Amudham 2

Amudham 11

அந்த பெரிய வீட்டின் பிரம்மாண்டத்தில் ஒரு நிமிடம் அசந்து போனான் ஆதி.

“ஷிட் இந்த வீடு இன்னும் மாறவே இல்ல..” என்ற குரல் கேட்டு ஆதியின் மனது கனத்தது. வேறுயார்? எல்லாம் அவனோடு வந்த இந்த வீட்டின் வாரிசு முகிலன் தான்.

‘அரண்மனை போல வீடு, திருவிழா போல சொந்தம், இவனுக்கு என்னைக்கு தான் இதோட அருமை எல்லாம் புரியுமோ?’ மனம் சொன்னாலும் அதை அப்படியே விட்ட ஆதி, “வா முகி உள்ள போகலாம்.”

“அப்படியே இருங்க இதோ வந்துட்டேன்”, என்ற தேன் குரல் கேட்டு ஆதி அப்படியே நின்றான்.

ஆரத்தி தட்டுடன் மயில் போல ஒயிலாக நடந்து வந்தாள் கோதை.

“பாருடா என்ன வரவேற்பு உனக்குன்னு…”, என்று முகிலனை கிண்டல் செய்தான் ஆதி.

“அத்தான் நில்லுங்க”,என்று ஆதியை கை பற்றி இழுத்தாள்.

முகில் சிரித்துக்கொண்டு,”போடா உன்னை தான் கூப்பிடறாங்க.”

வேகமாய் பூங்கோதை ஆதிக்கு முன் நிறுத்தி ஆரத்தி சுற்ற ஆரம்பித்தாள்.

குடும்பம் மொத்தமும் திரண்டிருந்தது. பெரியவர்கள் இவள் எப்போதும் போல ஏதோ விளையாடுகிறாள் என்று நினைத்து அமைதியாய் கவனிக்கலாயினர்.

பெரியவர்கள் நினைப்பது போல் இன்றி அவள் ஏன் அப்படி செய்கிறாள் என்று தெரிந்த சின்னவர்கள் கூட்டம் அகிலன், அருணா,வெண்மதி,ஷியாம்,சுஜி அனைவரும் வயிற்றைப் பிடித்து சிரித்துக்கொண்டிருந்தனர்.

பின்னே ஆதி திரு திரு வென முழித்திருக்க, முகிலன் யாருக்கு வந்த விருந்தோ என்று நின்றிருக்க, நான் தான் என் அத்தானுக்கு ஆரத்தி எடுப்பேன் என்று வீட்டில் இருந்த பெரியவர்களிடம் சண்டையிட்டு, இவள் வந்தவனை விட்டு அவன் நண்பனுக்கு ஆரத்தி எடுத்தால்? பெரியவர்கள் ஒன்றும் சொல்லாமல் நின்றனர். ஆரத்தி எல்லாம் இவள் ஏற்பாடு தான்.

முகிலன் வெளியில் நெடுநேரம் நிற்க வைத்ததால் கடுப்பாகி, “வழி விடு நான் உள்ள போகணும். ஐம் டயர்ட் “, என்றிட பூங்கோதை அவனை பிலு பிலு வென பிடித்துக்கொண்டாள்.

“ஏய் உனக்கெல்லாம் நாகரிகம் தெரியாதா? 6 வருஷத்துக்கு அப்பறம் என் அத்தான் வந்திருக்காரு. திருஷ்டி சுத்துறேன். கூட தான வந்த! கம்முன்னு நில்லு.. ஆளப் பாரு தேவாங்கு மாதிரி. நீங்க வாங்க அத்தான். நான் கூட பயந்துட்டேன். எங்க அமெரிக்காக்கு போய் நீங்களும் தலமுடியெல்லாம் வளர்த்தோ இல்ல கண்ணா பின்னான்னு முடிவெட்டிட்டு கிழிஞ்ச ட்ரெஸ் போட்டு அதோ அந்த தேவாங்கு போல வருவிங்களோன்னு… நல்லவேளை அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல . ஏன் அத்தான் உங்களுக்கு எதுக்கு இந்த தேவாங்கோட பிரெண்ட்ஷிப்? கட் பண்ணி விடுங்க. இல்லனா உங்களையும் தப்பா நினைப்பாங்க.”, என்று மனதில் நினைத்ததை எல்லாம் மடை திறந்த வெள்ளம் போல ஆதியின் கை பிடித்துப் பேசிக்கொண்டிருந்தாள்.

இதை கேட்ட சிறியவர்கள் தரையில் உருண்டு உருண்டு சிரிக்க ஆரம்பித்தனர்.

அதுவரை நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்திருந்த முகிலன் இவள் பேச்சில் கடுப்பாகி கோபத்தில்,”வில் யு ஷட் அப்”, என்று கத்திவிட்டு வீட்டிற்குள் சென்றான்.

அவனைத் தொடர்ந்து பெரியவர்களும் உள்ளே சென்றனர்.

கோதை குழப்பத்துடன் ஆதியை கேள்வியாய் பார்க்க, அவன் இன்னும் அந்த திரு திரு முழியை விடாமல், மெதுவாய் அவள் கைகளில் இருந்த அவன் கையை உருவி,

“அது என்னன்னா… நீங்க தப்பா நெனச்சுட்டிங்க.”

“அட என்ன அத்தான் நீங்க. என்னை போய் நீங்கன்னு மரியாதையா கூப்புடுறீங்க. நான் உங்க கோதை அத்தான் மறந்து போச்சா. அவன் வேகமா போறதுக்கெல்லாம் நான் தப்பா நினைக்க மாட்டேன் அத்தான். அவன் கிடக்கிறான் தேவாங்கு.”

அதற்கு மேல் பொறுக்க முடியாத ஆதி,”இல்லைங்க அவன் தான் உங்க அத்தான் முகிலன். நான் அவனோட ரூம்மேட் ஆதிலிங்கேஸ்வரன்.”

கோதை அப்படியே தரையில் அமர்ந்து தலையில் கை வைத்தாள்.

அவளுக்கு விஷயம் தெரிந்தவுடன், அவளை சிறுசுகள் ரௌண்ட் கட்டிக்கொண்டு,

“எப்படி? எப்படி? நீங்க தான் உங்க அத்தானுக்கு ஆரத்தி எடுப்பிங்க… நல்லா எடுத்தியே உன் அத்தானுக்கு ஆரத்தி… அவரு தேவாங்கா? இதுக்குத்தான் படிச்சு படிச்சு சொன்னோம் அவன் வீடியோ சேட் பண்ணும் போது வா வந்து பாரு, அவன்கிட்ட பேசுன்னு. அப்பல்லாம் இவ நம்மகிட்ட என்ன சொன்னா? என்ன சொன்னா? ஹான்… சின்ன பிள்ளைல அத்தானை பார்த்தது. நான் ஊர்ல படிச்சதுனால அத்தான பார்க்கவே இல்ல, நான் வந்தப்போ அத்தான் பாரின் போயிட்டாரு. நான் என் அத்தான நேர்ல தான் பார்ப்பேன். எப்பா… என்னா வாயி…”, என்று அவளை அகிலன் ஓட்ட…

ஷியாம்,” அது எப்படி டீ எங்க அத்தான் என்ன பார்த்ததும் அப்டியே திகைச்சு போய்டுவாரு… நான்லாம் அவரை அப்டி வெல்கம் பண்ணுவேன் அப்படின்னு… என்ன ஒரு பில்டப்பு….”.

அருணாவும் அவள் கோலம் கண்டு “அதானே செய்யறதெல்லாம் செஞ்சுட்டு இப்போ என்ன பீலிங்…” என்றிட அந்த இடமே அவர்கள் சிரிப்பில் அதிர்ந்தது.


4 thoughts on “Amudham 2

  1. அச்சோ .. பாவம் நம்ம பூங்கோதை, ரொம்பவே நொந்து நூடூல்ஸ் ஆகிட்டா போல. இதுக்குத்தான் சொல்றது ஓவர் கான்ஃபிடன்ஸ் உடம்புக்கு ஆகாதுன்னு.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!