“As long as you’re alive, you always have the chance to start again.”

அமுதம் 17
தன் தோள் சாய்ந்து சிறுபிள்ளை போல் உறங்கும் தன் மனைவியைக் கண்ட ஆதியின் உள்ளம் பூரித்தது. அவள் முகத்தில் வேதனையின் சாயல் தெரிகிறதா என்று அவனும் தேடினான். ஆனால் அதுவோ சொர்க்கமே கிடைத்துவிட்ட திருப்தியைப் பிரதிபலித்தது.
அவன் அவளை அவள் வீட்டிலிருந்து அழைத்து வந்ததும் கால் டாக்ஸி வரவைத்து ஊட்டிக்குக் கிளம்பிவிட்டான். வண்டி ஏறிய சில நிமிடங்களிலேயே கோதை ஆதியின் தோள் சாய்ந்து உறங்கி விட்டாள். ஆதி முதலில் கலக்கம் கொண்டாலும் சில நிமிடங்களில் தன்னை சமநிலைப்படுத்திக் கொண்டான்.
அவன் தன் அன்னைக்கு அழைத்து விஷயத்தைச் சொல்ல,
“கண்ணப்பா, என் மருமக மனசொடிஞ்சி இருப்பா. இப்போ இங்க கூட்டிட்டு வராத. உங்க அத்தை இருக்கா. நீ அவளை ஊட்டிக்கே கூட்டிட்டு போ. அம்மா அடுத்தவாரம் வரேன். அப்பா, பாப்பா பத்தியெல்லாம் நீ கவலைப்பட வேண்டாம். நான் பாத்துக்கறேன்.”
“அம்மா நான் ஒரு வருஷமா ஊட்டிக்கும் கோவைக்கும் அலையறதே உங்களுக்காகத் தான் மா. இப்போ நானும் பூமாவை ஊட்டிக்கு கூட்டிட்டு போற முடிவுல தான் டாக்ஸி புக் பண்ணினேன். எனக்கு அவளை எப்படி சமாதானம் பண்றதுன்னு தெரியல மா. இதுல நம்ம வீட்டு விஷயமெல்லாம் தெரிஞ்சா பூமா என்ன சொல்லுவாளோன்னு இருக்கு மா.”
“நீ கவலைப்பட தேவையில்லை டா. என் மருமக எல்லாத்தையும் சரியா புரிஞ்சுப்பா. உனக்கு அவ கிட்ட பேச முடியாத சூழல் வந்தா எனக்கு போன் பண்ணி குடு நான் பேசிக்கறேன்.”
“சரி மா.”
“அவளோட மனசு புரிஞ்சு நடந்துக்கோ கண்ணப்பா.”
“சரி ம்மா”
கார் சேலம் தாண்டியதும், அவளை மெதுவாக எழுப்பி சாப்பிட அழைத்தான். அவள் மறுக்க, ஓட்டுநரிடம் பார்சல் வாங்கச் சொல்லி விட்டு அவளை வசதியாய் தன் மடியில் தாங்கிக்கொண்டான்.
அவன் மனம் கடந்த ஒரு வருடமாக இவளை காதலித்தாலும் இவளை கைபிடிக்கும் வழி வகை அறியாமல் திண்டாடியது. தங்கள் குடும்பச்சிக்கல் அவனின் காதலை எந்தவகையிலும் பாதிக்கக் கூடாது என்று அவன் வேண்டாத நாள் இல்லை.
இன்று அவன் பூவானவள் அவன் தோளில் மாலையான சூழ்நிலை கஷ்டமானதாக இருந்தாலும், இப்படி நடவாது போயிருந்தால் அவள் கைத்தலம் பற்ற வேளை வந்திருக்குமோ என்னவோ! ஏதேதோ சிந்தனையில் உழன்றவன் அவள் நெடுநேரமாக உறங்குவது கண்டு, அவள் மனதின் களைப்பை அறிந்தான்.
ஊட்டியில் இருக்கும் தங்கள் எஸ்டேட் வீட்டை தயார் செய்யக் கட்டளையிட்டான். இவ்வளவு நாட்களும் இவன் ஒருவன் தங்க எதற்கு அந்த பங்களா என்று எஸ்டேட் ஆஃபீசுக்கு அருகில் இருந்த வீட்டில் எப்போதாவது தங்கிக் கொள்வான். இனி அப்படி இல்லையே! தன் மனையாளுடன் அவன் காதல் வாழ்வு வாழப்போகும் இடம். தன் தாயும் தந்தையும் தாத்தாவின் பொருட்டு கோவை சென்றதும் பராமரிப்பு மட்டுமே பார்த்து வந்த வீடு இனிமேல் தன் பூமாவின் வாசத்தோடு வசந்தம் வீசப்போகும் ஒவ்வொரு நொடியையும் ஆதி ஆவலாய் எதிர்பார்த்தான்.
கிட்டத்தட்ட ஊட்டியை நெருங்கியபோது தான் பூமா விழித்தாள். ஆதியின் தோளில் கைகளால் மாலை போட்டவள், “நம்ம எப்போ வீட்டுக்கு போவோம் அத்தான்?”
அவனுக்கு அவள் தூக்கக் கலக்கத்தில் சென்னையில் உள்ள அவர்கள் வீட்டை கேட்கிறாளோ என்று சந்தேகம் வரவே,
“நம்ம சென்னையை விட்டு வந்துட்டோம் டா.”
“அதான் தெரியுமே அத்தான். நம்ம வீட்டுக்கு எப்போ போவோம்? நான் ரொம்ப நேரம் தூங்கிட்டேனா?” என்று இயல்பாய் கேட்டவள் பின்பு தான் சுற்றுப்புறத்தை கவனித்தாள்.
“அத்தான் ஊட்டிக்கா போறோம்? கோவை போகலையா? அத்தம்மா, மாமா, பாப்பா, தாத்தா எல்லாம் பார்க்க போகவேண்டாமா?”
“அம்மா கிட்ட பேசினேன் பூமா. அவங்க தான் இப்போதைக்கு கோயம்புத்தூர் வரவேண்டாம். ஊட்டில இருங்க நாங்க அடுத்த வாரம் வர்றோம்ன்னு சொன்னாங்க டா.”
“ஹ்ம்ம்… ஊட்டில போய் தனியா இருக்கணுமா?”, என்று அவள் சலித்துக்கொண்டாள்.
இவர்கள் சம்பாஷணையை கேட்ட காரோட்டி சிரித்துவிட, “என்ன அண்ணா சிரிக்கிறீங்க?”,பூமா.
“இல்லம்மா உங்களை பார்த்தா இப்போ தான் கல்யாணம் ஆனவங்க போல இருக்கு. எல்லாரும் தனியா இருக்க ஆசைப்படுவங்க. நீங்க என்னடான்னா மாமனார் வேணும் மாமியார் வேணும்ன்னு சொன்னிங்களா அதான் இந்த காலத்துல இப்படி ஒரு பொண்ணான்னு நினைச்சு சிரிச்சிட்டேன். ஆனா மன்னிச்சிருங்க மா. நான் கார்ல கஸ்டமர் பேசுறத கவனிக்க மாட்டேன் ஆனா என்னமோ தெரியல உங்க குரல் கேட்டபோ கவனிக்கணும் போல இருந்தது.”
“அதுனால ஒன்னும் இல்ல அண்ணா..”
ஆதி மனதிற்குள் ‘இவள் எல்லாரையும் தன் வசம் கட்டி இழுத்துவிடுகிறாள்’ என்று நினைத்து சிரித்துக்கொண்டான்.
விடியாத அந்த இரவில் அவர்கள் எஸ்டேட் வாயிலை அடைந்தனர். அங்கே இரண்டு ஆள் உயர இரும்புக்கதவு சாற்றி இருந்தது. ஆதி தனது பராமரிப்பாளருக்கு அழைக்க, அவர் சொல்லி காவலாளி கதவைத் திறந்தான்.
தூங்கி எழுந்து புத்துணர்வுடன் இருந்த கோதை அந்த கதவின் பின்னே தெரிந்த எஸ்டேட்டை கண்டு கண்களை விரித்தாள்.
ஆதிக்கு அந்த கண்களில் குதித்து விடும் ஆவல் பிறந்தது.
காரோடும் பாதை தவிர நெடுகிலும் மலை மீது போவது போல சமதளம் இல்லாமல் இருக்க, பலவித மரங்கள், போக போக பூக்கள் நிறைந்த மரங்கள் எல்லாம் தாண்டி நெடுந்தூரம் வந்த பின் அந்த அழகிய மாளிகையின் வாயிலில் நின்றது கார்.
மூன்று அடுக்குகள் கொண்டு பறந்து விரிந்து வெள்ளைவெளேர் என்றிருந்த அந்த வீடு மலை உச்சியில் தெரியும் வெண்ணிலவு போல அந்த அரையிருளில் காட்சியளித்தது.
வீட்டைக் கண்டதும் கோதையின் உள்ளம் ஒருவித நிம்மதியை அடைந்தது. ஆதி கோதையை அழைத்துப்போய் வாசலருகில் நிற்க வைத்துவிட்டு காரோட்டியை தங்கள் வேலையாட்களின் ஓய்வறையில் ஓய்வு எடுத்துக்கொண்டு காலை செல்லுமாறு அறிவுறுத்திவிட்டு வருவதற்குள் நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி கையில் ஆரத்தி தட்டோடு வந்தார். அவரை ஆதி கேள்வியாய் நோக்க,
“நான் கமலா சின்னைய்யா. என் வீட்டுக்காரர் தான் இங்க வாட்ச்மேனா இருக்காரு. நான் தான் இங்கே வீடெல்லாம் சுத்தம் பண்றது. அது… சாயந்தரமே அம்மா கூப்பிட்டு நீங்க வர்றதா சொன்னாங்க. ‘மருமகளுக்கு என்னால இப்போ ஆரத்தி எடுக்க முடியல. நீ அவங்க எப்போ வந்தாலும் ஆரத்தி எடுத்து தான் உள்ள அனுப்பணு’ன்னு சொன்னாங்க.”
மலர்ந்து சிரித்தாள் கோதை. “நான் கூட அத்தம்மா கோவமா இருப்பாங்கன்னு நினைச்சேன். என் அத்தம்மா சோ ஸ்வீட்.”
கமலா ஆலம் சுற்றி அவளை வீட்டிற்குள் அழைத்தாள். கோதை ஆதியின் கைகளை பிடித்துக்கொண்டு ,”அத்தான் ரெடி ஸ்டார்ட்”, என்று ஓடுவதற்கு தயாராவது போல் நிற்க, கமலா சிரித்து விட்டார்.
அவளின் குழந்தைத்தனம் அவள் பட்ட அவமானங்களால் மாறிவிடுமோ என்று பயந்தவனுக்கு, அவளின் இந்த குறும்புத்தனம் பெரும் நிம்மதியை கொடுத்தது.
அவர்களோடு இணைந்து சிரித்த கோதை அந்த மகிழ்வுடன் இருவரும் இணைந்தே அந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தனர். ஆதி ‘அவள் இந்த வீட்டில் என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்’ என்றும், கோதை ‘என்னால் ஆதி என்றும் மகிழ்ச்சி அடைய வேண்டும்’ என்று எண்ணியபடி அந்த மாளிகைக்குள் நுழைந்தனர்.
கமலா நினைவு வந்தவராய், “அம்மா நீங்க ஸ்வீட்ன்னு சொல்லவும் தான் நினைவே வருது உங்களுக்கு குலோப்ஜாமுன் பிடிக்குமாமே, சின்னைய்யா பேசும்போது சின்னம்மா கிட்ட சொன்னாங்களாம் அதான் உங்களுக்காக வாங்கி வச்சு நீங்க வந்ததும் தரச் சொல்லி சின்னம்மா உத்தரவு.”
தன் நாத்தனாரின் அன்பில் கோதை நெகிழ்ந்தவளாய்,”இப்போ பாப்பா முழிச்சிருப்பாளா? நான் போன் பண்ணி பேசவா?”, என்று ஆர்வமாய் கேட்க ஆதி சிரித்துக்கொண்டு கடிகாரத்தைக் காட்டினான். அது அதிகாலை மூன்று மணியைக் காட்ட, கோதை நாக்கை கடித்துக்கொண்டு ,”ச்ச ரொம்ப லேட்டாச்சு.. நாளைக்கு பேசிக்கறேன் என் பாப்புக்குட்டி கிட்ட.”,என்று குலாப்ஜாமூன் டப்பாவை திறந்து ருசிக்க ஆரம்பித்தாள்.
அவள் இனிப்பு உண்ணும் அழகை ரசித்த ஆதி கோதையிடம் “இன்னிக்கு கீழே இருக்கற ரூம்ல தங்கிக்கலாம் பூமா. காலைல உனக்கு எந்த அறை பிடிச்சிருக்கோ இனிமே அது தான் நம்ம ரூம் சரியா?”, என்றான் அவள் லட்டுக் கன்னங்களைக் கிள்ளியபடி.
“சரி அத்தான். ம்ம்ம் எனக்கு இப்போ தூக்கம் வரலேயே!”
ஆதி சிரித்துக்கொண்டே,”ஆனா எனக்கு தூக்கம் வருதே என் செல்ல பொண்டாட்டி.”
அவன் சொன்ன பின்பு தான் சென்னையில் இருந்து ஊட்டிக்கு வரும் வரை அவனை தூங்க விடாமல் அவன் மடியில் தான் கும்பகர்ணனின் கொள்ளுப்பேத்தி போல தூங்கி வந்தது நினைவுக்கு வர, ஒரு அசட்டு சிரிப்புடன்,
“சாரி அத்தான். நான் தூங்கிட்டே வந்தேனா அதே ஞாபகத்துல பேசிட்டேன். நீங்க வாங்க.” என்று முதலில் இருந்த அறைக்கு அவனை அழைத்துச் சென்றாள். அவனை உடைமாற்றி சுத்தம் செய்து வர அனுப்பிவிட்டு ரூமின் ஹீட்டரை போட்டு அவன் வருவதற்குள் படுக்கை சரி செய்து மெத்தையில் தலைமாட்டின் ஓரம் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டாள்.
குளியலறையிலிருந்து வந்த ஆதி அவளின் நிலை கண்டு குழப்பமாய் நோக்க, அவளோ தன் இரு கைகளை விரித்து அவனை வாவென்று அழைத்தாள்.
அவளது அழைப்பில் மயங்கியவன் அவள் கரங்களுக்குள் சரண் புகுந்தான். ஒரு தாய் தன் மகவை முதல் முறை தழுவுதல் போல அவள் தன் கணவனை முதல் முறை நெஞ்சம் நிரம்பிய காதல் கொண்டு அணைத்தாள். அதில் துளியும் காமமோ அல்லது சீண்டும் உணர்வோ இல்லை. நிம்மதி மட்டுமே நிறைந்து இருந்தது. பின் அவனை தன் மடியில் தலை வைத்துப் படுக்க வைத்தவள், அவன் தலையைக் கோதி விட்டாள்.
அறையின் வெப்பமும் குளிரும் கலந்த நிலையும், தன் காதல் கைகூடிவிட்ட நிம்மதியும், தன் மனையாள் எந்த வித சோகமும் இல்லாமல் தன் இல்லத்தில் குடியேறிய நிறைவும், தன்னை அரவணைத்து அவள் தலைகோதும் சுகமும் ஆதியை அந்த நாளின் அலைச்சல், அலைப்புறுதல், தவிப்பு, கோவம், கவலை, வெறுப்பு போன்ற அதனை உணர்வுகளையும் மறக்கச் செய்து தன் கண்மணியின் மடியில் கண்ணுறங்க வைத்தது.

அட.. பரவாயில்லையே புகுந்த வீட்டு ஆளுங்க இத்தனை அழகா அவளை வரவேற்கிறாங்களே..
இதுல பொய்யில்லையே…?
😀😀😀
CRVS (or) CRVS 2797
சூப்பர்👌👌👌👌 ஆதி வீட்டு ஆளுங்க நல்லவர்களாக இருக்காங்களே,
💕💕💕💕