
அந்த மண்டபம் பூக்களாலும் விளக்குகளாலும் அலங்கரிக்கப் பட்டிருந்தது. உணவின் நறுமணம், பூக்களின் நறுமணம், ஓடி ஆடும் குழந்தைகள், கூடிப் பேசிக்கொண்டிருந்த பெண்களின் சிரிப்பொலி என்று மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லாமல் அந்த அரங்கே நிறைந்து காணப்பட்டது.
அழகிய ஆழ்ந்த நீல வண்ண கோட் சூட் அணிந்து சவரம் செய்யப்பட்டு அழகான முகவெட்டு அனைவரையும் மீண்டும் ஒருமுறை திருப்பிப் பார்க்க வைக்க, கம்பீரமாக நடந்து அம்மாண்டபத்தினுள் நுழைந்தான் அஜய் கிருஷ்ணா.
அவனுக்கு அருகிலேயே கண்காணிப்பு பார்வையுடன் சீரான ஃபார்மல் உடையில் ரஞ்சித்.
அஜய் முகம் துடைத்து வைத்தது போல எந்த உணர்வுகளையும் பிரதிபலிக்காமல் இருந்தது.
ஒரு இளம்பெண் அவனுக்கு குடிக்க குளிர்பானம் ஒன்றை நீட்டிக் கொண்டு வர அதை கவனியாமல் கடந்து போக இருந்தான் அவன்.
சட்டென்று ரஞ்சித் இரண்டு பானங்களை எடுத்துக் கொண்டு நன்றி கூறி அப்பெண்ணை அனுப்பி விட்டு,
அண்ணா இந்த கூல்டிரிங்கை பிடிங்க. உங்க மனசுக்கு எதுல நிம்மதி கிடைக்கும்னு தெரியல. எப்பவும் அந்த பிரச்சனைக்குள்ளேயே இருக்கோம். இடமும் சூழ்நிலையும் கொஞ்சம் மாறினால் உங்களுக்கும் நல்லா இருக்குமேன்னு தான் கணேசன் ஐயா கூப்பிட்டதும் இங்க உங்களை கூட்டி வந்தேன். ஆனா ஏதோ சிந்தனையிலேயே இருக்கீங்களே! என்று வருத்தமும் கரிசனமுமாக கூறினான் ரஞ்சித்.
பதில் பேசாமல் சின்ன தலையடைப்புடன் அதனைப் பெற்றுக்கொண்ட அஜய் அதன் பின்னும் சுற்றுப்புற சூழலை பெரிதாக கவனித்தது போலத் தெரியவில்லை ரஞ்சித்துக்கு.
அஜய்யின் மனம் வலையில் சிக்கிக்கொண்ட பறவை இறக்கையை படபடவென்று அடித்து அங்கிருந்து தப்ப முயல்வது போல பிரச்னையின் அடிவேரிலேயே சிக்கிக் கிடந்தது.
அவனுக்கு பத்திரம் எப்படி வந்திருக்கும் என்ற குழப்பம் தீரவே பல மாதங்கள் பிடித்தது. என்ன தான் அஜய்யின் மனம் இது தந்தை செய்த காரியமில்லை என்று அழுத்திக் கூறினாலும் அதை நிரூபிக்க சாட்சியங்கள் வேண்டுமே! அவனும் தந்தை மக்களுக்கு எழுதிக் கொடுத்த பத்திரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க, நீதிபதிகளோ வைபவ் கையில் இருக்கும் பத்திரத்தின் காரணம் என்ன என்று கேட்க, கேஸ் இழு இழு என்று இழுத்துக் கொண்டிருக்கிறது மூன்றாண்டுகளாக.
அவன் தலைக்குள் இத்தனை நாள் அவனுக்கு எப்படி கிடைத்தது? என்ற கேள்வி போய், எப்படி செய்திருப்பான்? என்ற கேள்வி முளைத்து அவனை குடைந்து எடுத்தது.
அந்த எண்ணங்களுக்குள் சிக்குண்டிருந்த அவனிடம் யாராவது வந்து வணக்கம் சொன்னால் கூட அஜய் வெறும் தலையசைப்பை மட்டுமே பதிலாகக் கொடுத்தான்.
அண்ணா அந்த ஜூஸை குடிங்க. கணேசன் ஐயா மேடையில் இருக்கார். நம்மைப் பார்க்கல. பார்த்தா தடபுடல் பண்ணுவார். அமைதியா முதல் வரிசையில் உட்கார்ந்துட்டா அவர் வந்ததும் எழுந்தா மட்டும் போதும் என்று யோசனை கூற, அவனை ஏற இறங்கப் பார்த்தான் அஜய்.
உங்களுக்கு தெரியாதது இல்ல. ஆனா நீங்க இங்க கவனமா இல்லையேன்னு சொன்னேன் அண்ணா. சாரி என்று பின்வாங்கிக் கொள்ள,
என் கவனம் இங்க இல்ல தான். ஆனா பழகிய பழக்கம் எப்பவும் மாறாது ரஞ்சித். நம்ம சாப்கான்சியஸ் மைண்ட் அது வேலையை செய்துகிட்டே இருக்கும். வா. என்று முதல் வரிசையில் உள்ள ஒரு இருக்கையை அவன் ஆக்கிரமிக்க, அருகில் நின்ற ரஞ்சித்தையும் அமரும் படி பணித்தான் அஜய்.
அதன் பின் தான் அந்த இடத்தின் சூழலை உள்வாங்கினான். திக்கெங்கும் மகிழ்ச்சி வெள்ளமாக ஓடிக்கொண்டிருக்க, தண்ணீரில் தத்தளிக்கும் ஓடம் போல தனியாய் நிற்கும் அவன்! நெஞ்சம் ஒரு நொடி விம்மியது.
இதே அவள் இருந்திருந்தால் இப்படியா அவன் இருந்திருப்பான். அவளது சின்ன சிரிப்பொலியும், அவனது முகத்தில் மகிழ்ச்சியினால் ஒளிரும் வெளிச்சமும் அவ்விடமே விழாவினுள் ஒரு சிறப்பு விழா போல களை கட்டி இருக்கும். ஆனால் அவள் இல்லையே!
அபிதா! அவளை எண்ணி அவன் உள்ளம் மௌனமாக அழைத்தது.
காரிலிருந்து இறங்கிய அபிதாவிற்கு புரை ஏறியது. சாந்தா அவசரமாக தண்ணீர் பாட்டிலை அவளிடம் நீட்டி, சீக்கிரம் குடிம்மா யார் இந்த நேரத்துல உன்னை நினைக்கிறது? என்றதும்,
இத்தனை நேரம் ஏதேதோ சிந்தனையில் இருந்தவள் மனம் சட்டென்று தன் கணவனிடம் சரணாகதி அடைந்தது.
என்னை எந்த நேரமும் நினைப்பவன் அவன் மட்டும் தான் இல்லையா? அவனைத் தவிர யார் நினைப்பார்? என்று எண்ணியவள் உதட்டில் வருத்தமாய் ஒரு முறுவல் பிறந்தது.
என்ன தான் பொய் வேடம் போட்டு மனதை பூட்டி கட்டுக்குள் வைக்க நினைத்தாலும் உண்மை நம்மையும் மீறி வெளிப்படும் அல்லவா?
அவன் அதிகம் கோபம் கொள்கிறான். அவனால் எனக்கும் என் பிள்ளைக்கும் நாளை என்னவும் நேரலாம். ஆம்! அப்படித்தான் பலவற்றை சொல்லி தன்னை அவனிடம் செல்லாமல் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறாள். இதெல்லாம் எங்கு சென்று முடியுமென்று அவளுக்குத் தெரியவில்லை.
யோசனையில் சுருங்கி இருந்த அவள் முகத்தை கவனித்த சாந்தா, அவள் கழுத்தில் லேசாக கலந்திருந்த ஆரத்தை சரி செய்தபடி, முகத்தை சிரிச்சா மாத வச்சுக்க அபி. சிரிச்சா நீ பேரழகா இருப்ப, மனசும் அப்ப தான் மா நல்லா இருக்கும். என்று அவளது கூந்தலை ஒதுக்கி விட்டார்.
அவர் சொல்வது புரிந்தாலும் தான் இருக்கும் மனநிலையில் புன்னகையா? என்று அவள் தவித்து உதடு துடிக்க நின்றாள்.
மகளது கலக்கம் நிறைந்த முகத்தைக் கண்ட சாந்தா, அதிகம் யோசிக்காத அபி, மகிழ்ச்சியா இருக்கப் பழகு. அது தான் உனக்கும் என் பிள்ளைக்கும் நல்லது. என்று மே அவள் வயிற்றில் கை வைக்க அபிதாவின் உடல் சிலிர்த்தது.
கூட்டமாக இருந்த இடத்திலிருந்து மெல்ல மகளை நகர்த்தி உள்ளே அழைத்துச் சென்றவர் அவரது அறிந்தவர் தெரிந்தவரைக் கண்டதும் முகம் மலர்ந்து பேசத் துவங்கினார்.
அவர்கள் யாரென்று தெரியாமல் அவர்கள் பேச்சில் பங்குபெற முடியாமல் அபிதா சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருக்க ஏனோ அவ்விடம் ஒளிபொருந்திய ஓரிடமாக அவள் இதயத்தை நிறைக்கும் நிம்மதியை அள்ளித்தரும் இடம் போல ஒரு உணர்வை அவள் மனதில் ஏற்படுத்த, புரியாமல் கண்களை அங்கும் இங்கும் சுழற்றிக் கொண்டிருந்தாள்.
தோரணமாக தொங்கிக் கொண்டிருந்த மலர்களெல்லாம் சிரிப்பது போல தோன்றியது அவளுக்கு, அந்த சிந்தனை எண்ணி முறுவல் பூத்த இதழ்களுடன் முன்னே பார்த்த அவளது விழிகள் நங்கூரமிட்ட கப்பல் போல அப்படியே நின்றது.
அங்கே ஆழ்ந்த நீல நிற கோர்ட் சூட்டில் இருப்பது அவனா? அவனே தானா? அவள் இமைகள் பட்டாம்பூச்சிகளாக மாறி படபடவென்று அடித்துக் கொள்ள, இதயம் எகிறி குதித்து அவனிடம் ஓடிவிடும் வேகத்தில் துடித்துக் கொண்டிருந்தது.
அவனுக்கு அருகில் ரஞ்சித் இருக்க, அவனது பார்வை சுற்றிச் சுழன்றபடி இருந்தது.
திருமண வைபவம் நிகழ்த்த அனைவருக்கும் அட்சதை வழங்கப்பட்டதை அவன் நீண்ட விரல்கள் அள்ளி எடுப்பதைக் கூட அத்தனை ஆசையாய் நிரப்பிக் கொண்டன அவளது விழிகள்.
அவை நிரம்பியதாலோ என்னவோ இத்தனை நேரம் அங்கே குடிகொண்டிருந்த கண்ணீர்த்துளிகள் இடமில்லாமல் வெளியேறி கன்னத்தில் வழிந்தோட, அவளது கரங்களிலும் இப்போது அட்சதை கொடுக்கப்பட்டது.
மங்கல இசை முழங்க, வந்த கூட்டம் ஆர்ப்பரிக்க மணமேடையில் இருந்த இளம் ஜோடிக்கு திருமணம் நிகழ்ந்ததன் அடையாளமாய் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியின் ரேகைகளும், ஆரவாரமும், அட்சதை மழையும் பொழிந்தது.
தன் போக்கில் அவள் கைகளும் அட்சதையை முன்னோக்கி தூவி இருக்க, அங்கே மணமக்களுக்கு வீசப்பட்ட அட்சதை அவன் தலையிலும் விழுந்ததால் அதனை தட்டிவிட்டபடி திரும்பிய அஜயின் விழிகள் நிலைக்குத்தின.
பார்க்க மாட்டேன் என்று பின் வாசல் வழியாகச் சென்றவளை இப்படி எதிர்பாராமல் சந்திப்போம் என்று அஜய் கனவிலும் எண்ணவில்லையே!
சுற்றி இருந்த சூழல் மறந்தது, மேள வாத்தியங்கள் அவனுக்கு மட்டும் நிசப்தமாயின, அவனையும் அறியாமல் அவனது கால்கள் அவளை நோக்கிச் செல்லத் துவங்கியது.
தன்னைக் கடந்து செல்லும் அஜயை கேள்வியாக நோக்கிய ரஞ்சித்தின் விழி வலைக்குள் அபிதா விழ, அவனும் சாந்தாவும் இணைந்து நிகழ்த்தியது எதிர்ப்பார்த்ததைப் போலவே நடப்பதை எண்ணி நிம்மதியடைந்தான்.
அபிதா தன்னை நோக்கி வரும் கணவனைக் கண்டதும் அவளையும் அறியாமல் அவளது கைகள் வயிறைத் தடவியது. ஆனாலும் அவளது கால்கள் அவனை நோக்கி முன்னேறின.
அவனது விழிகளில் கேள்வி தொக்கி நின்றது. ‘ இவள் எங்கே இங்கு வந்தாள்?’
ஆனால் அவள் விழிகளோ அவனை நிரப்பிக் கொள்வதிலேயே குறியாய் இருந்தன.
இருவரும் எதிரெதிரே நின்றதும் அபிதாவின் தலை தானாக தாழ்ந்து கொண்டது. இதற்கு முன் வழிந்திருந்த கண்ணீர் காய்ந்து போயிருக்க அவன் முன்னே கண்ணீர் சிந்திக் கூட என்று உதடு கடித்து நின்றாள்.
அவரிடம் பேசியே இருபது நாட்களுக்கு மேலாகிவிட்டது. இப்போது அவர் என்ன பேசப் போகிறார்? என்று அவள் உள்ளம் துடிக்க தரையையே பார்த்திருந்தாள்.
அவளிடம் அவன் என்ன பேசப்போகிறான் என்று அவள் ஆவலாகக் காத்திருக்க, அவனோ,
நீ எங்க இங்க? என்றான் பட்டும்படாமல்.
தன்னைப் பற்றி விசாரிக்காமல் இதென்ன கேள்வி என்று மனம் வருந்தியவள், கோபம் துளிர்த்தாலும் அவன் அப்படி எல்லாம் பேச மாட்டான் என்று நம்பிக்கை உடைந்ததை காட்டிக்கொள்ளாமல், அம்மா… என்று ஏதோ சொல்ல முயன்றாள்.
மகளின் சங்கடமான சூழலைப் புரிந்து கொண்ட சாந்தா, தம்பி நல்லா இருக்கீங்களா? எல்லாரையும் நம்மையே பார்க்கிறாங்க பா. எதுனாலும் தனியா போய் பேசிக்கலாம் பா. உங்க மேல எல்லாருக்கும் பெரிய மரியாதை இருக்கு. என்று உதவிக்கு வந்தார்.
மரியாதை… ஆமா இருக்க வேண்டியது தான். ஆனா உங்க பொண்ணுக்கு மட்டும் மறந்து போயிடுச்சு. அதானே! என்று பல்லைக் கடித்து தன் கோபத்தை அடக்கிக் கொண்டான்.
சண்டை வேண்டாம் தம்பி என்று சமாதானம் செய்ய முயன்றார் அந்த தாய்.
சண்டை போடக் கூடாது அப்படித்தானே? அப்ப ஒரே ஒரு கேள்வி இருக்கு. ஏன்? என்று அழுத்தமாய் அவன் வினவ, அவள் இதயம் நொறுங்கும் வலியுடன் நின்றாள்.
உண்மையை சொல்லி அவன் அன்பை மீட்கவா? அல்லது விலகிச் சென்று அனைத்தையும் காக்கவா? கடவுளே! என்று அவள் உள்ளம் கூக்குரல் எழுப்பிக் கொண்டிருக்க,
அவளது மௌனத்தை தவறாக எடுத்துக் கொண்ட அஜய் அங்கிருந்து நகர்ந்து செல்ல முடிவு செய்தான்.
அவன் நகரவே, துடித்துப் போனவள், அஜய் நான்.. என்று ஏதோ பேச வர,
போதும். எதுவும் வேண்டாம். என்று கைநீட்டி சொல்லிவிட்டு விறுவிறுவென்று மேடையை நோக்கிச் சென்று மணமக்களுக்கு வாழ்த்து கூறிவிட்டு அந்த மண்டபத்தை விட்டு வெளியேறினான் அஜய்.
இதுக்கு தான் இதுக்கு தானே நான் உன்னை பார்க்காமலே இருந்தேன். நீ மாறிட்டே வர்ற அஜய்.. என்று அவள் உள்ளம் உள்ளே கதறியது யாருக்கும் கேட்கவில்லை.

Interesting