Amudham 25

Amudham 25

ராஜேஸ்வரனிடம் வாயடித்து விட்டு வெட்கத்தால் ஓடி தன் அறைக்கு வந்த கோதை கண்டது ஏதோ சிந்தனையின் பிடியில் இருந்த ஆதியை.

அவனுக்கு அருகில் சென்று “பே” என்று அவள் பயமுறுத்த, அவன் சிரிப்புடன், “பூமா என்னடா விளையாட்டு இது? நான் சின்ன பையனா என்ன? நீ பேன்னு சொன்னது அலறிட்டு ஓட”

“இல்ல தான். ஆனா ஏதோ யோசனையில் இருந்த உங்களை சிரிக்க வச்சேனா இல்லையா.”

“உண்மைதான்.”

“என்ன என் அத்தானுக்கு ஆழ்ந்த சிந்தனை?”

“தப்பு பண்ணிட்டேன். அதை எப்படி சரி பண்றதுன்னு யோசிக்கறேன்?”

“நீங்க தப்பு செஞ்சிங்களா?”, ஒரு நொடி யோசித்தவள்,

“ஓ அதுவா… சரி சரி… எப்படி சரி பண்ண போறீங்க?”

“என்னன்னு உனக்கு தெரியுமா பூமா?”

“உங்களை நான் அறிவேன்…” என்றாள் இல்லாத காலரை தூக்கி விட்ட படி.

“நான் இதுவரைக்கும் அவங்களோட சண்டை போட்டிருக்கேனே ஒழிய அசிங்கப்படுத்தினதோ, இல்ல வாயை மூடச் செய்வது போல பேசியதோ இல்லை. இன்னிக்கு அப்படி பேசிருந்தாலும் அதுல நர்மதாவை கொண்டு வந்திருக்க கூடாது. அவ குழந்தை. அவள் காதில் விழுந்திருந்தால் ரொம்ப குழம்பி, வருத்தமும் பட்டிருப்பா..”

“பேசறத்துக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும் அத்தான்.. பேசிட்டிங்க… கொட்டின வார்த்தைகளை அள்ள முடியாது.”

“நீ சொல்றது சரி தான். நான் இன்னும் கொஞ்சம் நிதானமாவும், விவேகமாவும் நடந்திருக்கணும்.”

“சரி இப்போ இதை பத்தி யோசிக்காதிங்க. யோசிச்சாலும் சரியான பதில் கிடைக்காது. விஷயத்தை ஆறப்போடுங்க. மனசு நிதானத்துக்கு வந்ததும் சரியான முடிவு கிடைக்கும்.”

“நீ சொல்றதும் சரி தான். சரி நீங்க இன்னும் கிளம்பலையா.”

“இதோ கிளம்பிட்டேன்” என்று மறுபடியும் ஹாலுக்கு வர, அங்கே ராஜேஷ் இவளை பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்தார். அவள் கண்ணை உருட்டி தலையை இடது வலதாக ஆட்ட… அவரும் வாயில் கைவைத்து தலையசைத்தார்.

அன்னம் அவரிடம் சொல்லிக்கொண்டு மொத்த கூட்டத்தையும் அழைத்துக்கொண்டு சென்றார். அவருக்கு ஏதோ கல்லூரி பேராசிரியர் மாணவர்களை சுற்றுலா கூட்டி வந்தது போல இருந்தது.

காலை என்பதால் பொடானிகல் கார்டன், தொட்டபெட்டா, மலர் கண்காட்சி என்று சுற்றிவிட்டு வழியில் பல இடங்களில் பழங்களும், கேரட்டும் சாப்பிட்டு சேட்டைகள் பல செய்து அந்த இளமை கூட்டம் ஆர்ப்பரித்தது. இவர்களை உதட்டின் புன்னகை மாறாமல் கண்ணும் கருத்துமாக, தான் கண்டிப்பது கூட அவர்களுக்கு தெரியாதவாறு அழகாய் வழிநடத்திக்கொண்டு போனார் அன்னம்.

கடைசியில் போட் ஹவுஸ் வர ஒரே சண்டை, வெண்மதி, சுஜி, நர்மதா , அன்னம் அனைவரும் சோர்வாக இருப்பதால் பெரிய படகை எடுத்து படகோட்டியிடம் விட்டு உல்லாசமாக செல்லலாம் என்று சொல்ல, சுபா, கோதை, கிருத்தி, வது  நால்வரும் மிதிபடகை எடுத்துக்கொண்டு சுற்றலாம் சென்று சொல்ல, ராகுல், இன்பா, பிரவீன் மூவரும் நொந்து போனார்கள்.

ஒருவரும் ஒத்துவராது போகவே ராகுல் ஒரு வழியைக் கண்டுபிடித்தான். ராகுல் பெரிய படகில் படகோட்டியோடு முதல் நால்வருடன் செல்வது, இன்பா சுபா கோதையை அழைத்துக்கொண்டு ஒரு மிதிபடகிலும் பிரவீன் கிருத்தி வதுவை அழைத்துக்கொண்டு ஒரு படகிலும் செல்வதாக முடித்தான். சண்டை முடிவுக்கு வந்ததும் வேலை துரிதமாக நடக்க அவரவர் படகுகளில் உல்லாசமாகச் சென்றனர்.

பெரிய படகில் சுஜி, நர்மதா இருவரும் அன்னத்துடன் பேசி சிரித்துக்கொண்டு வர வெண்மதி ராகுலைப் பார்த்த வண்ணம் இருந்தாள்.

ஒரு கட்டத்தில் ராகுலுக்கு எரிச்சல் வந்தது.

“பேசாம இன்பாவை இங்க விட்ருக்கலாம். இவ என்னடான்னா வச்ச கண்ணை எடுக்கவே மாட்டேங்கறா.. இன்னிக்கு இதுக்கு ஒரு முடிவு கட்டணும்.”

மதியின் அருகில் சென்று அமர்ந்தவன், “உனக்கு என்ன தான் மதி வேணும்?”

“நீங்க தான் ராகுல்.” என்றாள் தைரியத்தை வரவழைத்துக்கொண்ட குரலில்.

“உனக்கென்ன கிறுக்கா? இப்போ தான் பூ விஷயத்துல உங்க வீடே பூகம்பம் வந்து இருக்கு. உனக்கு இந்த நேரத்துல காதல் தேவையா?”

“அப்போ இந்த பிரச்சனை இல்லன்னா காதலிக்கலாம் தப்பில்லை! அப்படித்தானே ராகுல்?”

ராகுல் தலையில் அடித்துக்கொண்டான். “இதேதடா எனக்கு வந்த சோதனை.” என்று நொந்துகொண்டு,

“அம்மா மதி நீ நினைக்கறது போல எனக்கு காதல் சுலபமானது இல்ல. சுபமாவும் முடியாது. எங்க வீட்ல பல பிரச்சனை இருக்கு. இப்போ தான் நான் படிப்பை முடிச்சிருக்கேன். வேலை கேம்பஸ்லயே கிடைச்சாலும் எனக்கு அங்க வேலை செய்ய விருப்பம் இல்லை. நானே அடுத்து என்ன? என்ற நிலையில் தான் இருக்கேன். எங்க அக்காக்கு அடுத்த வருஷம் கல்யாணம் பண்ணனும். அப்பா என்கிட்ட குறைந்தபட்சம் 15 லட்சமாவது எதிர்பார்பார். இல்லனாலும் நான் செய்யணும். புரியுதா ?அது என் கடமை. என்னால காதல் வசனம் பேசி மணிக்கணக்கில் கடலை போட முடியாது. உன் வீட்லயும் ஆயிரம் சிக்கல். புரிஞ்சுக்கோ.

உன்னோட இந்த காதலால யாருக்கும் காயமில்லாம இருந்தா சரி ஆனா உனக்கே பல அடி படும். முதல் அடியே என் மறுப்பு தான். நீ எங்க பூவோட கசின். உன்னைக் கஷ்டப்படுத்தக் கூடாதுனு இவ்வளவு பொறுமையா சொல்றேன். புரிஞ்சு நீ உன் வேலையை பாரு. நீயும் யு.ஜி முடிச்சிட்ட.. பி.ஜி பண்ணு இல்ல வேலைக்கு போ. உன் வாழ்க்கைல சாதிச்சுட்டு அப்பறம் பாரு. நான் என்ன? பேரழகனே உன்னை தேடி வருவான். சரியா?”

இதமாய் சொல்லிவிட்டு நகர்ந்து சென்றான், இதேயெல்லாம் ஒரு ஜீவன் காதில் வாங்கிக்கொண்டத்தை அறியாமல்!

மறுநாள் மலை ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையோடு அந்த நாள் சுற்றுலா முடிவுக்கு வந்தது.

வீட்டிற்கு வந்த கோதையின் கண்கள் ஆதியைத் தேட, மகேஸ்வரன் அவளை , “என்னம்மா பெண்ணே… உன் வீட்டுக்காரனை தேடுறியா?”

அவள் ‘ஆமாம்’ என்று தலையசைத்தாள்.

“அவன் தான் காலைல அகிலனைக் கூட்டிட்டு போனான். அப்பறம் நடுல வந்து எங்க அத்தானையும் கூட்டிட்டு போய்ட்டான். இன்னிக்கு நைட் வருவங்களோ என்னவோ?”, என்று அவர் இழுக்க,

கோதை வாடிப்போனாள். சோபாவை விட்டு எழுந்து தங்கள் அறைக்கு வந்தவள், முதல் நாள் இரவு அவர்களின் காதல் நிமிடங்களை எண்ணி ஒருபுறம் நாணினாள். அதே நேரம் இன்று அவன் இரவு வீட்டுக்கு வர மாட்டான் என்றதும் கண்கள் கன்னங்களில் நீர்கோலம் போட்டது.

அவள் நேரத்தையும் பொருட்படுத்தாது பால்கனிக்குச் செல்ல.. குளிர்ந்த மலைக்காற்று அவள் மீது மோதியது. எங்கோ நீரின் இரைச்சல் கேட்க தோட்டத்தில் ஒரு செயற்கை நீரூற்று தெரிந்தது. அதை வெறித்தபடி கன்னத்தில் வழிந்த நீரைக்கூட துடைக்காமல் நின்றிருந்தாள்.

அப்போது அவளை ஒரு வலிய கரம் பின்னாலிருந்து அணைத்தது. அந்த கரத்தின் சொந்தக்காரனை அவன் வாசத்தால் உணர்ந்தவள், தன் தலையை பின்புறம் அவன் மார்பில் சாய்த்து பின் அவன் கன்னங்களில் இடித்தாள்.

“எங்க போன?”

அவளின் அழைப்பில் இருந்த ஒருமை அவள் தன்பால் கொண்ட நேசத்தால் என்பதை உணர்ந்த ஆதி சிரிப்போடு,

“இந்த எஸ்டேட், டீ எஸ்டேட் அப்பறம் நமக்கு மலை கிராமத்துக்கு பக்கத்துல விவசாய நிலம் இருக்கு. அதையும் இன்னிக்கி அகி அண்ணாவோட போய் பார்த்துட்டு அண்ணா சொன்ன சஜஷன் எல்லாம் கேட்டுட்டு வந்தேன். எப்போதும் போல டீ பாக்ட்ரில தொழிலாளர்கள் பிரச்சனை…”

அவன் சொன்னதை அமைதியாகக் கேட்ட்டவள், “சரி வா போய் சாப்பிட்டு சீக்கிரம் வரலாம்.”

“ஓஹோ.. மகராணியாருக்கு என்ன அவசரமோ?”

அவள் முகத்தைத் திருப்பிய வண்ணம், “சீக்கிரம் தூங்கினா தானே நாளைக்கு மலை ரயிலில் போகலாம்!” என்றாள் குழைந்துபோன குரலில்.

“அப்போ அதுக்குத்தான் நீங்க சீக்கிரமே சாப்பிட்டு வர கூப்பிடிங்க. இதை நான் நம்பிக்கணும்? இல்லையா?” என்றான் கேலியாக.

“வர்றியா இல்லையா?”

“வரல.”

“வரலன்னா போ. உனக்கு தான் நஷ்டம். நான் போய் வெண்மதி கூட தூங்கிக்கறேன்.” என்று உதட்டை சுழித்து கொண்டு கோதை பேச.

“அடிப்பாவி, காலைல இருந்து பார்க்கல. ஒரு முத்தம் கொடுத்தியா? இல்ல வேறு ஏதாவது பேசினியா? நீ பாட்டுக்கு மதி கூட படுக்க போறேன்னு சொல்ற! என்னை பார்த்தால் உனக்கு பாவமா இல்லையா பூமா?”என்றான் ஏங்கும் குரலில்.

“அதுக்குத்தானே சீக்கிரம் சாப்பிட்டு வரலாம் வான்னு கூப்பிட்டேன். நீங்க தான் வரலன்னு சொன்னிங்க. இப்போ மட்டும் இந்த பேச்சு பேசறீங்க?”

“நீ ஒத்துப்பன்னு கொஞ்சம் விளையாடினா. ஒரேடியா என்னை கழட்டிவிட்டு போற. போ பூமா. நான் கோவமா இருக்கேன் ” என்று பொய் கோபம் கொண்டான்.

“சீக்கிரம் வாங்க” என்று சொல்லியபடி ஒரு அடி முன்னால் வைத்தவள், சட்டென அவன் கன்னத்தில் இதழ் பதித்து விட்டு ஓடினாள்.

அவளை காதல் ததும்பும் கண்களுடன் பின் தொடர்ந்தான் ஆதி.

அங்கே உணவு மேஜையில் ராஜேஷுடன் பேசிக்கொண்டிருந்த அகிலன் கண்களுக்கு துள்ளி வரும் கோதையும் அவள் பின்னால் காதலோடு வரும் ஆதியும் பட, நெஞ்சம் நிறைந்து போனான் அவன்.

அன்றைய கதைகள் பேசி அனைவரும் உண்டுகளித்து ஓய்வெடுக்கச் செல்ல, ஆதி கோதையின் கை பிடித்து பால்கனிக்கு அழைத்து சென்று அவளை அணைத்துக்கொண்டு நின்றான்.

“எனக்கு இந்த இடத்தில உன்னை அணைத்து நிக்கறது ஏதோ பெரிய நிம்மதியை கொடுக்குது பூமா.”

“எனக்கும் தான் அத்தான்.”

“பாருடா இப்ப தான் நான் உனக்கு அத்தான்னு நியாபகத்துக்கு வரேன்ல!”, என்று கேலி பேச,

“ச்சு. சும்மா இருங்க அத்தான்” என்று அவன் மார்பில் தஞ்சம் கொண்டாள் கோதை.

அவளை கையில் ஏந்திக்கொண்டவன் அவள் நெற்றியில் முத்தமிட்டபடி அறைக்கு தூக்கிச் செல்ல, அவள் மேலும் அவன் மார்புக்குள் புதைந்தாள். அவர்கள் காதல் வாழ்வின் அடுத்த பக்கத்தை நிரப்ப ஆரம்பித்தனர் இருவரும்.

காலையில் தாமதமாக எழுந்த கோதை வேகவேகமாகக் கிளம்பி ஹாலுக்கு வர, யாரும் தயாராகாமல் இருக்கக் கண்டாள்.

“ஓய் யாரும் கிளம்பலையா?”

“இல்ல பூ, அன்னம் ஆன்ட்டி தான் கொஞ்ச நேரம் பொறுங்க. ஒரு முக்கியமான விஷயம் பேசணும் அதுக்கு பிறகு கிளம்பினா போதும்ன்னு சொன்னாங்க.” என்றாள் சுபா.

“ஓ. அத்தம்மா சொன்னாங்களா? அப்போ ஏதாவது காரணம் இருக்கும். கமலாம்மா. பசிக்கிது. சாப்பாடு போடுங்க.” என்று கத்தியபடி உணவு மேஜைக்கு வர,

“எப்படிம்மா உனக்கு மட்டும் சமைச்சு போடவா? இல்ல உங்க வீட்டுக்காரருக்கும் சமைச்சு தரவா?” என்று அவள் அன்று சொன்னதை வைத்து வம்பிழுக்க.

“கமலாம்மா… ம்ம். சூப்பர். இன்னிக்கு நீங்களே அத்தானுக்கு சமைச்சிடுங்க நோ பிராப்ளம். ஆனா நான் சமைக்க வரும்போது சமையல்கட்டு என் ஏரியா. நீங்க வரக்கூடாது. ஓகே யா?”

“நல்லா மாத்தி மாத்தி பேசி சமாளிக்கத்தான் செய்யற பாப்பா. ஆனா பாரு நான் கண்டுபிடிச்சிட்டேன்.” என்று சிரித்தார்.

“கமலாம்மா! நீங்க இந்த கிருத்தி கூட பேசுனிங்களா? அவள மாதிரியே பேசறீங்களே! ச்ச! எவ்ளோ நல்லா இருந்த கமலாம்மாவை ஒரே நாள்ல இப்படி மாத்திட்டியே கிருத்தி?”

“அடிங்க.” என்று கிருத்தி துரத்த, ஒவ்வொருவரையும் தள்ளிக்கொண்டு ஓடிய கோதை கடைசியில் ஆதியின் மேல் வந்து விழுந்தாள்.

பூக்குவியலாய் தன் மீது விழுந்த கோதையைத் தாங்கிய ஆதி, அவன் அப்பாவின் செருமல் சத்தம் கேட்டு அவளை கீழே விட்டான்.

அனைவரும் ஹாலில் கூட, ராஜேஸ்வரன் முதலில் ஆரம்பித்தார். “அம்மாவுக்கு ஒரு ஆசை ஆனா அதை என்னால தனியா செய்ய முடியாது. உங்கள்ல பல பேரோட சம்மதமும், உழைப்பும் எனக்கு வேணும். கிடைக்குமா?”, என்று பொதுப்படையாக விளக்கங்கள் எதுவும் தராது அவர் கேட்க,

“உங்களுக்கு செய்ய மாட்டோமா அங்கிள்?” என்று பெரும்பான்மையானவர்கள் உரைக்க, அவரோ தன் மருமகள் அமைதியாக இருப்பதை உணர்ந்து,

“என்னம்மா மருமகளே… உனக்கு என்ன தோணுது? சொல்லு.”

“விஷயத்தை முழுசா தெரிஞ்சுக்காம நான் வாக்கு குடுக்க வேண்டாம்ன்னு நெனச்சேன் மாமா.”

“அதுவும் சரி தான். நான் ஊர் ஊரா போய் ரோடு காண்ட்ராக்ட் எடுத்து செய்யறது உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். அது அம்மாக்கு பிடிக்கல. இங்க எஸ்டேட் பூரா இப்போ ஆதி பாத்துக்கறான். அதனால நான் இங்கே வந்து சும்மா உக்கார முடியாது, அதே போல முன்னாடி மாதிரி என்னால ஓடியாடி எல்லாமே செய்ய முடியாது. நவிலன் ஆதிக்கு துணையா இருக்கான். ஆதிக்கு தேவையான உதவிகளை அகிலன் செய்யறதா சொல்லிட்டான். அதனால எஸ்டேட்க்கு நான் அதிகப்படி. அம்மாவோட கருத்து என்னன்னா… மருமகளும் அவ நண்பர்களும் கேட்டரிங் அண்ட் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிச்சிருக்காங்க, அதனால இங்க ஒரு ரிசார்ட் ஒன்னு விலைக்கு வருது, அதை வாங்கிட்டா, நீங்க ஆறு பேரும் ஒண்ணாவே இருக்கலாம். தொழில் நல்லா வளரும். மதியும் BBA முடிச்சிட்டா. இங்கேயே கரெஸ்ல MBA படிச்சிட்டே அவளும் ரிச்சர்ட் மேனேஜ்மென்ட் பார்த்துகிட்டா நல்லா இருக்கும். எனக்கும் ஊட்டிலயே இருக்கலாம், எல்லாரும் யோசிச்சு சொல்லுங்க.”, என்றிட, அனைவரும் அவரவர் யோசனையில் மூழ்கிப் போயினர்.

ஆதி கோதையை தங்கள் அறைக்கு இழுத்து வந்தவன் “இங்க பாரு பூமா எனக்கு இதை பத்தியெல்லாம் கவலை இல்லை. என்ன ஆனாலும் எனக்கான உன் நேரத்தை நான் யாருக்கும் விட்டுத்தர மாட்டேன். மத்தவங்க எல்லாரும் ஒண்ணா தங்கிக்கட்டும். நானும் நீயும் எப்பயும் இந்த வீட்ல தான் இருக்கணும். என் கிட்ட நீ இந்த விஷயத்துல எந்த சலுகையும் கேக்ககூடாது…”

அவனின் வார்த்தைகள் அவளுக்கு அவன் தன் மேல் கொண்ட பாசம் என்பதை உணர்த்தியதால், புரிந்துகொண்டு புன்னகை புரிந்தாள் பூங்கோதை.


3 thoughts on “Amudham 25

  1. அட.. ராஜேஸ்வரனோட இந்த ஐடியாவும் நல்லா இருக்குதே.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!