
அமுதம் 32
காலையில் எல்லாம் நன்றாக இருக்க, வீடு வரை சென்று வரலாம் என்று கிளம்பிய கோதை, அங்கு அவளுடன் கிளம்பிய கூட்டத்தைக் கண்டு திகைத்துப் போனாள்.
காலையில் வந்து இறங்கிய சுபா, கிருத்தி, ராகுல், இன்பா, பிரவீன், அவர்களோடு மதி, சுஜி, ஷியாம் என்று வரிசை கட்டி நிற்க, அங்கே நின்ற அகிலயும், அருணாவையும் பார்த்து,
“நீங்க மட்டும் ஏன் இங்க இருக்கீங்க? நீங்களும் இவங்களுக்கு துணையா வர வேண்டியது தானே?” என்று நக்கல் செய்ய,
“அடிச்சேன்னா பாரு, எனக்கு லேண்ட்ல வேலைக்கு ஆள் பார்க்கணும். சில மிஷினரி எல்லாம் வாங்கணும். அரு ரொம்ப டயர்டா இருக்கா, சோ எல்லாரும் இங்க இருந்து போய் தொலைங்க.” என்று அவனும் நக்கலடித்தான்.
அவனை ரெண்டு அடி போட்டுவிட்டு அந்த பக்கிக் கூட்டத்தை ஓட்டிச் சென்றாள் கோதை.
வரும்போதே ஆளுக்கொரு பையைத் தூக்கி வர, “என்னடா இது?” என்று கேட்டதற்கு, “எஸ்டேட் சுத்தி பார்க்கும் போது சாப்பிட ஸ்னாக்ஸ் ” என்றனர்.
சந்தேகமாகப் பார்த்தவளை, “போ உனக்கெல்லாம் தர முடியாது.” என்று கோரஸ் வேறு பாடினார்கள்.
“அட அல்பைஸ், வந்து தொலைங்க” என்று அவ்வளவு பேரையும் இரண்டு காரில் கூட்டிச்சென்றாள்.
அங்கு கமலாம்மா எப்போதும் போல வேலையெல்லாம் முடித்துவிட்டு இவள் வரவுக்காகக் காத்திருந்தார், அவரிடம் சற்று நேரம் வம்பளந்தவள், தோட்டகாரருடன் சென்று சுற்றி பார்க்கும் படி அனைவரிடமும் கூறிவிட்டு குளிக்கச் சென்றாள். குளித்து அவளுக்கு பிடித்த இளநீல சல்வாரை அணிந்தவள் தலைமுடியை உலர்த்தியபடி ஹாலுக்கு வர, வீடே நிசப்தமாய் இருந்தது.
“கமலாம்மா! கமலாம்மா!” என்ற அவளின் விளிப்புக்கு பதில் இல்லாமல் போக, சரி அவரும் இந்த காதறுந்த கூட்டத்தோடு சென்றிருப்பர் என்றே கீழ் அறையில் சென்று அமர்ந்தாள்.
அவளின் விருப்பமான ‘சுண்டு விரல் சீமா’, புத்தகத்தை எடுத்தவள் சீமாவின் விரலை அணில் கடித்ததை நினைத்து வருந்தி கொண்டிருக்க, வெளியில் யாரோ பதுங்கிப் பதுங்கி நடப்பது நிழலில் தெரிய, தைரியத்தை வரவைத்துக்கொண்டவள் மெதுவாய் அடி மீது அடி வைத்து வெளியில் எட்டிப் பார்த்தவள் உறைந்துபோனாள்.
‘அடக்கடவுளே.. இதெப்படி நான் மறந்து போனேன்.. இனி தப்பிக்கவும் முடியாதே, இதே அறையில் பதுங்கவும் முடியாது. ஐயோ! இன்று என் நிலைமை இப்படியா ஆகணும்?’, என்று தன் உடையைப் பார்த்தாள். அழுகையே வந்துவிட்டது.
‘எப்படியாவது ஓடிடு கோதை.’ கெஞ்சிய மனதை சமாதானம் செய்தபடி பூனைப் பாதம் வைத்து நாலு எட்டு வைத்திருக்க மாட்டாள்,
“அதோ அங்க ஒடுறா பாரு, பிடிங்க டா.”, என்ற கத்தலை கேட்டு பின்னங்கால் பிடரியில் பட ஓடியவள் மறந்து போய் வீட்டினுள் ஓடிக்கொண்டிருந்தாள்.
அவர்களும் அவளை விடுவதாக இல்லை.
“இருடி… நில்லு டி… மாட்டினா கொன்னுடுவேன்.”, என்று கேட்ட சத்தங்களைப் பொருட்படுத்தாமல் முதல் மாடியின் வராண்டாவில் ஓட, வழியை அடைத்து வந்து நின்றான் அவன்.
போக்குக் காட்டி வேறு கதவு வழியாக இரண்டாம் மாடியை அடைய அங்கே ஒரு கும்பல் இருந்தது. அதில் ஒருவன் முன்னேறி வர, கோதை மனதில் ‘இன்று செத்தோம்’ என்று நினைத்தாள்.
இருந்தும் தைரியமாக அவனை பார்த்து,
“வேண்டாம் டா…. போய்டு… உனக்கு நல்லதில்லை… சொல்லிட்டேன்… போ…”
அவள் கத்தி ஒரு பயனும் இல்லை. அவளை அனைவரும் சுத்து போட்டுவிட்டனர். அவள் “ஐயோ”,என்று அலறிய அலறலில்… வாசலில் நுழைந்து கொண்டிருந்த ஆதி இரண்டிரண்டு படிகளாகத் தாவி ஏறி,
“பூமா…” என்று வீடே அதிரும் படி கத்திக் கொண்டு வந்தான்.
அவன் பின்னே புவியும், வதுவும், நர்மதாவும் வர, அங்கிருந்த கோதை நிலையைக் கண்ட அனைவரும்,
விழுந்து விழுந்து சிரித்தனர்.
ஆமாம்! முகம், உடை, தலைமுடி எல்லாம் பல வண்ணங்களில் இருக்க, பார்க்க அவள்… பேய்.. இல்லை இல்லை கலர் பேய் போல இருந்தாள்.
ஆதி நெஞ்சில் கைவைத்து அவனை ஆசுவாசப்படுத்திக் கொண்டவன்.. “பூமா”, என்று வலி நிறைந்த குரலில் அழைக்க, கோதை பயந்து போனவளாய் “அத்தான்” என்று அவனை தாங்கினாள்.
அவனுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து, அவனை நிலை பெறச் செய்த பின், கோதை அங்கிருந்த ஷியாம், ராகுல், இன்பா, பிரவீனையும் அடித்துத் தள்ளினாள்.
“எருமைகளா… “
“என்ன நடக்குது இங்க?”, என்று கேட்ட ஆதிக்கு,
“நான் சொல்றேன். நான் சொல்றேன்.” என்று பல குரல்கள் வந்தாலும்,
“நீ சொல்லு பூமா” என்று தான் மனைவியையே கேட்டான்.
“இன்னிக்கு ஹோலி பண்டிகை அத்தான். நான் தான் மறந்து போய்ட்டேன். வருஷா வருஷம் இதுங்க எனக்கு கலர் அடிக்க பார்க்குங்க பக்கிங்க… நான் தான் மாட்டாமல் தப்பிச்சு போயிடுவேன். இன்னிக்கு நீங்க வரலன்னு ஏதோ யோசனையில் ஹோலியை மறந்தே போய்ட்டேன். பிசாசுங்க. பாருங்க அத்தான். என் புது லைட் புளு சல்வார் போச்சு.” என்று புலம்பின்னாள்.
ஆதிக்கு போன உயிர் திரும்பி வந்தது போல இருந்தது.
புவி ஆதியின் தோளில் இடித்து, “உன் பொண்டாட்டியை கறை படாம காப்பாத்த தான் எங்க உசுர கரை சேக்க பார்த்தியா? பாவி அத்தான்…”
“என்னடா பொடியா சொல்ற?”
“உனக்கு ஏதோ ஆபத்துன்னு இவரு காரை ஃபிளைட் மாதிரி ஓட்டிட்டு வந்தாரு. நாங்க எல்லாரும் இன்னிக்கு பரலோகப் பிராப்தின்னு நெனச்சோம். கடவுள் தான் எங்களை காப்பாத்தினான் நெட்டைக்கொக்கு.”
அவள் ஆதியை இறுக்கி அணைத்துக்கொண்டாள். மற்றவர்கள் விலகிட,
“என்ன அத்தான் இது? எனக்கென்ன ஆக போகுது? அதான் செக்யூரிட்டி கூட அரேஞ் பண்ணியிருக்கே? அப்பறம் என்ன பயம்?”
“இல்ல பூமா. என் மனசுல. நீ ஓட்றது போல. உனக்கு ஆபத்து போல தோணுச்சு. என்னால முடில டி…” என்று அவன் கண் கலங்கினான்.
அவன் வலி மிகுந்த தருணங்களில் மட்டுமே பயன்படுத்தும் டி என்ற வார்த்தை அவளுக்கு அவனின் நிலையைச் சொன்னது. அவனை இழுத்து மார்போடு அணைத்து தலையைத் தடவிக் கொடுத்தாள். அவனுக்கு அவளின் அணைப்பு தேவையாய் இருந்தது.
அவர்கள் கொஞ்சம் சகஜ நிலைக்கு வர, ஷியாம் ஆதியின் மேல் வாட்டர் கன் (WATER GUN) வைத்து கலர் தண்ணீர் அடிக்க, அவனோ அது பூமா மேல் படாமல் மறைத்து நின்றான். அனைவரும் சுற்றி வளைத்திட அவன் பூமாவை தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டு அவள் மீது ஒன்றும் படாதவாறு அவளைச் சுற்றிச் சுற்றிக் காப்பாற்றினான்.
அவனை ஒரு அடி வைத்த வது,
“அண்ணா! ஏற்கனவே அண்ணி அத்தனை கலர்லயும் முங்கி போய் தான் இருக்காங்க. நீ எதுக்கு இப்போ அவங்க மேலே கலர் படாத மாதிரி ஸீன் போடற?”
“நான் இல்லாதப்போ என் பொண்டாட்டி மேல நீங்க கலர் பூசியிருக்கலாம். இனிமே ஒரு ட்ராப், இல்ல ஒரு பின்ச் கூட என் பூமா மேல பட விட மாட்டேன்.”
“பார்ப்போம்”, என்று அனைவரும் ஆளுக்கொரு புறமாய் அவளைத் துரத்த, அவன் அவளைக் காக்க, அன்றைய நாள் அவர்களில் உடை போலவே வண்ணமயமாக இருந்தது.
நடந்த களேபரத்தில் கோதை முகிலனைப் பற்றி ஆதியிடம் சொல்லவே மறந்து போனாள்.
அகிலனும் அவனுக்கு தேவையான விவசாய உபகரணங்கள் வாங்க கோவை செல்ல வேண்டி இருந்ததால், கோதையை அழைத்து அருணாவைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு அவன் கோவை சென்றுவிட்டான்.
இளைஞர் பட்டாளம் முழுவதும் அருணாவை தாங்கள் பார்த்து கொள்வதாக சொல்லி ஆதிக்கும் கோதைக்கும் தனிமை கொடுத்து அவர்களின் வீடான ‘வசந்த இல்லம்’ நோக்கி சென்றனர்.
ஆதி கோதை இருப்பது எஸ்டேட் வீடு என்று அழைக்கப்படும் ‘சாந்தி நிலையம்’.
ஆதி கோதையை மடியில் ஏந்திக்கொண்டு, “நீ ஐயோன்னு கத்தினப்போ என் உயிர் என்கிட்ட இல்ல பூமா.”
“சாரி அத்தான். சாரி. இனிமே பயங்கரமான சூழ்நிலை வந்தாலும், ஐயோன்னு கத்த மாட்டேன். என் அத்தான் வருவாருன்னு நம்பிக்கையா காத்திருப்பேன். சரியா?”
“ம்ம். ஐ லவ் யூ பூமா…”, என்றவன் கண் கலங்கினான்.
“என்ன அத்தான் குழந்தை மாதிரி!”, என்றதும்,
அவன் குறும்புடன் “அதானே! குழந்தையைத் தூக்கி கொஞ்ச வேண்டிய நிலைல நான் குழந்தை மாதிரி இருக்கறது நல்லா இல்ல தான?” என்று அவளிடன் அவன் உரிமையெடுத்துக்கொள்ள,
அவளோ அவன் மனநிலைக்கு இன்று நானே மருந்து என்று அவனுக்கு இடம் கொடுத்தாள்.
அந்த சங்கமம் அவனை அவனின் கடுமையான மூன்று மணி நேர பயணத்தில் அவன் கொண்ட பதற்றத்திற்கும், இவளின் அலறலில் அவன்கொண்ட உயிர் வேதனைக்கும் அருமருந்தாக அமைந்தது.
அதென்னவோ கணவன் மனைவிக்குள் சண்டை வந்தால் கோபித்துத் தள்ளிப் போகிறார்கள். ஒரு நொடி அந்த கோபத்தை ஒதுக்கிவிட்டுப் பேசலாம், வாஞ்சையாய் கூடலாம். ஊடலின் பின் வரும் கூடல் தாம்பத்யத்தை வலுப்பெறச் செய்யும். அது போல துணையின் துயரமான நேரத்திலோ, மோசமான நேரத்திலோ நான் இருக்கிறேன் என்று தரும் நம்பிக்கை கூடல் அவர்களுக்கு மருந்தாகவும், மனதிற்கு இதத்தையும் அளிக்கும். இது மனோதத்துவம். பல தம்பதிகள் இதனை கடைப்பிடிக்காததும், அவர்களின் ஈகோவுமே இன்றைய வழக்காடு மன்றங்களில் இருக்கும் பாதிக்கும் மேற்பட்ட விவாகரத்து வழக்குகளின் அடிப்படை.
கோதை இங்கே ஆதியை அழகாக கையாண்டு அவனை சாந்தப்படுத்திவிட்டாள்.
மறுநாள் அகிலன் கொஞ்சம் கவலையாகக் காணப்பட்டான். ராஜேஸ்வரனும் வந்துவிட, அந்த ரிசார்ட்டைப் பார்க்க அவர்கள் படை கிளம்பியது.
ரிசார்ட்டை பார்வையிட்டுக்கொண்டே வந்தனர் ராஜேஸ்வரன், கோதை, மதி, ராகுல், பிரவீன், இன்பா, சுபா, கிருத்தி அனைவரும்.
யாரோ தங்கள் ரிசார்ட்டில் தங்க வந்திருப்பதாக நினைத்த மானேஜர் அவர்களை வழிநடத்த, உண்மையை சொல்ல போனவர்களை தடுத்த மதி, “அப்படியே இருக்கட்டும் சுற்றி பார்க்கலாம். எதனால இதை விற்க போறாங்க, நமக்கு இதை வாங்கினா லாபமான்னு எல்லத்தையும் தெரிஞ்சுக்கலாம்பா.” என்று தடுத்துவிட்டாள்.
அவள் சொற்படி அனைவரும் தங்கும் அறைகள், லாபி, ரெஸ்ட்டாரெண்ட், வாட்ச் ஏரியா, சுற்றுப்புறம் என்று அனைத்தையும் அலசி ஆராய்ந்தனர்.
இறுதியாக, “ஏன் இங்கு கூட்டமில்ல?” என்று இன்பா கேட்ட கேள்விக்கு மானேஜர் தடுமாறியபடி,
லோக்கல் ரௌடிகளின் அராஜகமும், நினைத்தால் வந்து இங்கிருப்பவர்களை அவர்கள் வம்பு செய்வதும் காரணம் என்று சொல்ல.
“இப்படி எல்லார்கிட்டையும் நீங்க சொல்லிட்டா எப்படி தங்க வருவாங்க?” என்ற கிருத்தியின் கேள்விக்கு,
“சாதாரணமா சொல்ல மாட்டேன் மா. ஆனா நீங்க எத்தனை பெண் பிள்ளைகள் இருக்கீங்க… அதான். உங்களுக்கு நாளைக்கு ஒரு பிரச்சனை வந்துட்டா. என் மனசு அன்னைக்கே சொல்லிருக்கலாமேன்னு வருந்தும். எனக்கும் பெண் பிள்ளை இருக்கு மா. அதுக்கு தான்.”
நாளை வருவதாகச் சொல்லிவிட்டு வெளியில் ஒரு இடத்தில் மொத்தமாக கும்பலாய் நின்று நிறை குறைகளை ஆராய்ந்தனர்.
அந்த பிரச்சனை என்று அவர் சொன்னது தவிர ஒரு குறையும் இல்லை.
இதற்கு ஒரு வழியை கண்டு விட்டு முழு தொகையையும் கொடுத்து ரிசார்ட்டை வாங்குவது என்ற முடிவுடன் அந்த பொதுக்கூட்டம் கலைந்தது.
கோவையில் இருந்து வந்த அகிலன் கண்களில் அவன் மாமாவும் சித்தப்பாவும் சில போலீஸ்காரர்களோடு ஏரியை சுற்றி இருந்த பகுதியில் நடந்து செல்வதை பார்த்தவன் மனம் ஒன்றும் புரியாமல் தவித்தது.
அவர்கள் சாதாரண உடுப்பில் இல்லாமல் அவர்களின் சீருடையில் இருந்தது அவனை வெகுவாக குழப்பியது.
ஒருவேளை நம்மை சரி கட்டி பழையபடி இருக்க, நம்மை அணுகுவார்களோ என்று கேள்வி எழுப்பிய மனதை, ‘இல்லை அப்படின்னா நேரா இங்க தானே வந்திருக்கணும்? நாம என்ன ஒளிஞ்சா வாழறோம் கண்டுபிடிக்க! அப்பறம் எதுக்கு யூனிஃபோர்ம் போடணும்?’ பற்பல கேள்விகளுடன் வீட்டை அடைந்தவன் ஆதியை வரச்சொல்லி போன் செய்து விட்டு ஓய்வாய் அமர்ந்தான்.
அவனருகில் காபியோடு அமர்ந்த அருணா, “என்னாச்சு அகில்…”
“ஒன்னும் இல்ல. சில உபகரணம் நான் எதிர்பார்த்ததுபோல அமையலை.”
“சரி வெய்ட் பண்ணுங்க… இது சம்மந்தமான பெரிய ஆட்கள் யாராவது இருக்காங்களான்னு ஆதிகிட்ட கேக்கலாம்.”
“ம்ம். நானும் அதுக்கு தான் அவனை வர சொல்லிருக்கேன்.”
மேடிட ஆரம்பித்த அவள் வயிற்றைக் கண்டான். அவளின் ஐந்தாம் மாதம் அது.
“உங்க அம்மா போன் பண்ணினங்களா?”
“இல்ல அகில். இந்த மாசம் அஞ்சு வகை சாப்பாடு செஞ்சு தருவாங்க. நானும் பேசுவாங்கன்னு பாக்கறேன். இல்லனா போகட்டும்.”
“நீ என் கூட இங்க வந்தது அவங்களுக்கு பிடிக்கல, அந்த கோவம் இன்னும் போகல.”
“இதென்ன வம்பா இருக்கு? மாப்பிள்ளை மனசறிஞ்சு நடன்னு இவங்க தான் சொல்லித்தந்தாங்க. இப்போ இவங்க பேச்சுக்கு மேல உங்க பேச்சை கேட்டா மட்டும் கோவம் வருதோ?”
“என்னடா?”
“இல்ல அகில். எனக்கு நீங்க தான் முக்கியம். அந்த வீட்ல இருக்க மாட்டேன்ன்னு நான் எடுத்த முடிவ நீங்க ஆதரிச்சீங்க, அதுபோல தான் இதுவும். தப்பான முடிவா இருந்தா ரெண்டு பேருமே சம்மதிச்சிருக்க மாட்டோம்.”
அவளின் தெளிவான பேச்சில் அகமகிழ்ந்து போனான் அகிலன்.

Nice update 👍👍👍
thanks akka
💕💕💕💕💕💕💕💕💕😍😍😍😍
நன்றி