cover

Adhigara 12

Adhigara 12

நீரூபன் தன் அலுவல் அறையில் அமர்ந்திருந்தான். அவனது சிந்தனை முழுவதும் முதல் நாள் அவனது கட்டளையின் பெயரில் பள்ளியைப் பற்றி விசாரித்து கொடுக்கப்பட்ட அறிக்கையின் மீது இருந்தது.

அந்த பள்ளியை வாங்கும் முன்னரே அதற்கான ஆயத்த வேலைகளை முடித்திருந்ததால் துவக்கப் பணிகளில் கவனம் செலுத்தி இருந்தவனுக்கு தினமும் ஏதோ ஒரு விதத்தில் இடைஞ்சல் வந்த வண்ணம் இருந்தது.

ஆரம்பத்தில் அது எதார்த்தம் என்று நினைத்த நீரூபன், கட்டிட வேலைக்கு வந்தவர்கள் தங்க ஏற்படுத்தப்பட்ட ஷெட்களில் வித விதமான பாம்புகள் வந்து நெளியவும் இதன் பின்னே வேறு ஏதோ இருப்பதை உணர்ந்தான்.

Adhigara 12

தன் சந்தேகத்தை உறுதி செய்ய தனியார் துப்பறியும் நிறுவனத்தை தொடர்பு கொண்டான்.

மூன்று நாட்களில் இதற்கான மூலகாரணம் என்ன, யார் திரைமறைவில் நின்று காரியம் சாதிக்க நினைப்பது என்பதனை பற்றிய முழு அறிக்கையையும் அந்த நிறுவன அதிகாரி அவனுக்கு இன்று காலையில் வழங்கிச் சென்றிருந்தார்.

ஆனந்த்தைப் சந்திக்கச் சென்ற போது அவரையும் வரச் சொல்லி இருந்தான்.

அவர் அவனிடம் எதுவும் கூறாமல் அந்த கோப்பை மட்டும் கொடுத்துவிட்டு கடந்து சென்றிருந்தார்.

அலுவலகம் வந்து வாசித்தவன் முகம் இரத்தமென சிவந்து விட்டது. பின்னால் நின்று முதுகில் குத்தும் யாரையும் அவ்வளவு எளிதில் விடுபவனல்ல நீரூபன் எத்தனைக்கு எத்தனை தன்னை சார்ந்தவர்களுக்கு நன்மை செய்கிறானோ அதே அளவுக்கு ஏன் அதை விட ஒரு படி மேலே சென்று தீங்கு செய்பவர்களை துவம்சம் செய்யும் குணம் கொண்டவன்.

அந்த கோப்பை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு அன்று வயல்வெளியில் முக்கியப் பணிகள் நடைபெறுவதால் அதனை பார்த்து விட்டு பள்ளிக்கு கிளம்ப தயாரானான்.

வெளியே வந்தவன் தன் ஜீப்பை எடுத்துக்கொண்டு பண்ணையின் மத்தியப் பகுதியில் இருக்கும் வயல்வெளிக்குச் சென்றான்.

அங்கே பாரம்பரிய வகை நெல் பயிரிடப்பட்டு செழித்து வளர்ந்து கொண்டிருந்தது. ஓர் வகை நெல்லுக்கான அறுவடைக் காலம் வந்துவிட இன்று அறுவடை ஆரம்பமாகி வேலை வேகமாக நடந்து கொண்டிருந்தது.

எல்லா வேலைகளுக்கும் இயந்திரம் வந்துவிட்டாலும் அதில் எது மனித ஆற்றலும் இணைந்து வேலையை சுலபமாக்குகிறதோ அதனை தேர்ந்தெடுத்து வாங்கி வேலைக்கு ஆட்களை குறைக்காதவாறு பார்த்துக் கொள்வதில் கவனமாக இருந்த நீரூபனை பண்ணை ஊழியர்கள் கொண்டாடுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

Adhigara 12

மேற்பார்வையிட பின் ஜீப்பில் எப்பொழுதும் போல ஏறி அமர்ந்து கொண்டு கைபேசியில் அர்ச்சனாவை அழைத்தான்.

அவர் ஏற்றதும், “என்ன மருமகனே கல்யாண நாளும் அதுவுமா அத்தைக்கு ஒரு வாழ்த்து கூட சொல்லலயே!” என்று கிண்டலாக ஆரம்பித்ததும் வாய்விட்டுச் சிரித்தான்.

“வாழ்த்து தானே! இந்தாங்க வாங்கிக்கோங்க. ஏழு ஜென்மத்துக்கும் நானே உங்க மருமகனா வந்து உங்களை நல்லா பார்த்துக்கறேன்.” என்று வாழ்த்த,

“அம்மாடி இது பெரிய வாழ்த்தா இருக்கே! இந்த ஒரு ஜென்மத்துக்கே மருமகனை பக்கத்துல வச்சு பார்த்துக்க முடியல. மத்த ஜென்மத்துல இப்படி இல்லாம இருக்கணும்னு சேர்த்தே வாழ்த்துங்க மருமகனே!” என்று மேலும் அவனை கேலி செய்தார்.

சிரித்துக்கொண்டே, “நெக்லஸ் நல்லா இருந்ததா? மாமாவுக்கு பிரேஸ்லட்டை எப்படியாவது மாட்டி விட்டுடுங்க.” என்று கூறியவனிடம்,

“அதெல்லாம் பண்ணிடலாம். ஆனா அந்த மலைக்குரங்குக்கு இப்ப எதுக்கு செயின்? அதுவும் அவ்வளவு அழகா டாலர் போட்டு” என்று கேட்ட தன் அத்தையை எண்ணி அவனுக்கு மேலும் சிரிப்பு தான் வந்தது.

“இப்ப உங்களுக்கு என்ன? அதே மாதிரி உங்களுக்கும் வேணும்ன்னா கேட்கணும். நான் வாங்கித் தருவேன். இப்படி பொறாமைல பொங்கக் கூடாது.” என்று சிரிக்காமல் கூறினான்.

“ஆமா அவ ஆடுற ஆட்டத்துக்கு செயின் ஒண்ணு தான் குறை. இதுல நாங்க அப்படியே அவ மேல பொறாமை பட்டுட்டாலும்…” என்று நொடித்துக் கொண்டார்.

“ஏன் அத்தை இப்படியே சொல்றீங்க? அவளுக்கு பிடிச்சிருக்கு அவ அந்த வேலையை செய்யுறா. விடுங்க. திட்டிட்டே இருக்காதீங்க.” என்று உரிமையாக அவரை அதட்டினான்.

Adhigara 12

“அவளுக்காக நீ என்கிட்ட சப்போர்ட் பண்ணி பண்ணித்தான் அவளை இஷ்டத்துக்கு விட்டேன். இப்ப பாரு இப்படி இருக்கா. உன் மாமாவும் மகளுக்கு தான் முழு சப்போர்ட். வீட்ல சொன்ன பேச்சே அவ கேட்கறது இல்ல. இதுல மட்டும் மாமனும் மருமகனும் ஒண்ணு போல இருக்கீங்க” என்று சலித்துக் கொண்டு, நாகரத்தினம், நேத்ரா பற்றி விசாரித்துவிட்டு கடைசியாக அஞ்சனா பற்றி வினவினார்.

“அக்கா நல்லா இருக்கா அத்தை. எனக்கு என் வேலையே சரியா இருக்கு. அவங்ககிட்ட அதிகம் பேச கூட நேரமில்லை” என்று தன்னிலை விளக்கம் அவன் கொடுக்க,

“நீ இப்படி சொல்லாத நீரூபா. அவ வித்தியாசமானவ. தனக்கு எல்லாம் தெரியும்ன்னு நினைப்பா ஆனா ஒரு பிடிவாதம் உள்ள குழந்தை மனநிலை தான் அவளுக்கு. நீ தான் அவகிட்ட அவளுக்காக நீ இருப்பன்னு அடிக்கடி சொல்லணும்.” என்றார்.

“இன்னிக்கு இந்த டாபிக் வேண்டாம் அத்தை. சில விஷயங்களை சின்ன வயசுல நினைச்ச மாதிரி இப்பவும் நினைச்சு வாழ முடியாது. நான் இப்போதைக்கு இதைப் பத்தி பேச தயாரா இல்ல.” என்று கூறிவிட்டான்

“சரி விடு தாய்மாமன் குணம் மருமக பிள்ளைகளுக்கு இருக்க தானே செய்யும்!” என்று கேலியாக தன் கணவரை பேச்சுக்குள் கொண்டு வந்தார்.

“ஏன் இப்போ மாமாவை வம்பு பண்றீங்க? நீங்களும் நானும் இப்படி பேசிக்கறது மட்டும் அவருக்கு தெரியட்டும், அப்ப இருக்கு உங்களுக்கு கச்சேரி.” என்று அவரை வாரி விட்டான்.

“மருமகனே நீங்க எனக்கு உறவுல மருமகனா இருக்க அவர் கட்டுன தாலி தான் காரணம். ஆனா அதுக்கு முன்னாடியே நீங்க என் சிநேகிதி மகன். அப்படிப் பார்த்தாலும் நீங்க மருமகன் தான். உங்க மாமா என்னை கேள்வி எல்லாம் கேட்க முடியாது.” என்று சட்டமாக கூறினார்.

“சரி சரி விடுங்க. திருமண நாள் வாழ்த்துகள் அத்தை. சந்தோஷமா இருங்க. அடுத்து எப்ப சந்தர்ப்பம் கிடைக்குதோ பார்ப்போம்” என்று அவன் விடைபெற அவரும் அவனை ஆசீர்வதித்து விடை கொடுத்தார்.

போனில் பேசிவிட்டு அப்படியே அமர்ந்தவன் முன்னே வந்து நின்றான் மணீஷ். அவன் கையில் சில கோப்புகள் இருக்க,

“என்ன மணீஷ்?” என்றவனிடம்,

Adhigara 12

“நேத்து அந்த ஸ்கூலுக்கு பக்கத்துல உள்ள லோக்கல்ஸ் சிலர் வந்து பிரச்சனை செய்ததா அங்க இருந்த சூப்பர்வைசர் போன் பண்ணி இருந்தார் அண்ணா.” என்றான் தயக்கமாக.

அவனுக்கும் அந்த விஷயம் அறிக்கையின் மூலம் தெரியுமென்பதால் அமைதியாக தலையசைக்க,

“இப்ப அங்க அந்த ஏரியா ரௌடி ஒருத்தன் சில ஆளுங்க கூட வந்து தண்ணி அடிச்சுட்டு இருக்கானாம். வேலை செய்ய விடலைன்னு சூப்பர்வைசர் சொன்னாரு” என்று அமைதியானான்.

“நீ என்கிட்ட எவ்வளவு நாளா வேலை பாக்கற?” என்று சம்பந்தம் இல்லாமல் விசாரித்தான்.

“ஏன் அண்ணா? நாலு வருஷமா இருக்கேன்.” என்று விழிக்க,

“நீ கனடால போய் ஏதோ கோர்ஸ் படிக்கணும்னு சொன்னல்ல?” என்று விசாரிக்க,

“ஆமா அண்ணா. “

“அப்ளை பண்ணிடு மணீஷ். படிப்பு, போக்குவரத்து, தங்கறது எல்லாத்துக்கும் நான் ஸ்பான்சர் பண்ணிடுறேன்.” என்று கூறி ஜீப்பின் மேலிருந்து இறங்கினான்.

“என்ன அண்ணா திடீர்னு?” என்று அவன் திகைக்க,

“நீயும் செய்த வேலையே எத்தனை நாளைக்கு செய்வ? அடுத்த கட்டத்துக்கு வாழ்க்கை நகர வேண்டாமா? சம்பளம் மட்டுமே ஒருத்தனை சந்தோஷப் படுத்தாது மணீஷ். அவன் மனசுல உள்ள ஆசை , கனவு இதை நோக்கி அவன் நகரணும். இன்னும் உங்க வீட்ல உனக்கு கல்யாண பேச்சு எடுக்கல. இப்ப படிச்சிட்டு வந்தா உனக்கு இன்னும் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். கல்யாணம் பண்ணும்போது சரியா இருக்கும்.” என்று தோளில் ஆதரவாக தட்டிக் கொடுத்து,

“ஜாப் போர்ட்டல்ல எனக்கு செக்ரெட்டரி போஸ்டிங் வெக்கென்சி போஸ்ட் பண்ணிடு. இந்த மாசத்துல செலக்ட் பண்ணினா நீ கிளம்புறதுக்குள்ள கொஞ்சம் டிரெயின் பண்ணிட்டு போகலாம்.” என்று கூறிவிட்டு ஜீப்பில் ஏறி புறப்படத் தயாரானான்.

“அண்ணா நான் வேலையில் எதுவும் தப்பு பண்ணிட்டேனா? என் மேல கோபப்பட்டு அனுப்பலயே? ” என்று கலக்கமாக வினவினான்.

அதற்கு சிரித்த நீரூபன், “நீ உன் வேலையில எவ்வளவு தெளிவாவும், சரியாவும் இருந்தாலும் உன் மனசு உன் விருப்பமான படிப்பு மேல தான் இருக்கு. நேத்து ஒரு ஃபைல் தேட உன் சிஸ்டமை ஆன் பண்ணினேன். அதுல நீ உன் படிப்பாக பார்த்து எடுத்து வச்சிருந்தத கவனிச்சேன். அதான் மணீஷ். உன்னை மாதிரி நம்பகமான ஆள் கிடைக்கிறது ரொம்பவே கஷ்டம் தான். ஆனா என்னோட வசதிக்காக உன்னை கிணத்து தவளை மாதிரி வச்சிருக்க எனக்கு விருப்பம் இல்ல. போய் படிச்சிட்டு வா. வேலைக்கு போக விருப்பம்ன்னா சந்தோஷமா போ. இல்ல தொழில் செய்ய ஆசைன்னா பக்கா பிளான் எடுத்துட்டு வா நான் ஃபண்டிங் பண்றேன்.” என்று கூறிவிட்டு நன்றியாக கண்ணீர் சிந்திய மணீஷை தட்டிக்கொடுத்து விட்டுக் கிளம்பினான்.

போகும் வழியில் பள்ளிப் பணிக்கு நியமித்த சூப்பர்வைசரை அலைபேசியில் அழைக்க,

எடுத்தவர் குரலில் அத்தனை பதற்றம்.

“நானே கூப்பிட இருந்தேங்க. இந்த ஏரியா ரௌடின்னு சொல்லி இவ்வளவு நேரமும் ஸ்கூல் படிக்கட்டில உக்கார்ந்து குடிச்சு சீட்டாடி அராஜகம் பண்ணிட்டாங்க சார்.” என்றவர் அவனது கோபத்தை எதிர்பார்த்து காத்திருக்க, அவனோ,

“இருக்காங்களா இல்ல கிளம்பியாச்சா?” என்று சாவகாசமாக வினவினான்.

“வேற எங்கயோ போகணும்னு பேசிட்டு இருந்தாங்க சார். கிளம்ப போறாங்கன்னு நினைக்கிறேன்.” என்று திகைப்புடன் கூறினார்.

“சரி அவங்களை ஒரு போட்டோ மட்டும் எடுத்து என் ஆபிஸ் நம்பர், அதான் இந்த நம்பருக்கு வாட்ஸ்ஆப்ல அனுப்பிடுங்க.” என்று அழைப்பைத் துண்டித்தான்.

வாகனம் வேகம் குறைந்து மெல்ல பள்ளி செல்லும் சாலையில் சென்றது.

அவர்களின் புகைப்படம் வந்ததும் ஜீப்பை ஓரமாக நிறுத்திவிட்டு, சில அழைப்புகளை மேற்கொண்டவன் அப்படியே இருக்கையை பின்னால் சாய்த்து கண் மூடிப் படுத்துக் கொண்டான்.

சரியாக இருபதாவது நிமிடம் அவனது கைபேசியில் குறுஞ்செய்தி வந்ததன் அடையாளமாக ‘டிங்’ என்ற ஓசை எழுந்தது.

எடுத்துப் பார்த்தவன் முகத்தில் நினைத்ததை முடித்த திமிரான புன்னகை பரவியது.

அடுத்த ஐந்து நிமிடம் தனக்குப் பிடித்த பாடலை ஒலிக்கவிட்டுக் கேட்டவன் ஒரு எண்ணை தனது தனிப்பட்ட கைபேசியிலிருந்து அழைத்தான்.

அழைப்பை ஏற்றவுடன் சத்தமாக சிரிக்கத் துவங்கினான்.

எதிரில் இருந்தவருக்கு அவனது சிரிப்புக்கான காரணம் விளங்கி இருக்கவில்லை.

“என்ன உன் ஆளுங்க அடிபட்டு ஆஸ்பத்திரிக்கு போன தகவல் வந்ததா?” என்றான் அழுத்தமாக.

சில நொடிகளுக்கு முன் தனக்கு வந்த செய்தியை இவன் எப்படிக் கூறுகிறான் என்று அந்த பக்கத்தில் இருந்தவன் சிந்திக்க,

“ரொம்ப யோசிக்காத என் காண்ட்ராக்ட்ல உள்ள லோடு லாரி வச்சு நான் தான் இடிக்க சொன்னேன். இதுக்கு மேல ஸ்கூல் விஷயத்துல நீ தலையிட்டா சொந்த அக்கா புருஷன்னு கூட பார்க்க மாட்டேன் ஞாபகத்துல வச்சுக்கோ.” என்று அழைப்பைத் துண்டித்தான்.

Adhigara 12

கையில் இருந்த கைபேசியை வெறித்தபடி நின்ற ராக்கேஷ் இவனது இந்த முகத்தை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை என்று அவனது பயம் அப்பிய முகத்தில் இருந்து வெட்டவெளிச்சமாக தெரிந்தது.


அன்புடன்

ஜெயலட்சுமி கார்த்திக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!