Amudham 42

Amudham 42

ஜோதிலிங்கம் தாத்தா ஊட்டியை நெருங்கி விட்டதாக சொன்னதும், ஆதி எஸ்டேட்டில் இருந்து கிளம்பி வந்தான்.

தாத்தா நேராக வீட்டிற்கு வராமல் ஆதியை வேறு இடத்திற்கு வரச் சொன்னார்.

ஆதிக்கு மனதில் நெருடல் இருந்தாலும் தாத்தாவின் சொல்லுக்கிணங்க அவன் ஒரு இடத்தைச் சொல்லி வரச் சொன்னான்.

அவன் காத்திருந்த ஒவ்வொரு நொடியும் யுகம் போல இருக்க, தாத்தா போர்ஸ் ட்ரவெலர்ரில் இருந்து இறங்கவும் ஆதி குழப்பமானான்.
‘ஒருவருக்கு எதற்கு வேன்?’ என்று. ஆனால் தாத்தா அவனை உள்ளே ஏறச் சொல்ல, ஏறியவன் கண்கள் செந்தணலானது.

அங்கே மயக்கத்தில் முகிலன் இருந்தான். ஆதி அவனை அங்கே சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியோடு “தாத்தா” என்று அவரை நோக்க,

“இவனை அடைச்சு வைக்க இடம் வேணும் ஈஸ்வரா” தாத்தாவின் குரலில் கணக்கில்லாத கடினம்.

ஒரு பெருமூச்சோடு “ஏற்பாடு பன்றேன் தாத்தா” என்றவன், கோத்தகிரியில் நவிலனின் வீட்டில் அவனை கட்டி வைத்துவிட்டு நவிலனை அழைத்தான்.

“நவி, இவன் தான் முகிலன்”, என்று சேரோடு கட்டப்பட்டிருந்தவனை காட்ட, சற்றும் யோசிக்காமல் நவிலன் சரமாரியாக அவனை அடித்தான். அவனோ மயக்கத்தில் இருக்க, நவிலனின் அடிகள் அனைத்தும் அவன் முகத்தில் சிகப்பையும், உதட்டின் ஓரம் ரத்தத்தையும் தான் வர வைத்தது. அவன் முழிக்க வில்லை.

“இவன் எப்படி டா இங்க? மறுபடியும் வந்தானா? எவ்வளவு தைரியம்?” என்றான் கோபக்குரலில்.

“நான் சொல்றேன் பா”, என்ற தாத்தாவை நவிலன் ஆச்சரியமாகப் பார்க்க,

“என்ன சொந்த பேரனைப் போய் பிடிச்சிட்டு வந்து அடைச்சி வைக்கிறாரேன்னு தோணுதா?”

அவன் அமைதியாக இருக்க, “தோணினாலும் தப்பில்லை பா. இவன் சென்னைல தான் இருப்பான்னு ஈஸ்வரன் சொன்னப்போ எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது ஆனால் அன்னைக்கு என் சந்தேகம் பொய்யா போச்சு. ஆனால் நான் சந்தேகப்பட்டபடி தான் அப்பறம் நடந்திருக்கு.”

அவரின் பேச்சில் தலைசுற்றிப் போன நவிலன் “இப்போ தெரியுது ஆதி, ஏன் கோதை அவ்ளோ பேசறான்னு. பாரு இவனை எங்க பிடிச்சாருன்னு ஒரே வரில சொல்லாம கதை எழுதிட்டு இருக்கற தாத்தாவோட பேத்தி மட்டும் கொஞ்சமவா பேசுவா?” என்று கிண்டலடிக்க,

தாத்தாவின் சந்தேகத்திற்கிடமான இடம் எது, அதை எப்படி தான் ஊகிக்காமல் போனேன்? என்ற யோசனையில் இருந்த ஆதி, நவிலன் நவின்றதை கவனிக்காமல் போக, கடுப்பான நவிலன்,

“தாத்தா நச்சுன்னு நாலே வார்த்தையில் சொல்லுங்க.”

“அவன் அங்க பெரிய வீட்டிலேயே தான் ஒளிஞ்சிருந்தான்.”

“நான் போய் பார்த்தேன் தாத்தா. வீடு பூட்டி இருந்தது. “

“நீ வந்த அன்னைக்கு அவன் வராம இருந்திருக்கலாம், நான் முதல்ல போனபோதும் எனக்கு தெரியல. அப்பறம் சந்தேகம் வந்து மாத்து சாவி போட்டு வீட்டை திறந்தா இவன் ஒரு ரூம்ல நினைவே இல்லாம கிடந்தான். முதல்ல பயந்துட்டேன் அப்பறம் தான் நீ விட்டுட்டு போன ஆட்கள் மூலமா இவனை தெளியவச்சி, கட்டிப்போட்டு கேட்டு பார்த்தேன். ஒன்னும் சொல்லல.”

“அப்பறம் எதுக்கு தாத்தா இவனை இங்க கொண்டு வந்திங்க? அங்கேயே கட்டி போட்டு அந்த சக்திக்கு துணையா விட்ருக்கலாம் தானே?”, என்றான் நவிலன்.

“இவன் அரை போதையில் ஏதோ சொல்றான் ஈஸ்வரா, என்னால அதை சரியா கேட்டு, கண்டு பிடிக்க முடியல.”

“சரி விடுங்க தாத்தா.”

“இல்ல பா. ஏதோ ஒன்னு பெருசா இருக்கு. நம்ம கண்ணுக்கே தெரியாம இருக்கு. இல்ல கண்ணு முன்னாடி இருந்தும் நமக்கு தெரியல.”

“என்ன சொல்றிங்க தாத்தா?”

“இவன் இந்திரன் பத்தி ஏதோ சொல்றான்.சக்தியை பத்தியும் பேசுறான். என்னால நிம்மதியா இருக்க முடியல”, என்று தாத்தா தளர்ந்து போய் அமர்ந்தார்.

“ஒரு வேளை இதுக்கெல்லாம் இந்திரன் தான் காரணமா? அவன் தான் கடத்தல்காரனா?” என்று தாத்தா முகத்தை அழுத்தமாகத் துடைக்க,

“என்ன தாத்தா? இப்படி நினைக்கலாமா?”,என்றான் நவிலன்.

“இந்திரா அப்பா… உங்களை போல கம்பீரமானவர். ஒரு நாளும் முறை தவறி நடக்க மாட்டார்.” உறுதியாய் சொன்னான் ஆதி.

“அப்போ அவன் ஏன் இந்திரன் பேரை சொல்லிட்டே இருக்கான்.” என்றதும், நவிலனின் முகத்தில் பிரகாசமும், இருளும் இணைந்து வந்தது.

“தாத்தா! ஒரு வேளை, இவன் அவரை ஏதாச்சும் பண்ணிருப்பானோ?”

இதுவரையில் அந்த கோணத்தில் யோசிக்காத ஆதியும், தாத்தாவும் நொடியில் உடைந்து போயினர்.

“தாத்தா! அப்படியெல்லாம் இருக்காது. நீங்க மனசை நல்லா வச்சுக்கோங்க. சரியா?”,என்று தன் மனதை மறைத்து தாத்தாவை தேற்றி, நவிலனை முறைத்தான் ஆதி.

ஏனோ நவிலனின் மனம் அந்த ஒன்றைத் தாண்டி வேறு யோசிக்கவே இல்லை.

அதற்குள், போதை மயக்கம் சற்று தெளியத் தொடங்கிய முகிலனிடம், ஆதி விசாரிக்க ஆரம்பித்தான்.

“சொல்லு முகிலா. உனக்கு என்னை நல்லா தெரியும். கோவம் வராது. வந்துட்டா கொல்லாம விட மாட்டேன்.”

முகிலன் சற்று மிரண்ட பார்வையுடன் “நா நா.. வேணு..ம்..னு பண்..ணல..”

அங்கிருந்த மூவர் மனதிலும் குளிர் பரவ ஆதி, “என்ன தான் டா செஞ்சு தொலைச்ச?”

“அப்பா அப்பா…”

“இந்திரா அப்பாக்கு என்ன டா?”

“அப்பா வை… அடிச்சிட்டேன்…”

“இப்போ எங்கே டா அப்பா?” உச்சபட்ச கோவத்தின் ஆதி கேட்க,

“தெரிலயே…” என்றான் தெளிவில்லாமல்.

நவிலன் அவனை போட்டு புரட்டி எடுத்துவிட்டான்.

“இப்போ சொல்லப்போறியா இல்ல அடிவாங்கி சாக போறியா? சொல்லு டா.”

“நிஜமா தெரியல. அன்னைக்கு அப்பா கோவிலுக்கு போய்ட்டு வீட்டுக்கு வந்தார், நான் போதைல இருந்தேன். அவரு என்னை அடிக்க வந்தாரு. நான் கோவத்துல அவரை அடிச்சுட்டேன். அப்பா அப்பறம் எந்திரிக்கல. நான் சக்திக்குக் கூப்பிட்டு சொன்னேன். அப்பாவை அவன் ஆட்கள் தூக்கிட்டு போய்ட்டாங்க. எனக்கு அப்பாவ பத்தி ஒன்னும் தெரியாது.”

“இதெல்லாம் எப்போ நடந்தது?” என்ற தாத்தா, தன் மகனின் நிலை அறியாததால் இருந்த வேதனையை விழுங்கிக்கொண்டு கேட்டார்.

“நான் ஊட்டிக்கு போறதுக்கு முன்னாடி.”

“டேய்… இருபது நாளுக்கு மேல் இருக்குமே டா ?” பதறினான் ஆதி.

“ம்ம் “

“அப்பாவை அப்படி பண்ணிட்டு கூட உன்னால என் பூமாவை கொல்ல திட்டம் போட முடிஞ்சுதா டா நாயே?”, என்று ஆதி அவனை கண் மண் தெரியாமல் அடிக்க,

நவிலன் அவனைத் தடுத்து, “டேய் இப்போ இவனை அடிக்கறதை விட அந்த சக்தியை விசாரிச்சு அப்பாவோட நிலை என்னன்னு தெரிஞ்சுக்கணும் டா.”

சக்தியை விசாரித்து என்றதும் முகிலன் கண்ணில் குழப்பமும் பின் எதுவோ புரிந்த பயமும் தெரிந்தது அதை மூவருமே கவனிக்கத் தவறினர்.

ஆதி சென்னையில் ஆட்களிடம் சொல்லி சக்தியிடம் விசாரிக்க சொல்ல,

சக்தியோ, “என்னை வெளில விடு சொல்றேன்.. .”

அவன் சொன்னதை போனில் கேட்டுக்கொண்டிருந்த ஆதி, போனை ஸ்பிக்கரில் போடச் சொல்லி,

“உன்னை வெளில விடற எண்ணமும் இல்லை வாய்ப்பும் இல்லை. நாங்களே அப்பாவை கண்டு பிடிச்சிக்கறோம். போடா நாயே.” என்று கத்திவிட்டு ஆதி போனை வைத்தான்.

குழப்பம் ஆயிரம் கொண்ட மனதோடு முகிலனை அதே வீட்டில் அடைத்து வைத்தவர்.

வெளியில் வந்த தாத்தா ஆதியைக் கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தார்.

ஆதி அவரை தேற்றும் வழி தெரியாது அமைதியானான்.

“டேய் அவரை சமாதானம் பண்ணாம அழறியா நீயும்?” என்றான் நவிலன்.

“இல்ல நவி, அவரு அவரு… எப்படி எங்கன்னு தெரியாம நான் என்ன சொல்லுவேன் தாத்தாவுக்கு?”

“ஒன்னும் தப்பா நடந்திருக்காது தாத்தான்னு சொல்லு முதல்ல”

“எப்படி டா?”

“இவனுங்க தான் அம்மாவையே கட்டி வச்சவனுங்க தானே? அதே போல, இந்திரன் அப்பா இருப்பாரு” என்ற நவிலனின் குரலும் இறங்கியே ஒலித்தது.

வேறு யாருக்கும் இதை சொல்ல வேண்டாம் என்று நினைத்து தங்கள் மூவருக்குள்ளே இந்த விஷயத்தை வைத்து கொண்டனர்.

மீண்டும் ஊட்டிக்குக் கிளம்பினர்.

ஜோதிலிங்கம், ஈஸ்வரமூர்த்தி இருந்த வீட்டிற்கு வந்து, அவரின் படுக்கை அருகில் அமர்ந்தார்.

“டேய் ஈஸ்வரா… உன்னை கூப்பிடறது போல தான் டா உன் பேரனையும் கூப்பிடறேன். ஏன் டா நீ இப்படி ஆன? எனக்கு கஷ்டமா இருக்கு டா. இதுக்கெல்லாம் என் பொண்ணு தானே காரணம்?”, தாத்தா மனம் விட்டு பேசி அழ ஆரம்பித்தார்.

“நான் நல்லா வளர்த்ததா தான் டா நெனச்சுட்டு இருந்தேன். ஆனா ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி இருந்திருக்காங்க. என்கிட்ட பேசமாட்டியா ஈஸ்வரா?” என்று கண்ணில் மன்னிப்பை தேக்கிக் கேட்க.

ஈஸ்வரமூர்த்தி அவரை அணைத்து கொண்டு “எனக்கு மட்டும் ஆசையா டா? உன்னை பிரிஞ்சு பேசாம இருக்கணும் அப்பிடின்னு. அவன் என் கண்ணு முன்னாடியே வாழ்க்கையை இழந்து தவிக்கும் போது, அப்பனா எனக்கு கோவம் வந்திடுச்சு டா.”

அதன் பின் இருவரும் பழங்கதை பேசி ஒன்றாக இருக்க, ஆதியும் நவிலனின் டீ எஸ்டேட் ஆபீஸ் அறையில் அடுத்து என்ன என்ற குழப்பத்துடன் இருக்க,

அவர்களுக்கு குழம்பிய மனதொடு எதையும் தெளிவாக யோசிக்க முடியவில்லை.

“ஏன் ஆதி, நாம என் கோதை கிட்ட இதை பத்தி பேசக்கூடாது?”

“டேய் அவ ஏற்கனவே உடம்பு சரி இல்லாம இருக்கா டா?”

“ஆனா அவ தெளிவா யோசிக்கற ஆளு டா. கேட்போம். நமக்கு ஒரு வழி கிடைக்கும் தானே?”

“சரி”, என்று இருவரும் சாந்திநிலையம் வர,

கோதை கட்டிலில் சாய்ந்து அமர்ந்து ஏதோ படித்துக்கொண்டிருந்தாள்.

“அத்தான்! அண்ணா! என்ன இப்போ இங்க வந்திருக்கிங்க? ஏதும் முக்கியமான விஷயமா?”

நவிலன் ஆதியைப் பார்த்து ‘பார்த்தியா?’ என்பது போல கண் காட்ட,

ஆதி அவள் அருகில் அமர்ந்து, “சாப்பிடியா பூமா?”

“ம். சாப்பிட்டேன், மருந்தும் சாப்பிட்டாச்சு. கமலாம்மாவும், லட்சுமி அத்தையும் என்னை நல்லா பாத்துக்கறாங்க.”

“ம். உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லிட்டு, உன்னோட ஐடியா கேட்க வந்தோம்”, என்றதும், கோதை முகம் யோசனையாக மாற,

நடந்தவைகளை நவிலனும், ஆதியும் மாறி மாறிச் சொன்னதும், கட்டிலில் தலை சாய்த்து யோசித்தவள், ஆதியிடம்,”ஒரு காபி கிடைக்குமா அத்தான்?”

“நான் கமலாம்மா கிட்ட சொல்றேன்”, என்ற நவிலனை தவிர்த்துவிட்டு, தானே கிச்சனில் சென்று காபி கலந்து வந்தான் ஆதி.

அதை மிடறு மிடறாக விழுங்கிய பூமாவின் கண்கள் மட்டும் அங்கும் இங்கும் அலை பாய்ந்த படி இருந்தது.

காபி கப்பை கீழே வைத்தவள், தொண்டையை செருமியபடி,

“பெரிய மாமா உயிரோட இருக்கறத்துக்கான வாய்ப்பு ரொம்ப குறைவு.”, என்றாள் இறுகிய குரலில்.

“ஒருவேளை அவர் அந்த சக்தியின் பிடியில் இருந்திருந்தா, நாம சக்தியை பிடிச்சு வச்சு அஞ்சு நாள் ஆச்சு, அவன் மாமாவை காமிச்சு தப்பிக்க பார்த்திருப்பான். அப்படி எதுவும் அவன் பண்ணாததால”, என்பதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை.

ஆதி அவள் கையைப் பிடித்துக்கொள்ள,

“ஒரு வேளை அவர் தப்பிச்சும் போயிருக்கலாம். சொல்ல முடியாது”, என்று தன் கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

“இனிமே இதை அப்படியே விட்ருங்க. அவரே வரட்டும். இல்ல அவர் இல்லங்கற செய்தி வரட்டும். அகி செல்லத்துக்கு எக்காரணத்தைக் கொண்டும் இது தெரிய கூடாது. அவருக்கு அப்பான்னா உயிர். என் மேல இருக்கற பாசத்துக்காக தான் அவரை விட்டு வந்தாங்களே தவிர, ஒரு நாளும் அப்பாவை அவர் விட்டுக்கொடுத்தது இல்ல.” என்று அவள் சொல்ல, ஆதிக்கும் நவிலனுக்கும் அவளின் அறிவு நுட்பத்தை வியக்காமல் இருக்க முடியவில்லை.

நவிலன் ,”சரி “என்று விடைபெற்று செல்ல,

கோதை ஆதியின் மார்பில் சாய்ந்து “இது எல்லாத்துக்கும் தொடக்க புள்ளி நான் தானே? அன்னைக்கு மட்டும் நான் முகிலனை அடிக்கலன்னா அவன் இவ்வளவு தூரம் செஞ்சிருக்க மாட்டான் தானே அத்தான்? இதெல்லாம் நடந்திருக்காது. குடும்பம் பிரிஞ்சு, வாழ்ந்த ஊரை விட்டே வந்து, எல்லாம் என்னால தானே?” என்று அவள் உடைந்து அழ,

ஆதி அவள் முகத்தை கையில் ஏந்தி “அப்படி இல்லம்மா…”

“இல்ல திரௌபதி இந்திரபரஸ்தத்தில் துரியோதனனைப் பார்த்து சிரித்தது தான் பாரத போருக்கே காரணம் ஆச்சாம்… அது போல… அவனை நான் அடிச்சது தான் இன்னிக்கு எல்லாரும் அனுபவிக்கும் துன்பத்துக்கு காரணம்…”, என்று அவளை அவளே வருத்திக்கொள்ள,

“பூமா, அந்த பாரத போரில் கௌரவர்கள் தான் அழிஞ்சு போனாங்க. உலகத்துக்கு பகவத் கீதையை கொடுத்தது அதே பாரத போர் தான். அது போல இந்த போதைப்பொருள் அரக்கர்களை அழிக்கத்தான் அன்னைக்கு கடவுள் உன் மூலமா அவனை அடிக்க வச்சு, இவ்வளவும் நடக்க காரணமாக்கி இருப்பார். அதனால மனசை போட்டு குழப்பாமல், நிம்மதியா இரு சரியா பூமா?” என்றான். அப்போதும் அவள் முகம் தெளியாததைக் கண்டு, அவளை மெது மெதுவாக அவனில் ஆளுமையின் கீழ் கொண்டு வந்து இந்த உலகயே மறக்கச் செய்தான்.

காதல் என்றுமே மனதிற்கு இனிய மருந்தாக இருக்கும் என்பதில் அவனுக்கு சந்தேகமே இல்லாததால் அவன் பூமா அவனின் காதல் ஆட்சிக்கு கீழ் கவலை மறந்து இன்பாமாய் பூத்திருந்தாள்.


5 thoughts on “Amudham 42

  1. இங்க எல்லாமே அப்படித்தான், ஒன்றை இழந்தால் தான் இன்னொன்றையே பெற முடிகிறது.
    உள்ளே வாங்குற மூச்சு, வெளியே விட்டுட்டா போச்சு.

    😀😀😀
    CRVS (or) CRVS2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!