மனதின் மை – சைபர்புல்லீஸ்

சோஷியல் மீடியா இன்னிக்கு பெருசா வளர்ந்துடுச்சு. பலர் வாழ்க்கை கண் விழிக்கும் போதே சோஷியல் மீடியால தான் துவங்கும். நேர்ல பேச முடியாததை செய்ய முடியாததை சோஷியல் மீடியா மூலமா தீர்த்துக்க சிலர் கிளம்புவாங்க. அப்படி கிளம்பி, நம்மை யாருக்கும் தெரியாது, நம்மை யாரும் கேட்க முடியாதுன்னு நினைச்சு கொஞ்சமும் நாகரிகம் இல்லாம, பண்புன்னு ஒண்ணு இருக்கிறதே தெரியாத சிலரைப் பத்தி தான் இன்றைய மனதின் மை பகுதில பார்க்க போறோம்.

அவர்கள்ல பல பேர் நம்ம பிரெண்ட் லிஸ்ட்லேயே இருப்பாங்க. நம்ம கிட்ட கண்ணியமா பேசுவாங்க. ஆனா பொதுவான பக்கங்கள்ல பார்த்தோம்ன்னா இதுதான்னு இல்லாம கண்டபடி பேசுவாங்க. இப்படி ஆட்கள் நம்ம நட்புல இல்லாம இருக்குறது தான் நமக்கு நல்லது. 

ஏன் இவங்களை பத்தி பேசணும்னு நான் நினைச்சேன்னா சமீபத்தில் நான் கவனிச்ச சில போஸ்ட்கள் தான் காரணம்.

இந்த மக்கள் சொந்த பெயர், சொந்த போட்டோ எதுவும் வச்சுக்க மாட்டாங்க. பழகவோ தெரிஞ்சுக்கவோ சோஷியல் மீடியாவை பயன்படுத்த மாட்டாங்க. அவங்களோட மன வக்கிரங்களை வெளியிடும் வடிகாலா தான் இது இருக்கும். 

நமக்கு தெரிஞ்ச வட்டத்திலேயே நிறைய அலசப்பட்ட சமீபத்திய விஷயங்கள்ல மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாம் திருமணமும் ஒண்ணு. அதுல கமெண்ட் செக்ஷன் போனா தலையே சுத்துறது போல நிறைய பேர் பேசி இருந்தாங்க.

திருமணம், விவாகரத்து எல்லாமே ஒருவரோட தனிப்பட்ட வாழ்க்கை முடிவுகள். இன்னிக்கு எல்லாமே சமூக வலைதளங்கள் மூலமா பொதுவா வெளில தெரியுது. ஆனா அதுக்காக அவங்க தனிப்பட்ட வாழ்க்கையை நாம எப்படி விமர்சிக்க முடியும்? அப்படியே பொதுவெளியில் வந்துடுச்சு யார் வேணும்னாலும் கருத்து சொல்லலாம் அப்படின்னு சொன்னாலும், அந்த முடிவு பத்தி தான் பேசணுமே தவிர அந்த தனிநபரை தாக்கி அவங்க போல், குடும்பம் எல்லாத் இழுத்து அவங்க கேரக்டர் வரைக்கும் பேசுறது கருத்து சுதந்திரத்தில் வருமா என்ன?

அடுத்து நடிகர் சூர்யாவோட அகரம் பதினைந்தாம் வருட நிகழ்ச்சி. அவர் மனசுக்கு பிடிச்சதை செய்யறார். பிடிச்சா வாழ்த்துங்க, இல்லன்னா இது சரியில்ல, எனக்கு தெரிஞ்சு இப்படி நடந்ததுன்னு கூட கருத்து சொல்லலாம். ஆனா அவரோட நடை, உடை, பாவனை, குடும்பம், பிள்ளைகள்ன்னு எதையும் விட்டு வைக்காம அசிங்கமான வார்த்தைகளில் விமர்சனம் செய்யறது எல்லாம் என்ன மனநிலை? இவ்வளவு தைரியமா அதை செய்யறது யார்? சொந்தமா குடும்பம் நண்பர்கள் எல்லாம் நட்பில் இருக்கிற ஐடி அந்த காரியத்தை செய்வார்களா சொல்லுங்க. செய்ய அவங்களுக்கு தைரியம் வராது.

அடுத்து, ரெண்டு நாள் இருக்கும்ன்னு நினைக்கிறேன் சின்னத்திரை நடிகை ரவீனா சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல்ல ஓட்டு போட விடலன்னு பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்திருந்தாங்க. எல்லாம் 24 மணி நேர நியூஸ் சேனல்கள் தான். அதுல போய் கமெண்ட் பாருங்க. ‘தே’ வார்த்தை சொல்லி திட்டாத கமென்ட்களை விரல் விட்டு எண்ணிடலாம். அவங்களுக்கும் சோஷியல் மீடியாவுக்கும் ஏற்கனவே ஏதோ பிக்பாஸ் வச்சு அக்கப்போர் இருக்கும் போல. சரி அதான் முடிஞ்சு 2 வருஷம் ஆகப்போகுதே! இன்னுமா டா அதெல்லாம் பிடிச்சு தொங்கிட்டு இருப்பீங்க? ஒரு பொண்ணு சோஷியல் மீடியால பேசினாலே அசிங்கமா பேசுற பலர் இருக்காங்க. அப்ப ரைட் டு ஸ்பீச், ஃப்ரீடம் ஆப் ஸ்பீச் எல்லாம் இந்த மாதிரி அசிங்கமா பேச மட்டும் தான் பயன்படுத்துவாங்களா?

இவங்களை சைபர்புல்லின்னு சொல்லுவாங்க. இன்னும் இதுக்கு கடுமையான தண்டனைகள் மக்களுக்கு கொடுக்க ஆரம்பிக்கல. அதான் தப்போட வீரியம் தெரியாம இருக்காங்க. 

சைபர் புல்லியிங் சட்டபடி குற்றம். மனம் நோக பேசினாலே குற்றம்ன்னு சொல்லுது சட்டம். அப்ப அசிங்கமா பேசுற இவங்களை என்ன செய்யணும்? 

பிடிக்க முடியாது, நம்மை தெரியாதுன்னு பலரும் இப்படி பண்றாங்க. காவல்துறை நினைச்சா ஐபி அட்ரஸ், மொபைல் ஐ.எம். ஈ .ஐ எல்லாம் வச்சு அல்வா பாக்கெட் போல அள்ளிடுவாங்க. அப்படி பலரை உள்ள தள்ளி நியூசா போட்டா தான் இப்படி அசிங்கமான வார்த்தைகளில் பேசுற இந்த சோஷியல் மீடியா கீபோர்ட் வாரியர்ஸ் எல்லாம் சைபர் புல்லியிங் தப்புன்னு புரிஞ்சுப்பாங்க.

சும்மா உங்க கிட்ட இதைப் பத்தி பேசணும்னு தோணுச்சு. உங்க மனசுல இது மாதிரி சைபர் புல்லி பதிவுகள் கமென்ட்கள் பார்க்கும் போது என்ன தோணும்? கமென்ட்ல சொல்லிட்டு போங்க. அடுத்த மனதின் மை பகுதியில் சந்திப்போம்.

அன்புடன்

ஜெயலட்சுமி கார்த்திக் ❤️

கதைகள் தவிர உள்ள பொதுவான பக்கங்களையும் பார்வையிடுங்க. உங்க கருத்துக்களையும் பகிர்ந்துக்கங்க பிரெண்ட்ஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!