அஞ்சுவண்ணப் பூவே! 4

anju

அஜய் கிருஷ்ணாவை நெருங்க முடியாமல் அனைவரும் தவித்தபடி இருந்தனர். இந்தியா திரும்பியது முதலே அவனது கவலையும் கோபமும் படிந்த முகம் அனைவரையும் அவ்வாறு நினைக்க வைத்தது.

அஜய் தனது மனைவி தன்னை அழைப்பாள் என்று காத்துக்கிடக்க, அவளோ அவனை தொடர்பு கொள்வதை தவிர்த்துக் கொண்டே இருந்தாள்.

அவன் கைபேசியை பார்ப்பதும் பெரியவர் கூறிய விஷயங்களை கவனிப்பதுமாக இருந்தான். ரஞ்சித் அவனுடன் சென்றாலும் அவனை தொந்தரவு செய்யாமல் இருந்தான்.

அஜயின் பெற்றோர் இறந்தபோது அவர்கள் வீட்டில் பணிபுரிந்த விசுவாசமான பணியாளரின் மகன்தான் ரஞ்சித். ரஞ்சித் வளரும்போதே அஜய்யுடன் வளர்ந்தாலும் அவனை ‘அண்ணா’ என்று அழைத்துப் பழகி, அதே நேரம் அவனுக்குத் தேவையானதை நூறு சதவிகிதம் கவனித்துக் கொள்பவனாக அன்று முதல் இன்று வரை அஜய்யின் வாழ்வில் இன்றியமையாதவனாக இருக்கிறான்.

அஜய் எடுக்கும் எந்த முடிவையும் செய்து முடிக்கக் கூடிய அளவுக்கு இருந்தது ரஞ்சித்தின் விசுவாசம். அதற்கு சாட்சி கையுடைந்த கார்ல்சனின் மகன் தான்.

வீட்டிலிருந்த பல வேலையாட்கள் அபிதாவின் வரவை எதிர்பார்த்தனர், அஜய் சென்று அவளை அழைத்து வர வேண்டுமென ஆசைப்பட்டனர். அதை அஜய்யிடம் கேட்க பயந்தும், தயங்கியும் அவனையே பார்த்திருந்தனர். ஆனால் ரஞ்சித் அப்படி எண்ணவில்லை. அவன் அபிதாவைப் பற்றி அஜய்யிடம் கேட்கவும் இல்லை. அபிதாவை அவன் தொடர்பு கொள்ளவும் இல்லை. அவன் இடமென்ன என்று தெரிந்து அதன் படியே இருந்தான் ரஞ்சித்.

காரில் அஜய்யும் ரஞ்சித்தும் பயணித்துக் கொண்டிருந்தனர். அமைதியே துணையாய் வந்த அந்த பயணத்தில் அதை உடைத்து அஜய்யிடம் பேச்சுக் கொடுத்தான் ரஞ்சித்.

“அண்ணா நாம ஏன் புது இடம் வாங்கி அவங்க எல்லாரையும் அங்க குடி வைக்க கூடாது?”

“நீ உன் வீட்டை விட்டு புதுசா ஒரு இடத்துக்கு போன்னு விரட்டினா போவியா டா?” என்றான் எரிச்சலாக,

“போக மாட்டேன் தான். ஆனா அது அவங்க இடம் இல்லையே! நம்ம ஐயா இடம். அது இப்ப வைபவ் கைக்கு போயிடுச்சு. அதை சரி செய்ய நமக்கு கொஞ்ச காலம் தேவைப்படும். ஆனா அவங்க போக மாட்டாங்கன்னு, நீங்க…” என்று அவன் என்ன சொல்லி இருப்பானோ,

“இத்தனை நாள் எப்படி இருந்தியோ அப்படியே இரு ரஞ்சித். அந்த இடம் வைபவ் கிட்ட கால் முளைச்சு நடந்து போச்சா டா? அவன் ஏமாத்தி பிடுங்கிட்டான். அதை நிரூபிக்க வழி தேடி தானே நான் கோபமா போயிட்டு இருக்கேன்.” என்றான் நரம்புகள் புடைக்க.

“அண்ணி மாசமா இருக்காங்க. வீட்ல எல்லாரும் அண்ணியை எதிர்பார்த்துட்டு இருக்காங்க. நானும் ஒரு மாசமா நீங்களே என்ன செய்யணுமோ செய்வீங்கன்னு என் இடம் தெரிஞ்சு தான் பேசாம இருந்தேன்.” என்று இழுத்தான்.

“இன்னிக்கு என்ன ஆச்சு? என் மாமியார் உனக்கு போன் பண்ணி நான் என்ன பண்றேன்னு கேட்டு டார்ச்சர் பண்ணி, உன்னை எங்கிட்ட பேச வச்சுட்டாங்களா?” என்று கூறி சத்தமாக சிரித்தான்.

ரஞ்சித்தும் ‘ப்பூ’ என்று வாயில் காற்று வைத்து ஊதி ஆசுவாசம் செய்து விட்டு, “ஐயோ அண்ணா… ரெண்டு நாளா போன் மேல போன். அண்ணி முகமே சரியில்லையாம். நான் அவர்களுக்காக தான் உங்க கிட்ட பேசியதே. பிளீஸ் அண்ணா, அவங்க இப்ப இருக்கற நிலையை யோசிச்சு நீங்க கொஞ்சம் அவங்களை போய் பாருங்களேன்.” என்று கெஞ்சுதலாக வினவினான்.

“போகணும்னு எனக்கும் ஆசையா தான் இருக்கு. ஆனா அவ என்ன முடிவுல இருக்கான்னு தெரியல ரஞ்சித். நான் போய், அவ அதை சொல்லி, இனிமே அவ எனக்கு இல்லன்னு ஏதாவது ஆகிட்டா…” என்றபோது அடைத்த தொண்டையை செருமி சரி செய்து கொண்டான்.

“புரியுது அண்ணா. ஆனா அண்ணி உங்களை பார்த்தா கண்டிப்பா உங்க கூடவே வீட்டுக்கு வந்துடுவாங்க.” என்று நம்பிக்கையாக கூறினான் ரஞ்சித்.

“ம்ம்” என்று கூறி தலையை சாய்த்த அஜயிடம், “அண்ணி வீட்டுக்கு வண்டியை விடவா?” என்று தயக்கமாக வினவினான்.

அதற்கும் “ம்ம்” என்று பதில் கூறிவிட்டு அப்படியே இருந்தான் அஜய்.

அவன் கண்களுக்குள் அபிதா அவனிடம் முதல் முதலாக பேசிய நிமிடங்கள் வந்து போனது.

கல்லூரியில் அஜய் முதுகலை இரண்டாம் ஆண்டில் இருந்தான். சிம்போசியம் முடிந்து சில நாட்கள் கடந்திருந்தது.

ஒருநாள் கல்லூரி முடிந்து அவனது காரில் கல்லூரி வாயிலை கடக்கும்போது நான்கு மாணவிகள், இரண்டு மாணவர்கள் சுற்றி இருக்க இடையில் லாவெண்டர் நிற சுடிதாரில் திருதிருவென விழித்துக் கொண்டிருந்தாள் அன்று வந்த அந்த மஞ்சள் சுடிதார் பெண்.

‘இது பாட்டு பாடின பார்ட்டியாச்சே! இவ நம்ம காலேஜ் இல்லையே! இங்க என்ன பண்றா?’ என்று எண்ணி காரின் வேகத்தை அவர்கள் அருகில் சென்று குறைத்தான்.

அவளை அழைக்க நினைத்தவன், அன்னைக்கு என்னவோ பேர் சொன்னாளே, என்று சிந்தித்துவிட்டு நினைவுக்கு வராமல் போக,

“ஏய் லாவெண்டர் சுடிதார், இங்க வா.” என்று சத்தமா அழைத்தான்.

அவன் குரல் கேட்டதும் அங்கிருந்த மாணவ மாணவியர் மாயமாய் மறைந்தனர். அஜய்யிடம் அவர்களுக்கு மரியாதையை விட பயம் சற்று தூக்கலாகவே இருந்தது.

அவளோ அவனைக் கண்டதும் சூரியனைப் கண்ட தாமரை போல மலர்ந்தாள்.

“வேகமாக அவன் கார் அருகில் வந்தாள், நீ இங்க என்ன பண்ற? அவங்க உன்கிட்ட என்ன கேட்டுட்டு இருந்தாங்க?” என்றதும்,

“நான் உங்களை பார்க்க தான் சார் வந்தேன். நீங்க எப்ப வெளில வருவீங்கன்னு தெரியாம அவங்க கிட்ட போய் கேட்டுட்டேன். உனக்கு அவரை எப்படி தெரியும்? உனக்கு ஏன் அவர் ஸ்பெஷல் பிரைஸ் கொடுத்தார்னு கேள்வி மேல கேள்வி கேட்டாங்க.” என்று படபடப்பாக பதிலளிக்க,

“ம்ம்” என்று அவன் கூறியதும்,

“எனக்கே தெரியாததை எங்கிட்ட கேட்டா நான் என்ன சொல்றது? அதை சொன்னா நம்பவும் மாட்டேன்றாங்க.” என்று சலிப்பாகக் கூறினாள்.

“ஓ” என்று கேட்டுக்கொண்டவன், என்னை ஏன் பார்க்க வந்த? என்று காரை விட்டு இறங்கி கதவில் சாய்ந்து நின்றான்.

“அதான் சார் எனக்கு ஏன் பரிசு கொடுத்தீங்கன்னு கேட்க தான் வந்தேன்.” என்று அவசரமாக பதில் கூற,

“யாராவது பரிசு எதுக்குன்னு கேட்பாங்களா? கொடுத்தா ஜாலியா வாங்கிட்டு போகாம, யார் மா நீ?” என்று கேலி செய்தான் அஜய்.

“அட நீங்களும் கேலி செய்யாதீங்க சார். என் அம்மா அந்த பரிசை பார்த்து உன் கழுதை குரலுக்கு சிறப்பு பரிசா? ஒருவேளை நீ இனிமே பாடவே கூடாதுன்னு கொடுத்தாங்களா?ன்னு சிரிச்சு சிரிச்சு கேட்டு என் மானத்தை வாங்கிட்டு இருக்காங்க. உங்களை கேட்டு தெரிஞ்சுக்க இங்க வந்தா இவங்களும் அதையே கேட்கறாங்க. தயவுசெய்து சொல்லுங்க சார் எனக்கு ஏன் பரிசு கொடுத்திங்க? என் அம்மா சொன்ன காரணம் தானா?” என்று கண்களில் இப்போதோ அப்போதோ என்று விழக் காத்திருந்த நீர்த்துளியை அடக்கியபடி வினவினாள் அபிதா.

கடகடவென்று வாய் விட்டு நகைத்த அஜய், “அதெல்லாம் இல்ல, வேற ஒருத்தர் செய்த தப்புக்கு பாவம் சம்மந்தம் இல்லாத உன்னை தெரியாம மேடை ஏற்றிட்டேன். நான் போட்டி போட வரலன்னு என்னையும் சங்கடப்படுத்தாம, பாடத் தெரியாதுன்னு அழுதுட்டும் நிக்காம, சூழ்நிலைக்கு ஏற்ப தெரிஞ்ச பாட்டை பாடி சமாளிச்ச பாரு, அதுக்கு தான் அந்த பரிசு.” எனது விளக்கம் கொடுத்தான்.

“அப்பாடி. அப்ப என் குரல் அவ்வளவு மோசமில்ல. அப்படித்தானே சார்? இது போதும். ஹால்ல ஜம்பமா அந்த பரிசை வச்சுப்பேன்.” என்று கண்கள் மின்ன அவள் சிரித்ததும், அஜய் அவளையே பார்த்திருந்தான்.

அந்த எண்ணத்தில் இருந்தவன், வண்டி ஒரு மிகப்பெரிய குலுங்கலோடு நிற்கவே, கண் விழித்து வெளியே கவனித்தான்.

ஒரு சிறுவன் எதிர்பாராத விதமாக சாலையை திடீரென கடக்க, அவனை இடித்துவிடாமல் இருக்கும் பொருட்டு ரஞ்சித் அடித்த பிரேக்கின் உபயம் தான் அந்த குலுங்கல்.

“என்னாச்சு?” என்று காரிலிருந்து ரஞ்சித்துடன் அவனும் இறங்க, அந்த பிள்ளையின் அன்னை அவனைப் போட்டு அடித்துக் கொண்டிருந்தாள்.

“நல்ல வேளை அவரு வண்டியை நிப்பாட்டினாரு. இல்லன்னா என்ன ஆகுறது? ஏன் டா சொல் பேச்சு கேட்காம இப்படி ஓடுற?” என்று அவள் குரலெடுத்து ஓங்கிக் கத்தினாள்.

பிள்ளையை விடுவிக்க ரஞ்சித் போராடிக் கொண்டிருக்க, அது அபிதாவின் வீடு இருக்கும் தெரு என்பதை உணர்ந்து அவள் வீடு நோக்கி தான் கண்களை திருப்பினான் அஜய்.

பலர் வீட்டு வாசலில் மனிதத் தலைகள் தெரிந்தன. அந்த பெண் போட்ட கூச்சல் அப்படி!

தன் மனைவியின் வீட்டு வாயிலில் மாமியார் நிற்பதைக் கண்டு அவன் கண்கள் ஜன்னல் ஓரங்களில் தன் மனைவியைத் தேடியது.

நிழலாய் ஏதோ தெரிந்தாலும் அது பொய்யோ எனும்படி அவன் பார்த்த இடம் சாதாரணமாகக் காட்சி அளித்தது.

ரஞ்சித் அந்த பெண்ணை சமாதானம் செய்துவிட்டு, “அண்ணா வாங்க” என்று அழைக்க,

“நாலு வீடு தானே! நான் நடந்து போறேன். நீ வண்டி ஓட்டிகிட்டு வா.” என்று சொல்லிவிட்டு அபிதா வீடு நோக்கி நடந்தான்.

மருமகன் வருவதைக் கண்டு மனம் குளிர்ந்தார் சாந்தா. மகளை அழைத்துச் செல்ல வந்துவிட்டார் என்று நெகிழ்ந்து முகம் மலர்ந்து வரவேற்பாக புன்னகை சிந்தி,

“வாங்க தம்பி” என்று அழைத்தார்.

வாயிலைக் கடந்து இருவரும் வீட்டினுள் செல்லும்போதே, “அபி அபி, யாரு வந்திருக்கான்னு பாரு அபி” என்று குரல் கொடுத்துவிட்டு,

“அவ வந்திடுவா தம்பி, நான் போய் உங்களுக்கு குடிக்க ஏதாவது எடுத்துகிட்டு வர்றேன்” என்று சமையலறைக்குள் சென்றார்.

நிமிடங்கள் தான் கரைந்தன. அபிதாவின் அறையிலிருந்து சிறு சலனம் கூட இல்லை.

அவனுக்கு குடிக்க டீ எடுத்துக்கொண்டு வந்த சாந்தா, மருமகன் தனியே அமர்ந்திருக்கக் கண்டு,

“பாத்ரூம் ஏதும் போயிருப்பா தம்பி. நீங்க டீ சாப்பிடுங்க. நான் கூட்டிக்கிட்டு வர்றேன்.” என்று நகர இருந்தார்.

“இல்ல. நான்… டீ கொடுங்க. நானே அவளை உள்ள போய் பார்த்துட்டு வர்றேன்.” என்று எழுந்து கொண்டான்.

அவருக்கும் அவர்கள் இருவரும் தனிமையில் பேசி அவர்களுக்குள் இருக்கும் பிணக்கை போக்கிக் கொள்வது தான் சரியென தோன்றியதால் “சரிப்பா” என்று அவரும் சமையலறை நோக்கி நகர்ந்தார்.

சில நிமிடங்களில் அழுத்தமான காலடிகள் செவிகளைத் தீண்ட, மதிய உணவுக்கு வேகமாக சமைத்துக் கொண்டிருந்த சாந்தா,

“என்ன தம்பி பேசிட்டீங்களா?” என்று முந்தானையில் கைகளைத் துடைத்தபடி மகிழ்ச்சியாக வினவினார்.

“யாரோட? உங்க வீட்டு சுவர், கடிகாரம், டேபிள், கட்டில், மெத்தை கூடவா?” நக்கலாக வெளிவந்தாலும் அதிலிருந்த கோபத்தின் அளவு அவன் கண்களில் புலப்பட்டது.

“என்னப்பா சொல்றீங்க?” என்று வேகமாக மகளின் அறை நோக்கி ஓடினார் சாந்தா.

அறை வெறிச்சோடிப் போய் கிடந்தது. அவன் கைகளில் கொண்டு வந்த தேநீர் கோப்பை அங்கிருந்த டேபிளில் வைக்கப்பட்டிருக்க, அதனருகில் இருந்த தங்க பிரேமிட்ட அவர்கள் திருமணப் புகைப்படம் கட்டிலில் கவிழ்ந்து கிடந்தது.

“எங்க தம்பி அபியைக் காணோம்?” என்று பதற்றமாக சாந்தா வினவ,

“நான் உங்களை கேட்க வேண்டிய கேள்வி. வா வான்னு என்னைக் கூப்பிட்டிங்க. வட சொல்லு வர சொல்லுன்னு ரஞ்சித்தை தொல்லை செய்திங்க. வந்ததும் போய் மகளைப் பாருன்னு காலி ரூமுக்கு அனுப்பினா என்ன அர்த்தம்?” என்று எரிச்சல் மிகுதியில் அவன் கேட்டதும்,

“உள்ள தான் தம்பி இருந்தா. இருங்க.” என்று பின் வாசல் பக்கம் சென்றவர், அங்கிருந்த கிராதிக் கதவு திறந்திருக்கக் கண்டு, மகள் வெளியேறிவிட்டதை அறிந்து நொந்தார்.

“உங்களுக்கு தெரிஞ்சு உங்க பொண்ணு வெளில போகல. நான் வர்றதை பார்த்துட்டு தான் அவசரமா வெளில போயிருக்கா. அப்ப அவ முடிவுல அவ தெளிவா இருக்கா இல்லையா? அப்படித்தானே இதுக்கு அர்த்தம்?” என்று அவன் குரல் சிம்மமாக ஒலிக்க,

“தெரியல தம்பி. அவளுக்கு ஏதோ கிறுக்கு பிடிச்சிருக்கு. கர்ப்பகால மனக்குழப்பமா கூட இருக்கலாம் பா. அவசரப்பட்டு நீங்க எந்த முடிவும் எடுக்காதீங்க.” என்று மன்றாடினார் சாந்தா.

“முடிவு எடுத்தது உங்க பொண்ணு. நான் இப்பவும் அமைதியா அதை ஏத்துக்கறேன் அவ்வளவு தான்.” என்று அவன் வெளியேறினான்.

அவன் போன சில நிமிடங்களில் வீட்டிற்குள் பின் வாசல் வழியாக நுழைந்த மகளைக் கண்டு சினம் கொண்டவராக,

“ஏன் டி நீயே in தலையில் மண்ணை வாரி போட்டுக்கற? அந்த தம்பி எவ்வளவு சந்தோஷமா வந்துச்சு! இப்படி பண்ணிட்டியே!” என்று வாய் விட்டு அழுதார்.

“நான் தான் சொன்னேனே மா. என்னால இப்ப அவரோட சேர்ந்து வாழ முடியுமானு குழப்பமா இருக்கு. இந்த நேரத்துல அவரைப் பார்த்தா. நான் அவர் பின்னாடியே அந்த வீட்டுக்கு போயிடுவேன். எனக்கு அது இப்ப நடக்க வேண்டாம். அதான் வெளில போயிட்டேன்.” என்று வழிந்த கண்ணீரை அழுத்தமாகத் துடைத்துவிட்டு அறைக்குள் சென்றாள் அபிதா.

2 thoughts on “அஞ்சுவண்ணப் பூவே! 4

  1. அட.. எதுக்காக இந்த அபி & அஜய் இப்ப ஹைட் அண்ட் சீக் விளையாடுறாங்கன்னு தெரியலையே.

    😀😀😀
    CRVS (or) CRVS 3797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!