
திரு. சிதம்பரநாதன் அவர்களின் குரலில் வஞ்சக லோப மூடர் திருப்புகழ் பாடலை கேட்டும் அறிந்தும் மகிழுங்கள்.
“வஞ்சக லோப மூடர்” என்ற திருப்புகழ் பாடல், அருணகிரிநாதரால் முருகப்பெருமானை போற்றிப் பாடப்பட்டது. இந்தப் பாடலில், வஞ்சகமும், பேராசையும், அறியாமையும் கொண்ட மனிதர்களைப் புகழ்ந்து பாடி வீணாகப் பொழுதைக் கழிக்காமல், முருகப்பெருமானின் திருவடிகளைப் பாடி ஞானம் பெற வேண்டும் என்று அருணகிரிநாதர் வேண்டுகிறார். மேலும், பாண்டிய மன்னனின் கூனை நிமிர்த்தி, சமணர்களை வாதில் வென்று, ஞானத் திருநீற்றை அளித்த திருஞானசம்பந்தரின் பெருமைகளையும் இந்தப் பாடல் குறிப்பிடுகிறது.
தந்தன தான தான தந்தன தான தான
தந்தன தான தான …… தனதான
……… பாடல் ………
வஞ்சக லோப மூடர் தம்பொரு ளூர்கள் தேடி
மஞ்சரி கோவை தூது …… பலபாவின்
வண்புகழ் பாரி காரி யென்றிசை வாது கூறி
வந்தியர் போல வீணி …… லழியாதே
செஞ்சர ணாத கீத கிண்கிணி நீப மாலை
திண்டிறல் வேல்ம யூர …… முகமாறும்
செந்தமிழ் நாளு மோதி உய்ந்திட ஞான மூறு
செங்கனி வாயி லோர்சொ …… லருள்வாயே
பஞ்சவ னீடு கூனு மொன்றிடு தாப மோடு
பஞ்சற வாது கூறு …… சமண்மூகர்
பண்பறு பீலி யோடு வெங்கழு வேற வோது
பண்டித ஞான நீறு …… தருவோனே
குஞ்சரம் யாளி மேவு பைம்புன மீது லாவு
குன்றவர் சாதி கூடி …… வெறியாடிக்
கும்பிட நாடி வாழ்வு தந்தவ ரோடு வீறு
குன்றுதோ றாடல் மேவு …… பெருமாளே.