Amudham 15

Jeyalakshmi Karthik’s Classic

Amudham 15

அமுதம் 15

எதிர்பாராமல் நடந்த கோதையின் திருமணமும், அதிரடியாய் அவள் வெளியேறியதையும், தங்கள் தந்தையே அவர்களுக்காக நின்றதும், பெரியவர்களை பெரிதும் பாதித்தது. ஆதியின் பேச்சு, அவன் கோதையை அழைத்துச்சென்ற விதம் என்று இன்னும் பல குழப்பங்கள். அவரவர் ஒரு இடத்தில் அமர்ந்து கைத்தாங்கலாய், தலை சாய்த்து என்று ஆளுக்கொரு யோசனையில் இருக்க,

புயல் போல வீட்டினுள் நுழைந்தான் அகிலன்.

“அம்மா, அப்பா! என்ன இதெல்லாம்? வீடெல்லாம் அலங்காரமா இருக்கு. என்ன விஷேக்ஷம்? என்கிட்ட கூட சொல்லிட்டு பண்ண முடியாத அளவுக்கு என்ன அவசரம்?”

இவன் கேள்விகளை அடுக்கும்போதே இதே கேள்விகள் மனதிற்குள் எழ உள்ளே நுழைந்தனர் ஷியாமும் வெண்மதியும். சுஜியுடன் அருணாவும் வந்து சேர்ந்தாள்.

காமாட்சி வேகமாக, “கோதை கல்யாணம் பண்ணிக்கிட்டு போய்ட்டா…”

மொட்டையாக சொல்லப்பட்ட தகவலில் கடுப்பான அகிலன் “உங்களுக்கெல்லாம் என்னைப் பார்த்தா கேனப்பயல் போல தெரியுதா? அவ தான் எனக்கு போன் பண்ணி வீடு இப்படி இருக்கு. யார் முகமும் சரி இல்லன்னு சொன்னதே!”

“அவ சொல்றது உண்மைதான் அகில்”, என்றார் மீனாட்சி.

“அத்தை என்னை கோவப்படுத்தாதிங்க. கோதை அப்படி செய்யற பொண்ணு இல்ல. அப்படியே அவ பண்ணிருந்தாலும் அதுல கண்டிப்பா ஒரு அழுத்தமான, நியாயமான காரணம் இருக்கும். சரி அவ கல்யாணம் பண்ணிக்கிட்டு போறதுக்காக நீங்க வீட்டை அலங்காரம் பண்ணினிங்களா? அவ கல்யாணம் பணிக்க போறது உங்களுக்கு முன்னாடியே தெரியுமா என்ன??” நக்கலாக வினவினான்.

அவன் கேள்விக்கு அங்கே பதில் இல்லாமல் போக,

“தாத்தா!”, என்றான்.

மிகவும் சோர்ந்தவராக ஜோதிலிங்கம் வந்து சோபாவில் அமர்ந்தார்.

“தாத்தா இதென்ன, இவங்க கோதை கல்யாணம் பண்ணிக்கிட்டு போய்ட்டான்னு சொல்றாங்க. வீடு ஏன் இப்படி இருக்குன்னு கேட்டா பதில் சொல்ல மாட்டேங்கறாங்க. நீங்களாவது சொல்லுங்க தாத்தா.”

“சொன்னா தங்குவீங்களா டா?”

“எப்படியும் நடந்ததை தானே சொல்ல போறீங்க? பொய் தான் இனிக்கும், உண்மை கசக்கத் தான் செய்யும் என்று நீங்க சொல்லிகுடுத்து தானே வளர்த்திங்க. எதுனாலும் தாங்கித்தான் ஆகணும். சொல்லுங்க தாத்தா.”

“இவங்க எல்லாருமா சேர்த்து கோதையை முகிலனோடு இணைச்சு தப்பா பேசி இன்னிக்கே அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ண பார்த்தாங்க. கோதை ஒத்துக்கல. ஆதி வந்து கோதைக்கு சப்போர்ட்டா பேசினான். அவனோடையும் சேர்த்து வச்சு பேச அவன் அவளை தாலி கட்டி கூட்டிட்டு போய்ட்டான்.” என்றார் மேலோட்டமாக.

தாத்தா சொல்லச் சொல்ல ஷ்யாமிற்கு கோபம் ஏறியது.

அகிலனுக்கு தாத்தாவின் விளக்கம் போதுமானதாக இல்லை.

“இங்க என்ன நடந்ததோ அது அச்சுப்பிசகாம எனக்கு இப்போ தெரியணும்”, என்றான். அவன் குரலின் கடுமையில் தாத்தாவுக்கே ஓரு மாதிரி இருந்தது.

காமாட்சி சொல்ல வர கை நீட்டி தடுத்தவன், “அப்பா நீங்க சொல்லுங்க”, என்றான்.

அவரும் நடந்தவைகளை சொல்ல, ஷியாம் வெறிப்பிடித்தவன் போலக் கத்தத் தொடங்கினான்.

“எல்லாரும் என்ன தான் நெனச்சுட்டு இருக்கீங்க? அது எப்படி நேத்து வரைக்கும் சீராட்டின பொண்ணை ஒரே நாள்ல தூக்கி

போட முடிஞ்சது? கோதையை பத்தி உங்களுக்கு தெரியாதா? அவ ஒருத்தனோட தப்பு பண்றதா எவனாவது சொன்னா, அவன் தாடையை உடைக்காம அவளை போய் தப்பா பேசி இருக்கீங்க! உங்களுக்கெல்லாம் என்ன ஆச்சு? அதெப்படி கோதை தப்பானவள்ன்னு நீங்க முடிவு பண்ணினிங்க? எனக்கு தெரிஞ்சாகணும்.”

அவனை சமாதானம் செய்யும் விதமாய் அவனை அணைத்தான் அகிலன்.

“நீங்க சொல்லுங்க மீனா அத்தை. அவ உங்க பொண்ணு தானே? யார் சொல்லிருந்தாலும் நீங்க அவளை நம்பி இருக்க வேண்டாமா?”

“சொன்னதே அவ தான்”, என்றார் காமாட்சி.

இது அகிலனுக்கே அதிர்ச்சியாய் இருந்தது. ஒரு நிமிடம் அவன் கோதையின் நிலையை நினைத்துப் பார்த்தான். இவர்கள் இப்படி பேசும்போது அவள் எவ்வளவு துடித்திருப்பாள் என்று.

ஷியாம் ஏதோ பேச வாய் திறக்க, அவனை கண்ணாலே அடக்கினான் அகிலன்.

“நீங்க ‘எங்க’ பூங்கோதையை தப்பா நினைக்க என்ன காரணம்? யாரு??”

அவனின் அழுத்தமான கேள்வி, ‘கோதையை நாங்கள் நம்புகிறோம் உங்கள் பக்கத்தை சொல்லுங்கள், நாங்கள் எங்கள் கோதையை நிரூபிக்கிறோம்’ என்ற ரீதியில் இருந்தது.

அருணா,” சபாஷ் அகி. கேளுங்க. என் கோதைக்குட்டி யார்ன்னு இன்னிக்கு உங்க எல்லாருக்கும் புரிய வைக்காம விடமாட்டேன்.”

லட்சுமி ஏற்கனவே இதெல்லாம் பிடிக்காமல் கோதை மீது நம்பிக்கை கொண்டிருந்தார். இப்போது அருணா கோதைக்கு ஆதரவாகப் பேச அவருக்கு உள்ளே வலித்தது.

“வீட்டுக்கு வாழ வந்த பொண்ணு நம்ம வீட்டு பொண்ணு மேல வச்ச நம்பிக்கையை கூட நீங்க யாரும் வைக்கலயே! ஆரம்பத்தில் இருந்து கோதைக்கிட்ட நேரடியா பேசு பேசுன்னு அடிச்சிகிட்டேன். நீ பேசல. நானாவது கேக்குறேன்னு சொன்னா அதுக்கும் என்னென்னவோ சொல்லி கேக்க விடாம பண்ணிட்ட. இதுக்கு மேலயும் நான் இந்த வீட்ல ஊமையா இருக்க மாட்டேன். எனக்கும் முழுசா எதுவும் தெரியாது அகில். கேளு. இவங்க பதில் சொல்லணும்.” என்றார் லட்சுமி.

“அவளோட நடவடிக்கை சமீப காலமாக சரி இல்லை அகில். அவ நடவடிக்கையில் வித்தியாசம் தெரியவும் நான் அவளை கவனிக்க ஆரம்பிச்சேன். கிடைச்ச பதில் தான் நல்லா இல்ல.”

“சும்மா உளராம என்ன நடந்துச்சோ அதை சொல்லு”,என்றார் தாத்தா.

“நாலு மாசமா காலேஜ்ல இருந்து நேரம் கழிச்சு வர ஆரம்பிச்சா, அப்பறம் ஒரு நாள் இவ வந்ததும் பின்னாடியே முகிலன் வந்தான். அப்பறம் அதுவே தொடர்ந்தது. எங்க போறான்னு பார்க்க நானும் காலேஜ் போனேன். அவ காலேஜில் இருந்து பார்க்குக்கு போனா. அங்க முகிலன் வந்தான். அப்பறம் ரொம்ப நேரம் கழிச்சு ரெண்டு பேரும் அவங்கவங்க வண்டில வீட்டுக்கு வந்துட்டாங்க. சரி லவ் பண்றங்க போலன்னு முகிலன் கிட்ட கேட்டேன். அவன் ஏதோ ஜோக்கை கேட்டது போல சிரிக்கறான். ‘உங்க பொண்ணுக்கு வெளிநாட்ல போய் மேல படிக்கணும்ன்னு ஆசை அத்தை. என்னோட யு.எஸ் வரேன்னு சொல்லிட்டு இருக்கா. அவளுக்கெல்லாம் கல்யாணம் செட்டாகாதாம்’ அப்படினு சொன்னான்.

நானும் கோதை கிட்ட போய் கேட்டதுக்கு, ‘அவ எனக்கு வேற பிளான் இருக்கு. நானே பாத்துக்கறேன்னு’ சொல்லிட்டா. அப்பறம் நைட் ரெண்டு மூணு தடவை அவ ரூம்ல இருந்து முகிலன் வெளில போறதை பார்த்தேன். இதெல்லாம் என்னடான்னு கேட்டா ‘எங்க ஜெனரேஷன் வேற அத்தைன்னு’ சொல்றான்.

அடிக்கடி வண்டி ரிப்பேர்ன்னு அவனோட போக ஆரம்பிச்சா. நைட் அவன் ரூம்ல இருந்து போனதும் நான் போய் பார்த்தா அவ ரூம் உள்ள தாள் போட்டிருக்கு. உங்க எல்லாருக்கும் சொல்லிருக்கோம், ரூம் லாக் பண்ண கூடாதுன்னு. சரின்னு கதவை தட்டினா நல்லா தூங்கிட்டு இருந்தவ மாதிரி குரல்ல பேசறா. ஆனா கண்ணு, முகம் எல்லாம் சிவந்து போய் அவ்ளோ வெட்கம் பூசி இருக்கு. சொல்லுங்கடா,  பெத்த அம்மா  இதெல்லாம் பார்த்தா எனக்கு எப்படி இருக்கும்? சரி கல்யாணம் பண்ணலாம்ன்னு கேட்டா,’ யு.எஸ் அனுப்பறதா இருந்தா பண்ணிக்கறேன்னு’ முகிலன் கிட்ட சொல்லிருக்கா. இதெல்லாத்துக்கும் மேல ரெண்டு நாள் முன்னாடி அவனை காலைல அவனோட ரூமுக்கு போய் கூட்டிட்டு வரேன்னு சொல்லிட்டு கால்மணி நேரம் கழிச்சு ட்ரெஸ்,தலை எல்லாம் சரி பண்ணிக்கிட்டு வெளிய வரா. அவனும் என்னை ஏளனமா பார்த்துட்டு போறான். இதுக்கப்பறம் அவளை நான் என்ன நம்பணும்ன்னு நீங்க நினைக்குறிங்க?” உடைந்து அழுதார் மீனாட்சி.

“இதுல எனக்கு தெரிஞ்சு கோதை நிறைய இடத்துல மிஸ் ஆகறா. நீங்க சொல்றது பூராவுமே முகிலனை பற்றி தான் இருக்கு. அவன் எங்க?”

“அவளை காலேஜில் இருந்து கூட்டிட்டு வந்தவன் தான் இன்னும் ரூம்மை விட்டு வெளில வரவே இல்லை.”

“ஷியாம் அவனை இழுத்துட்டு வா.”

ஷியாம் முகிலன் அறைக்கு சென்று அவனை அழைத்து வந்தான்.

முகிலன் தெனாவெட்டாய் வந்து, “என்ன எல்லாம் ரெடி யா? நான் அவளோட டிக்கெட் கூட சொல்லிட்டேன். மேரேஜ் முடிச்சிங்கன்னா கூட்டிட்டு போயிடுவேன்.”

அவன் பேச பேச ஷ்யாமிற்கு வந்த ஆத்திரத்திற்கு இவனை வெட்டவா குத்தவா என பார்த்தான். அருணா அவனருகில் சென்று கையை பற்றிக்கொண்டு அவன் காதில், “நம்ம இப்போ கோவப்படுறத விட கோதையை நல்லவன்னு நிரூபிக்கணும் ஷியாம். உங்க அண்ணனை நம்பு. அமைதியா இரு.”

அகிலன் அமைதியாக சென்று முகிலனின் சட்டை காலரை சரி செய்தபடி, “சொல்லுங்க தம்பி ஏன் கோதையை பத்தி தப்பு தப்பா வீட்ல பேசி வச்சிருக்கிங்க? உங்களுக்கு கோதையை கல்யாணம் பண்ணனும் அப்படினா நேராவே கேட்டிருக்கலாமே..!”

“அகி நாங்க ரிலேஷன்ஷிப்ல இருக்கோம். அத்தைக்கு அது புரியல. அவளுக்கு வெளிநாட்ல படிக்கணும்ன்னு ஆசை. இந்த கல்யாணம் எல்லாம் சும்மா கண்துடைப்பு. அதுவும் இல்லாம நான் ஏன் அவளை தப்பா சொல்லணும்?”

“அதைத்தான்டா நானும் கேக்குறேன் தம்பி.. அண்ணன் நல்லவன்தான். ஆனா பாரு… எனக்கு உன்னை விட கோதை தான் முக்கியம்.”,அவன் காலரை தடவி பேசியபடி இருந்தவன் அவனை கழுத்தோடு இறுக்கினான்.

“இப்போ நீ உண்மையை சொல்லல தம்பினு கூட பார்க்க மாட்டேன். கொன்னு தோட்டதுலயே புதைச்சிருவேன்.

யாரும் என்னை என்னன்னு கேக்க முடியாது. உண்மையை சொல்றியா இல்ல சாக தயாரா இருக்கியா?”

அகிலனுக்கு கோவம் வரும், ஆனாலும் இன்று அதன் அளவு அதீதமாய் இருந்தது. மூர்க்கமாய் அகிலன் முகிலனின் கழுத்தை நெறித்துக்கொண்டிருந்தான். முகிலன் கொஞ்ச கொஞ்சமாக மூச்சுக்குத் திணறினான்.

தன் பிள்ளைகள் தன் கண் முன்னே அடித்துக்கொள்ளும் துன்பம் ஒருபுறம், இளயவனின் மூச்சுக்கு ஏங்கும் நிலையைக் கண்டு பதறிய தமயந்தி, “விடு அகில்”, என்று கத்த,

“விடறேன் ஆனா உங்க பிள்ளையை உண்மையை சொல்லச் சொல்லுங்க.”, என்று அவனை உதறினான்.

தமயந்தி,”அவன் பொய் சொல்றான்ன்னு உனக்கெப்படி தெரியும்?”

“அம்மா இவனை தாங்கிப் பேசிப் பேசி இவன் தப்பெல்லாம் மறைச்சிட்டே வந்திங்க. இன்னிக்கு இவன் செய்திருக்கும் செயல் உங்களுக்கு முழுசா தெரியும் போது உங்கள் தவறுடைய வீரியம் உங்களுக்குப் புரியும். என்ன கேட்டிங்க? இவன் சொன்னது பொய்ன்னு உனக்கெப்படி தெரியுமா? சின்ன பிள்ளை கூட சொல்லிடும். ஆனா உங்க யாருக்கும் தான் அறிவு வேலை செய்யலேயே! சொல்றேன் கேளுங்க இவன் சொன்னது உண்மைன்னா இப்போ கோதை வீட்ல சந்தோசமா தயாரா இருந்திருக்கணும். ஆதியை கல்யாணம் பண்ணி அவனோட போயிருக்க மாட்டா. “

அவன் சொல்லவும் முகிலன் முகம் மாறியது.

“என்ன என்ன அவ ஆதியை கல்யாணம் பண்ணிட்டு போய்ட்டாளா? அவன் எங்கேயிருந்து இன்னிக்கு திடீர்னு வந்தான். இப்படி நடக்கக் கூடாது அவ என்னோட வந்து ஒவ்வொரு நொடியும் என்னை உதாசீனப் படுத்தினத்துக்காக வேதனைப்பட்டு அழணும், அவளை பார்த்து பார்த்து அவளை தாங்கின நீங்க எல்லாரும் அந்த வேதனையை அனுபவிக்கணும்னு தானே இவ்வளவும் பண்ணுனேன். ச்ச எல்லாம் வேஸ்டா?” சுற்றுப்புறம் மறந்து தன் எண்ணம் நிறைவேறாத கடுப்பில் முகிலன் பேசிக்கொண்டே போக இடியாய் அவன் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது.

“டேய் என்னடா பேசுற.. அப்போ கோதை மேல எந்த தப்பும் இல்லையா?”, இந்திரன் அவனைப் பிடித்து உலுக்கிக்கொண்டிருந்தார்.

அவன் மேல் ஏற்கனவே கோபத்தில் இருந்த ஜோதிலிங்கம்,

“ஆதியை என்ன இந்த வீட்ல இருக்குறவங்க மாதிரி நினைச்சியா? உன் நாடகத்தை நம்பி கோதையை சந்தேகப்பட.. அவங்க ரெண்டு பேரோட காதல் எவ்வளவு ஆழமா இருந்திருந்தா அவ அவனுக்காக படிப்பை அவ்வளவு உறுதியா படிச்சிருப்பா? அவனும் அவளுக்காகத் தான் ஒரு வருஷமா உழைச்சான். அதான் போகும் போது அவ உடை கூட அவனோட சம்பாத்தியத்தில் இருக்கணும்ன்னு அவன் வாங்கிட்டு வந்த ட்ரெஸ்ஸோட கூட்டிட்டு போனான். என் பேத்தி அவனோட சந்தோசமா இருப்பா டா.

ஆனா நீ உண்மையை சொல்லல. என்ன கதிக்கு ஆளாகப் போறன்னு பாரு. அகிலா இவன் இப்போ எல்லா உண்மையையும் சொல்லணும். இல்ல இவனை நீ வெட்டிபோட்டாலும் யாரும் வாய் திறக்க கூடாது சொல்லிட்டேன். அம்மா மருமகளே உனக்கும் சேர்த்து தான்” என்று முகிலனிடம் சீற்றமாய் ஆரம்பித்து, அகிலனிடம் கட்டளையாய் சொல்லி கடைசியில் தமயந்தியிடம் உறுதியாய் சொல்லி முடித்தார்.

மீனாட்சி சோபாவில் வேரில்லாத கொடி போல சரிந்தார். “அப்போ நான் பார்த்தது எல்லாம் பொய்யா? என் பொண்ணு நல்லவதானா? நானே அவ மனசை கொன்னுட்டேனா?”

“இப்போ அழுது என்ன பிரயோஜனம். நான் ஆரம்பத்துல இருந்து சொன்னேன். நேரடியா அவளை கேளு கேளுன்னு. நீ என் பேச்சை கேட்கலை. நானே கேக்குறேன்னு சொன்னேன் அதுக்கும் என்னேனவோ சொல்லி என் வாயை அடைச்சிட்ட.. போகும்போது அவ சொன்னதை கேட்டியா? இந்த வீடு பொண்ணு கோதையை அவங்களே கொன்னுட்டாங்க அப்படின்னு சொன்னாளே! போதுமா? எல்லாம் இவன் வேலை தான் போல.. பிள்ளை எவ்வளவு நொந்திருக்கும்!”, லட்சுமி

வெண்மதியும் சுஜியும் ஒருவரை ஒருவர் அணைத்து அழுதனர். அருணா அவர்களை சமாதானம் செய்தாள்.

“சொல்லு டா”,என்று விடாப்பிடியாக நின்றார் இந்திரன், ஏற்கனவே இந்த கல்யாண ஏற்பாட்டில் பிடித்தம் இல்லாமல், மீனாட்சிக்காக ஒத்துக்கொண்டார். அப்போதும், ‘இவன் வேண்டாம் மீனா, நான் வேற நல்ல பையனா பாக்கறேன். எனக்கு இவன் நடவடிக்கை எதுவுமே பிடிக்கலம்மா. ஏதோ இவன் கிட்ட தப்பிருக்கு. இவன் சொல்றதை நம்பி நீ கோதையை சிக்கல்ல மாட்டிவிட வேண்டாம்’ என்றவர் அவர்.

அவரிடமிருந்து முகிலனை பிரித்த சுந்தர், “டேய் நான் போலீஸ்காரன், என் அடி எப்படி இருக்கும்ன்னு தெரியுமா இல்ல இப்போ தெரிஞ்சுக்கிரியா சொல்லு”, என்றார். அதற்குள் கதிர் லத்தியுடன் வர முகிலனின் சர்வமும் அடங்கியது. “சொல்றேன் மாமா”, என்றான்.

மெதுவான குரலில் தன் திட்டத்தின் ஆரம்பப் புள்ளிக்கு அனைவரையும் இட்டுச்சென்றான்.


4 thoughts on “Amudham 15

  1. அடப்பாவிங்களா..! அந்த முகிலன் ஆயிரம் பொய் சொல்லியிருக்கட்டும், ஆனா கோதையை ஒரு பர்சென்ட் கூடவா நம்பலை. அட போங்கடா… நீங்களும் உங்க வீணாப்போன பாசமும்.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!