Amudham 27

Amudham 27

அன்னம் புவிக்கு முன்னால் வந்து நின்றார்.

“இப்போ என்ன சொன்ன”

“நான் அங்கே கோயம்புத்தூர்ல அம்மா கூடவே இருந்துக்கறேன். எனக்கு யார் தயவும் தேவையில்லை.”

“இதையே உன் சொந்த அம்மாகிட்ட இருந்து மூனு வயசுல பிரிஞ்சு நீ நினைப்போ, என்னோடவே வச்சு பாத்துகிட்டேன்ல அப்ப சொல்லிருக்கலாமே புவி.”

புவி பதில் பேசவில்லை.

“மூனு வயசுல நின்ன உன்னை இவ சீண்டவே இல்லயே! எங்க அப்பாக்கு நீன்னா உயிர். உங்கம்மா உன்னை கூட்டிட்டு போறேன்ன்னு சொன்னப்ப எங்க அப்பா சண்டை போட்டு எங்க வீட்டு வாரிசுன்னு உன்னை நிறுத்தி வச்சாரு. இவளும் உன்னை கண்டுக்க மாட்டா. மகேஷ் பத்தி சொல்லவே வேண்டாம். வாழ்க்கையே வெறுத்த நிலைல இருந்த அவன் உன்னை ஏறெடுத்தும் பார்க்கல. பதினஞ்சு வருஷமா எங்க ஆதியை விட உன்னை தானே டா நான் சீராட்டி வளர்த்தேன். இப்போ இங்க என் பிள்ளைகள் புருஷனோட சேர்த்து இருக்கலாம்ன்னு பார்த்தா.. ஏன்டா இப்படி பேசுற?”

“நான் என்ன உங்க கையை பிடிச்சு போகாதீங்கன்னு சொன்னேனா? நான் அம்மா கூட இருக்கேன்னு தான சொன்னேன்!”

“சும்மா அம்மா அம்மான்னு சொல்லாத டா”, என்று கத்தி விட்டார் மகேஸ்வரன்.

“இத்தனை வருஷம் சொல்லாதவன் இன்னிக்கு சொல்றான்ன காரணம் இருக்கும் அப்பா. பொறுமையா இருங்க.”, என்ற கோதை,

“புவனேஷ். நீ சின்ன பையன் இல்ல. காலேஜ் செக்கண்ட் இயர் போக போற. வீட்டு நிலவரம் புரியாத குழந்தை இல்லை தானே?”

“என்கிட்ட பேச நீ யார்?”

“நான் உன்னோட ஆதி அத்தானோட மனைவி டா.”

“அவ்வளவு தானா?”

“வேற என்ன?” அவள் புரியாமல் கேட்க,

“அப்போ நீ எங்கே அம்மாவோட சொந்தக்காரப் பொண்ணு இல்ல?”

“இப்போ சொல்லு எந்த அம்மா?”

“காமாட்சி.”

“ஆமாம். அவங்களோட அக்கா பொண்ணு தான் நான். அதுகென்ன இப்போ?”

“நீ எங்க குடும்பத்தை பிரிக்க வந்திருக்க. இவ்ளோ வருஷத்துல ஒரு தரம் கூட அத்தை ஊட்டிக்கு வந்ததில்லை. ஆனா நீ நேரா இங்க வந்து அவங்களையும் வர வச்சிட்ட. மாமா ஊட்டிக்கு வந்தாலும் தங்க மாட்டாரு. ஆனா நீ அவருக்கு இங்கேயே தொழில் பார்த்துட்டு இருக்கற மாதிரி பிளான் போட்டு அதை எங்க அத்தை மூலமாவே செஞ்சிருக்க. இப்போ ஆதி அத்தானை கைக்குள்ள போட்டுட்டு ஒண்ணா இருந்த எங்க குடும்பத்தையே பிரிக்க பாக்கற.”

கோதை சத்தம் போட்டுச் சிரித்துவிட்டாள்.

“இதுல எனக்கென்ன டா லாபம்?”

“ம்ம். இப்படி எல்லாரையும் பிரிச்சு உங்க சித்தியை இங்க கொண்டு வந்து சேர்க்கத்தான்.”

“ஓ… அவங்க என் சித்தி தான் இல்லையா? உனக்கு பெத்த அம்மா இல்லையோ! சரி அப்படியே நான் பிளான் போட்டாலும் அது உனக்கு நல்லது தானே? உன் அம்மா கூட இனிமேலாவது நீ சேர்ந்து இருக்கலாமே!”

“எனக்கு அவங்க வேண்டாம். என்னை விட்டுட்டு போன என் அம்மா எனக்கு வேண்டாம்.”

“எனக்கும் கூடத்தான் என் அம்மா, சித்தி, மத்த குடும்பத்து பெரியவங்கள்ல தாத்தா பாட்டியைத் தவற வேற யாரும் வேண்டாம்..”

“என்ன சொல்ற? உன் அம்மா அப்பா உனக்கு வேண்டாமா?”

“ஏன் உனக்கு எங்க வீட்ல நடந்த எதுவும் தெரியாதா?”

“என்ன நடந்தது?”

“அவனுக்கும், வது, நர்மதா யாருக்குமே தெரியாதும்மா.” அன்னம்.

“இதெல்லாம் ஏன் அத்தம்மா மறைக்கிறீங்க? பாருங்க அவனுக்கு தெரியாததால, கேப்பார் பேச்சைக் கேட்டு என்ன பேசுனான் பாத்தீங்களா? குடும்பத்துக்குள்ள ஒளிவு மறைவு இருக்க கூடாது, இதெல்லாம் நான் உங்களுக்கு சொல்லணுமா அத்தம்மா?”

“நல்லா சொல்லு. எல்லாத்தையும் மறைச்சு மறைச்சு தான் இன்னிக்கு எல்லாரும் இந்த நிலைல நிக்கறோம்.” ராஜேஸ்வரன்

“நீங்களும் கூடத்தான் மாமா, அத்தம்மா கிட்ட உங்க நிலை, அத்தான் நிலை எல்லாம் மறைச்சீங்க. சும்மா சந்துல வந்து சிந்து பாடத்திங்க.”

“ஓ! நான் பேசல மருமகளே.”

“புவனேஷ், எங்க வீட்ல…” என்று ஆரம்பித்து அனைத்தையும் சொல்ல,

“அவங்க எப்படி அக்கா உன்னை தப்பா நினைக்கலாம்?”, தான் பேசியதை மறந்து சிறு பிள்ளையாய் அவன் சிணுங்கிக் கேட்க,

“இப்போ நீ நீலாம்மா பேச்சை கேட்டு என்னை தப்பா நினைக்கலையா? அது போலத் தான். விடு.”

ஒருவாறு நீலா பற்றவைத்த நெருப்பு கோதையின் தணிந்த பேச்சால் நீரூற்றி அணைக்கப்பட்டது.

நீலாவிற்கு மீண்டும் தோல்வி. எப்படியோ இவள் காமாட்சி கொண்டு வந்து விடுவாளோ என்று அச்சப்பட்டு கொண்டிருந்தவள் மனம் மெல்ல தணிந்தது.


சென்னையின் புறநகர் பகுதியில் இருந்த அந்த வீடு ஒளி இழந்தே இருந்தது. தமயந்தி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி இருந்தார். அவர் லட்சுமியைத் தவிர யாரோடும் பேசவில்லை. மீனாட்சியும் காமாட்சியும் மாறி மாறி அறை வாசலில் நின்று பார்த்தனர். மம்ஹ்ம்.. அவர்களை இவ்விருவரும் கண்டு கொள்ளவே இல்லை.

இந்திரன் தோட்டம், காடு என்று அலைந்து திரிந்து இரவுக்கு மட்டுமே வீட்டிற்கு வந்தார். சுந்தரும் கதிரும் விடுமுறையை திரும்ப பெற்று அலுவலகமே கதி என்று கிடந்தனர்.

மீனாட்சிக்கு நினைத்து அழவாவது விஷயம் இருந்தது. ஆனால் காமாட்சி அவர் எதிலும் முதலில் இருந்தே பட்டுக்கொள்ளாததால், இந்த சூழ்நிலையில் என்ன செய்வது என்றே தெரியவில்லை. அமைதியாக இருந்துகொண்டார்.

யாரும் முகிலன் என்ன ஆனான், எங்கு போனான் என்று யோசிக்கவும் இல்லை, தேடவும் இல்லை. அவனோ முகத்தில் கதிரின் பூட்ஸ் காலால் மிதித்து வந்த காயத்தை தடவியபடி கண்ணாடியில் தன்னை பார்த்து கொண்டு இருந்தான்.

அவன் தன்னை அனைவரும் சேர்ந்து அடித்து இழுவுபடுத்தி விட்டதாகவே நினைத்தான். அவன் நெஞ்சின் வன்மம் அவனைப் படுத்தியதாக உணராமல் மேலும் மேலும் தன்னைத் துன்பத்தின் பிடியில் தள்ள அவன் கோதையைத் தேடி புறப்பட்டான்.

ஷ்யாம் ஒரு வழியாக தாத்தா பாட்டியோடு தோட்டத்து வீட்டில் இருந்து படித்துக்கொண்டே தோட்டங்களை மேற்பார்வையில் வைத்துக்கொள்வதாக ஒத்துக்கொள்ள, அகிலன் ஒரு திருப்தியான பார்வையோடு அருணாவை பார்க்க, அவளோ சங்கடத்தோடு அவள் அன்னையைப் பார்த்தாள்.

விஷயம் அறிந்த நாள் முதல் அருணாவின் அன்னை அவளை ஊட்டிக்கு போக கூடாது என்று சொல்லி கொண்டே இருக்க, அகிலனின் உறுதியை அறிந்த அருணா அவரை எவ்வளவோ சமாதானம் செய்தும் அவர் அருணாவை தன் வீட்டிற்குக் கூட்டி போகும் முடிவுடன் இருந்தார். அருணா தடுத்தும் கேளாமல்,

“மாப்பிள்ளை, அவ பிள்ளத்தாச்சி. நீங்க பாட்டுக்கு மலைக்கு கூட்டிட்டு போறேன் சொல்றிங்களே? மாசமான பிள்ளை மலையேறக்கூடாதுய்யா…”

“அப்போ ஊட்டில ஒருத்தரும் பிள்ளை பெத்துகல! ஒரு மாசமான பொண்ணும் அங்க இல்லையா?”

“இப்படி குதர்க்கமா பேசினா எப்பிடி? நீங்க எதுக்கு இப்போ தனியா வந்து, ஊட்டிக்கு போய்.. இதெல்லாம் தேவையா? அம்மா அப்பாவோட ராசியாய்டுங்க மாப்பிள்ளை. உங்க அம்மா அப்பா தான் எந்த தப்பும் உங்களுக்கு பண்ணலையே! அப்பறம் எதுக்கு நீங்க இப்படி எல்லாம் பண்ணனும்?”

அகிலன் அருணாவை நோக்கினான்.”நீ என்னோட ஊட்டி வர்றியா இல்ல உங்க அம்மா கூட போறியா?”

அவள் அன்னையும், “என்னோடவே வந்திடு அருணா.”

“நான் உங்களோட வரேன் அகி. எனக்கு நீங்க தான் முக்கியம்.”

“ஏண்டி அறிவில்ல? மூனு நாளா படிச்சி படிச்சி சொல்றேன் ஒன்னு மாமியாரோட ராசியாய்க்கோ, இல்லனா என்னோட வந்திடு. ஊட்டிக்கு போகதன்னு. இப்போ புருஷன் தான் வேணும்ன்னு போற. போடி…”

கோவமாக வெளியேறிவிட்டார்.

ஊட்டி செல்ல வேலைகள் அனைத்தும் துரிதமாக நடந்தன.


ஆதி தொழிலாளர்கள் முன் நின்றிருந்தான். அவன் அவ்வளவு கோவமாக இருந்து இதுவரை அவர்கள் கண்டதில்லை.

“இப்போ முடிவா என்ன தான் சொல்றிங்க? எப்போ பாரு சண்டை… லேடீஸ் வேலைக்கு வராங்க, வேலை முடிஞ்சதும் போய்ட்டே இருக்காங்க… ஒரு தொந்தரவு இல்ல… நீங்க என்னடான்னா எப்ப பாரு வேலைக்கு நடுவுல சண்டை… அடிதடி! இல்ல என்ன தான் நினைச்சுட்டு இருக்கீங்க.”

“அவனுங்கள எதுக்கு சார் வேலைக்கு எடுத்திங்க?” என்றான் கூட்டத்தில் இருந்த ஒருவன்.

“யோவ் இது என் பேக்டரி. நான் யாரை வேணாலும் வேலைக்கு எடுப்பேன். உன்கிட்ட பெர்மிஷன் கேக்கணுமா?”

“இவனுங்க முன்னாடில்லாம் அவங்க ஊரை விட்டே தாண்ட மாட்டானுங்க. இப்போ என்னடான்னா எங்களுக்கு சமமா உக்காந்து சாப்பிடறானுங்க. இவனுங்க எல்லாம் ஆளுங்களா சார்?”

“இதோட நீங்க வாய முடிட்டா நல்லது. அவங்க மலைவாசி அவ்ளோதான் யா. ஏதோ பார்க்கக்கூடாதவன் மாதிரி பாக்குறிங்க. போங்க இங்க இருந்து.”

அந்த கும்பல் வெளியேற, மலைவாசி ஆண்கள் சிலர் முகத்தில் காயங்களோடு வந்தனர்.

“என்ன சடையன் மறுபடியும் இப்படியா?”

“இல்லைங்க ஐயா. அவனுங்க தப்பா பேசுறாங்க. பொறுத்து போனோம். அப்படியும் அடிச்சிபுட்டாங்க.”

“நானும் அவங்களை வேலைய விட்டு கூட நிறுத்தி பார்த்தேன். யூனியன் மூலம் மறுபடியும் வராங்க. என்ன செய்யறது?”

“எங்களுக்கு விடியாது போல சாமி.”

“ச்ச அப்படி சொல்லாதீங்க. நான் என்ன பண்ணலான்னு யோசிக்கறேன். ரெண்டு நாள் கழிச்சு வேலைக்கு வாங்க போதும். இந்தாங்க பணம். முதல்ல டாக்டர் கிட்ட போங்க..”

“பணமெல்லாம் வேணாங்க ஐயா. காட்டு செடில பத்து போட்டா நாளைக்கு ஆறிடும். வரேணுங்க.”

ஆதி பெருமூச்செறிந்தான். இதோடு இந்ந மாதத்திலேயே இவர்களை மூன்று முறை தாக்கி விட்டனர். இவர்களெல்லாம் மலைகிராம ஆண்கள்.. அங்கே தேனும்,பழமும் கொண்டு விற்று பிழைத்தார். ஆனால் புதிதாக வந்த வன அதிகாரி, இவர்கள் மரம் வெட்டுவதாக கேஸ் எழுத இவர்கள் கோர்ட்டுக்கும் மலைக்கும் அலைந்துகொண்டிருக்கிறார்கள். தேனும் எடுக்க முடியாது போக வருமானம் இன்றி தவித்தவர்களை தன் டீ பேக்டரியில் கூலி வேலைக்கு எடுத்துக்கொண்டான் ஆதி.

அன்றிலிருந்து இன்று வரை இங்கே இருக்கும் மற்ற தொழிலாளர்கள் அவர்களோடு ஒத்து போவது இல்லை. நேரில் பேச கூடாது, சேர்ந்து சமமாக நிற்கவோ, உட்காரவோ கூடாது என்று ஏதோ காரணத்துக்காக சண்டை போட்டுக்கொண்டே இருந்தனர். ஆதிக்கு இது தலைவலியாக இருந்தாலும் மலையின மக்கள் உழைக்காமல் அவன் பணத்தை வாங்க மறுக்க அவன் அவர்களின் நேர்மைக்காக இங்கேயே வேலையில் நீடிக்கச் செய்தான்.

இன்னும் எத்தனை நாள் இந்த பிரச்சனையோ? அவர்கள் கேஸ் பார்க்கும் வக்கீல் சக்தி நம்பிக்கையாக இன்னும் இரண்டு வாய்தாக்களில் முடித்து விடுவதாக சொன்னதால் சற்று மூச்சு விட்டுக்கொண்டான். கேஸ் இல்லாது போனால் அவர்களே அவர்கள் வாழ்க்கையை பார்த்துக்கொள்வார்கள்.

வீட்டிற்கு கிளம்பிய ஆதிக்கு தனக்காய் காத்திருக்கும் பூமாவின் முகம் மின்னலாய் வந்துபோனது. அவன் முகத்தில் சிரிப்புடன் அலுவல் அறையை விட்டு வெளியேற, அவனின் சிரிப்பை பார்த்த சண்டையிட்ட தொழிலாளர்கள்,

“இதெல்லாம் ஒன்னும் வேலைக்கு ஆகாது. நம்ம தலைவர் கிட்ட சொல்லணும். என்ன பண்ணாலும் பொறுத்து போறானுங்க, இவரும் அவங்களுக்கு தான் பேசுறாரு. அதனால வேற யோசனை பண்ண சொல்லி அவர் கிட்ட சொல்லணும்.”

“சரிப்பா வா போவோம்.”


3 thoughts on “Amudham 27

  1. எந்த பக்கம் பந்தை அடிச்சாலும் நம்ம கோதை கோல் அடிச்சிடுவான்னு…
    பாவம் அந்த நீலாம்பரிக்கு தெரியாது இல்லை.?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!