Adhigara 17

Adhigara

தன்னிடம் நீரூபன் பேசிய விஷயங்களை அசை போட்டபடி கட்டிலில் அமர்ந்திருந்தாள் அஞ்சனா.

தம்பி மேல் அவளுக்குப் பாசம் இருக்கும் அளவுக்கு பொறாமையும் இருப்பது அவளுக்கே தெரிந்த ஒன்று தான்.

நாகரத்தினம் இந்த வீட்டில் நுழைந்தபோது அவரைத் தாயாக அல்ல ஒரு பணியாளர் அல்லது ஆயா என்ற நிலையில் கூட வைத்துப் பார்க்க மனம் வராமல் அவள் தவிக்க, அவனோ பிறந்த சில மாதங்களே ஆன குழந்தை என்பதால் இயல்பாக அவரோடு ஒன்றிக் கொண்டான்.

அரசியல்வாதியின் மகள் என்று தெரிந்ததால் பள்ளி கல்லூரியில் பலர் அவளிடம் நட்பு பாராட்டுவது போல இருந்தாலும் அதில் ஒட்டுதல் இல்லாத தன்மையை அவள் உணர்ந்திருக்கிறாள். ஆனால் அவனுக்கு அப்படி அல்ல. உயிர் கொடுக்கும் அளவுக்கு நட்புகள் அவனிடம் உண்டு.

அவள் ஒரு விஷயத்தை இப்படிச் செய்யலாமா என்று யோசிக்கும்போது அதனை செய்து முடித்துவிடும் வேகமும் திறமையும் அவனிடம் இருந்தது.

அவளுக்கு ராக்கேஷ் மேல் காதல் என்றெல்லாம் ஏதுமில்லாமல் இருக்கலாம். ஆனால் கணவனாக அவன் அவளிடம் இதுவரை எந்த விதத்திலும் எல்லை மீறியோ அவளுக்குத் தெரியாமலோ செய்ததில்லை. இன்றைய நிலையில் தந்தைக்குப் பின் அவள் அதிகம் பழகும், பேசும் ஒரே ஆள் அவன் தான். இப்பொழுது அவன் மேல் தம்பி கூறும் மொட்டையான குற்றச்சாட்டுகள் அவனது நம்பகத்தன்மையை பரிசோதித்துப் பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தது.

அவள் அந்த சிந்தனையில் அமர்ந்திருக்க, இரவு உடைக்கு மாறி ராக்கேஷும் அங்கு வந்து சேர்ந்தான்.

அவளது பர்பிள் நிற இரவு உடையைக் கண்டவன் விட்ட பெருமூச்சில் வெப்பம் சற்று அதிகம் இருந்தது.

இயற்கையாக அவர்கள் இருவரும் இணைந்து கருத்தரிக்க வாய்ப்பு மிக மிகக் குறைவு என்று எப்பொழுது மருத்துவ அறிக்கை வந்ததோ அன்றில் இருந்து அறையைப் பகிர்ந்து வாழ்பவர்கள் போலத் தான் இருவரும் வாழ்ந்து வருகின்றனர். அதிலும் ராக்கேஷ் சற்று ஆசையுடன் நெருங்கினால் உடனே அஞ்சனா ஒதுங்கிச் சென்று விடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள்.

இன்று மட்டும் என்ன பக்கத்தில் விடவா போகிறாள்? என்று எண்ணத்தில் மெத்தையின் ஒருபுறத்தில் படுத்துக் கொண்டான்.

அவனை கவனித்த அஞ்சனா, “ராக்கி” என்று அழைக்க,

அதிசயமாக அழைக்கும் அவளை அப்படியே பார்த்தபடி எழுந்தவன்,

“என்ன அஞ்சு?” என்று ஆர்வமாக அருகே வந்தான்.

“இல்ல நாம இப்பல்லாம் தனிப்பட்ட பேச்சே பேசுறது இல்லைல?” என்று சோர்வாக வினவியவளிடம்,

“என்ன பண்றது நீ கட்சி, மகளிர் அணின்னு பிஸியா இருக்க. நானும் காண்ட்ராக்ட், ஆடிட்டர் ஆபிஸ்ன்னு ஓடிக்கிட்டே இருக்கேன். எங்க பேச நேரம் இருக்கு?” என்று நெருங்கி அமர்ந்தான்.

மெல்ல அவன் தோளில் சாய்ந்தவள், “உனக்கு இந்த வாழ்க்கை போர் அடிக்கலயா? நீ படிக்கும்போது நிறைய கனவெல்லாம் வச்சிருக்கேன்னு சொல்லுவ. இப்ப அது எதையும் செய்யாம என் அப்பா சம்மந்தப்பட்ட பிஸ்னஸ் எல்லாம் கவனிச்சு, கணக்கு பார்த்து, கட்சி வேலை செஞ்சு.. சலிப்பா இல்ல?” என்று கேட்க,

அவனோ, “உனக்காக தானே இதெல்லாம் அஞ்சு. நான் எதுவுமே செய்யலன்னாலும் யாரும் கேட்க மாட்டாங்க. நீ எனக்கு சாப்பாடு போட மாட்டியா என்ன? ஆனாலும் உனக்காக தான் இதெல்லாம் தேடித் தேடி செய்யறேன் அஞ்சு.” என்று பேச்சைத் தொடர,

கல்லூரி நேரத்தில் இருவரும் பேசிக் கொண்டதெல்லாம் இருபது வருடங்களுக்குப் பிறகு அவர்களுக்கு நினைவில் ஆடியது.

என்றும் இல்லாமல் இன்று ஏன் இவள் இப்படிப் பேசிக்கொண்டிருக்கிறாள் என்று ராக்கேஷின் நரி மூளை உள்ளே குடைந்து கொண்டிருக்க, காலையில் அவள் தம்பியை பார்த்து இடத்தை பற்றி கேள்வி கேட்கச் சென்றது நினைவுக்கு வந்தது.

‘என்னவோ ஏத்தி விட்டிருக்கான். அதான் இவ நமக்கு தூண்டில் போட்டு பார்த்துட்டு இருக்கா. விஷயம் இருந்தா மட்டும் உஷாரா இருக்குற ஆளு நான் இல்லன்னு இவனுங்களுக்கு தெரியல. எப்பவுமே ராக்கி உஷார் பார்ட்டி டா.’ என்று மனதில் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டான்.

அப்போதே மறுநாளுக்கான திட்டங்களை தீட்டத் துவங்கி இருந்தான்.

காலையில் எழுந்தவன் இரவில் முடிவு செய்தபடி கிளம்பி வெளி வேலைகளை முடித்துக் கொண்டு கட்சி அலுவலகத்துக்குச் சென்றான்.

எப்பொழுதும் காலை பத்து மணிக்கே வந்துவிடும் திருமூர்த்தியும் அஞ்சனாவும் வேறு வேலையாக வெளியே சென்றிருக்க, இது தெரியாமல் நேராக அவரை சந்திக்கும் தனி அறைக்கு வந்து சேர்ந்தான் ராக்கேஷ்.

அவனிடம் அவர் இல்லை என்று சொல்ல வந்த தொண்டர்களை அவன் கண்டுகொள்ளாமல் வந்திருக்க, காலி அறையைக் கண்டு திகைத்தான்.

பின்னாலேயே வந்த ஒரு தொண்டர், “சார் ஐயா இன்னிக்கு சட்டசபைக்கு போய் கையெழுத்து போட்டுட்டு யாரையோ பார்த்து பேசிட்டு மதியம் தான் வருவாருங்க. இதை சொல்ல தான் கிரவுண்ட் ஃப்ளோர்லயே உங்களை கூப்பிட்டேன்.” என்று தயங்கித் தயங்கி கூறினான்.

“சரி நீங்க போங்க. நான் போன் பண்ணி பேசிட்டு கிளம்பிக்கிறேன்.” என்று அங்கிருந்த பார்வையாளர்கள் அமரும் சோஃபாவில் அமர்ந்து செல்போனில் ஏதோ பார்க்க ஆரம்பித்துவிட்டான் ராக்கேஷ். இதற்கு மேல் இங்கே நிற்க முடியாது என்று அந்த தொண்டர் கதவை மூடிவிட்டுச் செல்ல,

அவன் எப்பொழுது இங்கே வந்தாலும் சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் சிங்கம் போல அந்த சிவப்பு நிற சோஃபாவை அடைத்துக் கொண்டிருக்கும் மாமனார் இல்லாதது அவ்விடத்தை தான் நிரப்ப வேண்டும் என்ற அவனது பலநாள் கனவுக்கு உயிர் கொடுத்தது.

மெல்ல எழுந்து அந்த சோஃபாவின் அருகில் சென்றான்.

மேலே இருந்த மூத்த தலைவர்கள் படங்களும், அதில் இருந்த ரோஜா மாலையும் ஏனோ அவ்விடத்தை பெருமைக்குரியதாகத் தோன்ற வைக்க,

அந்த சிவப்பு சோஃபா அவன் கண்களுக்கு முதலமைச்சரின் அரியாசனம் போலவே காட்சியளித்தது.

அதனை மெல்ல வருடும்போதே பதவியின் காரணமாக கிடைக்கும் அதிகாரமும், பலமும் அதில் நிறைந்து, அவை அவன் கையில் தட்டுப்படுவது போன்ற மாயத் தோற்றம் ஏற்பட்டது.

அந்த பஞ்சாலான இருக்கையே இந்த அளவுக்கு போதை தருவதாக இருந்தால், அதில் அமர்ந்து ஆட்சிசெய்வது, எத்தகைய போதையை தரவல்லது என்று எண்ணும்போதே மூக்கின் நுனியில் பூசிக்கொள்ளும் அந்த வெள்ளைத் தூளின் போதையை விட ஆயிரம் மடங்கு பெரியது என்றது அவனது மதிமயங்கிய மூளை.

அதன் நடுவில் அமர்ந்து கைகளை இருபக்கமும் படற விட்டு கால் மேல் கால் போட்டு அமர்ந்தான்.

அவன் ஏதோ மலையின் மீது இருப்பது போலவும் சுற்றி இருப்பவை மடுவைப் போல எண்ணங்கள் தோன்ற, தேகம் சிலிர்த்தான்.

எப்படியாவது இந்த பதவியும் அதன் அதிகாரமும் தன் கைப்பிடிக்குள் கொண்டு வர வேண்டும் என்று அவனுள் கட்டுக்கடங்காத ஆசையும் வெறியும் கூடியது. அது அவன் கண்களில் கூத்தாடியது. இந்த நொடி அவனை யாரேனும் பார்த்திருந்தால் கண்டிப்பாக இத்தனை வருடம் அவர்கள் சந்தித்த ராக்கேஷ் அவன் தானா என்ற ஐயமே கொண்டிருப்பர்.

ராஜ தோரணையில் அவன் அமர்ந்திருக்க வெளியில் ஏதோ சத்தம் கேட்கவும் பதறி எழுந்து பார்வையாளர் இருக்கைக்கு மாறினான். ஆனால் யாரும் உள்ளே வரவில்லை.

அவன் மனம் அவனைக் காறி உமிழ்ந்தது. இருபது வருடம் அஞ்சனாவோடு பழகி இருக்கிறான். அவளை கரம் பற்றி பதினாலு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனால் அவள் தந்தைக்கு சொந்தமான ஒரு சோஃபாவில் அமரக் கூட அவனுக்கு உரிமை இருக்கவில்லை.

நினைக்க நினைக்க நெஞ்சில் வஞ்சம் வளர்ந்தது.

இன்று அவரை சந்திக்க முடியாமல் போனதை எண்ணி எரிச்சலுடன் அங்கிருந்து புறப்பட்டான்.


பண்ணைக்கு அதிகாலையே சென்று மேற்பார்வையை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்து தயாராகி அலுவலகம் வந்து விடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தான் நீரூபன்.

அன்று வசீகரனை தன் அலுவலகம் வரச் சொல்லி இருந்ததால், சற்று முன்னதாகவே வந்து தன் பணிகளை அவன் கவனித்துக் கொண்டிருக்க,

ஆனந்த் பணியில் சேர்ந்துவிட்டதாக தகவலளித்த மணீஷ் அவனது படிப்புக்கான ஸ்காலர்ஷிப் ஃபார்ம்களை நீரூபனிடம் கொடுத்துவிட்டுச் சென்றான்

அனைத்தையும் சரிபார்த்து கையொப்பமிட்டவன், அதனை ஃபைனான்ஸ் டிபார்ட்மெண்ட்டுக்கு கொண்டு கொடுக்கும் வேலையை ஆனந்த்துக்குக் கொடுத்தான்.

கையில் இருந்த கோப்பைப் பெற்ற ஆனந்த்,

“சார் இது என்ன ஃபைல்ன்னு பார்த்திட்டு சந்தேகம் இருந்தா உங்ககிட்ட கேட்டுட்டு அப்பறம் கொண்டு கொடுக்கிறேன்.” என்றதும்,

“ஏன்?” என்று வினவினான்.

“இல்ல சார், அங்க ஏதாவது கேள்வி கேட்டா என்னன்னு தெரியாம எப்படி பதில் சொல்ல முடியும்? ஒருவேளை அவங்க இதில் உள்ள வேலையை தாமதமா செய்தா, நீங்க விசாரிக்க சொல்லும்போது என்னனு போய் விசாரிக்க முடியும்? இன்னைலிருந்து ஈச் அண்ட் எவெரி பிட் ஆஃப் வொர்க் என் ஃபிங்கர் டிப்ல வச்சுக்க டிரை பண்ணுறேன் சார்” என்று கூறிவிட்டு அக்கோப்புடன் அகன்றான்.

‘பரவாயில்லை, வேலைக்கு என்று வந்துவிட்டு ஓப்பி அடிக்காமல், சொன்னதை மட்டுமே செய்வேன் என்ற கொள்கை இல்லாமல் புத்தியுடன் செயல்படுகிறான். இதே போல தொடர்ந்தால் தனக்கு வேலைப் பளு குறையும்’ என்றெண்ணியவன் மனதில் மின்னலாய் வந்தாள் பூமிகா.

‘இவனோட தானே சுத்திட்டு இருப்பா. இவன் இப்படி வேலைக்கு வந்துட்டா அவ என்ன செய்வா?’ என்று சிந்தனையுடன் எப்பொழுதும் போல சிசிடிவியில் ஒரு கண் வைத்துக் கொள்ள எண்ணி அனைத்து திரைகளையும் மாற்றி மாற்றி கண்காணித்தவன் பார்க்கிங்கை கண்டதும் திகைத்தான்.

அவனது ஜீப்பில் சாய்ந்து நின்று கொண்டிருந்தாள் அவனது எண்ணித்தின் நாயகி.

ஏதோ விழாவுக்கு கிளம்பி வந்திருப்பாள் போல. நீல நிற நீளமான கவுனில் எம்பிராய்டரி வேலைப்பாடுகள் செய்து, தலைமுடியை கொஞ்சமாக எடுத்து பின்னி, பின்னர் விரித்துவிட்டு கடைசியில் சிறு பின்னலோடு பார்க்க வித்தியாசமாக இருந்தாள்.

அவள் கண்களில் ஒரு தேடல் இருந்தது. அவளது கருவிழிகள் ஊஞ்சலாடியதை கணினி திரையில் கண்டவன் இதழ்களில் முறுவல் ஒட்டிக் கொள்ள, எழுந்து லிஃப்டை நோக்கி நடந்தான்.

வழியில் ஆனந்த் அவனைப் பார்த்து, “பைலை கொடுத்துட்டேன் சார். இன்னிக்கு மதியம் ஒரு மணிக்கு பர்சனல் மீட்டிங்ன்னு ஷெட்யூல் ஆகி இருக்கு. பிளேஸ் எங்கன்னு மென்ஷன் பண்ணல” என்று அவன் முகத்தை ஏறிட,

“என் வீட்ல உள்வங்களை பார்க்க எங்க வேணாலும் போவேன் ஆனந்த். ஒவ்வொருமுறையும் அதை உன்கிட்ட சொல்லிட்டு போக மாட்டேன். எப்ப பர்சனல் அப்படின்னு கோட் ஆகி இருக்கோ, அப்ப டிஸ்டர்ப் பண்ணாத மாதிரி நீயே விஷயங்களை ஹேண்டில் பண்ணக் கத்துக்கோ. உன்னால முடியாத சந்தர்ப்பத்தில் மட்டும் தான் எனக்கு கால் பண்ணி சொல்லணும்.” என்று தெளிவாக அவனுக்கு செயல்முறைகளை விளக்கினான்.

“இப்ப கூட பர்சனலா தான் போறேன். ஒரு வாலில்லாத வானரத்தை என் ஜீப் பக்கத்துல விட்டுட்டு வந்திருக்க இல்லையா அதை விரட்ட போறேன்.” என்று கூறிவிட்டு நகர்ந்தான்.

அவன் குறிப்பிட்ட எதுவும் புரியாமல் நின்ற ஆனந்த் பின் யோசித்துப் பார்த்து, “ஐயோ இன்னிக்கு நான் அவளை பிக் அப் பண்ணிட்டு வரவே இல்லையே! வேலைக்கு வேட்டு வைக்க வந்துட்டா வெங்காயம்” என்று திட்டிக் கொண்டே தன் வேலைகளை கவனித்தான்.

அவனால் அங்கிருந்து சென்று அவளை போகச் சொல்ல முடியாதே! இன்று அவளுக்கு நீரூபனிடம் மண்டகப்படி தான் என்று எண்ணிக்கொண்டான்.

ஆனால் அவன் எண்ணியது போல இல்லாமல் இம்முறை மண்டகப்படி வாங்கிக் கொண்டிருந்தது சாட்சாத் நீரூபன் தான்.

“ஏன் மாமா பார்ம் பக்கம் வர மாட்டேன்னு என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லத் தோணல உங்களுக்கு. மூணு நாளா வெயில்ல நின்னுட்டு வந்தேன். பாருங்க என் ஸ்கின் டோனே மாறிடுச்சு” என்று அவனிடம் அவள் சிணுங்கலாகக் கூறிக் கொண்டிருந்தாள்.

அவனிடம் கோபம் கொள்ள பூமியால் எத்தனை முயன்றாலும் முடியாது.

அவனோ அவளையே உற்று நோக்கிவிட்டு, “நீ என்ன பண்ணிட்டு இருக்கன்னு உனக்கு புரியுதா பூமிகா?” என்று கண்ணில் இருந்த குளிர்கண்ணாடியை சரி செய்தபடி வினவினான்.

அவளோ அவன் கண்களை ஊடுருவ முயன்று, “உங்களுக்கு புரியுதா மாமா? ஏன் கேட்குறேன்னா, எனக்கு புரிஞ்சு, அதுல எந்த தப்பும் இல்லன்னு தெரிந்தால தான் நான் இப்படி இருக்கேன்.”

“நீ என்னை விரும்புறது அப்பட்டமா தெரியுது மா. ஆனா நீ சின்ன பொண்ணு” என்று அவன் கூற,

தன்னை மேலிருந்து கீழ் வரை பார்த்துவிட்டு, “காலேஜ் முடிச்சு, வேலைக்கு போயி மூணு வருஷத்துக்கு மேல் ஆகுது மாமா. ஊர் பக்கம் இருந்திருந்தா, இந்நேரம் கையில ஒன்னு, இடுப்புல ஒன்னுன்னு பிள்ளையே இருந்திருக்கும்.” என்றவள் குரலில் நாணமெல்லாம் இல்லை.

“நமக்கு இடையில் எவ்வளவு வயசு வித்தியாசம் தெரியுமா?” என்றான் அவளை எப்படியாவது அங்கிருந்து அனுப்பும்போது இந்த எண்ணத்துடன் அவள் இருக்கக் கூடாதென்று.

“நேத்ரா அண்ணியை விட கொஞ்சம் சின்னவ. மாசங்கள்ல தான் இருக்கும். அவங்களே லவ் பண்ணும்போது நான் பண்ணக் கூடாதா மாமா?” என்று புருவத்தை உயர்த்தி அவள் வினவ,

“உனக்கு எப்படி தெரியும்?” என்று அவன் திகைத்த நேரம், பார்க்கிங்கில் தன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு நடந்து வந்து கொண்டிருந்த வசீகரனைக் காட்டி,

“இதோ அண்ணன் வந்துட்டார். நான் உங்க வேலை நேரத்தை தொந்தரவு செய்ய வரல. சும்மா தூரத்துல நின்னு உங்களை பார்க்க தான் வந்தேன். இப்போதைக்கு அதே எனக்கு போதும் மாமா. ஆனந்த் வேலையையும் கெடுக்க மாட்டேன் கவலைப்படாதீங்க. சீ யூ.” என்று கையசைத்து விடை பெற்றாள்.

‘இவளுக்கு நேத்ராவின் காதல் மட்டுமல்லாது, காதலனையும் தெரிந்திருக்கிறது!’ என்ற வியப்புடன் தன்னை நோக்கி வரும் வசீகரனைக் கண்டு வரவேற்பாக புன்னகை சிந்தினான் நீரூபன்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!