Amazing Ajay!

வீட்டுக்குள் நுழைந்த நிமிடம் முதல் அங்கு குடிகொண்டிருக்கும் அந்த அசவுகர்யமான அமைதி அவனை படுத்தி எடுத்தது. அவனே விலகிச் சென்றாலும் அவனை சுற்றிச் சுற்றி வரும் அவன் மனைவி இல்லாமல் அந்த அமைதி அவனைக் கொன்றது.
அவனாக அவளைத் தேடிச் சென்று காதல் கொள்ளவில்லை. அவளே அவனை நாடி வந்தாள். அவனைப் பற்றி அனைத்தும் தெரிந்து தான் காதல் புரிந்தாள். ஆனால் இன்று அவள் காட்டும் விலகலின் காரணம் தான் அவனுக்குப் புரியவில்லை.
அவனது சிந்தனை வலையிலிருந்து அவனை மீட்டு கொண்டு வந்தது ரஞ்சித்தின் குரல்.
“அண்ணா உங்களைப் பார்க்க முனுசாமி ஐயா வந்திருக்காரு.” என்று அவனது சோபாவின் அருகில் அவன் நின்று கொண்டான்.
மிகவும் நலிந்த தோற்றத்தில் இருந்த முனுசாமி அஜயைக் கண்டதும் பாதி வளைந்து வணக்கம் வைத்தார்.
“தம்பி நல்லா இருக்கீங்களா?” என்று அன்பொழுக வினவினார்.
“நான் நல்லா இருக்கிறது இருக்கட்டும். நீங்க ஏன் இப்படி இளைச்சு போய் இருக்கீங்க? மருந்து மாத்திரை எல்லாம் சரியா சாப்பிடுறீங்களா இல்லையா?” என்று அதிகாரம் கலந்த குரலில் அஜய் வினவ,
“அதெல்லாம் தின்னாலும் இப்படி தான் இருக்கேன். என்னை விடுங்க தம்பி. அந்த நிலம் என்னப்பா ஆச்சு? இன்னும் ஒரு வாரத்துல இதுக்கு ஒரு முடிவு வரலன்னா நாங்க எல்லாரும் தெருவுக்கு வந்துடுவோம் பா.” என்று கண் கலங்கக் கூறினார்.
“எனக்கு தெரியாதா? நானும் அதுக்கு தான் எல்லாம் பண்ணிட்டு இருக்கேன்.” என்று தீவிரமாகக் கூறினான்.
“இந்த மூணு வருஷத்துல நீங்க பண்ணாத நல்லது இல்ல தம்பி. ஆனா இதை மட்டும் என்ன செய்தும் நம்மளால சாதிக்க முடியலையே!” என்று வருத்தம் கொண்டார்.
“ஐயா… நான் பாத்துக்கறேன். நீங்க கிளம்புங்க.” என்று அனுப்பி வைத்தான்.
போகும் அவரைக் கண்ட அஜயின் மனம் கனத்தது. அவனால் பல முயற்சிகள் செய்தும் முடியாமல் போன ஒரே விஷயம் ஒன்று உண்டென்றால் அது அந்த நிலத்தை மீட்க முடியாமல் இருப்பது தான்.
ஆனால் அவனால் அந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏற்க மாட்டான். அது அவன் குணமல்ல.
அவன் இருந்த நிலைக்கும் தற்போது இருக்கும் நிலைக்கும் உள்ள வேறுபாட்டை ஏற்படுத்தியது அவனது அந்த குணம் தான். கண் முன்னே அவன் கடந்த காலம் விரிந்தது.
கல்லூரியின் முதல் நாள். புதிய கல்லூரி, தெரியாத முகங்கள் என்று அனைவரும் சற்று பயமும் பதற்றமும் கொண்டிருந்த முதல் வருட மாணவர் கூட்டம் நடைபெறும் கல்லூரியின் கலை இலக்கிய மன்ற கூட்ட அறை.
கடைசி வரிசையில் தலை சாய்த்து அமர்ந்திருந்த அவனை யாரும் கவனித்திருக்க வாய்ப்பில்லை. கல்லூரி முதல்வர் அனைவரையும் வரவேற்று பேசிக்கொண்டிருந்த நேரத்தில் மாணவர்கள் நிசப்தமாக அமர்ந்திருக்க, காதல் பாடலொன்றின் வரிகளை விசில் அடித்துக் கொண்டிருந்தான் அவன்.
நிசப்தத்தை கிழித்துக் கொண்டு கேட்ட அவ்வொலி அனைவரின் கவனத்தையும் அவன் புறம் ஈர்க்க, அவனோ கண்களை மூடிக்கொண்டு உல்லாசமாக விசிலடித்தபடி இருந்தான்.
அவனது தோளில் கல்லூரி பேராசிரியர் ஒருவர் தட்டி அழைத்ததும் கண்களைத் திறந்தவன்,
“என்ன சார் முடிஞ்சதா? போகலாமா? பர்ஸ்ட் இயர் கம்பியூட்டர் சைன்ஸ் கிளாஸ் எங்க?” என்று நிறுத்தாமல் வினவினான்.
அப்பொழுது தான் அவன் காதில் இருந்த இயர் போனை கவனித்த பேராசிரியர்,
“முதல் நாள், பிரின்சிபால் பேசும்போதும் கவனிக்காம பாட்டு கேட்டு, விசில் அடிச்சிட்டு இருக்க? நீயெல்லாம் எங்க உருப்படப்போற?” என்று கேட்டு அமர வைத்தார்.
அவனை மேலும் அவமதிக்கும் எண்ணத்துடன் அவனை மீண்டும் எழுப்பினார் கல்லூரி முதல்வர்.
“அவ்வளவு ரசிச்சு காதல் பாட்டை விசிலடிச்சியே! ட்வெல்வ்த்ல எத்தனை மார்க்?” என்று மைக்கில் வினவ,
அவன் அவமானப்படுவான் என்று அவர் எண்ணி இருக்க, சற்றும் தயங்காமல் முன்னே வந்து மேடை ஏறி மைக்கில் வணக்கம் கூறினான்.
“ஹாய் ஃபிரெண்ட்ஸ். ஐ ஆம் அஜய் கிருஷ்ணா. ஆயிரத்து நூற்றி அறுபத்து ஏழு மார்க்.” என்று கம்பீரமாக கூறிவிட்டு, முதல்வரை நோக்கி அவன் புருவத்தை உயர்த்த,
“மார்க் இருந்தா மட்டும் போதாது. மரியாதை தெரியணும்.” என்று எரிச்சலுடன் அவர் கூற, அவன் செய்த புன்னகைக்கு அன்றே பல பெண்கள் ரசிகைகளாக அவனுக்குக் கிடைத்தனர்.
கல்லூரி துவங்கியதில் இருந்தே அவனுக்கும் முதல்வருக்கும் ஏழாம் பொருத்தம் தான். அவரே அவனுக்கு ஆங்கிலம் எடுக்க வகுப்புக்கு வர, ஒன்று அவன் வெளியேறிவிடுவான். அல்லது அவர் அவனை வெளியேற்றுவார்.
தனிப்பட்டு யாருக்கும் மரியாதை கொடுக்க மாட்டான். கல்லூரி வகுப்புகளை கெடுக்க மாட்டான். அவனுக்கு விருப்பம் இல்லாவிட்டால் வெளியேறிவிடுவான். அதனாலேயே பல பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும் அவனைத் திட்டினர்.
அவர்களால் அதனை மட்டுமே செய்ய முடிந்தது. ஏனெனில் வகுப்பில் இல்லாவிட்டாலும் எல்லா பாடத்திலும் முதல் மதிப்பெண் பெற்றவனை அவர்களால் வேறு எதுவும் செய்ய இயலவில்லை.
நான்கு ஆண்டுகள். அதிலும் அவனைப் பார்த்து பலரும் வகுப்பை புறக்கணிக்க ஆரம்பித்ததும் கல்லூரி முதல்வர் பொறுக்காமல் அவனை தண்டிக்க முடிவெடுக்க, சிமதிப்பெண் வாங்குகிறேன், வாங்காதவனை தண்டித்துக்கொள்’ என்று மெத்தனமாகப் பேசிய அவன் மேல் அவருக்கு மேலும் பகை தான் கூடியது.
அவனைப் பற்றி புகார் அளிக்க அவனுக்கென்று யாருமில்லை. தாய் தந்தையை இழந்த அவனுக்கு சொத்து மட்டும் அறக்கட்டளை பெயரிலும் அவன் பெயரிலும் இருந்ததால் அவனைக் கேட்கவும் ஆளில்லை, அவனைப் பற்றி சொல்லவும் ஆளில்லை.
ஆனால் ஊரில் செல்வாக்கான மனிதரின் மகன் என்ற பெயரும், அவனது அறக்கட்டளை செயல்படும் விதமும் அவனுக்கு எதிராக எதையும் செய்ய முடியாமல் அவரைத் தடுத்தது.
ஊரிலுள்ள அரசியல்வாதி முதல் அடியாள் வரை அவனைக் கண்டு கும்பிடு போடும்போது அவரால் அவனை ஒன்றும் செய்ய முடியவில்லை.
அஜய் படிப்பை விரும்பிப் படித்தான். கல்லூரி செல்வது அவனுக்கு பொழுதுபோக்காக இருந்தது. எல்லாம் அந்த நாள் வரும்வரை தான்.
மஞ்சள் வண்ண சுடிதாரில் பட்டாம்பூச்சி போல கால்கள் தரையில் பாவாமல் பறந்து வந்தாள் அபிதா.
இளநிலை பட்ட படிப்பை முடித்து முதுநிலை படிப்பில் சேர்ந்து ஒரு மாதம் முடிந்திருந்தது.
பல கல்லூரிகளில் இருந்து கலை இலக்கிய பேரவை சார்பாக மாணவர்கள் வந்து குவிந்திருந்தனர்.
இது போன்ற விழாக்களுக்கு அஜய் எப்பொழுதும் வர மாட்டான். ஆனால் அந்த வருடம் அந்த தொகுதி எம்.எல்.ஏ கல்லூரிக்கு விருந்தினராக வர வேண்டியது, முதல்நாள் அவரது நெருங்கிய உறவினர் மரணித்திருக்க கல்லூரியில் ஐம்பது மாணவர்கள் படிக்க அறக்கட்டளை மூலம் உதவி செய்யும் அஜய் அதற்கு தலைமை ஏற்க வேண்டிய நிர்பந்தம் வந்து சேர்ந்தது.
வாயில் சுவிங்கத்தை மென்றபடி டோர்ன் ஜீன்சும், கறுப்பு வட்டக்கழுத்து டீசர்ட்டும் அணிந்து அவனது ஸ்கோடா காரில் இறங்கியபோது கல்லூரி முதல்வரின் முகம் விளக்கெண்ணெய் குடித்தது போல ஆனதில் அவனது மனதில் சிறு நிம்மதி.

அவர் கொடுத்த மலர்க்கொத்தை வாங்கிக் கொண்டு, “எனக்கு எதுக்கு சார் இதெல்லாம்?” என்று நக்கலாக அவன் கூறியதும் முதல்வர் வாய் வரை வந்து விழுங்கிய வார்த்தைகளை மனக்கண்ணில் கண்டு கழித்தான் அஜய் என்றால் அது மிகையல்ல.
அவரை அன்று வம்பு செய்ததில் அவனுக்கு அலாதி இன்பம் ஏற்பட்டது. எந்த விழாவிற்கும் வராதவன் அன்று முழு விழாவையும் தலைமை தாங்கி பரிசுகள் வழங்கிவிட்டுத் தான் செல்ல வேண்டும் என்று தெரிந்ததும் எரிச்சலை முகத்தில் அப்படமாக அவன் காட்ட, ரஞ்சித் தான் அவனை சமாளிக்க பெரும்பாடு பட்டுப் போனான்.
“அண்ணா, உங்க காலேஜ். படிக்கும்போதே சீப் கெஸ்டா வர்றதெல்லாம் எத்தனை பேருக்கு அமையும் சொல்லுங்க. நம்ம டிரஸ்ட் பிள்ளைகளுக்கு இதுவே எவ்வளவு பெரிய இன்ஸ்பிரேஷனா இருக்கும்? பிளீஸ் அண்ணா.” என்று கெஞ்சிக் கொண்டிருக்க,
“டேய் இன்னும் பத்து நிமிஷத்துல கும்பிடு போட்டு கிளம்பி போயிடுவேன். வேற டிரஸ்டி யாரையாவது உடனே வர சொல்லு.” என்று கர்ஜித்தான் அஜய்.
எல்லாம் மூன்று நிமிடம் வரை தான். ஆடியோரியம் முழுவதும் அமைதியில் வீற்றிருக்க, முதல்வரோ அவருக்குப் பிடிக்காமல் அஜய் பற்றிய முன்னுரையை எரிச்சலை விழுங்கிக் கொண்டு வாசித்துக் கொண்டிருந்தார்.
அப்பொழுது பின்னால் உள்ள கதவின் வழியாக தடதடவென்று ஓடி ஒரு பெண் உள்ளே நுழைய, முதல்வர் கோபமாக அவளை முறைக்க அஜயின் கண்களோ அவளை ரசனையாக நோக்கியது.
மஞ்சள் நிற எம்பிராய்டரி செய்த சுடிதார். லேசாக பின் குத்தி விரித்து விட்ட கூந்தலில் உடைக்கு ஏற்ப மஞ்சள் நிறத்தில் ரோஜா ஒன்று வீற்றிருந்தது. முன் நெற்றி முடிகள் அவள் ஓட்டத்தில் கலைந்து காற்றில் ஆட, மஞ்சள் நிற பாட்டுக்கு மேல் கீற்றாய் சந்தானம். செய்து வைத்த சிற்பம் போல தவிப்புடன் இருக்கையில் அமரலாமா வேண்டாமா என்று முதல்வர் முகத்தைப் பார்த்துக் கொண்டு நின்ற அப்பெண்ணை கையசைத்து அமரும்படி கூறியது சாட்சாத் அஜய் தான்.
முதல்வர் கடுப்புடன் திரும்பி அஜயை நோக்க, அவனோ அவளையே ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனது பார்வை சென்ற திசையை கவனித்த ரஞ்சித் தன் கைபேசியில் யாருக்கோ தகவல் அனுப்ப, இரண்டு நிமிடத்தில் அதற்கான பதில் தகவல் கிடைத்தது.
கைக்கடிகாரத்தை பார்த்த அஜய் எழுந்து கொள்ள ஆயத்தமான நிலையில்,
“அண்ணா” என்று அவன் தோளை அழுத்தி அமர்த்திய ரஞ்சித்,
“அந்த மஞ்சள் கலர் சுடிதார் பொண்ணு நம்ம டிரஸ்ட் பணத்துல வேற காலேஜ்ல படிக்குதாம். எல்லாத்தையும் முதல்ல வருமாம். நம்ம கணேசன் ஐயாவுக்கு தெரிஞ்ச பொண்ணாம்.” என்று கூற,
“அதுக்கு என்ன? அப்பறமா எங்காவது பார்த்தா ஹாய் சொல்லிக்கலாம். வா கிளம்புவோம்.” என்று மீண்டும் எழுந்து கொள்ள முனைய,
முதல்வர் பேசி, அதன் பின் அறிவிப்பாளர் பேசி, முதல் போட்டி அறிவித்து அதில் இருவர் வந்து மேடை ஓரத்தில் இருந்த போடியத்தில் நின்று பாடல் பாடி இருந்தனர்.
“டேய் நான் இங்க பாட்டு கேட்க வரல டா. இப்பவே ரெண்டு பேர் பாடிட்டாங்க. நான் போகணும்.” என்று அழுத்தமாக அஜய் கூற, முதல்வரிடமும் எம். எல். ஏவிடமும் அஜயை நிகழ்ச்சி முழுமைக்கும் இருக்க வைக்கிறேன் என்று வாக்குக் கொடுத்த ரஞ்சித்தின் நிலை தான் அந்தோ பரிதாபம் ஆனது.
“அண்ணா இருங்க. அந்த பொண்ணு நல்லா பாடுமாம். அதை மட்டும் கேட்டுட்டு போவோம். இல்லன்னா கணேசன் ஐயா வருத்தப்படுவார்.” என்று ஏதேதோ சொல்லி சமாதானம் செய்தான்.
பத்து பேருக்கு மேல் பாடியும் அவள் பாட வராமல் இருக்கக் கண்டு எரிச்சலான அஜய், அடுத்த பெயர் அழைக்கும் நேரம் எழுந்து,
“ஏம்மா மஞ்சள் சுடிதார் நீ வா” என்று அழைக்க ஆடிட்டோரியமே அவளை நோக்கியது. முதல்வர் முகத்தில் கோபம் கொப்பளித்தது.

திருதிருவென்று விழித்த அவள், அமைதியாக எழுந்து வந்து போடியத்தின் முன் நின்றாள். கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு,
“என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரப்பிரம்மம் அம்மா என்றைழைக்க
ஈரேழு புவனங்கள் படைத்தவனை
கையில் ஏந்தி சீராட்டி பாலூட்டி தாலாட்ட … “
என்று பாட, அவளது மெல்லிய குரல் ஆசையாகப் பாடினாலும் அதில் சிறு நடுக்கம் இருந்ததோ என்று அஜக்கு சந்தேகம் எழுந்தது.
ரஞ்சித் நெஞ்சில் கை வைத்து ஆசுவாசம் அடைந்தான். அவளை அஜய் குறுகுறுப்பாக பார்ப்பதைக் கண்டு அவனை அமர வைக்கும் பொருட்டு அவன் கூறிய பொய் தான் அவள் பாடல் பாட வருவாள் என்பது. ஆனால் அந்த பெண்ணை அஜய் மேடைக்கு அழைத்ததும் ‘ தான் இன்று செத்தோம்’ என்று எண்ணிய அவனை பிழைக்க வைத்த அந்த மஞ்சள் உடை புண்ணியவதியை அவன் மனதிற்குள் நன்றி கூறிக் கொண்டிருக்க, அவனையே முறைத்துப் பார்த்தான் அஜய்.
அதன் பின் அவன் கிளம்ப வேண்டும் என்று கூறவில்லை. அதுவரை ரஞ்சித் ‘பிழைத்தோம்’ என்று நிம்மதி கொள்ள, பரிசுகள் வழங்கும்போது அவனே சிறப்புப் பரிசு என்று கூறி அந்த மஞ்சள் உடை பெண்ணை அழைக்க,
“உன் பேர் சொல்லும்மா” என்று கூறிய முதல்வர் அஜயை முறைக்க மறக்கவில்லை.
“அபிதா சார்.” என்று காற்றுக்கும் வலிக்குமோ என்று அவள் பதில் கூற, “அபிதா” என்று சொல்லிப் பார்த்த அஜயின் இதழில் மென்னகை.
இப்படி எதிர்பாரா தென்றாலாக அவன் வாழ்வில் வந்தவள் தான் அபிதா.

ஆஹா… இவன் அப்பவே அப்படின்னா, இப்ப எப்படின்னு கேட்கவே வேண்டாங்குறேன்.
ஆனா, இவன் கிட்ட மாட்டிக்கிட்டு முழிச்ச அந்த முதல்வர் தான் யார் பெத்த பிள்ளையோ தெரியலை, ரொம்பவே பாவம் தான் அவரோட நிலைமை.
அது சரி, இந்த காதல் ரோமியோ ஜூலியட் அம்புட்டு லவ் பண்ணிட்டு
இப்ப எதுக்கு ஆளுக்கொரு திசையில முகத்தை திருப்பி வைச்சிட்டு சுத்தறாங்கன்னு தெரியலையே ? ஏன் ? எதுக்கு ? எப்படி ?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Thank you sis ❤️
அருமையான பதிவு
ஃபர்ஸ்ட் மீட் செமையா இருக்கு கா!!!… அநியாயம் பன்றான் இவன்!!… இவனை படிக்க ஜாலியா இருக்கு, ஆனால் இப்போ ஏன் இப்படி இருக்கான்
கண்டுபிடிச்சிடுவோம்… 🙂
Evan back ground thaan Yenna..MLA paiyyanaa..geththu balamaa erukku 😝😝😝😝
ஊர் பெரிய மனிதரோட பையன். தனிக்காட்டு ராஜா. அதான் கெத்து.