cover

Adhigara 7

கல்வி அலுவலர் முன் அமர்ந்திருந்த நீரூபனின் முகத்தில் மருந்துக்கும் இளக்கம் இல்லை. அவன் எதிர்க்கட்சித் தலைவர் மகன் என்று தெரிந்ததும் அந்த அலுவலர் செய்த செயலில் கடும் கோபத்தில் இருந்தவன் நேராக இப்பொழுது ஆட்சியில் இருக்கும் கல்வி அமைச்சர்களுக்கு போன் செய்து பேசிவிட அவர் அலுவலரிடம் என்ன பேசினாரோ இங்கே அவர் நீரூபன் முன் பணிவாக வந்து தன் அறைக்கு அழைத்துச் சென்றிருந்தார்.

“சார் சாரி. வேணும்ன்னு உங்களை காக்க வைக்கல” என்று கல்வி அலுவலர் சமாளிப்பாகக் கூற,

“நீங்க என்ன செய்தீங்கன்னு உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும். அப்பறம் எதுக்கு பூசி மொழுகுறீங்க?” என்று நேரடியாக முகத்துக்கு நேரே உரைத்தான் நீரூபன்.

இதை சற்றும் எதிர்பார்க்காத அலுவலர் திகைத்தபடி,

“மன்னிச்சுடுங்க சார். உங்களுக்கு என்ன வேணுமோ சொல்லுங்க. நான் உதவி செய்யறேன்.” என்றார் மிகவும் பணிவுடன்.

“சார் நீங்க எனக்கு எந்த உதவியும் செய்ய வேண்டாம். நான் என் ஸ்கூலுக்கு சில அப்ரூவல் எல்லாம் கேட்டிருக்கேன். அதை மட்டும் பார்த்து அப்ரூப் பண்ணுங்க.

அதுக்காக அப்படியே கையெழுத்து போடுங்கன்னு சொல்லல. என் ஐடியா, மத்த டிபார்ட்மெண்ட்ல கொடுத்த அப்ரூவல் எல்லாமே அட்டாச் பண்ணிருக்கேன்.”என்றவன்,

“அப்படியே உங்க பாயிண்ட் ஆப் வியு இருந்தாலும் சொல்லுங்க. என் ஸ்கூலுக்கு யார் ஐடியா சொன்னாலும் நான் ஏத்துக்குவேன். அவங்க ஆளுங்க கட்சி ஆளா எதிர்க்கட்சியான்னு பார்க்க மாட்டேன்.” என்று கடைசியில் அவருக்கு ஒரு குட்டு வைக்கவும் மறக்கவில்லை.

அவர் மிகவும் அசவுகர்யமாக உணர்ந்து, “சார் நீங்க எதிர்கட்சித் தலைவர் மகன்னு என் பி.ஏ சொன்னதும் ஆளுங்கட்சி என்னை எதுவும் சொல்லிடக் கூடாதுன்னு தான் அப்படி நடந்தேன். அரசியல்வாதி ஒவ்வொருத்தர் அதிருப்திக்கும், அதிகாரிங்களான எங்களை தான் பந்தாடுறாங்க. ஆரம்பத்துல அதெல்லாம் வேகமா எதிர்த்தாலும் போக போக எவ்வளவு பேரோட போராடுறதுன்னு ஆளுங்கட்சிக்கு சப்போட்டாவே போயிடறது வழக்கமாயிடுச்சு சார்.” என்று தன்னிலையை விளக்கினார்.

அதற்கு பதிலேதும் கூறாமல், “நான் அரசியல்வாதி மகனா இல்லாம இப்ப ஒரு தொழிலதிபரா, அதை விட, எளிய மாணவர்கள் கல்விக்கு என்னால என்ன செய்ய முடியும்ன்னு தேடுற ஒரு ஆர்வலரா தான் இங்க வந்திருக்கேன் சார். எனக்கு கட்சி பேதமெல்லாம் இல்ல. அதுனால தான் உங்க கல்வி அமைச்சர் சாதாரணமா என்கிட்ட பேசுறாரு. இந்த பைலை என் பி.ஏ கிட்ட கொடுத்துட்டு அமைச்சருக்கு ஒரு போன் பண்ணி சொல்லி இருந்தாலே போதும். நான் வந்திருக்க வேண்டிய தேவையே இல்ல. ஆனா கல்வி அலுவலர் நீங்க தான் சார். உங்களுக்கு தான் மாணவர்களுக்கு என்ன தேவை இருக்கு, எந்த விதமா ஒரு விஷயத்தை செய்தா மாணவர்கள் இன்னும் அதிகமா படிக்க வருவாங்க, இல்ல படிப்புல ஆர்வம் காட்டுவாங்கன்னு தெரியும். நேர்ல பேசினா எனக்கும் ஒரு ஐடியா கிடைக்கும்ன்னு வந்தேன்.” என்று எழுந்து கொண்டவன் விடைபெறுவதாக தலையசைத்தான்.

“நான் பார்த்துட்டு உங்களுக்கு கால் பண்றேன் சார். நீங்க அடுத்த கல்வி ஆண்டுல தானே ஸ்கூலை திறக்க போறீங்க?” என்றதும்,

“ஆமா சார் அந்த ஸ்கூலை முன்னாடி வச்சிருந்தவர் க்ளோஸ் பண்ணி பசங்களை வேற இன்ஸ்டிடியூஷனுக்கு அனுப்பிட்டார். அவங்க ஸ்கூலை ஏதோ கம்பெனிக்கு விற்க இருந்தாங்க. நான் தான் பேசி ஸ்கூலாவே நடத்துறேன்னு வாங்கினேன்.” என்றவன் விடைபெற்றான்.

அவன் போனதும் கல்வி அலுவலர் பி.ஏ வந்து,

“சார் கல்வி அமைச்சர் அரசியல் மரியாதைக்கு போன் பண்ணி இருப்பார். எதுக்கும் பார்த்தே இவருக்கு செய்ங்க.” என்றதும்,

“பேசாம போய்யா. உன்னால தான் எனக்கு இன்னிக்கு நிறைய சங்கடம். அவர் அவ்வளவு தூரம் சொன்ன பின்னாடியும் செய்யாம இருக்க மாட்டேன். நான் மினிஸ்டர் கிட்ட பேசிக்கிறேன். நீ போயி வேற வேலையை பாரு.”என்று காய்ந்தார்.

அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த நீரூபன் நேராக வீட்டிற்கு செல்ல வண்டியை செலுத்தும் போது அவனது பி.ஏ அழைத்தான்.

“சொல்லு மணீஷ்” என்று வண்டியை ஓட்டியபடி புளூடூத் ஹெட்செட்டில் பேசினான்.

“கட்சி ஆபிஸ்ல இருந்து போன் பண்ணினாங்க அண்ணா. உங்களை பார்க்க எம்.எல்.ஏ. கோதண்டம் பார்முக்கு வர்றதா தகவல் சொன்னாங்க.” என்றதும்,

“இந்த எஜிகேஷன் டைரக்டரை பார்க்க அவங்க டைம் மாத்தினதுல நான் மாமா வரேன்னு சொன்னதை சுத்தமா மறந்துட்டேன் மணீஷ். அவர் வந்தா ரிசீவ் பண்ணி அவருக்கு இளநீர் கொடு. நான் வேகமா வர டிரை பண்ணுறேன்.” என்று வாகனத்தை வேகமாக செலுத்தினான்.

அவன் வண்டி ஓட்டிய வேகத்தில் புறநகர் சாலையில் புழுதி பறந்தது. கார்களும் லாரிகளும் செல்லும் சாலையில் அனாயாசமாக அந்த ஜீப்பை வளைத்து வளைத்து ஓட்டி அவன் ஃபார்ம் வாசலில் கொண்டு வந்து நிறுத்தியபோது எதிரே பைக்கில் ஆனந்தும் பூமியும் நின்றிருந்தனர்.

வண்டியை வாயிலில் நிறுத்தி, “ஏய் கத்திரிக்கா இங்க என்ன பண்ற?” என்று பூமியை வினவியவன் ஆனந்தைப் பார்த்து முறுவலித்தான்.

“அது வந்து மாமா.. அது” என்று பூமி தடுமாற,

“சரி என்னவோ, உள்ள வா வந்து இளநீர் சாப்பிட்டு வீட்டுக்கு பழமெல்லாம் கொண்டு போ.” என்று வண்டியை கேட்டினுள் செலுத்தினான்.

“போ மச்சி. மாமாவே கூப்பிடுறாரு டா” என்று மகிழ்ச்சியில் அவள் கூவ,

“எருமை, அவர் தினமும் நீ இங்க என்ன பண்றன்னு தான் முதல் கேள்வி கேட்டாரு. அது புத்திக்கு உறைக்குதா உனக்கு? பொம்பள பிள்ளை இப்படி அவர் பின்னாடி சுத்துறது தப்பு, இதுல நான் வேற எக்ஸ்ரா. எனக்கென்னவோ உன் மாமா உன்னை கண்டுக்காம இருக்க காரணமே நான் தானோன்னு தோனுது டி.” என்று வண்டியை அவனும் உள்ளே செலுத்த,

“என் மாமாவுக்கு என்னை தெரியும் போடா.” என்று கழுத்தை வெட்டிக்கொண்டு இறங்கிச் சென்றாள்.

“பார்த்து டி கழுத்து திரும்பிக்க போகுது. மாமாவுக்கு தெரியும்ன்னா இந்நேரம் நீ அவருக்கு பொண்டாட்டியா மாறி இருக்கணும். இன்னுமே நீ என் பிரெண்டா தான் சுத்துற. சரியான லூசு.” என்று அவன் திட்ட, அதெல்லாம் காதில் வாங்காமல் அங்கிருந்த பழனி தாத்தாவிடம் சென்றாள் பூமி.

“என்ன தாத்தா இன்னிக்கு உங்க பண்ணைல என்ன சாப்பாடு?” என்று  டேபிளின் நுனியில் ஏறி அமர்ந்து கொண்டு அவர் பேனாவை எடுத்து அங்கிருந்த நோட்டில், தோன்றிய ஏதோ ஒன்றை அவள் கிறுக்கிக் கொண்டிருந்தாள்.

“பாப்பா தம்பி உங்களுக்கு பழமெல்லாம் கூடையில போட்டுத் தரச் சொல்லிட்டு போனாரு. வாங்க நம்ம தோட்டத்துக்கு போவோம்.” என்று அவளை அழைத்துக் கொண்டு அலுவலகத்தை விட்டுக் கிளம்பினார்.

ஆனந்தும் அவர்கள் பின்னால் செல்ல சற்று நேரத்தில் மூன்று  ஃபார்ச்சூனர் காரில் தன் தொண்டர் புடை சூழ வந்து இறங்கினார் கோதண்டம்.

அவரை அலுவலகத்தின் உள்ளே மணீஷ் அழைத்து வர, “வாங்க மாமா” என்று அன்பாய் வரவேற்றான் நீரூபன்.

“எப்படிப்பா இருக்க? பார்த்து பேசி எவ்வளவு நாள் ஆகுது? ஆபிஸ் பக்கம் வந்தா என்ன?” என்று அவனை ஆரத் தழுவிக் கொண்டார் அவர்.

“எனக்கு வேலையே சரியா இருக்கு மாமா. வீட்டுக்கே நான் நேரத்துக்கு போறதில்ல. இதுல எங்க இருந்து கட்சி ஆபிசுக்கு வர்றது?” என்றவன் அவரை சோஃபாவில் அமர வைத்து எதிரே பார்வையாளர் நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தான்.

“என்ன விஷயம் மாமா? ஏதோ பெருசா இருக்கவும் தான் நேர்ல பார்க்க வந்திருக்கீங்க! எதுனாலும் நேரடியா சொல்லுங்க” என்று உரிமையாக வினவினான்.

“வேற என்ன கேட்கப் போறேன் நீரூபா? உன் அப்பாவுக்கு உன்னோட உதவி இப்ப தேவைப்படுது. நீ இப்ப கொஞ்சம் அவருக்கு தோள் கொடுத்தா நல்லாயிருக்கும்.”

“அதான் அக்கா கூடவே இருக்காளே! அவ பார்த்துக்காமலா? அவ செய்யாத உதவியை நான் செய்யப் போறேனா என்ன?” என்று சிரித்தான்.

“உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறதுன்னு தெரியல நீரூபா. அஞ்சனா அப்பாவை எங்க யார் கூடவும் கலந்து ஆலோசிக்க விடுறதே இல்ல. சமீபமா அவ ஆலோசனையின் பேர்ல அப்பா எடுத்த எந்த முடிவும் சரியானபடி அமையல. உன் அக்காவுக்கு அரசியல் தெரிஞ்ச அளவுக்கு மரியாதை தெரியல.” என்று அடுக்கினார்.

“மாமா மாமா… இருங்க. இப்ப நான் என்ன பண்ணனும்? அப்பா கிட்ட உங்க எல்லார் கூடவும் கலந்து பேசச் சொல்லணுமா? அக்கா கிட்ட மரியாதையா நடந்துக்க சொல்லணுமா? என்ன செய்யணும்? நாளைக்கு காலைல சொல்லிடுறேன்.” என்று அவன் மணீஷை பார்க்க அவன் வேகமாக சென்று இளநீர் ஒன்றை எடுத்து வந்து கோதண்டத்திடம் நீட்டினான்.

வாங்கிக் கொண்டு அதில் கொஞ்சம் பருகியவர், “தம்பி எங்களுக்கும் வயசாகுது. இனிமே சின்னவங்க நீங்க மேல வந்து கட்சியை தூக்கிப் பிடிக்கணும். நீ இப்ப சரின்னு சொல்லு. உனக்கு எல்லா வேலையும் செய்ய என் பையனை முழு நேரமும் உன்னோட இருக்கச் சொல்றேன். தலைவர் கிட்டயும் நான் பேசுறேன். நாளைக்கு இளைஞர் அணித் தலைவரா வந்து பதவி ஏத்துக்கப்பா.” என்றார் ஆவலாக.

“என்ன மாமா உங்க வீட்ல மதிய சாப்பாட்டுக்கு கூப்பிடுறது போல சொல்றீங்க. கட்சிக்கு தலைவர் என் அப்பா. இப்போதைக்கு மகளிர் அணித் தலைவி என் அக்கா. ஏற்கனவே என் மாமாவும் அப்பப்ப கட்சி ஆபிஸ்ல தலையை காட்டிட்டு இருக்காரு. நானும் அங்க வந்தா குடும்ப அரசியல்னு பேசுவாங்க மாமா.” என்றான்.

“அட ஊரு ஆயிரம் பேசும் தம்பி. ஆனா இப்ப கட்சிக்கு நீ தான் வேணும். வர்ற உள்ளாட்சி தேர்தல்ல நாம ஜெயிக்க வாய்ப்பு ரொம்பக் கம்மின்னு ரெண்டு காலேஜ் போல்லயும், நாலு செய்தி சேனல் போல்ல வந்திருக்கு. அடுத்த சட்டமன்றத் தேர்தல்ல கண்டிப்பா ஆட்சியை பிடிச்சிடலாம்ன்னு ஒரு நம்பிக்கையில் தான் கட்சியாட்கள் எல்லாரும் இன்னும் வேலை செய்துட்டு இருக்காங்க பா. உங்க அக்கா மரியாதையும் தரல, சொல்றத கேட்கறதும் இல்ல, உங்க அப்பா கிட்ட பேசவும் விடுறதில்ல. நீ மட்டும் தான் நீரூபா எங்க வெளிச்சம்.” என்றார்.

மனதிற்குள் சிரித்த நீரூபனுக்கு இவர் வீட்டில் இருந்து கிளம்பும் போதே பேச வேண்டியதை மனப்பாடம் செய்திருப்பார் போல என்ற எண்ணம் வர, அதைக் காட்டிக் கொள்ளாமல்,

“மாமா நான் யோசிச்சு இரண்டு நாள்ல உங்களை வந்து உங்க ஆபிஸ்ல பார்க்கறேன். பார்ட்டி ஆபிஸ்ல இல்ல. மறந்துட வேண்டாம்.” என்று கூறி அவரை அனுப்பி வைத்தான்.

மணீஷ் கேள்வியாக அவனை நோக்க, “எல்லாம் தூண்டில் தான்.” என்றவன் சிரிக்க,

“மாமா நாளைக்கு எங்க வீட்டுக்கு வர முடியுமா?” என்று எதிரில் வந்து குதித்து நின்றாள் பூமி.

“ஏய் நீ இன்னும் கிளம்பலையா?” என்று ஆச்சரியமாக வினவியவன்,

“நாளைக்கு எதுக்கு வரணும்?” என்றும் கேட்டு அங்கிருந்த விளை பொருட்களின் தரத்தை சரி பார்த்தபடி நடந்தான்.

“அம்மா அப்பாவுக்கு நாளைக்கு கல்யாண நாள். வந்தா என் அம்மா கையால சாப்பிடலாம்.” என்று அவள் கண்ணை சுழற்ற,

“உன் அப்பாவுக்கு நான் வந்தா பிடிக்காது. எதுக்கு அவரை சங்கடப்படுத்தணும்? நாளைக்கு காலைல அத்தைக்கு போன் பண்ணி வாழ்த்து சொல்லிக்கிறேன்.” என்று கூறிவிட்டு,

“நீ அடிக்கடி இந்த பக்கம் வந்துட்டு இருக்குறது உன் அப்பாவுக்கு தெரியுமா பூமிகா? பார்த்து இருந்துக்கோ. நீ அவருக்கு ஒரே பொண்ணு. அவர் வருத்தப்படுற மாதிரி எதுவும் செய்யாத.” என்று கூறிவிட்டு மணீஷை அர்த்தமாக நோக்கியவன் தன் ஜீப்பில் சென்று ஏறிக்கொண்டான்.

ஆனந்த்தைப் பார்த்து புன்னகைத்துவிட்டு அவன் கிளம்ப,

“நீ சொன்னது உண்மையா இருக்குமோ மச்சி? நாளைல இருந்து நான் தனியா வரவா?” என்ற பூமியை வெட்டவா குத்தவா என்று முறைத்தான் ஆனந்த்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!