
அதிகாரம் 2
நீரூபன் அலுவலகக் கட்டிடத்திற்குள் நுழைய, மரியாதை நிமித்தமாக எழுந்து நின்ற பழனியைக் கண்டு,
“தாத்தா சும்மா சும்மா எழுந்து நிற்காதீங்க. உட்காருங்க.” என்றவன் பின் யோசனையாக,
“எல்லாரையும் சாப்பிட போக சொல்லிட்டேன். ஆனா இன்னும் எதையாவது பறிச்சுக்கிட்டு நின்னுட்டு இருப்பாங்க. நீங்க போய் அதட்டி சாப்பாட்டு ஹாலுக்கு கூட்டிட்டு போங்க. நீங்களும் சாப்பிட்டு நிதானமா வாங்க என்ன?” என்று அவரது டேபிளின் இருபுறமும் கையூன்றி கூறினான் நீரூபன்.
அவனது குரலில் அத்தனை மென்மை. பழனியின் கண்களில் அத்தனை மரியாதை. “சரிங்க தம்பி” என்று எழுந்தவர்,
“ஆமா நீங்க சாப்பிட வரலையா?” என்று ஆதுரமாக வினவ,

“இவர் கிட்ட பேசிட்டு நேரா சாப்பிட தான் வருவேன். எனக்காக காத்திருக்காம உட்கார்ந்து சாப்பிட சொல்லுங்க தாத்தா. சாப்பாடு ஆறிடும்.” என்றவன் கைபேசியை எடுத்து யாரோயோ அழைத்தான்.
“ம்ம் அண்ணே எல்லாரும் சாப்பிட வர்றாங்க. அப்பளம் எல்லாம் ரெடியா? எல்லாத்தையும் தயாரா வைங்க.” என்று கட்டளை பிறப்பித்துவிட்டு பழனியிடம் போகும்படி தலையசைத்தான்.
அவர் கிளம்பியதும், “ஏன் தம்பி எல்லாரும் அவங்கவங்க சாப்பாடு கொண்டு வந்து சாப்பிட மாட்டாங்களா? இங்கேயேவா அவங்களுக்கு சமையல் செஞ்சு சாப்பாடு போடுறீங்க?” என்று வியப்பாய் கேட்ட கோவிந்தராஜை மேலும் கீழும் பார்த்த நீரூபன்,
“அவங்க உழைச்சு தான் சார் நானே சாப்பிடுறேன். அப்படி இருக்கும் போது அவங்க நேத்து சமைச்ச சோத்துல தண்ணி ஊத்தி கொண்டு வந்து சாப்பிட்டு வேலை பார்த்தா, எனக்கு நாளைக்கு நல்ல வழி கிடைக்குமா?” என்று நக்கலாகக் கேட்டபடி தன் அலுவல் அறைக்குள் நுழைந்தான்.
எளிமையாக வெள்ளை நிற சுவருடன் ஆங்காங்கே கைவேலைப்பாடு செய்த அலங்காரப் பொருட்கள் இருந்தது. நடுவே பெரிய கண்ணாடி மேசை அதில் பல பைல்கள், அக்கவுண்ட் நோட்டுகள், முன் பக்கத்தின் ஓரத்தில் ஆப்பிள் ஐ மேக் வெண்ணிறத்தில் வீற்றிருந்தது.
அவன் அமர குஷன் வைத்த சுழல் நாற்காலி. அவனை காண வருவோர் அமர அதே போன்ற குஷன் வைத்த சாதாரண நாற்காலி. ஒவ்வொரு மூலையிலும் வீட்டினுள் வளர்க்கும் செடிகள். இடதுபுற சுவருடன் இணைந்த நீளமான சோபா.
எளிமையும் அழகுமாக அவ்வறை இருக்க அதனை தன் கண்களால் அளந்தபடி அமர்ந்தார் கோவிந்தராஜ்.
“ரூமை நீங்க அளந்து முடிச்சிட்டா நாம பேசலாமா?”என்று எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்து டேபிளில் முழங்கையை ஊன்றி அவரை உற்று நோக்கியபடி வினவினான் நீரூபன்.
“ரூம் ரொம்ப வித்தியாசமா அழகா இருக்கு தம்பி” என்று கூறியவர்,
“என்ன விஷயமா என்னை வர சொன்னீங்க?” என்று அமைதியாக வினவினார்.
நாற்காலியில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்ட நீரூபன், கால் மேல் கால் போட்டுக் கொண்டு, கன்னத்தில் கைகொண்டு தேய்த்தபடி,
“உங்க நிலத்தை நாளைக்கு காலைல எங்க நவயுக உழவுக்கு எழுதி கொடுக்க போறீங்க. அதனால ரிஜிஸ்ட்ரேஷன் விஷயமா பேச தான் வர சொன்னேன்.” என்று அழுத்தமான பார்வையோடு கூறினான்.
“என்ன? என் நிலத்தை உங்க கம்பெனிக்கு எழுத போறேனா?” என்று அதிர்ந்த கோவிந்தராஜ்,
“தம்பி அதை விலை பேசி அட்வான்ஸ் கூட வாங்கிட்டேன். வர்ற வெள்ளிக்கிழமை செங்கல்பட்டு ரெஜிஸ்டர் ஆபிஸ்ல ரிஜிஸ்ட்ரேஷன்.” என்று படபடப்புடன் கூறினார்.

“பதட்டப்படாதீங்க மிஸ்டர் கோவிந்தராஜ். அந்த விஷயமெல்லாம் தெரியாமலா நான் வர சொல்லி இருப்பேன். நல்லா தெரியும் நீங்க அவங்க கிட்ட அட்வான்ஸ் வாங்கி அந்த காசுல உங்க மகளுக்கு நிச்சயதார்த்தம் கூட செஞ்சு முடிச்சிட்டீங்க. ஆனா பாருங்க எனக்கு அந்த நிலம் வேணும். கவர்மென்ட் ரேட் போட்டு நாளைக்கு ரிஜிஸ்டிரார் முன்னாடி எல்லாமே வெள்ளையாவே கொடுத்திடுவேன். நம்ம கிட்ட இந்த கருப்பு சிகப்பெல்லாம் கிடையாது. அப்பறம் இதுக்காக ரிஜிஸ்டர் ஆபிஸ்கெல்லாம் அலைய தேவையில்ல. நாளைக்கு அவரே இங்க வந்து எல்லாம் முடிச்சு கொடுத்திடுவார். நான் பணம் கொடுத்ததும் நீங்க அட்வான்ஸ் வாங்கின லிக்கர் கம்பெனிக்கு போன் பண்ணி வர சொல்லி அதைத் திருப்பிக் கொடுத்திடுங்க.” என்று கொஞ்சமும் அலுங்காமல் வரிசையாக அவர் தலையில் குண்டுகளை இறக்கினான்.
“ஐயோ தம்பி என்ன பேசுறீங்க? கவர்மென்ட் ரேட்டா? நான் வாங்கின அட்வான்ஸ் காசு தானே மொத்தமே வரும்? அவங்க கிட்ட நிலம் இல்லன்னு சொன்னா என்னை கோர்ட்டுக்கு இழுத்து நாறடிச்சிடுவாங்க தம்பி.” என்று பயத்தில் வெளுத்தவராக கோவிந்தராஜ் புலம்ப,
“இங்க பாருங்க மிஸ்டர் கோவிந்தராஜ் நீங்க நாளைக்கு வரப்போற கேசை பத்தி கவலைப்படுறீங்க. ஆனா எனக்கு எழுதி தரலன்னா, அவனுங்க கேஸ் போட நீங்களே இருக்க மாட்டீங்க.” என்று அவருக்கு வெகு அருகில் வந்து பொறுமையாகக் கூறினான்.
அவன் கூறினான் என்பதை விட மிரட்டினான் என்று சொன்னால் சரியாக இருக்குமோ?
“தம்பி நீங்க எக்ஸ்.சி.எம் பையனா இருக்கலாம். ஆனா அதுக்காக என்னை மிரட்டி என் இடத்தை எழுதி வாங்க முடியாது” என்று வரவழைத்து கொண்ட தைரியத்துடன் அவர் எழுந்து நிற்க,
“ஐயோ ஐயோ… மிஸ்டர் கோவிந்தராஜ், உங்களுக்கு இன்னும் என்னைப் பத்தி ஒன்னுமே தெரியல. என் அப்பா… அதான் எக்ஸ்.சி.எம். இருக்காரே திருமூர்த்தி… அவரோட பேரை நான் எதுக்குமே யூஸ் பண்ண மாட்டேன். அவர் பதவி அவரோடது. ஆனா இது என் சாம்ராஜ்ஜியம். இங்க நூறு ஏக்கர் ஃபார்ம் வச்சு பிஸ்னஸ் பண்றது நான். இந்த நீரூபன். நீங்க இடத்தை விற்க அட்வான்ஸ் வாங்கி இருக்குற லிக்கர் கம்பெனி இங்க ஃபேக்டரி கட்டினா இந்த ஊரு, மக்கள், இந்த விவசாயம் எல்லாம் என்ன ஆகுறது? ஹான்? நல்லா காதுல வாங்குங்க, நாளைக்கு காலைல வந்து நான் கொடுக்குற பணத்தை வாங்கிட்டு இடத்தை ரிஜிஸ்டர் பண்ணி கொடுத்துட்டு ஓடிடுங்க. இன்னிக்கு போய் அந்த கம்பெனிக்காரன் கிட்ட சொல்லி தப்பிக்க ஏதாவது பிளான் போட்டிங்க… உங்க பொண்ணுக்கு பார்த்து இருக்கீங்களே மாப்பிள்ளை. அவன் எனக்கு வேண்டிய பையன் தான்.” என்று கண்ணை சிமிட்டினான்.
அதற்கு அர்த்தம் என்ன என்று சத்தியமாக கோவிந்தராஜுக்கு புரியவில்லை. திருமணம் வேண்டாம் என்று நிற்குமா? மகளுக்கு ஆபத்து நேருமா? யோசிக்க கூட முடியாத அளவுக்கு மூளை மறத்துப் போயிருந்தது.
“இப்போ நீங்க போகலாம். ஆனா நாளைக்கு உங்களை கூட்டிட்டு வர ஆளுங்க வருவாங்க. பத்திரமா வந்து பத்திரத்துல கையெழுத்து போட்டுட்டு போங்க.” என்றவன் நிற்காமல் வெளியேறினான்.
அவன் வெளியே சென்ற பின்னும், அவன் அங்கே இருப்பது போன்ற பிரமை கோவிந்தராஜை ஆட்கொண்டது.
காதில் அவனது கட்டளை மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்தது. போன மாதம் இடம் விற்பனைக்கு என்று அவர் அறிவித்ததும் அவன் தான் முதலில் வந்து கேட்டான். ஆனால் அந்த கம்பெனி ஆட்கள் சொன்ன பணக் கணக்கைக் கேட்டு புத்தி இல்லாமல் அட்வான்ஸ் வாங்கி அதை செலவும் செய்து விட்டார். ஆனால் இப்போது அவன் கையில் இருப்பது அவர் மகளின் வாழ்க்கை. அதற்காக நாளை எந்த அவமானம் வந்தாலும் அதை சகித்துக் கொள்ள அவர் தயாராக இருந்தார்.
நாளை வந்து கையொப்பம் இட்டுக் கொடுத்துவிடும் முடிவுடன் அந்த பண்ணையை விட்டு வெளியேறினார் கோவிந்தராஜ்.
****
அடையார் கஸ்தூரிபா நகரில் உள்ள காபி ஷாப் முற்பகல் பதினொன்றரை மணிக்கு ஆள் அதிகம் இல்லாமல் ஆங்காங்கே ஓரிருவருடன் மட்டும் காணப்பட்டது .
தன் எதிரில் இருந்த மாங்கோ ஃப்ராப்புசீனாவை நிதானமாக சுவைத்துக் கொண்டிருந்தாள் நேத்ரா. அவளை முடிந்தவரை கொடூரமாக முறைத்துக் கொண்டிருந்தான் அவள் எதிரில் அமர்ந்திருந்த வசீகரன்.
“நீ தானே டா ஸ்பைஸ்டு டீ வேணும்ன்னு கேட்ட? வந்து பத்து நிமிஷம் ஆச்சு அதை குடிக்காம என்னை ஏன் திங்கற மாதிரி பாத்துட்டு இருக்க?” என்று அவன் பார்வைக்கு அசராமல் கேள்வி கேட்டாள் நேத்ரா.
“உனக்கு ரொம்ப கொழுப்பு டி. நான் உன்னை முறைச்சிட்டு இருக்குறது திங்கற பார்வையா தெரியுதா உனக்கு? நீ சொன்ன விஷயம் என்ன? அதுக்கு நீ கொடுக்குற ரியாக்ஷன் தான் என்ன? உலகமே மூழ்கி போனாலும் எனக்கென்னன்னு அதை குடிச்சிட்டு இருக்க?” என்று அவள் பானத்தை அவன் நகர்த்தி வைக்க,
“ஹலோ சார், வீட்ல மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சாச்சு. இதான் தகவல். அதுக்கு நான் என்ன செய்ய முடியும்? நீ தான் வந்து பொண்ணு கேட்டு என்னை கல்யாணம் பண்ணிட்டு போகணும். நாங்களே லவ் பண்ணி நாங்களே கல்யாணத்துக்கும் ரெடி பண்ணி தருவோமா? உங்க கல்யாணத்துக்கு நீங்களும் கொஞ்சம் போராடணும் சார்.” என்றபடி மேலே இருந்த ஃப்ரெஷ் கிரீமை எடுத்து சுவைத்தாள்.

“பேசுவ மா ஏன் பேச மாட்ட? சும்மா இருந்த என்னை சுத்தி சுத்தி வந்து லவ் பண்ணி என்னையும் லவ் பண்ண வச்சுட்டு, இப்போ வீட்ல மாப்பிள்ளை பார்க்கறாங்கன்னு எவ்ளோ கூலா சொல்ற?” என்று அவளை தோளில் அடித்தான்.
“வசீ பிளீஸ் பழையபடி ராகம் பாடாத. உங்க அப்பா அம்மாவை கூட்டிட்டு வந்து எங்க வீட்ல பேசி கல்யாணம் பண்ற வழியை பாரு டா” என்று சர்வ சாதாரணமாக அவள் கூற,
“அறிவு இருக்காடி உனக்கு? நான் இப்போ தான் சின்னதா ஒரு கம்பெனி ஆரம்பிச்சு இருக்கேன். அதுல நானும் என் ஃப்ரெண்டுமா மொத்தமே ரெண்டு பேர் தான் வேலை செய்யுறோம். நீ யாருன்னு உனக்கு தெரியும் தானே! பெரிய கம்பெனி வச்சு நடத்துறது ரெண்டாம் பட்சம். முதல் விஷயம் நீ எதிர்கட்சித் தலைவர் திருமூர்த்தியோட பொண்ணு. சும்மா வந்து கேட்டதும் உங்க அப்பா எனக்கு உன்னை கல்யாணம் பண்ணி கொடுத்துடுவாரா?” என்று கோபத்தில் கொதித்தான் வசீகரன்.
“வசி என்ன டா?” என்று எட்டி அவனது கையை அவள் பிடிக்க வர,
“புரிஞ்சுக்க நேத்ரா. இதுக்கு பயந்து தான் நான் உன் காதலை ஏத்துக்க மாட்டேன்னு அவ்வளவு பிடிவாதம் பிடிச்சேன். நீ தான் என்னை கன்வின்ஸ் பண்ணின.” என்று சோர்வாக அவன் தலை சாய்த்தான்.
“இப்பவும் நானே எல்லாரையும் கன்வின்ஸ் பண்ணி உன்னைக் கல்யாணம் பண்ணனும். அதானே டா? சரி டா நான் செய்யுறேன். ஆனா நீ எனக்காக ஒன்னே ஒன்னு மட்டும் செய்யணும்.” என்று பீடிகை போட்டாள்.
“என்ன? என்ன செய்யணும் சொல்லு. எந்த பிரச்சனையும் இல்லாம இந்த கல்யாணம் நடக்க நான் என்ன வேணாலும் செய்வேன்.” என்று வேகமாக வாய் விட்டான் வசீகரன்.
“ம்ம். என் அண்ணன் கிட்ட மட்டும் பேசி அவனோட சம்மதம் வாங்கு. மத்த எல்லாமே அதுவே நடக்கும்.” என்று கூறிவிட்டு வாங்கி வைத்திருந்த சீஸ் கேக்கை டெஸர்ட் ஃபோர்க் கொண்டு அழகாக வெட்டி உண்ணலானாள்.
அவள் கூறியதைக் கேட்ட வசீகரனுக்கு உலகம் தலைகீழாக சுழல்வது போல இருந்தது. நேத்ராவை காதலிக்க ஆரம்பித்து ஐந்து ஆண்டுகள் ஆகிறது. அதில் அவள் அதிகமாக பேசியது அவளது அண்ணன் நீரூபனைப் பற்றித்தான். அதிலும் அவனது முடிவெடுக்கும் திறன், வார்த்தை பிரயோகங்கள் பற்றி அவள் கூறியதெல்லாம் நினைவில் வந்து அவனைக் கலங்கச் செய்தது.
திருமூர்த்தி அரசியல்வாதி, சிரித்த முகமாக தொலைகாட்சியில் பார்த்திருக்கிறான். ஆனால் நீரூபனை பல முறை பல இடங்களில் கோபமும் வேகமுமாக கண்டிருக்கிறான். அவனை நினைத்தாலே வசீகரனுக்கு வியர்த்தது.
அவனது வியர்வை வழிந்த முகத்தைக் கண்டு உள்ளுக்குள் சிரித்தபடி, ‘சக்சஸ்’ என்று யாருக்கோ குறுந்தகவல் அனுப்பினாள் நேத்ரா.

நேத்ரா, வசீ இவங்களை எல்லாம் திரும்ப பார்த்ததுல ரொம்பவே சந்தோஷம் கா😍