Amudham 21

Amudham 21

காலையில் இருந்து அறையை விட்டு வெளியில் வர விடாமல் ஆதியை அமர்த்தியிருந்தாள் கோதை. நவிலன் வந்த பின்

“சரி போங்க ரெண்டு பேரும் போய் ஏதாச்சும் வேலை பாருங்க ” என்று நக்கலாய் சொல்லி அனுப்பிவிட்டு, வேறு வேலையை அவள் பார்க்கச் சென்றாள்.

வெளியில் வந்த ஆதி மலைத்துப் போனான். அவர்கள் வீட்டின் எதிர்புறம் இருந்த புல்வெளியில் பந்தல் அமைக்கப் பட்டு அவனின் தோட்டத்தொழிலாளர்கள் அனைவரும் அமர்ந்திருந்தனர். இன்னோரு புறம் சமையல் நடந்து கொண்டிருந்தது.

“அவளே சமைச்சாளே.. இப்போ இது யாருக்கு டா நவி.”

“டேய் இத்தனை பேருக்கும் அவ எப்படி சமைக்க முடியும் ஒரு ஸ்வீட், ஒரு டிபன் ஐட்டம் மட்டும் எல்லாருக்கும் அவ கையால பண்ணி வச்சிருக்கா. டேய் அம்மா வராங்க டா..”

“அம்மா..”

“கண்ணப்பா! என்ன நேத்து பார்த்தப்ப கூட நீ இதை பத்தி பேசலயே! என்ன திடீர்னு?”

“எனக்கும் தெரியாதும்மா உங்க மருமகளை கேளுங்க.”

“எங்கடா அவ?”

“வந்துட்டேன் அத்தம்மா.”

“என்னாச்சு கோதை? இப்படி ஒரே ராத்திரியில் இதெல்லாம் பண்னனும்ன்னு என்ன அவசியம்?”

“எல்லாம் உங்க பையனால தான். அப்பப்பா… இப்படி நல்லவரா இவரை நீ வளத்திருக்க வேணாம் அத்தம்மா… “

“அதான் ஏன்?”

“அத்தம்மா! நான் நாளைக்கு வெளில போனா யார்ன்னு கேப்பாங்கல்ல, நான் இவர் மனைவின்னு சொன்னா… யாருக்கும் தெரியாதே! அதான்.”

“சரி டா. நீ நேத்தே சொல்லிருந்தா அத்தையே இதெல்லாம் பண்ணிருப்பேன்ல.”

“இருக்கட்டும் அத்தம்மா. எனக்கே நேத்து 7 மணி மேல தான் இப்படி ஒரு விஷயம் இவர் மனசுல இருக்கிறதே தெரியும். எதுக்கு அவரு நெருடலோட இருக்கணும்?”

“அப்போ ஒரே நேரத்துல எல்லாத்தையும் வச்சிருக்கலாம்ல டா. இப்போ ஒர்க்கர்சுக்கு, ஈவினிங் பேமிலி, பிரெண்ட்ஸ், இண்ட்ஸ்ட்ரியலிஸ்ட் அப்படினு ஏன் ரெண்டு ஏற்பாடு?”

“முதல்ல சாயங்காலம் அவங்கல்லாம் வரணும்ன்னா கொஞ்சம் முன்னாடி சொல்லணும்ல… அதுக்கு. அப்பறம் ஏன் தொழிலாளர்களுக்கு இப்போ நண்பகல் விருந்துன்னா… அவர்களால் தான நம்ம தொழில் வளருது. அப்போ அவங்க தான ஃப்ர்ஸ்ட். அப்பறம் இவங்க நமக்கு முக்கியமானவங்க அதனால நாம இம்பார்டன்ஸ் கொடுக்கணும். அதே போல எல்லாரும் நினைக்க மாட்டாங்க. யாராவது இவங்கள மரியாதை குறைவா விழாவுல நடத்திட்டா பிரச்னை வரும். அதன் முதல் விருந்து நம்ம தொழிலாளர்களுக்கு, நைட் ரிசப்ஷன் மத்தவங்களுக்கு.”

“நல்ல யோசனை தான். “

“வது எங்க அத்தம்மா?”

“அவ இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு வருவா டா.”

“சரி இப்போ வாங்க விருந்து ஆரம்பிக்கலாம்.”

எல்லா தொழிலாளர்களையும் அமரவைத்து ஆதி, கோதை, நவிலன், அன்னபூர்ணேஸ்வரி நால்வரும் உணவு பரிமாறினார்கள்.

அனைவரும் கோதையின் கைப்பக்குவதைப் புகழ ஆதி அவளின் படிப்பை அவர்களுக்கு புரியும் வண்ணம் விளங்கினான்.

விருந்து முடிந்ததும், கோதையும் ஆதியும் இணைந்து நிற்க, அவர்களுக்கு அடுத்து நின்ற அன்னபூர்ணேஸ்வரி,

“நான் இந்த எஸ்டேட்க்கு இப்ப தான் மருமகளா வந்த மாதிரி இருக்கு, ஆனா வருஷமெல்லாம் வேகமா போய் இப்போ என் மருமக இந்த எஸ்டேட்க்கு வந்துட்டா. உங்களுக்கே தெரியும் சில தவிர்க்க முடியாத காரணத்தால் நான் எஸ்டேட்ல தங்கறது இல்ல. ஆனா இனிமே எனக்கு பதிலா என் மருமக இங்க இருந்து இந்த எஸ்டேட்டயும் உங்களயும் பார்த்துப்பா.” என்று கோதையை தன்னிடம் அழைத்தார், கோதை அருகில் வர,

“இதான் என் மருமக”, என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே “பூங்கோதை” என்று கம்பீரமான குரல் கேக்க அனைவரும் அங்க திரும்ப வெள்ளை வேட்டி சட்டையில் ஆதியின் முக சாயலோடு வந்து கொண்டிருந்தார் ராஜேஸ்வரன், ஆதியின் தந்தை.

“மாமா” என்று அவரிடம் சென்று ஆசி வாங்கிக்கொண்டாள் கோதை. வைத்தீஸ்வரி ராஜேஸ்வரனுடன் வந்தவள் தன் அண்ணியைக் கட்டிக்கொண்டு ஏதோ பேசிக்கொண்டிருக்க அங்கிருந்தவர் கண்களுக்கு கோதை ஒரு கலவையான கதம்பம் போல தெரிந்தாள், சிறுப்பிள்ளை போல ஓடுவதும், சிரிப்பதும், நளபாகம் சமையலில் காட்டுவதும், யோசித்து எதையும் செய்வதும் தன் குடும்பத்துடன் ஏற்பட்ட சங்கடத்தை நினைத்து அழாமல் வாழ்க்கையை எதிர்கொள்ளுவதும் என்று அவளின் பலவண்ணங்கள் கொண்ட செயல்பாடுகளில் அனைவருக்கும் கவர்ந்த ஒன்று அவள் பால் போன்ற மனது தான்.

வயது வித்தியாசம், தொழிலாளி முதலாளி என்று எந்த ஏற்றத்தாழ்வும் இல்லாமல் பழகும் கோதையை தொழிலாளர்கள் ‘எஸ்டேட் மருமக’ என்று செல்லமாக அழைத்து பேசிவிட்டு விடை பெற்றனர்.

அவர்களெல்லாம் கலைந்ததும், “வாங்க அத்தம்மா, மாமா, வது, நவிண்ணா,அத்தான் எல்லாரும் சாப்பிட உக்காருங்க “,என்று அதிகாரமாக அழைத்து அவள் அன்பைக் காட்டினாள்.

ராஜேஸ்வரன் அதிகம் பேசவில்லையென்றாலும் அவளின் செயல்களை கவனித்தபடி இருந்தவரின் இதழ்கள் அடிக்கடி விரிந்தது. அவள் வதுவுக்கு பிடித்ததை தனியாக சமைத்து வைத்து அவளுக்கு மட்டும் கொடுக்க உணவு மேஜை போர்களமானது. ஆதி தனக்கும் ‘வேண்டும்’ என்று அப்பா இருப்பதையும் மறந்து சிறுபிள்ளை போல சண்டைக்கு போக, ‘என் மருமக பண்ணினது எனக்குத்தான் டா’ என்று அம்மா போர்க்கொடி தூக்கினார்.

நவிலனோ ‘எனக்கு வைக்கல யாரையும் சாப்பிட விடமாட்டேன்’ என்று மிரட்டிக்கொண்டிருந்தான். வதுவோ ‘இது எனக்கு ஸ்பெஷலா பண்ணினது யாரும் கைய வச்சிங்க அவ்ளோதான்’ என்று கத்தினாள்.
கோதை யாருக்கு பேசுவது என்று தெரியாமல் திரு திருவென்று விழித்துக்கொண்டிருந்தாள்.

திடீரென்று ராஜேஸ்வரன் சத்தமாக சிரிக்க ஆரம்பித்தார் . மொத்த குடும்பமும் அவர் இருப்பதை அப்போதுதான் உணர்ந்து, பீதியில் அவருடன் சிரிப்பில் ஐக்கியமானது.
கோதைக்கோ ‘அப்பாடா சண்டை போடாம போனங்களே அதுவே போதும்’ என்று பெருமூச்சு விட அவரோ ,”மருமகளே அதை அப்படியே மாமாகிட்ட குடு யாரு அதுக்கப்பறம் கேக்கறாங்கன்னு பார்ப்போம்..”.

ஒருத்தரும் வாயே திறக்கவில்லை. ஆனால் கோதை சிரித்தபடி “மாமா நான் எல்லாருக்கும் கொஞ்சம் கொஞ்சம் வைக்கவா.. வதுக்கு இது பிடிக்கும்ன்னு அத்தான் சொன்னதுனால செஞ்சேன். இப்படி அடிச்சிப்பிங்கன்னு தெரியாது.”, என்றாள் முழியை உருட்டியபடி.

மகிழ்ச்சியாக அனைவரும் சாப்பிட்டு எழுந்தனர்.

சாப்பிட்டு முடித்ததும் அன்னம் ஆதியை அழைத்து தனியாக ஏதோ பேசிக்கொண்டிருந்தார். கோதை வதுவுடன் அரட்டை அடிக்க நவிலன் மாலை வரவேற்பு நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க சென்றுவிட்டான்.

ராஜேஸ்வரன் மருமகளுக்கு அருகில் அமர்ந்தவர் வதுவை பார்த்து “நீ அம்மா கிட்ட போ மா.”

அவள் சென்றதும் ” நீ இங்க இருக்க போறியா இல்ல உங்க அத்தை கூட கோயம்புத்தூர் போகப் போறியா?”

“இதென்ன மாமா இப்படி கேட்டுட்டீங்க? இதுதானே நம்ம வீடு? அப்போ நான் இங்கே தானே இருக்கணும். நான் ஏன் அத்தையோட பிறந்த வீட்டுக்கு போக போறேன்?”

இதை கேட்ட ராஜேஸ்வரன் முகத்தில் அவ்வளவு வெளிச்சம்.

“உங்க அத்தை ஏன் அங்க இருக்கா தெரியுமா?”

“ம்ம். தாத்தாவுக்கு முடியல, சித்தப்பா விட மாட்டேங்கராறு அப்படின்னு அத்தான் சொன்னாங்க.”

“சித்தப்பாவா?”,அதிர்ந்தார்..

“மாமா, அவரு அத்தானுக்கு மாமான்னா எனக்கு சித்தப்பா தான..”

“ஓ. அப்படி சொன்னியா?? சரி சரி. சாயங்காலம் அன்னத்தோட அப்பா, தம்பி, அவன் பையன் எல்லாரும் வருவாங்க மா. அதை விட அந்த பேயும், அது பெத்து வச்சிருக்கற மேக் அப் பிசாசும் வரும். அப்போ எங்க யார் கூடவாவது சேர்ந்தே இரு. அதுங்க கிட்ட தனியா மாட்டாத.”

“என்ன மாமா இது? ஆளாளுக்கு அவங்களுக்கு அவ்வளவு பில்டப் குடுக்கறீங்க… வருவாங்க தான! நானே பாத்துக்கறேன். நீங்க இங்க இருக்கற உங்க பிரெண்டை கூப்பிடணும்ன்னு சொன்னிங்களாம் போய்ட்டு சீக்கிரம் வாங்க.” உரிமையாய் சொன்ன மருமகளை அன்பாய் தலை கோதி விட்டு.

“நீயும் வது போலத்தான் எனக்கு. ஆனா அவளுக்கு இவ்வளவு தைரியம் இருக்காது. கொஞ்சம் சொல்லிகுடு.” என்று வெளியேறினார்.

மாலை ரிசெப்ஷன் வேலைகளை அவரவர் பார்க்க, கோதை தயாராகி ஹாலில் அமர்ந்தாள், இன்னும் ஆதி தயாராகாமல் சுற்றிக்கொண்டு இருந்தான்.

“என்ன அத்தான் தயாராகலையா?”

“அது… உன்னோட கொஞ்சம் பேசணும் பூமா.”

“சொல்லுங்க.”

“உள்ள வா.”

அவள் அவனை கேள்வியாய் நோக்கியபடி உள்ளே செல்ல எத்தனித்தாள்.
அப்போது வாயிலில் “ஆதி ஆத்தான்”, என்று அங்கே தன் புன்னகை ததும்பும் முகத்துடன் நின்றிருந்தான் அந்த புதியவன், அவனை பார்த்ததும் ஆதி பயத்துடனும், கோதை குழப்பதுடணும் நோக்க,

“ஆதி ஆத்தான்”, என்று ஆதியை இறுக்கி அணைத்துக்கொண்டான். அவனை அணைத்து விலக்கிய ஆதி, முகத்தில் சிறு பதட்டத்துடன்,

“நீ இங்க உக்காரு புவி. இதோ வந்துடறோம்.”

“அத்தான் என்னை அக்காக்கு அறிமுகப்படுத்தாம போறீங்களே !”

“இவன்.. இவன் தான் என் மாமா பையன். புவனேஸ்வரன்.”

அவள் புவனேஸ்வரனை ஏற்ற இறக்கமாக பார்த்தாள், சராசரி உயரத்தை விட சற்று கம்மி தான். நல்ல களையான முகம், கண்களில் கண்டிப்பாக அன்பிற்கான ஏக்கம் இருந்தது. அவனோடு விளையாட நினைத்து,

“ஹாய் குட்டி பையா.”

“அக்கா என்னை பார்த்தா குட்டி பையன் போலவா தெரியுது?”

“பின்ன இல்லையா? மிஞ்சி மிஞ்சி போனா நீ நயன்த் ஸ்டாண்டர்ட் படிப்பியா?”

“பெருத்த அவமானம். அக்கா நான் பி.காம் ஃப்ர்ஸ்ட் இயர் படிக்கிறேன்.”

“பார்த்தா அப்படி தெரிலேயே பொடியா”

“அத்தான், அக்கா ரொம்ப நல்லவங்க அப்படி இப்படின்னு அந்த வது குரங்கு வந்து சொன்னாளே!”

“ஏய் யாரை பார்த்து டா குரங்கு சொன்ன? என் வது பேபிய ஏதாச்சும் சொன்ன மவனே நைட் சாப்பாட்டுல சில்லி சூனியம் வச்சிருவேன் பார்த்துக்கோ.”, என்று அவனிடம் வரிந்து கட்டிக்கொண்டு சண்டையிட்டாள்..

“பூமா. பிளீஸ்! அது… அவனை விட்றேன்…” ஆதி அவளிடம் கெஞ்சினான்.

“அதெப்படி அவன் என் வது பேபிய குரங்குன்னு சொல்லுவான்.”

“ஹலோ! இன்னிக்கு தான் அவ உங்களுக்கு வது பேபி, ஆனா அவ பேபியா இருக்கும் போதுல இருந்தே எனக்கு வது குரங்கு தான். நேத்து வந்துட்டு என்ன ஒரு வாய் அத்தான் உன் பொண்டாட்டிக்கு.”

“டேய் புவி, நீ யாரையும் இப்பிடிலாம் பேசமாட்டியே! ஏன் டா பூமா கிட்ட மட்டும் இப்படி நடந்துக்கற?”, இவனும் நிறுத்தவில்லயே என்று கடுப்பானான் ஆதி.

“யாருக்கு தெரியும், எனக்கு இப்படி பேசத்தான் பிடிச்சிருக்கு. என்ன நெட்ட கொக்கு ஓக்கே வா?”, என்று பூமாவை அவன் கேட்க..

பூமாவோ ”போடா பொடிபயலே..” என்று அவன் தலையில் குட்டிவிட்டு சென்றாள்.

ஆதி புவியை உட்கார சொல்லிவிட்டு பூமாவிடம் போனான்.

“என்ன பூமா நீயும் அவனுக்கு சரியா வாயாடிட்டு இருக்க.”

“என்னமோ தெரியல அத்தான் அவனை பார்த்ததும் ஒரு சந்தோசம், ஏதோ கெடச்சிட்டது போல ஒரு திருப்தி. அதைவிட அவனை வம்பிளுத்து விளையாட ரொம்ப பிடிக்குது…” அவள் இதை சொன்னதும், இதற்குமேல் தாமதித்தால் பெரும் சிக்கல் வரும் என்றுணர்ந்த ஆதி அவள் கைகளை பிடித்துக்கொண்டு,

“நான் உன்கிட்ட இப்போ ஒரு முக்கியமான விஷயம் சொல்லப் போறேன். அதை கேட்டு நீ என்னை விட்டு போய்ட மாட்ட தான?”

“அத்தான் நீங்க ஏன் இப்படி இருக்கீங்க? நான் என் இவ்வளவு அவசரமா இந்த வரவேற்பை ஏற்பாடு பண்ணினேன் தெரியுமா?”

அவன் ‘தெரியாது’ என்று தலையை ஆட்டினான்.

“நேத்து நீங்க என்கிட்ட வந்து அலஞ்சிருக்கோம் நமக்குள்ள இன்னிக்கு ஒன்னும் வேண்டாம் ன்னு சொன்னிங்களே அதுக்காகத்தான்.”

‘என்ன?’ என்று ஆதி முகத்தில் அதிர்ச்சியை காட்ட..

“அடச்சே! அத்தான் அதுக்குன்னா.. ஃப்ர்ஸ்ட் நைட்காக இல்ல அத்தான். நீங்க தயங்கி தயங்கி என்கிட்ட பேசினிங்க பாருங்க. அதுக்கு தான். நீங்களே சொல்லுங்க சென்னையை விட்டு வரும்போது என்னை சும்மா கூட்டிட்டு வராம என் கழுத்துல தாலி கட்டி மனைவியா தான் கூட்டிட்டு வந்திங்க. அப்போ நான் இந்த உலகத்துல எனக்கிருக்கற ஓரே உறவு நீங்க மட்டும் தான். நமக்குள்ள எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாம காதல் வச்சிருக்கோம், நம்மளால எதையும் தாங்க முடியும் அப்படின்னு நினைச்சு தான் அத்தான் உங்களோட இந்த வீட்டுக்குள்ள அடி எடுத்து வச்சேன். ஆனா நீங்க ஒரு விஷயத்தை என்கிட்ட பேச தயங்குறீங்க. என்ன சொல்லுவேனோன்னு பயப்படறீங்க!

இதெல்லாம் மூணாவது மனுஷங்க கிட்ட வரவேண்டிய உணர்வு. கட்டின பொண்டாட்டி கிட்ட இல்ல. ஆனா உங்களுக்கு அந்த உணர்வுகள் என்னோட இருக்கும் போது வருதுன்னா, என்னன்னு யோசிச்சேன். உங்ககிட்ட இருக்கற தயக்கத்துக்கு காரணம் ஊரறிய நாம கணவன் மனைவின்னு அறிவிக்காதது தான்னு புரியவும், ஒரே ராத்திரியில் இவ்வளவு ஏற்பாடு பண்ணிருக்கேன். உங்களுக்காக… இதெல்லாம் நீங்க எதுக்குன்னு இவ்வளவு நேரமா நினைச்சிங்க? வெறும் முதலிரவுக்காகன்னா??

இவ்வளவு துயரம் நான் செஞ்சும் எந்த பயனும் இல்லை இன்னும் நீங்க என் கிட்ட எதையோ சொல்ல தயங்குறீங்க. நான் உங்களை விட்டு போய்டுவேணான்னு கேக்குறீங்களே! சொல்லுங்க..நான் உங்களுக்கு மூணாவது மனுஷியா? அப்போ எனக்கு நீங்க யாரு?? எனக்குன்னு யாரு இருக்கா? நான் அனாதையா அப்போ.” என்று கதறிவிட்டாள்.

ஆதி நொறுங்கிப்போனான்.

அவளை அணைத்து மார்பில் போட்டுக்கொண்டவன். “என் கண்ணைப் பாரு டி… பாரு. நீ யாரோவா? நீ அனாதையா?? ஏன் டி இப்படி பேசுற? நீ எப்படி ஒவ்வொன்னும் எனக்காக யோசிச்சு செய்யுற, அது போலத்தான நானும். நான் தயங்கினதும், போய்டுவியான்னு கேட்டதும் சும்மா இல்ல டி! ஒரு உண்மையை உன்கிட்ட நான் மறைச்சிட்டேன். அது தெரிஞ்சா என்ன ஆகுமோன்னு பயம் டி!

இந்த ஒரு வருஷத்துல அதை எந்த சந்தர்பத்துலயும் சொல்ல முடியல, அதுக்காக தான் நான் வரவேற்பயே கொஞ்ச நாள் கழிச்சு வைக்க நெனச்சேன். அதைவிட என்னை உன்கிட்ட நெருங்க விடாத தயக்கத்துக்கு காரணம் உன்கிட்ட அந்த உண்மையை மறைச்சிட்டே இருக்கோமே, அப்படியே உன்னை நெருங்கி உன்னோட வாழ்க்கையை தொடங்க குற்றவுணர்ச்சியா இருந்தது. புரிஞ்சுக்கோ பூமா. உனக்கு நான் இருக்கேன். எனக்கு எத்தனை பேர் வாழ்க்கைல உறவா இருந்தாலும் உன்னோடது மட்டும் தான் எனக்கு நிரந்தரமானது. என்னை புரிஞ்சுவ நீயே இப்படி பேசலாமா? அந்த வார்த்தையை கேக்கத்தான் நான் இத்தனை நாளா பூமா பூமான்னு தவம் இருந்தேனா?”

“என்ன உண்மை?” என்று சாதாரண குரலில் கேட்டாள்.

ஆதிக்கு வாய் வரை வார்த்தைகள் வந்தாலும் அவனால் அவனுள் ஏற்படும் பயத்தை விலக்க முடியவில்லை. தைரியத்தை வரவைத்துக்கொண்டு, ஏங்கும் பார்வையோடு அவளிடம்,

“அது… அது… உன் சித்தி காமாட்சி தான் என் அத்தை.. என் மாமாவோட முதல் மனைவி, புவனேஸ்வரனோட அம்மா..”

கோதை அவனை ஒரு மரத்த பார்வை பார்த்தாள். அறையை விட்டு வெளியேறினாள்.

ஆதிக்கு உள்ளம் துடித்துப் போனது.




5 thoughts on “Amudham 21

  1. இது நான் எதிர்பார்த்த ட்வீஸ்ட் தான், ஏன்னா ஆல்ரெடி இந்த விஷயத்தை மறைமுகமா ஆதியும் தாத்தா ஜோதிலிங்கமும் ஜாடைமாடையா பேசறச்சவே புரிஞ்சது.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!