
அமுதம் 45
அன்று காலையில் எழுந்தது முதலே கோதை சோர்வாக உணர்ந்தாள். ஆதி மீட்டிங் ஒன்றிற்கு கோவை சென்றிருந்தான். அவன் டீ பாக்டரிக்கு கோதை ஆள் அனுப்பினாள், ரிசார்ட்டில் உள்ள ரெஸ்ட்டாரெண்ட்டுக்கு அங்கிருந்து தினமும் டீத்தூள் அனுப்ப சொன்னதால், அவன் பிராண்ட் ரிசார்ட்டிற்கு வருவோருக்கு தெரிந்துபோனது, அதன் தரத்தால், அங்கேயே சின்ன விற்பனை நிலையம் ஆரம்பித்து வைத்தாள்.
ஒவ்வொருவருக்கும் பார்த்து பார்த்து செய்தாள் கோதை. அனைவரும் அவளை உள்ளங்கையில் வைத்து தாங்க, ஆதியோ அவளை தலை மேல் வைத்துத் தாங்கினான்.
அன்னபூர்ணேஸ்வரியை தங்களோடு இருக்கவேண்டும் என்று கெடுபிடி செய்து, தனக்கு உடல்நலமில்லை என்று ஆதிக்கு அவரே அனைத்தையும் செய்வது போல பார்த்துக்கொண்டாள். ஆதியின் நெடுநாள் ஆசையை நிறைவேற்றிய கோதையை இல்லை இல்லை! அவன் பூமாவை அவன் மனதிலும் மடியிலும் தாங்கினான்.
அன்று வந்த தகவல் கோதைக்கு அவளின் ஊகம் சரி என்று சொன்னது. இப்படியும் நடக்குமா என்று அவள் குழம்பித்தான் போனாள். ஆனால் அதுதான் உண்மை என்று உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிய. நாம் எவ்வளவு முட்டாள் என்று தன்னையே நொந்துகொண்டாள்.
ஆதியின் கோபமும், தன் காயத்தின் பயனாய் அவன் கொண்டிருக்கும் வெறியும் அறிந்தவளால் உடனே உண்மையை வெளியிட முடியவில்லை. சொன்னாலும் நம்பமுடியாத ஒன்றாகவே அவள் கருதினாள். மேலும் ஆதாரம் கிடைக்க அவள் அந்த பாதுகாப்பு நிறுவனத்தை அழைக்க, அவர்களோ “ஆதி சாருக்கு தெரியாமல் செய்வதில்லை” என்றனர்.
“போங்கடா நீங்களும் உங்க ஆதி சாரும்”, என்று திட்டிவிட்டு , அகியை அழைத்தாள்.
“சொல்லு கோதைக்குட்டி”
“அகி செல்லம், நான் ஒரு முக்கியமான விஷயம் விசாரிக்க சொல்லுவேன். ஏன்னு கேக்கமா செய்வியா?”
“நீ என்னை பள்ளத்தாக்கில் விழச்சொன்னாலும் விழுவேன் கோதைக்குட்டி.”
“சீ. வாய கழுவு அகி செல்லம். அரு மாசமா இருக்கற நேரத்துல என்ன பேசுற?”
“உன்மேல உள்ள நம்பிக்கைக்காக சொன்னேன் கோதைக்குட்டி.”
“ம்ம். இல்ல நான் விஷயத்தை சொல்லிடறேன். இது அந்த சக்தியோட கார் ஆர்.சி. புக். இதுல இருக்கற டீடெயில்ஸ் வச்சு ட்ரெஸ் பண்ணினதுல அது சரவணன் அப்படிங்கற ஆள் கிட்ட போய் நிக்குது.”
“அது யார் அவன் புதுசா?”
“எனக்கென்னமோ நாம ஏதோ ஒரு நூலை விட்டுட்டு மொத்தத்தையும் பிடிச்சு இழுத்துட்டு இருக்கோமோன்னு தோணுது.”
“அப்பிடின்னா?”
“நாம விட்ட நூல் தான் விடை.”
“அப்போ அந்த சரவணன் தான் தலைவனா இருப்பான்னு சொல்றியா?”
“அங்கேயும் எனக்கு சந்தேகம் வருது அகி செல்லம்.”
“என்ன?”
“அவன் கையாள் நம்மகிட்ட மாட்டி கிட்டத்தட்ட 1 மாசம் ஆகிடுச்சு. அவன் ஏன் சக்தியை தேடலை?”
“ம்ம். யோசிக்க வேண்டிய விஷயம் தான் கோதை.”
“அதனால, நீ நாளைக்கு சென்னை போ, போய்ட்டு…” என்று அவனுக்கு சில வேலைகளைக் கொடுத்தாள். அகி கிளம்பி வீட்டிற்கு சென்றுவிட்டு மாலை சென்னை செல்வதாகச் சொன்னான்.
அவன் கிளம்பியதும், ‘அவனிடம் இன்னும் பெரிய மாமா பற்றி சொல்லவில்லையே!’ என்ற குற்றவுணர்வு எழுந்தது.
மதியம் சாப்பிட்டு மாத்திரை போட்டவள், அவளை அறியாமல் தூங்கிப் போனாள்.
மாலை கையில் பாலுடன் வந்து எழுப்பிய அன்னம், அவளின் சோர்வைக் கண்டு மருத்துவரை அழைக்கிறேன் என்றார்.
“இருக்கட்டும் அத்தம்மா. ஒன்னும் இல்ல. அவர் இல்லல. அதான் எனக்கு ஒரு மாதிரி இருக்கு. நைட் அத்தான் வந்ததும் சரியாய்டுவேன்..”
“நல்ல பொண்டாட்டி, நல்ல புருஷன் போங்க.” என்று அவளை செல்லமாக வைதுவிட்டு
“அருணாவை பார்க்க போறேன் கோதைமா. நைட் ஆதி வந்திடுவான். மாமாவும் இன்னிக்கு ரிசார்ட்ல ஏதோ கொஞ்சம் வேலை இருக்கு காலைல வரேன்னு சொன்னாரு. நீ ஆதி வர்ற வரைக்கும் தனியா இருப்ப தானே?”
“அதெல்லாம் இருப்பேன் அத்தம்மா.”
“இல்ல நீ சோர்ந்து தெரியுற, இந்த சிறுசுங்க எல்லாம் ஒன்னு கூடியே சுத்துதுங்க. ஒன்னும் இங்க தங்கறதே இல்லை.” என்று வது, நர்மதா, புவி மூவரையும் திட்டித் தீர்த்தார்.
அவருக்கும் அங்கே அப்பா, பிள்ளைகள் என்று வசந்த இல்லத்தில் இருக்க விருப்பம். ஆதிக்காக தான் சாந்திநிலையத்தில் இருக்கிறார். அங்கு தமயந்தி,லட்சுமி என்று பேசவும் ஆள் இருக்க இன்று ஆதி வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் கிளம்பிவிட்டார் வசந்த இல்லத்திற்கு.
அவர் அங்கு சென்றதும் கோதை தனியாக இருக்க வேண்டாம் என்று நினைத்த வது, நர்மதாவுடம் கிளம்பி இங்கு வந்துவிட்டாள்.
ஆனால் கோதை சோர்ந்து படுத்துக்கொண்டாள்.
“என்னாச்சு அண்ணி?”
“ஒன்னும் இல்ல வது. டயர்டா இருக்கு.”
“ம்ம்.சரி படுத்துக்கோங்க. நாங்க ஹாலில் இருக்கோம்.”
“சரி” என்று படுத்த கோதை உறங்கிவிட்டாள்.
வதுவும் நர்மதாவும் மொபைலில் விளையாடிக்கொண்டிருக்க, அவர்கள் முன் விழுந்த நிழலில் மொபைலை விட்டு தலையை எடுத்தவர்கள் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது.
“அம்மா” என்று நர்மதா நீலாவிடம் ஓடினாள்.
வது அமைதியாக ‘இத்தனை நாள் இவங்க எங்க போனாங்க?’ என்ற யோசனையில் நின்றாள்.
நர்மதாவை அணைத்து கொண்டாள் நீலா. பின் இரவு உணவு எடுத்துக்கொண்டவள், வதுவிடமும், நர்மதாவிடமும் தான் இங்கு வந்திருப்பதைச் சொல்ல வேண்டாம் என்று சொல்லிவிட்டு இரண்டாம் தளத்தில் உள்ள ஓர் அறையில் தங்கிக்கொண்டாள்.
வது நர்மதாவை கூர்ந்து பார்த்து ” இப்போ எதுக்கு இவங்க இங்க தங்கறதை சொல்லக்கூடாதாம்? அப்படியென்ன இவங்களுக்கு பிரச்சனை? என் அண்ணி பார்க்காத பிரச்சனையா?” என்று காட்டமாக கேட்டுக்கொண்டிருந்தாள்.
வாசலில் நின்ற பாதுகாப்பு நிறுவன ஆட்கள், “பாப்பா இப்போ இங்க யாரோ வந்த மாதிரி இருந்துச்சு.”
“இப்போன்னா எப்போ அண்ணா?”, என்றாள் வது துடுக்காய்.
“பாப்பா விளையாடாதீங்க. சொல்லுங்கம்மா.”
“நீங்க தானே கவனமா இருக்கணும்? உள்ள யாரையோ விட்டுட்டு ‘வந்தாங்களா வந்தாங்களா’ அப்டின்னு கேட்டா என்ன அர்த்தம்?” என்றாள் நர்மதா.
இன்று டூட்டிக்கு அவரும் இன்னோரு ஆளும் மட்டும் தான் இங்கே. வீட்டினர் அனைவரும் வசந்த இல்லத்தில் இருப்பதால் அங்கே தான் பலத்த பாதுகாப்பு. இவர் சாப்பிட சென்ற நேரம் கூட இருந்தவனும் சிறுநீர் கழிக்க சென்றுவிட்டான், அந்த இடைவெளியில் நீலா உள்ளே வந்துவிட்டார்.
வீட்டு வாயிலில் நுழையும் அவரைக் கண்ட இவர் கத்த, அந்த ஆளோ, ‘இவ்வளவு பெரிய எஸ்டேட் உள்ளே யாரும் நடந்தே உள்ளே வர முடியுமா?’ என்று கேட்டு அந்த நேரம் அவரை அடக்கி விட்டார். ஆனால் அவருக்கு உறுத்தலாகவே இருந்ததால் இப்போது விசாரிப்பதாகச் சொல்ல, இவையனைத்தையும் மாடியிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த நீலாவுக்கு ஓரே குஷி.
உடனே யாருக்கோ கைபேசியில் அழைத்தவர், மீண்டும் அறைக்குள் சென்றுவிட்டார். நர்மதாவும் வதுவும் அந்த ஆட்களை அனுப்பிவிட, கோதையும் எழுந்து சாப்பிட வந்தாள்.
கமலாம்மா சமையல் முடித்துவிட்டு ஏதோ வேலையாக வெளியில் சென்று விட்டார். அவளோடு வதுவும் நர்மதாவும் சாப்பிட அமர ஏதோ பேசி சிரித்துக்கொண்டு சாப்பிட்டனர். அப்போது அங்கு வந்தான் ஷியாம்.
“என்ன ஷியாம் இந்த நேரத்துல?”
“ஒன்னும் இல்ல கோதை. இவங்க ரெண்டு பேரையும் அத்தை கூட்டிட்டு வரச்சொல்லி சொன்னாங்க.”
“ஏன்? நாங்க இங்க தான் இருப்போம்.”,என்றவர் கோரஸாய்.
“அடக்கடவுளே!”
“ஏன் ஷியாம் இருக்கட்டுமே?”
“இல்ல கோதை, ஏதோ காரணம் இல்லாம அத்தை சொல்ல மாட்டாங்க.”
கோதையும் யோசித்தாள். வேண்டுமென்றே தன் மாமியார் தனக்கும் தன் கணவனுக்கும் தனிமை தருவதை உணர்ந்தவள்,
“சரி ரெண்டு பேரும் போய்ட்டு நாளைக்கு வாங்க.”
“யூ டூ புரூட்டஸ். எங்களை இருக்க சொல்லுவன்னு பார்த்தா நீ எங்களையே கழட்டி விடுறியா அண்ணி?”
“இல்ல வது. எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. எப்படியும் தூங்கிடுவேன். அதான் நீங்க அங்க இருந்தா சுஜி, மதி, சுபா, கிருத்தின்னு ஜாலியா இருக்கலாம்.”
“சும்மா சொல்லாத அண்ணி. நீ அண்ணா கூட ரொமான்ஸ் பண்ண எங்களை விரட்டி விட்ற. போ. உன்னோட பேச மாட்டேன்.” என்று முறுக்கிக்கொண்ட வது வாசலுக்கு விரைய
“நில்லு டி”, என்று நர்மதாவும் ஓடிவிட்டாள்.
“ஹே நீ ஏன் இவ்ளோ டயர்டா இருக்க கோதை? இங்க வா!” என்று அவளுக்கு பல்ஸ் பார்த்த ஷியாம் ” கோதை!”,என்று அவளை அணைத்து கொண்டு,
“டேஸ் தள்ளி போயிருக்கா டி? உனக்கு ஞாபகமே இல்லையா? நாளைக்கு மார்னிங் நான் கிட் வாங்கிட்டு வரேன். செக் பண்ணிடலாம்.”
“டேய் ஷியாம் யார்கிட்டையும் சொல்லாத டா. நானே அத்தான் கிட்ட சொல்லணும். பிளீஸ் டா” என்றாள் கொஞ்சலும் கெஞ்சலுமாய்.
“சரி. அண்ணா வந்துருவாங்க. நீ போய் படு. நான் செக்யூரிட்டி எப்படி இருக்குன்னு பார்த்துட்டு அப்படியே கிளம்பறேன்.”
நீலா வீட்டில் இருப்பது தெரியாமல் ஷியாம் இருவரையும் அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.
ஆதிக்கு போன் செய்தாள் கோதை.
“எப்போ வருவிங்க அத்தான்?”
“என்னாச்சு என் பூமாவுக்கு?” கொஞ்சலாக வினவினான் ஆதி.
“இல்ல உங்களை பாக்கணும் போல இருக்கு.”
“நான் மலை ஏற ஆரம்பிச்சுட்டேன். இன்னும் ஒரு மணி நேரத்துல என் பூமா மடில இருப்பேன்.”
“ம்ம். வாங்க உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்.”
“சரி பூமா. இதோ வந்துட்டே… இருக்கேன்.”
“சரி அத்தான் பை.”
அவளுக்கு ஏனோ தூக்கமாக வந்தது.
‘ச்சா. அத்தான் வரும்போது தூங்கிட்டா அவரு எழுப்பவும் மாட்டாரு. என்ன பண்றது?’
யோசித்த அவள் அலாரம் வைக்கலாமென்று மொபைலை எடுக்க, கை பட்டு ரெகார்டர் ஆன் ஆனது. அதைக் கண்டதும் கோதைக்கு திடீரென்று குறும்புத்தனம் தோன்ற,
தன் வயிற்றில் வளர ஆரம்பித்திருக்கும் சிசுவிடன் பேசுவது போல ரெகார்ட் செய்ய ஆரம்பித்தாள்.
போனை டேபிளில் ஆன் செய்து வைத்துவிட்டு, தன் வயிற்றை தொட்டுத் தடவியபடி.
“நீங்க தம்பியா பாப்பாவான்னு தெரியாது. ஆனா நீங்க கண்டிப்பா உங்க அப்பா மாதிரி கம்பீரமா இருக்கணும். உங்களை பார்க்கும் போது எனக்கு உங்க அப்பா மேல இன்னும்… இன்னும்… காதல் பெருகணும்.. உங்களுக்கு அதை செய்வேன் ,இதை செய்வேன்னு சொல்ல மாட்டேன். ஆனா இந்த நொடில இருந்து உங்களை என் கடைசி மூச்சு வரைக்கும் பத்திரமா பாத்துக்குவேன். இது என் ஆதி அத்தான் மேல சத்தியம்.”
அவள் பேசிக்கொண்டிருக்க, பின்னால் கேட்ட குரலில் அவள் திடுக்கிட்டுப் போனாள்.
“யாரோட பேசுற?”, என்று அவளை பார்க்க, அவளின் கைகள் அவள் வயிற்றில் இருக்க,
“ஒ.. கல்யாணம் முடிஞ்சு ஒன்றரை மாசம் தான் ஆகுது அதுக்குள்ள பிள்ளையா? பலே!”
“நீங்க எங்க இங்க?”
“ஏன்? இது எனக்கும் வீடு தான்.”
“நீங்க செஞ்ச வேலைக்கு உங்களை…”, என்று கோபம் கொண்டவளிடம்,
“நிறுத்து. அதுக்கே கோவப்பட்டா எப்பிடி? உன் சித்தியை கஷ்டப்பட்டு ஏமாத்தி அவளைத் துரத்திட்டு அவ இடத்திற்கு வந்து, நான் ஆட்சி செஞ்சுட்டு இருந்த என் வீட்டை. நீ வந்து என்ன பண்ணி வச்சிருக்க? என்னைப் பாரு… “
“இதெல்லாம் நீங்க செஞ்ச பாவம்…”
“வாய் அவ்வளவு நீளுதா?” என்று அவளை பிடிக்க பார்த்தாள் நீலா.
ஒரே அடியில் நீலாவை படுக்கையில் தள்ளியவள், மயங்கியதைக் கண்டு அறை வாசலில் நின்றிருந்தாள் கோதை.
ஆனால் அவளை பின்னால் இருந்து தலைமுடியை கொத்தாய் பற்றியது ஒரு கரம்.
அவளால் திரும்பவும் முடியவில்லை. முடிந்தவரை முன்னால் சரிந்து தன் முழு பலத்தை பயன்படுத்தி அந்த முகத்தில் பின்தலையால் தாக்க,
“ஆஆஆ” என்ற அலறலுடன் கீழே விழுந்தவனைக் கண்ட நொடி அவள் கண்களில் கனல் தெறித்தது.
“நீயா?”
“என்னைக் கண்டு பிடிச்சிட்ட போல இருக்கே! உன் கண்ணுல அதிர்ச்சியைக் காணமே?”
“நீயா தான் இருக்கும்ன்னு யூகிச்சேன்.. ஆதாரம் தேடிக்கிட்டே தான் இருக்கேன்.”
“அப்படி ஒன்னு இருந்தா தானே கிடைக்கும் உனக்கு? நான் எதற்கும் ஆதாரங்கள் வைத்துக்கொள்வது இல்லை.”
“அதுதான் உன்னை பற்றி கிளறும்போதே தெரியுதே! சரியான நாற்றம் பிடித்த ஜென்மம்.”
“என்ன டி சொன்ன?”,என்று அவன் கையில் கத்தியை எடுக்க,
அந்த நொடிவரை சாவைக்கண்டு அஞ்சாத கோதை, தன் மணிவயிற்றில் இருக்கும் மாணிக்கத்தை மனதில் கொண்டு இந்த நொடி தப்பித்தே ஆக வேண்டும் என்று அவனை தள்ளி விட்டு வெளியில் ஓடினாள்.
“ஏய். நில்லு. நில்லு டி. உண்மை தெரிஞ்ச ஒரே ஆள் நீ தான். உன்னை விட்டுடுவேனா?” என்று அவளைத் துரத்தினான் சக்தி சரவணன்.

Interesting
சக்தியை அடைச்சுத் தானே வைச்சிருந்தாங்க, இவன் எப்ப, எப்படி தப்பிச்சு வந்தான் ?
அத்தனை வீக்காவா செக்யூரிட்டி சிஸ்டம் வைச்சிருக்காங்க…?
😀😀😀
CRVS (or) CRVS 2797