Amudham 30

Amudham 30

கோதையின் வார்த்தைக்கிணங்க ஆதி உடனே ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனத்தைத் தொடர்புகொண்டு மொத்த குடும்பத்திற்குமே பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்தான். அவனால் கோதையின் பேச்சை லேசாக எடுக்க முடியவில்லை. அவள் போலீஸ்காரர் மகள், எப்பொழுதும் ஒரு கவனம் அவளிடம் இருக்கும். ஏதோ ஒன்று சரி இல்லாமல் இருக்க போய் தான் அவள் தன்னிடம் அவ்வாறு சொல்லிருக்க வேண்டும் என்று தன் மனையாள் மீது கொண்ட நம்பிக்கையால் அனைத்தையும் செய்தான். அது மட்டுமின்றி அலுவலகம், வீடு இரண்டிற்கும் கூடுதல் கண்காணிப்பு கொடுக்கும்படி பாதுகாப்பு நிறுவனத்தைத் கேட்டுக்கொண்டான்.

அங்கே சென்னையில்…

ஜோதிலிங்கம் தன் முன் நிற்கும் மருமகள்களைப் பார்த்தார். தன் மனைவியையும் பார்த்தார். பார்வதி பாட்டியோ அவர்கள் பாவம் என்னும் பாவனையில் இருக்க, பிள்ளைகள் அனைவரும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்தனர்.

“மாமா நீங்களே சொல்லுங்க, எங்களுக்கு கோதையை பத்தி அவங்க யாரும் ஒன்னுமே சொல்லல. நாங்க அவளை தப்பாவும் பேசலயே மாமா!”

“உண்மை தான் மா. ஆனா இப்படி ஒரு விஷயம் வீட்டில் நடக்குதுன்னு எனக்கு நீங்க தெரியப்படுத்திருக்க வேண்டாமா?”

“உங்களுக்கு சொல்லாம செய்வங்கன்னு நாங்க நினைக்கவே இல்ல மாமா.”

“சரி போனது போகட்டும். இப்போ எதுக்கு மா இங்க வந்திருக்கிங்க?”

“மாமா! நாங்க என்ன தப்பு செஞ்சோம்ன்னு எங்களுக்கு இந்த தண்டனை? சொல்லப்போனா நாங்க தான் அதிகம் இழந்து நிக்கிறோம். நானும் லட்சுமியும் பிள்ளைகள் இருந்தும் இப்படி அனாதையா நிக்கறோம். எங்க வீட்டுக்காரர் கிட்ட கூட நாங்க பேசறது இல்ல. நான் அந்த முகிலன் பயலை தலை முழுகிட்டேன்.”

“சரி ம்மா நான் என்ன செய்ய?”

“நாங்களும் உங்களோட இங்கேயே இருந்துடறோம் மாமா”, என்றனர் இருவரும்.

அகிலனை அவர் பார்க்க அவனோ, “தாத்தா, எனக்கொண்ணும் இல்லை. அன்னைக்கு சித்தி பேசினபோதே இவங்களுக்கு ஒன்னும் தெரியாதுன்னு எனக்கு தெரியும். இருந்தும் அவங்க நாலு பேரையும் தடுக்கல, எங்களுக்கு சொல்லல. அதான் எங்களோட கோவம். மத்தபடி இவங்கள நாங்க யாரும் வெறுக்கல” என்று சொல்லவே தமயந்தியும் லட்சுமியும் அவனை அணைத்துக்கொண்டனர்.

மற்றவர்களும் அவர்களை அரவணைக்க, அங்கே கண்ணீர் சிறிது நேரம் அனைவரையும் தன் வசப்படுத்தி இருந்தது.

அகிலன் தாங்கள் ஊட்டி செல்லப்போவதைச் சொல்ல, தாத்தா பாட்டியை தாங்கள் இருவரும் பார்த்துக்கொள்வதாக சொல்லி ஷ்யாமையும் அழைத்துப்போகச் சொல்லிக் கேட்டனர்.

“ஏன் அவன் உங்களுக்கு துணையா இருக்கட்டும்.” என்ற அகிலனிடம்,

“இல்லப்பா. நீங்க பிரிஞ்சு இருக்க வேண்டாம். சேர்ந்தே இருங்க.” என்றனர் கண்ணீர் மல்க.

அகிலன் ராஜேஸ்வரனுக்கு போன் செய்து நடந்தவைகளை சொல்லி ஷியாமிற்கு நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்குமா என்று கேட்க அவர் அவரின் செல்வாக்கால் அடுத்த நாளே அதை சாத்தியப்படுத்தினார்.

இரண்டு நாட்களில் அனைவரும் தங்கள் உடமைகளுடன், தாயாரிடமும், தாத்தா, பாட்டியிடமும் விடை பெற்று ஊட்டி நோக்கி பயணித்தனர்.

முகிலனும் இரண்டு நாட்களாய் கோதையை தொடர முயன்றான். ஆனால் அவனால் அவளின் நூறு அடி தூரத்தில் கூட தொடர முடியவில்லை. அவளை சுற்றி பலமான பாதுகாப்பு இருப்பதாகவே அவனுக்கு பட்டது. நெருங்க முடியாத அவளை நினைக்க நினைக்க முகிலனின் வெறி கூடிக்கொண்டே போனது.

அன்றும் வழியில் ஏதோ வித்தியாசமாக கோதை உணர்ந்தாள். சுற்றி தன் பார்வையை சுழற்றியும் ஒன்றும் அவள் விழி வலையில் விழாமல் போக, குழப்பமான மனநிலையில் டீ எஸ்டேட்க்குள் செல்ல, அங்கே அந்த மலைவாசிகள் ஆதிக்காக காத்திருந்தனர்.

ஆதி அவர்களோடு பேசிக்கொண்டிருக்க, கோதை அருகில் நின்று வேடிக்கை பார்ப்பது போல் சுற்றி பார்த்துக்கொண்டிருந்தாள், அவள் விழிவட்டத்தில் ஒருவன் சிக்கினான். அவன் இவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்பதுபோல் அவளுக்கு தோன்ற, தன் போனை நோண்டுவதுபோல, அவனை ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டாள். அவளும் அந்த மலை வாசிகளுடன் பேச, அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இங்கே அவர்களை மனிதர்களாக கூட மதிக்காதவர்கள் மத்தியில் அவர்களிடம் தன்மையையும் அன்புமாய் பேசிய கோதையை அவர்களுக்கு மிகவும் பிடித்துவிட, தங்கள் குடியிருப்புக்கு ஒருநாள் வர வேண்டும் என்ற கோரிக்கையோடு அங்கிருந்து சென்றனர்.

ஆதியை அவன் அலுவல் அறைக்குச் செல்ல சொல்லிவிட்டு நவிலனை காணச் சென்றாள் கோதை.

“வாங்க மேடம்.”

“சாப்பிட்டிங்களா அண்ணா?”

“ஆச்சு மா. என்னம்மா கொஞ்சம் டென்ஷனா தெரியுற?”

“அண்ணா! இந்த ஆள் யாரு?”, என்று அவள் மொபைலில் எடுத்த படத்தைக் காட்ட,

“இங்கே பாக்கிங் செக்ஷன்ல வேலை பார்க்கிறான்.”

“எவ்வளவு நாளா அண்ணா வேலை பார்க்கறான்?”

“இப்போ தான் மா ஒரு நாலு மாசமா.”

“அவன் மேல ஒரு கண்ணு வைங்க. இங்க வேற எதுவும் பிரச்சனை அடிக்கடி இருக்கா?”

“பெருசா ஒன்னும் இல்ல. அந்த மலைவாசிங்களை ஆதி வேலைக்கு எடுத்தது இங்க இருக்கற தொழிலாளர்களுக்கு பிடிக்கல, என்னென்னவோ பண்ணி அவங்களை துரத்த பாக்கறாங்க.”

“அப்படியா? சரி நம்ம தொழிலாளர்களை நான் பார்க்கணும். அத்தான் கிட்ட பேசிட்டு ஏற்பாடு பண்ணுங்க. நான் கொஞ்சம் வெளில போய்ட்டு வரேன்.”

“எங்கம்மா தனியா போற?”

“வந்து சொல்றேன்.”

போய்விட்டாள்.

“இவளை புரிஞ்சுக்கவே முடியல!”, புலம்பியபடி அவள் சொன்ன வேலையை பார்க்க ஆதியின் அறைக்குச் சென்றான் நவிலன்.


போனை எடுத்த அவனின் முகம் சிவந்துகொண்டே போனது. “நீங்க எல்லாரும் லாயக்கே இல்ல. நானே நேரடியா பார்த்துக்கறேன். போய் தொலைங்க.”

அடுத்த கட்ட நடவடிக்கையையும், ஒரு வருட தொய்வையும் அவனை கூண்டுப்புலியாக அந்த அறையில் குறுக்கும் நெடுக்கும் உலாவச் செய்தது.

மறுபடியும் ஒருவனுக்கு போன் அடித்தான். சில விவரங்கள் கேட்க, அவன் சொன்ன பதிலில் சற்று ஆடிப்போனாலும், அதை வாய்ப்பாக்கிக் கொள்ள நினைத்தது அந்த மிருகம்.

சில கட்டளைகளை இட்டுவிட்டு,

“நீ இப்படி வந்து என்கிட்ட மாட்டுவன்னு நான் நினைக்கவே இல்ல… வா டி வா…”, என்று கருவியபடி தன் வேலையைப் பார்க்க சென்றான் அவன்.


கோதை வேகமாக உள்ளே வர, சோமு “அக்கா “,என்று அவள் காலை கட்டிக்கொண்டான். அவனை தூக்கி கொஞ்சி விளையாடிவிட்டு இறங்கிவிடும் போது தூரத்தில் தன்னை யாரோ பார்ப்பது போல் தோன்ற, மெல்ல விழிகளை சுழற்றினாள். தேயிலை தோட்டங்களுக்கு மத்தியில் ஒரு சலசலப்பு இருந்தது. அங்கு செல்ல திரும்பிய அவளை ஆதியின் குரல் தடுத்தது.

“பூமா.. எங்க டா போற? ஒர்கர்ஸ் காத்திருக்காங்க வா மா.”

அங்கே சமவெளியில் ஐம்பது பேருக்கு மேல் நின்றிருந்தனர்.

ஒருமுறை அவர்களை தீர்க்கமாகப் பார்த்த கோதை,

“என்னை உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். நான் திருமதி.பூங்கோதை ஆதிலிங்கேஸ்வரன். உங்களை பார்க்கணும்ன்னு நான் தான் கேட்டேன்.
உங்க எல்லாரையும் எங்கள் குடும்பத்தில் ஒருவராக தான் நாங்க நினைக்கிறோம். ஆனால் உங்களில் சிலர், சில விஷமிகள் பேச்சை கேட்டு மலைவாழ் மக்களை கஷ்டப்ப்படுத்துறதா எனக்கு தகவல் வந்திருக்கு. உங்களுக்கு ஒண்ணுன்னா.. நாங்கதான் முதல்ல வருவோம். இன்னிக்கு வேணும்னா அவன் உங்களுக்கு ஐநூறோ ஆயிரமோ தரலாம். அதை வச்சிக்கிட்டு நீங்க வாழ்நாள் முழுக்க வாழ முடியுமா?

உங்க உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இங்க கொடுக்கிறோம், மெடிக்கல் இன்சூரன்ஸ் கொடுத்திருக்கோம், பிள்ளைகள் படிப்பு செலவுகளை ஏற்றிருக்கோம், இன்னும் உங்க வீட்டில் விசேஷம் என்றால் சிறப்பு விடுமுறையும், உதவித் தொகையும் தரோம். இன்னும் ஒரு விஷயம் நான் அத்தான் கிட்ட உங்க முன்னாடியே கேட்கறேன், பள்ளிக்கு போகாத குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர், அம்மாவோ, அப்பாவோ இங்க வேலை பார்த்தால் கண்டிப்பாக குழந்தையை இங்கே கூட்டி வரலாம், ‘மழலைகள் மகிழ்வகம்’ அப்படின்னு அவங்களுக்கு தனியா விளையாட, படிக்க வசதியா பாத்துக்கற ஏற்பாட்டை பண்ணனும். விரைவில் வரும்.

நான் கேட்டு என் அத்தான் மாட்டேன்னு சொல்ல மாட்டாரு. இப்படி உங்களுக்காக நாங்க பார்த்துப் பார்த்து செய்ய தயாரா இருக்கோம். ஆனா உங்கள்ள சிலர் செய்யற வேலையால உங்க எல்லாருக்கும் பாதிப்பு வருமோன்னு பயம்மா இருக்கு. அவங்க மலைவாழ் மக்களை கஷ்டபடுத்தப் படுத்த.. தோட்ட தொழிலாளர் சங்கத்துல நாங்களும் கம்பலைன்ட் பண்ணிட்டே தான் இருக்கோம். அரசாங்கமே நேரடியா தலையிட ஆரம்பிச்சா அப்பறம் எங்க கைல ஒன்னும் இருக்காது, அவங்க சொல்றத தான் நாங்க செய்ய முடியும். அதனால பாத்து நடந்துகோங்க. நல்லா யோசிங்க. ஒருநாள் ஒருத்தன் தர்ற ரொட்டிக்காக வாழ்நாள் எல்லாம் சோறு போடும் முதலாளிக்கு துரோகம் பண்ணலாமான்னு. இப்போ எல்லாரும் அவங்கவங்க வேலையைப் பார்க்கலாம்.”

நவிலனும் ஆதியும் அவளை மலைப்பாக பார்க்க, தொழிலாளர்கள் பயத்துடன் பார்க்க, மலைவாசிகள் மகிழ்ச்சியோடு பார்த்தனர்.

இவள் பேசியதைக் கேட்ட சிலர், அதில் இருந்த உண்மை உணர்ந்து ஆதியிடம் மன்னிப்பு கேட்டு மலைவாசிகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர்.

சிலர் இன்னும் தலைவன் பேச்சை கேட்டு சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆதி கோதையை நவிலனோடு வீட்டுக்குப் போக சொல்லிவிட்டு வக்கீல் சக்தியைப் பார்க்கப் போனான். மலைவாழ் மக்கள் மரக்கடத்தல் வழக்கை அவர் தான் அவர்களின் சார்பாக வாதாட உள்ளார். அதற்கான கட்டணம் கூட அவர் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அவர் மீது ஒரு நல்ல அபிப்ராயம் இருந்தது ஆதிக்கு. அவரோடு பேசிவிட்டு திரும்புகையில், அங்கிருந்த ஏதோ ஒன்று தனக்கு பரிச்சயம் போல தோன்ற, மீண்டும் ஒரு முறை பார்த்தான். சக்தி என்னவென்று கேட்க, ஒன்றுமில்லை என்று வெளியில் வந்துவிட்டான்.

மாலையில் சுபா, கிருத்தி வீட்டிலும் ஒப்புக்கொண்டதால், அவர்கள் இருவரும் தங்க ஏற்பாடுகளையும் பாதுகாப்பையும் செய்தான் ஆதி.

கோதையை பார்த்துப் விஷயத்தைச் சொல்ல, அவளோ அகிலனும் மற்றவர்களும் கிளம்பிவிட்டதாகவும், ஷியாமும் வருவதாக கூறவும், இருவருக்குமே மகிழ்ச்சி..

ராகுலை அழைத்துப் பேச, அவர்களும் நாளை வந்துவிடுவதாகச் சொன்னார்கள். ஆதி அவன் அப்பாவிற்கு எப்போது வருவார் எனக் கேட்க, அவரோ ‘ஒரு வாரம் ஆகலாம் அதுவரை அனைவரும் மகிழ்ச்சியாக பொழுதை கழியுங்கள்.’என்றார்..

அனைவரும் கூடப்போகும் மகிழ்ச்சியில் இருந்த அவர்கள் முகிலன் என்று ஒரு குயுக்தி படைத்த ஒருவன் தங்களுள் சில நாட்களுக்கு முன்னால் இருந்ததைச் சுத்தமாக மறந்து போயினர். அவன் எங்கே? என்று அவனைத் தேடவே இல்லை… ஒருவன் எதிரி என்றால் அவனை நாம் குறைத்து மதிப்பிடுத்தலோ, இல்லை அவனை மறந்து விடுதலோ என்றுமே கூடாது. அது நம்மை நமக்கே தெரியாமல் சிக்கலில் இழுத்துவிடும். இவர்களும் அதைத்தான் செய்து விட்டனர் அறியாமையில்! ஒரு தாயயே எதிராகத் திருப்பியவனின் மூளை என்னவும் செய்யும் என்பதை மறந்தனர்.


1 thought on “Amudham 30

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!