
அமுதம் 48
பிரவீன் அவன் கண்ணில் பட்ட சடலத்தைப் பார்த்து அலறிய அலறலில் அனைவருக்கும் குலைநடுங்கிப்போனது.
அங்கே அவர்கள் கண்டது கோரமாய் ஏதோ ஒரு மிருகத்தால் அடித்து கொல்லப்பட்ட பெண்ணின் சடலத்தை தான்.
வனத்துறை ஆட்கள் அது பூங்கோதையா என்று பார்த்து கூறும்படி அழைக்க, அனைவரும் ஒரே குரலில் “இல்லை.. இது நீலா.” என்றனர்.
“அவங்க யாரு? யாரோ பூங்கோதை அவங்க தான் இந்த காட்டுக்குள்ள தொலைஞ்சு போனதா தகவல் வந்தது.”
“ஆமா சார். ஆனா இவங்க அவங்களைத் தேடி வந்திருப்பாங்க போல.”, என்று சூழ்நிலையை சமளித்தான் ஷியாம்.
அவன் மருத்துவ மாணவன் என்று சொல்லி, சடலத்தை குறிப்பிட்ட தொலைவில் நின்றபடி ஆய்வு செய்து, “புலியோ சிறுத்தையோ அடிச்சிருக்கு, அவங்க மேல பல்லோட தடம், நகங்களோட தடம் தெரியுது. கழுத்தை கடித்து கொன்றிருக்கு.” என்றதும், அந்த கோரக் காட்சிகள் அவரவர் மனக்கண் முன் வர, அனைவரின் உடலும் அந்த மழையிலும் சிலிர்த்து அடங்கியது. தொடர்ந்து கோதையைத் தேட தொடங்க, நீலாவின் சடலத்தை அப்புறப்படுத்ததும் நடவடிக்கையை எடுத்தது காவல் துறை.
யாரும் நடந்த தடம் தெரியாமல் மழை வந்து அனைத்தையும் அழித்துச் சென்றிருந்ததது. குரல் கொடுத்து அழைக்கலாம் என்றால் மழையின் சத்தமும் அருவியின் ஆர்ப்பரிப்பும் துளி சத்தத்தையும் காற்றில் கசிய விட வில்லை.
அந்த அருவியைத் தாண்டி சென்றும் தேடியாயிற்று. பலன் பூஜ்யம் தான்.
வனத்துறை ‘மழை வலுப்பதால் இனியும் இங்கே இருந்து மிருகங்களின் தாக்குதலுக்கு ஆளாகக் கூடாது’ என்று அனைவரையும் அங்கிருந்து வீட்டை நோக்கி அனுப்ப முயன்றது. அவர்கள் மாட்டேன், முடியாது என்று வாதம் செய்யும் வேளையில், ‘ஆ’ என்ற பயம் நிறைந்த குரலில் அனைவரும் மகேஸ்வரனைப் பார்க்க, அவர் காலிலும் கையிலும் பல அட்டை பூச்சிகள் அப்பி இருந்தது.
அனைவரும் திகைத்திருந்த வேளையில், ஆதி போலீஸின் சட்டையில் இருந்த லைட்டரை எடுத்து அட்டை பூச்சிகள் மேல் காட்ட, மழையில் தீ அணைந்து அணைந்து போக, மிகவும் சிரமப்பட்டு அனைத்தையும் அவர் உடலில் இருந்து நீக்கினான்.
அவரால் நிற்க முடியாமல் போக, இன்பாவும், பிரவீனும், ஷியாமும் அவரை கைத்தாங்கலாகப் பற்றி நடந்து வீட்டை நோக்கி விரைந்தனர்.
அவரை கீழ் அறையில் படுக்க வைத்துக்கொண்டிருக்கும் போதே ஷியாம் மருத்துவரை அழைக்க, அவரும் வந்து சேர்ந்தார். அதுவரை கோதையைத் தேடி அலைந்த மற்றவர்களும் அங்கு வந்து சேர, புவி வீட்டினர் அனைவருக்கும் இங்கு நடந்ததை விளக்கி உடனே சாந்தி நிலையம் வரச்சொன்னான்.
மருத்துவர், மகேஸ்வரனைப் பார்த்துவிட்டு, “சரியான நேரத்தில் அட்டைகளை எடுத்துட்டீங்க. இருந்தும் அதுங்க அதிகமான ரத்தத்தை உறிஞ்சிடுச்சு. மூனு நாட்கள் நல்ல ஓய்வில் இருங்க” என்று சொல்லி சில மருந்துகளும், அவை ஒட்டிய இடத்திற்கு ஆயின்மெண்ட்டும் தந்துவிட்டுச் சென்றார்.
மருத்துவர் வெளியேறும் நேரத்தில் நுழைந்த வீட்டின் மற்றவர்களும் தாத்தா, பாட்டியும் வர, மருத்துவரைக் கண்டு குழப்பத்துடன் உள்ளே நுழைய, துவண்டு இருந்த மகேஸ்வரனைக் கண்ட காமாட்சி “என்னங்க”என்று அவரருகில் வர, நீலாவின் கோர சாவை கண்ட அவர் உள்ளம், காமாட்சியை இதற்கு மேலும் வெறுக்க ஒத்துக்கொள்ளவில்லை.
“காமு” என்று அவர் கையை பற்றியவர்,
“நம்மை பிடித்த தரித்திரம் ஒழிந்தது காமு. அவள் சுயநலத்தால நம் வாழ்வயே அழித்தா, ஆனால் இன்னிக்கு புலிகிட்ட கடிபட்டு, கோரமா இறந்த போது பரிதாபத்திற்கு பதில் நிம்மதி உணர்வே வந்தது. எனக்கு தெரியும் ஒரு சாவில் நாம மகிழக்கூடாதுன்னு. ஆனால் அவள் பெண் என்ற காரணத்தால் தானே இத்தனை நாளும் பொறுமை காத்தோம். அவளோட குற்றங்கள் மறைக்கப்பட்டது, இதுக்கு மேலையும் அவளை மன்னிக்க அவள் நல்லவளும் இல்லை. அவ வேண்டாம்ன்னு வெளி உலகிற்கு நம்மால குடும்ப கௌரவத்தை விட்டு உண்மையான காரணத்தைச் சொல்லவும் முடியாது. அதனால் அவளோட இந்த முடிவு தான் எல்லாருக்கும் சரி, நல்லதும் கூட.”
மகேஸ்வரன் சுலபமாக தன் மனைவியை மன்னித்துவிட்டார். ஆனால் புவி தவிப்போடு அமர்ந்திருந்தான். அவன் தோள் தோட்ட நர்மதாவை இறுக அணைத்துக்கொண்டான்.
“இனிமே எப்பயும் நான் இருப்பேன் நர்மு உனக்கு. அண்ணா இருக்கேன் கவலைப்படாத. ஆனா என் அக்கா,அக்கா வேணும். நர்மு…”
அவனை ஆதி அணைத்துக்கொண்டான். “கவலைப்படாத டா. என் பூமா வருவா. கண்டிப்பா வருவா…”
“இல்ல நீங்க தான் தேடி போகணும். அவளா வர்றதா இருந்தா இந்நேரம் வந்திருப்பாளே!” சொன்ன மீனாட்சியை அமைதியாக பார்த்தான் ஆதி.
அவன் பூங்கோதையைத் தேடி வெளியில் வர, வனத்துறை அவனை தடுத்துவிட்டது.
“மழை நேரம் சார், ஏற்கனவே ஒரு டெத். லைட்டா மலைச்சரிவு வந்தாலும் எல்லாம் போச்சு சார். கொஞ்சம் அமைதியா இருங்க.”
வெளியில் வர முடியாத அளவு மழை பெய்துகொண்டிருக்கிறது. ஆதியின் மனதில் நிமிடத்திற்கு நிமிடம் பயம் ஏற, மாலை நாலு மணி அளவில் மழை குறைந்தது.
யாரின் வார்த்தைகளையும் கேட்காமல் ஆதி காட்டிற்குள் விரைந்தான். சேறும் சகதியும் அவனை முன்னெறிச் செல்ல முடியாமல் தடுக்க, அவன் தடுமாறித் தடம் மாறாமல் தான் நினைத்த இலக்கை நோக்கிச் சென்றான்.
ஓரளவு அவன் நெருங்கிவிட்ட போது, அங்கு கேட்ட ஒலி அவனை திடுக்கிடச் செய்தது. மெதுவாக ஒரு மரத்தின் பின் நின்று பார்க்க, ஒரு மானை, துரத்திக்கொண்டு ஓடியது சிறுத்தை. அதை நெருங்கிவிட, மானின் மரண ஓலம் காட்டின் ஒரு பகுதியை நடுங்கத் செய்தது.
அவன் அந்த மானை மீட்டுவிடத் துடித்தான். ஆனால் சிறுத்தை அம்மானின் கழுத்தைப் பிடித்து விட்டது. அதைக் காணக் காண ஆதியின் கண்களில் நீர் நிறைந்தது.
பெரிய கல் ஒன்று எடுத்து அவன் சிறுத்தையை தாக்க. அதன் விலாவில் பட்டதும் அது வலியால் சுற்றும் முற்றும் தேட, ஆதி மரத்தின் பின் ஒளிந்துகொண்டான். அந்த சந்தர்ப்பத்தில் மான் தப்பி ஓடியது. சிறுத்தையின் கவனம் மீண்டும் மானிடம் மாறி துரத்த, அதன் வேகம் கூடி ஓடிபோனது.
அங்கிருந்து நகர்ந்து ஆதி மெதுவாய் அருவிக்கு அருகில் வர, ஆர்ப்பரிக்கும் நீருக்கு மத்தியில் ஒரு கை மட்டும் உள்ளே இருப்பது தெரிந்தது.. ஆதியின் மனதெல்லாம் மலர்கள் மலர, அருவியின் இடுக்குகளில் நுழையப் பார்த்தான். நீரின் வேகம் அதிகமாக இருக்கவே, வெளியில் தள்ளப்பட்டான். உள்ளே பூமா இருப்பது உறுதியாக, அவளை வெளியில் கொண்டுவரும் வழி தெரியாமல் அவன் திகைக்க, அருவியின் மறுகரையில் நீரின் திண்மை குறைவாக இருக்க அதன் வழியே மெல்ல உள்நுழைந்தான்.
மேனி சிலிர்த்தது அவனுக்கு.
முழுவதும் நனைந்து மயங்கிக்கிடந்த கோதையின் தோற்றம் ஆதியின் மனதில் வலியையும், அவளை கண்ட மகிழ்வையும் ஒருங்கே பிரதிபலித்தது.
உள்ளே நுழைந்துவிட்ட அவனால் வெளியேற முடியவில்லை. அவளை அள்ளி மடியில் போட்டுக்கொண்டவன்,
“பூமா பூமா! என்னை பாரு டி… உன் ஆதி வந்திருக்கேன் பாரு.”
அவள் ஸ்வெட்டரையும் தாண்டித் தெரிந்த அவளின் வயிற்றைக் கண்டவன் அதில் முகம் புதைத்து அழுதான்.
“குட்டிப்பா… குட்டிப்பா… அப்பா வந்திருக்கேன் அம்மாவை பார்க்க சொல்லுங்க… பிளீஸ் குட்டிப்பா..”
அவளிடம் அசைவுகள் இல்லை. அவள் மிகவும் குளிர்ந்து போய் இருந்தாள். அது அவனை மேலும் பயமூட்ட, அவள் ஆடைகளை களைந்து அவள் உடலைத் துடைத்துவிட்டான். ஈரம் காயும் வரை காத்திருந்தவன். அவளுக்கு தன் சட்டையை அணிவித்துவிட்டு அதே பாறை இடுக்கின் வழியாக குகையிலிருந்து வெளியேறினான். நீரைத் தடுத்து சிறு வழியை ஏற்படுத்தப் பார்த்தான். மெதுவாக அருவியின் உச்சிக்கு மேட்டில் ஏறினான். அங்கிருந்த கனமான பாறைகளை உருட்டி ஒரு ஓரத்தில் அடுக்க, கீழே விழும் நீர் சற்று சுற்றிச் சென்றது. கீழே ஒருவர் வெளியேறும் அளவுக்கு வழி கிடைத்திட இறங்கிவந்தவன்,
அவள் உடைகள் காயதது கண்டு அவளை அழைத்து செல்லும் விதம் எப்படி என்று யோசித்தான். மழை விட்டு காற்று வீசிக்கொண்டிருந்த வேளையில் அவளின் புடவையை வெளியில் மரத்தில் உலர்த்தினான். ஈரத்தோடு அவளை குளிரில் தூக்கிச் செல்ல அவன் மனம் ஒப்பவில்லை. அரைமணியில் சற்று காய்ந்து போக, அவளை வெளியே தூக்கி வந்து, புடவையால் சுற்றி வீட்டிற்குத் தூக்கி வந்தான்.
ஆதி பூமாவைத் தூக்கி வருவதைக் கண்ட அனைவர் கண்களிலும் கண்ணீர். பட்டாம்பூச்சியாய் சுற்றித் திரிந்த கோதையவளை கையில் ஏந்திப் பார்க்க அனைவர் மனமும் கவலை கொண்டது.
அவளை தங்கள் அறையில் கிடத்தியவன், மருத்துவரைத் தேட, “வர சொல்லிட்டேன் அண்ணா. இப்போ நான் பிரஸ்ட எயிட் பண்றேன் ” என்று முன்னே வந்தான் ஷியாம்.
“கொஞ்சம் இருடா.”
“மதிம்மா. போய் கோதையின் உடையை சரி செய்து விட்டு சொல்லும்மா” என்றான்.
அவள் உள்ளே செல்ல “ஏன் ஆதி?”
“இல்லம்மா அவ ரொம்ப நனைஞ்சு போய் இருந்தா. ஒரு அளவுக்கு காயவைத்த துணி போட்டு தான் தூக்கி வந்தேன்.”
அவனின் பார்வையை கண்ட மற்றவருக்கும் அவனின் செயல் சரியாக தோன்றினாலும், மீனாட்சியும், அன்னபூர்ணேஸ்வரியும் “காப்பதே கடமை”, என்றனர்.
அவர்களை கண்ட லட்சுமி ”ஆதி செஞ்சது தான் சரி” என்றார்.
ஷ்யாம் வந்து “பயப்பட ஒன்றும் இல்லை, குளிர் தான். டாக்டர் ஊசி போட்டாலே போதும். காய்ச்சல் வராமல் நாம பார்த்துக்கலாம். ரூம் ஹீட்டரை நல்லா செட் பண்ணிட்டா போதும்.” என்றான்.
அனைவரும் அவள் அறைக்கு அவளை காணச் செல்ல, ஆதி அறையின் ஹீட்டரை ஆன் செய்துவிட்டு தள்ளி நின்றான்.
மருத்துவரும் வந்து ஷ்யாமின் கூற்றை ஒட்டியே சொல்லிவிட்டு வெளியேற, சிறிது நேரத்தில் கண் மலர்ந்தாள் கோதை.
அவள் கண்கள் அறையை சுற்றி சுழல, இறுதியில் விழிநீருடன் தள்ளி நிற்கும் கணவனை கண்டவள் “அத்தான் ” என்று இதழ் மலர்ந்தாள்.
அடுத்த நொடி தன் மனவாட்டியை மடியில் ஏந்தினான் ஆதி. அங்கிருந்த ஒருவரும் அவர்கள் கண்களுக்குத் தெரியவில்லை. அவன் அவளை மார்போடு அணைத்து,
“உனக்கொண்ணும் இல்ல தானே பூமா?”
“இல்ல. நல்லா இருக்கேன் அத்தான். அழக்கூடாது. என் அத்தான் எப்பவும் கம்பீரத்தோட மிடுக்கா இருக்கணும்.”
“ம்ம். ஏன் நீ அவனுக்கு பயந்து ஓடின? நீ அப்படி ஓடக்கூடிய ஆள் இல்லயே?”
“இல்ல நீலா… அவங்களை சமாளிச்ச என்னால அவனை சமாளிக்க முடியாதா? ஆனா அவன் கண்ணில் அவ்வளவு வெறி. எனக்கு அந்த நொடி பாப்பா மட்டும் தான் மனசுல தோணிச்சு. அதான் அவன் கிட்ட இருந்து தப்பிச்சாவது உயிரை காப்பாத்திக்கணும் அப்படினு ஓடினேன்.”
“சரி வெளிய போடாம ஏன் டா காட்டுக்குள்ள ஓடின?”
“நான் முதல்ல வெளிய ஓட ஆரம்பிக்கும் போது அன்னைக்கு சொன்னேனே அந்த மான்… புலி… நம்ம ரிசார்ட் வாட்ச் ஏரியால பார்த்தேனே! அது தான் ஞாபகம் வந்தது. ஓடணும் அவளோ தான் தோணுச்சு… அவன் என்னைத் தேடி வெளியே ஓடணும்ன்னு செருப்பை அந்த பக்கம் வீசிட்டு நம்ம தோட்டத்தில் தான் ஒளிஞ்சிருந்தேன். ஆனா கொஞ்ச நேரத்துல நீலா என்னைத் தேடி வர ஆரம்பிச்சாங்க. நான் ஓடி காட்டுக்குள்ள போனேன். அவங்களும் துரத்தி வந்தாங்க. அப்போ தான் நான் அருவிக்கு போற பாதையை குறிச்சு வச்சது நினைவுக்கு வர, அந்த வழில ஓட ஆரம்பிச்சேன்.
அவங்களும் என்னை துரத்தியே வந்தாங்க. ஒரு கட்டத்துல என்னை நெருங்கிட்டாங்க. அப்போ, ‘உன்னால தான் டி என் வீட்டில் என் மதிப்பு போச்சு. உன்னால தான் அவரு பழசையெல்லாம் இப்போ பேசுறாரு. என் குழந்தைக்காக தான் இந்த வாழ்க்கையே நான் வாழ்ந்தேன். அவளும் இன்னிக்கு எனக்கில்லாம போய்ட்டா… உன்னால் தானே?’ கத்திக்கிட்டே வந்தாங்க. அன்னைக்கு மான் குகையில் போய் தப்பிய நினைவு வர, நானும் அப்ப குகைக்குள்ளே போய்ட்டேன். கொஞ்ச நேரத்தில் புலியின் உறுமல். எனக்கு சர்வமும் அடங்கி போச்சு. அப்பறம் ஒரு அலறல் சத்தம். அவ்ளோ தான் நான் மயங்கிட்டேன்னு நினைக்கிறேன்.”
எதார்த்தமாக பார்த்த நிகழ்வில் அவள் கற்ற பாடம் தான் இன்று அவளை தன் முன் உயிருடன் தந்திருக்கிறது என்று உணர்ந்த ஆதி. இனி வாழும் ஒவ்வொரு நொடியும் வாழ்க்கை தரும் பாடத்தை மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஏதேனும் இக்கட்டான சூழலில் அது உதவும் என்று மனதில் உறுதி கொண்டான்.

👌👌👌💕💕💕💕
நன்றி.
அப்பாடா..! எப்படியோ கோதை கிடைச்சிட்டா, இல்லைன்னா இந்த ஆதி செய்யுற அராத்தை தாங்க முடியாது போங்க.
😀😀😀
CRVS (or) CRVS 2797
அவன் அராத்தா? இருங்க உங்களை பூமா கிட்ட சொல்லித்தர்றேன்.
அப்பாடா, கோதை கிடைச்சிட்டா,
ஆமா மா. தொடர்ந்து வாசித்து கருத்து பகிர்வதற்கு நன்றி மா.