
அபிதா வீட்டிலிருந்து வெளியே வந்த அஜய்யின் முகம் பாறையைப் போல கடினமாக இருந்தது.
ரஞ்சித் அவனிடம் எதையும் கேட்கவில்லை. அவன் முகம் தான் நிலைமையை பறைசாற்றிவிட்டதே.
அஜய் நேராக தன் அலுவலகம் சென்று இருக்கையில் அமர்ந்தான். எதிரில் இருந்த பொருட்களை அடித்து உடைக்கும் அளவுக்கு அவனிடம் கோபம் கொட்டிக் கிடந்தது. ஆனால் இதையே எண்ணிக் கொண்டிருந்தால் இந்த மூன்று வருடமாக அவன் உழைத்த எதற்கும் மதிப்பில்லாமல் போய் விடும்.
அதனால் ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை எடுத்துக் கொண்டு அவனுக்கு எதிரில் இருந்த சிவப்பு நிற ஃபைலை எடுத்தான்.
அதிலிருந்த பத்திரங்கள் அனைத்தையும் மீண்டும் மீண்டும் கவனித்தான். எப்பொழுதும் போல இம்முறையும் இதற்கு சரியான தீர்வு என்ன என்று அவனால் தெளிப்படுத்திக் கொள்ள முடியவில்லை.
கைபேசியை எடுத்தவன் அவர்கள் குடும்ப வக்கீலுக்கு அழைத்தான்.
“என்ன அஜய்? இந்த நேரத்துல?” என்றார் அவர் குழப்பமாக.
“மூணு வருஷமா கேஸ் நடக்குது. இப்ப தீர்ப்பு வரப் போகுது. இந்த நேரத்துல கூப்பிட்டாம எப்ப கூப்பிடுறது அங்கிள்?”
“கோவிக்காத அஜய். என்னால முடிஞ்ச எல்லாமே செய்திட்டேன் பா. உனக்கும் நான் எல்லா டாகுமெண்ட்டையும் அனுப்பி வச்சிருக்கேன் தானே! நீயே பாரு. எல்லாமே லீகலா இருக்கு. இந்த கேஸ் மூணு வருஷம் இழுத்ததே அங்க இருக்கற மக்கள் முகத்தை பார்த்து தான். இனியும் முடியாது அஜய். அதை நான் தெளிவா சொன்னேனே!” என்றார் அவனுக்கு புரிய வைத்து விடும் நோக்கில்.
“நீங்க சொல்றதெல்லாம் ஓகே அங்கிள். டாக்குமெண்ட் லீகலா இருக்கலாம். ஆனா உண்மை அது இல்லன்னு உங்களுக்கும் தெரியும் தானே அங்கிள்?” என்றான் கோப மிகுதியில்.
“ஆமா அஜய். அந்த பத்திரம் எல்லாமே லீகலா இருந்தாலும் அது முழுக்க முழுக்க அந்த வைபவ் பண்ணுன பிராட் வேலைன்னு நமக்கு தெரியும். ஆனா கோர்ட்டுக்கு உண்மையை விட ஆதாரம் தான் வேணும். அது நம்ம கிட்ட இல்லையே அஜய்.” என்றார்.
“அதை கண்டுபிடிக்க தானே அங்கிள் உங்க லா பெர்ம்க்கு இத்தனை வருஷமா பணம் கொடுத்துகிட்டு இருக்கேன். எனக்கு தெரிஞ்சதை சொல்றதுக்கு நீங்க எல்லாரும் எதுக்கு அங்கிள்?” கோபத்தின் விளிம்பில் அஜய் கத்த,
“அஜய் பிரச்சனை புரியாம பேசுற. இந்த முறை அந்த வைபவ் கேசை இழுக்க விடவே மாட்டான். வாய்தா கேட்க வாய்ப்பே இல்ல. அங்க இருக்கறவங்களை நாம இடம் மாத்தியே ஆகணும். இந்த தடவை தீர்வு வந்தாலும் நாம அப்பீல் பண்ணி பார்க்கலாம்.” என்று அவனை சமாதானம் செய்ய முயன்றார்.
“அங்கிள் அவங்களுக்கு அந்த இடத்தை கொடுத்து நாற்பது வருஷத்துக்கு மேல ஆகுது. அவங்க குடும்பமா அங்கேயே இருந்துட்டு வர்றாங்க. இப்ப திடீர்னு போக சொல்றது சரியில்ல அங்கிள். அதுலயும் அவன் கிட்ட நிஜமா நாம இடத்தை குடுத்திருந்தா பரவாயில்ல. அந்த ஆகாவழி நம்மளை ஏமாத்திட்டான் அங்கிள். இப்ப நாம தீர்ப்பு வரட்டும்னு விட்டா அவன் மொத்தமா ஜெயிச்சுட்டது போல ஆட ஆரம்பிச்சிடுவான்.” அஜய்க்கு சொல்லும்போதே அந்த வைபவ்வை துவம்சம் செய்து விடும் ஆத்திரம் அவன் குரலில் தெரிந்தது.
“அஜய் கோவத்தை விடுப்பா. எப்படியாவது இதை சரி பண்ணிடலாம். அபிதா எப்படி இருக்கா?” என்று அவனது கோபத்தை குறைக்க அவர் பேச்சை மாற்றினார்.
ஆனால் அது அவன் கோபத்தை மேலும் அதிகப்படுத்தியதை அவர் அறியவில்லை.
“அங்கிள் நீங்க இந்த கேஸ் வேலையை பாருங்க. அந்த குடும்பங்களை காப்பாத்துங்க. என் குடும்பத்தை அப்பறம் விசாரிக்கலாம்.” வந்த எரிச்சலுக்கு படபடவென திட்டிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டான்.
அவளை மறக்க அவன் வேலையை கையிலெடுக்க, அதிலும் அவள் பற்றிய பேச்சா? கோபத்தை தாண்டி வருத்தம் வந்தது அவனுக்கு.
மூன்றாண்டுகள். அவனுக்காகவே இருந்தாளே! அவனது ஒவ்வொரு முடிவுக்கும் பக்கத்துணையாய் வந்தாளே! இன்று தன்னைக் காணக் கூட விருப்பம் இல்லாமல் போவதெல்லாம்… நினைக்கவே அவனுக்கு நெஞ்சம் வலித்தது.
தலையை உதறிக்கொண்டான். இன்னும் மூன்று நாட்களில் இன் பிரச்சனைக்கு முடிவு கொண்டு வர வேண்டும். அதுவரை அவளை நினையாதே மனமே என்று எண்ணிக் கொண்டு ரஞ்சித்தை தன் அறைக்கு வருமாறு அழைத்தான்.
“சொல்லுங்க அண்ணா” என்று அமைதியாக வந்து நின்றவனிடம்,
“அந்த வைபவ் அப்பாயின்ட் பண்ணி இருக்கற லாயர், அவங்க மொத்த ஆபீஸையும் தூக்கு. இன்னும் நாலு நாள் அவங்க நம்ம கஸ்டடில தான் இருக்கணும்.” என்று தீவிரமாகக் கூறினான்.
“அண்ணா. அத்தனை லாயரையும் தூக்கினா பிரச்சனை வரும் அண்ணா.” என்று ரஞ்சித் விளக்க முயல,
“கடைசி நேரத்துல அவங்களை வர விடாம பண்ணி இந்த முறை வாய்தா வாங்க தான் யோசிச்சேன். ஆனா அவன் வேற வக்கீல் வச்சு ஜட்ஜ்மெண்ட் வாங்கிட்டா என்ன பண்றது? என்னால ரிஸ்க் எடுக்க முடியாது ரஞ்சித். அவங்களை நம்ம கைபிடியில வை. அவங்க கண்டிப்பா நேரத்துக்கு வருவாங்கன்னு அவன் நம்பனும். அந்த மாதிரி அப்பப்ப அவங்களை மிரட்டி அவனோட பேச வச்சு தான் ஏமாத்தணும்.”
“நாம ஏமாத்தணுமா அண்ணா?” என்றான் உள்ளே போன குரலில்.
“ஆமா ரஞ்சித். அவன் நம்மளை ஏமாத்தல? இந்நேரம் நானும் அபியும் சந்தோஷமா வெளிநாட்டுல வாழ்ந்துகிட்டு இருந்திருப்போம். அதுக்கு தானே நான் அவ்வளவு ஆசைப்பட்டேன். எத்தனை வருஷ கனவு அது. கையில கிடைச்ச அற்புதமான வேலைக்கு என்னை போக முடியாம செஞ்சு, இன்னிக்கு அபியும் என்னை விட்டு விலகி போக அந்த நாய் தானே காரணம்! அவனை ஏமாத்தலாம் ரஞ்சித். அதுல எந்த தப்பும் இல்ல.” அஜய்யிடம் கோபத்தைத் தாண்டி வெறி தெரிந்தது.
ரஞ்சித்தின் அவனது மனநிலையை புரிந்து கொள்ள முடிந்தது. சிறு வயது முதல் அவனுடன் வளர்ந்தவன் தானே! அந்த வேலையை அஜய் எவ்வளவு எதிர்ப்பார்த்தான், அதை கிடைத்த போது எப்படி கொண்டாடினான் என்று அருகிலிருந்து கண்டவன் தானே! அந்த வைபவ்… அவன் மட்டும் இல்லா விட்டால் இந்த நேரம் பலர் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்திருக்கக் கூடும்.
ஒருவன் வந்து அனைவர் நிம்மதியையும் பறித்து விட்டான். அவனை பழி வாங்க வேண்டும் தான். ஆனால் அஜய் சொல்வது போல வக்கீல்களை கடத்துவது அத்தனை சுலபமான காரியம் அல்லவே!
அவன் சிந்தனையில் இருக்கக் கண்டு, “என்ன அவன் லாயர் ஆபிஸ்ல சீனி லாயர் சேர்த்து ஆறு பேர் இருக்காங்களே எப்படி கடத்த முடியும்னு யோசிக்கிறியா?” என்று அஜய் வினவ,
“ஆமா அண்ணா பிசிறு இல்லாம செய்யணும். இல்லன்னா மொத்த பிளானும் போயிடும்.” என்று ரஞ்சித் பின் தலையைக் கோதிக்கொண்டான்.
“ஏதாவது ஆபிஸ்ல இருந்து கன்சல்டேஷன் பண்ண அவங்க லாயர்களை வர சொல்லு. நீ கொடுத்து அட்ரசுக்கு போகறதுக்கு முன்னாடியே நீ அவங்களை தூக்கிடு. மறுபடி போன் பண்ணி ஆட்கள் வரலன்னு சொல்லி சொல்லியே கடைசி ஆள் வரைக்கும் நம்ம இடத்துக்கு தூக்கிட்டு வா. பெருசா தெரியும். ஆனா சின்ன பிளான் போதும்.” என்றான் தலையை அழுத்தமாக பிடித்தபடி.
ரஞ்சித் அங்கிருந்து கிளம்பிச் சென்றதும் டேபிளில் இருந்த புகைப்படத்தை நோக்கினான் அஜய்.
அவர்கள் திருமணத்தின் போது எடுத்துக் கொண்ட படம் அது. அதில் அவள் தான் பச்சை வண்ணப் பட்டுப் புடவையில் பளிச்சென்று சிரித்துக் கொண்டிருப்பாள். அவன் முகத்தில் எந்த பாவத்தையும் காட்டாமல் அமைதியாக இருப்பான்.
அவன் திருமணம் இப்பொழுது வேண்டாம் என்று சொன்ன போது அதனைக் கேளாமல் பிடிவாதமாக நின்று அவள் அன்னையின் சொல்லையும் மீறி அவனை மணந்து கொண்டவள்.
அவனையும் அறியாமல் பெருமூச்சு ஒன்று வெளியானது.
இவன் நிலைமை அவளை எண்ணி எண்ணி நோவது என்றால் அங்கே அவளோ அவளது அன்னைக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள்.
“சொல்ல சொல்ல கேட்காம போய் கல்யாணம் பண்ணிகிட்டதும் இல்லாம, மூணு வருஷமா பெரிய வீட்டு மருமகள்ன்னு பவுசு காட்டிட்டு, இன்னிக்கு அந்த தம்பி உன்னை பார்க்க முன் வாசல் வழியா வந்தா நீ ஏதோ கடன்காரி மாதிரி பின் வாசல் வழியா போயிருக்க?” என்று கத்திக் கொண்டிருந்தார் சாந்தா.
“அம்மா ஏன் மா கத்துற? என்னை கொஞ்ச நேரம் நிம்மதியா விடும்மா.” என்று அபிதா பாவமாகப் பேசவே,
“ஏன் நீ பேச மாட்ட? நீ உள்ள இருக்கன்னு சொல்லி அசிங்கப்பட்டது நான் தானே! நீ தான் அழகா வெளில போய் உன் நிம்மதியை தேடிக்கிட்ட போல இருக்கே!” என்று ஆற்றாமையால் அரற்றினார்.
“அவரை பார்க்க எனக்கு முடியாது அம்மா. அவர் கூப்பிட்டு என்னால போகாம இருக்க முடியாது.” என்று அவளும் எரிச்சலாக எழுந்து கத்தினாள்.
“போனா தான் என்ன? அவர் உன் புருஷன் தானே? ஏன் இப்படி கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுற? அவர் உன்னை எப்படி தேடினார் தெரியுமா?” என்று அவனை புரிந்தால் அவள் அவனுடன் சென்று வாழ்வாள் என்று சாந்தா கூற,
“எனக்கு தெரியாமலா இருக்கு? அவரால என்னை விட்டு இருக்க முடியாது. ஆனா நான் பக்கத்துல இருக்க இருக்க, அவருக்குள்ள இருந்த நல்ல புத்தியெல்லாம் விலகி அவர் தப்பு மேல தப்பு பண்ணிட்டே போகறார்.”
“ஆமா இப்ப சொல்லு அவர் தப்பு பண்றாருன்னு. நான் சொன்னேனே உன் கல்யாணத்துக்கு முன்னாடியே! அந்த பையன் இன்னொரு புது பணக்காரன் கூட சண்டை போட்டுக்கிட்டு இருக்கான். நீ சொன்னது போல அவன் வேலையை தேடி, கிடைச்சதும் வெளிநாடு போகற ஐடியால இல்லன்னு. அப்ப கேட்காம, இப்ப வந்து இப்படி பேசுற. என்ன உன்னை காப்பாத்திக்க இப்ப தான் அறிவு வருதா?” கையிலிருந்த கரண்டியை விட்டெறிந்தார் சாந்தா.
“ஐயோ அம்மா. அப்ப அவர் கிட்ட நியாயமா ஒரு காரணமும் நிதானமும் இருந்துச்சு. இப்ப அந்த நிதானம் சுத்தமா இல்ல. இப்படியே போனா நாளைக்கு அது அவருக்கு தான் ஆபத்து. நான் என்னைக் காப்பாத்திக்க விலகி போகல. அவரைக் காப்பாத்த தான் விலகி இருக்க முயற்சி பண்றேன்.” என்று கண்ணீரை துடைத்தாள்.
“இங்க பாரு. வயித்துல பிள்ளை இருக்கு. அதுக்கு அப்பன் வேணும் அது இதுன்னு சொல்லி உன்னை நான் அவர் கிட்ட போகச் சொல்லல. உனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். அவர் இல்லாம நீ கஷ்டபடுற. ஏதேதோ நினைச்சு உன்னை நீயே ஏமாத்திக்கிட்டு இங்க இருக்க. நீ அவரோட போய் ஒரு பத்து நாள் இரும்மா. அப்பவும் உனக்கு இதே நினைப்பு இருந்தா அம்மா உன்னை மறுபடி கட்டாயப்படுத்த மாட்டேன்.” என மகளை சமாதானம் செய்து மருமகன் வீட்டுக்கு அனுப்பி வைக்க நினைத்தார் சாந்தா.
“முடியாது முடியாது. அவர் ஒரு பிரச்சனைக்காக தானே வேலையை விட்டுட்டு இங்க இருக்காரு. அது முடியட்டும். அவர் பழைய குணத்தில் தான் இருக்கார்ன்னு தெரிஞ்சா தான் நான் அவரோட வாழ்றதை பத்தியே யோசிப்பேன். அது வரைக்கும் அவரை பார்க்கவே மாட்டேன்.” என்று அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டு அறைக் கதவை அறைந்து சாற்றினாள்.
மகளின் கோபம் கண்டு திகைத்துப் போனார் சாந்தா. அவள் ஏதோ அவன் மீது கோபமாக இருப்பதாக தான் சில நிமிடங்கள் முன் வரை அவர் எண்ணிக் கொண்டிருந்தார். ஆனால் மகள் மனதில் கணவன் அருகில் தான் இருந்தால் அவன் நன்றாக இருக்க மாட்டான் என்ற மெல்லிய எண்ணம் இருப்பதையும். அந்த தொழில் பிரச்சனை தான் இவர்கள் பிரச்சினையின் மூல காரணம் என்பதையும் புரிந்து கொண்டார்.
அதைக் களையாமல் தன் மகள் வாழ்க்கை சிறக்காது என்று உணர்ந்தவர் அதை சரி செய்ய ஆவன என்னவென்று சிந்திக்கலானார்.
அபி யாரை பார்க்க மாட்டேன் என்றாளோ அவனைக் காணும் சந்தர்ப்பமும் அவளுக்கு காத்துக்கொண்டிருப்பதை அறியாமல் அவனது புகைப்படத்திடம்,
‘நான் உனக்கு வேணாம் அஜய். என்னால தான் எல்லாமே! நீ மாற நான் தான் காரணம். உனக்கு இப்ப கோபம் ரொம்ப வருது. இது நம்ம ரெண்டு பேரையும் நிம்மதியா வாழ விடாது. அட்லீஸ்ட் நீயாவது நல்லா இரு அஜய்.’ என்று அவள் கண்ணீர் உகுக்க, குழப்பங்களுக்கு விடையாக அடுத்த நாள் விடியப்போவதை அவள் அறியவில்லை.

Nice 👍
யாருடா இந்த வைபவ் ? ஏன்டா எங்களை கடுப்பேத்தி, உசுப்பேத்தி, வெறுப்பேத்துறா ?
தில்லு இருந்தா ஒத்தைக்கு ஒத்தை வாடா ?
😀😀😀
CRVS (or) CRVS 2797