Adhigara 15

என். என். குளோபல் தங்க எழுத்துக்களில் மின்னியது அந்த பெயர் பலகை. இரவில் விளக்கொளியில் மின்ன தேவையான விளக்குகள் பொருத்தப்பட்டிருப்பது பகலில் தெரியாத வண்ணம் அழகாய் வடிவமைக்கப்பட்டிருந்தது.

நான்கு மாடிக் கட்டிடம் கண்ணாடியில் இழைத்தது போல வெயிலில் பட்டு பல வண்ணங்களை சிதற விட்டுக் கொண்டிருந்தது.

தன்னுடைய லேண்ட்ரோவர் காரிலிருந்து பட்டுச் சேலை சரசக்க இறங்கி வந்தாள் அஞ்சனா.

தம்பியின் அலுவலக கட்டிடம் கண்டு குளிர் கண்ணாடியைக் கழற்றி ஏறிட்டாள்.

காலையில் கட்சி அலுவலகம் கிளம்பியவளுக்கு தம்பியை பற்றிய குறுஞ்செய்தி ஒன்றை ராக்கேஷ் அனுப்பி இருக்க புரியாத பாவனையில் அதனை வாசித்தவளுக்கு கணவன் ஏன் இதனை தனக்கு அனுப்பினான் என்று புரியவில்லை.

உடனே அலைபேசியில் அழைக்க, எடுத்த ராக்கேஷ் நிறுத்தாமல் பேசத் துவங்கினான்.

“என்கிட்ட வந்து அன்னைக்கு உன் தம்பி ஸ்கூல் விஷயத்தில் இனி தலையிடாதன்னு சொன்ன, பாரு போன வருஷம் நாம வீடு கட்ட பார்த்த நிலத்தை வாங்கி அவன் ஆபிஸ் கட்டி வச்சிருக்கான். இதெல்லாம் அவன் தெரியாம தான் செய்யுறானா? நீ வேணா உன் தம்பியை நம்பு அஞ்சு. ஆனா எனக்கு என்னவோ அவன் உன்னை டார்கெட் பண்ணி இதெல்லாம் பண்ற மாதிரி இருக்கு.” என்று பொரிந்தான்.

“நாம வீடு கட்ட பார்த்த இடத்தை யாரோ கார்பரேட் கம்பெனி ஆபிஸ் கட்ட வாங்கினதா தானே சொன்ன?” என்று அஞ்சனா வினவியபோது,

“ஆமா அப்படித்தான் சொன்னான் அந்த ரியல் எஸ்டேட்காரன். ஆனா அந்த கம்பெனி கிட்ட இருந்து உன் தம்பி மூணு மாசத்துலயே வாங்கி கட்டிடத்தை முடிச்சிருக்கான். நாம கேட்டப்ப தராத கம்பெனி ஆளுங்க அவன் கேட்டதும் தூக்கி கொடுத்தாங்களா?” என்று அஞ்சனாவின் கோபத்தை தூண்டினான்.

“சரி கத்தாத ராக்கி. நான் என்னனு போய் பாக்கறேன்.” என்று வைத்தவளுக்கு தம்பி ஒரு அலுவலகம் நடத்துவதே புதிய செய்தி.

கீழே இறங்கி காருக்கு வரும் வழியில் கோவிலுக்கு சென்றுவிட்டு திருநீறை திருமூர்த்தியிடம் கொடுத்தபடி நாகரத்தினம் பேசிக்கொண்டிருப்பதை கண்டாள்.

‘எல்லாம் இந்த பொம்பள பண்ற வேலை. என் தம்பியை என்னை விட்டு தள்ளி நிக்க வச்சதே இவ தான்.’ மனம் தனது தவறுகளை அப்படியே மறைத்துக் கொண்டு பழியை அடுத்தவர் மேல் எளிமையாக சுமத்தி விடுகிறது.

“இனிமே தினமும் மதியம் தம்பி வீட்டுக்கு சாப்பிட வருவான். நீங்க வீட்ல இருந்தா அவனோட சேர்ந்து சாப்பிடுங்க.” என்ற அவரது பேச்சு இன்னும் எரிச்சலை அதிகரிக்கச் செய்தது.

அதன் பின் அவள் நேராக வந்து இறங்கிய இடம் தம்பியின் அலுவலகம் தான்.

குளிர்க்கண்ணாடி கழற்றி அதனை உற்று நோக்க நேர்த்தியான அதன் கட்டுமானத்தில் தம்பியின் திறமை நிறைந்த முகம் வந்து போனது.

‘இவன் மட்டும் என் சொல் பேச்சு கேட்டு நடந்திருந்தா, இந்நேரம் எல்லாமே என் கைக்குள்ள இருந்திருக்கும்.’ என்று பெருமூச்சு விட்டாள்.

நேராக ரிசப்ஷன் நோக்கி அவள் நடக்க, தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த ரிசப்ஷனிஸ்ட் எழுந்து வணக்கம் கூறினாள்.

தலையசைத்துவிட்டு நடந்தவளுக்கு தன்னை இவர்களுக்கு தெரிந்திருக்கிறது என்பதை விட எந்த கேள்வியும் இல்லாமல் அவளை உள்ளே செல்ல அனுமதித்தது ஆச்சரியமாக இருந்தது.

இதற்கு ஒரு காரணம் தான் இருக்க முடியும். குடும்பத்தினர் வந்தால் எந்த தடையும் இல்லாமல் உள்ளே விட அவர்களது நிறுவன உரிமையாளர் அறிவுறுத்தி இருக்க வேண்டும்.

அதனை எண்ணிக்கொண்டு உள்ளே சென்றவள் பல பிரிவுகளில் பணியாளர்கள் வேலை செய்வதை கவனித்தபடி நடந்தாள்.

கண்களில் அலட்சியத்தை அள்ளிப் பூசிக்கொண்டாள். தெரிந்தோ தெரியாமலோ கூட தம்பியின் முன்னே ஆச்சரியத்தை காட்டி விட முடியாது. கூடாது. அதன் பின் அவனிடம் பேச வந்தது வீணாகி விடும்.

இவளது நடவடிக்கைகளை கவனித்தபடி வந்த நீரூபன் அவளுக்கு பக்கவாட்டில் இருந்த கியூபிகிலில் சாய்ந்து கொண்டு அவளை அழைத்தான்.

“என்னக்கா எல்லாம் எப்படி இருக்கு?” கண்டிப்பாக குரலில் நக்கல் இல்லை. ஆனால் பணிவும் இல்லை.

அவனையும் அலட்சியமாக பார்த்த அஞ்சனா,”நல்லா இருக்கு. இதுக்கு நான் படிக்க சொன்னப்பவே கேட்டு வெளிநாடு போய் படிச்சிட்டு வந்திருக்கலாம்.” என்று கூற,

சின்ன சிரிப்பை உதிர்த்தவன், “வா உள்ள போவோம்” என்று அலுவல் அறைக்குள் அழைத்து வந்தான்.

“நம்ம நாட்டுல கிடைக்காத படிப்பா அக்கா. வெளிநாட்டு மோகம் என்கிட்ட இல்லக்கா. என் நாடே எனக்கு போதும். இது தான் எனக்கு சொர்க்கம்.” என்று சிரித்தான்.

“ரொம்ப அளக்காத நீரு. அவளை ஏன் அனுப்பி படிக்க வச்ச? இதையே சொல்லி இங்கேயே படிக்க வச்சிருக்கலாம்ல. எல்லாம் நம்ம வசதிக்கு சொல்றது தான்.” என்று முகத்தை வெட்டினாள்.

“என்ன செய்ய? வீட்ல ரெண்டு அரசியல்வாதியை வச்சிருக்கோம். இந்த அளவுக்கு கூட பேசலன்னா எப்படிக்கா?” என்று அவளிடமே திருப்பினான்.

“போதும் நீரு.” என்று அதட்டலாக பதில் வந்தது

“என்ன விஷயம்ன்னு சொல்லுக்கா. உன் புருஷன் என்ன சொல்லி உன்னை அனுப்பினார். ” என்று நேரிடையாக அவன் கேட்டு விட அஞ்சனா அவளை அறியாமல் அவனோ ஆச்சரியமாக நோக்கினாள்.

‘எப்படி இவனுக்கு மட்டும் எல்லாமே தெரிந்து விடுகிறது. நான் ஏன் இவன் போல இல்லை’ என்று லேசான பொறாமை உணர்வு தலை தூக்கியது.

நீரூபனுக்கு ராக்கேஷ் அவளிடம் என்ன கூறி இருக்கிறான் என்று தெரியாமல் அவனாக பள்ளியில் நடந்த சம்பவங்களோ அதற்கான தன் எதிர்வினையோ கூறிவிடக் கூடாது என்ற தெளிவிருந்தது.

தன் தமக்கை ஏதும் பேசாமல் இருப்பதைக் கண்டு,

“சொல்லுக்கா. என்ன சொன்னாரு என் அருமை அத்தான்?” என்று கேலியாக வினவ,

“இந்த இடம் நாங்க வீடு கட்ட வாங்க இருந்தது.” என்றாள் அடக்கப்பட்ட கோபத்துடன்.

“ஏன் கா கல்யாணமான இந்த பதினாலு வருஷத்துல கட்டாத வீட்டை நீங்க இப்ப கட்ட போறீங்களா? அந்த இடத்தை நான் பிடுங்கிட்டேனா? என்ன புது கதையா இருக்கு.” என்று அவனது சுழல் நாற்காலியில் அமர்ந்து தாடையில் கைகளை ஊன்றி வினவினான்.

“போன வருஷம் இந்த இடத்தைப் பத்தி ரியல் எஸ்டேட் கம்பெனி சொன்னப்ப பிளாக் பண்ண பணம் கொடுக்க ரெடியா இருந்தோம். ஆனா அதுக்குள்ள ஒரு ஐ. டி கம்பெனி இடத்தை முடிச்சுட்டதா சொன்னாங்க. இப்ப நீ இங்க ஆபிஸ் திறந்திருக்க.* என்று அவள் முறைக்க,

“அக்கா நான் இங்க கன்ஸ்ட்ரக்ஷன் ஆரம்பிச்சு, முடிச்சு, ஆபிஸ் திறந்து நாலு மாசத்துக்கு மேல ஆகுது. நான் ஆபிஸ் வந்ததும் தான் நீ வந்து இதை பத்தி கேட்டுட்டு இருக்க. உன்கிட்ட சொன்ன அதே புரோக்கர் எனக்கும் இந்த இடத்தை சொன்னான். நான் பிளாக் பண்ணினேன் முடிச்சேன். வேற யார் கிட்டயும் நான் வாங்கல.” என்று அவன் இலகுவாக பதிலளித்தான்.

“நீ ஏன் இதை என்கிட்ட சொல்லல?” என்று அவள் அதிகாரமாக வினவ,

“நீ என்கிட்ட வீடு கட்ட இடம் பாக்கறதா கூட தான் சொல்லல. நான் என்ன குழந்தை மாதிரி ஏன் சொல்லலன்னு வந்து கேட்டேனா? உன் புருஷன் உன்கிட்ட கோள் மூட்டினா உடனே என்கிட்ட ஓடி வராத. அதுல எவ்வளவு உண்மை இருக்கு. அவர் சொல்றது எந்த அளவுக்கு நம்பலாம்ன்னு நல்லா விசாரிச்சிட்டு வந்து பேசு. உன் மேல எனக்கு அன்பிருக்கு. ஆனா ஒவ்வொரு முறையும் உன்னை நறுக்குன்னு பேசிட்டு நான் தான் சங்கடப்பட்டுப் போறேன். உன் முதுகுக்கு பின்னாடி உன் புருஷன் என்ன பண்றார்ன்னு பாரு.

கட்சியவே கட்டி ஆள நினைக்கிற நீ, உன் புருஷனை சரியா கவனிச்சுப் பாரு முதல்ல.

எப்பவும் எதிரி எதிர்லயும் துரோகி பக்கத்திலும் தான் இருப்பான். உன் புருஷன் உனக்கு துரோகியா மாறிட்டு வராரான்னு கவனி.” என்றவன் தன் செல்போனை எடுத்துக் கொண்டு அவ்வறையை விட்டு வெளியேறினான்.

அவனிடம் தான் பேச வந்ததென்ன, அவன் இப்பொழுது என்னிடம் பேசிச் செல்வதென்ன? எந்தளவு இவன் வார்த்தைகளை நம்புவது? ராக்கியை அதிகம் நம்பி விட்டோமா? கேள்விகள் அனைத்து திசைகளில் இருந்து அவளை வந்து தாக்க, மூளை செயலிழந்தது போல காலியான இருக்கையை வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

தன் தமக்கை பேசியதை காற்றில் பறக்க விட்டவன் நேராக காரில் ஏறி செல்ல வேண்டிய இடத்தை டிரைவரிடம் கூறிவிட்டு தங்கையை அழைத்தான்.

“ஃப்ரீயா இருக்கியா நேத்து மா?” என்று அன்புடன் அவன் வினவியதும்,

“ஒரு டேட்டா ரிசர்ச் டீம் ஹையர் பண்ணி இருக்கேன் அண்ணா. அவங்க அனாலிசிஸ் சாப்ட்வேர் வேணும்ன்னு சொல்றாங்க. அதான் டெவலப்பர் கிட்ட பேசிட்டு இருந்தேன். சொல்லுண்ணா.” என்றவள் குரலில் சோர்வு தெரிந்தது

“அண்ணா பெரிய பர்டனை உன் தோள்ல வச்சுட்டேனா டா? உன்னை ஒரு இடத்துக்கு வர சொல்லலாம்னு கால் பண்ணினேன்.” என்றான் யோசனையாக.

“என்ன விஷயம் அண்ணா? அந்த சாப்ட்வேர் டெவலப்மெண்ட் முடிஞ்சிட்டா, இந்த டீம் அப்படியே உள்ளாட்சி தேர்தல் வேலையை பார்த்துடும். ஆனா இன்னும் கட்சி ஆபிஸ்ல நாம பேசல. எப்படி அண்ணா இந்த கேம்பெயின் நாம ரன் பண்ண போறோம்?” என்று சந்தேகமாக வினவினாள்.

“அதெல்லாம் நான் ஏற்பாடு பண்றேன். நீ கேட்ட பொலிடிகல் நாலேஜ் உள்ள ஹானஸ்ட் பர்ஸனை கண்டு பிடிச்சுட்டேன். அதான் உன்னையும் கூட்டிட்டு போகலாம்னு பார்த்தேன். நீ தான் வேலை இருக்குன்னு சொல்றியே! சரி பாரு. நான் அவர் கிட்ட பேசிட்டு ஓகேன்னா வீடியோ கால்ல வர்றேன்” என்று அழைப்பை துண்டித்தான்.

கார் அவன் சொன்னா விலாசத்தில் போய் நின்றது. சற்று பழமை வாய்ந்த கட்டிடம் என்பது பார்த்தவுடன் தெரிந்தது. வாசலில் கட்சியின் மூத்த தலைவரான மறைந்த மெய்யப்பன் ஐயாவின் படத்தை வைத்து பெரிய மாலை அணிவிக்கப்பட்டிருந்தது

அவரைப் பார்த்து அப்படியே கைகூப்பி வணங்கியவன் உள்ளே செல்ல, அந்த பெரிய ஹாலில் பளார் மேஜை நாற்காலி போட்டு அமர்ந்து காகிதங்களும் கோப்புகளும் வைத்து வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

கட்டிடத்தில் வெளிச்சம் போதுமானதாக இல்லாமல் இருக்க, நடுவில் வானம் பார்த்தது போல ஒரு சதுர இடைவெளியில் கண்ணாடி பதித்திருக்க, வெயிலின் பயனால் அவ்வறை முழுவதும் பிரகாசமான ஒளி பரவியது. அதனிடையில் சற்றே வழுக்கை விழுந்த நரைத்த தலையுடன் கொண்டிருந்தார் அந்த வெள்ளை வேட்டி சட்டை போட்ட மனிதர்.

அவரைக் கண்டதும் குரலில் உவகை சேர,

“பெரியப்பா” என்று அழைத்தான் நீரூபன். அவனை சட்டென்று திரும்பிப் பார்த்தவர்,

“வா வா நீரூபா. எப்படி இருக்க? உன்னைப் பார்த்து ஏழு வருஷம் இருக்காது? பத்து நாள் கட்சி ஆபிஸ் வந்துட்டு அப்பறம் வரவே இல்லையே!” என்று ஆரத் தழுவினார்.

“அதெல்லாம் விடுங்க பெரியப்பா. நல்லா இருக்கீங்களா? பெரியம்மா சுகமா?” என்று சேமலாபங்களை விசாரித்தான்.

வந்த விஷயத்தை பேச வேண்டிய நேரம் வந்துவிட்டதை உணர்ந்து, கட்சியின் நிலவரம், திருமூர்த்தி, அஞ்சனா, கோதண்டம் என்று வரிசையாக அவருக்கு சொல்லிக் கொண்டே வந்தவன் கடைசியாக,

“இப்ப நேத்ராவை வச்சு எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன் பெரியப்பா. அவளோட பேரும் வெளில வரக் கூடாது. இந்த கேம்பெயின் மேனேஜ்மென்ட் கம்பெனியை எங்க அப்பா கிட்ட சிபாரிசு பண்ணி, வசீகரனை அவர் கண்ணுல காட்டணும். அடுத்து தினமும் 3 மணி நேரம் உங்களுக்கு இங்கேயே வேலை இருக்கும் பெரியப்பா. அவசரமா பிரச்சனை வந்தா, அதுக்கு சந்தேகம், பதில் சொல்லத் தேவையான டேட்டா எல்லாம் மட்டும் அந்த நேரத்தை பொறுத்து வீடியோ கான்பிரன்சிங்லயோ இல்ல ஆபிஸ்க்கு நேர்ல போயோ பண்ணிக்கோங்க. பிளீஸ். எனக்காக பெரியப்பா.” என்று மிகவும் பணிவுடன் பேசினான்.

அவன் பெரியப்பா என்று உரிமையாக அழைப்பது திருமூர்த்தியின் கட்சியின் முன்னாள் தலைவரான மெய்யப்பன் ஐயாவின் மகன் முருகப்பன் என்பவரைத்தான்.

அவனது சிறுவயதில் முருகப்பன் அடிக்கடி வீட்டுக்கு வந்து போவார். அவர் தான் கைக்குழந்தையுடன் திருமூர்த்தி தவித்து நிற்பதைப் பார்த்து மனமிரங்கி அவரது வழியில் ஏழ்மையான குடும்பமும் அதே நேரம் பாசமும் அன்பும் நிறைந்த நாகரத்தினத்தை திருமூர்த்திக்கு இரண்டாம் திருமணம் நடத்தி வைத்தார்.

மெய்யப்பன் ஐயாவின் மறைவுக்கு முன்னரே அவரது அரசியல் வாரிசாக அவர் திருமூர்த்தியை அறிவித்து விட்டார். அதில் முருகப்பனுக்கு எந்த வருத்தமும் இல்லை. அவர் சாதாரணமாகவே அதனை எடுத்துக் கொண்டு கட்சிப் பணிகளில் ஒரு முக்கிய தொண்டராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். தேர்தல்களில் பங்கு கொள்ளாமல் கட்சிப் பணிகளில் மட்டுமே தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

அதனால் கட்சியில் கடைநிலை தொண்டர்கள் வரை இவர் மேல் பெரிய மரியாதை இருந்தது. இதற்கெல்லாம் சிகரம் வைத்தது என்னவென்றால் அவர் மிகவும் நேர்மையானவர்.

எந்த காலத்தில் மிகவும் நேர்மையானவரை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி இருக்கிறது கட்சிகளும் அதன் கொள்கைகளும்?

நீரூபன் உதவிக்கு முருகப்பனை நாட அவரும் தன்னால் இயன்றதை செய்வதாக அவனுக்கு வாக்களித்தார்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!