இது நான் உங்க கூட பேச நினைக்கிற விஷயங்களை பேசப் போகும் இடம். பெயருக்கு ஏற்றது போல என் மனசுல உள்ளதை இங்க வார்த்தைகளாக்கப் போறேன். சரி வாங்க இன்னிக்கு நான் உங்க கிட்ட பேச நினைச்சதைப் பார்ப்போம்.

வாழ்விடம்
நாங்க இருக்கற வீடு மூனு ரோடு சந்திப்புல உள்ள ஒரு அப்பார்ட்மென்ட். எங்க வீட்டு பால்கனில நின்னா எனக்கு இந்த ஏரியாவே ஓரளவுக்கு தெரியும். எனக்கு பொழுது போகலைன்னா அங்க நின்னு போற வர்ற வண்டிங்க, எதிர்ல உள்ள வீடுகளை வேடிக்கை பார்த்துகிட்டு இருப்பேன். எதிர் ரோட்டுல முதல் இடம் ஒரு தனி வீடு. வீட்டைச் சுத்தி மரங்கள் இருக்கும்.
சப்போட்டா, பெரிய நெல்லி, மாதுளை, தென்னை, மாமரம்ன்னு அந்த வீட்டை சுத்தியும் மரங்கள் தான். அதைப் பார்க்கும் போது கார்த்திக்கின் திருப்பூர் வீடு தான் என் நினைவுக்கு வரும். என் மாமனாரும் அந்த வீட்டுப் பெரியவர் போலவே காலைல செடிகளுக்கு தண்ணீர் விட்டு பூக்களைப் பறிச்சு, தோட்டத்தில் இருக்கும் போது அவர் முகமே ஜொலிக்கும்.
அந்த வீட்டுப் பெரியவரைக் கடக்கும் போதெல்லாம் சின்ன சிரிப்பை பரஸ்பரம் பகிர்ந்த்துப்போம். பேசிப் பழக்கமில்லை. ஒன்னு ஒன்றறை வருஷத்துக்கு முன்னாடி அந்த பெரியவர் தவறிட்டார். அப்பறம் சில மாதங்கள் அங்க யாரோ இருந்தாங்க. அடுத்து வீடு பூட்டியே கிடந்தது.
போன வாரத்தில் இருந்து அங்க சில மனித நடமாட்டம் தெரியவும், பரவாயில்ல யாரோ குடி வர்றாங்க போலன்னு ஆர்வமா பார்த்தேன். கடைசியில் மூனு நாளா அந்த வீட்டை இடிக்கிற வேலை நடந்துகிட்டு இருக்கு. தென்னை மரத்தை வெட்டிட்டாங்க. கட்டடம் தோள் அளவுக்கு குறைந்து போச்சு. அடுத்து மரங்களை வெட்டி விடுவாங்க. நாள் செல்ல அங்க ஒரு அப்பார்ட்மென்ட் வரலாம். அங்கயும் ஒரு பால்கனி வந்து அங்க வரப்போற யாரோ எனக்கு தெரிஞ்சவங்களா கூட மாறலாம். ஆனா எப்ப அந்த இடத்தைப் பார்த்தாலும் எனக்கு அந்த பழைய தனி வீடும், கண்ணாடியும் வேஷ்டியுமா தண்ணீர் ஊற்றிய பெரியவரும் தான் பசுமையா நினைவில் இருப்பாங்க.
தனி வீட்டை பராமரிப்பது சாதாரண விஷயம் இல்ல, கைக்குழந்தை போல எப்பவும் பார்த்துக்கிட்டே தான் இருக்கணும். அந்த வீட்டின் தற்போதைய மனிதர்களின் மனநிலை என்னால புரிஞ்சுக்க முடியுது. அப்பார்ட்மென்ட்னா காவலுக்கு செக்யுரிட்டி போட்டா, மோட்டர் போடுறது, சம்ப்ல தண்ணி மெயின்டெய்ன் பண்றது, முறை வாசல் எல்லாமே அவங்களே செய்துடுவாங்க. தனி வீட்டில் எல்லாமே நாம பார்க்கணும். இரண்டு பேரும் வேலைக்கு போற இன்றைய சூழல்ல இது அதிக ஸ்ட்ரெஸ் என்று நினைப்பாங்க தான்.
ஆனா வாழ்விடம் என்பது நமக்கு மன அமைதியையும் அதே நேரம் திருப்தியையும் கொடுக்கணும். எனக்கு என்னவோ அப்பார்மென்ட்டை விட தனி வீட்டு வாழ்க்கை மேல தான் ஆசை. இப்பவும் அவரோட திருப்பூர் வீட்டை ஆள் வச்சு பராமரிச்சுக்கிட்டு தான் வர்றோம். அங்க நான் இருந்த நாட்கள்ல எவ்வளவு மனக்கவலை இருந்தாலும் அந்த செடி கொடிகளுக்கு இடையில் போயிட்டா எல்லாத்தையும் மறந்து ஒரு மாதிரி பரவசமா இருக்கும். இப்பவும் எனக்கு அந்த பசுமையான சூழலுக்கு மனசு ஏங்குது.
உங்களுக்கு எப்படி? உங்க கருத்துக்களையோ இல்ல உங்க பார்வையையோ பகிர்ந்த்துக்க விருப்பம் இருந்தா கமென்ட்ல சொல்லிட்டு போங்க.
