையை நிமிர்த்தி,”வது கடைசியா என்கிட்ட பேசினாளே நீ அது என்னன்னு கேக்கவே இல்லையே?”

“நான் ஏன் அத்தான் கேக்கணும்? எனக்கு சொல்ல வேண்டிய விஷயம்னு உங்களுக்கு தோணினா நீங்களே சொல்ல போறீங்க. அதுவும் இல்லாம உங்களுக்கு தெரியாததா அத்தான்? நீங்க எது செஞ்சாலும் சரியா தான் இருக்கும். எனக்கு உங்க மேல முழு நம்பிக்கையும் காதலும் இருக்கும் போது கேள்விகளுக்கு இடமே இல்லை அத்தான். இனிமே என்கிட்ட இப்படி எல்லாம் கேக்க கூடாது சரியா?”, என்று அவன் சிகை கலைத்து அவள் சொன்ன விதத்தில் ஆதி கரைந்து போனான்.

“ஏன் பூமா உனக்கு என்னை பிடிக்கும்.. “

“இதென்ன அத்தான் கேள்வி. பிடிக்க காரணம் வேணுமா என்ன?”

“எப்படி நீ என்னை இவ்வளவு நம்புற??”

“நீங்க என்னை நம்பினதை விடவா அத்தான்?” என்று மரத்த குரலில் கோதை கேட்க அவளை நெஞ்சோடு அணைத்து கொண்டான்.

“அதுக்காக தான் என்னை நம்புறியா?” என்று அவன் கேட்ட குரலில் பொருள்விளங்கா உணர்வு இருந்தது.

‘என்ன சொல்லுவாளோ?’, என்று அவன் அவள் பதிலுக்காகக் காத்திருந்தான்..

அவள் குரலை இயல்பாகிக் கொண்டு “உங்களுக்கு என்னை பார்த்தா அப்படி தோணுதா என்ன? அத்தான் நான் உங்களை உயிருக்கும் மேலா நேசிக்க ஆரம்பிச்சு வருஷம் ஆச்சு.. இந்த நிகழ்வு நேத்து தானே நடந்தது? அதுக்கு முன்னாடி நான் உங்களை நம்பாமலா இருந்தேன்? இல்லயே! அந்த நிகழ்வுக்கு அப்பறம் அது அதிகமா ஆகிருக்கு… அது தான் உண்மை.  உங்க மனசு என்கிட்ட இருக்கு. அது கஷ்டப்படுற மாதிரி நான் என்னைக்கும் நடக்க மாட்டேன்.”

அவளின் விளக்கத்தால் ஆதியின் அணைப்பு இன்னும் இறுகியது. அதில் அவனுடைய பூமா காதலை மட்டுமே உணர்ந்தாள்.



5 thoughts on “Amudham 19

  1. இவங்க ரெண்டு பேருக்குள்ளேயும் நல்ல புரிதலும், நேசமும் இருக்குது.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!