Amudham 49

Amudham 49

“சரி கோதை நீ கொஞ்ச நேரம் ஓய்வு எடு”, என்று அனைவரும் நகர, புவி மட்டும் கண்ணில் கண்ணீரை தேக்கியபடி அவளை பார்க்க, ஆதி அவனை அருகில் அழைத்தான். ஆதியின் மடியில் இருந்து இறங்கியவள், அவனை நெருங்கி அவன் கைகளைப் பிடிக்க, “அக்கா” என்ற அவன் விசும்பலே அவன் தன்னை காணாது துடித்த துடிப்பைச் சொல்ல,

“டேய் பொடிப்பையா. என்ன டா அழுகற?”

“அக்கா. உன்னை காணோம்னு நான் ரொம்ப ரொம்ப” எனும் போதே அவன் அழுது கரைந்தான்.

“போதும் போதும். அதான் நான் வந்துட்டேன்ல. ஒழுங்கா என் பிள்ளைக்கு தாய் மாமாவா நல்லா சம்பாதிச்சு சீர் செய்யணும். எங்க டா உன் கேமரா?”

“ரெண்டு நாள் முன்னாடி தான் ஒரு ஹனிமூன் ஜோடிக்கு போட்டோ ஷூட் முடித்தேன். அடுத்தது உன்னோடது தான்.”

“சரி. அழக்கூடாது சரியா புவனேஷ்?”

“ம்ம். நீ அத்தான் கூட பேசிட்டு இரு. உனக்கு குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரேன்.”

அவன் அகன்றதும், ஆதி அவளை கையில் ஏந்தி ஒரு முறை சுழற்றியவன் “நான் எதிர்பாக்கவே இல்ல டி. இவ்வளவு சந்தோஷமான விஷயம் ஆனா அதை முழுசா அனுபவிக்க கூட முடியாம போச்சே!”

“அப்படி இல்ல. என் குழந்தை உருவானதும், தன்னை சுற்றி இருக்கற கெட்டவங்களை எல்லாம் அழிச்சிடுவான். பாருங்க அத்தான். “

“அதுதான் நீலா அத்தை இறந்துடாங்க அதுவும் கோரமா.”

“என்ன சொல்றிங்க? அப்போ நான் கேட்ட அலறல்?”

“அவங்க தான்.., புலி அடிச்சிடுச்சு போல…”

“அச்சோ மகிப்பா…”

“மாமா அதெல்லாம் விட்டு வெளியே வந்து காமாட்சி அத்தை கூட சேர்ந்துட்டாரு.”

“ஒ! புவனேஷ் சரின்னு சொல்லிட்டானா?”

“என்னை யாரு கேட்டா? அதுவும் இல்லாம நான் உன்னை நினைச்சு அழும்போது யார் சேர்ந்தா என்ன? போனா என்ன? இந்தா இந்த ஜூஸைக் குடி.” என்று நீட்டினான் புவனேஷ்.

“அவங்க உன் அம்மா டா புவி.”

“அத்தான் நான் அன்னைக்கே சொன்னது தான். எனக்கு அம்மான்னா அது கோதை தான். உங்களுக்கு அதில ஒன்னும் கஷ்டம் இல்லயே?”

“போடா பொடி டப்பா. நர்மதா பரவாயில்லயா?”

“அதெல்லாம் தங்கச்சியை கட்டி பிடிச்சு இவன் பாசமலர் படமெல்லாம் ஓட்டிட்டான். அப்போ மட்டும் நீ இல்லாதது அவனுக்கு பிரச்சனை இல்லையாம்.”

“அத்தான்” என்று சிணுங்கிய புவியை இருவரும் அணைத்துக்கொண்டனர்.

பாதுகாப்பு நிறுவன தலைமை நிர்வாகி நேரில் வந்திருப்பதாக தகவல் வர, மூவரும் ஹாலுக்கு சென்று அவரை சந்திக்க,ஆதி பழைய ஆளுமையோடு, “சொல்லுங்க சார். உங்க கஸ்டடில விட்டுட்டு வந்தேன் அவனை. பாருங்க இன்னிக்கு அவனால எங்க வீட்ல ஒருத்தர் இறந்து போயாச்சு. எப்படி சார் உங்களை விட்டு தப்பிச்சு இங்க வந்தான்?”

“சார். ரொம்ப டயிட் செகியூரிட்டி குடுத்து தான் சார் வச்சிருந்தோம். அன்னைக்கு ரெகுலரா வேலைக்கு வர்ற ஆட்கள் வேறு வேலைக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம். அதுக்காக புது ஆட்கள் ரெண்டு பேரை போட்டேன். அவங்களுக்கு பணத்தாசை காட்டி, தப்பிச்சுட்டான். அவனை பற்றி ஒரு தகவலும் இல்லை.”

“உங்களை என்ன செய்யலாம்? எவ்வளவு பெரிய குற்றவாளி அவன். அவனை போய் புது ஆட்கள் பாதுகாப்புல விட்டிருக்கிங்க? உங்க அஜாக்கிரதை தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம். உங்க மேல நான் தக்க நடவடிக்கை எடுக்கிறேன்.”

ஆதியின் கைப்பிடித்துத் தடுத்த கோதை, அவரிடம்,

“சார் எனக்கு உங்க நிலைமை புரியுது. மனிதனா இருந்தா தப்பு செய்யறது இயற்கை தான் ஆனா அந்த தப்பில் இருந்து நாம பாடம் கத்துக்கணும். இனிமே பெரிய வேலைகளுக்கு புதியவர்களை நியமனம் செய்யாதீங்க. உண்மையில் இவர் உங்கள் மேல் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் எடுக்க மாட்டார். இனி இது போன்ற தவறை மறந்தும் செய்யாதீங்க.”

“சரிங்க மேடம்.”

“சரி இதெல்லாம் போகட்டும். கண்டிப்பா எங்க ரிசார்ட்ல வந்து குடும்பத்தோடு நாலு நாள் தாங்கிட்டு போங்க.”

“ரொம்ப சந்தோசம் மேடம். வரேன்”, என்று கிளம்பினார்.

அவர் அங்கிருந்து சென்றதும் கோதையின் முன் வந்த மீனாட்சி, “அந்த உபதேசம் எல்லாம் ஊருக்கு தானா?”

“என்னவாம்?” என்றாள் ஆதியிடம்.

“அவரு யாரோ எவரோ, அவரு தப்பு பண்ணினா… இன்னோரு தரம் பண்ணாதீங்கன்னு சொல்லி மன்னிப்பிங்க. ஆனா பெத்த அம்மா, ஒரு சூழ்நிலையில் தப்பா பேசிட்டேன். ஆமா ஒத்துக்கறேன். தப்பா பேசிட்டேன் தான். அதுக்காக மன்னிக்க மாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம்?”

“எனக்கு அவங்களை மன்னிக்க பிடிக்கலன்னு அர்த்தம் அத்தான். தெரியாம செஞ்ச தப்பு தான். நானும் இல்லன்னு சொல்லல. என்னைத் தெரியாத யாரோ சொல்லிருந்தா கவலை படவே மாட்டேன். எனக்கு அவ்வளவு நல்லது கெட்டதும் சொல்லித்தந்த அம்மாவுக்கு நம்மை தெரியாதா? அவன் என்னை அசிங்கமா சித்தரிக்கும் போதே, ‘என்னடி?’ன்னு கேட்டிருந்தா ஒரு பிரச்சனையும் இல்ல. வேண்டாம். என் மனசு இன்னும் ஆறலை. விட்டுடச்சொல்லுங்க..”

வேகமாய் உள்ளே சென்று விட்டாள். அவளை சமாதானம் செய்ய பலரும் கிளம்ப, வேண்டாம் என தடுத்து அவளுக்குத் தனிமை கொடுத்தான். ஜோதிலிங்கம் மகேஸ்வரனின் கையைப் பிடித்த படி,

“நான் எதிர்பார்க்கவே இல்ல மாப்பிள்ளை.. நீங்க காமாட்சியை…”

“விடுங்க மாமா… வயசாகிடுச்சு… இன்னும் எதை பிடிச்சும் தொங்க நான் விரும்பல. அவளோட தப்புக்கு அவளும் இத்தனை வருஷம் உங்களோட இருந்தாலும், மனசளவுல தனிச்சு தானே இருந்தா… போதும்… எனக்கு நம்ம ரெண்டு குடும்பமும் இப்படி ஒண்ணா, சேர்ந்து இருக்கறது ரொம்ப பிடிச்சிருக்கு. எப்பயும் இப்படியே இருந்தா நல்லா இருக்கும்.”

“நாம இருக்கலாம். கோதையோட நண்பர்கள் இருக்க முடியுமா?” என்று கொஞ்சம் தேறி நடமாட ஆரம்பித்த ஈஸ்வரமூர்த்தி கேட்க, அங்கே பதில் இல்லை.

உள்ளிருந்து வந்த கோதை, “நான் உங்க கிட்ட ஒன்னு சொன்னா கோச்சுக்க மாட்டீங்களே?”

“சொல்லு கோதை.”

“இல்ல எனக்கு ஒரு ஆசை.”

“என்ன?”

“ராகுல், இன்பா, பிரவீன் மூணு பேருக்கும் நம்ம வீட்லயே பொண்ணு குடுத்து மாப்பிள்ளையா ஆகிட்டா என்ன?”

பெரியவர்கள் சற்றே யோசிக்க, “ராகுலும், மதியும் விரும்பறாங்க சரி. மத்த ஜோடி யாரு?” கேட்ட அன்னத்தை அனைவரும் வியப்பாக பார்க்க,

அதன் பொருள் உணர்ந்தவர், “எனக்கு இவங்க ரிசெப்ஷன் போது தெரியும். அதுக்கு தான் இங்க ரிசார்ட் ஆரம்பிச்சு எல்லாரையும் ஒண்ணா இருக்க பிளான் போட்டேன்.” என்று தலை குனிந்தபடி அவர் சொல்ல,

“அத்தம்மா!” என்று அன்னத்தை அணைத்துக்கொண்டாள் கோதை.

“இன்பா வதுவை விரும்பறான். பிரவீன் சுஜியை விரும்பறான். என்னடா நம்பி வீட்டுக்குள்ள விட்டா காதல்னு சொல்றாங்களேன்னு நினைக்க வேண்டாம். அவங்க இப்போவரைக்கும் தன் விருப்பத்தை வெளிய சொல்லல. என்கிட்ட தான் சொன்னாங்க. உங்களுக்கே தெரிஞ்சிருக்கும் நம்ம வீட்டு பிரச்சனைலையும் ரிசார்ட் விஷயத்துலயும் இவங்க எப்படி நடந்தாங்கன்னு, அதனால யோசிச்சு முடிவு சொல்லுங்க.”

“வதுவும், சுஜியும் படிச்சு முடிக்கட்டும், அதுக்குள்ள இன்பா பிரவீன் வீட்ல பேசி நிச்சயம் பண்ணிக்கலாம்.” ஜோதிலிங்கம் முடிவு சொல்ல, அனைவருக்கும் திருப்தி.

“பூ… வேற பிரச்சனையை அவன் ஆரம்பிக்கறதுக்குள்ள அந்த சக்தியை பிடிக்கணுமே!”

“அதெல்லாம் என் அகி செல்லம் பாத்துப்பாங்க…”

“என்ன சொல்ற?”, என்று அனைவரும் ஒரு குரலில் கேட்க,

“அன்னைக்கு அவனோட ஆர்.சி. புக் வச்சு, வீடு கண்டுபிடிச்சோம், அந்த வீட்டு டாக்குமெண்ட் வச்சு பான் நம்பர் கண்டுபிடிச்சோம், அதே பான்ல லோக்கல் பேங்க்ல அகவுண்ட் இருக்கான்னு வெரிஃய் பண்ணுன்போது தான் சக்தி தான் சரவணன் அப்படின்னு தெரிஞ்சது. ஆனாலும் ரெண்டும் ஒரே ஆளுன்னு நிரூபிக்க இன்னும் சில ஆதாரம் வேண்டி அகி செல்லத்தை அனுப்பினேன். இந்நேரம் அவன் மாட்டிருப்பான்.”

ஆனால் கோதையின் எண்ணத்தை பொய்யாக்கி சக்தி மாட்டாமல் செத்தே போயிருந்தான்.

அகிலன் சக்தியும் சரவணனும் ஒன்று என்பதற்கான புகைப்பட ஆதாரம், மற்றும் விரல் ரேகை வரை சேகரித்து, கமிஷனர் அலுவலகம் வர, அவனை வரவேற்ற ஏ.சி. சித்ரஞ்சன்(சுஜியை மீட்க உதவினாரே) அந்த கேசின் தகவலுடன், இந்த ஆதாரங்களை இணைத்து கலெக்டரிடம் கண்டதும் சுட உத்தரவு வாங்கி, அவன் பதுங்கும் இடங்களில் தேட, கோதையின் சொல்படி அன்றே அவன் வாகனத்தில் வைத்த பக் இன்று அவன் இருப்பிடத்தை உடனே காட்டியது,

சித்ரஞ்சன் தன் சகாக்களுடன் செல்ல அங்கே ” அவ தப்பிச்சுட்டா டா. அவளை விடக்கூடாது.” என்று முகிலனிடம் கோபமாக சொல்லிக்கொண்டிருந்தான்.

“ஆமா அந்த நீலா எப்படி டா உன்னோட வந்தா ஊட்டிக்கு?”

“அன்னைக்கு உன்னையும் அவளையும் கோவைல இருந்து சென்னை கூட்டிட்டு போய்ட்டு அவங்க அவங்க பாதுகாப்பான இடத்துல இருங்கன்னு சொல்லிட்டு நானும் போய்ட்டேன். இவளும் கைல பணம் தீருற வரைக்கும் அங்கே இங்கே தங்கிட்டு, கோவைக்கே வந்துட்டா போல. நான் தப்பிச்சு, பிலைட்ல வந்து இறங்கினா இவ மேட்டுப்பாளையம் கிட்ட லிப்ட் கேட்டுட்டு இருந்தா. சரி வான்னு கூட்டிட்டு வந்தேன்.

எனக்கு அவளை வச்சு அந்த வீட்டுக்குள்ள போகணும் இவ இருக்கட்டும்னு தோணுச்சு. அவளும் உள்ள போய் யாரும் இல்லாத நேரமா தகவல் தந்தா. ஆனா… அவ, அந்த கோதை… என்னையே ஏமாத்திட்டா முகிலா… அவ வெளிய ஓடியது போல இருந்ததால தான் நான் அவ்ளோ தூரம் அவளைத் தேடி வெளி வாசல் வரைக்கும் வந்தேன். ஆனா காணோம். அதுக்கு மேல அங்க இருந்தா ரிஸ்க்ன்னு கார் எடுத்துட்டு வந்துட்டேன். ஆனா அவ கோதையை துரத்தி போய் செத்துட்டா. விடு நம்ம தொழில்ல நாம பாக்காத சாவா?” என்று அவன் சொல்லி முடிக்கும் போது சித்ரஞ்சனின் தோட்டா அவன் நெற்றியில் இறங்கி இருந்தது.

முகிலன் முகமெல்லாம் சக்தியின் ரத்தம், அப்போதும் அவன் அரை போதையில் இருக்க, ரத்தம் மேலெல்லாம் தெளித்த பயத்தில் அவன் போட்ட கூச்சல் அவர்கள் மறைவிடம் முழுவதும் பட்டு எதிரொலித்தது.

முகிலன் முன் சித்ரஞ்சன் பிஸ்டலோடு நிற்க, முகிலன் முகம் மாற ஆரம்பித்தது. வெறி பிடித்தவன் போல அவன் போலீசாரை தாக்க வர, அவன் மீது வழக்கு எதுவும் இல்லாததால் அவனை சுடவும் முடியாமல் போலீசார் திணற, வெளியில் காத்திருந்த அகிலன், துப்பாக்கி சத்தம் கேட்டு உள்ளே வந்தவன்,முகிலனின் செயலால் போலீசார் காயப்படுவதைக் கண்டு, பக்கத்தில் இருந்த பூஜாடியால் அவன் தலையில் அடித்தான். முகிலன் மயங்கி விட,

“சார் இவனையும் சுட்டுடாதீங்க, இவனெல்லாம் இவ்வளவு சீக்கிரம், சுலபமா சாகக் கூடாது. தன் வீட்டு பெண்ணின் வாழ்வயே அழிக்க துணிந்த கொடூரன் சார் இவன். இவனை நான் பார்த்துக்கறேன்”, என்று அவனை அழைத்து கொண்டு போனான்.

முதலில் தயங்கிய போலீசார் பின்னால் அவன் கதிரின் அண்ணன் மகன் என்று தெரிந்ததும் அனுப்பி வைத்தனர்.

அதன் பின் முகிலனைப் பற்றி யாருக்கும் தகவலே இல்லை. அகிலன் அவனை மனநல காப்பகத்தில் தனி சிறையில் வைக்க அவர்களின் குடும்ப மருத்துவர் மூலம் ஏற்பாடு செய்துவிட்டான். அவன் வாழ்நாளெல்லாம் வெறும் இருட்டை பார்த்தும், ஒரு சிறு சந்தில் வரும் உணவை பார்த்துமே அமையும் படி செய்துவிட்டான் அகிலன்.

ஆயிரம் தான் தம்பி என்றாலும் போதை பொருள் விற்றவனை மன்னிக்கும் அளவுக்கு அகிலன் தேசத்துரோகி அல்ல என்று அவனை அவனே அடிக்கடி முதுகில் தட்டிக் கொள்வான்.

அவன் ஊட்டியை நோக்கி கிளம்பும் முன் இவையனைத்தையும் கோதைக்கு சொல்ல விரும்பினான். முகிலனைப் பற்றி குடும்ப மருத்துவரிடம் சொல்லிவிட்டு போக மருத்துவமனைக்குள் நுழைந்தவன், அவரை பற்றி வரவேற்பில் விசாரிக்க,

“டாக்டர் ரௌண்ட்ஸ் போயிருக்காரு சார். வெய்ட் பண்ணுங்க.”

சரியென்று அவன் முன்னால் போக, டாக்டர் ஒரு வார்டு முடிந்து மற்ற வார்டுக்குள் நுழையும் முன், சொல்லிவிட்டு போய் விடலாம் என்று அவரை நெருங்கியவன் அப்போதுதான் அந்த படுக்கையில் இருந்தவரைக் கண்டான்.

அவனின் ஆணென்ற கம்பீரம் மறந்து சிறுப்பிள்ளைபோல “அப்பா “,என்று அழுக, அவனை அங்கே எதிர்பாராத மருத்துவர் திகைத்தார்.

“அப்பாக்கு என்ன? அப்பாக்கு என்ன டாக்டர்?”

“உங்க தம்பி அவரை அடிச்சி போட்டுட்டான். அதுல தலைல அடி பட்டதால அவரு கோமாக்கு போயிட்டாரு. ஆதி தான் அட்மிட் பண்ணினார். கோதை உங்க யாருக்கும் சொல்லவேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க.”

“அவ சொன்னாளா?”

“ஆமா அகிலன்.”

“என் கோதை சொல்லிருந்தா சரியா தான் இருக்கும்.”, என்று சொல்லிவிட்டு தன் தந்தையின் கரத்தில் தன் கரத்தை சேர்த்தான்.

‘இந்த செடிக்கு இவ்வளவு மருந்து போடணும், இதுக்கு இதை ஊடு பயிரா போட்டா நல்ல மகசூல் கிடைக்கும், எப்படி நிலத்தடி நீரைப் பெருக்கணும்’, என்று தனக்கு ஒவ்வொன்றையும் சொல்லித்தந்த கரம் இன்று உணர்வற்று தளர்ந்து இருப்பதை கண்டவன் கண்களில் கண்ணீர் கரைபுரண்டது.

தன் தகப்பனின் நெற்றில் முத்தமொன்றை பதித்தவன், மருத்துவரிடம் அவரை கோவைக்கோ, ஊட்டிக்கோ மாற்ற முடியுமா என்று கேட்க, இன்னும் சிறிது காலத்திற்கு பின் செய்யலாம் என்றார். அவரிடமே தந்தையை ஒப்படைத்துவிட்டு, முகிலனைப் பற்றி கூறிவிட்டு ஊட்டிக்கு விரைந்தான்.

மறுநாள் ஊட்டி வந்தவனுக்கு, அங்கிருந்த சூழ்நிலை புரியவே நேரம் எடுத்தது. மெதுவாக கோதையை நெருங்கியவன், அவள் தலையை வருடி,

“கோதைக்குட்டி நீ சொன்னபடி அவனை போலீசில் சொல்லியாச்சு, அவங்க அவனை என்கவுண்டர் பண்ணிட்டாங்க. முகிலனை காணோம்.” முகிலனைப் பற்றி இனி ஒருவரும் அறியக்கூடாது என்பதில் அகிலன் தெளிவாக இருந்தான்.

நீலாவின் அடக்கம் முடிந்ததும், நர்மதா தனிமையை உணராமல் மொத்த குடும்பமும் பார்த்துக்கொண்டது.

அகிலனைக் கண்ட அருணா தன் மணிவயிற்றை பிடித்தபடி நெருங்கிவர, அவளை கைச்சிறையில் வைத்தவன், அவளின் வளைகாப்பு தேதியைக் குறிக்க சொன்னான்.

“டேய் துக்கம் நடந்த வீட்ல உடனே ஒன்னும் செய்யக்கூடாது டா அகிலா.”

“அது துக்கம் நடந்திருந்தா தானே. நம்மளை பிடிச்ச சனி தானே விலகிருக்கு. நாள் பாருங்க.”

அவனின் சொல்லுகிணங்க நாள் பார்த்து அடுத்த பத்துநாளில் அருணாவின் வளைகாப்பு வைக்க, அவளை இமைப்பொழுதும் நீங்காமல் காத்து வந்தான் அகிலன். கோதையின் கண்களில் அவனுக்கான அன்பும் மரியாதையும் கூடிப்போனது.


3 thoughts on “Amudham 49

  1. அப்பாடா..! ஒருவழியா எல்லாம் நல்லபடியாவே முடிஞ்சது போங்க.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  2. இதென்ன இந்த சக்திய பொட்டு ன்னு போட்டு தள்ளிட்டீங்க, பண்ண பாவத்துக்கு துடிச்சி செத்திருக்க வேணாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!