Life is what happens while you are busy making other plans.

அஜய் கிருஷ்ணாவின் திட்டப்படி வைபவ் நியமித்திருந்த வக்கீல் குழுமம் முழுமையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு வந்திருந்தான் ரஞ்சித்.
வைபவ் அவர்களை அழைக்கும்போது ரஞ்சித்தின் மிரட்டலால் எல்லாம் இயல்பாக இருப்பது போல அவர்களும் பேசி தங்களைக் காத்துக் கொண்டனர்.
அவர்களை சந்திக்க வந்த அஜய், “உங்களை கஷ்டப்படுத்தனும்னு எனக்கு எந்த நோக்கமும் இல்ல. எனக்கு இன்னும் ஒரு வாய்தா கண்டிப்பா வேணும். அதுக்கு தான் உங்களை இப்படி இருக்க வச்சிருக்கேன்.” என்று அழுத்தமாக கூறியதும்,
“சார் நாங்களும் தப்பான ஆட்களுக்கு வாதாடுற கூட்டம் இல்ல. அவர் வச்சிருக்கற டாக்குமெண்ட் உண்மையானது. அதுக்கு எங்களுக்கு ப்ரூஃப் கிடைச்சதால் தான் அங்க உள்ள மக்களை காலி பண்ண சொல்லி நாங்க நோட்டீஸ் அனுப்பினோம். இப்ப வரைக்கும் நீங்க அந்த மக்களுக்கு எமோஷனல் கனெக்ட்காக தான் எதிர்த்து போராடிட்டு இருக்கீங்கன்றது எங்க எண்ணம்.” என்று விளக்கினார் அந்த வழக்கறிஞர்.
“அவன் வச்சிருக்கற பத்திரம் போலின்னு நான் சொல்லவே இல்ல. ஆனா அவன் பொய் சொல்றான். எல்லாரையும் அதை வச்சு ஏமாத்துறான்.” என்று கோபம் கொண்டு அஜய் கூற,
“சார் விளக்கமா சொல்லுங்க” என்றதும் அஜய் அந்த நாட்களுக்கு பயணிக்க ஆரம்பித்தான்.
அஜய் கிருஷ்ணா அகத்தியன். அகத்தியன் அந்தப் பகுதியில் அவரைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை என்று சொல்லும் அளவுக்கு செல்வாக்கு பொருந்தியவர். அவரின் அப்பா அரசியலில் இருந்து சம்பாதித்த பணத்தை உபயோகிக்க விருப்பம் இல்லாமல் அதனை ஒரு தொண்டு அறக்கட்டளையாக ஸ்தாபித்தார். அதற்கு சொந்த பெயர் எதுவும் வைக்காமல் தன்னை அதில் மறைவாகவே வைத்து பல வருடங்கள் உதவினார்.
அவரால் உதவி பெறப்பட்ட பலரும் அவர் தான் என்று அறிந்து அவரைப் பாராட்டி அது ஊரெல்லாம் பரவத் துவங்கியது.
தந்தையின் பணத்தை தவிர்த்தவர் தனியே கட்டுமான நிறுவனம் ஒன்றை நிறுவி அதில் பெரிய அளவில் வெற்றியும் பெற்றார். பணம் என்ற காகிதம் அவரிடம் எந்த தங்குதடையும் இன்றி கொட்டிக் கிடந்தது.
அவருக்குத் திருமணம் முடிந்து அஜய் பிறந்தபின் அவனுக்கும் பல நல்ல சிந்தனைகளை புகுத்தினார். தங்கள் அறக்கட்டளையை நடத்தும் விதத்தையும் விளக்கி இருந்தார்.
அஜய்யின் பதினான்காம் வயதில் அகத்தியனுக்கும் அவரது மனைவி நீலாவுக்கும் ஏற்பட்ட கார் விபத்தில் ஒருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
அன்று முதல் அஜய் கிருஷ்ணா தன்னைத் தானே வளர்த்துக் கொண்டு தந்தையின் சொல்படி அறக்கட்டளை பணிகளை தங்கள் வேலையாட்கள் மூலம் தொடர்ந்து நடத்திக்கொண்டு தனது படிப்பையும் கவனித்துக் கொண்டான்.
அவனுக்கும் அவன் தந்தை வழி வந்த சொத்துக்கள் மேல் நாட்டமில்லாமல் போனது. அவன் வளர்ந்து படித்து அவன் சொந்த உழைப்பில் அவன் தந்தை போலவே உயர விரும்பினான். அதனால் அதுவரை போதிய அளவு தொகையை மட்டுமே பயன்படுத்தி மீதமுள்ளதை அறக்கட்டளைக்கே கொடுத்து வந்தான்.
அவனது தந்தை அவர் வயதில் உதவி மனப்பான்மையோடு இருந்தது அனைவருக்கும் புரிந்தது. ஆனால் அவரது மகன் இந்த இளம் வயதில் நாளை உயர்வானா மாட்டானா என்ற உறுதி இல்லாதபோது கூட உதவி செய்ய முன்வந்தது அவன் மேல் அதிக மரியாதையைக் கொடுத்தது.
ஆனால் அஜய் அனைவருடனும் பழகாமல் முடிந்தவரை ஒதுங்கியே இருந்தான். தனிமை விரும்பியாக, நறுக்குத் தரித்த வார்த்தைகள் கொண்டு அனைவரையும் எட்டவே நிறுத்தி வைத்தான். அவனின் இந்த குணத்தால் அவனிடம் பலருக்கும் பயம் ஏற்பட்டது.
கல்லூரி செல்லத் துவங்கியதும் அவன் சற்று இலகுவானது போல காணப்பட்டான். விரும்பிய கணிப்பொறி அறிவியலை ஆர்வமுடன் பயின்றாலும் பேராசிரியர் பிடிக்கவில்லை என்றால் வகுப்புகளை தவிர்த்து வெளியே ஆசிரியர் நியமித்து தன்னை வளர்த்துக் கொண்டான்.
ஆக தன்மானம், பிடிவாதம், தனிமை என்று அனைத்தையும் வைத்துக் கொண்டு தனி ராஜாங்கம் நடத்தினான் என்றால் அது மிகையல்ல.
அவனைப் பொறுத்தவரை முதுகலைப் படிப்பு முடித்து வளாகத் தேர்வில் பெரிய நிறுவனத்தில் தேர்வாகி நல்ல வேலைக்குச் சென்று சில ஆண்டுகள் கழிந்ததும் தானே சுயமாய் தொழில் துவங்கி சாதிக்க வேண்டும் என்று எண்ணி இருந்தான்.
அந்த ஒரே குறிக்கோளில் அவன் பயணிக்க அவன் வாழ்வில் திடீர் வசந்தம் போல வந்தவள் அவனது மனைவி அபிதா.
வளாக நேர்காணலில் அவனுக்கு அவன் எதிர்பார்த்ததை போன்று வேலை கிடைத்துவிட தன்னிடம் காதல் காதல் என்று அலையும் அவன் அழகிய அஞ்சுகமான அவளை மணந்து கொண்டு வெளிநாடு சென்று வாழ்க்கையைத் துவங்க திட்டமிட்டிருந்தான் அஜய்.
ஒருநாள் தான் அவன் கனவுக்கு ஆயுள் இருந்தது.
மறுநாள் காலை அவனது அறக்கட்டளையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் ஒரு நீதிமன்றதிலிருந்து வந்த வழக்கறிஞரின் நோட்டீஸ் ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்தார். அன்று அவன் வாழ்வு திசை மாறியது.
ஆம் அது வைபவ் அனுப்பிய நோட்டீஸ் தான். அதிலும் அஜய்யின் தந்தை அவரது தொழில் விரிவாக்கத்தின் பொருட்டு வைபவ்வின் தந்தையான வஜ்ரவேலிடம் கடன் பெற அவருக்கு சொந்தமான நூறு ஏக்கர் நிலத்தை அடகு வைத்து பல கோடிகள் கடன் பெற்றதாகவும், அதனை திரும்பத் தரும் முன்னரே அவர் விபத்தில் இறந்து விட்டதால் வஜ்ரவேல் என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே அப்பத்திரங்களை வைத்திருந்ததாகவும், தன்னுடைய தந்தையின் இறப்புக்குப் பின் அவரது தொழிலை கையில் எடுத்த பின்னரே இந்த விபரங்கள் அறிந்து அந்த கடந்தொகைக்கு இத்தனை ஆண்டுகள் நியாயமான வட்டி சேர்த்துப் பார்த்ததில் அது அவ்விடத்தின் இன்றைய விலையை விட அதிகமாக வருவதாகவும், தந்தை வாங்கிய கடனை மகனை அடைக்க சொல்லும் அளவுக்கு தனக்கு பணவெறி இல்லாததால் அவ்விடத்தை மட்டும் தங்கள் நிறுவனத்தின் பெயரில் கிரையம் செய்து தர வேண்டும் என்றும் மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எழுதப்பட்டு இருந்தது.
அஜய்க்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை. அவனது தந்தை எதற்காகவும் யாரிடமும் கடன் பெறக் கூடாது என்று அவனுக்குப் படிப்பித்திருக்கும் போது எதற்காக வஜ்ரவேல் என்பவரிடம் பல கோடிகள் கடன் பெற வேண்டும்?
அப்படியே பணம் தேவையென்றால் அவருக்கு எந்த சூரிட்டியும் இல்லாமல் கடன் தர பல வங்கிகள் இருக்கும் போது, தனியார் வட்டி நிறுவனத்திடம் அவர் கடன் வாங்க வேண்டிய தேவையென்ன? மிகவும் குழம்பிக் கிடந்தான் அஜய்.
அந்த நூறு ஏக்கர் பற்றி விசாரிக்க அவன் நேரில் சென்றபோது மிகுந்த அதிர்ச்சி அடைந்தான்.
அது அவனது தந்தை நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே அவர்கள் குடும்பத்திற்காக உழைத்த பல குடும்பங்களுக்கு தங்க வீடு கட்டிக் கொடுத்திருக்கும் அவர்களின் குடியிருப்பு காலனி ஆகும்.
அதனை ஒருபோதும் அவனது தந்தை அடகு வைக்க வாய்ப்பில்லை. கண்டிப்பாக அந்த வைபவ் ஏதோ திருட்டுத்தனம் செய்கிறான் என்று உறுதியானது அவனுக்கு.
நிதானமாக அவன் இதனை கையாள நினைத்த நேரத்தில் சில குண்டர்கள் அங்கிருந்த மக்களை அவ்விடம் விட்டு வெளியேற வேண்டும் என்று அடித்து துன்புறுத்த துவங்கியதும் விஷயம் அஜய் காதுக்கு எட்டியது.
நடப்பதை என்னவென்று அறியச் சென்ற அவனுக்கு அங்கிருந்த மக்கள் பட்டுக் கொண்டிருக்கும் துயரத்தைக் கண்டு நெஞ்சு பொங்கி விட்டது. அடிக்க கையோங்கி வந்தவர்களை பந்தாடினான்.
பல வருடங்கள் உடற்பயிற்சி செய்த உடல் அவனுக்குக் கைகொடுக்க, வந்த அடியாட்கள் அனைவரும் அடி வாங்கிக் கொண்டு அங்கிருந்து பறந்தோடினர்.
இனி இந்த பிரச்சனையை சாதாரணமாக விட முடியாது என்று கருதி அங்கிருந்த காயமடைந்திருந்த மக்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றவனுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக வந்து சேர்ந்தது.
முதலில் வைபவ் மக்களிடம் பேச அனுப்பிய அவனது கம்பெனி ஆட்களை அஜய் கிருஷ்ணா கொடூரமாக தாக்கியதாக வழக்கு பதிவு செய்து காவலர்கள் அவனை கைது செய்ய வந்தனர். தனது செல்வாக்கை என்றும் காட்டாமல் இருந்த அஜய் அன்று தான் அது தனக்கு எத்தனை தேவையான ஒன்றென்று உணர்ந்து கொண்டான்.
அவனுக்கு அவன் செல்வாக்கு கைகொடுக்க, காவல் நிலையம் செல்லாமலே வழக்கிலிருந்து அவன் விடுவிக்கப்பட்டதும், அடுத்து அவன் செய்த மிக முக்கியமான காரியம் அவர்களின் கம்பெனி வழக்கறிஞர்கள் கொண்டு வைபவ் அந்த இடத்தை கோர இடைக்கால தடை வாங்கியது தான்.
இந்த அலைச்சலே மூன்று நான்கு நாட்கள் அவனை விழுங்கி விட, திடீரென அவன் தேர்ந்தெடுக்கப்பட்ட வெளிநாட்டு நிறுவனத்தின் இந்திய கிளையிலிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது.
ஆர்வமாக தன் வேலைக்கான நியமன ஆணையை தரப் போகிறார்கள் என்று மகிழ்ச்சியோடு சென்றவனுக்கு அடுத்த அதிர்ச்சியை அவர்கள் கொடுத்தார்கள்.
அஜய் மீது காவல் நிலையத்தில் இருந்த புகாரை சுட்டிக் காட்டி, அவனை நிராகரித்தது அந்நிறுவனம். அது அஜய்க்கு பெரிய அதிர்ச்சியே! ஆனால் அவன் தன் செல்வாக்கை அங்கே பயன்படுத்த விரும்பவில்லை.
எப்படியும் இந்த வழக்கு முடியாமல் அவனால் மற்ற எதிலும் கவனம் செலுத்த முடியாது, வேலை கிடைத்தாலும் இரண்டையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று இருந்த அவனின் குறிக்கோள் உடைபட்டதும் மீண்டும் அவன் மனதில் வெற்றிடம் உருவானது.
அந்நிறுவனத்தை விட்டு வெளியே வரும்போது வைபவ் அவனை கைபேசியில் அழைத்தான்.
“இங்க பாரு ஒழுங்கா அந்த இடத்தை எங்கிட்ட கொடுத்துட்டு கோர்ட் கேசை வாபஸ் வாங்கிட்டு போறேன்னு சொல்லு இப்பவே அந்த வேலை உனக்கு கிடைக்க நான் ஏற்பாடு பண்றேன்.” என்று இறுமாப்புடன் பேசினான்.
“என்ன? நீ இந்த வேலையை எனக்கு வாங்கித் தருவியா?” என்று எரிச்சலாக அஜய் வினவ,
“ஆமா, அந்த கம்பெனி ஓனர் என் பிரெண்ட் தான். நான் தான் உன் மேல இருந்த கேசை பத்தி அவன் கிட்ட சொன்னேன். நீ என் வழிக்கு வந்தா நீ ஆசைப்பட்ட வேலை உனக்கு கிடைக்கும்.” என்று கொக்கரித்தான்.
“டேய் லூசுத்தனமா நிறைய பேர். பேசுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன் ஆனா இப்ப தான் நேர்ல பார்க்கறேன். இந்த வேலைக்காக என் அப்பா பல குடும்பங்களுக்கு செஞ்ச நல்லதை உதறி உன்கிட்ட கொடுத்துட்டு போவேன்னு எப்படி டா நினைச்ச? நீ என்ன கணக்கு போட்டு இந்த இடத்தைக் கேட்டு பிரச்சனை பண்றன்னு எனக்கு தெரியாது. ஆனா எனக்கு என் அப்பா சொத்து முக்கியமில்ல. ஆனா என் அப்பாவோட பேருக்கு எந்த களங்கமும் வர விடமாட்டேன்.
அவர் மக்களுக்கு கொடுத்த நிலத்தை அடமானம் வச்சு அங்கிருந்த மக்களை வெளியேற காரணமா இருந்தாருன்னு ஒரு சொல் அவர் மேல வர எப்பவும் நான் அனுமதிக்க மாட்டேன்.
அமெரிக்காவுல வேலைக்கு ஆசைப்படுறான். யார் கிட்டயும் அதிகம் பேசி பழக மாட்டென்றான். இவன் சரியான சொம்பன்னு நினைச்சு எங்கிட்ட நீ வாலாட்டிட்ட. இந்த அஜய் அப்படியெல்லாம் ஈசியா போறவன் இல்ல டா. என்ன நடந்தாலும் அந்த இடம் உனக்கு கிடைக்காது. அந்த மக்களுக்கு என் அப்பா கொடுத்த பூமி அவங்களுக்கு தான் சொந்தம். ஒருநாளும் அது உனக்கு கிடைக்காது கிடைக்க விட மாட்டேன்.” என்று சபதம் செய்தான்.
அன்று தான் சாதாரண அமைதியான வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட அஜய், அசாதாரண, அதிரடியும் அடிதடியும் கலந்த வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்தான்.
அதன் பின் வைபவ் கொடுத்த தொந்தரவுகள் எண்ணில் அடங்காதது. ஆனால் அதனை முறியடித்து முறியடித்துப் பழகி போனது அஜய்க்கு.
அதனால் அவன் முரட்டு குணம் வளர்ந்து கொண்டே போனது. வேலை, ஆசைப்பட்ட அமெரிக்க வாழ்க்கை அனைத்தையும் இழந்த அஜய் மெல்ல மெல்ல இறுகிப் போனான்.
தன் பின்னே காதல் என்று அலையும் அபிதாவையும் அவன் தவிர்க்க ஆரம்பித்தான். அவன் தவிர்க்க தவிர்க்க, வெட்ட வெட்ட முளைக்கும் இறுகிய வேர் பொருந்திய மரம் போல தன் காதலை இறுகப் பற்றிக் கொண்டு அவனையே சுற்றி வந்தாள் அபிதா.

அடி.. லூசுப்பொண்ணே, அவனை விடாமல் துரத்தி துரத்தி லவ் பண்ணி, கல்யாணம் பண்ணிட்டு… இப்ப அவனை விட்டு விலகி நின்னா என்ன அர்த்தம் ? அவன் நடத்தறது தர்ம யுத்தம் தானே ? இவளே தள்ளி நின்னா எதிராளி கை கொட்டி சிரிக்க மாட்டானா ?
😀😀😀
CRVS (or) CRVS 2797