
அமுதம் 28
ஆதி வீட்டுக்கு வந்ததும் கண்கள் மனைவியைத் தேட, வீடே நிசப்தமாக இருந்தது.
அம்மா அப்பா அனைவரும் மாலையே ஊருக்கு போய்விட்டது அவன் அறிந்ததுதான். வீட்டில் பூமா இருக்க வேண்டுமே! ஆனால் வீட்டின் அமைதி அவனை உலுக்க, வேகமாக சமையலறை சென்றான். அவள் இல்லை. உணவு மேசைக்கு வர அங்கே ஒரு கடிதம் இருந்தது. எடுத்தான். படித்தான். முகத்தில் புன்னகை அரும்பியது. அதில் ‘புத்தக அறை வரவும்’ என்று எழுதியிருந்தது.
புத்தக அறை மூன்றாவது மாடியில் இருக்க, அவன் அங்கே சென்றான், அங்கே மேசையில் ஒரு கடிதம், பார்த்ததும் சிரிப்பு வந்தது. “கல்வி கோபாலகிருஷ்ணனின் ‘சுண்டு விரல் சீமா’ புத்தகம் எடுத்து வரவும்.” தேடினான். எடுத்தான். அதில் ஒரு காகிதம் இருக்க அவனுக்கு தலை சுழன்றது.
ஐயோ என்று அதை எடுத்தால், ‘உங்களை சுத்தப்படுத்திக்கொண்டு சமையலறை வரவும்’ என்று இருந்தது.
அவனுக்கு குழப்பம், இப்போது அந்த புத்தகத்தை எடுத்துச் செல்ல வேண்டுமா வேண்டாமா? என்று. எதற்கும் இருக்கட்டும் என்று எடுத்துக்கொண்டான்.
தங்கள் அறைக்கு வந்து படுக்கையில் அந்த புத்தகத்தை வைத்துவிட்டு குளியலறைக்குள் சென்றான். வரும்போது அவனுக்கு புது உடைகள் தயாராக இருந்தது. மணி பார்த்தான் 6.20 ‘இப்போ எதுக்கு புது ட்ரெஸ்?’ யோசனையோடு அணிந்து கொண்டு சமையலறை செல்ல அவள் பட்டுசேலையில் நின்றுகொண்டு பால் காய்ச்சி கொண்டிருந்தாள்.
பின்னொடு அவளை அணைத்தவன் ” பூமா என்னை எதுக்கு டா அலைய விட்ட? அந்த புக் யாருக்கு? நீயும் ரெடியா எங்கே கிளம்பிட்ட?”
“அப்பப்பா ஒரு ஒரு கேள்வியா கேளுங்க அத்தான். இப்படியா? எனக்கு அந்த புக் பிடிக்கும். படிக்க போனேன். அங்க தனியா படிக்க ஒரு மாதிரி இருந்துச்சு. அதான். இங்க கொண்டு வர சொன்னேன்..”
“ஏய். இதை நான் நம்பணுமா?”
“வேண்டாமா? ” என்றவள் பாவமாகக் கேட்க,
“சொல்லு டா.”
“இப்போ கிளம்பணும் லேட்டாச்சு.”
“எங்கே?”
“வண்டி எடுங்க சொல்றேன்.”
அவர்கள் எஸ்டேட் தாண்டி அடுத்த வளைவில் இருந்த முருகன் கோவில் வாசலில் வண்டி நின்றது.
இருவரும் உள்ளே சென்று சுவாமி தரிசனம் முடித்து வெளி பிரகாரத்தில் அமர்ந்தனர்.
“என்ன பூமா திடீர்னு கோவிலுக்கு..”
“அத்தான் கல்யாணம் பண்ணி கோவிலுக்கே வரலேயே! மனசுக்கு ஒரு மாதிரி இருந்தது. அதான்.”
“சரி டா. இப்போவாவது சொல்லேன். என்னதான் வீட்ல பண்ணி வச்ச…”
“வீட்டுக்குப் போனா தெரியும்.”
வீட்டிற்கு வரும்போது அவனும் தினுசு தினுசாகக் கேட்டுப் பார்த்தான். மம்ஹம் அவள் ஒன்றும் சொல்ல வில்லை.
வீட்டிற்கு வந்ததும் அவனை உணவு மேசைக்கு அழைத்து போனாள். உணவு தயாராக இருந்தது. எல்லாமே ஆதியின் விருப்பமான உணவு. இருவரும் பேசி சிரித்து உண்டு முடிக்க,
“வாங்க”, என்று மூன்றாவது மாடிக்கு அழைத்து போனாள். அங்கே புத்தக அறைக்கு முன்னால் இருந்த அறை பாதி திறந்திருந்தது, அதன் முன் நின்று, “திறங்க” என்றாள்.
திறந்தான். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்ப்பது போல இருந்த ஆளுயர புகைப்படம் ரிசெப்ஷனில் எடுத்தது அவர்களை பார்த்து சிரித்தது..
“அய்ய்! பூமா!” என்று அவளை அணைத்துக்கொண்டு உள்ளே போக, அறை முழுவதும் சின்னதும் பெருசுமாக இவர்கள் புகைப்படம் லேமினேட் செய்து மாட்டப்பாட்டிருந்தது.
“ஏ எப்படி பூமா..”
“புவனேஷ் ஊருக்கு போறதுக்கு முன்னாடி அவனோட போய் பிரிண்ட் பண்ணி வாங்கிட்டு வந்தேன். சரி சர்ப்ரைஸ் பண்ணலாம்னு பக்கத்து ரூம் வரைக்கும் வர வெச்சேன். நீங்க கர்மஸ்ரத்தையா பக்கத்து ரூமுக்கு போய்ட்டு கீழ போய்ட்டீங்க.”
“அப்போ நீ எங்கே இருந்த.”
“இந்த ரூம்ல தான். நீங்க தான உனக்கு பிடிச்ச ரூம் தான் நமக்குன்னு சொன்னிங்க. அதான் இந்த ரூம் செலக்ட் பண்ணினேன். நம்ம திங்ஸ் எல்லாமே இங்க மாத்திட்டேன். அதான் நீங்க அங்க குளிக்க போனதும் உங்களுக்கு ட்ரெஸ் எடுத்து வச்சிட்டு கிட்சன் போனேன்.”
“ஒஹ்ஹ்ஹ சாரி டா.”
“அட பரவால்ல அத்தான். என்ன முதல்ல சர்ப்ரைஸ் பண்ண பார்த்தேன் ஆன கடைசில நடந்துடுச்சு. “
“நானும் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன் வா போகலாம்.”
அவளை அழைத்துக்கொண்டு, கையில் டார்ச்சுடன் அவர்கள் வீட்டின் பின் புறம் நடக்க தொடங்கினார்கள். பௌர்ணமி நிலவு ‘உன் டார்ச் தேவையில்லை’ என்று சொன்னாலும் அவன் அவனின் பூமாவுக்காக வெளிச்சம் காட்டியபடி அவள் கைபிடித்து நடந்தான். அவர்கள் சமன் செய்து தோட்டம் போட்ட இடமெல்லாம் முடிந்து காடு போல காட்சியளித்த அந்த இடம் பூமாவை பயம் கொள்ள செய்யாமல் ஒரு ரசனையோடு அவள் காதல் கணவனின் கரங்களில் தன் கரத்தை இணைத்துக்கொண்டு இன்பமாய் அவனோடு சென்றாள். கொஞ்ச தூரம் தான். ஆனால் பாதையாக இல்லாமல் நிறைய செடிகொடிகள் இருக்க, அவள் சுற்றிப் பார்த்த வண்ணம் வந்தவள் காதுகளுக்கு அந்த ஒலி கேட்க, கண்களை விரித்து வைத்து ஆதியை நிறுத்தி “அத்தான்” என்றாள்.
அவனோ ” ஷ்.. பேசாம வா” என்று அழைத்து சென்றான்…
இதோ கைக்கெட்டும் தொலைவில் நிலவும் அதிலிருந்து வழியும் பால் போல சிறு அருவியும் இருக்க, காணக் காணத் தெவிட்டாத அந்தக் காட்சியை பூமா விழியில் நிறைத்துக்கொண்டு ஆதியின் கைவளைவில் நின்றாள்.
“பிடிச்சிருக்கா?”
“ஏன் அத்தான் இத்தனை நாளாய் இங்க கூட்டிட்டு வரல?”
“இங்க எல்லா நாளும் தண்ணீர் இருக்காது டா. இதுக்கு மேல இருக்கற மலைல எப்போ மழை வருதோ அடுத்த பத்து நாள் இங்கே இந்த அருவி கொட்டும். இதுவும் நம்ம இடம் தான். ஆனா அடர்ந்த காடா இருக்கிறதுனால யாரும் இங்கே வர்றது இல்ல. வேற யாருக்கும் தெரியவும் தெரியாது. இது என்னோட ரகசிய இடம்.”
அவள் அந்த அருவியை ரசிக்க, ஆதியோ அந்த இரவில் நிலவொளியில் உயிரோவியம் போல் நிற்கும் தன் மனையாளை காதல் ததும்பப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் அவன் தோளில் அழுந்த முகம் பதித்தவள், விழியை மேல்நோக்கி அவனை காண, அவள் அதரங்கள் அவன் கட்டுப்பாட்டில் வந்திருந்தது அடுத்த நொடியில்!
மெதுவாக அவளை தன் வசப்படுத்தியவன். அவளை கைகளில் ஏந்தி அந்த அருவிக்கு அருகில் செல்ல, அதன் நீர்த்துளிகள் சாரலாய் அவள் மீது விழ அவள் தேகம் சிலிர்த்தது.
அவளை அருவிக்கு மிக அருகில் இருந்த பாறையில் இறக்கி விட்டவன் அங்கே பார்க்கும் படி சைகை செய்ய, அவளும் பார்த்தாள். அந்த அருவிக்குப் பின்னால் குகை போன்ற அமைப்பு இருந்தது.
விட்டால் தெறித்து விடுவேன் எனும் விழிகளோடு அவள் அதை நோக்க, அவனோ, அவன் சட்டையை கழற்ற அவள் குங்குமமாய் சிவந்து போனாள்.
அவன் சட்டையை அவளுக்கு அணிவித்தான்.மறுபடியும் அவளை கையில் ஏந்தியவன், அந்த அருவி நீரை கடந்து அந்த குகைக்குச் செல்ல, அவள் நாணிக்கொண்டே அவன் மார்பில் தன் சிவந்த முகத்தை மறைத்துக்கொண்டிருந்தாள். உள்ளிருந்து அருவிநீரைப் பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது. குளிர் உடலை வதைக்க கோதை ஆதியோடு ஒட்டிக்கொண்டாள். அவன் அவளை தன்னோடு இறுக்கிக்கொண்டவன்,
“உன்னை மட்டும் இங்கே கூட்டிட்டு வந்து காட்டணும்ன்னு நினைச்சேன் பூமா. இன்னிக்கு தான் அந்த சந்தர்ப்பம் அமைஞ்சுது”
இருவரும் பேசி சிரித்துக்கொண்டு இருக்க, கைக்கடிகாரம் மணி பத்தைக் காட்டியது. மீண்டும் அவளை ஏந்திக்கொண்டு அருவிநீரை கடக்கையில் அவள் கையசைத்து நீரை வாரி அவன் முகத்தில் வீச, அவன் சிரித்தபடி
கனவா… இல்லை காற்றா…
கனவா.. இல்லை காற்றா…
கையில் மிதக்கும் கனவா நீ…
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே…
நுரையால் செய்த சிலையா நீ…
இப்படி உன்னை ஏந்திக் கொண்டு..
இந்திர லோகம் போய் விடவா…
இடையில் கொஞ்சம் வலி எடுத்தாலும்..
சந்திர தரையில் பாயிடவா?………..
நிலவில் பொருள்கள் எடை இழக்கும்..
நீரிலும் பொருள்கள் எடை இழக்கும்..
காதலில் கூட எடை இழக்கும்
இன்று கண்டேனடி..
அதை கண்டு கொண்டேனடி…
காதல் தாய்மை இரண்டு மட்டும்
பாரம் என்பதை அறியாது..
உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்.
பசியோ வலியோ தெரியாது…
உன்னை மட்டும் சுமந்து நடந்தால்..
உயரம் தூரம் தெரியாது…
உன் மேல் வந்தொரு பூ விழுந்தால்..
என்னால் தாங்க முடியாது..
கையில் மிதக்கும் கனவா நீ…
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே…
நுரையால் செய்த சிலையா நீ.
ஏகாந்தமான அந்த வேளையில் இருவரின் உள்ளங்களும் ஒன்றோடொன்று பிணைந்து இருந்தது. உடல் என்னும் மாயை தாண்டி உள்ளம் என்னும் விளக்கில் காதல் எனும் தீபமேற்றி அதன் வெளிச்சக்கதிரில் தங்கள் வாழ்வின் ஆனந்தத்தை உணர்ந்தனர் இருவரும்..
அவனிடமிருந்து இறங்கிய பூமா அவன் கை கோர்த்து அவனோடு கண்களில் காதல் மொழி பேசி இதழில் புன்னகையோடு வீடு வந்தாள்.
வீட்டைப் பூட்டிவிட்டு ஆதி வருவதற்குள் அறைக்கு சென்றவள், உடைமாற்றி அவன் வரவுக்காய் காத்திருந்தாள். அவன் வந்ததும் இருவர் விழியும் கலக்க அவள் வெட்கம் பூசி தலை கவிழ்ந்தாள்.
அவனும் உடைமாற்றி வர, அவளோ பால்கனியில் ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள். ஆச்சர்யமாக பார்த்த ஆதியிடன்,
“எனக்கு ஊஞ்சல்ன்னா பிடிக்கும். மாமா கிட்ட சொன்னேன். நேத்து அவரு தான் வாங்கி எனக்காக இங்க போட்டுக் கொடுத்தார்.”
ஆதி மெச்சுதலாய் ஓரு பார்வை பார்த்தவன், “சரிடா” என்று அவளருகில் அமர்ந்தான்..
இன்னும் பௌர்ணமி நிலவு தன் பால் போன்ற கரணங்களை அவ்விடம் முழுவதும் நிரப்பி இருக்க, அதன் ஒளியில் தெரியும் தன் மனையாளின் வதனத்தை கண்ட ஆதியின் கண்களில் காதல் மிகுந்து இருந்தது.
இருவரும் உள்ளே சென்று அணைத்தவாறு படுத்துக்கொள்ள, பூமா,
“எப்படி அத்தான் உங்களால இது மாதிரி சூழ்நிலைகளில் கூட கட்டுப்பாடா இருக்க முடியுது?”
“மனைவின்னு உரிமை வந்ததும் அவளை எப்போவேணாலும் சுகிக்கலாமா என்ன? ஏன் மலரை நுகர்ந்து கொண்டே தான் இருக்கணுமா? அதன் அழகை ரசிக்கக் கூடாதா? எனக்கு உன்னை அந்த நிலவொளில ரசிக்கத்தான் தோணுச்சு. உண்மையில் வேறு உணர்வோ தேவையோ தோணால டா மா.”
அவன் மார்பில் முகம் பதித்தவள், “நீங்க ரொம்ப வித்தியாசமான ஆள் தான் அத்தான்.”
“சரி அந்த சுண்டு விரல் சீமா கதை படிக்கத்தான் கேட்டியா இல்லை என்ன அலையவிட கேட்டியா?”
“அத்தான் அதை நான் பல தடவை படிச்சிருக்கேன். ஆனாலும் எனக்கு ரொம்ப பிடித்த புத்தகம் அது. அதை எப்ப குடுத்தாலும் படிப்பேன். சீமாவின் சேட்டைகள் அவ்வளவு அருமையா இருக்கும். அவனோட எலிகள் பூட்டிய சாரட் வண்டி, அவன் அம்மாவை படுத்தும் பாடு எல்லாமே!”
“உனக்கு குழந்தைகளை ரொம்ப பிடிக்குமா பூமா?”
“ஆமா அத்தான்”
“உனக்கு எவ்வளவு வேணும்?”
“நான் தனியா ஒரு பொண்ணா வளர்ந்து வந்த வரைக்கும் ரொம்ப தனிமையா இருக்கும், அப்பறம் அங்க போனதும் அகி,ஷியாம் எல்லாம் எனக்கு பாத்ததும் அவ்ளோ சந்தோஷம். மதி, சுஜி கையை பிடிச்சிட்டு வெளிய போக அவ்ளோ நல்லா இருக்கும்.. எனக்கு கண்டிப்பா மூணு பாப்பா வேணும்.”
“மூணும் பொண்ணா?”
“நான் எங்க அப்படி சொன்னேன்.”
“பாப்பான்னா பொண்ணு தான லூசு பொண்டாட்டி!”
“இல்லல்ல! முதல்ல பொண்ணு, அப்பறம் பையன் லாஸ்ட்ல இன்னொரு பொண்ணு.”
“அது ஏன் அப்படி?”
“அப்போ தான் வீடு சூப்பரா டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி நல்லா இருக்கும்.”
அவள் சொன்ன விதத்தில் சிரித்தவன், அப்படியே எண்ணி பார்த்து,”சரி தான்…” என்றான். பேசியபடி இருவரும் உறங்கிபோயினர். காதல் என்பது திருமணத்திற்கு முன் கொண்டு, அதற்குப்பின் அதை தொலைத்து சண்டையிடும் பல ஜோடிகளுக்கு மத்தியில் காதலை மட்டுமே பிரதானமாகக் கொண்ட இந்த ஜோடியை பால்நிலா முற்றத்திலிருந்து விழிவிரித்துப் பார்த்தது.

அருமை 👌👌👌👌👌
ஆஹா…ஒரே ரொமான்ஸா இருந்தால், நாம என்ன கமெண்ட்ஸை போடறது…?
😀😀😀
CRVS (or) CRVS 2797
👌👌👌👌👌👌👌👌