“The way they leave tells you everything.”

அமுதம் 16
ஆரம்பத்தில் முகிலனை கோதை யாரோ என்று நினைத்தது அவனை பெரிதாக பாதிக்கவில்லை. ஆதியை அத்தான் என்று கோதை அழைத்ததும் அவனுக்கு சிரிப்பு தான் வந்தது. ஆனால் அதன் பின் அவள் தன்னை, தன் தோற்றத்தை வர்ணித்த விதம் அவனை எரிச்சலடையச் செய்தது.. இருந்தும் அவளுக்கு நம் தோற்றம் பிடிக்கவில்லை. ‘பட்டிக்காடு’ அவள் என்றே அவள் பேச்சுக்களை ஒதுக்கிவிட்டான். ஆனால் தெருவின் வாண்டுகளும் அதே சொல்ல அவள் மீது தணிந்திருந்த எரிச்சல் மீண்டும் எழுந்தது.
அதன் பின்னும் அவள் பேச்சுக்கு அவள் மன்னிப்பு கேட்காததும், ஆதியிடம் அவள் நெருக்கம் காட்டி தன்னை தவிர்த்ததும் அவள் மீது சிறு கோபம் துளிர்க்கச் செய்தது. அவளை சீண்டிப்பார்க்க இவன் நினைக்க, குடும்பமே அவளுக்கு சார்பாக பேசவும் கோபம் தீயாக எரிந்தது. தன்னை ஒரு பொருட்டாக மதிக்காதவள் ஆதிக்குப் பார்த்துப் பார்த்து செய்ததும் , ஆதி இவன் வீட்டில் சலுகைகள் அனுபவிப்பதும் கோதையால் தான் என்ற எண்ணம் மேலோங்கியது.
தாத்தாவின் அன்பை ஆதியோடு பகிர்ந்துகொள்ள இடம் தராத மனதோடு அவன் ஆதியை பேச அதற்கு கோதை அவனுக்காய் வக்காலத்து வாங்கியதும் அவளின் மீதான கோபம் வெறிகொண்டு அவளை அவனோடு இணைத்து பேச வைத்தது. அவள் பேசாமல் விட்டிருந்தாலும் அதன் பின் அவள் பக்கம் திரும்பியிருக்க மாட்டான். ஆனால் அவள் அவனை அறைந்தது அவன் ஆண்மையை சீண்டி விட்டது.
மீனாட்சி அவர் மகள் ஆதியோடு பழகினாலும் அவளை நம்புவதும் அவளுக்கு ஆதரவாய் இருப்பதும் அவனின் கோபத்தீயைக் கொழுந்து விட்டு எரிய வைத்தது.. அவளின் மீதான கோவத்தை அவன் அருணா மீது காட்ட அதற்கும் குடும்பம் பெண்கள் பக்கமே துணை நிற்க, அவன் கோவம் மொத்த குடும்பத்தின் மீதும் வன்மமாய் மாறியது.
‘யாரை தலையில் தூக்கி வைத்து ஆடுகிறீர்களோ அவளை நீங்களே வெறுக்கும் படி செய்வேன், யாரை அவள் அன்னை அவ்வளவு நம்பினாளோ அவள் நம்பிக்கையை உடைத்து அவளை கதற வைப்பேன், எந்த குடும்பம் அவளுக்கு ஆதரவு தருகிறதோ அந்த குடும்பத்திலிருந்து அவளை பிரித்து தனிமைப்படுத்தி வேதனைப்படுத்துவேன்’, என்று தன் வன்மத்தை விளைவுகள் தெரியாமல் அழகான குருவிக்கூடாய் இருக்கும் தன் குடும்பத்தையே கலைக்க முடிவு செய்தான்.
வேளை பார்த்துக் காத்திருந்தான். என்ன முயன்றும் கோதையை அவன் புறம் திருப்ப முடியவில்லை. ஆறு மாதம் போனதே தவிர அவன் திட்டத்தை நிறைவேற்ற வழி தெரியவில்லை. கோதை முகிலன் என்றொருவன் அந்த வீட்டில் இருப்பதாகவே நினைக்காததுபோல் நடந்துகொள்ள, இனியும் காத்திருக்க கூடாது என்று புதிய திட்டம் வகுத்தான். அதன் முதல் முயற்சி அவளிடம் நட்பு பாராட்டுவது. அன்று வேண்டுமென்றே அவளின் வண்டியை ரிப்பேராக்கி அவளை தன்னுடன் வரும் படி செய்தான். பயணத்தின்போதும் அவள் பேசாதுபோக அவளிடம் அவனே நட்புக்கரம் நீட்டினான். யோசித்தாலும் அவள் அதை ஏற்றது அவனுக்கு போதுமானதாக இருந்தது.
அவள் நடவடிக்கைகளை கவனித்தபோது அவள் படிப்பை வெறியோடு படிப்பதும், அப்போது சுற்றுப்புறம் மறந்து இருப்பதும் அவனுக்கு வாய்ப்பளிக்கும் என்றெண்ணினான். அவள் தினமும் கல்லூரி முடிந்ததும் தன் நண்பர்க்கூட்டதுடன் நேரம் செலவழித்த பின் தன் தெரு வாண்டுகளுடன் பார்க்கில் விளையாடுவதை கண்டான். எதார்த்தமாய் அவளை பின்தொடர்ந்து வீட்டுக்கு வர, அவளின் பின் இவன் வருவதை குறுகுறுவென்று பார்த்த காமாட்சி அவனின் முழு திட்டத்திற்கு நம்பிக்கை சேர்த்தார்.
‘ஆக நாம் அவள் பின்னால் அலைந்தாலே கொஞ்சம் அவள் பெயரைக் கெடுக்கலாம். இன்னும் முயன்றால்…’, என்று குரூரமாக நினைத்து, தினமும் அவள் செல்லும் பூங்காவிற்கு அவள் வந்ததும் சென்று அவள் கிளம்பும்போது போதிய இடைவேளை விட்டு தொடர்ந்து வீட்டு வாயிலில் அவளோடு இணைந்து வருவது போல மாயத்தோற்றத்தை உருவாக்கினான். நான்கு நாட்கள் இதை கவனித்த காமாட்சி மீனாட்சியிடம் சொல்ல, முதலில் இதை பெரிதாக எடுக்காத மீனாட்சிக்கு மகளின் புன்னகை முகமும், வெட்கச்சிவப்பும் முதல் உறுத்தலை விதைத்தது.
அவள் பூங்காவிலிருந்து திரும்பும் வழியில் ஆதியுடன் போனை ஹெட்செட் போட்டு பேசியபடி வருவாள். அதனால் சிவந்த அவள் கன்னங்கள், முகிலன் பின்னால் வருவதால் வந்தது என்று மீனாட்சி நினைக்கத் தொடங்கினார்.
அவரைப்பொருத்தவரை காதல் தவறில்லை, தன் அண்ணன் மகன் தானே என்று எதார்த்தமாய் எடுத்த மீனாட்சி எதற்கும் இருக்கட்டும் என்று கல்லூரியில் இருந்து அவள் வீடு வரும் வரை அவளை ஒருநாள் கண்காணித்தார். அன்றும் முகிலன் வரவும் இவர்கள் கண்ணில் படவேண்டாம் என்று எதிரில் இருந்த கடையில் காத்திருந்தார். கோதை வர அவளை தொடர்ந்து முகிலன் வர, அவள் காதில் இருந்த ஹெட்செட்டில் ஆதியோடு பேச அவள் முகிலனோடு பேசுவதாகவே மீனாட்சி கண்களுக்கு பட்டது. சரி காதல் தான் என்றே நினைத்தவர்,முதலில் முகிலனிடம் தெளிவு பெற விரும்பினார். ஆனால் அதை சாதகமாக்கினான் முகிலன்.
“நாங்க காதலிக்கல அத்தை, அவளுக்கு யு.எஸ் சில் படிக்கணும், எனக்கும் இங்க பிசினஸ் செட் ஆகலை. அதான் என்னோடு அங்க வந்திடறேன்னு சொல்றா.”
“அப்பறம் ஏன் இப்படி நெருக்கமா பழகணும்?”, என்ற மீனாட்சியின் கேள்விக்கு
“எங்கள் வயதில் இது சகஜம். இதெல்லாம் அவ கிட்ட போய் கேக்காத்திங்க அத்தை நீங்க அவளை ரொம்ப நம்புறதா நெனச்சுட்டு இருக்கா “ என்று அவன் அவரின் நம்பகத்தன்மையைக் குறி வைத்து அவரை நிரம்பவே குழப்பி விட்டான்.
அவரை குழப்பிவிட்ட மகிழ்ச்சியில் இருந்தவனுக்கு அன்று அவர்களின் உரையாடல் காதில் விழ இன்னும் குஷியானான்.
மீனாட்சி முகிலனின் பேச்சால் மகளிடம் நேரடியாக கேட்க தயங்கினார். சரி சுற்றி வளைத்து விசாரிப்போம் என்ற முடிவுடன்,
“கோதை இன்னிக்கு ஏதோ வேலை விஷயமாக இடத்தரகர் வந்தாரு. நீ தான் காபிஷாப் வைக்கணும்னு சொன்னல்ல, அவர்கிட்ட சொல்லி இடம் பாக்க சொல்றேன். உனக்கு எந்த ஏரியால வைக்கலாம்ன்னு ஐடியா இருக்கோ சொல்லு. இப்போ சொன்னா தான் நாலு மாசத்துல நல்ல இடமா அமையும்.”
கோதைக்கு உள்ளே உதறலெடுத்தது, அவள் ஆதியை திருமணம் செய்து அவனோடு போய் அங்கே காபிஷாப் வைக்க திட்டமிட்டிருந்ததால், அம்மாவின் யோசனையை ஏற்க முடியாது போக, காரணம் சொல்ல பயந்து,
“அது எனக்கு இப்போ வேற பிளான் இருக்கு மா. நான் இப்போ இங்க காபி ஷாப் வைக்கிற ஐடியால இல்ல.” என்றாள்.
முகிலன் சொன்னது இவள் பேச்சில் ஒத்துப்போகவே, முதல் முறை மகளின் மேல் கோவம் வந்தது. இருந்தும்,
“எதுவா இருந்தாலும் சொல்லு குட்டிமா அம்மா இருக்கேன்”, என்றார்.
தான் ஆதியை காதலிக்கும் விஷயத்தைச் சொன்னால் படிப்புக்கு பங்கம் வருமோ என்று பயந்து சற்று வேகமாய்,
“எனக்கு எல்லாம் தெரியும். நான் பாத்துக்கறேன் நீங்க போங்கம்மா.”, என்று சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டாள். கோதைக்கு அதன் பின் அம்மாவிடம் பேசவே பயம் வந்தது. ஏதாவது சூழ்நிலையில் காதலை அம்மாவுக்கு சொல்லி அதனால் வேறு பிரச்னைகளோ இல்லை கேள்விகளோ முளைத்தால் படிப்பு பாதிக்கப்படும், அதனால் கொஞ்ச நாட்கள் விலகி இருக்க முடிவெடுத்தாள்.
நண்பர்களோடு சென்று தெரிந்த இடங்களில் சமையல் செய்து அசத்தினாள், நேரம் சென்று வீட்டுக்கு வந்தாள், அனைவரையும் தவிர்த்தாள்.
இது மீனாட்சியின் பார்வையில் அவள் அதிக நேரம் முகிலனுடன் சுற்றுவதாகவே தெரிந்தது. மறுபடியும் முகிலனிடம் வந்தார்.
“காதல் இல்லாமல் ஏன் சுற்ற வேண்டும்? அவளுக்கு வெளிநாட்டு படிப்புக்கு ஆசையென்றால் நானே அனுப்புவேனே அவள் ஏன் உன்னோட பழகணும்?”, என்று கேட்க அவனோ அவள் தன் மீது பிரியம் கொண்டிருப்பதாகவும் திருமணம் செய்ய விருப்பம் இல்லை. அது அவளின் எதிர்கால லட்சியத்துக்கு இடைஞ்சலாய் இருக்கும் என்று அவரின் சந்தேகத்திற்கு நீர் ஊற்றினான்.
அப்போதும் மீனாட்சி அவனை நம்பாமல் கோதையிடம் திருமணம் பற்றி பேச அவளோ, “அம்மா எனக்கு இப்போ கல்யாணமெல்லாம் வேண்டாம். நான் ஒரு லட்சியம் வச்சிருக்கேன். எனக்கு அது தான் முக்கியம் நான் அதை நோக்கி போகிறேன். எனக்கு இடைஞ்சலாய் ஏதும் பேசாதீங்க”,என்று ஆதியை மனதில் வைத்து பேச.. மீனாட்சிக்கு ‘ஐயோ’ என்று இருந்தது.
அவர் அதை லட்சுமியிடம் பகிராமல் காமாட்சியிடம் பகிர்ந்து கொண்டார்.
ஆயிரம் இருந்தாலும் பெண்களுக்கு பிறந்தவீட்டு உறவென்பது உடன்பிறந்தோர் தான், வீட்டிற்கு வாழ வந்த பெண்கள் வீட்டினராய் இருந்தாலும் இது போன்ற சமயங்களில் அவர்களை ஒதுக்குவது சமூகத்தில் என்றும் இருக்கும் வழக்கம் தான். மீனாட்சியும் அதற்கு விதிவிலக்கல்ல.
காமாட்சி அவர் வாழ்வில் ஏற்பட்ட வலியால் அவ்வளவு எளிதில் யாரையும் நம்பாதவர். அவரிடம் நம்பிக்கை சம்மந்தமாய் கேட்டால் அவர் நம்பிக்கையின்மையையே பதிலாக கொடுத்தார்.
முகிலனும் அடிக்கடி வண்டியை பழுதுபடுத்தி அவளை தன்னுடன் கூடிப்போய் கூட்டிவந்தான். அவளும் படிப்பின் மேல் இருந்த கவனத்தில் இதையெல்லாம் பெரிதாக கருதவில்லை.
இவ்வளவு தூரம் அவளை பற்றி கிளப்பிவிட்டும் தாயும் மகளும் அடித்துக்கொள்ளாதது அவனுக்கு கடுப்பை கொடுக்க, அவள் பெண்மையை கேள்விக்குறியாக்க நினைத்தான். ஆனால் அவனுக்கு அவள் பெண்மையோடு விளையாட விருப்பம் இல்லை. தன்னை அசிங்கப்படுத்தியவளை அவளை தாங்கியவர்கள் முன்னால் அசிங்கப்படுத்தத்தான் நினைத்தான் அன்றி வேறு விதமான நோக்கம் அவனுக்கு இல்லை.
மிகவும் குழம்பிய மீனாட்சியை இன்னும் குழப்பிவிட நினைத்த முகிலன் கண்களில் பட்டது அவர் இரவில் தண்ணீர் குடிக்க அறையிலிருந்து வருவது தான். அவன் கண்கள் பிரகாசமாக மாறின.
அந்த நேரத்தை இரண்டு நாட்கள் கவனமாய் குறித்துக்கொண்டவன் மூன்றாம் நாள் அவர் வருவதற்கு முன்னால் கோதை அறை வாசலில் நின்று கொண்டான். அவர்கள் வீட்டில் பிள்ளைகள் அறையை பூட்டிக்கொண்டு உறங்கக்கூடாது என்பது எழுத்தப்படாத விதி.
அதனால், சத்தம் வராமல் அவள் அறைக்கதவை திறந்தவன். மீனாட்சி வரும் அரவம் கேட்டதும் அறையிலிருந்து வெளியில் வருபவன் போல கதவைச் சாற்றிச் சென்றான். முதல் இரு நாட்கள் இதை நினைத்து கவலைப்பட்ட மீனாட்சி அடுத்தநாள் அவன் சென்றதும் கதவை திறக்க முயற்சிக்க அது உள்ளே தாழிட்டு இருந்தது. அவள் ஏன் அறையை பூட்டியிருப்பாள் என்று யோசிக்காத மீனாட்சி அறைக்கதவைத் தட்ட நல்ல தூக்கத்தில் ஆதியோடு டூயட் பாடிய கோதை அதை கலைத்து எழுந்து வந்தபோதும் அவள் முகத்தில் அந்த கனவால் செவ்வானமாயிருந்த வெட்கத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. மீனாட்சி நொந்து போனார்.
உண்மையில் நடுஇரவில் தன் அறைக்கு வெளியே காலடியோசை கேட்பதால் பயந்து அவள் கதவடைத்துத் தூங்கினாள்.
இப்போதும் காமாட்சியிடம் வந்தவருக்கு அவர் மகளிடம் கேட்டுவிடு என்ற நல்ல அறிவுரையை காமாட்சி வழங்க வில்லை.
அதற்கு பின் மகளிடம் மறைமுகமாக மீனாட்சி முகிலனை ‘உன் முகிலன்’ என்று விளிக்க அப்போதும் பேதையவள் விழித்துக்கொள்ளவில்லை.
அன்று அவன் அறைக்கு சென்று பார்த்த கோதைக்கு குப்புற கவிழ்ந்த முகிலன் தான் கண்ணில் பட்டான். அவனை எழுப்பும் வழிவகை தெரியாமல் பக்கத்தில் இருந்த தலையணையால் அடிக்க இந்த சந்தர்ப்பதை பயன்படுத்த நினைத்த முகிலன் முடியும் வரை தாமதித்தான். கடைசியாய் அவள் அவன் மேல் தண்ணீர் ஊற்ற வர அதை அவள் மேல் தட்டி விட்டான். அவள் தன் ஷாலையும் தலையையும் பார்த்தவள், தலைமுடியை பற்றி இருந்த க்ளிப்பை விடுவித்து நீரை உதறி பின்பு ஷாலை சரி செய்தபடி வெளியேறினாள். இது முகிலனே எதிர்பார்க்காத அளவு தாக்கத்தை மீனாட்சியிடம் ஏற்படுத்தி இருந்தது. இதை அறை வாசலிலேயே கணித்த முகிலன் மீனாட்சியை நோக்கி ஏளனமாய் பார்த்துவிட்டு சென்றான்.
மீனாட்சி அவனை சந்தித்து,”இதென்ன நடக்குது?”, என்று கேட்க அவனோ,” அவள் என் கம்பெனியை என்ஜாய் பண்றா அத்தை”, என்று அவள் பெண்மையை அசிங்கப்படுத்த மீனாட்சி துடித்துடித்துப்போனார்.
அவர் துடிப்பதை குரூரமாக ரசித்தவன் பாவம் போல முகம் வைத்து, “உங்களுக்காக வேணும்னா நான் அவளை கல்யாணம் பண்ணிக்கறேன் அத்தை” என்று நயமாய் பேசி அவர் மனதில் இவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் எண்ணத்தை தோற்றுவித்தான்.
அவனைப் பொறுத்தவரை அவளை மணவறை வரை வரவைத்து அவளை கேவலப்படுத்த வேண்டும். ஆனாலும் அது தன் குடும்பத்தாருக்கு மட்டும் தெரிந்து வேதனைப்பட்டால் போதும். அதன் பின் அவளை வேண்டாம் என்று சொல்லி அவன் அமெரிக்கா கிளம்பி விடுவது, இவர்கள் யாருக்கோ அவளை மணமுடித்துக்கொடுக்கட்டும். அதை பற்றி அவனுக்கு கவலை இல்லை. தன்னை அடித்தற்காக, கேவலமாக நினைத்தற்காக பழி வாங்க வேண்டும் அவ்வளவே… அதை தாண்டி அப்போழுது அவன் சிந்திக்கவில்லை.
ஆனால் அவனே நினைக்காதது அதன் பின்னால் நடந்தது. அவன் திருமண ஏற்பாட்டை ரகசியமாக வைக்க மீனாட்சியிடம் என்ன காரணம் சொல்லலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த வேளையில் அவன் செவிகளை எட்டியது கோதையும் ஆதியும் தொலைபேசியில் பேசிய காதல் வரிகள். இது அவன் வன்மத்திற்கு வலு சேர்க்க, கோதையை மணத்து அமெரிக்கா அழைத்துப்போய் அவளை துன்புறுத்தத் திட்டமிட்டான்.
மீனாட்சியிடம் “எனக்கும் கோதைக்கும் கல்யாணம்ன்னு சொன்னா எங்க அண்ணனே நிறுத்திடுவான் அத்தை. எனக்கு ஒன்னும் இல்லை. உங்க பொண்ணு வாழ்க்கை தான். எனக்கு அவளை கல்யாணம் பண்ண வேண்டிய அவசியமே இல்லை. உங்க முகத்துக்காக தான் பாக்கறேன்”, என்று அவரை ஏற்றி விட்டான்.
உடைந்துபோயிருந்த மீனாட்சி கொழுகொம்பாய் பற்றியது காமாட்சியை.
அவரோ,”அண்ணனிடம் பேசு. யாருக்கும் தெரியாமல் திருமணம் முடித்து விடு. அதுக்கப்பறம் அகிலனால ஒன்னும் பண்ண முடியாது. ‘கெட்டுப்போன பொண்ணை யார் கட்டுவா?’ “, என்று தன் வாழ்வை எந்த வசனத்தால் கெடுத்துக்கொண்டாரோ அதே வசனத்தால் அவ்வீட்டின் நிம்மதியைப் பறிக்கும் செயலுக்கு வித்திட்டார்.
மீனாட்சியும் சுந்தர், கதிர், இந்திரனை முதலில் அழைத்து விஷயத்தைச் சொல்ல, ஒருவரும் நம்பவில்லை. “நானே பார்த்தேன்னு சொல்றேன் என்மேல உங்களுக்கு நம்பிக்கையில்லையா?” என்ற வினாவிற்கு அவர்களிடம் பதில் இல்லாமல் போக ஒத்துக்கொண்டனர்.
ஆனால் தமயந்தி, லட்சுமி இருவருக்கும் தேவைக்கு தக்க தகவலை மட்டும் சொல்லி. பிள்ளைகளுக்கு தெரிய வேண்டாம் என்றனர்.
அவர்கள் கோதையிடம் இதை பற்றி பேச முடிவெடுத்தபோது, முகிலன் இந்த திருமணம் கோதைக்கு பிடிக்காது என்றும் தானே அவளை சம்மதிக்க வைப்பதாகவும் வேஷமிட்டான்.
“இனிமே அவனோட தானே வாழப்போறா அவனே கேட்டு சொல்லட்டும்”, என்று விடேற்றியாக சென்றனர் பெரியவர்கள்.
முகிலனுக்கு குத்தாட்டம் போடும் அளவுக்கு மகிழ்ச்சி. கோதையிடம் வாயே திறவாமல், “உடனே யு.எஸ் அனுப்பறதுனா அவளுக்கு சம்மதமாம். அவளை கல்யாணம் முடியும் வரை யாரும் எதுவும் சொல்லக்கூடாதுன்னு சொல்றா.” என்று அவன் விட்ட புழுகில் மனம் நொந்தவர்கள், அவள் கல்லூரியின் இறுதி நாளில் திருமண ஏற்பாட்டை செய்துவிட்டு அமைதி காத்தனர்.
நடந்த அனைத்தையும் முகிலனும், மீனாட்சியும் காட்சியின் பின் காட்சியாய் சொல்லச் சொல்ல இளையவர்கள் இறுகினார்கள். முதியவர் தளர்ந்தார்.
முகிலன் முன் வந்த ஷியாம் “உன்னை நான் அண்ணனாகத் தான் இத்தனை நாள் பார்த்தேன். நம்ம வீட்டு மனுஷங்களை உயிரோடு கொல்லத் துணிஞ்ச உன்னை பார்க்கவே அருவருப்பாய் இருக்கு”, என்று நகர்ந்துவிட்டான்.
சுஜியும் வெண்மதியும் அவன் கை எட்டாத் தொலைவில் நின்று, “நாங்க உன்னை அவமானப்படுத்தியிருந்தாலும் நீ இதையே தான் எங்களுக்கு செய்திருப்பியா?”,என்று வெம்பிப் போய் கேட்டனர்.
கதிரும் சுந்தரும் அடித்த அடியில் முகிலன் குற்றுயிரும் குலயுயிருமாகக் கிடந்தான். இந்திரன் அவர்களை தடுக்கவில்லை, தமயந்தி விழிநீருடன் வெறித்து கொண்டிருந்தார்.
இவர்கள் யாரும் செய்யாததை அருணா செய்தாள்.
“போதுமா என் கோதை பரிசுத்தமானவள். அவளை கதற வச்சீங்களே இப்போ நல்லா எல்லாரும் கதறுங்க. ஆனா ஒன்னை மறந்துடாதீங்க! இனிமே நான் இந்த வீட்டு மருமகள் இல்லை. சொந்த அத்தை மகளையே இவன் இவ்வளவு பழி வாங்கி இருக்கானே நாளைக்கு என்னை இவன் என்னவும் செய்வான். இனிமே நான் இந்த வீட்டில் இருக்க மாட்டேன்”, என்று மாடியேறி தன் உடமைகளை எடுக்கக் கிளம்பினாள்.
இவள் கீழே வர, ஷியாம், சுஜி, வெண்மதி மூவரும் தத்தமது பையுடன் அருணாவுடன் இணைந்தனர். அகிலன் அருணாவை கேள்வியாய் பார்த்தான். அவள் அர்த்தமாய் சிரித்தாள். ஷியாம் அகிலனிடம்,
“நீ வரலையா அண்ணா? நாங்க அண்ணி கூட போகப்போறோம்.”.
அவன் குறுநகையுடன்,” என் மனைவி எனக்கும் சேர்த்து தான் டா எடுத்துவந்திருப்பா. எங்களோட எண்ணம் என்னைக்கும் ஒன்று தான். நான் அருணா விஷயத்திலேயே இவங்க எல்லாருக்கும் சொன்னேன். அப்படி இருந்தும் கோதை விஷயத்தை என்னிடமும் சொல்லாமல், இவர்களாகவும் விசாரிக்காமல் என் கோதையை வதைச்சுட்டாங்க. இனி எனக்கும் இந்த வீட்டில் வேலை இல்லை. வாங்க எல்லாரும் நம்ம தோட்டத்து வீட்டுக்கு போகலாம். அது நம்ம தாத்தா சொத்து. அவர் நம்மளை அங்க தங்க வேண்டாம்ன்னு சொல்ல மாட்டாரு. நானும் அருணாவும் படிச்ச படிப்புக்கு வேலை பார்த்து உங்க மூணு பேரையும் படிக்க வைக்கிறோம். எனக்கு என் தம்பி தங்கைகள் தான் முக்கியம். நடத்தயை சந்தேகப்படும் பெற்றோர் இல்லை.”
திட்டவட்டமாகச் சொல்லிவிட்டு அகிலன் வர, சின்னவர்கள் அமைதியாய் வாசலை நோக்கி செல்ல, “நில்லுங்கடா”, என்று தாத்தா அழைத்தார்.
“தாத்தா இதுக்கு மேல இந்த வீட்ல இவங்களோட இருக்க முடியாது தாத்தா. நாளைக்கே எங்க யாரை வேணும்னாலும் இவங்க சந்தேகப்படுவாங்க. கோதையவே இவ்வளவு பேசின இவங்களுக்கு நாங்களெல்லாம் எம்மாத்திரம்?”, விரக்தியாய் சொன்னாள் வெண்மதி, நிலவு போல் ஜொலிக்கும் அவள் முகம் இன்று ஒளியிழந்து இருந்தது.
அவளை ஆதரவாய் பற்றிய ஷ்யாம்,
“நாம போகலாம் டா. அண்ணனுங்க நாங்க இருக்கோம். நீ கவலைப்படாத.” என்று தேற்றினான்.
ஆனால் அவளோ ” ஒரு பேச்சும் வாங்காத எனக்கே இவ்வளவு வலிக்கிது, உங்க இத்தனை பேரோட ஆறுதல் தேவப்படுதே கோதையை நினைச்சு பாருங்க. அவ அவ்வளவு பேச்சு கேட்டுட்டு இப்போ என்ன பாடு படுறாளோ?” என்று தன் அத்தை மகளுக்காய் கண்ணீர் விட்டாள் வெண்மதி.
“அவளைப் பத்தி கவலையே பட வேண்டாம். அவளை ஈஸ்வரன் நம்ம எல்லாரை விடவும் நல்லா பாத்துக்குவான். இப்போ நாம போவோம்”, என்று இவர்களுடன் வந்து இணைந்தனர் தாத்தாவும் பாட்டியும்.
“அப்பா எல்லாரும் எங்களை விட்டு எங்க போறீங்க?”
“இதுக்குமேலயும் இந்த வீட்ல இருக்க எங்களுக்கு என்ன கிறுக்கா? போங்கடா…”, என்று தன் பேரன்கள் பேத்திகளை அழைத்துக்கொண்டு தோட்டத்து வீட்டிற்கு செல்ல முடிவெடுத்தார் தாத்தா ஜோதிலிங்கம்.
அவர் பிள்ளைகளின் எந்த சமாதானமும் அவரிடமோ இல்லை அவர்கள் பெற்ற பிள்ளைகளிடமோ எடுபடவில்லை.
எல்லோர் நெஞ்சிலும் கோதையின் வலியே நின்றது. ஆயிரம் சதி முகிலன் செய்திருந்தாலும் தீர விசாரிக்காத தங்கள் பெற்றோர்களை எவ்வித விசாரணையும் இல்லாமல் தள்ளி வைத்துவிட்டுச் சென்றனர்.
ஒரு பிள்ளையை சந்தேகப்பட்டதன் விளைவாய் அனைத்து பிள்ளைகளின் அன்பையும் இழந்து அந்த மூன்று பெற்றோரும் அழுதனர்.
வாசலை கடக்க இருந்த தாத்தா காமாட்சியை நோக்கி, “இப்ப கூட உன் தப்பு உனக்கு புரியலைன்னா நீ எல்லாம் என்ன ஜென்மம்? உன் வாழ்க்கையை தான் சரியா முடிவெடுக்காம சந்தேகப்பட்டு அழிச்சிட்ட. ஆதி சரியாத்தான் சொன்னான். எத்தனை பேரைத்தான் சந்தேகப்பட்டே நீங்க உயிரோட கொல்லுவிங்க? நாங்களே உங்களுக்கு கடைசி பலியா இருக்கட்டும்.”, என்று வெளியேறினார்.
அவர் சொன்னதன் வீரியம் புரிந்த பெரியவர்கள் அதிர, இதென்ன புதிர் என்று சின்னவர்கள் குழம்ப, அழகான குருவிக்கூடு ஒருவனின் வன்மத்தால் கலைந்து போனது.
Theera visaarikkaama pannittu eppo azhuthu yenna use makkaley…. nice update 👍
thank u akka