Adhigara 11

Adhigara 11

தன்னிடம் பேச வந்துவிட்டு தன் மடிக்கணினியில் கவனமாக இருந்த நேத்ராவை முறைத்துக் கொண்டிருந்தான் வசீகரன்.

அவளோ அண்ணன் தன்னிடம் கொடுத்த வேலைக்காக கருமமே கண்ணாக ஆயத்தப் பணிகளில் மூழ்கி இருந்தாள்.

வாங்கி வைத்திருந்த மோஜிடோ தன் குளிர்ச்சியை இழந்திருந்தது போல வசீகரனும் பொறுமை இழந்து போயிருந்தான்.

Adhigara 11

“ஏய் ஐஸ்.. நான் கிளம்புறேன் நீ உன் லேப்டாப் கூடவே ஜாலியா இரு” என்று கூறிவிட்டு எழுந்து கொண்டான்.

“வசீ.. பிளீஸ் உட்காரு டா. டூ மினிட்ஸ்ல இது முடிஞ்சுடும்.” என்றவளை தீயாய் முறைத்தான்.

“இதைத்தான் டி ஒரு மணி நேரமா சொல்லிட்டு இருக்க.” என்று அந்த மோஜிடோவை ஓரே மூச்சில் குடித்துவிட்டு படாரென கண்ணாடிக் கோப்பையை கீழே வைக்க,

“வசீ, அண்ணா சொன்னதுக்காக அப்பா கட்சி ஆபிஸ் பக்கத்துல ஒரு ஆபிஸ் ஸ்பேஸ் தேடிட்டு இருந்தேன் டா. சரியா கிடைக்கல. இப்ப தான் 50 சீட் உள்ள ஸ்பேஸ் இருக்கிறதா ப்ரோக்கர் ஒருத்தர் மெயில் அனுப்பி இருந்தாரு. அதான் டா பேசிட்டு இருந்தேன்.” என்று அவனை சமாதானம் செய்ய முயன்றாள்.

“அப்பறம் எதுக்கு டி என்னை வர சொன்ன? என் ஆபிஸ்ல எவ்வளவு வேலை இருக்கு தெரியுமா? அந்த  ஆஷ்லே நான் கூட இருந்தாலே பாதி நேரம் சோஷியல் மீடியால தான் குடியிருப்பான். புதுசா ஒரு கம்பெனி சைபர் செக்யூரிட்டி, செர்வர் மெயின்டெய்னன்ஸ் கொடேஷன் கேட்டாங்க. சரியா கோட் செஞ்சு கொடுத்தா அவங்க சிஸ்டர் கன்சர்ன் மட்டுமே இன்னும் நாலு கிடைக்கும்  அப்படியே மேல வந்திடலாம்.” என்று கண்களில் கனவு மின்னக் கூறினான்.

அவன் படித்த படிப்புக்கு கம்பெனிகள் கூப்பிட்டு வேலை கொடுத்தது அதுவும் சம்பளம் லட்சங்களில். ஆனால் நேத்ராவை மணக்க வேண்டுமென்றால் அவன் கண்டிப்பாக தொழில் செய்து பெயர் எடுக்க வேண்டுமென்ற ஒரே காரணத்திற்காக தன் நண்பன் ஆஷ்லேவுடன் இணைந்து துவங்கிய நிறுவனம் தான் ‘ஸ்மார்ட் சிஸ்டம்ஸ் அண்ட் சொலுஷன்ஸ்’

நேத்ரா அவனது நிலை உணர்ந்து, “சாரி வசீ. வேணும்ன்னு உன்னை அலைய வைக்கல. அண்ணா கேட்டாங்கன்னு அப்பாவுக்கு ஹெல்ப் பண்ண ஓகே சொல்லிட்டேன். ஆனாலும் அக்காவை நினைச்சா ரொம்ப பயமா இருக்கு. உன்கிட்ட பேசினா கொஞ்சமாவது பெட்டரா ஃபீல் பண்ணுவேன்னு தான் வர சொன்னேன்.” என்று வருத்தத்துடன் கூறினாள்.

“உன் அக்கா கிட்ட என்ன பயம்? ஒருவேளை இருந்தாலும் அதை உன் அண்ணன் கிட்ட நீ சொல்லி இதை ஸ்கிப் பண்ணி இருக்கலாம்ல?” என்று அவளருகில் அமர்ந்து கைகளைப் பற்றிக்கொண்டான்.

“உனக்கு புரியல வசீ. அப்பா எத்தனையோ தடவை அண்ணனை கட்சியில் சேர்ந்து வேலை பார்க்க சொன்னாரு. அண்ணா ரொம்ப கிளியரா நோ சொல்லிட்டாங்க. ஆனா அதே அண்ணா இன்னிக்கு அப்பாவுக்கு ஹெல்ப் பண்ண சொல்லி என்னைக் கேட்கறார்ன்னா அதுக்கு பின்னாடி பலமான காரணம் இருக்கும்.”

Adhigara 11

“என்ன காரணம்? அப்பாவை ஜெயிக்க வைக்க தான் இருக்கும்.” என்று தோள் குலுக்கிய வசீகரனை லேசாக அடித்தவள்,

“அவர் நினைச்சிருந்தா இந்த ஃபீல்ட்ல உள்ள டாப் மோஸ்ட் எலெக்ஷன் கேம்பையின் மேனேஜ்மென்ட் கம்பெனி யாரை வேணாலும் அப்பா கிட்ட கைகாட்டி விட்டுருக்கலாம். ஆனா அவங்க காசுக்கு தான் வேலை செய்வாங்க. ஆனா நான் அப்பாவோட பேர், மரியாதை இதுக்கு யோசிப்பேன், தப்பா எதுவும் நடக்காம இருக்க நூறு சதவிகிதம் விழிப்பா இருப்பேன். அப்ப அண்ணனுக்கு தேவை அப்பாவோட பேர் கெடாம இந்த உள்ளாட்சி தேர்தல்ல நல்ல வாக்கு வங்கியோட ஜெயிக்கணும்.” என்று அவள் மனதில் இருந்ததை மடை திறந்து கூறிக்கொண்டிருந்தாள்.

“ம்ம் என்ன டி திடீர்னு உன் பேச்சுல இவ்வளவு அரசியல் வாசம் வீசுது. இதைப்பத்தி உனக்கு நல்லா தெரியுமா?” என்று வசீகரன் கேலியாக வினவ,

“ஹலோ பாஸ், பொலிடிஷியன் இரத்தம். யாரும் வந்து எதையும் சொல்லித் தரத் தேவையில்ல. அதெல்லாம் தன்னால வரும் எங்களுக்கு.” என்று அவள் அணிந்திருந்த மீடியம் கவுன் காலரை தூக்கி விட்டுக் கொண்டாள்.

“நீயும் அப்ப அரசியலுக்கு போவியா?” என்ற வசீகரனின் குரலில் உற்சாகமெல்லாம் வடிந்து ஒருவித புரியாத பாவம் நிறைந்திருந்தது.

அதை கவனித்த நேத்ரா, “ஐயோ வசீ, நான் ஏன் டா அரசியலுக்கு போக போறேன். அதான் அப்பா, அக்கா எல்லாம் இருக்காங்களே!” என்றவளின் மனதின் ஓரத்தில்,

‘உன் அண்ணா சொன்னா நீ போக மாட்டியா’ என்று கேள்வி எழுந்தது.

உடனடியாக எந்த தயக்கமுமின்றி, ‘அண்ணா சொன்னா என்ன வேணாலும் செய்வேன், அரசியல் என்னா பிசாத்து மேட்டர்’ என்று நீரூபனின் தங்கையாக மாறி அலட்சியமாக ஒரு புன்னகையை சிந்தினாள்.

***

மணி முற்பகல் பதினொன்றைக் கடந்திருந்தது.

வாயிலுக்கும் ஹாலுக்கும் பத்து முறைக்கு மேல் நடந்து விட்டாள் பூமிகா.

எப்படியும் நீரூபன் தன் அழைப்பை ஏற்று வருவான் என்று காத்திருந்தவள் எண்ணத்தில் காலை முதல் லோடு லோடாக மண்ணைக் கொட்டி இருந்தான் அவன்.

“மாமா” என்று பல்லைக் கடித்துக் கொண்டிருந்த வேளையில் வாசலில் வாகனத்தின் ஒலி கேட்க,

ஆர்வமாக வந்தவள், தன் வண்டியை நிறுத்திவிட்டு வீட்டினுள் நுழைந்து கொண்டிருந்த ஆனந்த்தை நோக்கி இழுத்து வைத்த புன்னகையுடன் “வா மச்சி” என்றாள்.

Adhigara 11

ஆனால் அவனோ முறைத்தபடி, “என்ன மாமா வருவாருன்னு ஆசையா வந்தப்ப இந்த மாங்கா மடையன் வந்து நிக்கிறான்னு நினைச்சியா?” என்று கேட்க,

ஆமென்று தலையசைத்துவிட்டு வேகமாக இல்லையென்று தலையாட்டினாள்.

“அடிச்சேன்னு வை அப்படியே அண்டர்கிரவுண்டுக்கு டிரான்ஸ்பர் ஆகிடுவ. ஆளைப் பாரு” என்று அவள் தலையில் தட்டிவிட்டு,

“எங்க இன்னிக்கான கதாநாயகி? ஆன்ட்டி.. மை டியர் அர்ச் ஆன்ட்டி..” என்று அவளைக் கடந்து சமையலறை நோக்கிச் சென்றான்.

அவனைக் கண்டு இன்முகமாக வரவேற்ற அர்ச்சனா,

“உன்னை காலைல வர சொன்னேன். லஞ்ச்சுக்கு தான் வந்திருக்க” என்று குறையாக கேட்க

“ஒரு புரொட்யூசர் காலைல கதை சொல்ல வர சொன்னாரு ஆன்ட்டி. பாதி சொல்லும்போதே, ‘ஆர்ட் பிலிம் வேண்டாம் தம்பி கமர்ஷியல் மசாலா இருந்தா சொல்லுங்க’ன்னு கேட்டாரு. நானும் தெலுங்குல சமீபமா வந்த ஒரு படத்துல கதையே இல்லன்னு அதோட சீனெல்லாம் மட்டும் வெட்டி வெட்டி சொன்னேன். ‘சூப்பர் பா போய் நல்ல கமர்ஷியல் ஹீரோ கிட்ட கால் ஷீட் வாங்கிட்டு வா’ன்னு சொல்லிட்டார்.” என்று கதை சொன்னபடி அவர் மேடையில் வைத்திருந்த அப்பளத்தில் இருந்து ஒன்றை உருவி உடைத்து வாயில் போட்டு அரைத்துக்கொண்டே கூறினான்.

“சூப்பர் ஆனந்த். அப்ப சீக்கிரம் உன் படத்தை தியேட்டர்ல பார்க்கலாம்னு சொல்லு” என்று வாழ்த்த ஆரம்பித்த அர்ச்சனாவை கையமர்த்தியவன்,

“முழுசா கேளுங்க ஆன்ட்டி, நான் சொன்னதே கதையே இல்லாத ஒரு கதை. அதுக்கு ஹீரோ பிடிச்சிட்டு வான்னு சொல்றாரு. நான் போய் பேசி எல்லாம் சரியா வந்து படம் எடுத்தா நாளைக்கு யாராவது என்னை மதிப்பாங்களா? அதுவே அடுத்தவன் கதை.. சொல்லப் போனால் கதையே அதுல இல்ல. சோ கதையில்லா கதை. அதை நான் ஆட்டயப் போட்டா உலகம் என்னை அசிங்கமா பேசாதா?” என்று வசனம் பேச,

“நீ நல்லா வசனம் பேசுற ஆனந்த். உனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சா போதும். உன் திறமையை நீ வெளிகாட்டுற விதத்திலேயே நீ நல்ல உயரத்தை எட்டிடுவ” என்று அரூடமாக கூறினார்.

Adhigara 11

“முதல்ல அந்த தடியனை எட்டி லாஃப்ட்டை தொடச் சொல்லு. இவரு எட்டுவாராம்ல?” என்று எங்கோ இருந்த எரிச்சலை ஆனந்த் மீது காட்டினாள் பூமிகா.

அர்ச்சனா மகளை கண்டனப் பார்வை பார்த்துவிட்டு, ஆனந்த்தை நோக்க, அவனோ,

“ஏன் ஆன்ட்டி வர வேண்டிய கெஸ்ட் யாரும் வரலையோ? மேடம் இருக்குற சூடைப் பார்த்தா டைனிங் டேபிள்ல இவ கை பட்டாலே எல்லா பாத்திரமும் சூடாகிடும் போலவே!” என்று கேலி செய்தான்.

“போடா” என்று அவனிடம் சலுகையாக சண்டையிட்டவள் அவனை இழுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தாள்.

“மாமாவை வர சொல்லிட்டு வந்தேன். ஆனா அவர் வரல” என்று வருத்தமாக கூறினாள்.

ஆனந்த் இதுவரை அமைதியாக இருந்தவன், “நீரூபன் சார் வரமாட்டார் டி” என்றான்.

அவள் புரியாமல் விழிப்பதைக் கண்டு மீண்டும் சமையலறை வந்து அவன் கொண்டு வந்திருந்த பையை எடுத்து அர்ச்சனாவிடம் நீட்டினான்.

அவர் என்னவென்று புரியாமல் வினவ,

“நீரூபன் சார் உங்க கிட்ட கொடுக்க சொன்னார் ஆன்ட்டி. அவர் வந்தா உங்க அழகான கல்யாண நாள் சங்கடத்தில் முடியுமாம். அதான் அங்கிள் இல்லதப்ப உங்க கிட்ட இதை கொடுக்க சொன்னாரு. அவரே உங்களை சாயங்காலம் ஆறு மணிக்கு கூப்பிடுறேன்னு சொன்னாரு ஆன்ட்டி.” என்று நீரூபனின் குரலாக மாறி அர்ச்சனாவிடம் பையைக் கொடுத்தான்.

அதை வாங்கிப் பிரித்தவர், அதில் இருந்த நெக்லஸின் அழகில் அதனைத் தடவிக் கொடுத்தார்.

கைசெயின் மிகவும் அழகாக இருப்பதாக வாய்விட்டு அவர் புகழ,

அதன் பின்னே நீளமான பெட்டியில் இருந்த பெண்டன்ட் செயினை எடுத்த பூமி அதில் இருந்த பூமிப் பந்தைக் கண்டு,

“இது மாமா வாங்கி அனுப்பியதா?”  என்று ஆர்வமாக ஆனந்திடம் வினவினாள்.

“இல்ல. அவங்க அம்மா வாங்கியதாம்” என்று நீரூபன் அவனிடம் கூறியதை தோழிக்கு தெரிவித்தான்.

உச்சுக் கொட்டிய பூமிகா, “மாமா வருவார்ன்னு நினைச்சேன்.” என்று வாடிய முகத்துடன் இருந்தவள் கைக்கடிகாரம் பன்னிரெண்டு தொட்டதன் அடையாளமாக பறவை ஒலியில் கூவி அழைக்க,

“சரி வா அவரை பண்ணையில் போய் பார்த்திட்டு வருவோம்” என்று அழைத்தாள்.

ஆனந்த் நகராமல் நிற்பதைக் கண்டு, “அன்னைக்கு சொன்னதை நினைச்சு வர யோசிக்கிறியா டா? அது சும்மா மாமாவுக்காக சொன்னேன் டா” என்று நண்பனிடம் உரிமை சண்டையிட,

“இல்ல டி இனிமே நாம அங்க போக முடியாது” என்றான் இறுக்கமான குரலில்.

“ஏன் டா என்ன ஆச்சு? நான் பேசியது உன்னை ஹர்ட் பண்ணிடுச்சா? சாரி டா ஆனந்த்” என்று அவனருகில் வந்து தோளில் கை போட்டு மன்னிப்பு வேண்டினாள்.

“ஹே இல்லடி. நேத்து ஈவினிங் உங்க மாமாவோட பிஏ கால் பண்ணி இருந்தாரு. இன்னிக்கு மீட் பண்ணி கிப்டை வாங்கிக்க கூப்பிட்டார். அப்படியே இனிமே உன்னை கூட்டிட்டு பண்ணைக்கு வர வேண்டாம்னு உன் மாமா சொல்ல சொன்னதா சொன்னாரு. காலைல அவர் கிட்டயே நேரா ஏன்னு காரணம் கேட்டேன். அது பெரிய இடம், பலர் வந்து போகற இடம். அவளுக்கு பாதுகாப்பு இருக்காது. அதுவும் இல்லாம இப்படி தினமும் காரணமில்லாம வந்தா அவளோட பேர் கெட்டுப் போயிடும். நீ கூட்டிட்டு வராதன்னு நேராவே சொல்லிட்டார் பூமி” என்று தயக்கத்துடன் கூறி முடித்தான்.

அவன் பேசியதை முழுமையாக கேட்டவள், கண்களில் நீர் கசிய,

Adhigara 11

“அவருக்கு என் காதல் புரியலையா ஆனந்த்? நான் நேரடியா சொன்னா தான் புரியுமா? என்ன டா செய்ய? அவரைப் பார்க்காம எனக்கு அந்த நாள் ஓடவே ஓடாதே!” என்று அவன் தோளில் ஆதரவாக சாய்ந்த கொண்டு கண்ணீர் சிந்த,

அவள் வருத்தம் புரிந்தாலும் நீரூபன் சொன்ன காரணங்கள் உண்மையில் அவளை பாதிக்காமல் இருக்கத் தான் என்று உணர்ந்திருந்த ஆனந்த் மௌனமாக தோழியைத் தட்டிக் கொடுத்தான்.

நண்பன் என்பவன் சில நேரங்களில் தாங்கும் தூணாக இருக்கிறான். சோர்வு, ஏமாற்றம், மனவருத்தம் என்று எவ்வளவு பெரிய சுமையை சுமந்தாலும் அதை எளிதில் நண்பனிடம் பகிர்ந்து பாரத்தை பங்கிட்டுக் கொடுக்கவும், ஆதரவாக சாய்ந்து கொள்ளவும் நண்பனை தவிர நம்பகமான துணை யார்?

ஆனந்த் பூமிகாவை சமாதானம் செய்ய நினைக்காமல் நிலைமையை சகஜமாக்க எண்ணினான்.

“ஆமா உங்க அப்பா எங்க டி என்னைக் கண்டாலே அந்த பிரபல ‘பிரியமான’ நடிகை பத்தி கிசுகிசு கேட்பாரே?” என்று சீண்டி விட,

“என் அப்பா ஒன்னும் நடிகையை பத்தி காசிப் பேசுறவர் இல்ல போடா” என்று சண்டைக்கு வர,

“இல்லாததையா  சொன்னேன்?  கீழ வந்ததும் நீயே பாரு என்கிட்ட கேப்பார் டி” என்று இன்னும் அவளை அவன் சீண்ட,

அவனை இழுத்து வைத்து சண்டையிட்டவள் நீரூபனின் ஒதுக்கத்தை தூர வைத்திருந்தாள்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!