Amudham 14

“Family betrayal may steal your innocence, but it gifts you wisdom in return.”

Amudham 11

அமுதம் 14

தன் வீட்டின் அலங்காரத்திலும் தாயின் அணுகுமுறையிலுமே துவண்டிருந்த கோதையிடம் ,அவளுக்கு திருமணம் என்று எப்படி சொல்வது என்று நொந்துபோனாள் சுபா. ஆனாலும் சொல்லித்தான் தீர வேண்டும்..

அனைவரும் கோதையை சமாதானம் செய்துகொண்டிருக்க, சுபா பொதுவாய், “இங்க என்ன விஷேசம்ன்னு கேட்டுட்டேன்”, என்றாள்.

“சொல்லு டீ என்னவாம் “, என்று கிருத்தி கேட்க..

கண்களில் வழியும் நீருடன்,” இவளுக்கு கல்யாணமாம் டீ.. உடனே ஆதி அண்ணாக்கு போன் பண்ணு பூ.. எனக்கு பயம்மா இருக்கு.”

ஒரு நிமிடம் பூங்கோதைக்கு உலகமே சுழன்றது. ஆளாளுக்கு ஏதேதோ நினைக்க, ஒரு நிமிடம் பிரவீனின் முகம் பிரகாசித்தது.

“ஏய் ஏன் நெகட்டிவா நினைக்கணும். ஒரு வேளை இவ ஆதி அண்ணாவை லவ் பண்ற விஷயம் தெரிஞ்சு, அவங்களுக்கு பிடிக்கலன்னாலும் இவளுக்காக கல்யாணம் ஏற்பாடு பன்னிருக்கலாம் இல்லையா?”

‘ஓஹ்.. அப்படியும் இருக்குமோ?’, என்று அனைவரும் யோசிக்க. கோதைக்கு அது சரியானதாகப் படவில்லை. அகிலனுக்கு அழைத்துப் பார்த்தால் அவன் எடுக்கவில்லை. இனிமேல் பொறுக்க முடியாது என்று கோதை தன் வீட்டினரிடம் நேருக்கு நேர் கேட்டுவிடும் நோக்கில் ஹாலுக்கு விரைந்தாள்.

“ஏய் இரு டீ.”, தோழர்கள் அவளை அழைத்தபடி பின்தொடர்ந்து சென்றனர்.

ஹாலில் இந்திரனும், கதிரும் ஏதோ பேசிக்கொண்டிருக்க, சாப்பிடும் மேசையில் லட்சுமியும், மீனாட்சியும் இருந்தனர். சுந்தர் திவனில் அமர்ந்து ஏதோ யோசனையில் இருந்தார்.  நடு ஹாலில் நின்றவள், ” இந்த வீட்ல என்ன நடக்குது? எனக்கு கல்யாணம்ன்னு சுபா கிட்ட சொன்னிங்களாம். இதெல்லாம் என்ன? எனக்கு புரியல…”

சுந்தர், அவளுக்கு எதிரில் வந்தவர், “எங்களுக்கும் தான் புரியல , நீ ஏன் இப்படி புதுசா ஒரு விஷயத்தை கேள்விப்பட்டது போல துள்ளுறன்னு!”

“என்ன?? நானா உங்க கிட்ட இப்போ கல்யாணம் பண்ணிவைங்கன்னு கேட்டேன்? அப்பா.. சரி விடுங்க.. யார் மாப்பிள்ளை? என்கிட்ட ஏன் ஒரு வார்த்தை கூட கேட்கலை!”

“உனக்கு பைத்தியமா?” கேட்டது இந்திரன்.

“பெரியமாமா… எனக்கு நிஜமாவே தெரியல மாமா. நான் ஒரு வருஷமா படிப்பு, சமையல்ன்னு இருந்துட்டேன். வேற எதுமே எனக்கு தெரியாது மாமா.”

“இதை எவனாவது ஏமாந்தவன் இருப்பான் அவன் கிட்ட சொல்லு.”

“மாமா… சரி விடுங்க… யார் மாப்பிள்ளை?”, நெஞ்சில் கைவைத்து கடவுளை வேண்டி, ‘என் அத்தான் பேரை சொல்லிட்டா, இப்படியே சந்தோசமா ஓடிப்போய் ரெடியா அவருக்காக காத்திருப்பேன்.’ என்று முறையிட்டாள்..

கடவுள் வேறு வேலையில் பிஸியாக இருக்கவே, இவள் விஷயம் அவரை எட்டவில்லை போல!

“எல்லாம் நீ ஆசைப்பட்டது போல முகிலன் தான்.” தன் மகனின் பெயரைக்கூட அவருக்கு சொல்ல பிடிக்கவில்லை என்று தொனியில் இருந்தது அவர் பேச்சு.

“முகிலனா? நான் ஆசைப்பட்டேனா??” என்று தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டாள்.

“என்னடி எதுக்கு இப்போ நடிக்கிற, அதான் சீனுக்கு வராமலேயே எல்லா காரியத்தையும் உனக்கு சாதிச்சுக்க தெரிஞ்சிருக்கே! அப்பறம் இப்போ எதுக்கு இந்த ஒன்னும் தெரியாத நடிப்பு…” மீனாட்சி.

“அம்மா! எனக்கு சத்தியமா புரியலை மா. நான் முகிலனை காதலிக்கறதா உங்களுக்கு யார் சொன்னா?”

“நீ காதலிக்கறன்னு நான் எப்போ சொன்னேன்? ஆசைப்படுறன்னு தானே சொன்னோம்?”

“அம்மா புரியற மாதிரி பேசு மா. நான் ஏன் மா அவனை போய் ஆசைப்படணும்?”

“வேண்டாம் கோதை. முகிலனை உனக்கு கட்டிவைக்கிறோம். நீ அவனோட போயிடு. அப்பறம் என் கண்ணுல கூட படாத.”

“அம்மா! எனக்கு அவனை பிடிக்கவே பிடிக்காது. உனக்கே என்னை நல்லா தெரியும், இருந்தும் ஏன் ம்மா இப்படி பேசுற? எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்.”

“சீ. வாய மூடு. அவனோட சேர்ந்து எல்லா தப்பையும் பண்ணிட்டு இன்னிக்கு கல்யாணம் வேண்டாம்ன்னு கதை விடுறியா?” காட்டமாய் கேட்டார் காமாட்சி.

“சித்தி, நான் அவனோடு சரியா பேசினது கூட இல்லை சித்தி. இதென்ன என்னென்னவோ சொல்லுறீங்க! முதலில் இந்த கல்யாணத்தை நான் உங்க யார்கிட்டயும் கேட்கவே இல்லை. அப்படி இருக்கும்போது அவனை நான் ஆசைப்படறேன், கேட்டேன், தப்பு பண்ணினேன் அப்படினு நீங்க பாட்டுக்கு அடுக்கிட்டே போறீங்க! எல்லாரும் என்னை பத்தி என்ன நினைச்சிங்க?”, அவளின் கோபம் அதிகரித்துக்கொண்டே இருந்தது.

“நாங்க உன்னை ரொம்ப நல்லா தான் நினைச்சிட்டு இருந்தோம், எல்லாமே முடிஞ்சு போச்சு. யார் சொல்லிருந்தாலும் நம்பியிருக்க மாட்டேன். நானே கண்ணால பார்த்த அப்பறம் தான். எதுக்கு இந்த அசிங்கம் அப்படினு அண்ணா கிட்ட பேசி கல்யாணம் ஏற்பாடு பண்ணினேன்.”, என்றார் மீனாட்சி.

“நீ பார்த்தியா? எதை பார்த்த? என் நடத்தையை தப்பா பேசுற அளவுக்கு என்னைக்கும் நான் நடந்ததில்லை.”

“சொல்லிக்கோ நீயே! ரெண்டு நாள் முன்னாடி அவன் ரூமுக்கு போய்ட்டு ட்ரெஸ்ஸல்லாம் சரி பண்ணிட்டு, தலை கலைஞ்சதை சரி பண்ணிட்டே நீ வரல?  எனக்கு உயிர் வாழவே பிடிக்கல உன்னால.”

கோதைக்கு இடியை தலையில் இறக்கியதைப் போல இருந்தது.. இவர்களிடம் பேசிப் பயனில்லை. முடிவு செய்து பேசுபவரிடம் நாம் என்ன சொன்னாலும் எடுபடாது. அன்று அவன் அறையில் என்ன நடந்தது என்று அவளுக்கு தெரியும், இவர்களுக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் என்ன? என்று அவள் மனம் முரண்டியது.

நிமிர்ந்து நின்றாள்.

“இந்த கல்யாணம் ஒரு நாளும் நடக்காது. நான் எந்த தப்பும் பண்ணல. “

“கண்ணால பார்த்தோம்னு சொல்லுறோம் இன்னும் நீ நல்லவ வேஷம் போட்டுட்டே இருக்க?”, காமாட்சி கத்த

‘நான் தப்பு பண்ணல, எல்லாரும் வாயை மூடுங்க’, என்று கத்த வேண்டும் போல் இருந்தது கோதைக்கு.

அவள் வாய் திறக்கும் முன், “வாயை மூடுங்க”, என்ற கம்பீரக்குரலுடன் வந்தான் ஆதிலிங்கேஸ்வரன்.

அவனை பார்த்ததும் தாவத் துடித்த தன் கால்களை சிரமப்பட்டு அடக்கினாள் கோதை. ‘கண்ணெதிரே இருந்த தாயே தன் பெண்மையை சந்தேகித்த பின், வெளியூரில் இருந்து வந்திருக்கும் இவன் என்னை நம்புவானா? இவனும் என்னை நம்பாமல் போனால் நான் என்ன செய்யணும்?’ என்று நொடிநேரத்தில் தன் முழு வாழ்விற்கான தேடலை மனதிற்குள் தேடினாள் பேதையவள்.

நேராக மீனாட்சி முன் நின்றவன், “சொல்லுங்க அத்தை. உங்க பொண்ணு உங்க கிட்ட வந்து முகிலனை விரும்பறதா சொன்னாளா? இல்ல அவனோட அவ காதல் வசனம் பேசி பார்த்தீங்களா?”

“அதுக்கும் மேல ஆதி, அவனோடு அடிக்கடி காரில் வெளில போறது, நேரம் கேட்ட நேரத்தில் வீட்டுக்கு வர்றது. அதை விட அசிங்கம்.. அவனோடு ஒரே ரூம்ல பலநாள் இரவு தங்கிருக்கா(?? இது எப்போ மா??)… அன்னைக்கு  காலேஜ்க்கு கிளம்பிட்டு அவனை அழைத்து வர ரூமுக்கு போய்ட்டு எவ்வளவு நேரம் கழிச்சு ட்ரெஸ் எல்லாம் சரி பண்ணிட்டு வந்தா தெரியுமா?”

“அத்தை உண்மையிலேயே பேசுறது நீங்க தானா? பூமாவை அப்படி நினைக்க எப்படி உங்களால முடிஞ்சது? “

“சும்மா பேசாதே ஆதி.. நீ உன் பிரென்ட் கிட்டயே கேட்டுக்கோ.”

“நான் அவன் கிட்ட போய் கேட்டா, என் பூமாவை சந்தேகப்படுற மாதிரி. ஒரு நாளும் நான் அந்த தப்பை நான் பண்ணமாட்டேன். இதோ இங்க இவ்வளவு நடக்குதே நீங்க சொன்ன என் பிரென்ட் அவன் இருக்கானா பாருங்க. எப்படி இருப்பான்? இங்க இருந்தா அவன் வண்டவாளம் தெரிஞ்சிடுமே! அவனை கேக்கவேண்டிய அவசியமே இல்லை. என் பூமாவை பத்தி எனக்கு தெரியும்.”

“உன் பூமாவா? அவள் உன்னோடு கூட பழகி இருக்காளா? சீ.. இவளை போய் நல்லவள்ன்னு நெனைச்சேனே! “,காமாட்சி

ஒரு நொடி அவரை எரிப்பது போல பார்த்தவன், “தாத்தா!” என்றான் சிம்மக்குரலில்.

வந்தவர் ஒன்றுமே கேட்காமல் ” நீ கோதையை அழைச்சிட்டு போ ஈஸ்வரா.” என்றார்.

வீட்டினருக்கு அப்பாவின் கூற்று புரியவில்லை.

“அப்பா சாயங்காலம் கல்யாணம் பா.  முகிலானோட நடவடிக்கை, அவன் பேச்சு நமக்கு பிடிக்கலன்னாலும் கோதையோட எதிர்காலத்துக்காகத்தான் இந்த கல்யாணத்தை இப்போ இவ்வளவு அவசரமா பண்றோம். நீங்க என்னடான்னா அவனோட அவளை போக சொல்றிங்களே?”

“போதும் நிறுத்துங்கடா என் பேத்தி ஆசைப்பட்டது, காதலிச்சது, சேர்ந்து வாழ நெனச்சது ஈஸ்வரன் கூடத்தான். அவ எதிர்காலம் ஈஸ்வரன் தான். நீங்க வேணும்ன்னா கண்டதை சொல்லி அவளை அசிங்கப் படுத்தலாம். எனக்கு என் பேத்தியை தெரியும்!”

“அப்பா! அவ முகிலன் கூட தப்பா நடந்திருக்கா… இப்போ இவன் கூட நீங்க அனுப்பினா என்ன அர்த்தம்?”, காமாட்சி

“நீங்க சொல்றதெல்லாம் பொய்ன்னு அர்த்தம், என் பூமா எனக்கானவள் என்று அர்த்தம். ” என்று அவர் முன் கத்திய ஆதி,

தாத்தாவிடம் வந்து,” ஒருத்தர் நடத்தயை சந்தேகப்படற எண்ணம் இந்த வீட்ல இருக்கறவங்களுக்கு மாறவே மாறாதா  தாத்தா?”, என்றான் வலியுடன்.

“இன்னும் எத்தனை பேர் இவங்களோட சந்தேகத்துக்காக உயிரோட சாகணும் சொல்லுங்க தாத்தா! சொல்லுங்க…”, என்று கதறிவிட்டான்.(இது என்ன டா புதுசா சொல்றான்).

அவன் சொல்ல வருவது புரியாமல் போனாலும் அவன் தன்னை நம்பினான் என்பதே கோதைக்கு ஆறுதலாக இருந்தது.

அவன் பேச்சு அங்கிருந்தவர்களுக்கு எதைப்பற்றியது என்று தெரிந்தாலும், இவன் ஏன் அதை சொல்கிறான் என்றும், இவனுக்கு எப்படி அதெல்லாம் தெரியும் என்றே குழம்பிக்கொண்டிருந்தனர்.

அவனை நெருங்கிய கோதை அவன் தோள் தொட்டு, “அத்தான் போகலாமா? என்னை உங்களோட கூட்டிட்டு போறீங்களா?”,என்றாள் சன்னக்குரலில்..

வேகமாய் எழுந்து முகத்தை அழுந்தத் துடைத்தவன், “இரு பூமா” என்று தன் பையிலிருந்து ஒரு கவரை அவளிடம் தந்தான்.

அதில் அவளுக்காக அவன் பார்த்துப் பார்த்து வாங்கிய பட்டுப்புடவை இருந்தது.

“போய் மாத்திக்கிட்டு வா.”

அவள் சென்று இரண்டே நிமிடத்தில் உடைமாற்றி வந்தாள்.

“உன்கிட்ட இருக்கற எல்ல நகையையும் கழட்டி டேபிளில் வை.”

வைத்தாள்.  தன் கழுத்தில் இருந்த செயினை அவளுக்கு அணிவித்தான். சாமியறைக்கு சென்றான். வரும்போது மஞ்சள் கிழங்கு இணைத்த மஞ்சள் சரடுடன் திருமாங்கல்யம் அவன் கையில் அவளை பார்த்து சிரித்தது.

நொடிப்பொழுதில் அவளின் கழுத்தில் அதை பூட்டியவன், ‘இனி ஒருநாளும் உன்னை பிரியாமல் என் இமைபோல் காப்பேன்’ என்று உறுதிபூண்டன்.

அவன் திருமாங்கல்யத்தை அணிவிக்கும் போது, ‘என்னை இத்தனைக்கு பிறகும் நம்பிய என் அத்தானை சாவில் கூட பிரியமாட்டேன்.’ என்று புன்னகையுடன் அவன் அருகில் நின்றாள்.

தாத்தா பாட்டியிடம் ஆசி பெற்றனர் இருவரும்.

அவள் கைகளில் ஒரு அழுத்தம் கொடுத்த ஆதி அவளை கண்ணோடு கண் நோக்கி,” இனிமே உனக்கும் இந்த வீட்டுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல பூமா. இதை நல்லா மனசுல பதிஞ்சுக்கோ. இந்த வாசல் தாண்டும்போது நீ என் மனைவி மட்டும் தான். மிஸ்.பூங்கோதை சுந்தர் இல்லை மிஸஸ்.பூமா ஆதிலிங்கேஸ்வரன். இவங்க யாரோட நினைவையும் நீ சுமந்து வரக்கூடாது. உன் கவலை, கஷ்டம், உனக்கு ஏற்பட்ட அவமானம் எல்லாத்தையும் தூக்கி போடறது போல இவங்களையும் போட்டுட்டு வா டா. இது உன் அத்தானோட ஆசை, வேண்டுகோள் இப்படி எப்படி வேணாலும் நினைச்சுக்கோ.” என்றான்.

சன்னமாக சிரித்த பூமா,” இதெல்லாம் நீங்க சொல்லணுமா அத்தான்? நான் இதெல்லாம் ஏற்கனவே செஞ்சுட்டேன். எப்போ உங்க கையால மாங்கல்யம் வாங்கினேனோ அப்போவே நான் உங்க பூமா மட்டும் தான். இந்த வீட்டு பொண்ணா இருந்த பூங்கோதையை இவர்களே கொன்னுட்டங்க அத்தான். ஆனா அதை பத்தி நமக்கென்ன? நம்ம வாழ்க்கையை பார்க்க போகலாம். இனியும் ஒரு நிமிஷம் கூட இங்க நிற்க எனக்கு விருப்பம் இல்லை.”

கைகளை பிணைத்துக்கொண்ட இருவரும், முகம் கொள்ளாச் சிரிப்புடன் தங்கள் வாழ்க்கை பயணத்தை தொடங்க இங்கிருந்து வெளியேறினார்.

பெரியவர்களுக்கு புரியாத திகைப்பும், முகிலனை மணக்கவில்லை என்ற நிம்மதியும் ஒருங்கே தோன்ற. அவர்கள் செல்வதை ஒன்றும் சொல்லவோ செய்யவோ முடியாத இயலாமையுடன் கண்டனர். நட்புகள் அவர்களைத் தொடர்ந்து சென்றது.

1 thought on “Amudham 14

  1. அய்யோ ராமா…! என்ன சொந்தமோ ? என்ன பந்தமோ ? டிஸ்கஸ்டிங் உறவுகள்.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!