
அதிகாரம் 10
இரவில் தன் படுக்கையில் படுத்திருந்த நீரூபனின் மனதில் பல எண்ணங்களின் ஓட்டம்.
அவன் எண்ணமெல்லாம் புதிய பள்ளியின் திறப்புக்கு முன் செய்ய வேண்டிய ஆயத்தப் பணிகளைப் பற்றியே இருந்தது.
நேத்ராவிடம் வலைதள வடிவமைப்பை கொடுத்துவிட்டான். இனி பள்ளிக்கு கட்டிட மறுசீரமைப்பு, ஆசிரியர் தேர்வு, தவிர வேறு என்னவென்று மனதில் கணக்கிட்டான்.
அப்படியே உறங்கிப்போனான்.
அவன் உறங்கிய பின் அவனறைக் கதவைத் தட்டிப் பார்த்துவிட்டு உள்ளே வந்த அஞ்சனா அவன் தூங்குவதைக் கண்டாள்.

அருகே சென்று அவனை உற்று நோக்கினாள். சலனமில்லாமல் உறங்கும் அவன் முகத்தில் தவழ்ந்த அமைதி அவளை பொறாமை கொள்ளச் செய்தது.
இதே வீட்டில் திருமூர்த்திக்கு மகனாகப் பிறந்தும், ஈன்ற தாயின் அன்பில்லாமல் வளர்ந்ததும் இன்று தந்தையின் பெயரைச் சேர்க்காமல் சொன்னால் கூட அவனைத் தெரியாதோர் இல்லை எனுமளவுக்கு வளர்ந்திருந்த அவனுக்கு இதெல்லாம் தாண்டியும் நிம்மதியான உறக்கம் எப்படி சாத்தியம் என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள்.
இதே வீட்டில் பிறந்து அன்னையின் அன்பில் குளித்து தந்தையின் ஆளுமையைக் கற்றும் தன்னால் அவன் அளவுக்கு பெயர் வாங்க முடியவில்லையே என்று யோசித்துக் கொண்டிருந்த போது,
“என்னக்கா பார்த்து முடிச்சிட்டியா? இல்ல நைட் முழுக்க நின்னு பார்க்க போறியா?” என்றான் கண்களைத் திறக்காமல்.
கட்டிலுக்கு அருகில் இருந்த ரீடிங் டேபிளின் சேரை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தாள்.
அவனும் கட்டிலில் சம்மணம் போட்டு அமர்ந்து மடியில் தலையணை வைத்துக் கொண்டான்.
“உன் மனசுல என்ன ஓடுது? ஏன் இப்படி இருக்க? மாமாவுக்கும் உனக்கும் எதுவும் பிரச்சனையா?” என்றான் வரிசையாக.

“ஏன் நான் எப்படி இருக்கேன்? என் மனசுல அரசியலை தவிர ஒன்னும் ஓடாது. உன் மாமாவுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்ல. ஏன் திடீர்னு கேட்ட?” என்று அவனையே திருப்பினாள்.
“இரண்டு நாளா அவர் முகமே சரி இல்ல. இப்ப நீ வந்து இப்படி நிக்கவும் தான் கேட்டேன்.”
“அவருக்கு அந்த ஸ்கூலை வாங்க ஆசையிருந்தது. பழைய ஓனர் தர்றேன்னு சொல்லி ஏமாத்திட்டான்.” என்றாள் எரிச்சலாக.
“எனக்கு மாமா வாங்க நினைச்சது தெரியாது. தெரிஞ்சிருந்தாலும் கண்டிப்பா விட்டுக் கொடுத்திருக்க மாட்டேன். ஏன்னா அது என் ட்ரீம் பிராஜெக்ட்” என்றான் அழுத்தமாக.
“அப்படி என்ன டா ட்ரீம்? என்ஜினீயரிங் படிக்க சொன்னேன். போய் அக்ரி காலேஜ்ல சேர்ந்த. ஊருக்கு ஊரு தோட்டம், காடுன்னு மண்ணுல காசு போட்டு சுத்திட்டு இருந்த. இப்ப தான் சிட்டி பக்கத்துல ஒரே இடமா செட்டில் ஆகியிருக்கன்னு கொஞ்சம் நிம்மதியா நினைச்சேன். இப்போ ஸ்கூல் தான் ட்ரீம்னு சொல்ற? ஒரே சிந்தனையா இருக்க மாட்டியா?” கோபமாக குரல் ஓங்கிக் கத்தினாள்.
“ஏன் கா கத்துற? நான் என்ன குதிரையா? எங்கேயும் பார்க்காம கடிவாளம் காட்டினது மாதிரி ஒரே பாதையில் போக? நான் என்ன பண்ணணும்னு நீ ஏன் கா யோசிக்கிற?” என்றான் சிரிப்புடன்.
“நான் உன் அக்கா டா.” என்று கோபமாகக் கத்தினாள்.
“அக்கான்னா கவலைப்படுவியா? அப்படி ஆளா நீ? உனக்கு நான் இப்ப அந்த ஸ்கூல உன் புருஷனுக்கு கொடுக்கணும். அதுக்காக தானே என் மேல இவ்வளவு அக்கறை உள்ளவ மாதிரி பேசுற? அதுக்கு வாய்ப்பில்லை.” என்றான் நிர்தாட்சண்யமாக.
“ஏன் அவருக்கு கொடுத்தா என்ன டா? உனக்கு வேற பிஸ்னஸ் இல்லையா? ஏன் அவரோட போட்டிக்கு வர?” என்று அஞ்சனா எதிர்த்துக் கேட்க,
“உனக்கு என் மேல என்ன அபிப்பிராயம் இருக்குன்னு தெரியல. ஆனா நல்லா மனசுல ஏத்திக்கோ. நீ கேட்டன்னு தான் இப்போ வரைக்கும் அரசியல் பக்கம் வராம இருக்கேன். நீ என் அக்கா என் இரத்தம். உனக்காக விட்டுக் கொடுத்தேன். இப்போ உன் புருஷனுக்காக தொழிலை கேட்கற. போற போக்கை பார்த்தா எல்லாத்தையும் கேட்பிங்க போல. நான் என் குடும்பத்துக்கு நல்லவன் தான். ஆனா எல்லா நேரமும் நல்லவன் இல்ல. ஏற்கனவே உன் புருஷனை பத்தி வேற மாதிரி கேள்விப்பட்டுட்டு இருக்கேன். என் பக்கம் வர வேண்டாம்னு சொல்லி வை. அப்பறம் ‘என் புருஷன்… ஐயோ பாவம்’னு வந்தா அக்கான்னு கூட பார்க்க மாட்டேன்.” சொன்னவன் குரலை சற்றும் உயர்த்தவில்லை. ஆனால் அஞ்சனாவின் உடலில் மெல்லிய பயம் சிலிர்த்தது. முதுகுத்தண்டு குளிர்ந்தது.
கணவன் இரண்டு நாட்களாக புலம்பியதால் தம்பியை அதட்டினால் ஒருவேளை பள்ளியைக் கொடுத்து விடுவான் என்று எண்ணி வந்தது முட்டாள்த்தனமாக இப்பொழுது தோன்றியது.
அவள் வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருக்கக் கண்டவன், “பேச வேண்டியதை பேசியாச்சுன்னா கிளம்புக்கா நான் தூங்கணும்.” என்று நீட்டிப் படுத்து நெற்றியில் வலது கை கொண்டு முகத்தை மறைத்தான்.
எழுந்து வெளியே வந்தவள் தன் அறைக்குள் நுழைய,
“அவன் எப்ப ரெஜிஸ்டர் பண்ணித் தர்றதா சொன்னான்?” என்று ஆர்வமாக வினவிய கணவனைக் கண்டு எரிச்சல் அடைந்தாள்.
“இத்தனை நாளா மனசுல திட்டினாலும் வெளில மரியாதையா பேசிட்டு இருந்தான். அந்த ஸ்கூலை கேட்டு இப்ப மூஞ்சிக்கு முன்னாடி மிரட்டுறான். எனக்கு இந்த அவமானம் தேவையா?” என்று ராக்கேஷின் சட்டையைப் பற்றி உலுக்கினாள்.

“அவன் அப்படி செய்தா என்கிட்ட ஏன் கோவப்படுற? உங்க அப்பா கிட்ட போய் சொல்லு” என்று அவள் கையை எடுத்துவிட்டு சட்டையை உதறினான்.
“ஏய் ராக்கி. அஞ்சனாவை நீ என்ன நெனச்ச? சின்ன பிள்ளை போல அப்பா கிட்ட கோள் சொல்ல சொல்றியா?” என்று சண்டைக்கு நின்றாள்.
“நமக்கு காரியம் ஆகணும்ன்னா எதுனாலும் செய்யலாம் அஞ்சனா. நான் என் சர்கிள்ல அந்த ஸ்கூலை வாங்கப் போறதா சொல்லிட்டேன். இப்ப அதை இவன் வாங்கி நாலு பேருக்கு அந்த விஷயம் தெரியும் முன்னாடி அது என் கைக்கு வரணும். இல்லன்னா எனக்கு அவமானம்.” என்றான் முகத்தில் வன்மம் தாங்கி.
ஏற்கனவே இருந்த கோபம் அவனது வார்த்தையில் அவளுக்கு வெறியாக மாறியது. வார்த்தைகள் எந்த தடுப்புக்கும் நிற்காமல் மடையை உடைத்துக் கொண்டு வெளியேறியது.
“என்ன அந்த ஸ்கூல் உனக்கு கிடைக்கலன்னா அவமானமா? நேத்து லேடீஸ் கிளப் போனப்ப இன்னும் குழந்தை இல்லையான்னு கேட்ட ஒருத்தி உன் புருஷன் ஆம்பளையான்னு கேட்டா? அதையும் உன்கிட்ட சொன்னேன். அப்ப உனக்கு அவமானமா இல்லையே!” என்று எங்கு குத்தினால் ராக்கேஷ் அடங்குவானோ அங்கு அடிக்க நினைத்தாள்.
ஆனால் இம்முறை அவள் வாய்ஜாலம் வேலை செய்யவில்லை. மாறாக,
“சொன்ன அவளை வரச் சொல்லு. நான் ஆம்பளையா இல்லையான்னு அவகிட்ட காட்டுறேன்.” என்று வெறியோடு கூறியவன் அடுத்த நொடி கையை கன்னத்தில் தாங்கி நின்றான்
அஞ்சனா அவன் கன்னம் பழுக்க ஒரு அறை வைத்திருந்தாள்.
“இந்த திமிரு பேச்செல்லாம் என்கிட்ட வச்சுக்காத ராக்கி. அடிச்சு துரத்திடுவேன். நீ இந்த அஞ்சனா புருஷனா இருக்கறதால தான் உனக்கு மதிப்பு. மத்தபடி நீ ஒரு ஜீரோ. உன் ஆம்பிளைத்தனத்தை இதோ இங்க என்கிட்ட காட்டி, ஒரு குழந்தையை கொடுக்க பாரு. இந்த வாய்பேச்சு உனக்கு நல்லதில்லை.” என்று கூறிவிட்டு அறையின் பால்கனியில் போய் நின்று கொண்டாள்.
ராக்கியின் முகம் அவமானத்தில் கன்றியது. அவளுக்கு குழந்தை உருவாகாத காரணம் தனக்கு இருக்கும் குறைபாடு தான் என்று அவனுக்கும் தெரியும். அஞ்சனாவுக்கும் தெரியும். இதைப் பற்றி அவர்கள் பேசிக்கொள்வதில்லை. அதற்குக் காரணம் அஞ்சனா அதற்காக எடுத்துக் கொண்டு சிகிச்சை பலனளிக்காமல் போனதால் தான்.
இந்த பேச்சு அவர்களுக்குள் வராமல் ராக்கி கவனமாக இருப்பான். இந்த ஒரு வாரத்தில் அந்த ஸ்கூல் கைமாறியது, டெண்டர் கிடைக்காமல் போனது, அவன் ஸ்கூலை நீரூபனிடமிருந்து பறிக்க எடுத்த நடவடிக்கைகள் தோற்றது என்று அவனை நிலை இழக்கச் செய்திருந்த வேளையில் குழந்தை பற்றிய பேச்சு வளர்ந்து அவன் எதிர்பாராத நிகழ்வுகள் அரங்கேறி விட்டது.
அஞ்சனாவின் கோபம் ராக்கியின் எதிர்காலத் திட்டங்களுக்கு நல்லதல்ல. அதனால் அவள் அடித்ததை அடிமனதில் இருந்த வன்மங்களோடு சேர்த்து புதைத்து வைத்துவிட்டு எப்பொழுதும் போல் பொய்யான சிரிப்பைப் பூசிக்கொண்டு அவளிடம் சென்றான்.
“சாரி அஞ்சு. ரொம்ப சாரி. கோபத்துல வரம்பு மீறி பேசிட்டேன். என்னால நீ ஐ. வி. எஃப் ட்ரை பண்ணி எவ்வளவு கஷ்டப்பட்ட? அது தெரிஞ்சும் கோபத்துல அப்படி பேசி இருக்க கூடாது. என்னை நீ அடிச்சதுல தப்பில்ல அஞ்சு. இன்னும் ரெண்டு அடி கூட அடிச்சிடு” என்று அவள் கையை எடுத்து கன்னத்தில் அடிக்க முயற்சி செய்தான்.
“விடு ராக்கி. எனக்கும் ரொம்ப டென்ஷன். அதான் அடிச்சிட்டேன். நீ நீரூ பக்கம் போகாத. அந்த ஸ்கூல் இல்லன்னா போகுது. வேற ஸ்கூலை நாம எப்படியாவது சரிகட்டி வாங்கலாம். போய் படு.” என்று கூறி வெளியே வெறிக்க ஆரம்பித்தாள்.
அவனும் அமைதியாக அங்கிருந்து அகல்வது போலத் தெரிந்தாலும் உள்ளே அவன் வன்மம் கனன்று கொண்டிருந்தது.
‘இத்தனை வருஷத்துல என்ன கோபம் வந்தாலும் திட்டுவா, இன்னிக்கு கை நீட்டி அடிச்சிட்டா. அதுக்கு அவன் தானே காரணம். அவனை நான் சும்மா விட மாட்டேன். அந்த ஸ்கூலை எப்படி திறப்பான்னு நானும் பாக்கறேன்’ என்று உள்ளே பொருமினான்.
அன்றைய இரவு மெல்ல மெல்ல இருள் விலகி விடியலை அடையும் நேரம் நீரூபன் தாயைத் தேடி அவரது அறைக்கு வந்தான்.
முன்னே இருந்த சிறு வரவேற்பு அறையில் அன்னை தரையில் மஞ்சள் ஜமக்காளம் விரித்துப் படுத்திருக்க கண்டவன் பதறிக் கொண்டு அவரை எழுப்பினான்.

“என்னம்மா கீழ படுத்திருக்கிங்க?” என்று கேட்க,
தூக்கத்திலிருந்து விழித்த நாகரத்தினம், கண்களை கசக்கிக் கொண்டு,
“நீ ஆசைப்படுற அந்த பொண்ணு உனக்கு கிடைக்கணும்ல கண்ணு. அதான் அம்மா முருகனுக்கு நாற்பத்தி எட்டு நாள் விரதம் இருக்கேன். கண்டிப்பா ரமணி அண்ணா மனசு மாறும். அந்த பிள்ளையை உனக்கே அண்ணன் கட்டிக் கொடுக்கும் பாரு” என்று சொல்ல நீரூபனுக்கு இவரிடம் பூமிகா பற்றி சொல்லி இருக்க வேண்டாமோ என்று வருத்தம் வந்தது.
“அம்மா எனக்கு அவளை கல்யாணம் பண்ணிக்கிற எண்ணமெல்லாம் இல்லம்மா. நீங்க ஏன் உங்க உடம்பை கெடுத்துக்கறீங்க?” என்று சலுகையாக கோபம் கொண்டான்
“சும்மா சொல்லாத சாமி. நேத்து மாமா வீட்டுக்கு கொடுத்து விடுங்கன்னு நீ கொடுத்த பார்சல்ல அந்த டாலர் செயினை நான் பார்க்கலன்னு நினைக்கிறியா? அந்த பிள்ளை மேல உனக்கு மனசுல ஒன்னும் இல்லாம தான் அப்படி அழகா டாலர் வாங்கி கொடுத்தியா?” என்று கேட்க,
ஆடு திருடி மாட்டிக் கொண்டவன் போல திருதிருவென்று விழித்தான் நீரூபன்.
“அம்மா அது அப்படி இல்ல மா” என்று சமாளிக்க முயன்றான்.
“சும்மா போ கண்ணு. உன் கண்ணுல மதியமே அம்மா ஆசையை பார்த்துட்டேன். என்ன ரமணி அண்ணே சரசு அக்காவோட அண்ணனா போயிட்டாரு. அவருக்கு என்னைக் கண்டாலே பிடிக்காது. இல்லைனா நேத்தே தட்டோட அவரை தேடி போயிருப்பேன். ஆனாலும் இப்ப மட்டும் என்ன? இதோ முருகனுக்கு வேண்டி இருக்கேன் பாரு. இன்னும் நாற்பத்தி எட்டு நாள்ல அவரே பொண்ணு கொடுப்பாரு” என்று மகனுக்கு வாக்கு கொடுப்பவர் போல நம்பிக்கையாகப் பேசினார் நாகரத்தினம்.
“என் செல்ல அம்மா. அவர் எனக்கு அவளை தரலன்னாலும் பரவாயில்ல. நீங்க உடம்பை கெடுத்துக்க வேண்டாம். ஒருவேளை பூமி எனக்குத் தான்னா அவளே எனக்கு மனைவியா வருவா.” என்று ஆழ்ந்த குரலில் கூறினான் நீரூபன்.
