Amudham 44

Amudham 44

ஆதி போனை எடுக்க மாட்டான் என்று நினைக்க, அவன் தன் மனையாள் எப்போது அழைத்தாலும் தான் பதில் சொல்லாது போனால் வருந்துவாள் என்று அவள் அழைப்பு வந்தால் ஆட்டோ ஆன்சரில் வைத்திருந்தான். இப்போதும் அது தானே அவள் காலை கனெக்ட் செய்திருக்க, அந்த பக்க அமைதியை புரிந்துகொண்ட கோதை, “அத்தான் அத்தான் “,என்று மெதுவாக அழைத்த வண்ணம் இருந்தாள்..

அவன் ஒரு கட்டத்தில் அவளின் அழைப்புக்குரல் கேட்டு போனை காதில் வைத்தவன், “பூமா”, என்றான்.

அவன் குரலில் தான் எத்தனை குற்றவுணர்ச்சி!

“அத்தான். ஒண்ணும் இல்ல, கண்ணை மூடுங்க. பாருங்க பக்கத்துல தான் நான் இருக்கேன். கொஞ்சம் நிதானமா இருங்க.”

“தப்பு பண்ணிட்டேன் பூமா.”

“இருக்கவே இருக்காது. உங்களுக்கே தெரியாம ஏதாச்சும் ஆகியிருக்கும். அதை அப்படியே ஒதுக்குங்க. நேர்ல பேசிக்கலாம்.”

“இப்போவே சொல்றேன். இந்திரன் அப்பாவை அன்னைக்கு நான் போனேன்ல, அந்த பங்களால தான் கட்டி வச்சிருந்திருக்கான். இத்தனை நாள் தெரியாம போச்சே! நான் அங்க தேடாம போய்ட்டேனே!”

“அதான் கிடைச்சிட்டாருல்ல, விடுங்க அத்தான். முடிஞ்சு போனதை நினைச்சு வருந்த கூடாது. நம்மால எதையும் மாத்த முடியாது. அப்பறம் ஒரு முக்கியமான விஷயம்..”

“சொல்லு பூமா”

“அந்த சக்தியை பத்தி உங்களுக்கு தெரிஞ்ச எல்லா விஷயத்தையும் சொல்லுங்க. நான் அந்த கும்பலோட தலைவன் பற்றி எனக்கு தோணும் விஷயத்தை சொல்லறேன்.”

“அந்த சக்தியை நான் ஊட்டி மலைவாழ் மக்கள் மரக்கடத்தல் கேஸ்ல தான் முதல் முதலில் பார்த்தேன். அவன் வீட்டில் ஏதோ பரிச்சய உணர்வு வந்துச்சு, அன்னைக்கு உன்னை வெட்டிபோட்ட ஆட்கள் சென்னை கடத்தல் கும்பல் என்றதும், சக்தி கேஸ் வாதாட போகவில்லை என்ற சந்தேகமும் சேர, கோர்ட்டில் டாக்குமெண்ட்கள் மாற்றப்பட்டு இருக்கவும் இவனை பிடிக்க முயற்சி பண்ணினோம், கோவையில் முகிலனை கூட்டிட்டு போன வண்டி வச்சு சென்னை வந்து கமிஷனரை பார்த்ததும், இதுக்கு பின்னால் சக்தி இருக்கறது தெரிய வந்தது. அவனை பிடிக்க போனப்போ தான், அந்த கார் தான் என்னோட பரிச்சய உணர்வுக்கு காரணம்ன்னு புரிஞ்சது. விசாரிக்கும் போது அவன் ‘என்ன செய்தாலும் அவரை உன்னால் ஒன்னும் செய்ய முடியாது. உன் கைக்கு எட்டும் தொலைவில் அவர் இல்லை.’ அப்படின்னு சொன்னான்.”

“இன்னொரு தரம் அவன் சொன்னதை சொல்லுங்க.”

“‘என்ன செய்தாலும் அவரை உன்னால் ஒன்னும் செய்ய முடியாது. உன் கைக்கு எட்டும் தொலைவில் அவர் இல்லை.’ அப்படின்னு சொன்னான்.”

“ம்ம்ம்…”

“என்னம்மா? என்னன்னு சொல்லு.”

“இன்னிக்கு நம்ம ரிசார்ட்க்கு பின்னாடி இருக்கற காட்டுல புலியைப் பார்த்தேன். நம்ம வீட்டுக்கு பக்கத்து மலையில் புலி இருக்கு. ஆனா இங்க இல்லன்னு தானே வனத்துறைல சொன்னாங்க.”

“ஆமா.”

“இதை இன்பா கிட்ட சொன்னேன். ‘இதென்ன டா இல்லாததை இருக்குன்னு சொல்ற உலகத்துல. இருக்கறத இல்லன்னு எவனாச்சும் சொல்லுவானா?’அப்படின்னு சொன்னான்.”

ஆதிக்கு ஒன்றுமே புரியவில்லை. காரை செலுத்திக்கொண்டிருந்த நவிலன் ஓரமாக நிறுத்தி,

“கோதை , நீ என்ன சொல்ல வர?”

“நீங்களே யோசிச்சு பாருங்க, சுஜியை கடத்தினது, என்னை விற்க முயற்சி பண்ணினது எல்லாமே ஒருத்தன் தான் செஞ்சது. நான் அவனை பார்க்கல, ஆனா நீங்க சொன்ன தகவல்கள் வச்சு பார்த்தா, அன்னைக்கு அந்த எடத்துல அவனோட சக்தியும் இருந்திருக்கணும்.”

“ஆமா, சுஜி கூட அவனோட அடையாளம் சொன்னாளே, ஒத்துப்போச்சு பூமா.”

“ம்ம். அப்போ, அவன் அங்க போதைப் பொருளை பிடிச்சதும் தலைமறைவா லாயர் என்று இங்கே இருந்திருக்கான், இத்தனை சதி திட்டம் போட்டதும், முகிலனை கைக்குள்ள கொண்டுவந்ததும் எல்லாமே அவனோடு சம்மந்தப்படுது. இந்த கார் இவன் கிட்ட தான் இருக்கு. எல்லா இடத்தையும் இந்த காரும் சம்மந்தப்பட்டிருக்கு. எனக்கொரு சந்தேகம். அந்த காரை சோதனை பண்ணினீங்களா?”

“இல்லயே மா.”

“சீக்கிரம் செய்ய சொல்லுங்க.”

“நீ யாரு தலைவன்னு சொல்லு.”

“இல்ல நவிண்ணா. நீங்க நான் சொன்னதை செய்ங்க… பார்த்துக்கலாம்.”

“கோதை.”

“அண்ணா சரியா தெரியாத ஒரு விஷயத்தை வெளியில் சொன்னா அதுக்கு பேரு வதந்தி. நீங்க அந்த காரை செக் பண்ணுங்க. என்னோட யூகம் சரியா இருந்தா நம்ம அவனை நெருங்கிட்டோம்.”

“பூமா, அவன் கோர்ட் டாக்குமெண்ட் மாற்றும் அளவுக்கு ஒரு பவர்புல்லான ஆளா இருக்கணும் தானே?”

“ஆமா அத்தான்.”

“நீ சொல்றதால நான் அமைதியா போறேன் பூமா. போய் நீ சொன்னதை பாக்கறோம். ஒருவேளை எனக்கு புரியலன்னா நீ சொல்லணும்.”

“சரி அத்தான்.”

இவர்கள் இருவரும் சென்னை நோக்கி பயணப்பட, கோதை, ‘தன் கணிப்பு சரியாக இருந்தால் நன்றாக இருக்கும். தொல்லைகள் முடிவுக்கு வரும்’, என்ற எண்ணத்தோடு திறப்பு விழாவில் கலந்து கொண்டாள்.

பிரவீன் தன் தேவைகளுக்கெல்லாம் சுஜியை அழைக்க அவனை ஷியாம் ஒரு ஓரப்பார்வையோடு கடந்தான். சுஜியும் விகல்பம் இல்லாமல் அவனுக்கு உதவினாள்.

இன்பா வதுவை தூரத்தில் இருந்தே ரசித்தான். வதுவும் சுஜியும் அழகான புடவையில் அங்கும் இங்கும் சென்று வர, இவர்கள் இருவர் இதயமும் தத்தமது காதலியின் பின் செல்ல துடித்ததை தடுத்தது அவர்களின் கடமை.

மதி திறப்பு விழா வேலையில் கவனமாக ராஜேஸ்வரனுடன் வந்தவர்களை அழைத்து பேசிக்கொண்டிருக்க, அங்கே வந்த ரெஸ்ட்டாரெண்ட் பணியாள் ஆளுக்கொரு பழச்சாறை நீட்ட, அவர்கள் அவனை கேள்வியாய் நோக்கினர்.

“ராகுல் சார் தான் கொடுக்கச் சொன்னார்.”, என்றதும் மதியின் மனதில் மழை பெய்தது.

ராஜேஸ்வரன் மதிக்கு மட்டும் கேட்கும் குரலில், “நெல்லுக்கு இரைத்த நீர், இந்த புல்லுக்கும்…” என்று சொல்லி சிரிக்க,

மதி வெட்கத்தால் “போங்கப்பா..”, என்று நாணிவிட்டு, பின் திரு திருவென அவரைப் பார்த்து முழிக்க, ராஜேஸ்வரன் சத்தமாகச் சிரித்தார்.

“அப்பா…”

“நீ அவனை பார்த்து ஏங்கறதும், அவன் உந்னை பார்த்தாலே ஓடறதும்…ம்ம்… ஆனா நல்லா கவனிக்கவும் செய்யறான்.”

“அவங்க வீட்டை பத்தி கவலைப்படறாங்க பா.”

“விடு அதெல்லாம் பாத்துக்கலாம். ஆனா பார்த்து. நாளைக்கு யாரும் உன்னை தப்பா சொல்லிடக் கூடாது.”

“சரிங்கப்பா.”

விழாவும் ஆதி இல்லாமலே முடிந்தது. ஆதியைக் கேட்ட அதனை பேருக்கும் அவசர வேலை கோவையில் இருக்கிறார். என்று ஒரே பொய்யில் சமாளித்தாள் கோதை.

மறுநாள் ஆதி அழைத்து, சக்தியின் காரில் ஆர்.சி, தவிர ஒன்றும் இல்லை என்றான். அவனை விசாரிக்கவா என்றதும் வேண்டாம் என்று சொல்லிவிட்டாள் கோதை.

அவனும் நவிலனும் மீண்டும் ஊட்டி வர மூன்று நாட்கள் ஆனது. அதுவரை எஸ்டேட் வேலைகளை ராஜேஸ்வரன் பார்த்துக்கொண்டாலும் இவர்கள் இருவரும் இப்படி சேர்ந்து வேலையை ஒதுங்கிவிட்டு போவது என்றால் நிலைமை சரி இல்லை என்று அவர் நினைத்தார்.

ஆதியும் நவியும் ஊட்டிக்கு வந்தும் இந்திரன் நிலைமை பற்றி ஒன்றும் சொல்லவில்லை. அவர் கோமாவில் இருப்பதால், அதைச் சொல்லி, அனைவரும் அங்கே சென்று, எதுவும் வேண்டாம், அவர் குணமாகட்டும், இல்லை இந்த பிரச்சனை தீரட்டும் என்று சொல்லிவிட்டாள் கோதை.

இரண்டு பேருக்கு தெரியும் வரை தான் ரகசியம்,, தாண்டிவிட்டால் செய்தி தான். அதனால் யாருக்கும் சொல்லவேண்டாம் என்பது அவள் எண்ணம். அதுவும் இல்லாமல் இப்போது ஒரு குடும்பத்திற்கு இரு குடும்பம், நண்பர்கள் என்று ஆலமரம் போல இருக்கும் அவளின் சொந்தங்கள் அனைவருக்காகவும் அவள் யோசிக்க வேண்டி உள்ளது.

கோதையின் கணிப்பு சரி என்று அவளை உணரவைக்கும் தகவல் பத்து நாட்களில் அவளுக்குக் கிடைத்தது.

இங்கு இளமைப்பட்டாளம் தங்கள் காதல் கணைகளை தொடுத்தவண்ணம் கடமையிலும் கண்ணாக இருந்தது.

ஆதி தொழில், வீடு, சக்தி, முகிலன் இருவரின் கண்காணிப்பு, தங்கள் குடும்பத்தின் பாதுகாப்பு, இந்திரனின் உடல்நிலை என்று அனைத்திலும் கவனமாகவே இருந்தான்.

இவனை கண்காணித்து வந்த சுந்தரும் கதிரும் இவனின் ஆளுமையில் அசந்துதான் போயினர். இந்திரனை பற்றியும் அறிந்துகொண்ட அவர்கள், ஆதி கோதையின் நோக்கம் புரிந்ததால் அமைதி காத்தனர்.

கோதை தன் கணிப்பை ஆதியிடம் சொல்லாமல் தள்ளிப்போட்டாள், அவளுக்கு இன்னும் வலுவான ஆதாரம் தேவைப்பட்டது. இப்போது சொன்னாலும் ஆதி அதை கண்டு பிடித்துத் தருவான் தான். ஆனால் அவனுக்கு முன் அவன் கோவம் அந்த ஆளை காலி செய்துவிடும் என்று யோசித்தே, சொல்லாமல் இருந்தாள்.

அவள் சொல்லியிருக்கலாம், அதை உணரும் போது அவள் தன்னை காத்துக்கொள்ளும் வகை தெரியாமல் ஓடிக்கொண்டிருந்தாள்.


3 thoughts on “Amudham 44

  1. ஹீ இஸ் தட் கல்ப்ரிட்…? ஒருவேளை, சித்தப்பா மகேஷ்வரனா இருக்குமோ..? அவர் தான் இந்த சம்பவங்கள் நடக்கிறப்ப எல்லாம் கண்ல அகப்படாத மனுசன். அப்படியும் இருக்குமோ..?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!