
அதிகாரம் 9
ஜீப்பை ஓட்டிக் கொண்டிருந்த நீரூபன் மனதில் வந்து போனாள் பூமிகா.
அவளை அவன் முதன் முதலில் பார்த்தது அவளது காது குத்தும் நிகழ்வில் தான். சிறு குழந்தையாக வெண்ணெய் கட்டி போல இருந்தவள் தலையில் முடி இல்லாது மொட்டை அடித்திருக்க, சந்தனம் பூசப்பட்ட அதனை அவ்வப்போது தடவிப் பார்த்து அழுது கொண்டிருந்தாள்.

தலைமுடிக்கே அழும் இவள் காதில் ஓட்டை போடும்போது என்ன செய்வாளோ என்று பார்த்திருந்த நீரூபனுக்கு வயது ஒன்பது. நேத்ராவுக்கும் பூமிகாவுக்கும் சில மாதங்களே இடைவெளி. தன் தங்கையை ஒத்த சிறு குழந்தையாக இருந்த பூமிகாவை அவனது தாய் மாமன் மனைவி அர்ச்சனா தான் அவனுக்கு முதலில் அறிமுகம் செய்து வைத்தார்.
“நீரூ கண்ணா, இது யார் தெரியுமா? உங்க மாமா பொண்ணு. முறைப்பொண்ணு. ” என்று அவன் கையில் கொடுக்க, அவனது சட்டை பட்டனில் விளையாடினாள் பூமிகா.
அவளுக்கு அவன் முதன்முதலில் கொடுத்த பரிசு அவளின் முன்நெற்றியில் பட்டும் படாமல் அவன் கொடுத்த முத்தம் தான்.
ஆனால் அடுத்த நொடி அவளை அவனிடமிருந்து பிடுங்கிக் கொண்டார் பாலரமணி.
“என்ன பண்ணிட்டு இருக்க அர்ச்சனா? இவனை யாரு இங்கே கூப்பிட்டது? ” என்று அவர் கோபம் கொள்ள,
“ஏங்க அவன் நம்ம மருமகன் தானே! நம்ம சரசு பையன்ங்க. சரசும் நானும் காலேஜ்ல ஒண்ணா படிச்சப்பவே என் பிள்ளையும் அவ பிள்ளையும் ஒண்ணா வளரணும்ன்னு நினைச்சோம். ஆனா என் குடும்ப சூழல் காரணமா கல்யாணம் பண்ணிக்காம இருந்தேன். நீங்க தான் தேடி வந்து சரசு உங்க கிட்ட முன்னவே என்னைப் பற்றி சொன்னதா கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்தீங்க. எல்லாத்துக்கும் காரணமான சரசு பையனை ஏன் வேண்டாம்னு சொல்றீங்க?” என்று அவர் கண்ணீருடன் வினவ,
“உனக்கு சொன்னா புரியாது. அவனும் வேண்டாம், அவங்க அக்கா, அப்பா யாரும் வேண்டாம். என் சரசே இல்லாம போன பின்னாடி இவங்க என்ன எனக்கு உறவு?” என்று பூமிகாவை தூக்கிச் சென்றுவிட்டார்.
அவனை அங்கே அழைத்து வந்தது நாகரத்தினம். அவர் சங்கடமாக அர்ச்சனாவை நோக்கி, “அண்ணி நீங்க அன்பா கூப்பிட்டப்பவே நான் சொன்னேன். ரமணி அண்ணனுக்கு எங்களை பிடிக்காது. கோபம் வரும்ன்னு. நீங்க தான் கேட்கல. விடுங்க. நாம எப்பவும் அன்பா பேசிப்போம். ஆனா அண்ணனுக்கு பிடிக்காததை செய்ய வேண்டாம்.” என்று அவனை அழைத்துக்கொண்டு கையில் நேத்ராவுடன் வீடு திரும்பினார்.
அன்று தொட்டு அவன் பூமிகா, ரமணி பக்கம் சென்றதில்லை.
அவன் எப்பொழுதும் அர்ச்சனாவோடு போனில் பேசுவான். அவரை கோவில், பொது இடங்களில் கண்டால் அவருக்கு பிடித்த பொருளாக வாங்கித் தருவான். அதோடு அவனது உறவை அவன் நிறுத்தி வைத்திருந்தான்.

ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு முன் கல்லூரி ஆண்டு விழா நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடிய பெண்ணைக் கண்டதும் இவள் பூமிகா தானே என்று தோன்ற அவளை கவனித்தவன், தன் மாமா மகள் என்றதும் பெருமிதம் கொண்டான்.
ஆனால் அன்று முதல் அவள் அவனை பின்தொடர்ந்து கொண்டிருக்கிறாள். அதனை கண்டும் காணாமல் இருந்தவன் ஒரு இடத்தில் அவளது அத்தை மகன் என்று குறிப்பிட்டு, அவளது தந்தைக்கு அவனை பிடிக்காது என்றும் குறிப்பிட்டான்.
அன்றோடு விட்டு விடுவாள் என்று அவன் எண்ண, அவளோ அன்று முதல் ‘மாமா மாமா’ என்று பசை போட்டு ஒட்டிக்கொண்டாள்.
அவள் காதல் அவனுக்கு புரியாமல் இல்லை. ஆனால் அது சாத்தியம் இல்லாதது என்று அவன் புரிந்திருந்தான்.
அவன் எண்ணங்களில் அவள் ஆட்சி செய்து கொண்டிருக்க, வாகனம் அவன் வர வேண்டிய நேத்ராவின் ஐ. டி. நிறுவனமான என்.என் இன்ஃபோ டெக் முன் நின்றது.

நேத்ரா அமெரிக்கா சென்று படிக்க வேண்டுமென்று சொன்னபோது அஞ்சனா வெகுவாக அதனை எதிர்த்தாள். ஆனால் நீரூபன் தந்தையை சரிகட்டி தங்கையைப் படிக்க அனுப்பி வைத்தான்.
படிக்கச் சென்றவள் வந்ததும் தனியே தொழில் தொடங்க வேண்டும் என்றபோதும் அஞ்சனா குறுக்கே வர,
“உனக்கு விருப்பமானதை செய் நேத்து குட்டி” என்று தங்கை தலையில் ஆதுரமாக தடவிக் கொடுத்தவன் அவள் வங்கியில் கடன் பெற வேண்டும் என்று குறிப்பிட்ட தொகையை அவனே அவளுக்கு வழங்கினான்.
“கடனுக்கு கட்டுற பணத்தை அண்ணனுக்கு கொடு.” என்று சாதரணமாக அவன் கடந்து போக, வெறியாய் உழைத்தாள் நேத்ரா.
ஆரம்பத்தில் வலைதள வடிவமைப்பு, செயலி வடிவமைப்பு என்று சிறியதாக தொடங்கிய தொழில் நாளைடைவில் விளையாட்டு செயலிக்கான தனி நிறுவனம், இந்திய கம்பெனிகளுக்கான டெலிகாலிங் சேவை செய்யும் பி. பி. ஓ என்று மூன்று ஆண்டுகளில் நல்ல வளர்ச்சியை எட்டி இருந்தது.
இதில் நீரூபன் மறைமுகமாக பல விதங்களில் உதவி இருக்கிறான் என்றாலும் உழைப்பை ஒப்பில்லாமல் கொடுத்தவள் நேத்ரா மட்டுமே.
அலுவலக கட்டிடத்தின் உள்ளே அவன் நுழைந்ததுமே அனைத்து பணியாட்களும் எழுந்து வணக்கம் சொல்ல, தலையசைத்து ஏற்றுக் கொண்டவன் கால்கள் தங்கையின் அறை நோக்கிச் சென்றது.
அங்கே கணினியின் திரையில் எதையோ கண்டபடி கையில் இருந்த டேபில் வரைந்து வடிவமைத்துக் கொண்டிருந்தாள்.

கதவை நாசுக்காக தட்டியவன் விழிகளில் தங்கை இருக்கும் இடத்தைக் கண்ட பெருமிதம் நிறைந்திருந்தது .
அந்த நேரத்தில் தன் அண்ணனை எதிர்பார்க்காத நேத்ரா ஆச்சரியத்துடன்,
“வாங்க அண்ணா. என்ன கதவெல்லாம் தட்டிக்கிட்டு?” என்று எழுந்து அவனருகில் வந்தாள்.
“ஒன்னும் இல்ல டா. ஒரு உதவி கேட்க வந்தேன்.” என்று அவன் சோஃபாவில் அமர்ந்தபடி கூற,
“வாய்ப்பே இல்ல. எனக்கு உதவி செய்ய வந்ததா சொல்லு. நான் நம்புவேன். ஆனா உனக்கு உதவி கேட்க வந்ததா சொன்னா நம்ப முடியல.” என்று சிரித்தாள்.
“இல்ல டா. இரண்டு உதவி வேணும். அதான் நேர்ல வந்தேன். ஒண்ணு உன்னோட மெயிலுக்கு இப்போ ஒரு பைல் அனுப்புவேன். அது என்னோட ஸ்கூலுக்கான ஐடியா. அதை அப்படியே வெப்சைட்டா ரெடி பண்ணிக் கொடுக்கணும்.” என்றதும்,
“இதை வீட்ல சொல்லி இருந்தாலே போதும். அதுக்காக நீ இங்க வரல. உண்மையை சொல்லுங்க அண்ணா. எதுவும் பிரச்சனையா?” என்று முகத்தை தீவிரமாக வைத்துக் கொண்டாள்.
அதுவரை சிரித்துக் கொண்டிருந்தவன், “அப்பாவுக்கு நம்ம ஹெல்ப் தேவைப்படுது நேத்து குட்டி. அவருக்கு ஐ.டி விங் சரி இல்ல. இப்போ உள்ளவங்க ரொம்ப வல்கர் வேர்ட்ஸ் எல்லாம் சோஷியல் மீடியால யூஸ் பண்றாங்க. அதைப் பாக்கற கட்சி ஆளுங்களுக்கே ரொம்ப சங்கடமா இருக்கு. அதான் நீ கொஞ்சம்..” என்று நிறுத்தினான்.
“அண்ணா அப்பாவுக்கு செய்ய நான் எப்பவும் தயங்க மாட்டேன். ஆனா அரசியலுக்கு எந்த உதவியும் செய்ய வேண்டாமே! வேற என்ன கேட்டாலும் செய்யறேன்.” என்றாள் இறைஞ்சுதலாக.
“அவருக்கு என்ன தேவையோ அதை தானே டா நாம செய்யணும். ரொம்ப வருத்தமா தெரியறார். அதை விட கட்சி கொஞ்சம் கொஞ்சமா அவர் மேல உள்ள நம்பிக்கையை இழந்துகிட்டு வருது” என்றவன் தன்னைத் தேடி கோதண்டம் வந்ததையும் அஞ்சனாவின் நடவடிக்கையையும் கூறினான்.
“இதுக்கு தான் அண்ணா நான் பயப்படுறேன். நான் அப்பா கிட்ட பேசி நீ பார்த்திருக்கியா? நான் அவர் மகளா உணர்ந்ததை விட அந்த வீட்ல உன் தங்கையா தான் எனக்கு மரியாதை கிடைக்கிறதா உணர்ந்திருக்கேன். அதுக்கு காரணம் அக்கா. இப்ப நாம அப்பாவை நெருங்கினா வீட்ல தேவையில்லாத பிரச்சனை வெடிக்கும். அம்மாவும் நான் இதை செய்யறதை விரும்ப மாட்டாங்க.” என்றாள் தெளிவாக.
“இதெல்லாம் யோசிக்காம உன்கிட்ட பேச வந்திருப்பேனா? அம்மா கிட்ட பேசிட்டேன். அப்பா கிட்டயும் பேசிட்டேன். அக்கா உன் பக்கம் வராம பார்த்துக்கறேன். எனக்கு தேவையெல்லாம் இந்த உள்ளாட்சி தேர்தல்ல அப்பா தோத்துப் போகக் கூடாது. அவர் அதுக்கப்பறம் உடைஞ்சு போயிடுவார். நாம நம்ம கடமையை செய்வோம். பலனை யாரோ அனுபவிக்கட்டும். நீ ஐ.டி சப்போர்ட் மட்டும் கொடு. அதுக்கான பேமென்ட் வாங்கிக்கோ. பிரோபஷனல் ரிலேஷன்ஷிப் தான் டா.” என்று அவள் முகத்தில் இருந்த முடியை ஒதுக்கி விட்டான்.
“புரியுது. அப்ப நான் தனியா அவரோட கட்சி ஆபிஸ் பக்கத்துல எங்காவது ஆபிஸ் ஸ்பேஸ் பார்த்து செட் பண்ணி, வேலைக்கு ரெக்ரூட்மெண்ட் முடிச்சிட்டு ரெண்டு நாள்ல சொல்றேன் அண்ணா.” என்றாள் யோசனையாக.
“உன் குட்டி மூளையை போட்டு ரொம்ப கசக்காத. ஹெல்புக்கு வசீய வேணா கூப்பிட்டுக்கோ” என்று நீரூபன் குறும்பாக சிரிக்க,
“அண்ணா நானே கேட்கணும்னு இருந்தேன். அவன் என்ன உங்களை பத்தியே பேசிட்டு இருக்கான்? லாஸ்ட் ரெண்டு தடவை அவனை மீட் பண்ணினப்ப என்னைப் பத்தி ஒரு வார்த்தை கூட பேசல. நீரூ மாமா இப்படி, அப்படின்னு உனக்கு ரசிகர் மன்றம் வச்சவனாட்டம் பேசுறான்?” என்று எழுந்து அவன் முன்னே நின்று இடுப்பில் கையூன்றி அவனை முறைத்தாள்.
“ஐயோ எனக்கும் அவனுக்கும் இடையில ஒன்னுமே இல்ல. அவன் உன் காதலன். அதான் கொஞ்சம் அன்பா பேசினேன். ஓவரா பண்றான்னா சொல்லு கையை காலை உடைச்சிடலாம்.” என்று சிரித்துக் கொண்டு கூறிய நீரூபனை முறைத்தாள் நேத்ரா.
“அவன் எனக்கு இருக்குற ஒரே ஒரு லவ்வர். அவனை ஏன் உன் பக்கம் இழுக்குற? ஒழுங்கா நீ யாரையாவது கல்யாணம் பண்ணுட்டு வா. இல்ல நான் பொண்ணு பார்க்கவா?”என்று ஆசையாக வினவினாள்.
“அதுக்கு இப்ப என்ன அவசரம், மேகமலைல ஒரு டீ எஸ்டேட் விலைக்கு வருதாம். வாங்கி கொஞ்ச நாள் குளிர்ல சந்தோஷமா இருந்து வாழ்க்கையை அனுபவிச்சுக்கிறேன். முதல்ல உனக்கும் வசீக்கும் தான் கல்யாணம்.” என்று அவளை கன்னத்தில் கிள்ளி கொஞ்சினான்.
“வீட்ல அதுக்கு இன்னும் என்னனென்ன பிரச்சனை கிளம்பப் போகுதோ?” என்று பயத்துடன் நேத்ரா கூற,
“ராக்கேஷ் மாமா நம்ம வீட்டுக்கு எப்படி வந்தார்? அவரென்ன பெரிய பணக்கார வீட்டு பையனா? அக்கா கைக்கட்டியதும் அப்பா சரின்னு சொல்லலையா? உனக்கும் வசீகரனுக்கும் கல்யாணம் பேசி முடிக்க வேண்டியது என் பொறுப்பு. அதை மறந்துட்டு நீ சந்தோஷமா இரு.” என்று அவளிடம் விடைபெற்றுக் கிளம்பினான்.
அன்றைய நாளின் அலைச்சல்கள் நிறைவு பெற்றுவிட்டனவா என்று எண்ணிக்கொண்டு வாகனத்தில் சென்றவன் வழியில் இருந்த அந்த மிகப்பெரிய நகை மாளிகையைக் கண்டு வாகனத்தை அதன் பார்க்கிங்கில் நிறுத்தினான்.

உள்ளே சென்றவன் ஒரு நெக்லஸ் செட்டும், ஒரு கைசெயினும் வாங்கிவிட்டு திரும்பும்போது, மெல்லிய சங்கிலியில் பூமிப்பந்தின் வடிவம் கொண்ட பெண்டன்ட் இருக்க கண்டு அதையும் பில் போட்டு வாகனத்தில் ஏறினான்.
இதை எப்படி ரமணி மறுக்காத அளவுக்கு அவர்களுக்கு நாளை பரிசளிப்பது என்ற யோசனையில் வீட்டிற்கு சென்றவனுக்கு இரவில் நல்ல வழி ஒன்று கிடைத்தது.
ஆனால் அது அவனை வசமாக ஒருவரிடம் சிக்க வைக்கப் போவதை அவன் அறியவில்லை.

