அஞ்சுவண்ணப் பூவே! 7

anju 7

அவனது கூற்றை முழுமையாகக் கேட்ட வழக்கறிஞர்கள் அவனிடம் மீண்டும் அதே கேள்வியையே முன் வைத்தனர்.

“சரி சார். நீங்க சொல்றபடி பார்த்தாலும், அவர் காட்டிய எல்லா டாகுமென்ட்டுமே நிஜமானது தான் சார். எப்படி ஆவணம் போலின்னு சொல்ல முடியும் சொல்லுங்க?”

“சார் அது என் அப்பா கையெழுத்து தான். நான் இல்லன்னு சொல்லல. ஆனா அதுல எழுதப்பட்ட எதுவுமே உண்மையா இருக்க வாய்பில்ல சார்.” என்றான் அழுத்தமாக.

“சார் அப்ப உங்களுக்கு வயசு ரொம்ப குறைவு சார். எப்படி வைபவ் அப்பா அவர் கிட்ட வராக்கடனை சொல்லலையோ, அதே போல உங்க அப்பா உங்க கிட்ட வாங்கிய கடனைப் பத்தி சொல்லாம போனதும் அப்படித்தான் இருக்கும்.” அவனுக்கு எப்படியாவது புரிய வைத்து விட வேண்டும் என்று முயற்சித்தார் அந்த வழக்கறிஞர்.

“சார் பத்து வயசுல இருந்தே எங்க வீட்டு நிதி நிர்வாகத்துல எங்கப்பா என்னையும் சேர்த்துட்டார். வீட்டு செலவுல இருந்து நிறுவன செலவுகள், அறக்கட்டளை நிர்வாகக் கணக்கு எல்லாமே எனக்கும் காட்டுவாங்க. இல்லன்னா பதினாலு வயசுல நான் எப்படி தனியா எல்லாத்தையும் ஆட்களை வச்சு மேனேஜ் பண்ண முடியும்?”
“நீங்க சொல்றதை என்னால நம்பவும் முடியல, நம்பாம இருக்கவும் முடியல. உங்க அப்பாவோட கையெழுத்துன்னு நீங்களே சொல்றீங்க, அப்ப அது எப்படி வைபவ் கைக்கு போயிருக்கும்? உங்களுக்கு எதுவும் ஐடியா இருக்கா?” என்றார் அவனது எண்ணத்தை அறிய.

“அது தெரிஞ்சிருந்தா இந்நேரம் கோர்ட்ல சொல்லி அவனை விரட்டி அடைச்சிருக்க மாட்டேனா?” என்றால் இயலாமை கலந்த கோபத்துடன்.

“சார் என்னால முடிஞ்சது ஒன்னே ஒன்னு தான். அதைக் கூட நீங்க எங்களை கடத்திட்டு வந்துட்டதால கொடுக்கல, நானும் ஒரு அப்பாவுக்கு பையன், அவர் மேல ஒரு பழி விழுந்தா எனக்கும் பொறுக்காது. அதுக்காக தான் இதை செய்யறேன். வைபவ் கிட்ட மட்டும் தான் ஒரிஜினல் டாகுமென்ட்ஸ் இருக்கு. அதை வாங்கி உங்க கிட்ட நான் காட்டுவேன். ஆனா தர மாட்டேன் சார். அது என் தொழிலுக்கு நான் பண்ற துரோகமா போயிடும். நான் காட்டிய டாகுமென்ட் வச்சு உங்களுக்கு உதவியா ஏதாவது பாயிண்ட் கிடைக்குதா பாருங்க. இவ்வளவு தான் என்னால முடியும்.” என்றார் தீர்க்கமாக.

“அது கிடைச்சா கண்டிப்பா எனக்கு ஏதாவது க்ளூ கிடைக்கும் சார். நீங்க பண்றேன்னு சொன்னது பெரிய உதவி சார். கண்டிப்பா உங்க நம்பிக்கையை கெடுக்க மாட்டேன்.” தீர்க்கமாக உரைத்தான் அஜய்.

“சரி சார். அப்ப அடுத்த தடவை வைபவ் கால் பண்ணும்போது அவரைப் பார்க்க அப்பாயின்ட்மென்ட் கேட்டு போய் டாகுமென்ட் வாங்கிட்டு வர ட்ரை பண்றேன்.” என்றார்.

“அவருக்கு நன்றி கூறிவிட்டு வெளியே வந்த அஜையிடம், அண்ணா, இதெல்லாம் சரியா வருமா? இவங்களை தூக்கினதே, வாய்தா வாங்க தான். இப்ப அவனை மீட் பண்ண அனுப்பினா இவர் அவன் கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டா என்ன பண்றது?” என்றான் ரஞ்சித்.

“சொல்ல மாட்டார். அவர் கூடவே நம்ம ஆள் ஒருத்தனை அவரோட ஜுனியர் போல அனுப்பி விடு ரஞ்சித். அதுமட்டுமில்ல, நாம அவங்க யாரையும் துன்புறுத்தல, அதனால அவருக்கு நம்ம மேல பயம் எதுவும் இருக்காது. நாம ஏன் இதெல்லாம் செய்யறோம்ன்னு அவருக்கும் புரிஞ்சிருக்கு. இல்லன்னா கண்டிப்பா இப்படி பேச மாட்டார்.” என்று அழுத்தமாகக் கூறினான் அஜய்.

“சரி அண்ணா.” என்ற ரஞ்சித் நினைவு வந்தவனாக,

“நம்ம கணேசன் ஐயாவோட பொண்ணு கல்யாணம். கண்டிப்பா நாம போய் கலந்துக்கணும்.” என்றான் தயக்கமாக.

“சரி இடையில் போயிட்டு வந்துடலாம். அவர் நம்ம ட்ரஸ்ட்ல நிறைய உதவிகள் செய்திருக்கார்.” என்றான் அஜய் தாடையை தேய்த்தபடி.

“போகலாங்க அண்ணா ஆனா…” என்று இழுக்க,

“ரஞ்சித், எதுனாலும் சட்டுன்னு சொல்லிப் பழகு.” என்றவன் கண்கள் சாலை மீதே இருக்க, ஓட்டுநரைப் பார்த்தபடி,

“தனியா போனா நல்லா இருக்காதுங்க அண்ணா” என்றான் உள்ளே போன குரலில்.

“யார் தனியா போகப் போறது? அதான் நீயும் கூட வருவியே!” என்ற அஜய்க்கு விஷயம் புரியாமலெல்லாம் இல்லை.

அவன் அதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை.

ரஞ்சித் அவனுக்கு எப்படி புரிய வைப்பது என்று விழிக்க, “இங்க பாரு, அவளுக்கு இப்ப நம்ம வீட்டுக்கு வரப் பிடிக்கல. வரும்போது எல்லா இடதுக்கும் அழைச்சிட்டு போகலாம். இல்லாதப்ப என்ன செய்ய முடியும்?” என்று சாலையை வெறித்தான்.

“அண்ணா, அண்ணி உங்களை விட்டு விலகி இருக்கறத என்னால நம்ப கூட முடியல. கல்யாணம் நடந்ததுல இருந்து அதிகமா அம்மா வீட்டுக்கு கூட போகாத ஆளு அவங்க.” என்று வெற்றுப் பார்வையோடு இருக்கும் அவனுக்கு ஆறுதலாக இருக்க வேண்டும் என்று தன் கட்டுப்பாட்டையும் மீறிப் பேசிவிட்டான் ரஞ்சித்.
“ஹ்ம்ம்…” என்ற பெருமூச்சு மட்டுமே எழுந்தது அஜயிடம்.
திருமணம். அத்தனை எளிதில் அது நடந்து விடவில்லை. இன்றும் அவன் கண்களுக்குள் இருக்கிறது அந்தக் காட்சி.

தன் அன்னையிடம் போராடி அவனைத் திருமணம் செய்ய அவள் சம்மதம் வாங்கிவிட்டு முதல் முறையாக அவனிடம் காதல் சொல்ல வந்தாள். ஆம்! அவள் தானே அவனிடம் காதல் சொன்னது.

அதுவும் எப்படி? அவன் விமானத்துக்கு கிளம்பி இருப்பான் என்று எண்ணி அவனை நாடி வந்தாள் அபிதா.

அவன் அவளை தவிர்க்கவே, “ஹலோ சீனியர், என்ன ரொம்ப தான் முகம் திருப்புறீங்க? என்னை உங்களுக்கு தெரியாதா? இல்ல மறந்து போச்சா?” என்று துடுக்காகப் பேசினாள்.

“இங்க பாரு. என் சூழ்நிலை சரியில்ல, அடிதடி, போலீஸ் கேஸ்ன்னு என் வாழ்க்கை எங்க போயிட்டு இருக்குன்னு எனக்கே ஐடியா இல்ல. நான் பேசின விதம் உன் மனசுல ஏதாவது சலனப்படுத்தி இருந்தா என்னை மன்னிச்சு அதை மறந்துடு. அதான் உனக்கு நல்லது.” என்று பொறுமையை இழுத்துப் பிடித்து அவன் பேச,

“ஓஹோ! அது அப்படியா? இங்க பாருங்க, உங்களை அன்னைக்கு காலேஜில் பார்த்த பின்னாடியோ, இல்ல நீங்க எங்கிட்ட பேசின பின்னாடியோ என் மனசுல உங்க மேல ஆசை வரல. இது அதுக்கெல்லாம் முன்னாடியே வந்தது.

ட்வெல்த் முடிச்சதும் காலேஜ் அனுப்ப பணம் இல்லன்னு எங்கம்மா என்னை கல்யாணம் பண்ணிக்க சொன்னாங்க. உங்க ட்ரஸ்ட் பத்தி எங்க ஸ்கூல்ல சில பொண்ணுங்க சொல்லி கேள்விப்பட்டு உங்க ஆபிஸ் வந்தேன். விசாரிச்சு வேண்டிய சீட் வாங்கிக் கொடுங்கன்னு நீங்க தான் சொன்னிங்க. நான் யாருன்னு கூட உங்களுக்கு தெரியாது. நல்லா படிச்சா படிக்க வைக்கிறேன்னு எங்கிட்ட சொல்லிட்டு ஆபிஸ்ல யார்கிட்டயோ என் பைலை கொடுத்தீங்க. இப்ப வரைக்கும் என் காலேஜ் பீஸ் டிலே ஆனதே இல்ல.

என்னைப் போல நீங்க நிறைய பேரை படிக்க வைக்கிறீங்க. உங்களுக்கு நான் ஆயிரத்தில் ஒருத்தியா இருக்கலாம். ஆனா நான் பார்த்த முதல் ஹீரோ நீங்க தான். அப்ப இருந்தே என் வாழ்க்கை உங்களுக்காக தான்னு நான் முடிவு பண்ணிட்டேன்.

நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்குவிங்கன்னு நான் அப்பவும் எதிர்பார்க்கல, இப்பவும் எதிர்பார்க்கல. ஆனா இந்த உயிர் உங்களுக்கு தான். உங்களை தவிர என் வாழ்க்கையில் வேற ஆணுக்கு இடமில்ல. சொல்றத சொல்லிட்டேன். இனிமே ட்ரஸ்ட் ஆபிஸ்ல தான் வாலண்டியரா இருப்பேன். உங்களை பார்த்தபடி தான் என் வாழ்க்கை. இதுல எந்த மாற்றமும் இல்ல.” என்று சொல்லிவிட்டு தன் நீளக் கூந்தலை திருப்பி பின்னால் போட்டு அவள் நடந்தபோது அந்த ஆழ்ந்த நீல வண்ண சுடிதாரில் ஆளையே மயக்கி விடும் அழகுடன் தெரிந்தாள் அபிதா.

அவளது உறுதியைக் கண்டபின் அவனுக்கும் இத்தனை ஆண்டுகளில் முதல்முறையாக தனிமை சாபமாகத் தெரிந்தது.

காதலின் சக்தி இதுவரை வெறும் முரட்டுத்தனமாக அணுகிய அனைத்தையும் நிதானத்தோடு அணுக வைத்தது. சண்டை சண்டை என்று எகிறிக் கொண்டு செல்லாமல் சில விஷயங்களை சட்டத்தின் மூலம் தீர்வு கண்டான்.

அவன் கோபத்தில் கொதிக்கும்போதெல்லாம் அவன் முன்னே வந்து அவனை சாந்தப்படுத்தி சிந்திக்க வைத்தாள் அபிதா. தள்ளி நின்று துணை புரிந்தவள் பின் துணையாக அருகே வந்து வழி நடத்தினாள்.

எல்லாமே நன்றாகத் தான் சென்று கொண்டிருந்தது. போன வாய்தாவில் அடுத்த அமர்வில் கண்டிப்பாக வழக்கு விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் கூறியதைக் கேட்டு கடுப்புடன் வந்த அஜய் என்றும் இல்லாமல் அன்று கோபத்தின் உச்சத்தில், அவள் கூற வந்ததைக் கேட்காமல் கத்தி விட்டான். அன்னை வீட்டிற்கு எப்பொழுதும் போலச் சென்றவள் அதன் பின் திரும்பவே இல்லை. அவளை அவன் காணவே இல்லை என்பது தான் பெரும் வேதனையே!

இந்த வேதனைகளை அவன் எண்ணிக் கொண்டு பயணிக்க, அங்கே அபிதாவோ,

“அம்மா எங்க என்னை கிளம்ப சொல்ல்லிட்டு இருக்க? நான் எங்கயும் வரல.” என்று காய்ந்தாள்.

“அடிக் கிறுக்குப்பிடிச்சவளே! உன்னை ஏமாத்தி உன் புருஷன் வீட்டுல விடுற எண்ணமெல்லாம் எனக்கு இல்ல. ஒரு விஷேஷத்துக்கு போகணும். அதான் தயாராக சொன்னேன்.” என்று அவளுக்கு மேல் காய்ந்து அவளுக்கு அன்னை அவர் என்று நிரூபித்தார் சாந்தா.

“உன்னை நம்பவே முடியாதும்மா. அன்னைக்கு அப்படித்தான் ஏதோ பண்ணி அவரை வீட்டுக்கே வரவழைச்ச நீ!” என்று கோப முகம் காட்டிய மகளை நொந்தபடி,

“உனக்கு அறீவு கொஞ்சமாவது இருக்கும்ன்னு நம்பி அப்படி பண்ணிட்டேன் டி. அதான் எதுவும் இல்லன்னு வீட்டை விட்டு வெளில போய் எங்க இரண்டு பேருக்கும் சொல்லாம சொல்லிட்டியே! இனி நீயே தேடிப் போனாலும் அந்த மனுஷன் மதிப்பார்ன்னு எனக்கு நம்பிக்கை இல்ல. உன்னை தனியா வீட்டுல விட்டுட்டு போக மனசு வரல. இந்த விஷேஷம் எனக்கு ரொம்ப முக்கியம். அதான் வர சொல்றேன்.” என்று நொடித்தபடி மகளின் தலையைச் சீவியவர்,

“உனக்கு நல்ல புத்தி வந்து நீ நல்லா வாழ்ந்தா சந்தோஷப்படப் போற முதல் ஆள் நான் தான். அதுக்காக உன்னை கட்டாயப்படுத்தி எதையும் செய்ய வைக்க முடியாது. அவரும் ஒத்துக்க மாட்டார்.” என்று கோபமாகத் துவங்கி வருத்தத்துடன் முடித்தார் சாந்தா.

தன் அன்னையின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த அபிதா மனதில், அவ்வளவுதானா? எல்லாம் முடிந்ததா? நானே துவங்கி நானே முடித்துக் கொண்டேனா? இனி அவர் வரமாட்டார் என அம்மா கூறும் கூற்றின் பொருள் அது தானே? நினைக்கவே நெஞ்சை அடைத்தது.

அவள் கவனமில்லாத இந்த நேரத்தில் அவளது அன்னை அவளை தயார்படுத்தி அந்த வைபவத்துக்கு அழைத்துச் சென்றிருந்தார்.


2 thoughts on “அஞ்சுவண்ணப் பூவே! 7

  1. ஆனாலும் இந்த அபிதாவுக்கு இம்புட்டு கோபம் ஆகாது.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!