“You never see the knife coming when it’s veiled by the warmth of family.”

அமுதம் 13
ஆதிக்கு அன்று பேக்டரியில் நிறைய குழப்பங்கள். அவனும் இந்த ஒரு ஆண்டாக எல்லாம் பார்த்து பார்த்து தான் செய்கிறான். இருந்தும் தொழிலாளர்கள் சிலர் செய்யும் செயல்கள் அவனை நிம்மதியாக இருக்க விடுவதில்லை. ஏற்கனவே கோவைக்கும் நீலகிரிக்கும் அலைந்து கொண்டிருப்பவன். இன்று தொழிலாளர் இருவர் போட்ட சண்டையில் சமாதானம் செய்யவே இரவாகிப் போனது. இதற்குமேல் கோவை செல்வது சாத்தியமில்லை என்று எஸ்டேக்கு அருகில் இருக்கும் அவனின் வீட்டிற்கு சென்றேன். கோதைக்கு அழைப்பு விடுக்க, அவள் எடுக்கவே இல்லை.
இந்த ஒரு வருடத்தில் அவன் வாழ்வில் நடந்த எதையுமே கோதையிடம் அவன் பகிரவில்லை. அவள் படிப்பு ஒரு காரணம் என்றால், மற்றொன்று ஆரம்பத்திலிருந்து சொல்ல வேண்டியது வரும். இன்றைய நிலைமையில் அதை அவன் விரும்பவில்லை. இன்னும் ஐந்து நாட்களில் கோதையின் பரீட்சைகள் முடிந்துவிடும். அவளை சென்று நேரில் பார்த்துவிட்டு திருமணம் பற்றி முடிவு எடுத்துக்கொள்ளலாம் என்றவன், சென்னைக்கு செல்ல ரயிலில் முன்பதிவு செய்தான். இன்ப அதிர்ச்சியாய் அவள் முன் சென்று நிற்க வேண்டும் என்று நினைத்தவனுக்கு அதிர்ச்சிகளே காத்திருந்தது.
இவன் நினைவில் நின்றவளோ, யார் நினைவும் இல்லாமல் தன் படிப்பே குறி என்று வெறிகொண்டு படித்துக்கொண்டு இருந்தாள். பிராக்டிக்கல் பரீட்சைகள் முடிய, எழுத்துத் தேர்விற்கு படித்தாள்.
அவள் கவனம் படிப்பில் இருக்கவே தன்னை சுற்றி நடப்பவைகளை கவனிக்க மறந்தாள். வீட்டில் உள்ளோருடன் பேசாமல் அறையில் அமர்ந்து படித்தபடி அவள் இருக்க, அவளுக்கு அவமானங்களை தேடித்தருபவை வீட்டிற்குள் உலாவின.
“வண்டி அடிக்கடி மக்கர் பண்ணுது. சை..”, என்று கத்தியபடி வந்தமர்ந்தவளை, ஏற்றஇறக்கமாய் கண்ட அன்னையவள், “அதான் உன் முகிலன் இருக்கானே, கூட்டிட்டு கிளம்பு. “என்றாள் எங்கோ பார்த்தபடி.
அம்மாவின் கூற்றில் இருக்கும் வித்தியாசத்தை உணராமல்,”அட ஆமா அவன் வெட்டியா வீட்ல தானே இருக்கான். தாங்க்ஸ் மா”, என்று அன்னைக்கு முத்தமிட்டு முகிலன் அறைக்கு சென்றாள்.
உள்ளே சென்ற அவள் கண்டது தூங்கும் முகிலனைத்தான்.
கால் மணி கழிந்து துப்பட்டாவை உதறி தோளில் போட்டு, கூந்தலை ஒத்துகியபடி அவள் முன்னால் செல்ல, ஹாலில் நின்றிருந்த மீனாட்சியை ஒரு ஏளனப் பார்வையுடன் கடந்து சென்றான் முகிலன்.
அடுத்த இரண்டு நாட்கள் வீட்டில் ஏற்பட்ட மாற்றங்களை கவனிக்கும் நிலையில் கோதை இருக்கவில்லை. அவளின் குறிக்கோள் ஒன்றே, படிப்பை நன்முறையில் முடித்து ஆதியை மணக்க வேண்டும். இவளின் இந்த சலனமில்லாத கவனமே அவளை துடிதுடிக்க வைக்கக் காத்திருந்தது.
இதோ இன்றுடன் தேர்வுகள் முடிந்துவிடும். மிகவும் உற்சாகமாக கிளம்பியவளை, அம்மாவே முகிலனுடன் போகச் சொல்ல.
“இல்லம்மா இன்னிக்கு லாஸ்ட் டே இல்ல.. போட்டோஸ் எடுத்து, பேசி சிரிச்சு… லேட்டாகும். நான் என் வண்டிலேயே போய்க்கறேன்.”
“மதியம் எக்ஸாம் முடிஞ்சதும் நீ வீட்ல இருக்கணும்.”, உறுதியாய் வந்த தந்தையின் குரல் இன்று அவளுக்குப் புதிது.
“சரிப்பா.”
“முகிலன், கூட்டிட்டு போங்க.”
அவன் முன்னே நடக்க, கோதை வீட்டிலுள்ளோரை ஒரு முறை பார்த்தவள், ‘தேர்வில் கவனம் வை பூமா’ என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டு காரில் ஏறினாள்.
தேர்வறை விட்டு வெளியில் வந்தவள், தன் நட்பு வட்டத்தை தேடினாள். அவர்களும் வந்துவிட, எப்போதும் அவர்கள் அமரும் மரத்தடியில் அமர்ந்தவர்கள், பேசி சிரிக்க, அப்பொழுது கோதை,” வீட்ல சீக்கிரமா வர சொன்னாங்க பா.. என்னன்னு தெரியல. அப்பறம் உங்க எல்லார்க்கிட்டயும் நான் ஒண்ணு சொல்லணும்.”
“என்ன டி”
“நான் ஆதி அத்தானை லவ் பண்றேன். நல்லா படிச்சு முடி, வந்து உன்னை பொண்ணு கேக்குறேன்னு அத்தான் சொன்னாங்க. எப்போ வருவங்கன்னு தெரியல.”
“அடிப்பாவி இது எத்தனை நாளா நடக்குது”
“ஒரு வருஷமா”
“உன்னெல்லாம்.. “,திட்டிக்கொண்டிருந்த கிருத்திக்கு ஏதோ உறுத்தலாய் பட, கல்லூரி வாசலில் காரில் சாய்ந்து நின்ற முகிலனை கண்டதும்,
“நீ அவனோடு ஏன் அடிக்கடி வர. எனக்கு அவனை கண்டாலே பிடிக்கல.”
அப்போதுதான் அவனை கண்டவள்,
“எனக்கு மட்டும் ஆசையா? வண்டி அடிக்கடி மக்கர் பண்ணுது. வீட்ல எல்லாரும் பிஸி. இவன் ஒருத்தந்தான் வெட்டியா இருக்கான். அதான் அவனோட கார்ல போகச் சொன்னாங்க. மத்தபடி அவன் பிரெண்ட் அது இதுன்னான். நான் ஒன்னும் அதிகமா அவனோட பேசுறதே இல்ல.”
“இல்ல டீ. எனக்கும் கிருத்தி சொல்றது போல தான் தோணுது. அதும் இப்போ அவன் முகத்தை பாரேன். ஏதோ எனக்கு தப்பா படுது. நீ அவனோட போகாத. “, சுபா
“நான் வீட்ல விடவா பூ”, என்று ராகுல், பிரவீன், இன்பா மூவரும் ஒரே நேரத்தில் கேட்டு பின் சிரித்துக்கொண்டனர்.
“இல்ல. வீட்ல அவனோட வான்னு சொன்ன பின்னாடி நான் அவனோட போகாம உங்களோட வந்தா அம்மா அப்பா தப்பா நினைப்பங்க.”
சுபா அமைதியாக ,”நீ அவனோட கார்ல போ. நாங்க உன் பின்னாடி வண்டில உங்க வீட்டுக்கு வரோம்.”
“என்னடி அவனை ஏதோ வில்லன் ரேஞ்சுக்கு பேசறீங்க..”
“நீ ஏன் பூ இப்படி இருக்க. அவன் மூஞ்சியெல்லாம் பார்த்தா நம்பறது மாதிரியா இருக்கு.”
“ஓக்கே. பின்னாடியே வீட்டுக்கு வாங்க. லச்சு அத்தை கிட்ட சொல்லி இன்னிக்கு ஸ்பெஷலா அசத்திடலாம்.”
பூங்கோதை முகிலனுடன் செல்ல, ஐந்து வண்டிகளும் பின் தொடர்ந்தது.
அவர்களை ரியர் வியூ மிரரில் கண்ட முகிலன், “இவங்க என்ன உனக்கு பாடிகார்ட்ஸா? இன்னிக்கு உன் பின்னாடி வருவாங்க. நாளைக்கும் நான் உன்னோட வரும்போது அப்பயும் பின்னாடியே வருவிங்களா?”, கடுப்புடன் கேட்டான்.
“அவங்க அப்படித்தான் வருவாங்க. ஆமா நாளைக்கு நான் ஏன் உன்னோட வரப்போறேன். காலேஜ் முடிஞ்சது. இனிமே எனக்கு என் லட்சியம் இருக்கு. அதை பார்த்து நான் போய்ட்டே இருப்பேன். ஏதோ போனப்போகுதுன்னு பிரெண்ட்ஷிப் அக்செப்ட் பண்ணா, நீ ஓவரா பேசுற… தே அர் மை பிரெண்ட்ஸ் அண்ட் நாட் யு எனிமோர்.”, கடுப்புடன் கத்திவிட்டாள்.
அவன் ஒரு சிரிப்புடன்,” லட்சியமா? உனக்கா?? நல்ல ஜோக். நீ சொல்றது கரெக்ட் தான். ஐம் நாட் கோயிங் டு பி யுவர் பிரெண்ட் எனிமோர்.. மோர் தென் தட் பேபி…”
அவனின் ‘பேபி’ என்ற அழைப்பு அவளுக்கு அருவருப்பை தர, “என்ன உளர்ற?”
“வீட்டுக்கு வந்து பாரு தெரியும், யாரு உளர்றதுன்னு…”
வீட்டை நெருங்கிவிட்ட போதும், அவன் வார்த்தைகளில் தெரிந்த வன்மம், கோதைக்கு பயத்தைக் கொடுத்தது.
வண்டி வாசலில் நின்றதைக்கூட உணராமல் தன் சிந்தனைக்குள்ளே உழன்றவளை, கிருத்தியின் “அடியேய் இங்க பாரு” என்ற விளிப்பே விழிப்பைக் கொடுத்தது.
“நீ சொன்னது சரி தான் கிரு. இவன் சரி இல்லை. அவன் பேச்சு அதைவிட சரி இல்லை. முதல்ல அத்தானுக்கு கூப்பிட்டு பேசணும்… “,தன் போக்கில் புலம்பியவளை அவள் வீட்டின் புறம் தலையை திருப்பி பார்க்க வைத்தாள் கிருத்தி..
வீடே விழாக்காலம் போல் காட்சியளிக்க, வீட்டில் பெரியவர்கள் மட்டுமே இருக்க அவர்களின் முகமோ நேர்மாறாய் இருண்டிருந்தது.
கோதையின் உள்ளம் குளிரில் நடுங்கும் கோழிக்குஞ்சாய் நடுங்கி தன்னவன் அருகாமையைத் தேடியது.
கோதையையும் அவள் நண்பர்களையும் உள்ளே அழைத்த லட்சுமி வேலை இருப்பதாக சொல்லி சென்று விட, வீட்டின் தன்மைக்கும் வீட்டினருக்கும் உள்ள வித்தியாசம் புரிந்தாலும் காரணம் தெரியாமல் முழித்தனர்.
மீனாட்சி கோதையின் அறைக்குச் செல்லுமாறு அறிவுறுத்த, உள்ளே வந்ததும்,
“என்ன டா நடக்குது இங்க? “, இன்பா கடுப்பில் கேட்க,
“நாங்களும் உன்னோடத்தானே வந்தோம். கொஞ்சம் பொறு.” என்று அகிலனுக்கு அழைக்க அவனோ அருணாவுடன் மருத்துவமனையில் செக்அப்பில் இருந்தான்.
“அண்ணா வீட்ல என்ன விசேஷம்?”
“ஒன்னும் இல்லையே! நான் காலைல கிளம்பும்போது கூட ஒன்னும் சொல்லலேயே யாருமே.”
“அண்ணா வீடு அலங்காரமா இருக்கு. என்ன விஷயம்ன்னு தெரியல. யார் முகமும் சரி இல்லை.”
“சின்னதுங்க எல்லாரும் ஸ்கூல் காலேஜ் போயிருக்காங்க. இப்போ என்ன டா விஷேசம் வர போகுது. எனக்கு குழப்பமா இருக்கு. இருங்கடா. யாரும் கோதையை விட்டுட்டு போக வேண்டாம். நான் இங்கிருந்து அருணா வீட்டுக்கு போற பிளான்ல வந்தேன். இப்போ போகல. நான் வீட்டுக்கு வர வரைக்கும் அமைதியா இருங்க. யாருமே என்கிட்ட ஒன்னுமே சொல்லல.”
அவன் கோபத்தில் கொதித்தான்.
மீனாட்சி கோதையிடம் புடவை நகைகளை தந்து ,”தயாராகி வா”, என்று சுவற்றை பார்த்து சொல்லிவிட்டு நகர,
சுபா அவள் பின்னொடு சென்றாள்.
“ஆன்ட்டி என்ன நடக்குது?”
“இன்னிக்கு சாயங்காலம் உன் பிரெண்ட்க்கு கல்யாணம்.”, போகிற போக்கில் அவர் குண்டு வைத்து செல்ல, ,தனக்கே இப்படியென்றால் ஆதியின் காதலை சுமக்கும் கோதைக்கு…’ என்று நொந்துபோனவளாய் கோதையின் அறைக்குத் திரும்பினாள் சுபா.

அடப்பாவி…! இந்த கூறு கெட்டவன் முகிலன் என்ன பண்ணித் தொலைச்சான்னே தெரியலையே..? அவன் என்ன வேணா பண்ணி தொலைக்கட்டும், ஆனா, நம்ம பொண்ணு சொக்கத் தங்கம்ன்னு பெத்தவங்களுக்கு தெரியலையா…? அவன் இப்பத்தானே ஊர் பக்கமே தலையை காட்டினான், அதுக்குள்ள எப்படி அவனை நம்பத் தோணுது இவங்களுக்கெல்லாம்..?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Nice
Interesting