Amudham 11

Love is not what you say, Love is what you do!

Amudham 11

Amudham 11 – அமுதம் 11

ராகுலைப் பார்க்க மருத்துவமனைக்குச் சென்ற ஆதியும், கோதையும் ஆச்சரியம் அடைந்தனர். அங்கே அகிலன், வெண்மதி, ஷியாம் மூவரும் இருந்தனர்.

கோதை ராகுலுக்கு அருகில் சென்று அவன் கைகளைப் பிடித்துக்கொண்டாள்.

“ஏன் ராகுல், நீ கொஞ்சம் விலகிருந்தா அவன் உன்னை அடிச்சிருக்க மாட்டானே!”

“ஏன் கோதை என்னை இப்படி ஒருத்தன் தலைமுடியை பிடிச்சு இழுத்துட்டு போனா நீ அப்படி தான் விலகி இருப்பியா? நீ என் தோழி. நான் உன்னை இழுக்க பார்த்தேன். அந்த நாய் தான் கட்டையில் அடிச்சிட்டு உன் கையை பிடிச்சி இழுத்துட்டு போய்ட்டான்.”

ராகுல் பேச பேச பிரவீன், இன்பா, ஆதி, அகிலன், ஷியாம், வெண்மதி என்று அனைவர் கண்களிலும் நீர் கோர்த்தது.. கோதையை அவள் அப்பா அம்மா கூட ஒரு வார்த்தை சொன்னதில்லை, அடிப்பது என்பது அவர்கள் அகராதியிலேயே கிடையாது. அப்படிப்பட்டவள் சுஜிக்காக என்ன கொடுமையெல்லாம் அனுபவித்திருக்கிறாள்.

ஆனால் அவளோ ராகுலுக்காக வருத்தப்பட்டாள். வெண்மதி ராகுலை பார்த்தவண்ணம் நின்றாள். ராகுலால் அதிகநேரம் வெண்மதியை காண இயலவில்லை. அவன் கண்மூடிப் படுத்துக்கொண்டான். அனைவரும் வெளியில் செல்ல, வெண்மதி ராகுலைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி வெளியேறினாள்.

ஆதி கோவைக்குக் கிளம்ப அவன் பெட்டியில் துணிகளை அடுக்கிக்கொண்டிருந்தான். கோதை அவனைப் பார்த்தபடி கட்டிலில் முழங்கால் கட்டி அமர்ந்திருந்தாள். அவன் ஒவ்வொரு துணியாய் உள்ளே எடுத்து வைக்க அவள் ஒவ்வொன்றாய் வெளியே வைத்துக்கொண்டிருந்தாள். முதலில் இதை கவனிக்காத ஆதி, அவன் வேலை நீண்டுகொண்டே போக சந்தேகம் வந்து பார்க்க, இவள் செய்யும் வேலை அவனுக்கு உறைக்கவே, அவன் பின்தலையில் தட்டி கொண்டு அவளருகில் அமர்ந்தான்.

“பூமா”

“சொல்லுங்க அத்தான்.”

“என்னடா செய்யற?”

“நான் ஒன்னும் செய்யல.”

“அப்பறம் ஏன் நான் உள்ள வச்ச துணியெல்லாம் வெளில் வருது.”

அவள் திருதிருவென விழித்துவிட்டு, “போகணுமா அத்தான்? என்னோடவே இருங்களேன்.” என்று அவன் தோளில் சாய்ந்தாள்.

ஆதி இதை சிறிதும் எதிர்பார்க்காததால் அவளை வியப்புடன் நோக்கி,

“பூமா”

“அதெல்லாம் ஜம்பமா பக்கத்துல வராத, தொடாதே, லவ் டியலாக் அடிக்காதன்னு உன்னை சொல்லிட்டேன். ஆனா எனக்கு தான் என்னவோ போல இருக்கு. நீ ஏன் இவ்வளோ நல்லவனா இருக்க அத்தான். சீக்கிரம் வந்துடுவ தானே?”

அவளின் கவலை கூட ஆதிக்கு ஆனந்தமாக இருந்தது.

“பூமா நீ எனக்கு ரொம்ப முக்கியமானவள் டா. உன்னை என் வாழ்க்கையில் எதுக்காகவும் இழக்க மாட்டேன். நீ கவலைப்பட தேவையில்லை. இன்னும் ஒரே வருஷம் தான்.  உன் படிப்பு முடிஞ்சதும் நான் மாமா கிட்ட பேசிடறேன்.”

“அப்போ என் காபி ஷாப் கனவு?”

“இங்க காபி ஷாப் வச்சிட்டு என்னோட அங்க வந்து வாழுவியா? மக்கு. அங்க வச்சுக்கலாம் டா. அத்தான் என் காசுல வச்சுத்தறேன். இனிமே உன்னோட எல்லா செலவும் அத்தானோடது.”

“வேணாம். நான் ரொம்ப செலவு வைப்பேன். உன்னால முடியாது.”

“என்ன பூமா இப்படி சொல்லிட்ட? நீ கேளு அத்தான் கண்டிப்பா வாங்கி கொடுத்துட்டு ஊருக்கு போறேன். “

“எனக்கு உன்னை பார்த்துட்டே இருக்கணும். உன் குரலை கேட்டுட்டே இருக்கணும். நான் உன்னோட பேசிட்டே இருக்கணும். அதுக்குன்னு போன் வாங்கி தரக்கூடாது.”

ஆதி யோசனையாய் “நாலு மணிக்கு கிளம்பறதுக்குள்ள உன்னோட கிப்ட் உன்கிட்ட இருக்கும். இப்போ வா பேக் பண்ணலாம்.”

இருவரும் பேசி சிரித்தபடி பெட்டி அடுக்கி முடித்தனர்.  கோதை அறையிலிருந்து வெளியில் செல்ல நடந்தாள். தன் போனை மறந்துவிட்டோமே என்று அவள் திரும்ப போனை கொடுப்பதற்கு ஆதி வர, ஆதியின் மேல் இடித்து கோதை அவன் தோளில் பூமாலையானாள். அவனை அணைத்து நின்ற கோதை வேறு உலகத்தில் மிதந்தபடி இருக்க, ஆதி அவளை நிலை நிறுத்தி,

“பூமா அத்தான் பாவம் இல்லையா?”

கோதை செம்மையால் செங்கதிராய் தலை கவிழ்ந்தாள். அவள் எண்ணங்கள் ஊர்வலம் செல்ல, ஆதி,

“அத்தான் ஊர்ல போய் உன்னோட நினைவாவே இருப்பேன். அப்பறம் எப்படி தொழில் செய்ய? கிளம்பு பூமா.என்னை பரிட்சை பண்ணி பார்க்காதே.”, என்று அவளை அறை வாசலுக்கு தள்ள,

கோதை தலையில் அடித்துக்கொண்டு, “நான் கூட பாவமா இல்லயான்னதும் ஏதேதோ ஆசைப்பட்டுட்டேன். சரியான சாமியார் அத்தான் நீங்க.”

“அப்போ கேட்டா தந்திருப்பியா?”, என்று கண்களில் எல்.இ.டி லைட் எரிய கேட்ட ஆதியை.

“ஐயே… “என்று லுக்கு விட்டபடி ஓடிவிட்டாள்..

மாலை அனைவரிடமும் சொல்லிக் கொண்டவன் கிளம்பிவிட்டான். கோதைக்கு அவன் பிரிந்து செல்வது வலி என்றால், ‘கிப்ட் தரேன்னு சொல்லிட்டு டிமிக்கி குடுத்துட்டாரே…’ என்று அவள் சிறுப்பிள்ளைத்தனம் தலையெடுக்க, மனம் ஆதியைத் தேடி கவலை கொடுத்தது.

மெதுவாய் தனது அறை நோக்கிச் சென்றாள். அங்கே கட்டிலில் ஒரு கிப்ட் பாக்ஸ் இருக்க ‘அத்தான் என் செல்லம்’, என்று மனதில் அவனை கொஞ்சியபடி ஆர்வமாய் பிரித்தாள். அதில் ஆதியின் புகைப்படம் பிரேமில் இருந்தது. அவள் அதை தொட்டதும்.

‘என்ன பூமா என்னையே பாக்கற? எப்படி இருக்க? சாப்பிடியா? சீக்கிரமா அத்தான் வந்திடுவேன். கவலைப்பட வேண்டாம்.’ என்று அவன் குரல் ஒலித்தது. அவள் புகைப்படத்தை திருப்பி பார்க்க, அங்கே அவன் ரெகார்ட் செய்து வைத்த கருவி, பிரேமோடு இருந்தது. கூடவே ஒரு கடிதமும். அதில்,

“பூமா நீ கேட்டபடி இதுல நீ என்னை பாக்கலாம், பேசலாம், நான் பேசறத்தையும் கேட்கலாம். என்னால் முடிஞ்ச வரைக்கும் உன் ஆசைகளையும் தேவைகளையும் நிறைவேற்றுவேன் பூமா. நீ என் மனைவி… ஆனா அது உறவு அவ்வளவுதான். நீ எனக்கு எப்படிப்பட்டவள் என்று கண்டிப்பாய் நம் வாழ்வின் பொன்னான நாளில் நான் உனக்கு சொல்லுவேன்.

சீக்கிரம் சந்திக்கலாம் பூமா. கவனமாக படி. ஒருநாளும் என் எண்ணம் உன் லட்சியத்திற்கு இடைஞ்சலாய் இருக்க கூடாது. பை பூமா.’

படித்த கோதையின் உள்ளம் அவன்பால் உருகியது. அந்த புகைப்படமே தனக்கு அவனில்லாத தனிமையை போக்கும் என்று அதனை இறுக அணைத்து கண்ணீர் விட்டாள். நாட்கள் சீக்கிரமாக செல்ல வேண்டிக்கொண்டாள்.

ராகுலை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர். அவனைக் காண கோதை கிளம்பிக் கொண்டிருந்தாள். மதி ஏனோ கோதை பின்னால் அலைந்துகொண்டிருந்தாள். அவள் அமைதியானவள் தானே தவிர உம்மென்று இருக்க மாட்டாள். ஆனால் இரண்டு நாட்களாய் மதியின் அமைதியைத் தாண்டிய சோகம் கோதைக்கு தெரிந்தது. இன்று தனிமையில் கேட்டுவிட வேண்டும் என்று நினைத்தவள், “மதி நான் ராகுலை பார்க்க அவன் வீட்டுக்கு போறேன். என்னோட வரியா?”

மதி ‘சரி’ என்று தலையசைத்தாள். அவள் கண்களில் ஒரு மின்னல் வெட்டியத்தை கவனித்த கோதை, ‘ அட பாவிகளா, கதை அப்படி போகுதா? இரு… இரு…’என்று மனதில் சிரித்துக்கொண்டு,

” மதி கிருத்தி வரேன்னு சொல்லிருந்தா நான் அவ கூட போய்கிறேன். உனக்கு படிக்க இருக்குமே… நீ படி.”

“நான் என்ன கலெக்டருக்கா படிக்கிறேன். படிக்கறது BBA இப்போ ஒன்னும் முக்கியமா படிக்க இல்ல. நானும் வரேன்.”

“இல்ல மதி அவன் என் பிரென்ட்.”

“ஓ உன் பிரெண்டுன்னா நான் பாக்க கூடாதா..”

“ஓ தாராளமா பாக்கலாம், பார்க்கமட்டுமா? கண்ணால் கதை பேசலாம், இன்னும் என்னென்னவோ…”

மதி வெட்கத்தால் கோதையை முதுகில் அடித்து, “போ கோதை. நான் ஒன்னும் அப்படிலாம் பண்ண மாட்டேன். எனக்கு அவரை ரொம்ப பிடிச்சிருக்கு.”

“பெரிய மாமா பத்தி யோசிச்சியா மதி? இது உன் வாழ்க்கை. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுக்க கூடாது. நீயும் அமைதி, ராகுலும் அமைதி. எனக்கு அதான் யோசனையா இருக்கு. எப்பவும் அப்பொசிட் போல்ஸ் தானே அட்டராக்ட் ஆகும்.”

“அவர் அமைதியானவரா இருக்கலாம் கோதை ஆனா யோசிச்சு பாரு எவ்ளோ ரிஸ்க் எடுத்து உன்னையும் சுஜியையும் மீட்டிருக்காரு? அந்த தைரியம் எனக்கு பிடிச்சிருக்கு. பிரெண்டுக்கும் அவ சொந்ததுக்குமே இவர் இவ்வளவு மெனக்கெடுறார் அப்படினா நான் அவர் வாழ்க்கையானா எனக்காக என்னவும் செய்வார். எனக்கு அந்த அன்பு வேணும் கோதை.”

மதி சொன்னது கோதைக்கு புரிந்தாலும், அவளின் எதிர்பார்ப்பில் கோதைக்கு பிடித்தம் இல்லை. ஒரு நிமிடம் தான் ஆதியிடம் என்ன எதிர்பார்த்தோம் என்று தோன்ற, அவர்கள் காதல் எதிர்பார்ப்புகள் இன்றி அவர்களுக்காகவே தோன்றியதாக கோதைக்குப் பட்டது. மதி கூற்றில் தவறில்லை என்றும் நினைத்தாள்.

“நான் நினைக்கறதுதான் சரின்னு என்னைக்கும் நான் சொல்ல மாட்டேன். ஆனா யோசிச்சிட்டு முடிவு எடு, எடுத்தபின்னாடி எந்த சூழ்நிலைலயும் யோசிக்க கூடாது.”

நாட்கள் அதன் போக்கில் செல்ல, கோதை படிப்பில் கவனமாக இருந்தாள், மதி ராகுலை சந்திக்க முடியாமல் தவித்தாள்.

முகிலன் மறுபடி வெளிநாட்டிற்கு செல்லாமல் தொழில் செய்கிறேன் என்று சொல்லிவிட்டு அங்கேயே இருந்தான். நண்பகலில் வெளியில் செல்பவன் நடுஇரவில் வீடு திரும்பினான். குடும்பத்தில் அவன் அதிகம் ஒட்டாததால் யாரும் அவனிடம் ஒன்றும் கேட்டுக்கொள்ளவில்லை. அவன் யாரிடமும் தேவையில்லாமல் பேசவும் இல்லை. இதுவே பெரியவர்களுக்கு போதுமானதாக இருந்தது. குடும்ப அமைதியே அனைவரின் விருப்பமாக இருந்தது.

அன்று காலை கோதை கல்லூரிக்குக் கிளம்ப தன் வண்டியை எடுத்தாள். அது ‘நான் இன்று உனக்கு லிப்ட் தர மாட்டேன்’ என்று ஸ்டார்ட் ஆகாமல் முரண்டியது.  கோதை கடுப்புடன் அதன் தலையில் தட்டி திட்டிக்கொண்டிருந்தாள்.

அதிசயமாய் காலையில் எழுந்து வந்த முகிலன், ஹாலில் காபி குடித்துக்கொண்டிருந்தான். உள்ளே வந்த கோதை,

“அம்மா, அகி செல்லம் கிளம்பியாச்சா?”

“அவன் அப்போவே போயாச்சு. ஏன் குட்டிமா?”

“வண்டி மக்கர் பண்ணுது. அப்பா, மாமா யாராச்சும் இருக்காங்களா? எனக்கு லேட்டாச்சு காலேஜ் போகணும். “

“நான் ட்ராப் பண்ணவா?” கேட்ட முகிலனை மீனாட்சியும் கோதையும் ஏதோ ஏலியனை பார்ப்பது போல் பார்த்தனர்.

“நான் கூட்டிட்டு போய் விடறேன் அத்தை. வெய்ட் பண்ணு பூ. இதோ வரேன் ” என்று உடைமாற்றச் சென்றான்.

“இது என்னம்மா அதிசயம்.”

“விடு அவனா வரும்போது நாம ஏதும் சொல்லக்கூடாது. போய்ட்டு வா.”

சரியென்ற கோதை முகிலனுக்காகக் காத்திருந்தாள்.

அவன் வந்தவுடன்,” போகலாம்”, என்று முன்னே நடந்தான்.

காரில் ஒரு ஆழ்ந்த மௌனம் நிலவியது. அதைக் கலைத்த முகிலன், “என்ன என்னோடல்லாம் பேசமாட்டியா பூ?”

“அப்படியெல்லாம் இல்ல முகிலன்.”

“ரொம்ப விலகியிருக்க என்கிட்ட. இதே அன்னைக்கு ஆதி என்னோட வராம இருந்திருந்தா நீ என்னோட இப்படியா பேசிட்டு இருந்திருப்ப??”

“எதுக்கு இப்போ அதெல்லாம்?”, என்று கோதை அவனை தவிர்த்தாள்.

“ஓக்கே விடு. அட்லீஸ்ட் பிரெண்ட்ஸ்???”, என்று அவளிடம் கை குலுக்க நீட்டினான்.

கோதை அவன் கையை பார்த்தபடி இருக்க, அவள் செல்லில் ஆதியின் அழைப்பு சுபஸ்வரமாய் அவள் செவிகளைத் தொட்டது.

உடனே எடுத்து அதை காதில் வைத்தவள், “சொல்லுங்க அத்தான், நேத்து பேசவே இல்லை… சரி… முகிலன் கூட காலேஜிக்கு போய்ட்டு இருக்கேன்… ம்ம்… பிரெண்டாகலமான்னு கேக்குறாரு… ம்ம்… சரி… இல்ல… சாரி. பை.”

மெதுவாய் பேசியதால் அவள் யாருடன் பேசினாள் என்று தெரியாத முகிலன் மீண்டும்,” பிரெண்ட்ஸ்??” என்றான்.

அவளும் அவனுடன் கை குலுக்கினாள்.

விதி அவளைப் பார்த்து சிரித்தது. 



3 thoughts on “Amudham 11

  1. அய்யய்யோ..! எனிமி வாலண்ட்ரியா வந்து கை குலுக்குதே… என்ன வில்லங்கத்தை கொண்டு வரப் போகுதோ தெரியலையே..?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!