Amudham 10

“Love is composed of a single soul inhabiting two bodies.” – Aristotle

Amudham

அமுதம் 10

அன்றைய காலை ஒவ்வொருவருக்கும், வெவ்வேறான மனநிலையில் விடிந்தது. ஆனால் ஒன்றுசொன்னாற்போல் சுஜி கடத்தலுக்கான காரணம், பூங்கோதையின் முழு திட்டம், நேற்று நடந்தவைகளில் தங்களுக்கு தெரியாது போனது எது என்று கோதை, சுஜியை சுற்றி அமைந்து, கவலைகள் வேறுபட்டிருந்தது. பெண்கள் தங்கள் வேலைகளைத் துரிதப்படுத்த, ஆண்கள் தங்கள் வேலைக்குச் செல்ல தாமதப்படுத்திக் கொண்டனர்.

காலை ஆதி ஹாலில் கைகட்டி அமர்ந்திருந்த்தான். அவன் முகம் சற்று இறுக்கமாகவே இருந்தது. ஷியாம் பற்றி சொல்லவே தேவையில்லை. முகில் எதிலும் பட்டுக்கொள்ளாமல் இருந்தான்.

அகிலன் அருணாவுடன் பேசியபடி வந்து ஆதி அருகில் அமர்ந்து அவனை தோளோடு சேர்த்தணைத்தான். ஆதி அகிலனிடம் திரும்ப அவன் கண்கள் கலங்கி இருக்கக் கண்ட அகி.. அவனின் தோள் தட்டி சமன் செய்தான்.

பூங்கோதையும் சுஜியும் மாடியிலிருந்து வந்து ஒருங்கே அமர்ந்தனர். சுஜி இன்னும் பயத்தால் உடல் நடுக்கம் கொண்டாலும், தன் வீட்டில் இருக்கிறோம் என்ற நிம்மதி அவள் கண்களில் தெரிந்தது. கோதைக்கு அவள் இப்போது பொறுப்புடன் பதில் தரவேண்டிய இடத்தில் இருப்பது புரிந்ததால், தன் விளையாடுத்தனங்களை ஒதுக்கிவிட்டு செருமியபடி ஆரம்பித்தாள்.

“நான் எல்லார்கிட்டயும் நடந்த எல்லாத்தையும் சொல்றேன். ஆனா யாரும் கோவப்படவோ உணர்ச்சிவசப்படவோ கூடாது. நாலு நாளா அப்பா, மாமா ரெண்டுபேருமே இயல்பா இல்ல. ஏதோ யோசனையும் கவலையுமா இருந்தாங்க. அப்போ அவங்க வேலையில் ஏதோ பிரச்சனைன்னு புரிஞ்சிக்கிட்டேன். அப்பா முன்னாடியே சொல்லிருக்காரு, ‘போலீசுக்கு பிரச்னைன்னா அது அவங்க குடும்பத்துக்கும் சேர்த்து’ அப்படின்னு. அதனால நாலு நாளா நான் கவனமா தான் இருந்தேன்”, என்றவள் கொஞ்சம் கோவத்தோடு அருணாவை நோக்கி,

“உங்க கிட்ட நான் சொன்னேனா இல்லையா?சுஜியை கூட்டிட்டு போய் கூட்டிட்டு வாங்கன்னு. ஏன் நேத்து சுஜியை தனியா வீட்டுக்கு அனுப்பினீங்க?”

அருணா தயங்கியபடி,” இல்ல கோதை எனக்கு நேத்து எடுக்கேஷன் ஆஃபீஸ்ர் கூட மீட்டிங் இருந்தது. நான் வந்ததும் அவளை வீட்டுக்கு அழைச்சிட்டு போகலாமுன்னு இருந்தேன். ஆனா நான் வரும்போது அவ கிளம்பி போய்ட்டா. சரி வீட்டுக்கு போயிருப்பான்னு வந்தா இவ இல்ல.”

கோதை ஒன்றும் சொல்லாமல் நேராக கதிரிடம் வந்தாள். “மாமா ஒரு எமெர்ஜென்சி சிட்டுவேசன்ல எப்படி நடந்துக்கணும்ன்னு இன்னும் நீங்க உங்க பதினேழு வயசு பொண்ணுக்கு சொல்லித்தரலை. சரி, அப்போ அவ பாதுகாப்புக்கு ஏற்பாடு பண்ணிருக்கணுமா இல்லையா?”

கதிரிடம் பதில் இல்லை. சுந்தரிடம் வந்தவள்,”என்ன கமிஷனர் சார். ஒருத்தன் வீட்டைவிட்டு வரக்கூடாதுன்னு போன்ல உங்க வீட்டு பொண்ணு வச்சு மிரட்டுனா, வராம இருந்துடுவிங்களா? நேத்து அவன் உங்களை இங்க இருக்க வச்சிட்டு செய்ய நெனச்ச காரியம் தெரியுமா உங்களுக்கு?

போதை பொருள்… கொஞ்ச நஞ்சம் இல்ல, கிலோ கணக்குல… இன்னிக்கு அது ஊருக்குள்ள போயிருந்தா எத்தனை ஸ்டுடெண்ட்ஸ் வாழ்க்கை போகும்? அதை எடுத்துட்டு ஒவ்வொருத்தனும் என்னென்ன தப்பு பண்ணியிருப்பாங்க? நெனச்சாலே நெஞ்செல்லாம் பதறுது. நீங்க என்னடான்னா வீட்ல இருந்திருக்கிங்க?”

சுந்தர், “உன்னை கடத்திட்டோம்ன்னு சொல்லிருந்தா ஏதோ உன்மேல இருக்கற நம்பிக்கையில அடுத்த அடி எடுத்துவச்சிருப்பேன். ஆனா அவனுங்க தூக்கிட்டு போனது சுஜியை. நான் எப்படிமா ஆக்ஷன் எடுக்க முடியும்.”

“அதுக்கு தான் அவன் சுஜியை தூக்கினதே. அவ பயப்படுவா, அவளுக்காக நீங்க பயப்படுவிங்கன்னு தான் அவன் என்னை விட்டு சுஜியை கடத்தியதே. அப்படி உங்க குடும்ப மனுஷங்களை பணயம் வச்சா ஆக்ஷன் எடுக்க முடியாதுன்னா நீங்க ரிசைன் பண்ணிடுங்க அப்பா. எனக்கு என் அப்பா ஃபர்ஸ்ட் கமிஷனரா இருக்கறதுதான் பிடிக்கும். அப்பறம் நீங்க உங்க குடும்பத்தை பாருங்க அது போதும். சரி விடுங்க.

அவன் சுஜியை ஸ்கூலில் இருந்து வரும்போது மயங்கவச்சு  கடத்திருக்கான். உங்களை வீட்ல லாக் பண்ண அவளை யூஸ் பண்ணிட்டு, தெரு முனையில் அவங்க ஆளுங்களை நிறுத்திருந்தான். நான் ரோட்ல பல தடிபசங்களோட ஒரு கார் நிக்கவும் தான், ஷ்யாமுக்கு போனே செஞ்சு சுஜி இல்லாததை தெரிஞ்சுக்கிட்டேன். என்னால தனியா ஏதும் செய்ய முடியாதுன்னு இன்பா, பிரவீன், ராகுலுக்கு கூப்பிட்டு, ஆதி அத்தானையும் வர வச்சேன்.

நாங்க எல்லாருமே போய் சுஜியை கடத்திட்டாங்கன்னு சொன்னாலும், உங்க ஆஃபீஸ்ல உங்களுக்கு போன் பண்ணி கேப்பாங்க. நீங்க இல்லன்னு சொல்லுவிங்கன்னு எனக்கு தெரியும், அதேநேரம் சுஜி இருக்கற இடத்தையும் தெரிஞ்சுகிட்டே ஆகணும் இதெல்லாம் நடக்கணுமுன்னா நான் அவங்ககிட்ட மாட்டணும்னு பிளான் போட்டு, ராகுலை உங்க ஆஃபீஸ்க்கும், ஆதி, பிரவீன் ரெண்டு பேரையும் என் பின்னாலயும், நீங்க கஷ்டப்பட்டு இருக்க கூடாதுன்னு இன்பாவை இங்கேயும் அனுப்பினோம்.

என்கிட்ட பிரவீனோட போன் சைலேண்ட் மோடில் ட்ரக்கிங் ஆப் இன்ஸ்டால் ஆகி இருந்தது, அதை வச்சு ஆதி, பிரவீன் ஃபாலோ பண்ணி வந்தாங்க. எங்களுக்கு போலீஸ் உதவியும் தேவைன்னு தான் ராகுலை அங்கே அனுப்பினோம். அவன் ரொம்ப பொறுமையானவன். கண்டிப்பா வேண்டிய காவல் உதவியோடு வருவான்னு எங்களுக்கு நம்பிக்கை இருந்தது.

நானே என் வாயில என்னை கடத்தினாக்கூட அப்பா ஒத்துப்பாரு சுஜியை கடத்தி வேஸ்ட்ன்னு அந்த தடி பசங்க முன்னாடி போய் சொன்னேன்.” பேசியபடி திரும்பினாள்.

அப்போது லட்சுமி கோதையை அறைந்திருந்தார். இதை மீனாட்சி செய்வார் என்று எல்லோரும் எதிர்பார்க்க, லட்சுமி அடித்ததும், அனைவருக்கும் ஆச்சரியமே…

“ஏன் டீ நீயும் போய் மாட்டி ஏதாவது ஆகிருந்ததா நாங்கெல்லாம் என்ன பண்ணறது?”

“ஒன்னும் ஆகியிருக்காது அத்தை. நான் கவனமா என்னை மயக்கப்படுத்தாதபடி பார்த்துகிட்டேன். அதனால் சுயநினைவோடு அங்க இருந்து சுஜியோட தப்பிக்க நேரம் பார்த்திருந்தேன்.”

“அதான் சுஜியை கடத்திடாங்கள்ல நீயும் போய் ஏண்டா மாட்ன.”

“அதான் சொன்னேனே. நாங்க போய் சொன்னாலும் ஒன்னும் நடக்காது. இப்போ என்னை கடத்தினதை கண்ணால பார்த்தவன் கம்ப்லைன்ட் கொடுத்தா ஆக்ஷன் எடுத்துதானே ஆகணும். அதுமட்டும் இல்ல. என்னை கடத்துறது அவங்க திட்டமே இல்ல. நானா போய் சொன்னதால் தான் அடியாளுங்க அவனுங்களா என்னை தூக்கிட்டு போனாங்க. அது பிளான் போட்ட ஒரு கேனயனுக்கும் தெரியாது. இப்படி ஒரு கம்பலைன்ட் வந்தா குழம்புவான். குழம்புறவன் சம்மந்தப்பட்ட நபரோட பேசுவான். அவனை ஈஸியா பிடிச்சிடலாம். அப்படியே தெரியாம போனாலும். என்னை கொண்டு வைக்கிற இடத்தில தான் சுஜியும் இருப்பா. என் ட்ராக்கர் ஆப் மூலமா எங்க ரெண்டு பேரயுமே சேஃபா காப்பாத்திடலாம். முழு திட்டத்தோடதான் போனேன். ஒரே ஒரு இடத்துல தான் தப்பு பண்ணிட்டேன்.”

குடும்பமே கேள்வியாய் பார்க்க,

“என்னோட ஏதாவது ஆயுதம் எடுத்துட்டு போயிருக்கணும். இவங்க போலீசில் சொன்னதும், அவனுக்கு தகவல் வந்திருக்கு. அதுவரை நாங்க அடியாட்களோட தான் இருந்தோம். அவன் வேகமாய் வந்து என்னை கடத்தினத்துக்கு அவங்களை திட்டவும், நான் சொன்ன காரணத்தை அடியாட்கள் சொல்லக் கேட்டதும் சமாதானம் ஆனான். ஆனா அவன் பங்களாவுல போலீஸ் போதைப்பொருள் கைப்பற்றி விட்டதை அறிந்ததும் சுஜியை அடிக்க போனான். நான் தடுத்து குரல் கொடுத்து அவனை கேவலமாய் திட்டிட்டேன். கோவம் வந்தவன், கைக்கு கிடைச்ச கட்டையால் என்னை அடிச்சிட்டான். குடோனுக்குள்ளயும் போலீஸ் வந்தது தெரிஞ்சதும் என்னை இழுத்துட்டு வெளில வந்தான். என்னை வச்சு தப்பிக்கத்தான் பார்த்தான். நான் ஒரு கல்லுல காலை தடுத்து நின்னுட்டேன். அவனால என்னை இழுத்துட்டு போக முடில… அங்கிருந்த பேரலை என் மேல கவிழ்த்தி கீழ தள்ளிட்டான். அது ஏதோ கெமிக்கல் இருந்த பழைய பேரல் அதிலிருந்து வந்த வீசல் வாடை… ஐயோ மூக்கெல்லாம் எரியறது போல இருந்தது. கைகால் கட்டிருந்தனால வெளில வரவும் முடியல. மயக்க நிலைக்கு போகும்போது ஆதி அத்தான் என்னை பாத்துட்டாங்க. அவன் என்னை இழுத்தப்போ ரெண்டுமூணு இடத்துல கம்பி கிழிச்சது. ஆனா நான் சுஜி மேல ஒரு தூசி கூட படாம காப்பாத்திட்டேன்.”

பெருமையாய் சொன்னவளை கவலையாய் பார்த்தனர்.

சுந்தர் தன் மகளை அணைத்து கண்ணீர் விட்டார். ஒரு ஆண் அவ்வளவு எளிதில் அழுவதில்லை, அதுவும் போலீஸ் வேலையேற்ற ஆண் அழுவதென்பது… அரிதிலும் அரிது…

ஷியாம் கோதையின் கை பிடித்து,” நீ ரொம்ப தைரியமானவள் கோதை. நான் இந்த சூழ்நிலையை எப்படி கையாண்டிருப்பேன்னு தெரியாது. ஆனால் நீ கிரேட் கோதை.”

வீட்டிலுள்ளோர் அவளை பாராட்டிவிட்டு கொஞ்சம் உடம்பையும் கவனிக்கச் சொல்லி திட்டுகளுடன் செல்ல, ஹாலில், சுந்தர், கதிர், கோதை, ஆதி மட்டுமே இருந்தனர்.

ஆதி கோதையிடம் வந்தவன்,”சரி எல்லாரும் போயிட்டாங்க. இனிமே நானும், உன் அப்பாவும் மாமாவும் மட்டும் தான். இப்போ சொல்லாம விட்ட உண்மையை சொல்லு.” என்று கைகட்டி நின்றான்.

சுந்தரும் கதிரும் ஒரு திடுக்கிடலுடன் கோதையைக் காண, சந்தையில் தொலைந்த பிள்ளை போல திரு திரு வென விழித்து, “அது… அது… அத்தான்… “

“சொல்லு பூமா, என் மேல சத்தியம்.”

“சரி வாங்க”, என்று அவர்களை தன் அறைக்கு அழைத்துச் சென்றவள் அறையை தாழிட்டாள்.

“நீங்கெல்லாம் நினைக்கறது போல அவன் ஒருத்தன் மட்டும் இந்த கடத்தலையும், போதை வஸ்துவையும் வைத்திருக்கலை. அவனோடு கூட வேறு எவனோ இருக்கான். அது மட்டும் இல்லை. அவர்கள் பெண்களை கடத்தி விற்கும் கும்பல் கூட தொடர்பு வைத்திருக்கிறார்கள்.

நேற்று என்னை அவன் இழுத்துச் செல்லப் பார்த்ததற்கும் அதுதான் காரணம்.

அந்த ஏ.சி மட்டும் இல்லை. இன்னும் அவனுக்கு தகவல் தரும் ஆளில் ஒருவன் நமக்கு நம்பகமானவனாய் நமக்குள் இருக்கிறான்.

இதெல்லாம் நேத்து அவன் போன் பேசும் போது தெரிந்து கொண்டேன். ஆனா ஆதி அத்தான் உங்களுக்கு எப்படி நான் சிலதை விட்டேன் என்று தெரியும்.”

“அதான் கடைசியில் பேய் முழி முழித்தாயே.. நாங்கள் அதை பார்த்துதான் அங்கேயே நின்றோம், எல்லாரும் போனதும் கேட்கலாம் என்று. ஆனால் ஆதி கேட்கவும் எங்களுக்குத் தான் திக் என்றது. நன்றாகத் தான் உன்னை கவனித்திருக்கிறார். இல்லையா ஆதி  ?”,என்று சுந்தர் கேட்க.

“ஆமாம் மாமா. ஏதோ இதுவரையில் பெரியது ஏதும் நடக்கவில்லை என்று சந்தோஷப்பட்டுறதா? இல்ல இனியும் அவன் சும்மா இருக்க மாட்டான்னு கவனம் கொள்ளணுமான்னு சரியா புரியலை.”

“நீ கடைசியா சொன்னதுதான். இனிமேல் கூடுதல் கவனம் கொண்டு இருக்கணும்.”

“சரி பார்த்துக்கலாம்.”

சுந்தரும், கதிரும் அங்கிருந்து செல்ல, ஆதி கோதையின் கண்களை ஆழமாய் நோக்கி, “நான் நேத்து ரொம்பவும் பயந்துட்டேன் பூமா. நீ இல்லாம என்னால யோசிக்க கூட முடில. பூமா என்னைக்கும் என் பூமாவா என்கூடவே இருப்பியா? நான் உன்னை பத்திரமா பாத்துக்கறேன்.”, என்று அவள் முன் முழங்காலிட்டு கேட்ட ஆதி பூங்கோதை கண்களுக்கு புதியவனாய் தெரிந்தான்.

“அத்தான். என்ன இது? ஏதோ ஹீரோ ஹீரோயின் கிட்ட ப்ரொபோஸ் பண்ணுற மாதிரி பண்றிங்க? செல்லாது செல்லாது. என் அத்தானா உரிமையாய் கேளுங்க பதில் சொல்றேன்.”

“பூமா, இந்த அத்தானை கல்யாணம் பண்ணிப்பியா?”

“இதுக்கு அதுவே பெட்டர். சரி போனாப்போகுதுன்னு உங்களுக்கு வாழ்க்கை தரேன் அத்தான்.”

“பூமா..”, என்று மலர்ந்து சிரித்தான் ஆதி.

“ஆனா மத்தவங்க மாதிரி என்னால உங்க கூட ஊர் சுற்றி வர முடியாது. எனக்கு லட்சியம் இருக்கு அத்தான். அது பெருசா சின்னதான்னு தெரியாது. என் டிகிரிக்கு அப்பறம் என் சொந்த காபிஷாப் அண்ட் ரெஸ்ட்டாரெண்ட் ஆரம்பிக்கணும். நீங்களும் உங்க எஸ்டேட், டீ கம்பனி எல்லாம் பாருங்க. நாம சாதிச்சத்தும் வீட்ல கேட்டு கல்யாணம் பண்ணிக்கலாம். இந்த ரொமான்ஸ் பண்றது, கனவுல பாட்டு பாடுறதெல்லாம் வேணாம். சரியா?”

அவள் பேச்சில் சிரித்த ஆதி,”பூமா. நீ இப்போ என் வைஃப் மா. நீ என்ன சொன்னாலும் என் மாமனார் மாதிரி நானும் எஸ் மேடம் தான்.”

ஆதியின் பேச்சில் வெட்கம் கொண்ட கோதை,”ஐயோ தாங்கல…”

“நான் நாளைக்கு காலைல கிளம்புறேன் பூமா. நீதான் கவனமா இருக்கணும். சரியா?”, என்று அவளை நோக்கி ஒரு அடி முன் வைக்க

அவள்,” ஸ்டாப்..”, என்று சொல்லி,

“முன்னாடி எப்படியோ இனிமே நேர்ல ஒரு அடி தள்ளி நின்னு பேசணும். போன்ல நல்ல பிள்ளையா தான் பேசணும். டர்ட்டி பாய் பேச்செல்லாம் கூடாது. அப்பறம் அவ்ளோ தான் சொல்லிட்டேன்.”

“பூமா நீ சொல்லலன்னாலும் நான் குட் பாயா தான் டா இருப்பேன். நீ கவலைப்பட தேவையில்லை.”, உன் அன்புதான் வேண்டும் என்பதை ஆதியின் கண்கள் கண்ணியமாய் சொன்னதால்,

“ம்ம். சரி அத்தான். ” என்று நாணத்துடன் குனிந்துகொண்டாள் கோதை.

“என்னது ம்ம் ஆஹ்.. ஏய் மெசேஜ்ல மட்டும் இதை சொன்ன உன்னை கடிச்சிருவேன். ஒழுங்கா மெசேஜ் பண்ணனும். டெய்லி டென் மின்ட்ஸ் என்னோட பேசணும் சரியா?”

“சரிங்க அத்தான். ” என்று கோதை சிரித்தாள். ராகுலைப் பார்க்க இருவரும் மருத்துவமனை நோக்கிப் பறந்தனர்.

இவர்கள் அறியாமல் போனது, தெரிந்தே ஒரு வில்லனையும், தெரியாமல் ஒரு வில்லனையும் வாழ்வில் சம்பாதித்ததே! இவர்கள் நினைப்பதுபோல காதல் கைகூட அவ்விருவரும் விடுவார்களா?? 



4 thoughts on “Amudham 10

  1. அமுதங்களால் நிறைந்தேன்..!
    எழுத்தாளர்: ஜெயலட்சுமி கார்த்திக்
    (அத்தியாயம் – 10)

    ஆனா.. சுஜிக்கு போட்ட ட்ராப்ல இப்படி வலியப்போய் கோதை மாட்டிக்கிட்டாளே..
    அந்த கடத்தல்காரன்ங்க வேற பொண்ணுங்களையும் மிஸ்யூஸ் பண்றவங்க வேற. இப்ப ஆதி வேற அவனோட ஊருக்குப் போயிடப் போறான், இதனால கோதை பாதிக்கப்பட்டுடுவாளோ..?

    அது சரி தெரிஞ்ச வில்லன் யாரு, தெரியாத வில்லன் யாரு ? தெரிஞ்ச வில்லன் முகிலன், தெரியாத வில்லன் ஆதியா ? இல்லை, தெரிஞ்ச வில்லன் ஆதி, தெரியாத வில்லன் முகிலனா ? அய்யய்யோ ! இப்படி குழப்பிட்டு போயிட்டாங்களே…!

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!